DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 18-12-2022


சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவிகளை வழங்குவதற்கென 'நம்ம பள்ளி திட்டம்' என்னும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் திங்கள்கிழமை(டிச.19) தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்கள்(என்ஜிஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதி(சிஎஸ்ஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் நோக்கத்தில் 'நம்ம பள்ளி திட்டம்' தொடங்கப்படுவதோடு, இதற்கான இணையதளத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைக்கிறார். 

இந்த இணையதளம் மூலம் இத்திட்டத்தில் பங்கெடுக்க விரும்புகிறவர்கள் எந்த பள்ளிக்கு வேண்டுமானாலும் நிதியுதவி வழங்கலாம்.

மேலும், பணிகளுக்கு முறையாக நிதி பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் நிதியுதவி செய்தவர்கள் அறியும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள் வலுப்படுத்த இயலும் என்ற வகையில், இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி, செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.



Read in source website

 

லடாக்: லடாக்கில் 2023 ஏப்ரல் மாதம் ஜி20 தொடர்பான கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 தலைமை பொறுப்பை கடந்த 1 ஆம் தேதி இந்தியா ஏற்றது. தொடர்ந்து ஓராண்டுக்கு இந்த தலைமை பதவியை இந்தியா வகிக்கும். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு முதல் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 32 வெவ்வேறு துறைகளுடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த உள்ளது. 

இதன் ஒரு பகுதியாக லடாக்கில் 2023 ஏப்ரல் மாதம் ஜி20 தொடர்பான கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை லடாக் அரசு தொடங்கி உள்ளது.

திட்டமிடப்பட்ட ஜி20 கூட்டத்தில், லடாக்கின் தனித்துவமான கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறும். இது புதிய யூனியன் பிரதேசம் லடாக்கின் பிராண்டிங்கிற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஜி20 தொடர்பான கூட்டத்திற்கான முதல் கூட்டத்தில், லடாக்  ஆலோசகர் உமாங் நருலா, இளைஞர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்முனைவோரின் ஈடுபாட்டுடன் தனித்துவமான மற்றும் மாறுபட்ட கலாசாரம், உணவு வகைகள், கலை, நடன வடிவங்களை ஊக்குவிக்க லடாக்கை மையமாகக் கொண்ட கதைகளை கவனமாக திட்டமிடுமாறு பரிந்துரைத்தார். 

இந்தியாவின் ஜி20 பிரசிடென்சியின் கீழ் பல்வேறு 'ஜன் பகிதாரி' முயற்சிகள் மூலம் 'மக்கள் ஜி20' தொடர்பான மாநாடுகளின் முக்கிய கூறுகளை அவர் எடுத்துக் கூறினார்.

லடாக் பிரதேச ஆணையரும், லடாக்கில் உள்ள ஜி20 நோடல் அதிகாரியுமான சவுகத் பிஸ்வாஸ், பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள் உள்பட அடுத்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் 28 வரையிலான தேதிகளில் ஜி20 தொடர்பான கூட்டத்திற்கான செயல் திட்டத்தை வழங்கினார்.

தொடக்கத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இந்தியாவின் மந்திரமான ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்’ ஆகியவற்றை பள்ளிகள் ஏற்பாடு செய்யும்.

யூனியன் பிரதேசத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை, மற்றும் நிகழ்வின் போது இ-வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான முன்முயற்சிகளை ஊக்குவிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல், உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களுக்கு நினைவுப் பொருள்களாக வழங்கப்பட வேண்டும்.

லடாக்கின் முதன்மைச் செயலாளர்கள், டாக்டர் பவன் கோட்வால், சஞ்சீவ் கிர்வார், லடாக் ஏடிஜிபி எஸ்எஸ் கந்தாரே மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



Read in source website

 

2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த நேரடி வரி வருவாய் 25.90 சதவீத அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டிற்கான நிகர நேரடி வரி வசூல் 19.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் வருவாய் டிசம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி, நிகர வசூல் வருவாய் ரூ. 11,35,754 கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ. 9,47,959 கோடி வசூலாகி 19.81 சதவீதம் அதிகமாகும்.

நிகர நேரடி வரி வசூல் வருவாய்  ரூ. 11,35,754 கோடியில், கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 6,06,679 கோடி (திரும்பச் செலுத்த வேண்டிய நிகரம்) மற்றும் தனிப்பட்ட வருமான வரி, பத்திர பரிவர்த்தனை வரி உள்பட ரூ. 5,26,477 கோடி ஆகியவை அடங்கும்.

2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வசூல் (திரும்பச் செலுத்துவதற்கு முன்) ரூ. 13,63,649 கோடியுடன் ஒப்பிடுகையில், ரூ.10,83,150 கோடி வசூலாகி 25.90 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

மொத்த வசூல் வருவாய் ரூ. 13,63,649 கோடியில் கார்ப்பரேஷன் வரி (சிஐடி) ரூ. 7,25,036 கோடி. தனிப்பட்ட வருமான வரி , பத்திர பரிவர்த்தனை வரி  உள்பட ரூ. 6,35,920 கோடி.

2022-23 நிதியாண்டுக்கான முன்கூட்டிய வரி வசூல் வருவாய் டிசம்பர் 17 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, ரூ. 5,21,302 கோடி, இது 12.83 சதவீதம் கூடுதலாகும். திரும்பச் செலுத்த வேண்டிய தொகையாக நடப்பு நிதியாண்டில் ரூ.2,27,896 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது ரூ.1,35,191 கோடி திருப்பச் செலுத்தப்பட்டு 68.57 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 
 



Read in source website

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், உலகளாவிய நீடித்த தன்மைக்கும் சுற்றுசூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என்று மத்திய சுற்றுசூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறினார். 

கனடாவின் மான்ட்ரியல்  நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பல்லுயிர் மாநாட்டில்,  சிஓபி 15 இன் பங்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல், பருவ மாறுபாடு மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பேசினார். 

அப்போது, இந்த மாநாட்டில் 2020 உலகளாவியப் பல்லுயிர் கட்டமைப்பின் அம்சங்கள் குறித்த  அனைத்து தரப்பினரின் ஒருமித்த கருத்து உருவாகும் என நம்புகிறேன்.

சுற்றுச்சூழல் சீரழிவை மாற்றியமைப்பது மற்றும் உலக அளவிலான பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துதல், சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கும், மனிதகுலத்திற்கும்,  நிலைத்தன்மைக்கும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது, உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம். உலகின் பணக்கார தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் கலவையை உள்ளடக்கிய அதன் வளமான பல்லுயிரியலை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் இந்தியா செயல்பட்டு வருகிறது. 

உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள்,  தன்னுள் லட்சியத்தைக் கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல்,  நடைமுறைக்கு சாத்தியமானதாகவும், நடைமுறை ரீதியாகவும் இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார்.  பல்லுயிர் பெருக்கம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது கட்டாயம் என்றுக் குறிப்பிட்டவர்,  ஏனெனில், பருவ மாறுபாடு பிரச்னைக்கு  நாடுகள், அவரவர் சூழலுக்கு ஏற்ப எடுக்கும் நடவடிக்கைகள் பல்லுயிர் பெருக்கத்தை பாதிக்கிறது என்றார்.

வளரும் நாடுகளைப் பொருத்தவரை, கிராமப்புற மக்களின் வருமானத்திற்கான ஒரு முக்கிய பொருளாதாரக் காரணியாக விவசாயமே திகழ்வதால், வேளாண்மைக்கு வழங்கப்பட்டு வரும் ஆதரவை ஒருபோதும் மாற்றக்கூடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.  

இந்தியாவின் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளை நம்பியிருக்கிறார்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காக நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு பல்வேறு மானியங்களை வழங்குகிறது. எனவே, பல தேசிய முன்னுரிமைகள் இருப்பதால், விவசாயம் தொடர்பான மானியத்தை குறைப்பதற்கும், சேமிப்பை பல்லுயிர் பாதுகாப்புக்கு மாற்றுவதற்கும் இந்தியா உடன்படவில்லை.

வளரும் நாடுகளுக்கு உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் பட்சத்தில்,  பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைப்பது போன்ற இலக்குகளைப் பரிந்துரைப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட அமைச்சர், உலக  நாடுகள் தங்கள் தேசியச் சூழல்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்துக்கொள்ளவிடுவதே உகந்ததாக இருக்கும் என யோசனைத் தெரிவித்தார். 

பல்லுயிர் பாதுகாப்புக்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அதுவும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், பல்லுயிர் பாதுகாப்புக்கு, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளைக் காட்டிலும், சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பெரும்பாலான சுமைகளை வளரும் நாடுகள் ஏற்கின்றன, ஆனால் நன்மைகள் உலகளாவியவை என்றார். 

வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்க ஏதுவான, புதிய மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய வழிமுறைகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பை அமைப்பதில் ஒருமித்த கருத்தை எட்டும் என்று பூபேந்திர யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். 



Read in source website

வட கொரியா அதன் கிழக்குப் பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (டிசம்பர் 18) சோதனை செய்தது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் வரை செல்லக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன்பு கூறிய நிலையில், இன்று (டிசம்பர் 18) இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.

தென் கொரியாவின் வடமேற்கு திசையில் இருந்து இந்த வட கொரியாவின்  ஏவுகணை பறந்து சென்றதாக கூறப்படுகிறது. தென் கொரியாவின் குறுக்காக இந்த ஏவுகணைகள் பறந்து சென்று அந்த நாட்டின் கிழக்குப் பகுதி நீரில் விழுந்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல, ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த அதிகாரிகளும் வட கொரியாவில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதை பார்த்ததாகக் கூறுகிறார்கள். இந்த இரண்டு ஏவுகணைகளும் 50 நிமிட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடகொரியாவில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்துக்கும், ஜப்பானுக்கும் இடையில் உள்ள நீரில் விழுந்துள்ளது என்றார்.

அண்மையில், ஜப்பான் தனது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதியை ஜிடிபியில் 1 சதவிகித்தில் இருந்து 2 சதவிகிதமாக வருகிற 2027 முதல் உயர்த்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தானுக்கு தலிபான்களும், மியான்மருக்கு ராணுவ ஆட்சியாளா்களும் பிரதிநிதித்துவம் அளிக்க அந்த அமைப்பு தடை விதித்துள்ளது.

இதற்கான தீா்மானத்தை 193 உறுப்பு நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட அந்த அமைப்பு ஏக மனதாக நிறைவேற்றியது.

இதையடுத்து, ஐ.நா.வில் மியான்மருக்கு முந்தைய ஆங் சான் சூகி அரசால் நியமிக்கப்பட்டவரும், ஆப்கானிஸ்தானுக்கு முந்தைய அஷ்ரஃப் கனி அரசால் நியமிக்கப்பட்டவருமே தொடா்ந்து தூதா்களாக செயல்படுவாா்கள்.

மியான்மரில் தோ்தல் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி அரசை ராணுவம் கடந்த ஆண்டு கலைத்தது. இதனை சா்வதேச நாடுகள் கண்டித்தன.

அமெரிக்கா வெளியேறியதற்குப் பிறகு ஆப்கன் அரசைக் கைப்பற்றிய தலிபான்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.



Read in source website

கரோனா நோய்த்தொற்று 2 ஆண்டுகளாக இந்த உலகை உலுக்கியெடுத்தபோது, மரணங்கள், பொருளாதார நெருக்கடி, மாணவா்களின் கல்வி பாதிப்பு போன்ற சோகச் செய்திகளுக்கு இடையே, ஒரு நல்ல செய்தியும் கிடைத்தது.

நோய் பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் தொழிற்சாலை நடவடிக்கைகளும், போக்குவரத்தும் முடங்கிப் போய், காற்று மாசுபாடு வெகுவாகக் குறைந்தது என்பதுதான் அந்தச் செய்தி.

உலகம் முழுவதும் அளவுக்கு அதிகமான மழை-வெள்ளம், அதீதமான வெப்ப அலை போன்ற இயற்கைப் பேரிடா்களில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோா் பலியாகின்றனா்.

காற்றில் கரியமில வாயு போன்ற பசுமைக் குடில் வாயுக்கள் கலப்பதால் புவியின் வெப்பம் அதிகரித்து, அதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதே இத்தகைய பேரிடா்களுக்குக் காரணமாக அமைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.

அத்தகைய வாயுக்களை காற்றில் கலப்பதில் வாகனங்கள் கணிசமான பங்கு வகிக்கின்றன. எனவே, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வாகனப் போக்குவரத்தில் சீா்திருத்தம் மேற்கொள்வது முக்கிய நடவடிக்கையாகியுள்ளது.

அதற்காகத்தான், காற்றில் கரியமில வாயுக்களைக் கலக்கும் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக, மின்சாரத்தில் இயங்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை உலக நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.

இந்தியாவிலும் அத்தகைய வாகனங்களை வாங்குவோரை உற்சாகப்படுத்தும் அரசு மானியம் அளிக்கப்படுகிறது.

எனினும், விலை அதிகமாக இருப்பது, பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிடுகையில் ஆற்றல், வேகம் ஆகியவை குறைவாக இருப்பது, எரிபொருள் நிரப்புவதைவிட பேட்டரியில் மின்னேற்றம் செய்வது சிரமமாக இருப்பது போன்ற காரணங்கள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனைக்குப் பாதகமான அம்சங்களாக இருந்து வருகின்றன.

மின்சார வாகனங்களைத் தயாரிப்பதற்கான அனைத்துத் தொழில்நுட்பங்களும் இந்திய நிறுவனங்களிடம் இல்லை. மேலும், அந்த வாகனங்களைப் பழுதுபாா்ப்பதற்குரிய தோ்ச்சி பெற்றவா்கள் இந்தியாவில் போதிய அளவில் இல்லை.

அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களுக்குத் தேவையான பெரும்பாலான உதிரிபாகங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.

இந்தச் சூழலிலும், மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல எதிா்காலம் உள்ளது என்கிறாா்கள் துறை நிபுணா்கள்.

இந்தியாவில் செயல்பட்டு வரும் ஏறத்தாழ எல்லா முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகனத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன; அதற்கான முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. எனவே, அந்த வகை வாகனங்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும் என்பது அந்த நிபுணா்கள் கருதுகின்றனா்.

அதுமட்டுமன்றி, நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற நிலையங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

புதிது புதிதாக மின்சார வாகன ரகங்கள் அறிமுகமாவதால் போட்டி காரணமாக அவற்றின் விலைகள் குறையும்; அத்துடன் அரசின் மானியத் திட்டங்களும் சோ்ந்து மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மக்களை உற்சாகப்படுத்தும்.

வேகமாக வளா்ச்சியடைந்து வரும் பேட்டரி தொழில்நுட்பம் காரணமாக, எதிா்காலத்தில் கூடுதல் ஆற்றல், வேகம், வசதி ஆகியவற்றைத் தரும் வாகனங்கள் அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதைவிட மின்சார வாகனங்களை இயக்குவது ஓட்டுநா்களுக்கு உடல் அசதியைக் குறைக்கும் என்பதால் அந்த வகை வாகனங்களுக்கு வரவேற்பு தொடா்ந்து அதிகரிக்கும்.

எனவே, இந்தியப் போக்குவரத்தின் எதிா்காலம் மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் என்று நிபுணா்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனா்.



Read in source website

இந்தியாவின் அறிதிறன் தொலைக்காட்சிகளுக்கான (ஸ்மாா்ட் டிவி) சந்தை ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 38 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:

பண்டிகைக் கால சிறப்பு விற்பனை, தள்ளுபடி போன்ற சலுகைகள் அளிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மாா்ட் டிவி சந்தை 38 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இதில் உலகளாவிய நிறுவனங்களின் டிவிக்கள் 40 சதவீத பங்கையும், சீனத் தயாரிப்புகள் 38 சதவீத பங்கையும் பெற்றுள்ளன. இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிவேக வளா்ச்சியைக் காட்டினாலும், ஒட்டுமொத்த ஸ்மாா்ட் டிவி சந்தையில் அவற்றின் பங்கு 22 சதவீதமாக உள்ளது.

இந்திய ஸ்மாா்ட் டிவி சந்தையில் 31 இஞ்ச் முதல் 42 இஞ்ச் வரையிலான சிறிய திரை டிவிக்களின் பங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகை டிவிக்கள் சந்தையில் ஏறத்தாழ பாதியை ஆக்கிரமித்துள்ளன என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.



Read in source website

புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு: வாக்காளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, வாக்காளரின் விருப்பத்தின் அடிப்படையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆதார் எண்ணைப் பெறலாம். அடையாளத்தை உறுதி செய்யும் நோக்கத்துக்காக மட்டுமே ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது.

ஆதார் தகவல் தொகுப்பில் இருந்து எந்த தனிப்பட்ட தகவலையும் தேர்தல் ஆணையம் பெறுவதில்லை. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது விருப்பத்தின் அடிப்படையிலானது. இது கட்டாயமில்லை. ஆதார் அங்கீகாரத்துக்காக வாக்காளர்களிடம் இருந்து 6-பி படிவத்தில் ஒப்புதல் பெறப்படுகிறது. எனினும், இந்த ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கான விதிகள் எதுவும் இல்லை.

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கும் திட்டம் எதுவுமில்லை. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதற்காக கருத்துக் கணிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

இதுவரை, சுமார் 50 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

லுசைல்: கத்தார் நாட்டில் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. இதில் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. இந்த போட்டிதான் மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 120 நிமிடங்கள் இந்த போட்டி நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் சரி சமமாக 3-3 என்ற கோல் கணக்கில் இருந்தன. அதனால் போட்டியில் முடிவை எட்ட பெனால்டி ஷூட்-அவுட் முறை நடத்தப்பட்டது.

முன்னதாக, இந்த போட்டியின் முதல் 120 நிமிடங்களில் அர்ஜென்டினா அணி சார்பில் மெஸ்ஸி 2 கோல்களை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு கோல் பெனால்டியில் பதிவு செய்யப்பட்டது. அர்ஜென்டினா அணிக்காக மற்றொரு கோலை டி மரியா பதிவு செய்திருந்தார்.

பிரான்ஸ் அணிக்காக மூன்று கோல்களையும் எம்பாப்பே பதிவு செய்திருந்தார். அதில் இரண்டு கோல்கள் பெனால்டி வாய்ப்பில் பதிவு செய்யப்பட்டவை. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர் ஆனார் அவர். இந்த போட்டியின் முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் 2-2 என சமமாக இருந்தன. கூடுதல் நேரமாக விளையாடப்பட்ட 30 நிமிடத்திலும் தலா ஒரு கோலை இரு அணிகளும் பதிவு செய்தன.

பெனால்டி ஷூட்-அவுட்டிலும் கோல் பதிவு செய்து கலக்கிய மெஸ்ஸி - எம்பாப்பே

பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரான்ஸ் அணி முதலில் ஷூட் செய்தது. எம்பாப்பே எந்த தவறும் செய்யாமல் முதல் கோலை பதிவு செய்தார். மறுபக்கம் மெஸ்ஸி தன் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். இருந்தும் அதற்கடுத்த வாய்ப்புகளை பிரான்ஸ் வீண் செய்தது. ஆனால், அர்ஜென்டினா வீரர்கள் பந்தை வலைக்குள் மிக சுலபமாக தள்ளிக் கொண்டிருந்தனர். முடிவில் 4-2 என பெனால்டி ஷூட்-அவுட்டில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் மார்டினஸ் சிறப்பாக பிரான்ஸ் வீரர்கள் ஷூட் செய்த ஷாட்களை தடுத்து அசத்தி இருந்தார்.



Read in source website

சட்டோகிராம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5-ம் நாளான இன்று வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

வங்கதேச அணி இன்று காலை தன் 2-வது இன்னிங்ஸில் போராடி 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த டெஸ்ட்டில் பேட்டிங்கில் முக்கியக் கட்டத்தில் 40 ரன்களை எடுத்ததோடு 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மீட்டெழுச்சி கண்ட குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த டெஸ்ட் இந்திய அணியின் ஒரு முழு நிறைவான ஆட்டமாக அமைந்தது. புஜாரா இரண்டு இன்னிங்ஸ்களிலும் அசத்தி தன் அதிவேக சதத்தையும் எடுத்தார். சுப்மன் கில் தன் டெஸ்ட் சதம் மூலம் சதக்கணக்கை தொடங்கியுள்ளார். ஷ்ரேயஸ் அய்யர் அபாரமாக ஆடினார். குல்தீப் யாதவ் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அக்சர் படேலின் பந்துகள் இந்த பஞ்சு மிட்டாய் பிட்சிலும் திரும்பியது ஆச்சரியமாக இருந்தது. சிராஜ் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் இன்று முதல் விக்கெட்டாக மெஹதி ஹசன் மிராஸை பெவிலியன் அனுப்பியது இந்திய வெற்றியைத் துரிதப்படுத்தியது.

272/6 என்று தொடங்கிய வங்கதேச அணியின் மீதமுள்ள 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இந்திய அணி 12 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா படுதோல்வி அடைந்ததால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக 2-ம் இடத்திற்கு முன்னேறி இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி 13 டெஸ்ட்களில் 9 வெற்றி ஒரு தோல்வி, 3 ட்ராக்களுடன் 120 புள்ளிகளுடன் 76.92% என்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடம் வகிக்க, இந்திய அணி வங்கதேசத்தை பெரிய வெற்றி பெற்றதன் மூலம் 13 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 ட்ரா என்று 87 புள்ளிகளுடன் 55.77% எடுத்து 2-ம் இடத்தில் உள்ளது. 3ம் இடத்தில் தென் ஆப்பிரிக்கா 54.55% உடன் உள்ளது. 53.33% உடன் இலங்கை 4ம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன வங்கதேசத்துக்கு 513 ரன்கள் என்பது இமாலய இலக்குதான். ஆனால் பிட்ச் பஞ்சு மிட்டாய் கணக்காக ஆகிவிட அவர்கள் கொஞ்சம் போராடினார்கள். அறிமுக தொடக்க வீரர் ஜகீர் ஹசன் அற்புதமான ஒரு டெஸ்ட் சதத்தை எடுத்தார். வங்கதேசத்தின் எதிர்கால ஸ்டார் இவர் என்றால் மிகையாகாது. இன்று மெஹதி ஹசன் பாசிட்டிவ் ஆக சிராஜை பவுண்டரியுடன் தொடங்க ஷாகிப் அல் ஹசன் அக்சர் படேலை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் விளாசினார். ஆனால் டூ மச் ஆக்ரோஷம் தேவையில்லை என்று தெரியாமல் சிராஜை மீண்டும் தூக்கி அடிக்கிறேன் என்று பாயிண்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அக்சர், சிராஜ் போன்றோரை ஷாகிப் அல் ஹசன் பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் பெர்சனல் பார்மைத் தேற்றிக் கொண்டார். 8வது விக்கெட்டுக்காக தைஜுல் இஸ்லாம் (4) உடன் சேர்ந்து ஷாகிப் அல் ஹசன் 37 ரன்களை விரைவு கதியில் எடுத்தார். இந்த 37 ரன்கள் கூட்டணியில் அனைத்து ரன்களும் ஷாகிப் அடித்ததே. வங்கதேச ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டி 6 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 108 பந்துகளில் 84 ரன்கள் என்று 77.77 என்ற ஒருநாள் போட்டி ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார்.

ஆனால், குல்தீப் யாதவ் ஒரு பந்தை காற்றில் மிக மெதுவாக வீச, ஷாகிப் அல் ஹசன் மட்டையையெல்லாம் சுற்றி முடித்தவுடன் அவர் கண்ணெதிரிலேயே பந்து ஸ்டம்பைத் தாக்கியது. தைஜுல் இஸ்லாமை அக்சர் படேல் வீழ்த்த எபதத் ஹுசைனை குல்தீப் காலி செய்தார். வங்கதேசம் 324 ரன்களுக்குச் சுருண்டது.

அடுத்த டெஸ்ட் போட்டி மிர்பூரில் டிசம்பர் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் அதாரிட்டியுடன் ஆட வேண்டியுள்ளது. ரோஹித் சர்மா வந்து விட்டால் சுப்மன் கில்லை உட்கார வைப்பது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும், எனவே செலக்‌ஷன் தலைவலி நிச்சயம் உள்ளது.



Read in source website

சென்னை: ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்புகள் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதால், வாழ்வாதார நெருக்கடியில் மென்பொறியாளர்கள் தவித்து வருகின்றனர். எனவே, ஐ.டி. துறைக்கென பிரத்யேக பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முக்கிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இத்துறையை பொருத்தவரை அதிக அளவிலான ஊதிய உயர்வுகள், பணியாளர் பலன்கள், மிக முக்கியமாக வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான வாய்ப்புகள் பெரிதும் காணப்படுகின்றன. இதுவே பெரும்பாலானோர் இத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இத்துறை 227 பில்லியன் டாலர் வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சி மூலம் நடப்பு நிதியாண்டில் 0.45 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம், ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பும் ஒருபுறம் நடந்து வருகிறது. ட்விட்டர், மெட்டா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் செலவை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை சமீபத்தில் பணிநீக்கம் செய்தன. அந்த வகையில் டீம் லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 2025-ம் ஆண்டுக்குள் ஐ.டி. துறையில் 22 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு பொருளாதார மந்தநிலை காரணம் என கூறுகின்றனர்.

அதாவது, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தைகளாக திகழும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் தாக்கம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் வேலை இழப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய (post resignation) வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் 60 லட்சத்துக்கும் மேலான ஐ.டி. ஊழியர்கள் உள்ளனர். கடந்த காலங்களில், ஆண்டுதோறும் 15 சதவீதம் வரை ஐ.டி. ஊழியர் வேலை இழப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது இது ஆண்டுக்கு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், வாழ்வாதார நெருக்கடியில் மென் பொறியாளர்கள் தவிக்கின்றனர். இதுகுறித்து ஐ.டி. மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின் கூறியதாவது:

ஐ.டி. நிறுவனங்களில் தற்காலிக பணிநீக்கம் என்பதைவிட நிரந்தர பணி நீக்கம்தான் நடந்து கொண்டிருக்கிறது. நிரந்தர பணி நீக்கத்துக்கான வரையறையுடன் ஒரு சட்டம் இந்தியாவில் இருக்கிறது. நிறுவனத்தில் ஏற்படும் இழப்பை காரணம் காட்டிதான் நிரந்தர பணி நீக்கத்தை அந்நிறுவனங்கள் செய்ய முடியும் என அச்சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், பல நூறு கோடி லாபகரமாக இயங்கிவரும் நிறுவனங்கள், அடுத்த சில ஆண்டுகளில் ஏற்படக்கூடிய பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டும், தங்கள் லாபத்தை மேலும் அதிகரிக்கவும் சட்டத்துக்கு மாறாக ஐ.டி. ஊழியர்களை மிரட்டி அவர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்தி வருகின்றன.

சென்னையிலும் தற்போது சில முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் இதுபோல அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. ஊழியர்களை வேலையில் இருந்து விடுவிப்பதைவிட, ஊழியர்களே நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்து கொண்டால், சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் எதுவும் வராது என ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனாலும், மிகப்பெரிய அளவில் நடக்கும் இதுபோன்ற வேலை இழப்புகள் எதுவும் அரசின் கவனத்துக்கு செல்வது இல்லை.

பொருளாதார மந்தநிலை இன்னும் இந்தியாவை தாக்கவில்லை என்றாலும், இதுபோன்ற ஆயிரக்கணக்கான ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வேலை இழப்பு பொருளாதார மந்தநிலை அறிகுறியை வெளிப்படுத்துகிறது. ஐ.டி. துறைக்கென பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சட்டத்தை அரசு அமல்படுத்துவதன் மூலமாக மட்டுமே வேலை இழப்பை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். வேலையில் இருந்து விடுவிப்பதைவிட, ஊழியர்களே ராஜினாமா செய்தால், சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் வராது என ஐ.டி. நிறுவனங்கள் கருதுகின்றன.



Read in source website

இலங்கை தனது கடனாளிகளிடமிருந்து நிதி உத்தரவாதம் பெறுவதில் தாமதம் ஏன்? கொழும்பு தனது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள போராடுகிறது. தோல்வியின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

இதுவரை இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2.9 பில்லியன் டாலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி இலங்கை தகுதி பெற்றது.
இந்த பிணை எடுப்பை அணுகுவதற்காக, கடன் வழங்குபவர்களிடமிருந்து இந்த மாதத்திற்குள் கடன் நிலைத்தன்மைக்கான நிதியளிப்பு உத்தரவாதங்களை வழங்கும் என நம்புகிறது.
இது, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவானது ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு ஒரு “முன் நடவடிக்கை” ஆகும்.

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் விடுமுறை நெருங்கி வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவில், அதாவது பிப்ரவரி 4 ஆம் தேதி இந்த அர்ப்பணிப்புகளை முடிக்க தனது அரசாங்கம் செயல்படும் என்று கூறியுள்ளார்.

தாமதத்திற்கான காரணங்கள் என்ன, இந்த காலக்கெடுவை விக்கிரமசிங்க சந்திக்க முடியுமா, அவ்வாறு செய்யாததன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

ஏன் இன்னும் கடனாளிகளின் ஒப்பந்தம் இல்லை

இலங்கையின் உத்தியோகபூர்வ கடனாளிகளிடமிருந்து கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான நிதி உத்தரவாதங்கள் மற்றும் தனியார் கடனாளிகளுடன் கூட்டு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நல்ல நம்பிக்கையுடன் முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது.
முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி உதவியை வழங்குவதற்கு முன், IMF இன் செப்டம்பர் 1 அறிக்கை கூறியது.

இதன் பொருள் என்னவென்றால், இருதரப்பு கடனளிப்பவர்களால் நிதியுதவி உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும். இதன் விளைவாக “ஐ.எம்.எஃப்.க்கு போதுமான அளவு நிதி கிடைக்கும்.
இதன் விளைவாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார்கள்” என்று இலங்கை அரசாங்கம் அதன் விளக்கத்தை அளித்தது.

இதற்கிடையில், நவம்பர் 3 ஆம் தேதி இருதரப்பு நன்கொடையாளர்களுடன் இலங்கை இரண்டாவது சந்திப்பை நடத்தியது. தனியார் கடனாளிகளுக்கு “நல்ல நம்பிக்கை முயற்சி” என்ற உத்தரவாதம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றாலும், இருதரப்பு அல்லது “அதிகாரப்பூர்வ” நன்கொடையாளர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு உறுதிப்பாடு எப்போதும் கடினமான பகுதியாக இருக்கும்.

சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்கள் ஆவாார்கள். மொத்த இருதரப்பு கடனில், அதாவது வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, சீனாவின் பங்கு 52 சதவீதம், ஜப்பானின் பங்கு 19.5 சதவீதம் மற்றும் இந்தியாவின் பங்கு 12 சதவீதம் ஆகும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் எவ்வாறு முன்னேறி தீர்க்கப்படுகின்றன என்பதற்கு சீனாவும் குறைந்த அளவில் இந்தியாவும் என்ன செய்கின்றன என்பது முக்கியமானது.
எந்தவொரு இருதரப்புக் கடனாளியும் எந்தவொரு நாடும் அல்லது குழுவும் முன்னுரிமை சிகிச்சையைப் பெற விரும்பவில்லை.
மேலும், கடனாளிகள் ஒரு பொதுவான தளத்தில் இருந்து கடனாளி நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள்.

ஜப்பான், தென் கொரியாவை உள்ளடக்கிய OECD குழுமத்தின் கடன் வழங்குபவர்கள் பாரிஸ் குழுமம் எனப்படும் பொதுவான தளத்தின் மூலம் பணிபுரிகின்றனர். இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு, சீனாவும் இந்தியாவும் வரவேண்டும் என்று பரிஸ் குழுமம் விரும்புகிறது.

சீனா முக்கிய கவலை இலங்கையின் இருதரப்புக் கடனில் மிகப்பெரிய பங்கை அது கொண்டுள்ளது. மேலும் அதன் கடந்தகால பதிவு, இரகசியமான விதிமுறைகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை விரும்புவதாக தெரிவிக்கிறது. இலங்கையுடன் பாரிஸ் கிளப் பேச்சுவார்த்தையில் இணையப்போவதாக சீனா கூறவில்லை.

எந்தவொரு ஒப்பந்தமும் “கடன்தாரர்களின் சமத்துவத்தையும் வெளிப்படைத்தன்மையையும்” பிரதிபலிக்க வேண்டும் என்று கூறியுள்ள இந்தியா, சீனாவைக் கொண்டிருக்காத ஒரு பொதுவான தளத்தில் சேர்வது பற்றி கவலை கொண்டுள்ளது.
மறுபுறம், ந்த ஆண்டு இந்தியாவிடமிருந்து 4 பில்லியன் டாலர் அவசர உதவியை மறுசீரமைப்பில் சேர்க்க வேண்டும் என்று இலங்கை தரப்பு தெரிவித்தது,

தற்போது மத்திய அரசு கொழும்புடன் தனித்தனியான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், விக்கிரமசிங்க இந்தியாவுடனான பேச்சுக்கள் “வெற்றி பெற்றன” என்றார். அதிகாரிகள் தங்கள் மதிப்பீட்டில் மிகவும் நிதானமாக இருந்தனர், மேலும் இரு தரப்பினரும் “நல்ல முன்னேற்றம்” அடைந்து வருவதாகக் கூறினர்.

இது சீனாவை விட்டுச் செல்கிறது, இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களில் நுழைவதில் வெளிப்படையான தயக்கம் இருதரப்பு ரீதியாகவும் கூட பெய்ஜிங்கை ஒரு அரிய பொது கண்டனத்திற்கு வழிவகுத்தது.

பாராளுமன்றத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சானக்கியன் ராசமாணிக்கம், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை சீர்குலைக்க சீனா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்,
மேலும், சீனா உண்மையிலேயே இலங்கையின் நண்பன் என்றால், [கடன்] மறுசீரமைப்பு மற்றும் IMF திட்டத்திற்கு உதவுமாறு சீனர்களிடம் கேளுங்கள்” என்று அவர் கூறினார்.

இலங்கை சீனாவுக்கு எவ்வளவு கடன்பட்டுள்ளது?

முன்னதாக, சீனாவுக்கான இலங்கையின் கடன், நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 சதவீதமாக கணக்கிடப்பட்டது, இது ஜப்பானுக்கு சமமானதாகும்.
இருப்பினும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் சீனா-ஆப்பிரிக்கா ஆராய்ச்சி முன்முயற்சியின் புதிய ஆராய்ச்சி இது 20 சதவிகிதம் அதிகமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.

நவம்பர் 29 அன்று வெளியிடப்பட்ட அவர்களின் கட்டுரையில், ‘2000களின் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு சீனக் கடனின் பரிணாமம்: யதார்த்தத்திலிருந்து கட்டுக்கதையைப் பிரித்தல்’, உமேஷ் மொரமுதலி மற்றும் திலின பண்டுவாவல ஆகியோர் சீனக் கடன்கள் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் $ 7.4 பில்லியன் என்று காட்டுகின்றனர்.
கிட்டத்தட்ட இவை அனைத்தும் சீன அரசாங்கத்திற்கு அல்ல, ஆனால் அரசுக்கு சொந்தமான வங்கிகளான சீனா எக்ஸிம் வங்கி மற்றும் சீனா டெவலப்மென்ட் வங்கி (முறையே $ 4.3 பில்லியன் மற்றும் $ 3 பில்லியன்). மேலும் இது இலங்கையின் கடனில் 19.6 வீதமாகும். இந்த கடன் குறித்து உலக வங்கியின் சர்வதேச கடன் புள்ளியியல் துறைக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் சீனா ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும், 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது 19.6 சதவிகிதம் நிலுவையில் உள்ள பொதுக் கடனில் (மொத்த பொதுவில் 37.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உள்ளன.
லங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான சீனாவின் அணுகுமுறை மற்றும் வழங்கப்படும் கடன் நிவாரணத்தின் அளவு ஆகியவை மற்ற நாடுகளிலும் சீனாவின் பங்கு மற்றும் நடத்தைக்கு ஒரு முன்மாதிரியாக அமையும்.

கடனாளர்களுடன் இலங்கை உடன்படிக்கைக்கு வரவில்லை என்றால் என்ன நடக்கும்?

கடனை மறுசீரமைப்பதில் ஒரு முட்டுக்கட்டை என்பது தெரியவில்லை. சீனாவில் இருந்து அதிக கடன் வாங்கும் நாடான ஜாம்பியா, சீனாவுடனான முட்டுக்கட்டையான விவாதங்கள் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அதன் கடன் மறுசீரமைப்புடன் போராடின.
கடந்த மாதம், சாம்பியா சீனாவுடன் ஒரு முன்னேற்றத்திற்காக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறியது, ஆனால் இந்த விஷயம் இன்னும் தீர்க்கப்படவில்லை.

பாரிஸ் கிளப் அதன் கடன் வழங்குநர் குழுவுடன் தயாராக இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அதன் மிகப்பெரிய கடனாளியுடன் இலங்கையின் முட்டுக்கட்டை தொடர்ந்தால், அது மற்ற கடன் வழங்குநர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நேரத்தில், பற்றாக்குறையின் சிறந்த மேலாண்மை மக்களின் அன்றாட சிரமங்களை ஓரளவு குறைத்துள்ளது. அந்நியச் செலாவணி நெருக்கடியானது கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாகவும், பணம் அனுப்புதலின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ஆகியவற்றால் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 6 சதவீதமாக சுருங்கும் செலவில் வந்துள்ளது, இது, அடுத்த ஆண்டு 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கலாம். உண்மையான பொருளாதாரத்தின் மீதான இந்த தாக்கம் சமூக மற்றும் அரசியல் செலவுகளைக் கொண்டிருக்கலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, முட்டுக்கட்டையைக் குறைப்பதற்கான ஒரு வழி, இலங்கை “மிகவும் விருப்பமான கடனாளிகள்” விதியை நாடுவதாகும்,

இதன் விளைவாக, அனைத்து கடனாளர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னுரிமை சிகிச்சையை வழங்குவது சாத்தியமற்றது என்பதால், வெளிப்புறக் கடனாளிகளை முன்னுரிமை விதிமுறைகளைக் கோருவதைத் தடுக்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது.



Read in source website

கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் எனப் பன்முகம் கொண்டவர் க.நா.சுப்ரமண்யம். எழுத்தாளர் புதுமைப்பித்தன் மெச்சிய ஆளுமை க.நா.சு. தலைசிறந்த விமர்சகராக உருவாகி, கறாராக விமர்சிப்பதில் இரக்கமற்றவராக இருந்ததால், இளைய தலைமுறை எழுத்தாளர்களின் கதாநாயகனாகவும் க.நா.சு. விளங்கினார்.

புதுமைப்பித்தனும் அவரது சமகாலத்தியரான மௌனியும் கு.ப.ரா.வும் தமிழ் இலக்கியத்தில் புனைவிலும் படைப்பிலும் புதிய வளர்ச்சிக்குரிய பாதையைத் திறந்துவிடுவதில் முக்கியப் பங்காற்றினர் என்றால், க.நா.சு விமர்சனத்தில் புதிய எல்லைகளைத் தொட்டு தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கின் புதிய பாதைகளுக்கு வித்திட்டவர்.



Read in source website

சிராப்பள்ளி முசிறிச் சாலையில் 10 கி.மீ. தொலைவிலுள்ள திருவாசி மாற்றுரை வரதீசுவரர் கோயில் சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பெற்ற பெருமையுடையது. 26 சோழர் கல்வெட்டுகளுடன் வரலாற்று விடிவிளக்காய் இக்கோயில் திகழ்கிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் அந்நாளைய மனிதர்கள் பலரைச் சந்திக்க நேர்ந்தாலும் கார்த்திகைச் செல்வி கற்பகவல்லிதான் உள்ளமெங்கும் அள்ளித் தெளித்த கவிதையென நிறைந்து நிற்கிறார்.

யார் இந்தக் கற்பகவல்லி?: வரலாற்றுக்குப் பல முதல்களை வழங்கிய சோழப் பேரரசர் முதல் இராஜராஜரின் அரண்மனைப் பணியிலிருந்த பெரியவேளத்துப் பெண்தான் நக்கன் கற்பகவல்லி. அதென்ன வேளம் என்கிறீர்களா? பணியாளர் தொகுதியைக் குறிக்கப் பயன்பாட்டிலிருந்த அக்காலச் சொல்தான் வேளம். மன்னர், அரசியர் பெயரேற்றும் பெரிய, சிறிய என அளவு கருதியும் இயங்கும் பணிசார்ந்தும் பெயர் பெற்றிருந்த வேளங்கள் அந்நாளில் இதுபோல் பல இருந்தன.



Read in source website

ஈழத் தமிழரின் அடையாளமாகவும் பண்பாட்டுச் சக்தியாகவும் நெடிய வரலாற்றில் இடம்பிடித்தவர் ஆறுமுக நாவலர். ‘சைவமும் தமிழும்’ என்ற அவரது மாபெரும் கோஷத்தின் பின்னால் உருத்திரண்டிருந்த நாவலரது இயக்கம், யாழ்ப்பாணத்தில் நிலவிய ஆங்கிலேயே ஆட்சிக்கும் மேலைத்தேய மயப்படுத்தலுக்கு எதிராகவுமே இருந்தது. அதாவது, காலனியவாதிகளின் மதமாற்றக் கோட்பாட்டையும் பாதிரிமார்களை முழுமுதலாய்க் கொண்ட கல்விமுறையையும் நாவலர் கடுமையாக எதிர்த்து நின்றார். அதன் பொருட்டு, நாவலரின் இயக்கம் ஒரு எதிர்ப்பியக்கமாகத் தன்னை வெளிப்படுத்தியது.

நாவலரது எதிர்ப்பியக்கம்: காலனிய வன்கவர் சக்திகளிடம் ஈழத்தின் பண்பாட்டைச் சிதையவிடாது அரணாக நின்ற நாவலரது போராட்டத்தை இக்கணம் நன்றியுடன் நினைத்து அவர் தாள் பணிகிறேன். “துப்பாக்கிகளாலும் பீரங்கிகளாலும் கைப்பற்ற முடியாத ஒரு தேசத்தை, கரும்பலகைகளாலும் வெண்கட்டிகளாலும் அபகரித்திருக்கிறார்கள்” என்ற இந்த வாக்கியத்தை ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகி வா தியாங்கோ தன்னுடைய ‘அடையாள மீட்பு’ எனும் நூலில் எழுதியிருக்கிறார். ஆப்பிரிக்க நிலத்தின் பண்பாட்டை மட்டுமல்லாது, அவர்களது தாய்மொழியையும் அழித்த காலனியவாதிகளிடமிருந்து ஈழத்தின் பண்பாட்டையும் தமிழையும் சைவத்தையும் காப்பாற்றிய சுதேசப் பண்பாட்டுத் தலைமையே நாவலர் ஆவார்.



Read in source website