DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 11-01-2022

தூத்துக்குடி: தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு முதல் பெண் ஐஜியாகஆசியம்மாள் நியமிக்கப்பட்டுஉள்ளதால், அவரது சொந்த கிராமமான தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. உளவுத்துறை ஐஜியாகஆசியம்மாள் (56) நியமிக்கப்பட்டுஉள்ளார். உளவுத்துறையில் கடந்த 7 மாதங்களாக டிஐஜியாக பணியாற்றி வந்த ஆசியம்மாள், பதவி உயர்வில் அதே துறையின் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறை ஐஜியாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. மிகவும் திறமையான அதிகாரிகளே இந்த பதவிக்கு நியமிக்கப்படுவர். தற்போது ஆசியம்மாள் அந்த பணியிடத்துக்கு வந்துள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சி கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.

வைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சியைச் சேர்ந்த ஜக்கரியா - முகைதீன் பாத்திமா தம்பதியரின் மூத்த மகள் ஆசியம்மாள். 2-ம் வகுப்பு வரை கொங்கராயக்குறிச்சியில் உள்ள பள்ளியில் படித்துள்ளார். தொடர்ந்து தந்தையின் பணி காரணமாக சென்னை சென்று படித்துள்ளார். தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக விரைவிலேயே திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

திருமணத்துக்குப் பின்புதான் காவல்துறை பணிக்கு வந்துஉள்ளார். இவரது கணவர் மரைக்காயர், சங்கர் சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

எம்எஸ்சி, எம்டெக் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் பட்டங்களை பெற்ற ஆசியம்மாள், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று காவல்துறை பணிக்கு வந்தார். வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியைத் தொடங்கிய அவர், தற்போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும்

இதுகுறித்து கொங்கராயக்குறிச்சியில் வசிக்கும் அவரது தாய்மாமா ரகுமதுல்லா கூறும்போது, ‘எனது அக்காவுக்கு 5 பெண் பிள்ளைகள். மூத்தவர் ஆசியம்மாள். இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு அவரின் கடின உழைப்பே காரணம். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது' என்றார்.

உறவினர் கமல் பாஷா கூறும்போது, ‘எங்கள் உறவுக்கார பெண் தமிழக காவல்துறையில் உயர் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. அவரது கடின உழைப்பும், உயர்வும் எங்கள் பகுதி இளைஞர்கள், பெண்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது” என்றார்.Read in source website

சென்னை: ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று, மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது.

ஓய்வூதியர்களுக்கு, பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் (டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்) அளிக்கும் சேவையை இந்தியாபோஸ்ட் வங்கி மூலம் அஞ்சல் துறை தொடங்கியுள்ளது.

இந்த சேவையை அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்தில், ஓய்வூதியர்களின் வீடு தேடிச் சென்று வழங்குகின்றனர். இதன்மூலம், கரோனா தொற்று காலத்தில், வங்கிகள், அலுவலகங்களுக்கு மூத்த குடிமக்கள் செல்லும் நிலை தவிர்க்கப்படுகிறது.

சென்னை நகர வடக்கு மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் இந்த சேவை வழங்கப்படுகிறது. அஞ்சல் தகவல் செயலி அல்லது http://ccc.cept.gov.in/covid/request.aspx என்ற இணையதளம் மூலம், வீடு தேடி வரும்சேவைக்கான வேண்டுகோளை அனுப்பலாம். மின்னணு சான்றிதழுக்கு விண்ணப்பிக்க, http://jeevanpramaan.gov.in/ppouser/login என்ற இணையதள இணைப்பில் உரிய படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என்று சென்னை நகர வடக்கு மண்டலஅஞ்சலகங்களின் முதுநிலை மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.Read in source website

:புதுடெல்லி: ஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்ஸராக சீனாவின் விவோ நிறுவனத்துக்குப் பதிலாக டாடா குழுமம் அடுத்த இரு ஆண்டுகளுக்கு உரிமத்தைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடப்பு 2022 சீசன் மற்றும் 2023்ம் ஆண்டு சீசனுக்கும் டைட்டில் ஸ்பான்ஸராக டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா குழுமத்துக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த ஒப்பந்தத்தை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு நேற்று வழங்கியுள்ளது.

இது குறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறுகையில் “இந்த சீசனுக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஸர் டாடா குழுமம்தான்” எனத் தெரிவித்தார். விவோ நிறுவனத்துடன் ரூ.2,200 கோடிக்கு பிசிசிஐ ஸ்பான்ஸர் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், நிச்சயம் அதைவிட குறைந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், எத்தனை கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

கடந்த 2020ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது. ஆனால், ஐபிஎல் நிர்வாகத்துடன் 2017 முதல் 2022ம் ஆண்டுவரை ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தை விவோ நிறுவனம் செய்திருந்தது.

இதனால் ஓர் ஆண்டு மட்டும் ட்ரீம்11 நிறுவனத்துக்கு ஸ்பான்ஸர்ஷிப் கொடுக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு மீண்டும் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பான்ஸர்ஷிப்பில் 50 சதவீதம் பணத்தை பிசிசிஐ வைத்துக்கொண்டு மீதமுள்ள சதவீதத்தை மற்ற அணிகளுக்கு பிரித்து வழங்கும்.Read in source website

மஞ்சள் ரூ.350 (இலங்கை பணமதிப்பு), கத்தரிக்காய் 250 கிராம் ரூ.300, உளுந்தம் பருப்பு கிலோ ரூ.2000, தேங்காய் ஒன்று ரூ.150 வருமானம் உயரவில்லை. விண்ணை முட்டும் விலை, வறுமை, உணவுப் பஞ்சம் இதை நோக்கித்தான் இலங்கை பொருளாதாரத்தின் நிலை இருக்கிறது.

கம்பராமாயணம் தொட்டு அல்ல இன்று வரை அழகைக் கொட்டி உருவாக்கப்பட்ட குட்டி தேசம் இலங்கை. 4 பக்கம் கடல்கள், மலையகத் தோட்டங்கள், பசுங்காடுகள் எனச் செழுமையான நாடு.

ஆனால், உள்நாட்டுக் குழப்பம், போர் என பாதிக்காலம் போன நிலையில், இன்று பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கித் தவித்து, சீனாவிடம் அடகுவைக்கும் நிலைக்கு இலங்கை சென்றுவிட்டது.

இலங்கையில் என்னதான் பிரச்சினை?

இலங்கையின் பொருளாதாரத்தில் 10 சதவீதம் ஜிடிபி சுற்றுலாத்துறையின் மூலம் கிடைக்கிறது, அதன்பின் தேயிலை, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆயத்த ஆடைகள், தேயிலை ஏற்றுமதி, சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைச் சார்ந்துதான் இலங்கைப் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருக்கிறது. மொத்த ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகளின் பங்கு 52 சதவீதமாகவும், தேயிலை ஏற்றுமதி 17 சதவீதமாகவும் இருக்கிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பள்ளத்தை ஏற்படுத்தியது, சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

பொருளாதாரச் சரிவு

2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் தேயிலை, ஆடைகள் ஏற்றுமதி சரிவால் அந்நியச் செலாவணி கையிருப்பும் வறண்டது. இலங்கையின் பொருளாதார நசிவைப் பார்த்த பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மூலதனத்தைச் சுருட்டிக் கொண்டு வெளியேறத் தொடங்கின.

தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள் “குன்று தங்கம் இருந்தாலும் குந்தித் தின்றால் தாங்காது” என்பதுபோல வளர்ச்சிக்கு வழிதேடாமல் இலங்கை அரசு கைவசம் இருந்த அந்நியச் செலாவணி முழுவதையும் கரைத்துவிட்டது.

திவால் நிலை?

2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக அடுத்த 12 மாதங்களுக்கு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன. இந்தக் கடனை 2022, ஜனவரிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

இலங்கை அரசு இப்போது சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் திடீரென கரோனா மூலம் வந்தவை என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது ராஜபக்ச அரசு.

10 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்

கொழும்பு கெசட் நாளேட்டில் சுஹைல் கப்தில் என்ற பொருளாதார வல்லுநர் ஆய்வறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை அரசு இருவிதமான பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. ஒன்று வர்த்தகப் பற்றாக்குறை, 2-வதாக நிதிப் பற்றாக்குறை.

கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே இலங்கை அரசின் சர்வதேசக் கடன் அதிகரித்து வருகிறது, 2019-ம் ஆண்டில் சர்வதேசக் கடன் 42.6 சதவீதமாக ஜிடிபியில் அதிகரித்துவிட்டது. டாலரின் மதிப்பில் கூறினால் 2019-ம் ஆண்டில் இலங்கையின் சர்வதேசக் கடன் 3,300 கோடி டாலராகும்.

இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மேலும் மேலும் கடனை வாங்கியும், உள்நாட்டில் அதிகமான பணத்தை அச்சடித்து வெளியிட்டதாலும் மிகப்பெரிய பொருளாதாரப் பேரழிவை இலங்கை சந்தித்து வருகிறது.

இதன் காரணமாகவே சர்வதேச ரேட்டிங் நிறுவனங்களான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்ஸ், மூடிஸ், பிட்ச் ஆகியவை இலங்கையின் சர்வதேசக் கடன் தரத்தை பியிலிருந்து சிக்கு இறக்கிவிட்டனர். இதனால் சர்வதேச அளவில் கடன் பத்திரங்கள் மூலம் கடன் பெறுவது இலங்கைக்குக் கடினமாகி திவால் நிலைக்குச் செல்லும்.

சீனாவுக்கான கடன்

இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 500 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 100 கோடி டாலர் கடனும் இலங்கை வாங்கி அதனை தவணை முறையில் செலுத்த முடிவு செய்துள்ளது.

ஆனால், இலங்கை அரசிடம் இப்போது இருக்கும் அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த மாதத்தோடு முடிந்துவிடும். அடுத்துவரும் செலவுகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் 43.70 கோடி டாலராவது தேவைப்படும். 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான வெளிநாட்டுக் கடன் சேவையில் 480 கோடியை எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது மிகப்பெரிய பிரச்சினையாகும்.

பணவீக்கம், விலைவாசி உயர்வு

2019-ம் ஆண்டு 750 கோடி அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருந்த இலங்கை 2021 ஜூலை மாதம் 280 கோடியாகக் குறைந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது, இறக்குமதிக்காகவும் அந்நியச் செலாவணி அதிகமாக செலவிடப்பட்டது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது, கடந்த ஆண்டில் மட்டும் 8 சதவீதம் சரிந்துள்ளது.

பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் வரையிலும் விற்கப்படுகிறது.

இதனால், அடிப்படை உணவு சப்ளையைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து நிறைவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுவிட்டன. நாட்டில் பணவீக்கத்தின் அளவு இதுவரை கண்டிராத அளவு 11.1 சதவீதமாக அதிகரித்துவிட்டது.

உணவுப்பொருள் விலை ஏற்றத்துக்கு யார் காரணம்?

இலங்கையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, வெங்காயம் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்ந்து வருகிறது. கேஸ் அடுப்பில் சமைத்தவர்கள் மண்ணெண்ணெய் அடுப்புக்கும், மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த மக்கள் விறகு அடுப்புக்கும் மாறிவிட்டார்கள். 3 வேளை சாப்பிட்ட மக்கள் 2 வேளைக்கும், 2 வேளை சாப்பிட்ட மக்கள் ஒருவேளைக்கும் மாறிவருகிறார்கள்.

இலங்கையில் மிகப்பெரிய அளவுக்கு உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட கோத்தபய ராஜகபக்ச அறிவிப்புதான் காரணம். இலங்கையில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அறிவிப்பு மோசமான விளைவைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.

பொருளாதாரப் பேரழிவை மக்களிடம் மறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது.

ரேஷனில் உணவுப் பொருட்களை வாங்கவும், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகளில் பொருட்களை வாங்கவும் மக்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அதிபர் கோத்தபய ராஜகபக்சவின் அறிவிப்புதான். உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு இலங்கை என்று திடீரென அறிவித்து ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடை விதித்தார்.

திட்டமிடாத பாரம்பரிய விவசாயம்

பாரம்பரிய விவசாய முறையைப் பற்றி அதிகம் தெரியாத விவசாயிகள், அதற்கு முழுமையாகத் தயாராகாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், இயல்பாக வர வேண்டிய உணவு உற்பத்தி கூட வராமல் பற்றாக்குறையாக இருந்தது.

இந்தப் பற்றாக்குறை உணவு உற்பத்தியை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை அரசு சென்றுவிட்டது. இலங்கையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, விலைவாசி கண்டமேனிக்கு எகிறிவிட்டது.

5 லட்சம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ்

இலங்கை ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் டபிள்யுஏ விஜேவர்த்தனா எச்சரிக்கையில், “பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் நிலைமை இன்னும் மோசமாகும். கரோனா பெருந்தொற்றிலிருந்து இலங்கையில் 5 லட்சம் மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழ் சென்றிருக்கிறார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், இலங்கை அரசு நீண்ட காலத்துக்குத் தீர்வு காணாமல் தற்காலிகமாகத் தீர்வை நோக்கியே நகர்கிறது. நிவாரணப் பொருட்களை இந்தியாவிடம் பெறுகிறது. கரன்ஸி ஸ்வாப்பிங் மூலம் இந்தியா, வங்கதேசம், சீனாவிடம் இருந்து பொருட்களை வாங்குகிறது, ஓமனிலிருந்து பெட்ரோலை வாங்குகிறது. கடந்த காலத்தில் பெற்ற கச்சா எண்ணெய் கடனை அடைக்க, ஈரான் நாட்டுக்கு மாதந்தோறும் 50 லட்சம் டாலர் மதிப்புள்ள தேயிலையை ஏற்றுமதி செய்து கடனை அடைக்கும் நிலைதான் நிலவுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அரசின் பதில் என்ன?

இலங்கையில் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் பதுக்கல்தான், விலை உயரும் என்ற எண்ணத்துடன் பதுக்கி வருகிறார்கள் என்று பழியைப் போடும் இலங்கை அரசு தங்களின் தவறை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

ராணுவம் களத்தில் இறக்கி பதுக்கல் பொருட்களை வெளிக்கொண்டு வந்து, மக்களுக்கு நியமான விலையில் வழங்கிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அந்நியச் செலாவணியை அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில் இயற்கை முறை விவசாயம் சரிபட்டு வராது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தபோதிலும் இலங்கை அரசு பிடிவாதமாகக் கைவிட மறுக்கிறது. குறைந்த காலத்துக்கு சிரமமாக இருக்கும், நீண்டகாலத்தில் பலன் அளிக்கும் என்று இயற்கை விவசாயத்தைக் கைவிட மறுக்கிறது.

விவசாயிகளுக்கு இயற்கை உரங்களை மானிய விலையில் வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே பிரச்சினையின் ஒட்டுமொத்த உருவத்தையும் பார்க்கவும், தீர்க்கவும் இலங்கை அரசு தயாராக இல்லை

அதில் உச்சகட்டமாக, “மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களை அரசே ஏற்பாடு செய்ய இயலாது; ஆகையால், வீட்டுத் தோட்ட முறைக்கு மக்கள் மாற வேண்டும்; முடிந்த அளவிற்கு வெளியிலிருந்து பொருட்கள் வாங்குவதைக் கைவிட்டு, உணவுத் தேவையை தாமாகவே நிறைவு செய்துகொள்ள வேண்டும்’’ என்று இலங்கை அரசு மக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளது.

சீனாவின் பிடிக்குள் இலங்கை

இலங்கைக்கு இருக்கும் மிகப்பெரிய அளவிலான வெளிநாட்டுக் கடனில் பெரும்பகுதி சீனாவுக்குச் செலுத்த வேண்டியவை. சீனாவுக்கு மட்டும் இலங்கை 650 கோடி டாலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.

கடனுக்காகவும், பொருளாதார மீட்சிக்காகவும் சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் இலங்கையின் இந்தச் செயல், இலங்கையை சீனாவினுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும்’ என்று அந்நாட்டின் எதிர்க்கட்சிகளும் பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர்.

ஏற்கெனவே, ஹம்பன்தோட்டா துறைமுக மேம்பாட்டுக்காக சீனாவிடம் பெற்ற 1400 கோடி டாலர் கடனை அடைக்க 2017-ம் ஆண்டிலிருந்து 99 ஆண்டுகளுக்கு அந்த துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. இது மட்டுமின்றி, ஹம்பன்தோட்டா விமான நிலையம், தெற்கு விரைவுச் சாலை, அனல்மின் நிலையம், கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சீனாவை நம்பும் இலங்கை

அண்டை மற்றும் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவை நம்பாமல் சீனாவையே அதிகமாக இலங்கை நம்பி வருகிறது. சீனாவுக்குத் தர வேண்டிய கடன் தொகையை பொருளாதாரப் பிரச்சினையைக் காரணம் காட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இலங்கைப் பயணம் சென்றுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யிடம் பிரதமர் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வருவது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாகும். குறிப்பாக ஹம்பன்தோட்டா துறைமுகம், கிழக்கு-மேற்கு சர்வதேச கடற்பகுதியில் இருக்கிறது. அந்த துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை ஒப்படைத்தால், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ராணுவத்தைக் குவிக்க நேரிடும், இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில் சீனா பிரச்சினை செய்துவரும் நிலையில் அது இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் உருவாகும்.

இந்தியாவுக்கு தாக்கம் என்ன?

அண்டை நாடுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்திய அரசு இலங்கையுடன் வெளிநாடு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் நெருக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஏற்றுமதி நாடு இலங்கைதான். இந்தியா-இலங்கை தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக 60 சதவீத இலங்கை ஏற்றுமதி நடக்கின்றன.

இலங்கையில் அதிகமாக முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று, சமூகக் கட்டமைப்பான கல்வி, மருத்துவமனை, வீடுகள் கட்டுதல், சுத்தமான குடிநீர், கழிவறை, தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றுக்கு இலங்கையில் அதிக முதலீட்டை இந்தியா அளித்து வருகிறது. இந்திய அரசு வழியாக ரயில்வே, கட்டுமானம், பாதுகாப்பு உபகரணங்கள், தீவிரவாத எதிர்ப்பு, சோலார் திட்டம் உள்ளிட்டவை மூலம் 200 கோடி டாலர் அளவுக்கு நிதியுதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது.

கடந்த 2005 முதல் 2019-ம் ஆண்டு வரை 170 கோடி டாலரை இலங்கையில் இந்திய நேரடி முதலீடாகச் செய்துள்ளது. மேலும் பெட்ரோலியம், ஹோட்டல், சுற்றுலா, உற்பத்தி, தொலைத்தொடர்பு , வங்கி, நிதிச்சேவையிலும் இலங்கையில் இந்தியா அதிகமான முதலீடு செய்துள்ளது

ஆனால், சீனாவிடம் காட்டும் அதீதமான நெருக்கத்தால் சமீபகாலமாக இந்தியாவின் நட்பிலிருந்து இலங்கை விலகி வருவதுபோல் தெரிகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் திட்டத்தில் இந்தியா, ஜப்பானுடன் சேர்ந்து செயல்பட இருந்த இலங்கை திடீரென வாபஸ் பெற்றது.

இலங்கை ரிசர்வ் வங்கியுடன், இந்திய ரிசர்வ் வங்கி கரன்ஸி பரிமாற்ற ஒப்பந்தத்தை 2019-ம் ஆண்டு செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் 2022, நவம்பர் வரைஇருந்தாலும், இலங்கையின் பொருளாதார அவசர நிலை காரணமாக அதை நீடிக்க இரு நாடுகளும் விரும்பவில்லை.

இதற்கிடையே இலங்கை அரசு தனக்கிருக்கும் வெளிநாட்டுக் கடனை அடைக்க சீனாவின் உதவியையே அதிகம் நாடி வருகிறது. இலங்கையின் பட்ஜெட்டுக்குத் தேவையான 130 கோடி டாலர் கடன்கூட சீனா மேம்பாட்டு வங்கியிலிருந்து இலங்கை பெற்றது, 150 கோடி டாலர் அளவுக்கு சீனாவின் பீப்பிள்ஸ் பேங்கிலிருந்து கரன்ஸி ஸ்வாப் மூலம் இலங்கை பெற்றது.

இலங்கைக்கு அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்து சீன அரசு வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்றிக்கொண்டது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 380 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்தது, இந்தியா 320 கோடி டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்தது.

இலங்கையின் முக்கியமான கடல்வழித் தடத்தில் அதிகமான முதலீட்டை சீனா செய்துவருவது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறிவருகிறது. கடந்த 2006 முதல் 2019-ம் ஆண்டுவரை இலங்கையின் கடல்வழிக் உள்கட்டமைப்புக்கு 1200 கோடி டாலரை சீனா முதலீடு செய்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் படிப்படியான ஆதிக்கம் இந்தியாவின் தென்பகுதி எல்லைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்பதால் இந்தியா எச்சரிக்கையாக இருந்து வருகிறது.

பொருளாதார ரீதியாக இலங்கைக்கு அதிகமான ஏற்றுமதியை இந்தியா செய்து வருகிறது. குறிப்பாக ஆடைகள், ஜவுளிகளை அதிகமாக இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையால், நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தும் காலம் அதிகரிக்கும், அமெரிக்க டாலருக்கு நிகாரன இலங்கை ரூபாயின் மதிப்பு 10 சதவீதம் சரிந்துவிட்டதும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து பருத்தி ஆடைகள், ஆயத்த ஆடைகள் மட்டுமின்றி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், காலணி, கணினி உதிரிபாகங்கள், இரும்பு, உருக்கு போன்றவையும் ஏற்றுமதியாகின்றன. இலங்கை பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கும்போது அது இந்தியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தேக்கநிலையானது, இலங்கையின் பொருளாதாத்தை மேலும் சுருக்கி நிரந்தரமான நெருக்கடிக்குள் தள்ளிவிட்டுள்ளது.

இந்த நிலைமையைச் சாதகமாக்கிக் கொண்டு, இலங்கையைத் தங்கள் பக்கம் சாய்க்கவும், பொருளாதார அடிமையாக மாற்றவும் சீனா முயன்று வருகிறது. இதில் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல சிங்களர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் சிக்கித் தவிக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், சீனாவின் கிளை நாடு என்ற அடைமொழியோடு இலங்கை வரலாம். சீனாவின் வேர் பரவுவது இந்தியாவுக்கு எப்போதும் ஆபத்துதான்

இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் வந்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்குள்ள நிலை பற்றி கூறியதாவது:

இலங்கையின் பொருளதாரா நிலைமை மோசமாகி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். முன்பு ரூ.10 ஆயிரம் கொண்டு சென்றால் 15 நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவருவேன். இன்று 5 நாட்களுக்குகூடப் பொருட்களை வாங்க முடியவில்லை. வருமானம் உயரவில்லை, ஆனால், விலைவாசி உயர்ந்துவிட்டது.

ஒரு மஞ்சள் பொடி பாக்கெட் விலை ரூ.300 விற்கிறது, தேங்காய் ஒன்று 100 ரூபாய் விற்கிறது, தக்காளி விலை 300 ரூபாய்க்கு விற்கிறது. எந்தப் பொருள் எடுத்தாலும் விலை உயர்ந்துவிட்டது. சமையல் கேஸில் கலப்படம் செய்து சிலிண்டர்கள் வெடிப்பதாக வந்த செய்தியால் சிலிண்டர் நிறுத்தப்பட்டது.

இதனால் மண்ணெண்ணெய் அடுப்பில்தான் சமைக்கிறோம். மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காலை 5 மணிக்கு வரிசையில் நின்றால்தான் வாங்க முடிகிறது. இப்படியே சென்றால் இலங்கையின் நிலைமை சோமாலியா, எத்தியோப்பியா போன்ற பஞ்சம் ஏற்படும் நாடாக மாறிவிடும் போல் இருக்கிறது. கூலி வேலைக்குச் செல்பவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவர உணவு கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

அனைத்து வளங்களும் எங்கள் நாட்டில் இருந்தபோதிலும் ஏன் இந்த சிரமம் எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு அந்தப் பெயரைக் கூற மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், “ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலையீடு அனைத்து விஷயங்களிலும் இருப்பதைக் காண முடிகிறது, பள்ளியில்கூட அந்த நாட்டின் மொழியைத் திணிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். முன்பெல்லாம் சாலையின் பெயர்ப் பலகையில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மட்டும் இருக்கும் தற்போது அந்த நாட்டின் மொழியும் சேர்ந்துவிட்டது. ஏன் அந்த நாட்டைச் சார்ந்து இலங்கை இருக்கிறது எனத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.Read in source website

நியூயார்க்: மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தப்பட்ட புதிய மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் டேவிட் பென்னட் (57). தீவிர இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட பென்னட்டின் உடல் மனிதனின் இதயத்தை மாற்று இதயமாக பெற ஒத்துழைக்கவில்லை. அவரது மோசமான உடல் நிலை காரணமாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை அவருக்கு பொருத்த மேரிலாண்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர். பன்றியின் இதயமும், மனிதனின் இதயமும் ஏறக்குறைய ஒத்த தோற்றத்தை கொண்டவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடைசி வாய்ப்பு: ”நான் இந்த மாற்று அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ள வேண்டும்; இல்லையேல் இறக்க வேண்டும். இவை மட்டுமே எனக்கு முன் இருந்த வாய்ப்புகள். இதுதான் எனது கடைசி வாய்ப்பு” என்று சிகிசைக்கு பென்னட் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பென்னட்க்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம், மருத்துவர்களால் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. பென்னட் உயிர்வாழ எத்தனை ஆண்டுகள் இந்த மாற்று இதயம் உதவும் என்று தெரியாது. ஆனால். மாற்று அறுவை சிகிச்சையில் இது ஒரு பெரும் சாதனையாக கருதப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறையும்: பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது குறித்து புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி கிரிஃபித் கூறும்போது, “அமெரிக்காவில் மாற்று உறுப்பு இல்லாமல் தினசரி 17 பேர் இறக்கிறார்கள். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்காக காத்திருக்கிறார்கள். எனவே, இந்த அறுவை சிகிச்சை மூலம் உலகளவில் நிலவும் மாற்று உறுப்பு தட்டுப்பாடுகள் குறைவதற்கான பாதையில் நாம் ஒருபடி முன்னெடுத்து வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அக்டோபர் 2021-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் பன்றியின் சிறுநீரகம், மூளை செயலிழந்த மனிதர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அவரது உடல் நிலையை 2 நாட்களுக்கு மேலாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் பன்றியின் இதயம் மனிதருக்கு எந்தத் தடையுமின்றி நல்ல முறையில் செயல்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.Read in source website

ஒமைக்ரான் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு என தனி தடுப்பூசி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் மார்ச்சில் அது பயன்பாட்டுக்கு வருமென்றும் ஃபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஃபைஸர் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா சிஎன்பிசி தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், "பல்வேறு அரசுகளும் வேகமாகப் பரவும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரத்யேக தடுப்பூசியைக் கேட்டுவருவதால் இந்தத் தடுப்பூசியை தயார் செய்து வருகிறோம். இந்த தடுப்பூசி மார்ச்சில் தயாராகிவிடும். ஆனால் இது நமக்குத் தேவைப்படுமா? இல்லை இது எப்படிப் பயன்படுத்தப்படும் எனத் தெரியாது" என்று அவர் கூறினார்.

மேலும், "இப்போது உள்ள தடுப்பூசிகளும், பூஸ்டர் டோஸ்களுமே கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பைத் தருகிறது. அதேவேளையில் ஒமைக்ரானுக்கு என தனியாக தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதன் மூலம் பிரேக்த்ரூ தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம்" என்றார்.

இதேபோல் மாடர்னா சிஇஓ ஸ்டெஃபானி பான்செல் அளித்தப் பேட்டி ஒன்றில் "ஒமைக்ரான் மட்டுமல்லாது இனி ஏதும் புது உருமாறிய வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசியைத் தயாரித்து வருகிறோம்.

அதனை இந்த ஆண்டிலேயே கொண்டு வருவோம். இருப்பினும் இப்போதைக்கு பூஸ்டர் டோஸ்கள் தான் சிறந்தது என உலக சுகாதாரத் தலைவர்களுக்கு வலியுறுத்தி வருகிறோம் " என்று கூறினார்.Read in source website

புதுடெல்லி: 2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்துள்ளது.

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாம் காலாண்டுக்கான காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

விவசாயம் சாராத துறைகளில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெரும் பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன.

உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்த ஒன்பது துறைகள் ஆகும்.

வேலைவாய்ப்பு நிலவரம் முன்னேறி வருவதுடன் ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களின் விகிதம் 32.1 ஆக இருக்கிறது. காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையின் முதல் சுற்றில் இது 29.3% ஆக இருந்தது.

2021 செப்டம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் ஒன்பது குறிப்பிட்ட துறைகளில் மொத்த வேலைவாய்ப்பு 3.1 கோடியாக இருந்தது. உற்பத்தி துறை முப்பத்தி ஒன்பது சதவீதத்திற்கு பங்களித்த நிலையில் கல்வித்துறை 22 சதவீதத்திற்கும், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம், பிபிஓ துறைகள் சுமார் 10 சதவீதத்திற்கும் பங்காற்றியுள்ளன.

வேலைவாய்ப்புகளின் தேவை மற்றும் விநியோக நிலவரம் குறித்த ஆய்வுகள் நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு தரவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்ப உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.Read in source website

இந்தியா எதிா்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை விலைவாசி உயா்வாக இருக்கக்கூடும். சா்வதேச அளவில் எல்லா பெரிய பொருளாதாரங்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பிரச்னையும் இதுதான்.

அரை நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு மீண்டும் விலைவாசி அதிகரிப்பு உலக அளவிலான பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. எந்தவொரு நாடும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதாரத் தளா்வில் இருந்து முழுமையாக மீண்டெழாத நிலையில், விலைவாசி உயா்வு பல்வேறு சமூக அரசியல் பிரச்னைகளுக்கு வித்திடக்கூடும்.

அதிகரித்து வரும் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள ‘பேங்க் ஆஃப் இங்கிலாந்து’ வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. அமெரிக்காவின் 6.8% விலைவாசி உயா்வு என்பது கடந்த 33 ஆண்டுகளில் மிக அதிகமானது. இந்தியாவிலும்கூட கடந்த நவம்பா் மாதம் காணப்பட்ட 14.23% என்பது கடந்த 12 ஆண்டுகளில் அதிக அளவு.

கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மக்கள் பாதிப்பை எதிா்கொள்ளாமல் இருக்க, வளா்ச்சி அடைந்த நாடுகள் பெரிய அளவில் நிதியுதவியும் மானியங்களும் வழங்கின. பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கிய பிறகும்கூட, மக்கள் மத்தியில் எதிா்பாா்த்த அளவிலான நுகா்வு உணா்வோ (டிமாண்ட்), தேவைக்கேற்ற பொருள்களின் வரவோ (சப்ளை) காணப்படவில்லை.

தேவைக்கேற்ப கச்சா பொருள்களும், உதிரிப் பொருள்களும் கிடைக்காத நிலையில் சரக்குக் கட்டண உயா்வாலும், உற்பத்தியாகும் பொருள்களின் விலை அதிகரித்ததில் வியப்பில்லை. மக்கள் மத்தியில் பொருள்களை வாங்கும் சக்தி அதிகரிக்காத நிலையில், நுகா்வு உணா்வு அதிகரிக்காததிலும் ஆச்சரியமில்லை. இவையெல்லாம்தான் பொருளாதார நிபுணா்களை மனம் கலங்க வைத்திருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை விலைவாசி உயா்வு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் குறிப்பாக சில்லறை விலையில் காணப்படும் விலைவாசி உயா்வால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் அரசியல் ரீதியாகவும், அது தாக்கத்தை ஏற்படுத்துவது புதிதொன்றுமல்ல. பல்வேறு தோ்தல்களில் உணவுப் பொருள்கள், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி உயா்வு ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய வரலாறும் ஏராளம் உண்டு.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் போக்குவரத்து செலவு அதிகரித்து விலைவாசி உயா்வு ஏற்படுவதைத் தவிா்க்க முடியாது. விலைவாசி உயா்வின் மிக முக்கியமான பாதிப்பு அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஏற்படுகிறது. உற்பத்திப் பொருள்களுக்கான சந்தையில் நுகா்வு உணா்வு இல்லாததால் தேக்கம் ஏற்படும்போது, உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டு பொருளாதாரத் தேக்கம் தவிா்க்க முடியாததாகிவிடும்.

பிரதமா் நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வெற்றி, முதல் ஆறு ஆண்டுகளில் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துவிடாமல் அதனைக் கட்டுக்குள் வைத்திருந்தது. கடந்த ஆண்டு முதல் அரசின் பிடி தளரத் தொடங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, விவசாயிகள் போராட்டமும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதும் உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்துக்கு வழிகோலக்கூடும்.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஆட்சியின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக இருந்தது விலைவாசி உயா்வுதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பல்வேறு உணவுப் பொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொடுத்து விவசாயிகளின் வாக்குகளை மன்மோகன் சிங் அரசு தக்கவைத்துக் கொண்டது. அதன் விளைவாக, உணவுப் பொருள்களின் விலைவாசி உயரும் என்று இந்திய ரிசா்வ் வங்கி எச்சரித்தபோது, பொருளாதார வளா்ச்சியால் மக்களின் வருமானம் அதிகரிப்பதால் விலைவாசி உயா்வு பாதிக்காது என்று அந்த அரசு கருதியது.

மன்மோகன் சிங் அரசு மட்டுமல்ல, 1970 முதலே ஆட்சியில் இருந்த அரசுகள், விவசாயிகளுக்கான மானியங்களை அதிகரித்து, குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தின. பொது விநியோக அமைப்புகளின் மூலம் மானிய விலையில் உணவுப் பொருள்களை வழங்கி சாமானிய மக்களை திருப்திப்படுத்திவிடலாம் என்பதுதான் அவா்களின் அரசியல் கணக்கு. ஓரளவுக்குத்தான் இந்த அணுகுமுறை வெற்றி அளிக்கும்.

உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும்போது அதனால் பொருளாதாரப் பாதுகாப்பின்மை அதிகரிப்பது வெளியில் தெரிவதில்லை. பொது விநியோக முறையில் வழங்கப்படும் அரிசியும் கோதுமையும் சராசரி குடும்பத்தின் உணவுக்கான ஒதுக்கீட்டில் ஒரு சிறிய அளவுதான். சமையல் எண்ணெய்யில் தொடங்கி காய்கறிகள் வரை அன்றாட உணவுக்கான ஏனைய பொருள்களின் விலைகள் அதிகரித்துவிடும்போது, வேளாண் பொருட்கள் அல்லாத மருத்துவம், கல்வி, உடைகள் உள்ளிட்ட ஏனைய செலவினங்களுக்கான கையிருப்பு குறைந்து விடுகிறது. அதனால் பொருளாதார உற்பத்திகளின் விற்பனை பாதிப்பதால், விவசாயமல்லாத பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்க நேரும்.

2016-இல் அமெரிக்க வேளாண்துறை தயாரித்த புள்ளிவிவரப்படி, இந்தியக் குடும்பங்களில் உணவுக்கான செலவு 30%. சீனாவில் 20%, அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் 10%. அதாவது, உணவுப் பொருள்களுக்கான செலவு குறையக் குறைய வேளாண் இதர பொருளாதாரத்தின் வளா்ச்சி அதிகரிக்கும்.

நரேந்திர மோடி அரசின் உடனடி கவனம், உணவுப் பொருள்களின் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவதாகத்தான் இருக்க வேண்டும்!Read in source website


இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டவர்களுக்கே ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கானோர் ரயில் டிக்கெட் கவுன்டர்களுக்கு வந்து டிக்கெட் எடுக்க முடியாமல், பேருந்து நிலையங்களை நோக்கி ஓடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நாளில், ஏராளமானோர் இந்த அறிவிப்பு குறித்த விவரம் தெரியாமல் வந்து டிக்கெட் எடுக்க முயன்ற போது, அவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் கோரப்பட்டது. சிலர் கைவசம் சான்றிதழ்களை வைத்திருந்தும், செல்லிடப்பேசியில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பித்தும் டிக்கெட் பெற்றனர்.

ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்களும், முதல் தவணை மட்டும் செலுத்தியவர்களும், கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் கைவசம் இல்லாதவர்களும் டிக்கெட் கவுன்டர்களில் நின்று கொண்டு செய்வதறியாது தவித்தனர்.

அது மட்டுமல்ல, இந்த புதிய கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் வழங்கும் சேவையும் முடக்கப்பட்டது. இதனால், டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. சிலர் டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் பயணிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்டிரல் ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் போன்ற பரபரப்பான ரயில் நிலையங்களில் எல்லாம் காலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுப்பதைக் காண முடிந்தது.

சில டிக்கெட் வழங்கும் மையங்களில், பயணிகளுக்கும், டிக்கெட் வழங்குவோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் எழுந்தன. இதனால், சான்றிதழ் வைத்துக் கொண்டு, டிக்கெட் எடுக்கக் காத்திருந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காலை முதல், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களையும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லை என்று கூறி ரயில்நிலையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கலாம் என்று பிறகு அறிவிக்கப்பட்டது. இதனால் சீசன் டிக்கெட் வைத்திருந்தவர்கள் தற்காலிகமாக நிம்மதி அடைந்தனர்.

தடுப்பூசி செலுத்தாத ரயில் பயணிகளிடம் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, இப்படி தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுவதால், அவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் நிலை ஏற்படும். அப்போது அவர்களிடமிருந்து அபராதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்பதால் ரயில்வே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதோ என்று சந்தேகிப்பதாக சில பயணிகள் தங்களது கருத்தை முன் வைத்தனர்.

தமிழகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி 56.6 சதவீதம் பேருக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்படியிருப்பின், இவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுவது என்பது நியாயமற்றது என்கிறார்கள் பயணிகள்.

எனது தாயை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எனது தாயாருக்கோ அடுத்த மாதம்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் அவருக்கு டிக்கெட் தர முடியாது என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்கிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த சேகர்.

முதலில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், ரயில்வேயின் இந்த அறிவிப்பினால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைவார்கள். அடுத்து, கரோனா இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாமல் காலம் தாழ்த்தியவர்களும், உடனடியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வது அதிகரிக்கும்.

ஆனால், சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். அப்படியிருப்பின், அவர்களுக்கான தவணைக் காலம் இன்னும் வராமல், இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு திடீரென ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்காமல் இருக்கும் போது, அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் டிக்கெட் மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் பேருந்து அல்லது ஆட்டோவில் பயணிக்கும் நிலை உருவாகும். இதனால், பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், கரோன பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, பேருந்தில் ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் பயணிகள், இவ்வாறு ரயிலில் பயணம் செய்ய முடியாமல் பேருந்துக்கு வரும் பயணிகளின் கூட்ட நெரிசலால் மேலும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கரோனா தடுப்பூசி முதல் தவணையை செலுத்திக் கொண்டவர்கள், அவர்களுக்கான தவணைக் காலம் வரும்போதுதான் அடுத்த தவணையை செலுத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில், அதுவரை நிச்சயமாக ரயிலில் பயணிக்க முடியாத நிலைதான் உருவாகும்.

இதனால், இதர போக்குவரத்துகளில் நெரிசல், கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயமே அதிகம். எனவே, கரோனா முதல் தவணை செலுத்தியவர்களுக்கு மட்டுமாவது டிக்கெட் வழங்கப்பட்டால், இதுவரை தடுப்பூசியே செலுத்தாதவர்கள், ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காக, முதல் தவணையை செலுத்திக் கொள்வார்கள். இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.

இரண்டாம் தவணைக் காலம் முடிவுபெற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு வேண்டுமானால் டிக்கெட் வழங்குவதை ரயில்வே நிறுத்திக் கொள்ளலாம். அப்படி செய்யும் போது அவர்கள் உடனடியாக இரண்டாவது தவணையைச் செலுத்த வேண்டியது ஏற்படும். இதனால் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்  என்று எதிர்பார்க்கலாம்.Read in source website

பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது ஏற்பட்ட பாதுகாப்புக் குளறுபடிகள் தேசிய அளவில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளன. பாஜக நிர்வாகிகள் பலரும் இது குறித்துத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தபடியே இருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலும்கூட சில தலைவர்களால் இது குறித்துக் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, சமூக ஊடகங்களில் இந்நிகழ்வு விவசாயிகள் போராட்டத்தின் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. ஜவாஹர்லால் நேரு காலத்திலிருந்தே பிரதமரின் பயணங்களின்போது கருப்புக் கொடிகள் காட்டப்படுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதும் தொடரத்தான் செய்கின்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அடையாள நிமித்தமானவையேயன்றி பிரதமரின் பயணத் தடத்தில் குறுக்கிடுவது என்பதாகப் பொருள்கொள்ளப்பட்டதில்லை.

பிரதமரின் பஞ்சாப் பயணத்தில், வான்வழிப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டு சாலை வழியாக அவர் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. உரிய அவகாசத்தில் அவரது பயணத் தடத்தில் இருந்த சிக்கல்களை மாநில அரசு களைந்திருக்க முடியும். மாநில அரசு வேண்டுமென்றே தனது கடமையிலிருந்து தவறியதா என்பது தற்போது உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள உயர்மட்டக் குழு விசாரணையில் தெரிந்துவிடும்.

பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. பாதுகாப்புக் குறைபாடுகள் மாநில அரசால் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவந்தால் அது மத்திய- மாநில அரசுகளின் உறவில் எத்தகைய விரிசலை உருவாக்கும், அரசமைப்புரீதியாக என்னென்ன நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதெல்லாம் சங்கடமான கேள்விகளாக நம் முன் நிற்கின்றன.

விவசாயிகளின் போராட்டத்தால் பிரதமரின் பயணத் திட்டம் கைவிடப்பட்டது குறித்து சமூக ஊடகங்களில் வெளிவரும் சில பதிவுகள், இந்தியக் குடிமக்கள் தங்கள் அரசமைப்பின் மீது கொண்டிருக்கும் மதிப்பையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியரசுத் தலைவர் தொடங்கி உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வரை அனைவருமே இந்திய அரசமைப்பு என்னும் இயந்திரத்தின் முக்கியப் பாகங்களாக இயங்குபவர்கள். அவர்களை நோக்கிக் கேள்வியெழுப்பும் கருத்துரிமையையும்கூட அரசமைப்பின் வாயிலாகத்தான் பெற்றிருக்கிறோம்.

குடிமக்களாகப் பெற்றிருக்கும் உரிமைகள் யாவும் அரசமைப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற கடமையையும் உள்ளடக்கியதே. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இடையில், நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் இடையில், சட்டமியற்றும் அவைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் இடையில், நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையில் என எப்போதுமே முரண்பாடுகள் எழுவதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் பின்பு ஒத்திசைந்து செல்வதுமாகத்தான் நமது அரசமைப்பு இயங்கிவருகிறது.

இதற்கான சாத்தியங்களை முன்னுணர்ந்தே எந்தவொரு அதிகாரமும் முழுமுற்றாக எவரிடத்திலும் ஒப்படைக்கப்படவில்லை. பிரதமர் தனக்கான அதிகாரத்தைப் பெற்றிருப்பது என்பது மக்களவையின் பெரும்பான்மையால்தான். மக்களவை என்பது பாஜக மட்டுமல்ல, எதிர்க்கட்சி, இன்ன பிற கட்சிகளையும் உள்ளடக்கியதுதான். அவர்கள் அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

பிரதமரின் முடிவுகள், அரசியல் நிலைப்பாடுகள், அவரது ஆட்சியில் இயற்றப்படும் சட்டங்கள் யாவும் விமர்சனங்களுக்கு உட்பட்டவையே. ஆனால், அவரின் பாதுகாப்போ தேசத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கக்கூடியது. அப்படியிருக்க, சொந்தத் தேசத்தில் நடுச்சாலையில் செய்வதறியாது பிரதமரின் அணிவகுப்பு நிற்பதும் அதன் பின்னணி தெரியாமலேயே சமூக ஊடகங்களில் வேடிக்கை செய்வதும் தேசத்தைப் பார்த்து உலக நாடுகளை சிரிக்கவும் வைக்கக்கூடியது!Read in source website

நவம்பரில் சென்னையில் பொழிந்த பெருமழையை வழக்கமான நிகழ்வுகளுள் ஒன்றாக நாம் கடந்து போக முடியாது. நவம்பர் 6 அன்று இரவு நகரில் 23 செ.மீ.மழை பதிவாகியது. 12-ம் தேதி வரை மழை தொடர்ந்தது. நகரம் மிதந்தது. தேங்கிய நீர் மெல்ல வெளியேறியது அல்லது வெளியேற்றப்பட்டது. வானம் வெறித்தது. இப்படியொரு மழை பொழிவதற்கு இன்னும் சில ஆண்டுகள் வேண்டிவரும். சிலர் அப்படிச் சொன்னார்கள்.

மேலும் அடுத்தடுத்த செய்திகள் வரிசையில் நின்றன. நகரவாசிகளின் கவனம் சற்றே பிசகியதும் தன் இருப்பைக் காட்ட கடந்த டிசம்பர் 30 அன்று நகர் முழுக்கக் கேட்கும்படியாகக் குரலெடுத்து அழுதது மழை. மாலை நாலு மணிக்கும் நாலேகாலுக்கும் இடைப்பட்ட 15 நிமிடங்களுக்குள் நுங்கம்பாக்கம் மழைமானியில் 20 செமீ மழை பதிவாகியது. இது டிசம்பர் மாதம் முழுவதும் சென்னையில் பெய்யக்கூடிய சராசரி மழை அளவைக் காட்டிலும் அதிகம். அன்றைய இரவுக்குள்ளாக அம்பத்தூர், ஆவடி, எம்.ஜி.ஆர் நகர், பூந்தமல்லி, எம்.ஆர்.சி நகர் முதலிய பல இடங்களில் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது.

மயிலாப்பூர் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேரத்தில் 24 செ.மீ.மழை பதிவாகியது. நகரத்தின் போக்குவரத்து தடுமாறிப்போனது. அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை, நூறடி சாலை, ராஜீவ் காந்தி சாலை, ஜி.எஸ்.டி சாலை என நகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் தேங்கியது வெள்ளம். வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. மாலையில் நகர்க் குருவிகள் தத்தம் வீடடைய மூன்று மணி நேரமும் அதற்கு அதிகமாகவும் ஆனது.

இந்த மழையை யாரும் எதிர்பார்க்கவில்லை. வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. மக்களிடையே பிரபலமான வெதர்மேன்களாலும் முன்னுணர முடியவில்லை. அவர்கள் அனைவரும் மழை கொட்டித் தீர்த்ததும் அதைப் புரிந்துகொள்ள முயன்றனர். மேக வெடிப்பு என்றனர் சிலர். பருவநிலை மாற்றம்தான் காரணம் என்றனர் சிலர்.

இது போன்ற திடீர்ப் பெருமழை கடந்த ஆண்டில் உலகின் பல நகரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 2021 ஜூலை 25 அன்று மாலை மூன்று மணிக்கும் ஐந்து மணிக்கும் இடையில் லண்டனில் கொட்டிய மழையினால் நகரின் பிரதான சாலைகளின் போக்குவரத்து நின்று போனது. அதே மாதம் சீனாவின் ஜெங்ஜாவ் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொட்டிய மழையின் அளவு 62 செமீ; அந்த மழை நாளில் ரயில் சுரங்கமொன்றில் சிக்கிய 12 பேரைச் சடலங்களாகத்தான் மீட்க முடிந்தது. அதே மாதம் ஜெர்மனியில் இரண்டு மணி நேரத்தில் கொட்டிய மழை ஜூலை மாதம் முழுவதும் அங்கு பெய்யக் கூடிய மழையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது; அதனால் 600 கி.மீ. ரயில் தடங்களும் 80 ரயில் நிலையங்களும் நீரில் மூழ்கின; 180 உயிர்கள் பலியாயின.

இதில் எந்தப் பெருமழையையும் வானிலை மையங்களால் கணிக்க முடியவில்லை. சூழலியர்கள் பருவநிலை மாற்றத்தின் கெடுவிளைவுகள் இவை என்கிறார்கள். உலகம் வேகமாக நகரமயமாகிவருகிறது. நகரங்கள் இடைவெளி இல்லாமல் வீடுகளாலும் வளாகங்களாலும் சாலைகளாலும் நிரப்பப்படுகின்றன. நகரில் நீரை வாங்கிச் செரிக்கும் மண்தரைகள் குறைவு. மழைநீரின் பெரும் பகுதியை வடிகால்கள்தான் கடத்தியாக வேண்டும். சூழலியல் பேராசிரியர் வெரோனிகா பிரவுன் பிபிசிக்கு அளித்த நேர்காணலில் லண்டனின் மழைநீர் வடிகால்களால் இந்தக் குறுகிய காலப் பெருமழையை எதிர்கொள்ள முடியவில்லை என்றார்.

அது லண்டன். சென்னை எங்கே நிற்கிறது? நமது பிரச்சினை லண்டனைப் போல் குறுகிய காலப் பெருமழையால் மட்டும் வந்ததல்ல. நவம்பர் மாதம் மழையைத் தொடர்ந்து நடந்த உரையாடல்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை விழுங்கி நிற்கும் ஆக்கிரமிப்புகளைப் பற்றியும் வடிகால்களைக் குப்பைக்கூளங்களால் அடைத்துவிடும் நகரவாசிகளின் பொறுப்பின்மையைப் பற்றியும் பலரும் பேசினார்கள். இவற்றைச் சரிசெய்தேயாக வேண்டும். அதே வேளையில் மழைநீர் வடிகால்களின் போதாமையைப் பற்றியும், அதன் வடிவமைப்பில் உள்ள குறைபாடுகளைப் பற்றியும் ஆழமான உரையாடல் நிகழவில்லை.

நவம்பர் மாத இறுதியில் சென்னை நகராட்சி மழைநீர் வடிகால்களின் வரைபடங்களை பொது வெளியில் வைத்தது. நகரின் பல பகுதிகளில் வடிகால்கள் இல்லை. இருக்கும் வடிகால்கள் நடைபாதைகளுக்குக் கீழ் செவ்வக வடிவில் அமைந்தவை. சென்னை நகரத்தின் நிலமட்டம் கடல் மட்டத்தைவிட சில அடிகள்தான் உயரமாக இருக்கிறது. பாரம்பரியமான செவ்வக வடிகால்களால் இந்த மழை நீரை வடித்துவிட முடியாது. அதற்குப் போதுமான வாட்டம் நகரத்துக்குள் இல்லை. மேலதிகமாக இந்த வடிகால்கள் மழைநீரின் கொள்ளளவுக்கு ஏற்ற ஆழத்தையும் அகலத்தையும் கொண்டிருக்கவில்லை. பல இடங்களில் அவை கால்வாயோடோ ஆற்றோடோ இணைக்கப்படவுமில்லை. சில இடங்களில் அவற்றின் வாட்டம் தவறாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சென்னை நகரின் இன்னொரு பிரச்சினை, காற்றழுத்த தாழ்வுநிலைக் காலங்களில், கடலில் அலைகள் உயரும். அப்போது ஆறு கொண்டு வரும் மழைநீரைக் கடல் உள்வாங்காது. என்ன செய்ய வேண்டும்? மழைநீர் வடிகால்களைச் சாலைகளின் நீர்வரத்துக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டும். செவ்வக வடிகால்களால் நீரைக் கடத்த முடியாத இடங்களில் ஆழ்குழாய்கள் தேவைப்படும். போதுமான வாட்டம் இல்லாத இடங்களில் நீர் இறைக்கும் இயந்திரங்கள் தேவைப்படலாம்.இந்த வடிகால்கள் பிரதானக் கால்வாய்களோடும், இந்தக் கால்வாய்கள் ஆற்றோடும் இணைக்கப்பட வேண்டும். முகத்துவாரத்தில் சுரங்கப் பாதைகள் மூலமாகக் கடலில் சேர்ப்பிக்க வேண்டி வரலாம். ஆகவே சென்னை நகர் முழுமைக்குமான ஒரு வடிகால் பெருந்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதில் இப்போதைய பிரச்சினையான குறுகிய காலத்துப் பெருமழையையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப் பாரம்பரியச் செவ்வக வடிகால்களை மேம்படுத்துவதில்தான் நகராட்சியின் காலமும் பொருளும் வீணாகச் செலவாகியிருக்கின்றன என்பதை இயற்கை நமக்கு மீண்டும் மீண்டும் சொல்கிறது. சமீபத்தில் வெளியான அறிவிப்பொன்று உலக வங்கியின் கடனுதவியோடு 45 கிமீ நீளத்துக்கான வடிகால்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. இது நகர் முழுமைக்குமான வடிகால் பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே பயன் தரும்.

இந்தியாவில் உருவான முதல் நவீன நகரம் சென்னை. ஒரு நவீன மழைநீர் வடிகால் திட்டத்துக்கு இந்த நகரம் அருகதையானது. அதைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

மு.இராமனாதன்,

எழுத்தாளர், பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.comRead in source website

கரோனா வைரஸை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். சுவாசத்தில் தொற்றும் வைரஸ்கள் எளிதில் கடத்தப்படக்கூடியவை, அறிகுறிகளற்ற தொற்றை ஏற்படுத்தக்கூடியவை, ஆர்.என்.ஏ. மரபணு வரிசையைக் கொண்டவை, புதிய மக்கள் கூட்டத்திடையே தொற்றக்கூடிவை என்பதை வரலாறு நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது. அது ஏற்படுத்தும் ஆபத்து நிதர்சனமானது, அதேநேரம் முன்கணிக்கக்கூடியதுகூட. இப்படிப்பட்ட வைரஸ், பரவலான பல்வேறு நிலப்பரப்புகளில் பரவக்கூடியது, தொற்று அதிகரிக்கும், குறையும், குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு புதிய வேற்றுருவங்கள் உருவாகும் என்பது போன்றவையும் அதற்கு இணையாக எதிர்பார்க்கக்கூடியவையே.

இருந்தபோதும் 2020, 2021-ம் ஆண்டுகளில் இந்தியாவைவிட சிறந்த சுகாதாரக் கட்டமைப்பைக் கொண்ட நாடுகளே திணறியதைப் பார்த்தோம். அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவு இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் எப்படி இருக்கும் என்பது குறித்த திட்டவட்டமாக மதிப்பீடு செய்வது சாத்தியம் என்று கூற முடியாது. அதே நேரம், நமது ஒட்டுமொத்தத் தயாரிப்பு தேவையான அளவுக்கு இல்லை என்பதே உண்மை. தயாரிப்புநிலை என்பது காப்பீட்டுப் பத்திரம் போன்றது.

அதற்கு பொது சுகாதாரம், மருத்துவம், நெறிமுறைகள், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்து கட்டமைப்பு, செயல்முறை, அமைப்பு, துறைசார்ந்தவர்கள், திட்டங்கள் போன்றவை வலுவான அளவில் தேவை. அத்துடன் தொழில் துறையுடன் ஆழமான தொடர்புகள், அரசின் ஆதரவு, வசதிகள் போன்றவையும் அவசியம். தயாரிப்புநிலை இருந்தால் மட்டுமே நாம் உடனடியாக எதிர்வினையாற்ற முடியும். ஆனால், தயாரிப்புநிலை இல்லாதபோது தரவு, கொள்கை, ஆதாரங்கள் அடிப்படையில் தொற்றுப் பரவலையும் அதன் தாக்கத்தையும், கணிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் நாடுகள் முயல்கின்றன.

தடுப்பூசி சமத்துவமின்மை

2021-ம் ஆண்டின் மிகப் பெரிய வெற்றியாகக் குறிப்பிடப்பட வேண்டியது தடுப்பூசிகளையே. புதிய வேற்றுருவங்கள் உருவாகிப் பரவியபோதும்கூட, தீவிர நோய் நிலையையும் இறப்பையும் தடுப்பூசிகள் தடுத்தன என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தபோதும் எதிர்பார்த்தபடியே தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு என்பது பெருமளவில் சரிந்தது. பணக்கார நாடுகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்துதல், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், ஆபத்து குறைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் போன்றவற்றைத் தொடங்கியபோது, தடுப்பூசி சமத்துவமின்மை மிக மோசமான நிலைக்குச் சென்றது.

ஏனென்றால், சில ஏழை நாடுகள் தங்கள் நாட்டில் எளிதில் பாதிக்கப்பட சாத்தியமுள்ளவர்களுக்குக்கூட தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் இருந்தன. தென்னாப்பிரிக்காவில் தடுப்பூசி செலுத்துதல் போதுமான அளவு இல்லாததற்கும் ஒமைக்ரான் வேற்றுருவம் பரவியதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரம் உலகின் பெருமளவு மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதென்பது, தொற்றுப் பரவலுக்கான ஆபத்தையும், வைரஸ் புதிய வேற்றுருவம் எடுப்பதற்கான ஆபத்தையும் சேர்த்தே அதிகரிக்கிறது.

சரி, 2022-ல் தடுப்பூசி செலுத்துதலைத் தாண்டி வேறென்னவெல்லாம் முக்கியத்துவம் பெற வேண்டும்? அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளைப் பகிர்ந்துகொள்வது மட்டுமில்லை, தொற்றுநோய் குறித்த தரவு, திறன்கள், ஆதாரங்கள், கொள்கைகள் போன்றவற்றையும் பெருமளவு பகிர்ந்துகொண்டாக வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும். ஒமைக்ரான் பரவத் தொடங்குவது குறித்து உலகத்துக்குத் தென்னாப்பிரிக்கா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது. கண்காணிப்பு அமைப்புகள், தரவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான விருப்பம் போன்றவை தென்னாப்பிரிக்காவிடம் இல்லாமல் இருந்திருந்தால், முக்கியமான தொடக்க வாரங்களில் ஒமைக்ரான் பரவல் குறித்து உலகம் எச்சரிக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டிருக்கும்.

பாடங்களை மறக்கக் கூடாது

பெருந்தொற்றுகளைப் பொறுத்தவரை கண்காணிப்பு, தரவுகள் போன்றவை மிகமிக முக்கியமானவை. இல்லையென்றால் கடந்த காலத்தில் செய்த தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப்போம் அல்லது மற்ற பகுதிகளிலிருந்து கிடைக்கும் எச்சரிக்கை சமிக்ஞைகளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்போம் அல்லது வெளிப்படையாகப் பரிசோதனைகளை-தரவுகளைச் சேகரிக்கும் அமைப்புகளைப் பராமரிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் தயாராக நாம் இருந்தாக வேண்டும். மத்திய அரசு அமைத்துள்ள INSACOG, CoWIN போன்றவை இது போன்ற தரவு சேகரிப்புச் செயல்பாடுகள் சாத்தியம்தான் என்பதற்கான உதாரணமாக உள்ளன. ஆனால், அதே நேரம் INSACOG, CoWIN தளங்களில் உள்ள தரவுகளும் மற்ற தரவுகளும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கவில்லை. பொதுச் சுகாதார அமைப்பைத் தயாரிப்பு நிலையில் வைத்திருக்கவும், விரைந்து எதிர்வினையாற்றவும் இந்த ஒன்றிணைப்பு மிக முக்கியம்.

சரி தடுப்பூசிகளும் ஊக்கத் தடுப்பூசியும் காலாகாலத்துக்கும் தேவைப்படுமா? இன்றைய நிலையில், கரோனா பெருந்தொற்று முடிவுறாத ஒரு சுழற்சி போலவே தோற்றமளிக்கிறது. அதேநேரம், முதலில் நடைமுறைக்கு வந்த தடுப்பூசிகள், பின்னால் வந்த இரண்டு தடுப்பூசிகளைவிடச் சிறந்தவையா; இரண்டு தடுப்பூசித் தவணைகளுக்கு இடையிலான இடைவெளி; சிறந்த பலனைப் பெறுவதற்கு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்தலாமா என்பது போன்றவை குறித்து எந்த ஆராய்ச்சியும் நம்மிடையே நடைபெறவேயில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. சற்று நிதானமடைந்து கரோனா பரவலுக்கு எதிரான நீண்ட கால மேலாண்மைத் திட்டங்களை வகுக்கத் தொடங்கும்போது, மேற்கண்டது போன்ற கேள்விகள் சார்ந்து ஆய்வுகள் நடைபெற்று விடை கிடைத்தால்தான், தடுப்பூசிகளைத் தொடர்வது பற்றி மட்டுமில்லாமல் நடைமுறையில் உள்ள மருந்துகள், எதிர்கால மருந்துகள், நோய் கண்டறிதல் குறித்த அணுகுமுறைகள் சார்ந்தும் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியும்.

கரோனா பெருந்தொற்றுப் புயலைச் சமாளிப்பதற்கான தீர்வுகளை அறிவியல் நமக்குத் தந்துவிட்டது. அதேநேரம் அந்தத் தீர்வு உடனடியாக உலகம் முழுவதும் பரவலாவதை நாடுகளின் தேசிய ஆர்வங்கள் தடுத்துவிட்டன. 2022-ல் கரோனா பெருந்தொற்று நிலைமை மேம்படும். அதேநேரம் மக்களைப் பாதுகாப்பது, உரிய தகவல்/அறிவுரைகளைப் பரவலாக்கி சமூக நம்பத்தன்மையை மேம்படுத்துவது, இக்கட்டான காலத்தில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான ஆதாரங்களை உருவாக்குவது, அறிவியல்-தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது, உலகக் கூட்டுணர்வை மேம்படுத்துவது என கரோனா பெருந்தொற்று கற்றுக்கொடுத்த வலிமிகுந்த பாடங்களை நாம் மறந்துவிடவே கூடாது.

- ககன்தீப் காங்,

வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர், நோய்த்தொற்றுப் பரவலியல் நிபுணர்,

தொடர்புக்கு: gkang@cmcvellore.ac.in;

தமிழில்: ஆதி வள்ளியப்பன்Read in source website