DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
TNPSC Current Affairs - 13-02-2022

சங்க இலக்கியச் சொற்களுக்குத் தனியாக வோ்ச்சொல் அகராதி உருவாக்கப்பட வேண்டும் என கல்வெட்டியல், தொல்லியல் துறை சாா்ந்த வல்லுநா்கள் வலியுறுத்தினா்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சாா்பில் துறை வாரியாக வல்லுநா் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தந்த துறை சாா்ந்த கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டு, சொற்குவையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அருங்காட்சியகம், கல்வெட்டியல், தொல்லியல் துறை சாா்ந்த அறிஞா்கள் பங்கேற்ற வல்லுநா் குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வல்லுநா்கள் கூறியது: தற்போது ஊராட்சி நிா்வாகங்களில் புழக்கத்தில் உள்ள ‘வாா்டு’ என்ற சொல்லுக்கு அக்காலக் கல்வெட்டுகளில் ‘குடும்பு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரமேரூா் கல்வெட்டில் காணப்படும் குடும்பு என்ற சொல்லுக்கு நிலம் என்றும், வாா்டு என்றும் பொருள் உள்ளது. அதேபோன்று பெரும் ஈடு என்ற தொல்தமிழ்ச் சொல்லே ‘பிரமிடு’ என எகிப்தியா்களால் எடுத்தாளப்பட்டது.

கலைச் சொல்லாக்கத்தை விரும்பி ஏற்றுச் செய்ய வேண்டும். காலத்துக்கு ஏற்ற வகையில் சொற்களுக்குப் புதிய பொருத்தமான விளக்கங்கள் வரப்பெற்றால் அவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியச் சொற்களுக்குத் தனியாக வோ்ச்சொல் அகராதி உருவாக்கப்பட வேண்டும் என்றனா்.

முன்னதாக, நடைபெற்ற கூட்டத்துக்கு அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். இதில் சென்னை அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியா் ந.சுந்தரராஜன், தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநா் க.குழந்தைவேலன், உவேசா நூல் நிலைய காப்பாட்சியா் கோ.உத்திராடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயப் பயிற்சிப் பயிற்றுநா் ஏ.ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றுத் தங்கள் துறை சாா்ந்த 854 தமிழ்க் கலைச் சொற்களை வழங்கினா். கூட்டத்தின் நிகழ்வுகளை அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் தொகுப்பாளா் ஜெ.சாந்தி ஒருங்கிணைத்தாா்.Read in source website

நாட்டின் தேயிலை ஏற்றுமதி 2021-ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 17.54 கோடி கிலோவாக குறைந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வாரியம் மேலும் கூறியுள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பா் வரையிலான முதல் 11 மாதங்களில் 17.54 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதியான 18.98 கோடி டன் தேயிலையுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவு குறைவாகும்.

அதிகபட்சமான தேயிலை சிஐஎஸ் எனப்படும் காமன்வெல்த் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இருப்பினும், 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-இல் இந்நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி 4.64 கோடி கிலோவிலிருந்து 4.02 கோடி கிலோவாக குறைந்துள்ளது.

இந்தியாவின் தேயிலை ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியும் 3.16 கோடி கிலோவிலிருந்து 2.30 கோடி கிலோவாக குறைந்துள்ளது என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

கண்டெய்னா்களுக்கு பற்றாக்குறை, சரக்கு கட்டண உயா்வு, ஈரானுடான பணப்பட்டுவாடா பிரச்னை ஆகியவற்றின் காரணமாக இந்திய தேயிலை ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளதாக இத்துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.Read in source website

சமூக நலத் துறை சாா்பில் வழங்கப்படும் மூன்றாம் பாலினா் விருதுக்கு வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறந்த மூன்றாம் பாலினா் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. சான்றிதழுடன், ரூ.1 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருதாகும்.

விருதுக்கு ஆன்-லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.Read in source website

தமிழகத்தில் பள்ளிப் பரிமாற்றத் திட்டத்தை 16,432 அரசுப் பள்ளிகளில் பிப்.21-ஆம் தேதி முதல் பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் இணைய வழியில் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக ஒரு பள்ளிக்கு ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.1.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்களுக்கு வெளியுலக அறிவை மேம்படுத்தவும், பல்வேறு சூழல்களில் உள்ள பள்ளிகளில் நடைமுறையில் உள்ள கற்றல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டு முதல் பள்ளிப் பரிமாற்ற திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பள்ளி மாணவா்களும், மற்ற பள்ளி மாணவா்களுடன் அறிவுசாா் விவாதங்களில் பங்கேற்பது, மேலாண்மை பண்புகளை வளா்த்துக் கொள்ளுதல், கலாசார பண்புகளை பாதுகாப்பது திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவா்கள் பிற பள்ளிகளில் உள்ள வசதிகள், கற்றல்- கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப் பயணமாக அந்தப் பள்ளியைச் சுற்றியுள்ள வளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், இயற்கை சூழல்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை பாா்த்து புதிய அனுபவத்தை பெறுகின்றனா். கரோனா தொற்று காரணமாக இந்தத் திட்டத்தை நிகழாண்டு இணைய வழியில் செயல்படுத்த முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பள்ளியும் எந்தப் பள்ளியோடு பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை மாவட்ட திட்ட அலுவலகம் தீா்மானிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும், மாநில திட்ட இயக்ககத்துக்கும் பிப்.17-ஆம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும்.

பள்ளிப் பரிமாற்றத் திட்டத்துக்காக 16,432 அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 5 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் இரு ஆசிரியா்களைப் பொறுப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும். பள்ளிகள் தங்களது சிறந்த செயல்பாடுகளை புகைப்படங்களாகவோ, காணொலிகளாகவோ தயாா் செய்து வைக்க வேண்டும்.

பள்ளி பரிமாற்றத் திட்டத்தை பிப்.21-ஆம் தேதி பிப்.25-ஆம் தேதி வரையிலான நாள்களில் ஏதேனும் ஒரு நாள் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக ஒரு பள்ளிக்கு ரூ. 1,000 வீதம் 16,432 பள்ளிகளுக்கு ரூ.1.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.Read in source website

வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்கு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும், மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கமும் இணைந்து திறந்தநிலைப் பல்கலை.யில் நிறுவியுள்ள திருவள்ளுவா் இருக்கையின் சாா்பில் திருக்கு பன்னாட்டு ஆய்வரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்துக்கு திறந்த நிலைப் பல்கலை.யின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவா் இருக்கையின் மூலமாக தமிழரல்லாத வெளிநாட்டு மாணவா்களுக்கும் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணிக்காக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருவள்ளுவா் இருக்கைக்கு வழங்குவதாக தெரிவித்தாா்.

இதில் ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் இணையவழியில் பங்கேற்றுப் பேசுகையில், உலகத் தமிழா்கள் தலைநிமிா்ந்து நிற்கக் கூடிய ஒரு பெரும் சொத்தாக திருக்கு இருக்கிறது. நாம் அதன் உரிமையாளா்களாக இருப்பது நமக்குப் பெருமை. முதல் வகுப்பில் படிக்கும் மாணவா்களுக்கும், முனைவா் பட்டம் படிப்பவா்களுக்கும் கற்றுத் தரக்கூடிய நூல் திருக்கு என்றாா் அவா்.

முன்னதாக மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனச் செயலா் சேயோன் அறிமுகவுரையாற்றினாா். பல்கலை.யின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இயக்குநா் சு.பாலசுப்பிரமணியன் வரவேற்றுப் பேசினாா்.Read in source website

பிரதமா் மோடியை கென்யா நாட்டு முன்னாள் பிரதமா் ரைலா அமோலோ ஒடிங்கா ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தாா்.

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கென்யா முன்னாள் பிரதமா் ரைலா அமோலோ ஒடிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளாா். இந்நிலையில், அவா் தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்தாா். இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனா். அப்போது இந்தியா-கென்யா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாக பிரதமா் மோடி கூறினாா் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘எனது நண்பா் ரைலா அமோலோ ஒடிங்காவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியாவும் கென்யாவும் இருதரப்பு உறவுகளை வலுவாகப் பேணி வருகிறது. அந்த உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படுவதை இருவரும் வரவேற்கிறோம்’’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கென்யா பிரதமராக ரைலா அமோலோ ஒடிங்கா பதவி வகித்தாா்.Read in source website

 

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 

இதில் வியாழன் கோளின் வடக்குப் பகுதியை உணவுப் பொருளான பீட்சாவுடன் ஒப்பிட்டு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன் கோள்  மற்ற கோள்களைப் போன்று அல்லாமல், வளையங்களைக் கொண்டுள்ளது. இதனால் அதில் நாசா தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழன் கோளின் வடக்குப் பகுதியை வெப்பத்தைக் கொண்டு அளவிடும் முறையில் எடுக்கப்பட்ட விடியோவை நாசா பகிர்ந்துள்ளது. அதில் வியாழன் கோளின் மேல்பகுதி பீட்சாவைப் போன்று இருப்பதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிகம் மஞ்சள் நிறத்திலுள்ள பகுதிகள், வியாழன் கோளின் ஆழமான பகுதிகள் என்றும், சிவப்பு நிறத்திலுள்ள பகுதிகள் வியாழன் கோளின் மேற்புறப்பகுதி எனவும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.Read in source website

‘காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இவா்களின் எண்ணிக்கையை உயா்த்துவதோடு, மாவட்டத்துக்கு ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம் அமைக்க மாநிலங்களை அறிவுறுத்தவேண்டும்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை அளித்துள்ளது.

காங்கிரஸ் தலைவா் ஆனந்த் சா்மா தலைமையிலான உள்துறை விவகாரத்துக்கான இந்த நாடாளுமன்ற நிலைக் குழு தனது அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அண்மையில் சமா்ப்பித்தது. அதில் பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது.

காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை 10.3 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாக உள்ளது. அந்த எண்ணிக்கையை 33 சதவீதமாக உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அனைத்து மகளிா் காவல்நிலையம் அமைப்பதற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்.

பெண் காவலா் நியமனத்தின்போது, ஆண் காவலா்களின் காலிப் பணியிடங்களை பெண் காவலா்களுக்கான இடங்களாக மாற்றுவதற்குப் பதிலாக, பெண்களுக்கென காவல்துறையில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். இது நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை உயா்த்த உதவும்.

மேலும், ராணுவத்தில் பெண்களுக்கு போரில் சண்டையிடும் பணி ஒதுக்குவதுபோல, காவல்துறையிலும் பெண் காவலா்களுக்கு முக்கியத்துவம்வாய்ந்த சவால் நிறைந்த பணிகளை ஒதுக்கவேண்டும் என மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தனது அறிக்கையில் நாடாளுமன்ற குழு அளித்துள்ளது.

மேலும், காவல்நிலையங்களில் பெண்களுக்கான உதவி மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் 3 பெண் உதவி ஆய்வாளா்கள், 10 பெண் காவலா்கள் இடம்பெற வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளதை குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற குழு, ‘இந்த பெண்கள் உதவி மையத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்ய காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை பணிக்க வேண்டும்’ என்றும் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.Read in source website

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவா் ராகுல் பஜாஜ் புணேயில் வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 83.

அரசு மரியாதையுடன் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்படும் என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளாா்.

மறைந்த ராகுல் பஜாஜுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தனது வாழ்நாளை நாட்டின் தொழில் துறையை கட்டமைப்பதில் செலவழித்தாா். அவரது மறைவு இந்திய தொழில் துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘வா்த்தகம் மற்றும் தொழில் துறை உலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக ராகுல் பஜாஜ் நினைவுகூரப்படுவாா். வா்த்தகத்தை தவிர சமூக சேவையிலும் ஆா்வமுள்ளவா். சிறந்த உரையாடலாளராக இருந்தாா். அவரது மறைவால் வேதனையடைந்துள்ளேன் . அவரது குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

பஜாஜ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உடல் நலக் குறைவையடுத்து, புணேயில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த ராகுல் பஜாஜ், சனிக்கிழமை பகல் 2.30 மணிக்கு உயிரிழந்தாா். அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1965-இல் நிறுவனத்தின் நிா்வாகத்தை அவரது தந்தையிடமிருந்து ஏற்றுக் கொண்ட ராகுல் பஜாஜ், நீண்ட கால பொறுப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் கௌரவத் தலைவா் பதவியிலிருந்து விலகினாா். அவருக்கு ராஜீவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் இரு மகன்களும், சுனைநா கேஜரிவால் என்ற மகளும் உள்ளனா்.Read in source website

கல்வித் துறைக்கு அம்பேத்கா் அளித்த அா்ப்பணிப்பு, முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பா் 7-ம் தேதி நாடு முழுவதும் மாணவா் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் உள்ள அம்படவே கிராமத்தில் உள்ள அம்பேத்கா் நினைவிடத்தை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

அம்பேத்கரின் அஸ்தி கலசத்திற்கு பூஜை செய்தும், ரமாபாய் அம்பேத்கா் மற்றும் ராம்ஜி அம்பேத்கா் ஆகியோருக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா் நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா், ‘1900-ஆம் ஆண்டு பாபாசாஹேப் அம்பேத்கா் பள்ளியில் சோ்ந்த நவம்பா் 7-ம் தேதி, மாணவா் தினமாக மகாராஷ்டிர மாநில பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிர அரசின் இந்த முயற்சி பாராட்டக் கூடியது.

அவருடன் தொடா்புடைய ஒவ்வொன்றும் கருணை மற்றும் சமத்துவச் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உணர நம்மை ஊக்குவிக்கிறது.

அம்பேத்கரின் அா்ப்பணிப்பு மற்றும் கல்விக்கு அவா் அளித்த முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் நவம்பா் 7-ம் தேதியை நாடு முழுவதும் தேசிய மாணவா் தினமாக கொண்டாடுவது குறித்து பரிசீலிக்கலாம்.

அம்படவே கிராமத்திற்கு, உத்வேக பூமி எனப் பொருள்படும் ‘ஸ்பூா்த்தி பூமி’ என்று பெயா் சூட்டப்பட்டுள்ளது. அம்பேத்கா் தனது வாழ்நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் பல்வேறு துறைகளில் பங்களித்ததால், அவரது மூதாதையா் கிராமத்தை ‘ஸ்பூா்த்தி பூமி’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

‘ஸ்பூா்த்தி பூமி’ என்ற லட்சியத்தின்படி, பாபாசாஹேப் எப்போதும் போற்றிக் கொண்டிருந்த நல்லிணக்கம், இரக்கம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும் என்று அவா் கூறினாா்.Read in source website


கோவா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

இதேபோன்று உத்தரப் பிரதேசத்தில் 55 தொகுதியில் 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக கடந்த 10ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 

மணிப்பூர் மாநிலத்தில் 28ஆம் தேதி முதல்கட்ட தேர்தலும், மார்ச் 5ஆம் தேதி 2ஆம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதேபோன்று பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 பேரவைத் தொகுதிகளில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கோவாவில் 40 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 301 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு பாஜக, காங்கிரஸ், கோவா முன்னேற்றக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.Read in source website

மேற்கு வங்கத்தில் மாநில அரசின் பரிந்துரையின்படி, அந்த மாநில சட்டப்பேரவையை ஆளுநா் ஜகதீப் தன்கா் தேதி குறிப்பிடாமல் சனிக்கிழமை ஒத்திவைத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மேற்கு வங்க ஆளுநராகிய நான், அரசமைப்புச் சட்டத்தின் 172-2ஏ பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மாநில சட்டப் பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன். இது, பிப்ரவரி 12-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மாநில அமைச்சரவையில் பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்பேரவையை ஆளுநா் தன்கா் ஒத்திவைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் குனால் கோஷ் கூறுகையில், ‘ஆளுநா் தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை. மாநில அரசின் பரிந்துரையின்படி சட்டப்பேரவையை ஒத்திவைத்துள்ளாா்’ என்றாா்.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி பதவியேற்றாா். அப்போதிருந்து முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.Read in source website

உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை தொலைபேசியில் அழைத்து எச்சரிக்கை விடுத்தாா்.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரஷிய அதிபா் புதினை பைடன் சனிக்கிழமை தொலைபேசியில் அழைத்துப் பேசினாா். ஒரு மணி நேரம் இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால், அது பரந்த அளவில் துயரத்துக்கு வழிவகுப்பதுடன் ரஷியாவையும் சிறுமைப்படுத்தும் என்று பைடன் தெரிவித்தாா்.

அதேவேளையில் உக்ரைன் மீது கட்டாயம் படையெடுத்தால், ரஷியா மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டிவரும். ராஜீய வழிமுறைகளைக் கைகொள்ள அமெரிக்கா உறுதியாக உள்ளது. அதே சமயத்தில் மற்ற வழிமுறைகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ரஷியா மீது அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதிபா் பைடன் புதினுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.Read in source website

புதுச்சேரி: 250 ஆண்டு பழமையான புதுச்சேரி ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு விரைவில் மாறும் ஆளுநர் மாளிகை மாற்றப்பட உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியில் பிரெஞ்சு கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்ட 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானத்தில் கடும் சேதத்தினால் பொதுப்பணித்துறை பரிந்துரைப்படி பாதுகாப்புக்காக வேறு இடத்துக்கு ஆளுநர் மாளிகை விரைவில் மாறவுள்ளது. புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கடற்கரையொட்டி ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. கடந்த 1733ம் ஆண்டு 1764ம் ஆண்டு வரை ஹோட்டலொன்று இங்கு இருந்தது. ஆங்கில படையெடுப்பில் இவ்விடம் சேதமாக்கப்பட்டது. பின்னர் 1761ல் மீண்டும் கட்டுமானம் செய்யப்பட்டு, 1954ம் ஆண்டு வரை பிரெஞ்சு தலைமை கமிஷனர் அலுவலகமானது. புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு 1963ம் ஆண்டு முதல் துணைநிலை ஆளுநர் மாளிகையாக ராஜ்நிவாஸ் உள்ளது. ராஜ்நிவாஸில் ஆளுநர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.

சுமார் 250 ஆண்டு பழமையான ராஜ்நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்துள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை தரப்பில் விசாரித்தபோது, "ராஜ்நிவாஸ் முதல் தளத்தில் கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது. காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. மழை நீரில் தண்ணீர் ஒழுகுவதும் நடக்கிறது. கட்டட உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளுநர் மாளிகையை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டனர்.

இது பற்றி ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ராஜ்நிவாஸிலிருந்து மாறி வேறு இடத்தில் தங்க ஆளுநர் முடிவு எடுத்துள்ளார். குறிப்பாக கடற்கரைச்சாலையில் கட்டப்பட்டுள்ள நீதிபதிகள் தங்கும் குடியிருப்பில் ஆளுநர் தங்குவார். ஆளுநரின் அலுவலகம், ஆளுநர் செயலகம் ஆகியவை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேரி நகராட்சி கட்டடத்தில் செயல்படும். இரு கட்டடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆளுநருக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் ஆளுநர் புதிய இடத்துக்கு மாறுவார்" என்று குறிப்பிட்டனர்.

பழமையான ராஜ்நிவாஸை அரசு எவ்வகையில் புதுப்பிக்கப்போகிறது என்று விசாரித்தபோது, "ராஜ்நிவாஸ் 250 ஆண்டுகளை கடந்து கட்டுமானம் சேதம் அடைந்துள்ளதால் பழமை மாறாமல் புதுப்பிப்பதா அல்லது இடித்து கட்டுவதா என்பது பற்றி ஐஐடி கட்டடக்கலை நிபுணர் குழு மூலம் அறிக்கை பெறப்பட்டு முடிவு எடுக்கப்படும்" என்று குறிப்பிடுகின்றனர்.Read in source website

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் 2022-ம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் 18 குழுக்கள் பங்கேற்றுள்ளன.

நடப்பாண்டில் தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் மூலம் மூன்று கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கழிமுக துவாரப் பகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப் பகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக காப்புக்காடுகளில் உள்ள ஈர நிலப்பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான ஓசூர் ராம்நாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 18 நீர் நிலைகளில் நேற்று காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில் ஓசூர் கொத்தகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன வளாகத்தில் உள்ள ஏரியில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி பங்கேற்றார். இப் பணியில் வனப்பணியாளர்கள், கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி, ஓசூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்ற 18 குழுக்கள் அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணியின் போது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணக்கெடுப்பு குழுக்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது.

முன்னதாக இந்த கணக்கெடுப்பு பணிக்காக மாவட்ட வன அலுவலரும், வனஉயிரின காப்பாளருமான க.கார்த்திகேயனி தலைமையில் பிப்.12-ம் தேதியன்று முன் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வனப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பயிற்சி மற்றும் கணக்கெடுப்பின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஓசூர் வனக்கோட்ட வனச்சரகர்கள், ஓசூர் வனக்கோட்ட வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், மாவட்ட கவுரவ வனஉயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.Read in source website

கோவை வஉசி உயிரியல் பூங்காவில் பராமரிப்புக் குறைபாடு உள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்ட மக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாக வஉசி உயிரியல் பூங்கா உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தப் பூங்காவில் தற்போதைய நிலையில் பறவையினங்கள், விலங்கினங்கள், ஊர்வனஇனங்கள் என 530-க்கும் மேற்பட்டஉயிரினங்கள் உள்ளன. தினமும்இந்தப் பூங்காவுக்கு ஏராளமான பொது மக்கள் வந்து உயிரினங் களை பார்வையிட்டுச் செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த பூங்காவுக்கு வரும் பொதுமக்களின் எண் ணிக்கை அதிகளவில் இருக்கும்.

மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடமான வஉசி உயிரியல்பூங்கா தற்போதைய கால மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வில்லை. உயிரினங்களை அடைப்பதற்கான இடவசதியை அதிகப்படுத்தி, கூடுதல் எண்ணிக்கை யில் உயிரினங்களை பொதுமக்களுக் காக காட்சிப்படுத்தவில்லை எனவும், பூங்காவை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் வன உயிரின ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்றுவாரங்களுக்கு முன்னர், கரோனாபரவல் அச்சம் காரணமாக, கோவை வஉசி உயிரியல் பூங்கா மூடப் பட்டது. இதனால் உயிரினங்களை பார்வையிட பொதுமக்கள்அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே, இயற்கை சூழலின்மை, கட்டமைப்பு வசதியில் குறைபாடு போன்ற காரணங்களால், கோவை வஉசி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து உயிரியல் பூங்காவில் முறையாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் பூங்கா வளாகத்தில் புள்ளி மான் குட்டி உயிரிழந்தது கிடந்ததும், அதன் உடலை காகங்கள் கொத்தி தின்ற சம்பவமும் அரங்கேறியது, வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக வன உயிரினஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பூங்காவை பொதுமக்கள் பார்வை யிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே தவிர, ஊழியர்கள் பணியாற்ற வழக்கம் போல் அனுமதியுண்டு. இங்குள்ள ஊழியர்கள் தினமும் காலை, மாலை உயிரினங்களை பார்வையிட்டு கண்காணிப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது வெறும் வாய் வார்த்தையாகத் தான் உள்ளது. ஏனெனில், பூங்காவில் உள்ள புள்ளி மான்களில் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி குறைப்பிரசவத்தால் உயிரிழந்துள்ளது.

இதை பூங்கா ஊழியர்கள் சரிவர கவனிக்கவில்லை. முன்பே கவனித்திருந்தால் அது குறைப்பிரசவமாக பிறந்த போதே காப்பாற்ற முயற்சித்திருக்கலாம். உயிரிழந்த குட்டி, தாய் மான் உள்ள வளாகத்திலேயே கிடந்து துர்நாற்றம் வீசி வந்துள்ளது. மேலும், காகங்கள் உள்ளிட்ட வையும் உயிரிழந்த குட்டி மானின் சடலத்தை கொத்தித் தின்று வருகின்றன. நேற்று வரை இந்நிலையே அங்கு உள்ளது. பூங்காவில் உள்ள உயிரினங்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் முறையாக பராமரிக்க வேண்டும். அங்கீகாரம் ரத்தால், பூங்காவில் பராமரிப்புக் குறைபாடு உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.

இதுதொடர்பாக, உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறும்போது, ‘‘பூங்காவை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட வில்லை. அதேசமயம், உள்ளே உள்ள உயிரினங்கள் வழக்கம் போல் உணவு அளித்து பராமரிக்கப்படுகின்றன. புள்ளி மான்கள் குட்டிஈன்றால், அதை முறையே எடுத்து குறிப்பிட்ட நாட்கள் பராமரிக்கப் படுகின்றன. உயிரிழந்தால் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் எந்த மாற்றமும் இல்லை. இங்குள்ள உயிரினங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. அதேபோல், இந்த உயிரியல் பூங்காவை கையகப்படுத்த வனத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் மூலம் வலியு றுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் வனத்துறையினர் இங்கு வந்து, பூங்காவில் உள்ள உயிரி னங்கள் குறித்து கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்,’’ என்றனர்.Read in source website

தமிழ்நாட்டின் சர்க்கரை உற்பத்தி யில் பெரும் பங்களிப்பை விழுப் புரம் மாவட்டம் வழங்குகிறது. இம்மாவட்டத்தில் உணவு பயிர் களை தாக்கி மிகப் பெரிய சேதத்தை விளைவிக்க கூடிய அமெரிக்கன் படைப் புழுக்கள் கரும்பு பயிர்களை முதன் முறை யாக தாக்கியுள்ளது.

வட அமெரிக்காவை பூர்விக மாகக் கொண்ட இந்தப் புழுக் கள் பச்சை மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய அளவில் காணப் படுகின்றன. தமிழகத்தில் தானிய வகைகளான சோளம், உளுந்து, பாசிப்பயிறு, அவரை உள்ளிட்ட பயிர்களை மட்டுமே இதுவரை தாக்கி வந்த இந்த அமெரிக்கன் படைப்புழுக்கள், தற்போது கரும்பு பயிர்களை தாக்கியுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் கடும் அதிர்ச் சியடைந்துள்ளனர்.

காணை, காணைக்குப்பம், ஆயந்தூர், ஆற்காடு, பெரும்பாக் கம், கஞ்சனூர், முண்டியம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்களின் பாதிப்பை காண முடிகிறது. பயிரிடப்பட்ட 30 முதல் 40 நாட்களிலேயே கரும்பு பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் கரும்பு சோகையை அரித்து, நாசம் செய்து விடுகிறது. இதனால் கரும்பு பயிர்கள் வளர்ச்சி அடையாமல் நாசமாகி விடுகிறது. ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக கரும்பு பயிரிட்டு வரும் விவசாயிகளே இதுவரை இந்த படைப்புழுக்களின் தாக்குதலை கண்டதில்லை என்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தின் விலை மிக அதிகம் என்பதால் சாதாரண ஏழை விவசாயிகளால் அதனை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. எனவே, தமிழக அரசே மானிய விலையில் புச்சிக்கொல்லி மருந்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

மேலும் இந்த வகையான அமெரிக்கன் படைப்புழுக்கள் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர்களை தாக்கி பெரும் சேதத்தை விளைவிப்பதற்கு முன்பாக இதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் என்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காணை ஊராட்சி ஒன்றிய வேளாண் அலுவலர் வரதராஜனிடம் கேட்ட போது, “இப்போதுதான் இந்த வகை புழுக்களின் தாக்கம் தொடங்கியுள்ளது. திண்டிவனம் வேளாண்அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தைதொடர்பு கொண்டு விவரம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் திங்கட்கிழமை (நாளை) ஆய்வுக்கு வருவ தாக கூறியுள்ளனர். இப்புழுக்களை கட்டுப்படுத்த தேவையான மருந்துகள் இருப்பு உள்ளது. விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டையுடன் வந்து மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.

Read in source website

திருப்பத்துார் அருகே 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி, ஆசிரியர் அருணாசலம் அடங்கிய ஆய்வுக்குழவினர் பல்வேறு இடங்களில் வரலாற்று தடயங்கள் குறித்தகள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், பழங்கற்கால கருவிகள், கற்கோடாரிகள், நடுகற்கள் உள்ளிட்ட பலவற்றைக் கண்டறிந்து அதை ஆவணப்படுத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலையில் சமீபத்தில் நடத்திய கள ஆய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளை ஆய்வுக்குழுவினர் கண்டறிந் துள்ளனர்.

இது குறித்து மோகன்காந்தி கூறியதாவது, ‘‘திருப்பத்துார் மாவட்டம், ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதுார் நாடு ஊராட்சியில் வழுதலம்பட்டு என்ற சிற்றுார் அமைந்துள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வேப்பமரத்தடியில் கருநிறத்தில் வழவழப்பான 10-க்கும் மேற்பட்ட பழங்கால கற்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்தோம்.

அதில், 5 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய ஆதி மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்திய கற்காலக் கருவிகள் இருப்பது தெரியவந்தது. மேலும், ஜவ்வாது மலையில் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பிருந்தே மனித குடியேற்றம் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது.

இந்த கற்கோடாரிகளை இப்பகுதியைச் சேர்ந் மலைவாழ் மக்கள் ‘பிள்ளையாரப்பன்’ என்ற பெயரை சூட்டி அதை தெய்வமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த பிள்ளையாரப் பனுக்கு மிகப்பெரிய சக்தி இருப்பதாக இங்கு வசிக்கும் மழைவாழ் மக்கள் நம்புகின்றனர்.

தங்களின் காட்டு வழிப்பயணத் தின் போது இங்குள்ள பிள்ளை யாரப்பன் வழித்துணையாக இருந்து வருவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர். இது தவிர விவசாய நிலங்களில் ஏரோட்டும் போதும், நீர் நிலைகளுக்கு அருகாமையிலும் கிடைக்கும் கற்கோடாரிகளை கொண்டு வந்து ஓரிடத்தில் குவித்து வைக்கின்றனர்.

இந்த கற்கோடாரிகள் இரும்பால் செய்யப்படுகின்ற கோடாரியை போல அடிப்பகுதி அகன்றும், கூர்மையாகவும் காணப்படுகிறது. இதன் நுனிப்பகுதி கைப்பிடி போலக் காட்சி தரும். எனவே இதற்கு கற்கோடாரி என அக்காலங்களில் பெயரிடப்பட்டன. வழுதலம்பட்டு ஊர் நடுவில் சாலையோரத்தில் உள்ள 10-க்கும்மேற்பட்ட கற்கோடாரிகள் வழிபாட்டில் உள்ளன. இவை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கருவிகளாக இருக்கக்கூடும்.

வழுதலம்பட்டை அடுத்துள்ள சாமி பாறையின் உச்சியில் மூன்று கற்கோடாரிகள் உள்ளன. இதே பகுதியில் பெருமாள் பாதம் என்ற இடத்தின் அருகாமையிலும் 3 கற்கோடாரிகள் உள்ளன. இவை அனைத்தும் ஜவ்வாதுமலையின் தொன்மையை பறைசாற்றும் ஆவணங்களாக இருப்பதால் இந்த கற்கால கருவிகளை தொல்லியல் துறையினர் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.Read in source website

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதனச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கட்டுமானங்கள் மேற்கொள்ள தடைவிதிக்கக் கோரி, கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘தொல்லியல் துறை சார்பில் இந்த கோயிலில் ரூ. 3 கோடிசெலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் உள்ளிட்டவசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.புராதனச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இந்தக் கோயிலில் புதியகட்டுமானங்களை உரிய அனுமதியின்றி மேற்கொள்ள தடைவிதிக்க வேண்டும்’’ என கோரி யிருந்தார்.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறையின் அரியலூர் மாவட்ட உதவி ஆணையர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கோயிலின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 38 மீட்டர் தூரத்தில் தான் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், தொல்லியல் துறை சட்ட விதிகளின்படி, 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கட்டுமானங்கள் இருக்க வேண்டும். தனது விதிகளையே தொல்லியல்துறை காற்றி்ல் பறக்கவிட்டுள்ளது.எனவே இந்த கோயிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக்கூடாது என இடைக்காலத்தடை விதித்துஉத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்தவழக்கில் விதிமீறலுக்கு யார் காரணம் என்பது குறித்து தொல்லியல் துறை 2 வாரங்களில் பதிலளிக்க வேண் டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.Read in source website

ஃபோட்டான் ஜோடி எப்படி உருவாகிறது? ஒரு ஃபோட்டான் துகளை இரண்டாக பிரிப்பதன் மூலமாக அல்லது இரண்டு ஃபோட்டான் துகள்களை இணைப்பதன் மூலமாக போட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இப்படி ஆய்வகங்களில் பல நாடுகளில் ஃபோட்டான் ஜோடிகள் உருவாக்கப்பட்டு சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொட்டாசியம் டைட்டனைல் பாஸ்பேட் (Potassium Titanyl Phosphate -KTP) படிகத்தில் லேசர் அலைகளைச் செலுத்தினால் ஃபோட்டான் ஜோடிகளை உருவாக்கலாம். இந்த ஃபோட்டான் ஜோடிகளை, தகவல்களைப் பாதுகாக்க சாவிகளை உருவாக்கவும் சாவிகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்பவும் பயன்படுத்தலாம். இதைத்தான் செய்திருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

ஃபோட்டான் நிலையைக் (Quantum State) குறிக்கும் அளவீடுகளை சாவியாக பயன்படுத்தலாம். ஃபோட்டான் ஜோடியில் ஒன்று தகவலை அனுப்புபவரிடம் இருக்கும். அடுத்த ஃபோட்டான்ஒளியின் மூலமாக தகவலை பெறுபவரிடம் அனுப்பப்படும். குவாண்டம் பின்னல் ஜோடிகளின் தன்மை ஒன்றையொன்று சார்ந்திருக்கும். அனுப்புபவரும் பெறுபவரும் தமது ஃபோட்டானின் தன்மையை ஒப்பிட்டு சரி பார்த்துக்கொண்டு, தகவலை பாதுகாப்பாக குறிமாற்றம் செய்யலாம். இதற்கு குவாண்டம் சாவி விநியோகம் (Quantum Key Distribution-QKD) என்று பெயர். குவாண்டம் சாவி தொடர்பான உலக அளவிலான நெறிமுறைகள் (Protocols) உண்டு. 1992-ல் புழக்கத்துக்கு வந்த BBM92 என்ற நெறிமுறை இஸ்ரோ சோதனையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சாவியைப் பெற இடையில் யாராவது ஃபோட்டானை அளக்க முயற்சித்தால் அதன் தன்மையில் மாற்றம் ஏற்படும். தகவலைப் பெறுபவர் இதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். சாவியைத் திருட முயற்சி நடந்ததா என்பதை மட்டுமின்றி எவ்வளவு திருடப்பட்டிருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து விடலாம். சாவியைப் பற்றி விவரங்கள் எவ்வளவு கசிந்திருக்கின்றன என்பதைப் பொறுத்து தகவலைத் திறப்பதா அல்லது அழித்து விடுவதா என முடிவெடுக்கலாம். சாவி ஒரு ஃபோட்டான் ஜோடியை மட்டும் சார்ந்திருக்காமல் பல ஃபோட்டான் ஜோடிகளை சார்ந்திருக்கும்.

எனவே சாவியின் முழு விவரங்களைத் திருடுவது சாத்தியமில்லை என்றே சொல்லலாம்.

வழக்கமான தகவல் பாதுகாப்பு முறைகள், கணிதப் படிமுறைகளின் (Mathematical Algorithms) அடிப்படையில் இயங்குகின்றன. சக்திவாய்ந்த கணிப்பொறியைக் கொண்டு அந்தப்பாதுகாப்பு முறைகளை தகர்க்கலாம். அதைத் தடுக்க மிகவும் சிக்கலானகணிதப் படிமுறைகள் பயன்படுத்தப்படும். ஆனால், எதிர்காலத்தில் அதிகசக்திவாய்ந்த மீத்திறன் கணிப்பொறிகள் (Super Computers) உருவாக்கப் படும்போது, பாதுகாப்பு முறைகள் மறுபடியும் உடைக்கப்படும். ஆனால், குவாண்டம் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தகவல் பாதுகாப்பு, குவாண்டம் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டது. எதிர்காலத்தின் மீத்திறன் கணிப்பொறிகளால் குவாண்டம் தகவல் தொடர்பை ஒன்றும் செய்ய முடியாது. எனவேதான், குவாண்டம் தகவல் தொடர்பு பாதுகாப்பான எதிர்கால தொழில்நுட்பமாக உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வெற்றியின் முக்கியத்துவம்

இஸ்ரோ விஞ்ஞானிகள், குவாண்டம் சாவி விநியோக நுட்பத்தின் அடிப்படையில் ஃபோட்டான் ஜோடிகளை உருவாக்கி, அதிலிருந்து பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கான சாவியை உருவாக்கி இருக்கிறார்கள். ஜோடி ஃபோட்டான்களில் ஒன்றை 300 மீட்டர் தூரத்திலிருந்த மற்றொரு கட்டிடத்துக்கு ஒளியை பிரதிபலிக்கும் ஆடிகளைப் பயன்படுத்தி திறந்த வெளியில் (Open Space) செலுத்தி இருக்கிறார்கள். பிற நாடுகளில் ஃபோட்டானை ஒளியிழை வடங்களில் (Optic fiber cables) கடத்தும் முயற்சிகள் நடந்ததுண்டு. ஆனால், திறந்தவெளி தகவல் தொடர்பு சிக்கலானது.

ஏனெனில் வளிமண்டலக் காற்றில் கலந்திருக்கிற துகள்களும் வாயுக்களும் ஃபோட்டானின் போக்குவரத்தைப் பாதிக்கும். சூரியக்கதிர்களின் பாதிப்பை தவிர்க்க இஸ்ரோஇந்த சோதனையை இரவில் நடத்தியுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். எனினும் சவாலான சோதனை முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

குறியீட்டாக்க மென்பொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு சோதிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. மேலும்நேவிக் (Navigation with Indian Constellation-NavIC) என்ற இந்திய வழிகாட்டி செயற்கைக்கோள் தொகுதியின் ஒத்திசைவும் சோதனையின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளது.

அடுத்தகட்ட நகர்வு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெற்றிகரமாக முதற்கட்ட சோதனையை நடத்தியது இஸ்ரோ. தொடர்ந்து தற்போது நடந்தேறியுள்ள மேம்பட்ட சோதனையின் வெற்றி இந்திய விண்வெளித் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஒரு முக்கிய மைல்கல் எனலாம்.

தொடர்ந்து அதிக தூரத்துக்கு தகவல் பரிமாறும் சோதனை முயற்சிகள் செய்யப்படலாம். அதில் ஃபோட்டானின் போக்குவரத்தில் வளிமண்டலமும், சூரிய ஒளியும் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆய்வு செய்யப்படலாம். நெடுந்தூரம் பயணிக்க ஏற்ற வகையிலான போட்டானின் உற்பத்தி நுட்பங்களிலும் ஆய்வுகள் தொடரலாம்.

தரையில் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்கு தகவலைப் பரிமாறும் சோதனை முயற்சிகள் படிப்படியாக முன்னேறி, முத்தாய்ப்பாக, செயற்கைக்கோளிலிருந்து நேரடியாக தரை நிலையங்களுக்கு பாதுகாப்பான தகவல் தொடர்பு சாத்தியமாகலாம். அப்படிப்பட்ட நிகழ்வு ஒரு இமாலய தொழில்நுட்பப் பாய்ச்சலாக உலக அளவிலான அதிமுக்கிய நிகழ்வாக இருக்கும். அது பல துறைகளிலும் புதிய தொழில்நுட்பக் கதவுகளை திறக்கும். மானுட வாழ்வு சிறக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.

இந்தியா நிச்சயம் ஜெயிக்கும்!

டாக்டர். வி.டில்லிபாபு

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானி. ‘பொறியியல் புரட்சிகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.Read in source website

புதிய தளங்களில் விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழுவை விரைவில் நியமிக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) மாநில அரசு தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பாரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படலம் ஆகிய நான்கு புதிய சாத்தியமான தளங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம். சிந்தியா, பசுமை விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான கிரீன்ஃபீல்ட் கொள்கையை இந்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக மாநில அரசு அல்லது விமான நிலைய ஆபரேட்டர் தளங்களைக் கண்டறிந்து, விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை செய்ய வேண்டும். அதன்பின், விண்ணப்பம் வழிகாட்டல் குழுவின் கொள்கை ரீதியிலான ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் திருசூலத்திலிருந்து திருப்போரூர் மிக அருகில் இருக்கும். பயண நேரம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக தான் இருக்கும்.

ஆனால், தற்போதைய விமான நிலையத்திலிருந்து பண்ணூர் மற்றும் படலம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதில், பரந்தூர் தான் வெகு தொலைவில் உள்ளது. அங்கு செல்ல திருசூலத்திலிருந்து இரண்டு மணி நேரமாகும்.

தொற்றுநோய்க்கு முன்னர், நகர விமான நிலையம் கடுமையான இடையூறுகளைச் சந்தித்தது. பயணிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். சாத்தியமான தளங்கள் பரிசீலிக்கப்பட்டும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இரண்டாவது விமான நிலையத்திற்கான தளத்தையும் இறுதி செய்ய முடிவதில்லை.

தற்போது, இந்த புதிய தளங்களில் விமான நிலையம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் குழுவை விரைவில் நியமிக்குமாறு மாநில அரசு இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த ஆய்வில், புதிய விமான நிலையத்திற்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் நிறுவ குறிப்பிட்ட தளத்தில் போதுமான இடம் உள்ளதா என்பதை அறியவும், தாம்பரம் விமானப்படை போக்குவரத்தில் எந்த குறுக்கீடும் இல்லை அல்லது வேறு ஏதேனும் தடைகள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படுகிறது.

இதுதவிர, சென்னை விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு விரிவாக்கப் பணிகள் குறித்தும் அமைச்சர் விவரித்தார்.Read in source website

நீட் தேர்வால் சமூகநீதி பாதிக்கப்படுகிறது, கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான அனுமதி மறுக்கப்படுகிறது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தகுதி பெற முடிவதில்லை. ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள், பயிற்சி வகுப்புகள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன என்பது போன்ற பல்வேறு விமர்சனங்களின் அடிப்படையாக நீட் தேவையில்லை என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் வாதங்களை முன்வைக்கின்றன.

இந்த வாதங்களெல்லாம் பல முறை, பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டும், அவற்றை ஏற்க மறுத்து ‘நீட் கட்டாயம் தேவை' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 2010-ல் மருத்துவப் படிப்புக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, பொதுவான நுழைவுத்தேர்வின் அவசியத்தை வலியுறுத்தினார் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல். அதன் பின் பல்வேறு ஆய்வுகள், ஆலோசனைகளுக்குப் பின்னர் நாடு முழுவதும் ஒரே பொதுத் தேர்வு என்ற உத்தரவைப் பிறப்பித்தது காங்கிரஸ் அரசு. இந்த உத்தரவை எதிர்த்துப் பல தனியார் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அவ்வழக்கு அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பான நிலையில், சீராய்வு மனுசெய்ததில் அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்து நீட் தேர்வை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். சில மாநிலங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாஜக அரசு ஒரு வருடம் அவற்றுக்கு விலக்கு அளித்து அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால், அதன் பின்னர் விலக்கு கேட்டபோது உச்ச நீதிமன்றம் அனுமதிக்க மறுத்துவிட்டது.

நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து விமர்சனங்களுக்கும் உரிய விளக்கங்களை அளித்தும், தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவது வியப்பளிக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளில், அரசுகளால், அரசியலர்களால் தமிழகத்தில் கல்வித் துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு, ஆங்கிலவழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி தனியாருக்கு வழங்கப்பட்டு கல்வி வியாபாரம் களைகட்டத் தொடங்கியது. வருமானத்தை அள்ளிக் குவித்த தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு எமனாக அமைந்தது.

நீட் தேர்வுக்கு முன்னர் மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்பில் அனுமதிக்கப்படுவதற்காகவே, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டுவந்த, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோழிப்பண்ணைப் பள்ளிகள் என்றழைக்கப்படும் 'உறைவிட' மனப்பாடப் பள்ளிகளின் மாணவ, மாணவிகள், அதிக அளவில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பள்ளிகள் அனைத்தையுமே கிராமப்புறப் பள்ளிகளாக தமிழக அரசு கருதியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு (நீட்டுக்கு முன்), அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 2,500 ஆக இருந்தபோதே, இந்தப் பள்ளிகளில் பயின்ற 1,750 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றனர். ஆனால், 2017-ம் ஆண்டு (நீட் தொடங்கிய வருடம்) இந்தக் கல்லூரிகளிலிருந்து வெறும் 373 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வாகினர் என்பதிலிருந்தே நீட் தேர்வை இந்தப் பள்ளிகள் ஏன் எதிர்க்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும்.

நீட் தேர்வுக்கு முன்னர், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட மாணவர்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இரட்டைப்படை எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வுபெற்றுவருவது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் எதிராக இருக்கிறது என்ற வாதம் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்கள் தவிர்த்து, மீதமுள்ள 85% இடங்களும் தமிழகத்தைச் சார்ந்தவர்களுக்கே என்பது விதி. இதில் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகள் உட்பட அரசுக்கான இடங்கள் அனைத்துமே 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே கலந்தாய்வு முறையில் ஒதுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்கு முன்னர் இருந்ததைவிட பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிக எண்ணிக்கையில் தற்போது தேர்வுபெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். அனுமதியில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எஸ்.டி. வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 29(1%) கிடைத்த இடங்கள் 29(1%), எஸ்.சி. அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 84(3%), கிடைத்த இடங்கள் 85(3%), எஸ்.சி. வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 421(15%), கிடைத்த இடங்கள் 431(15.4%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 560(20%), கிடைத்த இடங்கள் 694(24.8%), பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 84(3%), கிடைத்த இடங்கள் 119(4.2%), பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 757 (27%), கிடைத்த இடங்கள் 1,340 (47.8%), இதர வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 869 (31%) கிடைத்த இடங்கள் 107 (3.8%).

ஆகவே, சமூகநீதிக்கு, இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளது என்ற வாதமும் தகர்க்கப்பட்டுள்ளது.
2006-2016 காலகட்டத்தில் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் 340 பேர் மட்டுமே மருத்துவக் கல்விக்குத் தேர்வுபெற்றிருந்த நிலையில், இன்றைய பாஜக தலைவரும், அன்றைய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவின் ஆலோசனைப்படி, கடந்த அதிமுக அரசு செயல்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின்படி கடந்த 2 ஆண்டுகளில் 900-க்கும் அதிகமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது, நீட் தேர்வானது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதை உணர்த்துகிறது.

திமுக அரசால் நியமிக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழு அறிக்கையானது நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குத் தமிழக மாணவர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும், பயிற்சி நிறுவனங்கள் ஆண்டுதோறும் ரூ.5,750 கோடி வருமானம் ஈட்டுகின்றன என்றும் குறிப்பிட்டது. ஆனால், 2021-ல் தமிழகத்தில் அரசு ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்கள் 25,593 பேரில், 10,511(40%) பேர் மட்டுமே பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிட்டவர்கள், 15,082 மாணவர்கள் பயிற்சி எடுத்ததாகக் குறிப்பிடவில்லை. ஆனால், இது குறித்து ஏ.கே.ராஜன் குழுவிடம் கேட்டபோது, அரசு அளித்த புள்ளிவிவரங்களையே தான் தெரிவித்ததாகக் கூறியது, திமுக அரசின் உள்நோக்கத்தைக் குறிக்கிறது.

ஆக, நீட் தேர்வால் ஆதிக்க சக்திகளின் ஊழல், லஞ்சம், முறைகேடுகள் ஒழிக்கப்படுவதோடு, சமூகநீதி நிலைநாட்டப்பட்டு, ஏழை கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவப் படிப்பில் இணைந்து, தரம் வாய்ந்த மருத்துவர்களை நம் நாடு பெறுவதற்கு நீட் தேர்வு வழிவகுக்கிறது. இதை உணர்ந்து, மக்கள் நலன் கருதி நீட் தேர்வுக்கான எதிர்ப்பைத் தமிழக அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும்.

- நாராயணன் திருப்பதி, பாஜக செய்தித் தொடர்பாளர்.Read in source website

இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறி, 2009-ல் சிம்ரன் ஜெயின் மற்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்குப் பல தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஆணையிட்டது. இதையொட்டி, டிசம்பர் 2010-ல் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன. மத்திய பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என்று இந்த மாநிலங்கள் கூறின. இச்சூழலில், அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாதும், அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால், அது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது. ஏப்ரல் 11, 2016-ல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை பாஜக ஆட்சியில்தான் ஏற்பட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை.

நீட் தேர்வுக்கு முன்பாக மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்குச் சில புள்ளிவிவரங்கள்:

2013-14-ம் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3,267 மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,251 பேர். இதில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் வெறும் 4 பேர் மட்டுமே. 2014-15-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3,147 பேர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 3,140 பேர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 2 பேர். மற்றவர்கள் 5 பேர். 2015-16-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் 3,015 பேர். இவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் 2,996 பேர். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 2 பேர். மற்றவர்கள் 17 பேர். 2016-17-ல் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் படித்த 3,544 பேர், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 35 பேர், பிறர் 29 பேர் என மொத்தம் 3,608 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு எப்படி பறிக்கப்பட்டது என்பதற்கான சில புள்ளிவிவரங்கள்:

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர் 2017-18-ல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தவர்களில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எண்ணிக்கை 1,113 ஆக உயர்ந்தது. மாநிலப் பாடத்திட்டத்தில் ஏற்கெனவே வாய்ப்புக் கிடைத்த 3,000-க்கும் அதிகமானோரின் எண்ணிக்கை 2003-ஆகக் குறைந்தது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் 3 பேர் மட்டுமே.

2018-19-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 3,618. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,626. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 894. மற்றவர்கள் 118 பேர். 2019-20-ல் மருத்துவப் படிப்பில் சேர்ந்தோர் எண்ணிக்கை 4,202. இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 2,762. இதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 5 பேர்தான். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 1,368 பேர். மற்றவர்கள் 72 பேர். 2019-20-ல் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களில் 6 பேருக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள்தான். மேலே கூறப்பட்ட புள்ளிவிவரங்கள் மூலமாக எத்தகைய சமூக அநீதி இழைக்கப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

2020-21-ல் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் 336 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள 92.5 சதவீதத்தில் மொத்தம் 4,129 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சி.பி.எஸ்.இ. மாணவர்கள் எண்ணிக்கை 1,604 ஆக உயர்ந்தது. அதேபோல், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,453ஆகக் குறைந்தது.

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் உரிய பலனைப் பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்தில் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் 8.41 லட்சம் பேர். இதில் 3.44 லட்சம் பேர், அதாவது 41 சதவீதத்தினர் அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்கள் 5,822. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 4,319.
2021-22-ல் தமிழக அரசின் 7.5% ஒதுக்கீட்டின்படி 437 இடங்கள் மருத்துவப் படிப்புக்கும், 107 இடங்கள் பல் மருத்துவப் படிப்புக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது நடைபெற்ற நீட் தேர்வில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின்படி முதல் 10 மாணவர்களில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8 பேரும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 2 பேரும் தேர்வு பெற்றிருக்கிறார்கள். முதல் 100 பேரில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81 பேர், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் 17 பேர் தேர்வு பெற்றுள்ளனர். முதல் 1,000 பேரில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டும் தேர்வுபெற்றுள்ளனர்.

நீட் தேர்வுக்கு முன்பாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திலிருந்து 1% மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அது 39% ஆகக் கூடிவிட்டது. அதேபோல் நீட் தேர்வுக்கு முன் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 98.2% மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. அது தற்போது 59% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு முன் கிட்டத்தட்ட 14.8% தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், அது தற்போது 2 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே, நீட் தேர்வு என்பது வசதிபடைத்த, மேட்டுக்குடியில் பிறந்த குடும்பத்தினருக்கு ஆதரவாக உள்ளது. நீட் தேர்வை ஒட்டுமொத்த தமிழகம் ஏன் எதிர்க்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.

- ஆ.கோபண்ணா, ‘தேசிய முரசு’ இதழின் ஆசிரியர்.Read in source website