DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 24-04-2022

 

புதுச்சேரியில் மகான் ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது ஆண்டு விழா, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கலாசார மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், அரவிந்தர் ஆசிரம குழுமத்தின் தலைவர் பிரதீப் பிரேம், பல்கலை துணைவேந்தர் குர்மீத் சிங், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.



Read in source website

சீனர்களுக்கு சுற்றுலா விசா அளிப்பதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி கொண்டதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளது.

சீனப் பல்கலைக்கழகங்களில் படித்துவரும் கிட்டத்தட்ட 22,000 இந்திய மாணவர்கள், அங்கு திரும்பி சென்று படிக்க முடியாமல் தவித்துவருகின்றனர். சீனாவிற்கு செல்ல அனுமதி அளிக்கும்படி மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சீனா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்திவருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த 2020 ஆண்டு தொடக்கத்தில், பெருந்தொற்று பரவ தொடங்கிய பிறகு, இந்திய மாணவர்கள் அங்கிருந்து தாய் நாட்டிற்கு திரும்பினர். இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்ரல் 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், "சீனர்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் மட்டுமே இந்தியாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய குடியிருப்பு அனுமதி அட்டை, இந்தியா வழங்கிய விசா மற்றும் இ - விசா, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை, இந்திய வம்சாவளி அட்டை, தூதரக கடவுச்சீட்டு ஆகியவற்றை வைத்துள்ள பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்லுபடியாகும் சுற்றுலா விசா இனி செல்லாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் 17ஆம் தேதி, வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இதுகுறித்து விரிவாக பேசுகையில், "கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவருவதால் இந்திய மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அனைவருக்கு ஏற்படைய நிலைபாட்டை எடுக்கும்படி பூடானை இந்தியா கேட்டு கொண்டுள்ளது" என்றார்.

கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி, சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பேசியது குறித்து விவரித்த பாக்சி, "இந்த விவகாரத்தில் சீனா ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது. சீனாவிற்கு வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது. 

ஆனால், இந்திய மாணவர்கள் நாடு திரும்புவது குறித்து சீனத் தரப்பு இதுவரை எந்த ஒரு திட்டவட்டமான பதிலையும் அளிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். எங்கள் மாணவர்களின் நலனுக்காக ஒரு இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க சீனத் தரப்பை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்றார்.



Read in source website

தேசிய பஞ்சாயத்து ராஜ் நாளை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உங்கள் அனைவருக்கும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தின வாழ்த்துக்கள். பஞ்சாயத்து அமைப்புகள் இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகும். அதன் பலத்தில் புதிய இந்தியாவின் செழுமை உள்ளது. 

தன்னம்பிக்கை மிக்க  இந்தியாவை உருவாக்குவதில் நமது பஞ்சாயத்து அமைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதிமொழி எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 



Read in source website


புதுடெல்லி: மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்தி மோடிக்கு முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 
"இன்று மாலை, நான் முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதைப் பெறுவதற்காக மும்பையில் இருப்பேன். லதா மங்கேஷ்கருடன் தொடர்புடைய இருந்த கௌரவ விருதுக்கு தான் நன்றியுடனும், பணிவுடனும் இருக்கிறேன். அவர் எப்போதும் வலுமான மற்றும் வளமான இந்தியாவைக் காண கனவு கண்டார். நாட்டை கட்டு எழுப்புவதில் உரிய பங்கு அளித்தவர்" என்று கூறியுள்ளார்.

பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் திரையுலக பின்னணி பாடகி லதா தீனாநாத் மங்கேஷ்கர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி 92 ஆவது வயதில் மும்பையில் காலமானர்.  

புகழ்பெற்ற பாடகரின் நினைவாகவும் மரியாதைக்காகவும் இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது.



Read in source website

பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் பிலாவல் புட்டோ. அடுத்த இரண்டு நாள்களில், இவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமரின் காஷ்மீர் விவகாரங்களுக்கான ஆலோசகர் கமர் ஜமான் கைரா, இதகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அடுத்த இரண்டு நாள்களுக்குள் பிலாவல் பொறுப்பேற்பார் என கைரா கூறியுள்ளார். 

இந்த முடிவு கொள்கை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிலாவல் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசில் இரண்டாவது பெரிய கட்சியாக பாகிஸ்தான் மக்கள் கட்சி திகழ்கிறது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, 342 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்களின் ஆதரவோடு பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, தேசிய நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஷெபாஸ் கொண்டு வந்தார். 
 



Read in source website

இந்தியாவுடனான நட்புறவைத் தொடர விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை வலுவிழக்கச் செய்யக் கூடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் இந்திய செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம், ரஷியாவுடனான உறவைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா தரும் அழுத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியாவுடன் அமெரிக்கா நட்புறவைக் கொள்ள விரும்பினால், இந்தியாவின் புவியியல் அமைவிடம் குறித்து அந்நாடு புரிந்துகொள்ள வேண்டும். கரோனா காலத்திலும் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் பதற்ற சூழல் தொடா்ந்தது. மேற்கு எல்லைப் பகுதி எப்போதும் பிரச்னை நிறைந்ததாகவே உள்ளது.

அமெரிக்காவின் நட்பை இந்தியா விரும்புகிறது. அதே வேளையில் இந்தியாவுடனான நட்புறவு தொடர வேண்டுமென விரும்பும் அமெரிக்கா, இந்தியா எக்காரணம் கொண்டும் வலுவிழந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை வலிமையுடன் திகழச் செய்யும் வகையிலான முடிவுகளையே அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது’’ என்றாா்.



Read in source website

புதுடெல்லி: சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சிபிஎஸ்இ 11, 12-ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத் திட்டத்திலிருந்து பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அதைப் போலவே 10-ம் வகுப்பு பாடத்திலிருந்து உணவுப் பாதுகாப்பு என்ற பிரிவில் வேளாண் துறையில் உலக மயமாக்கலின் தாக்கம் என்ற பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபயஸ் அகமது பயஸ் என்ற உருதுக் கவிஞரின் 2 கவிதைகள் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு என்ற பிரிவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இடம்பெற்று இருந்தன. அந்த கவிதைகளும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் சிபிஎஸ்இ தனது பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பரிந்துரையின் பேரில் இந்தப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. வரும் கல்வியாண்டில் (2022-23) இந்தப் பாடங்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருக்காது. பல ஆண்டுகளாக பாடத் திட்டத்தில் நீடித்த பாடங்களை முதல்முறையாக சிபிஎஸ்இ வாரியம் நீக்கியுள்ளது.



Read in source website

காபூல்: ஆப்கானிஸ்தானில் டிக் டாக், பப்ஜி போன்ற செயலிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற செயலிகளால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதாகக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான ஹமீது கர்சாயும் நாட்டைவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், ஆட்சி தலிபான்கள் வசம் வீழ்ந்தது.

தலிபான் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்தே அங்கே இசை, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடை வந்துவிட்டது. பெண் கல்விக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவம் தவிர்த்து பெண்கள் வேலை செய்வதற்கும் பெரிதாக அனுமதியில்லை.

பெண்களுக்கான அழகு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஆண்கள் தாடியை எடுக்ககூடாது, தலை முடியை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் வந்துவிட்டன. அண்மையில், மது விற்பனை செய்ததற்காகவும், அருந்தியதற்காகவும் 6 பேருக்கு பொது இடத்தில் கசையடியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது செல்போன் செயலிகளான டிக் டாக், பப்ஜி ஆன்லைன் விளையாட்டு ஆகியனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் தொலைத்தொடர்பு இதனை அறிவித்துள்ளது.

அண்மையில், ஆப்கன் மக்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 94% பேர் தங்களின் வாழ்வு மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். தலிபான் ஆட்சி அமைந்த பிறகு அமைதியும், சுதந்திரமும் இழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் எவ்வித பொழுதுபோக்கு அம்சமும் இல்லாத சூழலில் இதுபோன்ற செயலிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கும் எனக் கூறப்படுகிறது.



Read in source website

மகாராஷ்டிராவின் புனே நகரில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஒன்று திடீரென எரிந்து விபத்துக்குள்ளான நிலையில் நாடு முழுவதும் உள்ள தங்களின் 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து இருந்தபோதிலும் அதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மின்சார இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளன. இந்நிலையில் குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி, மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது. அண்மையில் ஓலா நிறுவனம் எஸ்ஒன் மற்றும் எஸ்ஒன் ப்ரோ என இரண்டு மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்நிலையில் புனே நகரில் சாலையில் நின்ற ஓலா எஸ்ஒன் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வாகனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் குறித்து விசாரிப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பவீஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாடு முழுவதும் 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஓலா எலக்ட்ரிக் வெளியிட்ட அறிவிப்பில், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுகிறோம். எங்களின் பொறியாளர்கள் அத்தனை ஸ்கூட்டர்களையும் முழுமையாக தீவிர பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே பேட்டரிகளுக்கு AIS 156 பரிசோதனை அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றி செய்துள்ளோம். தற்போது ஐரோப்பிய நாடுகளின் தர நிர்ணயமான ECE 136ன் படியும் தர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலாவைப் போல் ஒகிநாவா ஆட்டோடெக் 3000 இ ஸ்கூட்டர்களையும், ப்யூர் EV நிறுவனம் 2,000 வாகனங்களையும் திரும்பப் பெற்றுள்ளது.



Read in source website

ரஷ்யா தனது மருத்துவ உபகரணங்களில் கணிசமான பங்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆண்டுக்கு $1.6 பில்லியன் மதிப்பிலான உபகரணங்களை வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக அமெரிக்கா, ஐரோப்பாவின் மருத்துவ சப்ளை செயின் பாதிக்கப்பட்டுள்ளதால், மாஸ்கோவின் வணிகக் குழுவான பிசினஸ் ரஷ்யா அமைப்பு, மருத்துவ உபகரணங்களை வாங்கிட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. செயற்கை சாதனங்கள், எக்ஸ்ரே, ஈசிஜி, MRI இயந்திரங்கள், அறுவை சிகிச்சை ஊசிகள், கருவிகள், கையுறைகள் போன்றவை கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய, ரஷ்ய பங்குதாரர்கள் மற்றும் வர்த்தக அமைச்சகம் இடையேயான சந்திப்பு ஏப்ரல் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கான வணிக தூதர் ஓல்கா குலிகோவா, மாஸ்கோவில் இருந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது, ரஷ்யா எதிர்ப்பார்க்கும் எட்டு மருத்துவ சாதன பிரிவுகளில் பல் மருத்துவ சாதணங்கள், மருத்துவ தளபாடங்கள் மற்றும் அழகுசாதன கருவிகளும் இடம்பெற்றுள்ளன என்றார்.

தென் கொரியாவிலிருந்து அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகுசாதன உபகரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா மாறியுள்ளது. ஆனால் உக்ரைனின் படையெடுப்பு அந்த வர்த்தகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

ரஷ்யா தனது மருத்துவ உபகரணங்களில் கணிசமான பங்கை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஆண்டுக்கு $1.6 பில்லியன் மதிப்பிலான உபகரணங்களை வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பேசிய குலிகோவா, ரஷ்யாவில் இன்னும் பெரும்பாலான மருத்துவ சாதனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. மருத்துவ சாதனங்கள் தடைகளின் பட்டியலில் இல்லை என்றாலும், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனியில் உள்ள கூட்டாளர்களிடமிருந்து வரும் பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளன.எதிர்கால நிலைமையை கணிக்க முடியாதது. தற்போது, ரஷ்ய சந்தையில் திறக்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பின் மீது இந்தியா கவனம் செலுத்தும் என நம்புகிறோம்.

ரஷ்யாவிடம் முக்கியமான மருத்துவ சாதனங்கள் போதுமானதாக உள்ளன. ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருந்து மருத்துவ உபகரணங்கள், உள்வைப்புகள் அல்லது சாதனங்களை புதிதாக இறக்குமதி செய்வது சாத்தியமில்லை. எனவே, எலும்பியல் உள்வைப்புகள் , சிரிஞ்ச்கள் போன்ற பல வகை மருத்துவ சாதனங்களுக்கான உற்பத்தியில் முன்னணியில் உள்ள இந்தியாவை ரஷ்யா எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.

இம்மாத தொடக்கத்தில், பிசினஸ் ரஷ்யா கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் இந்தியன் மெடிக்கல் டிவைஸ் இண்டஸ்ட்ரி (AiMeD) ஆகியவை இந்திய நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. சுமார் 100 பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவ சாதன உற்பத்தியாளர்களின் பட்டியலை மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் EAEU (Eurasian Economic Union) ஆகியவற்றில் இந்திய மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பதிவு செய்வதும், மருத்துவ சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் மாதிரி மற்றும் சோதனை, ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்பிற்கு தேவையான செயல்முறைகள் ஆகியவை வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது.

ராய்ட்டர்ஸ் அறிக்கையின்பட், மேற்கில் இருந்து ரஷ்யாவிற்கு அத்தியாவசிய மருத்துவ சாதனங்களின் ஏற்றுமதி ஓரளவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் போர் தொடங்கியபோது இருந்த நிலைமையை காட்டிலும், தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுப்பதற்கான மருத்துவ சாதனங்கள் கிடைத்து வருகின்றன.

மருத்துவ சாதனங்களுக்கும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கும் பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், போரினால் ஏற்பட்ட போக்குவரத்து, காப்பீடு, சுங்கத் தடைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் ரஷ்யாவின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

143 பொருட்களில், 92 சதவீதம் பொருள்கள் 18 சதவீத வரி ஸ்லாப்பில் இருந்து அதிகப்பட்சமாக 28 சதவீத ஸ்லாப் வரை மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. என்னென்ன பொருள்கள் விலை உயர போகிறது என்பதை இங்கே காணலாம்

வருவாயை உயர்த்துவதற்காக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கீழ் முன்மொழியப்பட்ட விகிதத்தின் ஒரு பகுதியாக, ஜிஎஸ்டி கவுன்சில் 143 பொருட்களுக்கான விகிதங்களை உயர்த்துவதற்கான மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது.

அதில், பப்படம், வெல்லம், பவர் பேங்க், கைக்கடிகாரங்கள், சூட்கேஸ்கள், கைப்பைகள், வாசனை திரவியங்கள், கலர் டிவி செட்கள் (32 இன்ச் கீழே), சாக்லேட்டுகள், சூயிங்கம், வால்நட், கஸ்டர்ட் பவுடர், ஆல்காஹால் அல்லாத பானங்கள், செரமிக் சிங்க், வாஷ் பேசின், கண்ணாடிகள், கண்ணாடி பிரேம்கள், தோல் ஆடைகள், சாதாரண ஆடைகளும் இடம்பெற்றிருப்பதாக ஆதாரங்கள் தெரிவித்தன.

இந்த 143 பொருட்களில், 92 சதவீதம் பொருள்கள் 18 சதவீத வரி ஸ்லாப்பில் இருந்து அதிகப்பட்சமாக 28 சதவீத ஸ்லாப் வரை மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட விகித மாற்றங்கள், 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக, நவம்பர் 2017, டிசம்பர் 2018 இல் நடைபெற்ற கவுன்சில் மீட்டிங்கில் விகிதக் குறைப்பு முடிவுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 2017 கவுகாத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் வாசனை திரவியங்கள், தோல் ஆடைகள், அணிகலன்கள், சாக்லேட்டுகள், கோகோ பவுடர், அழகு அல்லது மேக்கப் தயாரிப்புகள், பட்டாசுகள், பிளாஸ்டிக்கின் தரை உறைகள், விளக்குகள், ஒலிப்பதிவு கருவிகள் போன்ற பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. இப்போது மீண்டும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

இதேபோல், கலர் டிவி செட் மற்றும் மானிட்டர்கள் (32 இன்ச் கீழே), டிஜிட்டல் மற்றும் வீடியோ கேமரா ரெக்கார்டர்கள், பவர் பேங்க்கள் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் டிசம்பர் 2018 கூட்டத்தில் குறைக்கப்பட்டன, இப்போது அது மாற்றப்படலாம்.

பப்படம், வெல்லம் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திலிருந்து 5 சதவீத வரி ஸ்லாப்க்கு மாறலாம். தோல் ஆடைகள், அணிகலன்கள், கைகடிகாரங்கள், ரேஸர்கள், வாசனை திரவியங்கள், ஷேவ் செய்வதற்கு முன்/ஷேவ் செய்வதற்கு முந்தைய தயாரிப்புகள், பல் ஃப்ளோஸ், சாக்லேட்டுகள், வாஃபிள்ஸ், கோகோ பவுடர், மது அல்லாத பானங்கள், ஹெண்டபாக்/ஷாப்பிங் பேக்குகள். செராமிக் சிங்க், வாஷ் பேசின், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள், மின் சாதனங்கள் (சுவிட்சுகள், சாக்கெட்டுகள்) ஆகியவற்றின் ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படலாம்.

அக்ரூட் பருப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், கஸ்டர்ட் பவுடருக்கு 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், மேஜை மற்றும் சமையலறைப் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் அதிகரிக்கப்படலாம்.

2017 இல் கவுகாத்தி கூட்டத்தில், 28 சதவீத ஸ்லாப்பில் 50 பொருட்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டு, 228 பட்டியலில் இருந்து 178 பொருட்கள், உணவகங்களுக்கான கட்டணக் குறைப்புடன் 75 சதவீதம் குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் மூலம் வருவாய் இழப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில், 2017 கூட்டத்திற்கு பிறகு ஒர் ஆண்டிற்குள், ஒவ்வொரு நான்கு பொருட்களுக்கும் ஒரு விலையைக் குறைத்தது. ஜிஎஸ்டியின் கீழ் பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் ஆகிய ஐந்து பரந்த வகைகளில் மொத்தமுள்ள 1,211 பொருட்களில் 350க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான கட்டணத்தை குறைத்தது. இதன் மூலம், அரசுக்கு ஒரு ஆண்டிற்குள் 70 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ஜிஎஸ்டி கவுன்சில் தற்போது விகிதத்தில் மாற்றத்திற்கான முன்மொழிவை மாநிலங்களின் உள்ளீடுகளைப் பெறுவதற்கு அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.

மாநில அரசின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விகித மாற்றங்களுக்கான உள்ளீடுகளை மாநிலங்களிடம் கேட்கப்பட்டுள்ளன. உற்பத்தியாளர்கள் விகிதக் குறைப்புகளின் பலன்களை நுகர்வோருக்கு கிடைக்காத சில பொருட்களுக்கு விலை மாற்றத்தைக் காண வேண்டும். ஆனால், மற்ற பொதுவான உபயோகப் பொருட்களுக்கு, கட்டணங்கள் அப்படியே இருக்க வேண்டும் என்றார்.

ஜிஎஸ்டி கவுன்சில் செயலகத்திற்கு தி சண்டே எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட சந்தையின் திறமையின்மை காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அதிக விலை நிர்ணயம் செய்வதால், WPI பணவீக்கம் சில்லறை பணவீக்கமாக சரியும் ஒரு போக்கு இருக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடுகையில் மார்ச் 2021ல் 14.7 சதவீதம் உயர்ந்து. அதேபோல், மார்ச் 2020ல் 45.6 சதவீதம் அதிகரித்துள்ளது.



Read in source website

அழகுமிகு ஹவாய் தீவு

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பசிபிக் மாகடலில் அமைந்துள்ள தீவான ஹவாய்த் தீவுக்கு மூன்றாவது முறையாக என் துணைவியாரோடு சென்றிருந்தேன். தீவின் அழகும் அமைதியும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்வதாக இருந்தது. சென்ற மறுநாள் சுற்றுலாக் குழுவொன்றோடு தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

உலகிலேயே அழகான நீண்ட கடற்கரை!

ஹவாய்த் தீவைச் சேர்ந்த வழிகாட்டியாக வந்த பெண்மணி மணல் நிறைந்த கடற்கரையை அணுகியபோது “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை இது” எனக் கூறி ஹோனலுலு நகருக்கு வெளியே அரை கிலோ மீட்டர் நீளம் கூட இல்லாத கடற்கரைப் பெருமையைப் பற்றிக் கூறி முடிக்குமுன், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். “இதைவிட அழகான நீண்ட கடற்கரை இந்தியாவில் மெட்ராஸ் நகரையொட்டி அமைந்துள்ளது” என விரைந்து கூறினார். “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை பிரேசில் நாட்டுத் தலைநகரான ரியோடிஜெனீரோவில் உள்ளது. இரண்டாவது அழகிய நீண்ட கடற்கரை நாங்கள் வாழும் சென்னை நகரையொட்டி அமைந்துள்ள மெரினா கடற்கரையாகும்.” என நான் அப்பெண்மணி கூறியதையொட்டித் துணைத் தகவலாகக் கூறினேன். நானும் என் துணைவியாரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்தவுடன் எங்களோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார். மிகுந்த அன்போது பழகினார். இந்தியாவைக் குறிப்பிடும் போதெல்லாம் ‘ஹோலி லேண்ட்’ (புனித பூமி) எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்தினார். அதில் அன்பு கலந்த மரியாதை வெளிப்பட்டது. தான் புனிதமிகு இந்திய நாட்டை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைச் சுற்றிப் பார்த்திருப்பதாகவும் உலகில் வேறு எங்கும் காண முடியாத ஆன்மீக உணர்வு பொங்கும் நாடாக இந்தியாவைக் கண்டதாகவும் கூறிப் பாராட்டினார்.

இன ஒருமைக்கு எடுத்துக்காட்டான நாடு

எங்கள் உரையாடலின் இடையே அழகு கொஞ்சும் ஹவாய்த் தீவில் ஹவாய் பூர்வகுடி மக்களோடு அமெரிக்கர்களும் ஜப்பானிய, பிலிப்பைன் மக்களும் அமைதியாகவும் இணக்கமாகவும் வாழ்ந்து வரும் பாங்கைப் பாராட்டினேன். இஃது இன ஒருமைக்கோர் எடுத்துக்காட்டு எனக் கூறினேன். உடனே ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அப்பெண்மணி இங்கு மூன்று நாட்டு இன மக்கள் ஒருங்கிணைந்து வாழ்வதைப் பாராட்டுகிறீர்கள். இது உங்கள் இந்தியப் பண்பாட்டைக் காட்டுகிறது. ஆனால், நான் இந்தியச் சுற்றுலாவின்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்தபோது எங்குமே காணமுடியாத மனித நேயத்தையும் ஒருமைப்பாட்டையும் கண்டு அதிசயித்தேன். எத்தனை வகையான இன மக்கள்; எத்தனை வகையான மொழிகள்; நடையுடை, பாவனைகள்; தங்களது சமயச்சார்புடைய கலை, பண்பாடுகளை விளக்கும் வகையில் அமைந்த கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்துவாரங்கள், புத்த விஹார்கள், ஜைனக்கோயில்; இத்தனை இனங்களும் மதங்களும் மொழிகளும் கலைகளும் பண்பாடுகளும் ஒன்றாக இணைந்து இயங்குவதைக் கண்டு அதிசயித்தேன். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது ஆன்மீக உணர்வு எனும் ஆழமான வேரை இந்தியா கொண்டிருப்பதுதான் என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. இந்த வகையில் சின்னஞ்சிறு நாடான ஹவாய்த் தீவு அல்ல, இந்தியாவே உலகத்துக்கு வழிகாட்டி நாடாக விளங்கி வருகிறது. பல் சமய, இன, மொழி, பண்பாட்டு ஒருங்கிணைவு எப்படியமைய வேண்டும் என்பதற்கு இந்தியாவே உலகத்துக்கு உத்வேக மூட்டி வருகிறது,” என உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் ஒரு குட்டிப் பிரசங்கமே நிகழ்த்தி விட்டார். இந்தியாவைப் பற்றி அப்பெண்மணி கொண்டிருந்த கருத்தும் உணர்வும் என் நெஞ்சத்தைத் தொட்டது. இந்தியாவைப் பற்றி அந்நிய நாட்டுப் பெண்மணி மனந்திறந்து கூறிய பாராட்டுரையால் நெகிழ்ந்துபோன என் துணைவியாரின் கண்கள் பனித்து விட்டன. இந்தியா பற்றி ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி கொண்டிருந்த எண்ணம் இந்தியாவைப் பற்றி உலகம் கொண்டுள்ள உணர்வையே முழுமையாகப் பிரதிபலித்தது என்பதில் ஐயமில்லை.

உலக அரங்கில் இந்திய பெருமைக் குலைவு

பல்வேறு மதங்களும் இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் சகிப்புணர்வோடு ஒத்து வாழும் ஒருங்கிணைவுக்கு உலகத்துக்கே வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்துள்ள இந்தியப் பெருமையைக் குலைக்கும் வகையில் சிலரது நடவடிக்கைகள் அமைந்து வருவது ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி போன்ற உலக மக்கள் கொண்டுள்ள இந்தியாவைப் பற்றிய பெருமை உணர்வு எங்கே தகர்ந்து போகுமோ என்ற அச்ச உணர்வு நல்ல உள்ளங்களையெல்லாம் இன்று வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் தலையாய பண்பாகத் தொன்று தொட்டு இருந்து வருவது எந்தவொரு விஷயத்திலும் யார்? என்பதை விட என்ன? என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்தும் தகைமையேயாகும். இந்தியாவிலேயே இந்து, ஜைன, புத்த, சீக்கிய மதங்கள் உருவாகியிருந்தபோதிலும், இந்தியாவுக்கு வெளியேயிருந்து வந்த கிருத்துவ, இஸ்லாமிய பார்ஸி சமயங்களையும் அவற்றின் மூலம் வந்த சமயத் தத்துவங்களையும் கலை, பண்பாடுகளையும் இரு கரமேந்தி வரவேற்கத் தவறவில்லை. காலப்போக்கில் இவையெல்லாம் இந்தியச் சமயங்கள் என்ற உணர்வையும் மக்களிடையே உண்டாக்கின. இதுதான் இந்தியாவின் தனித்துவமாக உலக அறிஞர் பெருமக்களால் கணித்துப் போற்றப்படுகிறது. நல்ல சிந்தனைகள், சன்மார்க்க உணர்வுகள் எங்கிருந்து வந்தாலும் யாரால் கூறப்பட்டாலும், அவற்றையெல்லாம் தனதாக்கிக் கொண்டு வலிமை பெறுவதுதான் இந்தியாவின் தனித்தன்மை எனத் தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கூறியுள்ளனர். இதே உணர்வை இந்தியா ஆன்மீக மறு மலர்ச்சிக்கு அயராது உழைத்த விவேகானந்தரும் பலமுறை எடுத்தியம்பியுள்ளார்.

பெருமைமிகு பாரத நாடு பன்னெடுங்காலமாகக் கட்டிக்காத்து வளர்த்து வந்த இந்த உயரிய பண்பு, உலகத் துக்கே வழிகாட்டி வந்த மாண்பமைபோக்கு, இன்று குறுகிய உள்ளமுடைய, சுயநலவேட்கை மிக்க சிலரால், தடுமாற்றத்திற்காளாகக்கப்பட்டிருப்பதுதான் வேதனை தருகிறது.

மனித நேயமும் சமய ஒருங்கிணைவும்

இந்து சமயமாகட்டும், கிருஸ்தவமதமாகட்டும், இஸ்லாமிய மார்க்கமாகட்டும் எதுவுமே பிற மதங்களை வெறுக்கவோ பகைக்கவோ கூறவே இல்லை. மனித நேயத்தையும் சமய ஒருங்கிணைவையுமே அவை வலியுறுத்துகின்றன.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் மரியாதைக்குரியன எனப் போதிக்கிறது. பிற சமயத்தவர் வேதங்கள், வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றிப் பின்பற்றும் வேதங்கள்; அவர்கள் மேற் கொண்டொழுகும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகிய அனைத்தையும் ஒரு முஸ்லிம் மதிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. அவற்றைப் பற்றித் தவறாகப் பேசுவதை அறவே தடுக்கிறது.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (6:-08) என்பது திருமறையாகிய திருக்குர்ஆன் வாசகமாகும்.

அவரவர் சார்ந்துள்ள மார்க்கத்தை-மதத்தை அவரவர் வழியில் பேணி, பின்பற்ற இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது, இதைப்பற்றி திருக்குர்ஆன்.

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என எடுத்தோதுகிறது.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அல்ல,” என்பது நபிகள் நாயகத்தின் வாக்காகும்.

அதுமட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களையும் அவற்றின் வேதங்களையும் அவற்றிற்குக் காரணமான தீர்க்கதரிசிகளையும் பெரிதும் மதிக்கப் பணிக்கிறது. அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவைகளே என இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இஸ்லாமிய மரபுப்படி முதல் மனிதரும் முதல் இறைதூதருமான ஆதாம் நபி தொடங்கி, இறுதி நபி அண்ணல் நபிகள் நாயகம் வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் - தீர்க்க தரிசிகள் - இறைதூதர்களாக மக்களுக்கு நேர் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டு உள்ளனர்.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.” (35:24).

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு” (10:47) எனக்கூறும் திருக்குர்ஆனின் இவ்விரு வசனங்களிலிருந்து உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனத்திலும் இறை தூதர்கள் தோன்றி, மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது.

இவர்கள் மூலமே இறைவேதங்களும் அவ்வக் காலகட்டத்திற்கேற்ப இறக்கியருளப்பட்டுள்ளது என்பதும் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வேதங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என்பதை,

“நபியே! ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்! (14:4) எனத் திருக்குர்ஆன் மொழிகின்றது. இதிலிருந்து மண்ணுலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவரவர் தாய்மொழியிலேயே இறை வேதங்கள் இறை தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இந்தியாவிலும் பலப்பல இறை தூதர்களும் இறை வேதங்களும் வந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்தியா உட்பட உலகெங்கும் தோன்றி மக்களுக்கு நல்வழிகாட்டிய அனைத்து இறை தூதர்களும் அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட இறை வேதங்களும் ஒவ்வொரு முஸ்லிமாலும் மதிக்கப்பட வேண்டியவை என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத் தெளிவாகும்.

சமயத்திற்கும் சமயத்தவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி

தாங்கள் எந்த சமயத்தைச் சார்ந்துள்ளார்களோ அந்த சமயம் வகுத்து கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை தத்துவக் கருத்துகளை உண்மையான உணர்வுகளை தெளிவாகத் தெரிந்துகொள்ளாதவர்களாலேயே மதக் குழப்பங்களும் மோதல்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒரு இந்துவுக்கு மகனாகப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே இந்துவாக இருப்பவர்கட்கு, ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்த காரணத்தாலேயே ஒரு முஸ்லிமாக நடமாடி வருபவர்கட்கு, ஒரு கிறிஸ்தவனுக்குப் மகனாகப் பிறந்ததனால் மட்டும் தன்னை ஒரு கிறிஸ்தவனாகக் கருதி வாழ்பவர்கட்கு, தங்கள் சமயங்கள் கூறும் வாழ்க்கை வழிமுறைகளை தத்துவக் கருத்துகளை முழுமையாகத் தெரிந்து தெளிவடையும் வாய்ப்புகள் இன்றைய கல்வி முறையால் அறுகி வருகின்றன. எனவே, மதங்களுக்கும் மதப் பெயர்களால் மட்டும் வாழ்பவர்களுக்கும் இடையே மாபெரும் இடைவெளி இன்று ஏற்பட்டு வருகிறது. இதனால் சாமர்த்தியமாக வெறும் மதவெறியூட்டப்படும் இவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கைகள் ஏன்? எதற்காக? என்பதைத் தெளிவாக அறிந்துணரும் திறனற்றவர்களாக இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். உண்மையான சமய உணர்வு உடையவர்களாக இருந்திருந்தால் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாக ராமர் சிலையை வைத்துக் கோயிலாகக் கருதி வழிபட்டு வந்த இறையில்லத்தை உடைப்பார்களா? கோயில் கட்ட கோயிலை இடிக்கும் விந்தை மனிதர்களாக மாறியிருப்பார்களா?

இத்தகையவர்களுக்கு உண்மையான சமய உணர்வு மட்டுமல்ல, சமுதாய உணர்வும் இல்லை என்றே கூற வேண்டும்.

தனிமனிதனின் கடமைகளும் சமுதாய மனிதனின் கடமைகளும்

ஒவ்வொரு மனிதனும் இரு வகைகளில் இயங்குகிறான். ஒன்று, தனிமனிதன். மற்றொன்று சமுதாய மனிதன். வீட்டளவில் அவன் வாழும்வரை தனி மனிதன். வீட்டை விட்டு வீதியில் காலெடுத்து வைக்கும்போது அவன் சமுதாய மனிதனாகி விடுகிறான். வீட்டிற்குள் இருக்கும் தனிமனிதன், தன் விருப்பம் போல் அனைத்து உரிமைகளையும் சுதந்திரமாக நான்கு சுவற்றுக்குள் அனுபவிக்க முடியும். ஆனால், அதே மனிதன் பல்வேறு உணர்வுகளும் சிந்தனைகளும் கருத்துகளும் உலவும் வீதிக்கு வரும்போது அவன் உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்படுகிறது. வீதியில் கழியைச் சுழற்றிச் செல்ல உரிமை உண்டெனினும் அது பிறர் மீது படாதபடி சுழற்றிச் செல்லவே உரிமை உண்டு.

சமயம் என்பது தனி மனிதன் சம்பந்தப்பட்டதாகும். சமயத் தத்துவங்களும் உணர்வுகளும் மனம் சம்பந்தப்பட்டதாகும். இறையுணர்வால் தங்கள் உள்ளத்தைப் பொங்கிப் பொழியும்படி செய்வதன் மூலம் இறையருளைப் பெற முடியும் என்பதுதான் ஒவ்வொரு சமயமும் உணர்த்தும் உண்மை.

இதற்காக அவரவர் எந்த அளவுக்கு மனப்பக்குவமும் ஆன்மீக உணர்வும் இறைப்பற்றும் பெறுகிறாரோ அந்த அளவுக்கு அவர் பரகதி பெற முடியும். இதற்குரிய இடமாகத் தாங்கள் வாழும் இல்லமும், இதற்கெனவே உருவாக்கப்பட்ட இறையில்லங்களும் அமைந்துள்ளன. எனவே, தனி மனிதத் தொடர்புடைய சமய நடவடிக்கைகள் முழுமையாகச் செயல்பட வேண்டிய இடங்களும் இவை இரண்டும் மட்டுமே. சமுதாய வீதி இதற்குரிய களமல்ல என்பதை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து செயலாக்க வேண்டும். பல்வேறு சமய உணர்வு கொண்ட சமுதாய மக்களிடையே சமய உணர்வுகளை, சமயச் சடங்குகளைத் தூக்கிச் செல்வதன் மூலமே அனைத்துப் பிரச்சினைகளும் குழப்பங்களும் தோற்றுவிக்கப்படுகின்றன. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், விஹார்கள், குருத்துவாராக்களுக்குள் சடங்குகள் நடப்பதாயின் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வழியில்லாமல் போய்விடும்.

சமயப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது யார்?

சமயம் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் சமயத் தலைவர்களாலேயே கையாளப்பட வேண்டுமேயொழிய வெறும் ஒட்டுச் சேகரிப்பையும் அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றத் துடிக்கும் சுய நல அரசியல்வாதிகளால் அல்ல. சமயத்தின்பால் உண்மையான பற்றோ சமய அறிவோ இல்லாத அரசியல்வாதிகளால் உண்மையான சமயத் தத்துவக் கருத்துகளும் சமயச் சிந்தனைகளும் பாழ்படுகின்றன. கேலிக்குறியவையாக்கப்படுகின்றன. இவை உண்மைச் சமயத்துக்கு நேர் மாறானவையாக அமைய நேர்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே அரசியல், அரசியலாக இருக்க வேண்டும். சமயம், சமயமாகவே இருக்க வேண்டும். இரண்டின் தன்மைகளும் வெவ்வேறானவை. இரண்டும் இணைவது விபரீத விளைவுகளுக்கே வழியாயமையும். அதுவும் இந்தியா போன்ற சமயச் சார்பற்ற அரசு இயங்கும் நாட்டில் மதத்தில் அரசியல் கலப்பது மிக மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என்பது கடந்தகால கசப்பான உண்மையாகும்.

எனவே, வீட்டிலும், வழிபாட்டுத் தலங்களிலும், அதற்கென உருவாக்கப்பட்டுள்ள வளாகங்களோடு சமய நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டு, சமுதாய வீதிக்கு வரும்போது சமயங்கடந்த இந்தியனாக எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம், எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் விலை, எல்லோரும் இந்நாட்டு மக்கள் எனப் பாரதி கூறிய வாழ்வியல் நெறிக்கேற்ப வாழ முனைய வேண்டும். இதன் மூலம் உண்மையான இந்தியப் பண்பாட்டை நிலை நிறுத்த முடியும். சமயங்களைக் கண்ணியப்படுத்தவும் மனித நேயத்தை வளர்க்கவும் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் இயலும். இதுவே வலுவான பொருளாதார வளர்ச்சிக்குரிய ராஜபாட்டையாக அமைய முடியும்.

மந்தையை விட்டுச் செல்லும் ஆட்டைத்தான் ஓநாய் இரையாக்கிக் கொள்கிறது’ என்ற பால பாடத்தை நாம் எப்போதும் நினைவில் கொண்டு, நாட்டுப் பாதுகாப்புக்கு வலுமிக்க கேடயமாக வேண்டும். சமய நல்லிணக்கமே சமுதாய வலுவுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை இனியேனும் மறக்காமல் கடைப்பிடித்து வெற்றி காண்போமாக. 



Read in source website