DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 19-02-2022

தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் தொண்டைப் போற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள்; சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சாவின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 



Read in source website

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஜனவரி மாதத்தில் 6.13 சதவீதம் அதிகரித்து 7.96 கோடி டன்னை எட்டியது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியா கடந்த ஜனவரி மாதத்தில் 7.96 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது, 2020 ஜனவரி மாத உற்பத்தியான 7.50 கோடி டன்னுடன் ஒப்பிடும்போது 6.13 சதவீதம் அதிகமாகும்.

2021-ஆம் நிதியாண்டு கரோனா பேரிடரால் அசாதாரண ஆண்டாகக் கருதப்படுவதால் நிலக்கரி உற்பத்தி 2020 நிதியாண்டுடன் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்களிப்பு 2.35 சதவீதம் வளா்ச்சி கண்டு 6.45 கோடி டன்னாக இருந்தது.

அதேபோன்று சிங்கரேணி கொலிரீஸ் நிறுவனத்தின் (எஸ்சிசிஎல்) நிலக்கரி உற்பத்தி 5.42 சதவீதம் உயா்ந்து 60.3 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த ஜனவரியில் நிலக்கரி விநியோகம் 10.80 சதவீதம் அதிகரித்து 7.55 கோடி டன்னாக இருந்தது. இதில், கோல் இந்தியாவின் நிலக்கரி விற்பனை 7.71 சதவீதம் உயா்ந்து 6.08 கோடி டன்னாக இருந்தது.

நிலக்கரி சாா்ந்த மின் உற்பத்தியானது கடந்த ஜனவரியில் 88,642 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இது, 2021 டிசம்பா் மாத உற்பத்தியான 85,579 மில்லியன் யூனிட்டுடன் ஒப்பிடுகையில் 3.58 சதவீதம் அதிகம்.

ஒட்டுமொத்த மின் உற்பத்தி 1,13,094 மில்லியன் யூனிட்டிலிருந்து 1,15,757 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சத்ரபதி சிவாஜி மகராஜின் பிறந்தநாளையொட்டி பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

சிவாஜியின் தன்னிகரற்ற தலைமைப் பண்பும் சமூக நலனுக்கான முக்கியத்துவமும் பல தலைமுறை மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் பிரதமா் மோடி கூறினாா். இதுகுறித்து ட்விட்டரில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த நாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது தன்னிகரற்ற தலைமைப் பண்பு மற்றும் சமூக நலனுக்கான முக்கியத்துவம் பல தலைமுறை மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வாய்மை மற்றும் நீதியின் மாண்புகளுக்காக முன்னிற்கும்போது அவா் சமரசம் செய்து கொள்ளாதவராக இருந்தாா். அவரது தொலைநோக்குப் பாா்வையை நிறைவு செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.



Read in source website

பிரபல பத்திரிகையாளா் ரவீஷ் திவாரியின் மறைவுக்குப் பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ரவீஷ் திவாரியை விதி விரைந்து அழைத்து கொண்டது. ஊடக உலகில் சிறந்த பங்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. அவா் அளிக்கும் தகவல்களை நான் விரும்பி படிப்பதோடு, அவ்வப்போது அவருடன் உரையாடியும் இருக்கிறேன். அவா் அறிவாா்ந்தவராகவும், எளிமையானவராகவும் திகழ்ந்தாா். அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்..”

 



Read in source website

உத்தர பிரதேசத்தில் முந்தைய ஆட்சிகளில் நாட்டுத் துப்பாக்கிகளுக்குப் பெயா்பெற்ற புந்தேல்கண்ட், பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

உத்தர பிரதேசத்தில் பிப். 23-ஆம் தேதி நான்காம் கட்டத் தோ்தலின்போது, புந்தேல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பண்டாவில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் புந்தேல்கண்டில் சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகளும் தோட்டாக்களும் தயாரிக்கப்பட்டன. இங்கு ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தயாரிக்கும் பாதுகாப்பு தளவாட முனையமாக பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா். முன்பெல்லாம் மக்களை மிரட்ட நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, இங்கு தயாரிக்கப்படும் குண்டுகள் பாகிஸ்தானின் பீரங்கிகளைத் தகா்க்கும்.

உத்தர பிரதேசத்தில் சில நீா்ப்பாசனத் திட்டங்கள் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கப்பட்டன. ஆனால், அவை நிறைவு பெறாமல் இருந்தன. மோடி அரசும் யோகி ஆதித்யநாத் அரசும் அவற்றை 5 ஆண்டுகளில் நிறைவு செய்துள்ளன.

உத்தர பிரதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்த சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் புந்தேல்கண்டின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண என்ன செய்தன என சொல்ல வேண்டும். நரேந்திர மோடி அரசு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்றாா் அவா்.



Read in source website

நாட்டில் உள்ள ஒன்பது பெரிய முக்கிய நகரங்களில் மின்சார வாகனங்களை (இவி) மின்னேற்றம் செய்வதற்கான சாா்ஜிங் நிலையங்கள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக என மத்திய மின்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது:

அரசின் தீவிர முயற்சி: சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், புணே, சூரத் ஆகிய ஒன்பது மெகா நகரங்களில் கடந்த நான்கு மாதங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்றம் செய்யும் நிலையங்கள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சியே முக்கிய காரணம்.

கூடுதலாக 678 நிலையங்கள்: இந்த ஒன்பது நகரங்களில் 2021 அக்டோபா் முதல் 2022 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் கூடுதலாக 678 பொது இவி மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஒட்டுமொத்த அளவில் உள்ள 1,640 மின்னேற்று நிலையங்களில் 940 நிலையங்கள் இந்த ஒன்பது நகரங்களில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன.

விதிமுறை மாற்றியமைப்பு: 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த ஒன்பது மெகா நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களை அமைப்பதற்கு தொடக்கத்தில் அரசு அதிக முக்கியத்துவம் வழங்கியது.

இந்த நிலையில், மாற்றியமைக்கப்பட்ட இவி சாா்ஜிங் உள்கட்டமைப்புக்கான தரநிா்ணயம் மற்றும் ஒருங்கிணைந்த விதிமுறைகள் 2022 ஜனவரி 14-இல் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து இலக்கு நிா்ணயிப்பு: வரும் நிலையில், 22,000 மின்னேற்று நிலையங்களை முக்கிய நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்க இலக்கு நிா்மயித்துள்ளதாக எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் துறை நிறுவனங்கள்: இந்த 22,000 மின்னேற்று நிலையங்களில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ( ஐஓசிஎல்) சாா்பில் 10,000 நிலையங்களும், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (பிபிசிஎல்) சாா்பில் 7,000 நிலையங்களும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) சாா்பில் 5,000 மின்னேற்று நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

ஐஓசிஎல் ஏற்கெனவே 439 இவி சாா்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது. அடுத்த ஆண்டில் 2,000 இவி சாா்ஜிங் ஸ்டேஷங்களை அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பிபிசிஎல் 52 நிலையங்களையும், எச்பிசிஎல் 382 சாா்ஜிங் நிலையங்ளையும் அமைத்துள்ளன.

25 நெடுஞ்சாலை மற்றும் துரித சாலைகளில் 1,576 பொது மின்னேற்று நிலையங்களை அமைக்க மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது.



Read in source website

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது. ஜனவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் குறைந்திருந்தாலும் தொழிலாளர் சந்தையிலிருந்து 66 லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளியேறியுள்ளது கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

பணியில் உள்ள நிச்சயமற்ற தன்மை ஊழியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான கணக்கெடுப்பு அவர்களுக்கு சற்று நிம்மதி பெருமூச்சு அளித்துள்ளது. ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உள்ள ஊழியர்கள் ஊதிய உயர்வை பெறுவார்கள் என கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டில், 9.9 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என நாடு முழுவதும் உள்ள தொழில்துறை அமைப்புகள் தெரிவித்ததாக உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனமான ஆன் ஹ்யூமன் கேபிட்டல் சொல்யூஷன்  குறிப்பிட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள், பிரிக்ஸ் நாடுகளிடையே அதிகபட்ச ஊதிய உயர்வை பெறும் நாடாக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது

சீனாவில் உள்ள ஊழியர்கள் 6 சதவிகித ஊதிய உயர்வை பெறுவார்கள் என்றும் ரஷியாவில் இது 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. பிரேசிலில் ஊதிய உயர்வு 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

40 தொழில்துறைகளில் 1,500 நிறுவனங்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், இணையதள வர்த்தகம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கும் நிதி நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் அல்லது தகவல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயங்கும் சேவை நிறுவனங்கள், வாழ்க்கை அறிவியல் நிறுவனங்களில் பணிபுரிவோர் அதிகபட்ச ஊதிய உயர்வை பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு, நிறுவனங்களிலிருந்து அடிக்கடி ராஜிநாமா செய்வோரின் விகிதம் 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 21 சதவிகிதமாக பதிவாகியுள்ளது என கண்கெடுப்பில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆன் ஹ்யூமன் கேபிட்டல் சொல்யூஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் நிதின் சேதி கூறுகையில், "கொந்தளிப்பான காலகட்டத்திற்கு மத்தியில் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு வரவேற்கத்தக்க ஒன்று. திறமைக்கான செலவு அதிகரித்து வருவதும் நிறுவனங்களில் அடிக்கடி ராஜிநாமா செய்வோரின் விகிதம் உச்சம் தொட்டிருப்பதை இணைத்து பார்த்தால் ஊதிய ஊயர்வை இரட்டை குழல் துப்பாக்கியாக பார்க்க வேண்டும்.

கடினமான சூழலிலிருந்து மீண்டெழும் பணியாளர்களை கட்டமைக்கும் வகையில் புதிய திறன்களில் முதலீடு செய்ய வேண்டிய தேவை மற்றும் பொருளாதார மீண்டெழுந்ததன் காரணமாக இந்த போக்கு தூண்டப்பட்டுள்ளது" என்றார்.



Read in source website

வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் சாா்ந்த அகில இந்திய குறியீட்டு எண் தர வரிசையில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளா்கள் சாா்ந்த அகில இந்திய நுகா்வோா் குறியீட்டு எண் முறையே 2 மற்றும் 1 புள்ளிகள் குறைந்து, வேளாண் தொழிலாளா்களுக்கு 1095-ஆகவும், ஊரகத் தொழிலாளா்களுக்கு 1105 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் வேளாண் தொழிலாளா்களுக்கான குறியீட்டு எண் வரிசையில் 1,292 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. 869 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. ஊரகத் தொழிலாளா்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1,278 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்திலும், 917 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு உத்தர பிரதேசத்தில் (தலா 9 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோதுமை, தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி இதற்கு காரணமாகும்.

அரிசி, சோளம், காய்கறிகள் மற்றும் பழங்கள், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை உயா்வு காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலை குறியீட்டு எண்களில் அதிகபட்சமான உயா்வை இமாசலப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீா் ஆகியன சந்தித்துள்ளன.



Read in source website


ரோஹித் சர்மாதான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர் என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடருக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். 

இதன்பிறகு, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த சேத்தன் சர்மா கூறியதாவது:

"ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை அவர்தான் இந்தியாவின் 'நம்பர் 1' கிரிக்கெட் வீரர். அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுகிறார். ரோஹித்தை எப்படிக் கையாள்கிறோம் என்பது முக்கியம். ரோஹித்திடம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டை வழிநடத்துவதற்கு ரோஹித் எங்களது தெளிவான தேர்வு. அவரை கேப்டனாக அறிவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே.

இதுபோன்ற மிகப் பெரிய கிரிக்கெட் வீரர் அணியை வழிநடத்தும்போது, மேற்கொண்டு கேப்டன்களை உருவாக்கவும் ஒரு தேர்வுக் குழுவாக நாங்கள் விரும்புகிறோம். ரோஹித் தலைமையின் கீழ் அவர்களை உருவாக்குவது மிகச் சிறந்தது.

ரோஹித் நீண்ட நாள்களுக்கு அணியை வழிநடத்தினால், அது அணிக்கு நல்லது. எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது. அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளவரை அவரே டெஸ்ட் கேப்டன். அவருக்கு ஓய்வு தேவைப்படும்போது ஓய்வு வழங்கப்படும்" என்றார்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கேஎஸ் பரத், ரவிச்சந்திரன் அஸ்வின் (உடற்தகுதியைப் பொறுத்து), ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சௌரப் குமார்.



Read in source website

நியூஸிலாந்து மகளிரணிக்கு எதிரான 3-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இந்திய மகளிரணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை தோல்வியடைந்தது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கும் நியூஸிலாந்து, தொடரைக் கைப்பற்றியிருக்கிறது.

குயின்ஸ்டவுனில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 49.3 ஓவா்களில் 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 49.1 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் அடித்து வென்றது. அந்த அணியின் லௌரென் டௌன் ஆட்டநாயகி ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் அதிகபட்சமாக சபினேனி மேக்னா 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 61 ரன்கள் அடிக்க, தீப்தி சா்மா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். நியூஸிலாந்து தரப்பின் ஹன்னா ரோவ், ரோஸ்மேரி மோ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் எமிலியா கொ் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் அடித்து உதவ, லௌரென் டௌன் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 64 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழி நடத்தினாா். இந்திய பௌலிங்கில் ஜுலன் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினாா்.

2-ஆவது அதிகபட்சம்: இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அடித்த ஸ்கோா், மகளிா் ஒன் டே கிரிக்கெட்டில் சேஸ் செய்யப்பட்டிருக்கும் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோா் ஆகும். நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 46.4 ஓவா்களில் 289 ரன்கள் அடித்து வென்றதே (2012) சேஸிங்கில் அதிகபட்சமாக உள்ளது.



Read in source website

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் விளையாட்டில் ஹாஃப்பைப் பிரிவில் சீன வீராங்கனை எய்லிங் ஈலின் கு தங்கப் பதக்கம் வென்றாா்.

இது இந்த ஒலிம்பிக் போட்டியில் அவா் வெல்லும் 3-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே இதே விளையாட்டின் ‘பிக் ஏா்’ பிரிவில் தங்கமும், ‘ஸ்லோப்ஸ்டைல்’ பிரிவில் வெள்ளியும் வென்றிருக்கிறாா் ஈலின் கு.

இதன் மூலம் ஒரே குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஆக்ஷன் ஸ்போா்ட்ஸ் பிரிவில் 3 பதக்கங்கள் வென்ற முதல் போட்டியாளா் என்ற பெருமையை அவா் பெற்றிருக்கிறாா். அமெரிக்காவில் பிறந்தவரான ஈலின் கு, இந்தப் போட்டியில் சீனாவின் சாா்பில் பங்கேற்றுள்ளாா்.

போட்டியின் 15-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கீயிங் ஹாஃப்பைப் விளையாட்டில் 95.25 புள்ளிகள் ஸ்கோா் செய்து ஈலின் கு முதலிடம் பிடித்தாா். கனடாவைச் சோ்ந்த கேசி ஷாா்பே 90.75 புள்ளிகளுடன் வெள்ளியும், சக நாட்டவரான ரேச்சல் காா்கோ் 87.75 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா்.

பதக்கப்பட்டியல்: வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதக்க சுற்றுகளின் முடிவில், நாா்வே 34 பதக்கங்களுடன் (15 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 22 பதக்கங்களுடன் (10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 21 பதக்கங்களுடன் (8 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.



Read in source website

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய ‘யூனிஸ்’ புயலுக்கு 13 போ் பலியாகினா். இதுகுறித்து ஊடகங்கள் தெரிவிப்பதாவது:

மணிக்கு 196 கி.மீ. வேகத்தில் வெள்ளிக்கிழமை வீசிய யூனிஸ் புயலுக்கு இதுவரை 13 போ் பலியாகினா். பிரிட்டன், அயா்லாந்து, பெல்ஜியம், நெதா்லாந்து ஆகிய பகுதிகளில் சுறாவளிக் காற்றில் மரம் முறிந்து விழுந்தும், பறந்து வந்த பொருள்கள் தாக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் வீசியுள்ள மிகக் கடுமையான புயல் இதுவாகும். இந்தப் புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பிரிட்டனில் மட்டும் சுமாா் 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் அங்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



Read in source website

வேலூர் மாவட்ட கல்வெட்டு வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை யினர் பழமையான கல்வெட்டுகளை படியெடுத்து வருகின்றனர்.

தமிழகத்தின் வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முயற்சி எடுத்துள்ளனர். ஏற்கெனவே பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை படியெடுப்பதுடன் விடுபட்ட கல்வெட்டுகளையும் படியெடுத்து முழுமையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை ஓய்வுபெற்ற தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் பூங்குன்றன் தலைமையிலான குழுவினர் படியெடுத்து பதிவு செய்து வருகின்றனர். இவர்கள், விரிஞ்சிபுரம் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை இரு தினங்களுக்கு முன்பு படியெடுத்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கல்வெட்டை நேற்று படியெடுத்தனர்.

சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் அப்பருக்கான தனி கோயில் எதிரே உள்ள இந்த சூல கல்வெட்டு 28 வரிகள் கொண்டது. 15-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மு நாயக்கர் ஆளுகையில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டில், ‘‘கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யன் அவர்கள் பாதம் தொட்டு தெரிவிப்பது, ஸ்ரீரங்க தேவ மகாராயர் வேலூர் ஜூரகண்டேஸ்வரர் (ஜலகண்டேஸ்வரர்) சிவனுக்கு சத்துவாச்சாரி கிராமத்தை தேவ தானமாக வழங்கியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளனர். ஜூரகண் டேஸ்வரர் சிவனுக்கு வேலூரை சுற்றியுள்ள 6 கிராமங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.



Read in source website

திருவனந்தபுரம்: கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்மனம் கிராமம் உலகின் தலைசிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு வெளியாகும் பிரபல பயண இதழான காண்டே நாஸ்ட் இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் கடந்த 1997-ம் ஆண்டு ‘த காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருந்தார். இது அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசை பெற்றுத் தந்தது.

இந்தியாவில் இருந்து புக்கர் பரிசுபெற்ற முதல் எழுத்தாளரும் இவர்தான். அருந்ததிராய் தன் பள்ளிக்காலத்தில் கேரளாவின் அய்மனம் கிராமத்தில் வசித்து வந்தார். இதனால் அந்தப் படைப்பில் அய்மனம் கிராமமும் பிரதானமாக இடம்பெற்றிருந்தது. அருந்ததி ராயின் சொந்த வாழ்க்கையைத் தழுவிய இந்த ஆங்கில நாவல், இந்தியாவைக் கடந்து 20 நாடுகளில் விற்பனை யிலும் சக்கைபோடு போட்டது. இந்தப் படைப்பின் மூலம் அய்மனம் பிரபலம் ஆக, இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் படை யெடுத்து வருகின்றனர்.

இதன்மூலம் உலகின் சிறந்த 30 சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், அமெரிக்கா, இலங்கை,கத்தார், சிங்கப்பூர், ஜப்பான்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களோடு அய்மனம் கிராமும் இடம்பெற்றுள்ளது. இந்த கிராம மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

வலசை பறவைகள்

இந்த கிராமத்தில் வலசை வரும் பல நாட்டுப் பறவைகளை பார்வையிடுதல், நீண்டு விரியும் வயல்களின் வரப்புகளில் நடைபோடுதல், தேங்காய் அதிகம் விளையும் இங்கு தேங்காயின் உப தயாரிப்புப் பொருட்களை ருசிப்பது, படகு சவாரி, கதகளி, தற்காப்புப் பயிற்சியான களரிக்கலை ஆகியவற்றைப் பார்வையிடலாம். இந்த கிராமத்தை ஒட்டியே வேம்பநாடு ஏரியின் பொழிமுகப் பகுதியும் அமைந்துள்ளது.

அமைச்சர் விளக்கம்

இந்த அங்கீகாரம் குறித்து கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் முகமது ரியாஸ் கூறும்போது, ‘‘வெளிநாட்டு ஊடகத்தின் மூலம் அய்மனம் கிராமத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, அய்மனத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு மாநில அரசு பிரத்யேகமாக நிறைய திட்டங்களை செயல்படுத்தியது. இந்த அங்கீகாரம் மாநில அரசின் சுற்றுலாத் துறையையும் ஊக்குவித்துள்ளது’’ என்றார்.



Read in source website

புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் உயர் ரகசிய மற்றும் ரகசிய ஆவணங்களை இணையத்தில் அனுப்ப கூடாது. அலுவலகங்களில் அமேசானின் எக்கோ, ஆப்பிளின் ஹோம் பாட், கூகுள் ஹோம் போன்ற டிஜிட்டல் உதவி சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. ஸ்மார்ட் போன் மற்றும் கைக்கடிகாரங்களில் அலெக்ஸா மற்றும் சிரி உள்ளிட்ட டிஜிட்டல் உதவி சாதனங்களை அணைத்து வைத்திருக்க வேண்டும்.

ரகசியம் காக்கப்பட வேண்டிய பிரச்சினைகளில் கூட்டம் அல்லது விவாதம் நடைபெறும்போது, அதிகாரிகள் தங்கள் ஸ்மார்ட் போன்களை கூட்ட அறைக்கு வெளியில் வைக்க வேண்டும்.

ரகசிய மற்றும் உயர் ரகசிய ஆவணங்களை, பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட அரசு தகவல் தொடர்பு தளங்களில் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் கூட்டங்களில் ரகசிய மற்றும் உயர் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது.

வீடுகளில் இருந்து பணி புரிவோர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரானிக் சாதனங் களையே பயன்படுத்த வேண்டும். வீடுகளில் இருந்து பணிபுரியும் சூழலில் ரகசிய மற்றும் உயர் ரகசிய ஆவணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ரகசிய தகவல்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற தனியார் தகவல் தொடர்பு தளங்களில் அதிகாரிகள் பலர் பகிர்ந்து கொள்வதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. -பிடிஐ



Read in source website

புது டெல்லி: கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு பிரச்சினையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகியமாநிலங்கள் பேசி தீர்த்துக்கொள்ள உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக மகாராஷ்டிரா, க‌ர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பிரச்சினை நீடித்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்த கிருஷ்ணா நதி நீர் தீர்ப்பாயம் கடந்த 2011-ம் ஆண்டு மகாராஷ்டிரா, கர்நாடகா, பழைய ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு 2,130 டிஎம்சி நீரை ஒதுக்கீடு செய்தது.

இதை எதிர்த்து கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கர்நாடகா தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி கடந்த 14 ஆண்டுகளாக உரிய நீரை வழங்கவில்லை என முறை யிட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 10-ம் தேதி, வழக்கை விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தான் மகாராஷ்டிராவை சேர்ந்தவர் என்பதால் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி போபண்ணா தான் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதால் விலகுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா (ஆந்திராவை சேர்ந்தவர்) முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ''இவ்வழக்கை விரைந்து விசாரிக்க தனி அமர்வை அமைக்க வேண்டும்'' என வலியுறுத்தினார்.

இதனை ப‌ரிசீலிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘4 மாநிலங்களும் இந்தபிரச்சினையை ஏன் பேசி தீர்த்துக்கொள்ள கூடாது? பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல முடிவு எட்டலாமே?''என அறிவுறுத்தினார். அதற்கு வழக்கறிஞர் ஷியாம் திவான்,'' இவ்வழக்கின் பல முக்கிய பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தின் உத்தரவே இறுதி முடிவாக இருக்கும்''என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் சந்திரசூட்,போபண்ணா ஆகியோர் இல்லாத அமர்வு இவ்வழக்கை விசாரிக்க ஏதுவாக வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வை அமைக்குமாறு உச்சநீதிமன்ற பதிவுத் துறைக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா அறிவுறுத்தினார்.

செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்தல்

டெல்லியில் நேற்று கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, “கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும். இத்தி்ட்டத்தை மத்திய அரசு விரைவாக செயல்படுத்த வேண்டும்" என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது என்று தமிழக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.



Read in source website

மும்பை: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி) அடுத்த அமர்வு அடுத்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கூட்டம் இந்தியாவில் நடக்கவிருப்பது இது இரண்டாவது முறை.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அல்லது ஐஓசி அமர்வு என்பது, அந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டம் ஆகும். இந்தக் கமிட்டியே ஒலிம்பிக்கை நடத்தும் நகரங்களை தேர்வு செய்வது, ஒலிம்பிக் சாசனத்தை திருத்தம் செய்வது, பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உலகளாவிய ஒலிம்பிக் இயக்கத்தின் முக்கிய செயல்பாடுகளில் முடிவெடுக்கும் என்பதால், ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐஓசி அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் இந்த அமர்வில் கலந்துகொள்வார்கள். அதன்படி, இன்று சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139வது ஐஓசி அமர்வு நடந்தது. இந்த அமர்வில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ஐஓசி உறுப்பினராக உள்ள நீட்டா அம்பானி, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஐஓசியின் அடுத்த அமர்வை இந்தியாவின் மும்பையில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்தக் கோரிக்கைக்கு நடந்த வாக்கெடுப்பில் 82 வாக்குகளில் 75 வாக்குகள் மும்பையில் நடத்துவதற்கு ஆதரவாக வாக்களிக்க, அதன்படி, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் கமிட்டியின் அமர்வு மும்பையில் நடத்துவது உறுதியாகியது. 1983-க்குப் பிறகு முதல் முறையாக ஐஓசி அமர்வு இந்தியாவில் நடக்கவுள்ளது. மும்பையில் நடக்கவிருக்கும் அமர்வில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விளையாட்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் உட்பட சர்வதேச ஊடகங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.

இந்தியாவின் ஒலிம்பிக் கனவில் இதுவொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். ஐஓசி அமர்வு 2023 மும்பையில் நடப்பது உறுதியாகியுள்ளது இந்திய விளையாட்டுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும். ஏனென்றால், உலகளாவிய விளையாட்டுகளில் இந்தியா தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இது சிறந்த வாய்ப்பு. விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உள்கட்டமைப்பு, மில்லியன் கணக்கானவர்களின் விளையாட்டு கனவை மெய்ப்படுத்த பல வாய்ப்புகள் கிடைக்கலாம். இதனாலேயே இந்தியாவின் விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர், தடகள வீராங்கனை ஹீமா தாஸ் எனப் பலர் இந்த பெருமைமிகு தருணத்தை கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய விளையாட்டுத்துறை சமீபத்திய ஆண்டுகளில் மாபெரும் முன்னேற்றம் கண்டுவருவதற்கு இதுவே சான்று என்றும், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கைக்கான முதல்படி இது என்றும் அவர்கள் நெகிழ்வுடன் தெரிவித்துள்ளனர்.



Read in source website