DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 06-01-2022

திருச்சி: கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் திருச்சியில் கிராமந்தோறும் "காவல் சிறுவர் மன்றம்" ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று காவல்துறை மத்திய மண்டலத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான 61-வது குழு விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கின. காவல் துறையின் மத்திய மண்டலத் தலைவர் வே.பாலகிருஷ்ணன் போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

”ஜன.9-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில் காவல் துறையின் ஆயுதப் படை, கமாண்டோ படை, மத்திய, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்னை ஆகிய 7 மண்டலங்களைச் சேர்ந்த காவல் துறை விளையாட்டு வீரர்கள்- வீராங்கனைகள் சுமார் 500 பேர் பங்கேற்றுள்ளனர். கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி உட்பட 9 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் போட்டிகள் கடந்த ஆண்டு கரோனா பரவலால் நடத்தப்படாத நிலையில், நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படுகிறது.

மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொலைக் குற்றங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், 2020-ல் 27 ரவுடிகள் கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், 2021-ல் 18 ரவுடிகள் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. நிகழாண்டில் ஒரு கொலையும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காவல் துறையின் குறிக்கோள்.

அதேபோல், கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகைப் பொருட்களுக்கு எதிராக முழு வீச்சில் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதிலும், முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் அதிக அளவு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்யதுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விரைவில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

சில கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்களும் ஈடுபடுகின்றனர். பழைய குற்றவாளிகள் அவர்களைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இருப்பினும், கொலைக் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கொலைக் குற்றச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் கிராமந்தோறும் "காவல் சிறுவர் மன்றம்" ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. படிக்கும் நேரத்துக்குப் பிறகு எஞ்சிய நேரங்களில் அவர்களைப் புத்தக வாசிப்பு, விளையாட்டு போன்ற நற்செயல்களில் ஈடுபடுத்தவுள்ளோம்.

காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தலின்படி, பிரச்சினைக்குரிய இடங்கள் மற்றும் பிரச்சினை நேரிடக்கூடிய நேரங்களின்போது காவல் துறையினர் ஆயுதங்களை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு மக்கள் ஏற்கெனவே பழகியுள்ளனர். எனவே, அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் காவல்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.Read in source website

சென்னை: தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை முதல் கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. ஆளுநர் சிறப்புரையுடன் நேற்று தொடங்கப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக, விசிக கட்சிகள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (வியாழக்கிழமை) சட்டப் பேரவையில் நடக்கும் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கேள்வி நேரத்தில் முதலாவதாக,

1. பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி முதல் கேள்வி கேட்டார். விமான நிலையத்திலிருந்து - வண்டலூர்வரை மெட்ரோ சேவை நீட்டிப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கான திட்டம் ஆய்வில் உள்ளது என்று பதிலளித்தார்.

2. ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என அதிமுக எம்எல்ஏ, என்.சி. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க தற்போது அவசியம் இல்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

3. மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் குறித்து அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கேள்வி எழுப்பினார்.

அதற்கு, மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட விரிவாக்கம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

4. ஒசூரைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

ஓசூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் பதிலளித்தார்.

5. கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்கப்படுமா? என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.

இதற்கு தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட இடங்களில் சிப்காட் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தென்னரசு விளக்கம் அளித்தார்.Read in source website

தூத்துக்குடி: இந்தியாவில் முதலாவதாக தூத்துக்குடியில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில், 1,150 ஏக்கர் பரப்பளவில் 'சர்வதேச பர்னிச்சர் பூங்கா' அமைக்கப்படுகிறது. இந்தப் பூங்கா மூலம் ரூ.4,500கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.

தென் தமிழகத்தில் வளர்ந்து வரும் தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்குகிறது. இங்கு துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் என போக்குவரத்து வசதிகள் நிறைந்திருப்பதால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.

பேரவையில் முதல்வர் அறிவிப்பு

'தூத்துக்குடி சர்வதேச பர்னிச்சர் பார்க்’ திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர்பரப்பளவில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

பர்னிச்சர் தொழிலுக்கு என நாட்டிலேயே முதல் சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்தப் பூங்கா அமைகிறது. மர அரவை ஆலை, பர்னிச்சர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 100 நிறுவனங்கள் வரை இந்தப் பூங்காவில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பர்னிச்சர் உற்பத்தி தொடங்கி பேக்கிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரையிலான அனைத்து நிறுவனங்களும் இந்தப் பூங்காவில் இடம் பெறுகின்றன.

3.5 லட்சம் பேருக்கு வேலை

பர்னிச்சர் தொழில் தொடர்பாக ஆண்டுக்கு 5,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் கூடம், பர்னிச்சர்களின் தரத்தை பரிசோதிக்கும் ஆய்வுக்கூடம், கூட்ட அரங்கம், வீடியோ கான்பரன்சிங் வசதி, தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் போன்ற அனைத்து வசதிகளும் இதில் இடம் பெறும். இந்தப் பூங்கா மூலம் சுமார் ரூ.4,500 கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக சிப்காட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரத்தடிகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் நாட்டில் 3-வது இடத்தில் உள்ளது.

இவற்றைக் கொண்டு இங்கேயே சர்வதேச தரத்தில் பர்னிச்சர்கள் தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தேனி மாவட்டங்களில் கிடைக்கும் ரப்பர் மரத்தடிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள், திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் உள்ள மலை வேம்பு, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்கள் போன்ற மரங்களைப் பயன்படுத்தும் வகையிலும் இந்த பர்னிச்சர் பூங்கா அமைக்கப்படுகிறது.

முதல்வர் அடிக்கல்

நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் போன்ற பணிகள் முடிவடைந்துவிட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 11-ம் தேதி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

சிப்காட் பகுதியில் 1,150 ஏக்கர் நிலமும் தயார் நிலையில் உள்ளது. அதில் 500 ஏக்கர் நிலம் சுத்தப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அடிக்கல் நாட்டியதும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு சர்வதேச பர்னிச்சர் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.Read in source website

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை 3.68 கோடி பதிவு செய்துள்ளனா். நடப்பு நிதியாண்டில் மட்டும் 65 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரா்கள் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிதியாண்டில் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட 6 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் சந்தாதாரா்கள் இணைந்துள்ளனா்.

ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவா்களில் ஆண்கள் 56 சதவீதம், பெண்கள் 44 சதவீதம். இந்த ஓய்வூதிய நிா்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு சுமாா் ரூ. 20,000 கோடி ஆகும்.

இந்திய அரசின் முதன்மையான சமூகப் பாதுகாப்புத் திட்டமாக அடல் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. குறிப்பாக, அமைப்புசாராத் துறைகளில் உள்ள குடிமக்களுக்கு வயதான காலத்தில் வருமானப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியால் 2015, மே 9-ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை நிா்வகிக்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆா்டிஏ) தலைவா் சுப்ரதீம் பந்தோபாத்யாய் கூறுகையில், ‘சமூகத்தில் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய பிரிவினரை ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வந்தது இந்தத் திட்டத்தின் சாதனை. பொது மற்றும் தனியாா் வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கட்டண வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் துறை மற்றும் மாநில அளவில் அளிக்கப்படும் ஆதரவு மற்றும் அயராத முயற்சியால் மட்டுமே சாத்தியமானது’ என்றாா்.Read in source website

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆலோசித்தாா்.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சா் ரெட்னோ லேஸ்டாரி பிரியன்சாரி மாா்சுடியுடன் மியான்மா் மற்றும் ஆப்கன் விவகாரம் குறித்து கருத்து ப் பரிமாற்றம் செய்ததாகவும், ஜி-20 மாநாட்டில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலேசித்ததாகவும் ட்விட்டரில் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

இதேபோல் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மேரிஸ் பேனிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், 2022-ஆம் ஆண்டு இருநாட்டு நல்லுறவும் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் எனவும் ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா சாஹித், பூடான் வெளியுறவு அமைச்சா் தாண்டி டோா்ஜி ஆகியோருடனும் தொலைபேசியில் பேசியதாக ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.Read in source website

மெல்போர்ன்: டென்னிஸ் நட்சத்திரமும் 9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவாக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. இதனால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

விசா ரத்து செய்யப்பட்டதால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். இது குறித்து ஜோகோவிச்சின் தந்தை ட்விட்டரில், "நமது மகன். நமது தேசத்தின் பெருமித அடையாளம் திரும்புகிறார். நாம் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ட்வீட் தான் காரணமா? முன்னதாக நோவா ஜோகோவிச் தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தடுப்பூசி விவகாரத்தில் தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய அரசு இதை எதையும் பரிசீலிக்கவில்லை. தடுப்பூசி மருத்துவச் சான்றிதழ் இல்லாததால் 9 முறை ஆஸி., கிராண்ட்ஸ்லாம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்தது. இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ விலக்கை ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர் குழுவின் சிறப்புப் பிரிவு பரிசீலித்து வழங்க வேண்டும். இதற்காக ஜோகோவிச் தரப்பு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், "சட்டம் அனைவருக்கும் சமமானதே. சட்டத்திற்கு மேலானோர் யாருமில்லை. எல்லைப் பாதுகாப்பில் சமரசமே இல்லை" என்று கூறினார்.

அதேபோல், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கேரன் ஆண்ட்ரூஸும், எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையாக விசா ரத்து செய்யப்பட்டதற்காக நாங்கள் வருந்தத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

முன்னதாக விசா ரத்து தொடர்பாக ஆஸ்திரேலி எல்லைப் பாதுகாப்புப் படை விடுத்த அறிக்கையில், ஆஸ்திரேலிய அரசு கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கோரிய மருத்துவச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க நோவாக் ஜோகோவிச் தவறிவிட்டார். அதனாலேயே அவரது விசா ரத்து செய்யப்பட்டது என்று கூறியுள்ளது.

செர்பியா கண்டனம்: என்னதான் காரணாம் கூறப்பட்டாலும் கூட தங்கள் நாட்டின் டென்னிஸ் நட்சத்திரம் அவமதிக்கப்பட்டுவிட்டதாக செர்பியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வூஸுக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் ஜோகோவிச்சிடம் தொலைபேசியில் பேசினேன். செர்பியா மக்கள் அனைவரும் துணை நிற்போம் என்று கூறினேன். விசா விவகாரத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்ட பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதியளித்தேன். சர்வதேச பொதுச் சட்டத்துக்கு உட்பட்டு ஜோகோவிச்சுக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு நீதி கோரப்படும் என்று பதிவிட்டுள்ளார்.Read in source website

மவுண்ட் மவுங்கனுயி: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்ததில் வெற்றி பெற்று வரலாறு படைத்தது வங்கதேச அணி.

மவுண்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து 328 ரன்களும், வங்கதேசம் 458 ரன்களும் குவித்தன. 130 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 73.4 ஓவர்களில் 169 ரன்களுக்கு சுருண்டது.

40 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. நியூஸிலாந்துக்கு எதிராக17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள வங்கதேச அணி தற்போதுதான் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த நியூஸிலாந்து அணியின் வெற்றி வேட்டைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.Read in source website

லண்டன்: அண்டார்டிகாவில் உள்ள பனி படர்ந்த தென்துருவத்தை அடைந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனை படைத்துள்ளார் கேப்டன் ஹர்ப்ரீத் சந்தி.

பிரிட்டனில் பிறந்தவர் ஹர்ப்ரீத் சந்தி (32). இவரது பெற்றோர் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். உடற்பயிற்சி மருத்துவரான இவர், பிரிட்டன் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நவம்பர் மாதம் அண்டார்டிகாவின் தென் துருவத்தை நோக்கி சாகச பயணத்தைத் தொடங்கினார். தனியாகவே 1,127 கிலோ மீட்டர் பயணித்த அவர், கடந்த 3-ம் தேதி தென் துருவத்தை அடைந்தார். மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் மற்றும் மணிக்கு 60 மீட்டர் வேகத்தில் வீசும் காற்று ஆகியவற்றை சமாளித்து இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதன் மூலம் தென் துருவத்தை அடைந்த முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

தனது 40 நாட்கள் சாகச பயணம் குறித்து ஹர்ப்ரீத் சந்திதனது வலைப்பூவில் (பிளாக்)கூறும்போது, “பனிப்பிரதேசத்தைப் பற்றி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு எதுவுமே தெரியாது. இப்போது இங்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் பயணம் மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அனைவரும் தங்கள் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என ஊக்குவிக்க விரும்புகிறேன். அனைவரும் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீங்கள் விரும்பும் எந்த செயலையும் செய்யும் திறன் உங்களிடம் உள்ளது. கண்ணாடி திரையை உடைப்பது மட்டுமல்லாமல் அதை தூள் தூளாக நொறுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.Read in source website

புதுடெல்லி: இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. அதேசமயம் விற்பனை அதிகரித்துள்ளது. கரோனா பரவல் புதிய அலை குறித்த அச்சம் காரணமாக ஜனவரிமாதத்தில் வளர்ச்சி மேலும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் சேவைத்துறை வர்த்தக நடவடிக்கை குறியீட்டெண் நவம்பர் மாதத்தில் 58.1 புள்ளியாக இருந்தது. இது டிசம்பர் மாதத்தில் 55.5 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் சேவைத் துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் நுகர்வோர் மேலாண் குறியீட்டெண் (பிஎம்ஐ) 50 புள்ளிகளுக்கும் கீழ் இருந்தது.

இருப்பினும் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி வளர்ச்சி விகிதம் ஸ்திரமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய வைரஸ் பரவல் காரணமாக உள்நாட்டில் சேவைத்துறை சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படும். அதேபோல வெளிநாட்டு பயணிகள் வரத்தும் குறையலாம். இதனால் சுற்றுலா சார்ந்த சேவைத்துறை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல டிசம்பரில் புதியவேலை வாய்ப்புகள் சேவைத்துறையில் குறைந்துள்ளன. தற்போதைய சூழலில் இருக்கும் பணியாளர்களை வைத்து நிலைமையை சமாளிக்க பெரும்பாலான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால், புதிய வேலை வாய்ப்புக்கான சூழல் குறைந்துள்ளது.

- பிடிஐRead in source website

 மத்திய வேளாண் அமைச்சகம் புத்தாண்டில் வரவேற்புக்குரிய முடிவை எடுத்திருக்கிறது. திறந்த வெளியில் பாதுகாக்கப்படும் அரசு கொள்முதல் செய்த தானியங்களை, மார்ச் மாதத்திற்குள் அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் பாதுகாப்பது என்பதுதான் அந்த முடிவு.
 அரசின் தானியக் கொள்முதல்கள் முழுவதையும் சேமித்து வைக்கும் அளவிலான தானியக் கிடங்குகள் இந்திய உணவு தானியக் கழகத்திடம் இல்லை. அதனால், அவை தற்போது பெரும்பாலும் திறந்த வெளியில்தான் பாதுகாக்கப்படுகின்றன.
 உலகிலுள்ள வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் இந்தியா அளவிலான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் தானியக் கொள்முதல்கள் நடப்பதில்லை. பல்வேறு பருவங்களில் வெவ்வேறு தானியங்கள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. உணவு பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், விவ
 சாயிகளின் நலனையும் கருதி மேற்கொள்ளப்படும் தானியக் கொள்முதல் மூலம்தான் பொது விநியோக முறையில் அடித்தட்டு மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறோம்.
 மிக அதிக அளவில் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கோதுமையும், அரிசியும் கொள்முதல் செய்யப்படுகின்றன. போதுமான அளவு கட்டடங்கள் இல்லாத நிலையில் அவை திறந்தவெளியில் நெகிழி விரிப்பான்களாலும், தார்ப்பாய்களாலும் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவை அறிவியல் முறையிலான பாதுகாப்பாக இல்லாததால், மிகப் பெரிய அளவில் தானியங்கள் ஆண்டுதோறும் வீணாகின்றன.
 சாகுபடிக்குச் சாகுபடி உணவு உற்பத்தி அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில்தான், உலகிலேயே மிக அதிகமாக உணவுக்கான தேவையுள்ள மக்கள் காணப்படுகிறார்கள். அந்த நிலையில், யாருக்கும் பயன்படாமல் தானியங்கள் வீணாகின்றன.
 சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்தியாவின் சார்பில் உரையாற்றிய அதிகாரி ஒருவர், "எங்கள் உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவை எட்டியிருக்கிறது' என்று தெரிவித்தார். அதற்குப் பின்னால் பேசிய பேச்சாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி இது: "இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் நிலையில் லட்சக்கணக்கானோர் இன்னும்கூட இந்தியத் தெருக்களில் பசியுடன் திரிகிறார்களே, அது ஏன்?'. இந்தக் கேள்வி எழாமல் இருக்கும் நிலையை நாம் இன்னும் உருவாக்கவில்லை.
 இந்திய உணவு தானியக் கழகத்தில் ஏறத்தாழ 8.8 கோடி டன் அளவிலான தானியங்கள் கையிருப்பில் உள்ளன. அதில் சுமார் மூன்று கோடி டன் கோதுமையும், ஐந்து கோடி டன் அரிசியும் அடங்கும். அரசின் கையிருப்புத் தேவையைவிட மூன்று மடங்கு அதிக அளவிலான உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்திய உணவு தானியக் கழகத்தால் பாதுகாக்கப்படுகின்றன. திறந்தவெளி கிடங்குகளில் தேவைக்கு அதிகமான தானியங்கள் தேங்கிக் கிடந்தபோது, பொது முடக்கக் காலத்தில் மக்களுக்கு வழங்கியதால் அவை சேதமடைவதைக் குறைக்க முடிந்தது.
 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் 85 லட்சம் பேருக்கு பல்வேறு மாநிலங்களில் பசியாற வழிகோலுகின்றன என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி என்கிறது மற்றொரு புள்ளிவிவரம். சர்வதேச பசி குறியீட்டில் 117 நாடுகளில் இந்தியா கடைசி 20 நாடுகளில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது.
 இந்திய உணவு தானியக் கழகம் கொள்முதல் செய்து தனது இடங்களில் திறந்தவெளியிலும், கட்டடங்களிலும் பாதுகாத்து வைத்திருந்த தானியங்களில் 1,453 டன் ஒரு மாதத்தில் வீணாகியிருப்பதாக மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி டன் உணவு தானியங்களில் 1,453 டன் என்பது குறைந்த அளவாகத் தெரியலாம். அது ஒரு மாதத்திற்கான கணக்கு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 கட்டடக் கிடங்குகளில் மூட்டைகளிலும், அறைகளிலும் பாதுகாக்கப்படும் உணவு தானியங்கள், அவ்வப்போது புகைபோடப்பட்டு பூச்சிகளுக்கு இலக்காகாமலும், அழுகி நாசமாகாமலும் பாதுகாக்கப்படுகின்றன. திறந்தவெளியில் பாதுகாக்கப்படும் கொள்முதல் செய்த உணவு தானியங்கள்தான் பெரும்பாலானவை. அவை என்னதான் நெகிழி விரிப்பான்களாலும், தார்ப்பாய்களாலும் போர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட்டாலும்கூட, எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்கும் உணவாவதுடன், மழைக்காலங்களில் நனைந்து வீணாகும் அளவும் மிக அதிகம்.
 அதிகார வர்க்கம் அரசுக்குத் தரும் புள்ளிவிவரங்கள் உண்மையான சேதத்தின் ஒரு பகுதியாக மட்டும்தான் இருக்கக்கூடும். அதிகாரிகளின் துணையோடு கிடங்குகளில் இருந்து திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்படும் உணவு தானியங்கள் குறித்த எந்தவித விவரமும் பொதுவெளிக்கு வருவதில்லை.
 இந்தியாவிலேயே மிக அதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தியாகும் பஞ்சாபில் 19.6 லட்சம் டன், ஹரியாணாவில் 9.4 லட்சம் டன் திறந்தவெளியில்தான் பாதுகாக்கப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்ப முறையில் உணவு தானியங்களைப் பாதுகாக்கும் வழிமுறையை 20 ஆண்டுகளுக்கு முன்பே சீனா செயல்படுத்திவிட்டது.
 140 கோடி மக்களின் உணவுத் தேவையை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அனைவரின் உணவுத் தேவையை எதிர்கொள்வதுடன், தேவைக்கு அதிகமானதை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருந்தும், வியர்வை சிந்தி உருவாக்கிய தானியங்களை வீணாக்குவது எந்த விதத்திலும் நியாயமில்லை. இப்போதாவது விழித்துக்கொண்டோமே...
 Read in source website

தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 கோயில்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கோயில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும் தயாராகிவருவதாக அவர் கூறியுள்ளார்.

தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் 3 நிமிடங்களாக அமையும் எனத் தெரிகிறது. பழமைவாய்ந்த கோயில்களின் சிறப்புகளை 3 நிமிடக் காணொளிக்குள் அடக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கோயில்களின் தலபுராணங்கள், நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பாடல்கள், திருவிழாக்கள் என்று சமயம் சார்ந்த தகவல்கள் ஒருபுறமிருக்க கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை என்று காட்சிபூர்வமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய கலைச் சிறப்புகள் ஏராளம் இருக்கின்றன.

தமிழ்நாட்டுக் கோயில்களைப் பற்றி அறநிலையத் துறை சார்பில் ஆவணப்படங்களைத் தயாரிக்கிற நேரத்தில், ஏற்கெனவே ஃபிலிம் டிவிஷன், தூர்தர்ஷன் போன்ற அரசு சார்ந்த நிறுவனங்களின் வாயிலாக எடுக்கப்பட்ட ஆவணப்படங்களையும் திரட்டி, அவற்றையும் உள்ளடக்கிக்கொள்வதற்கு முயல வேண்டும். அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘தி சோழா ஹெரிட்டேஜ்’, பி.டி.கர்கா இயக்கிய ‘மாமல்லபுரம்’ என்று இவ்வகையில் மிக நீண்ட பட்டியல் உள்ளது. இது போன்ற படங்களை உருவாக்குவதற்குக் கலையுணர்வு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றுடன் ஆராய்ச்சிப் பின்னணியும் அவசியம் தேவை.

ஆவணப்படுத்துதல் என்பது புகைப்படங்களையும் உள்ளடக்கியது. புதுச்சேரியிலிருந்து செயல்பட்டுவரும் பிரெஞ்சு நிறுவனம், 1956-ல் தொடங்கி இதுவரையில் இந்தியா முழுவதும் உள்ள கோயில்களின் கட்டிடங்கள், சிலைகள், அணிகலன்கள் தொடர்பாக ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை ஆவணப்படுத்தி ஆய்வுசெய்துவருகிறது.

அவற்றில் பெரும்பாலானவை, தென்னகக் கோயில்களைப் பற்றியவை. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கோயில் கட்டிடங்களில் பழுது ஏற்பட்டாலும், காணாமல் போன சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தாலும் இதுபோன்ற நிறுவனங்களின் உதவிகள் தவிர்க்கவியலாதவை. எனவே, கோயில்கள் சார்ந்த ஆவணப்படுத்தும் பணிகள் வழக்கமான அரசு பொது ஏல ஒப்பந்தங்களைப் போல அல்லாமல், ஆய்வு அனுபவங்களைக் கொண்ட, லாப நோக்கமற்ற நிறுவனங்களின் வழி மேற்கொள்ளப்பட வேண்டியதும் அவசியம்.

அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்படவிருக்கும் கோயில் வரலாறுகளிலும் தனிக்கவனம் செலுத்த வேண்டிய தேவை உண்டு. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாவட்டவாரியாக வெளியிடப்பட்ட கோயில் விவரத் தொகுப்புகள் பயண வழிகாட்டிகளாக மட்டுமே அமைந்துள்ளன. அவற்றிலிருந்து கோயில்களின் தனிச்சிறப்பான கட்டிடக் கலையைப் பற்றியோ சிற்பங்கள், ஓவியங்களின் கலைச் சிறப்புகள் பற்றியோ சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளைப் பற்றியோ முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என்.ரமேசன் எழுதி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள திருப்பதி கோயிலின் வரலாறுபோல தமிழ்நாட்டுக் கோயில்களுக்கும் விரிவான வரலாறுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட வேண்டும். குடவாயில் பாலசுப்ரமணியன், அ.கா.பெருமாள் போன்ற வரலாற்று ஆய்வறிஞர்களின் பங்களிப்புகளை அந்நூல்களுக்கு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.Read in source website

வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்ததாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி மழை கொட்டியதாலும் காவிரிப் படுகையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 20.11.2021 வரையிலான கணக்கெடுப்புப்படி 1,36,500 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின. அவற்றில் நெல் பயிரிடப்பட்ட 90,000 ஹெக்டேர் நிலங்களும் அடங்கும். தோட்டக்கலைப் பயிர்களில் 4,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட மரவள்ளிக் கிழங்குகள் உள்ளிட்டவை சேதமாகின. காவிரிப் படுகை மாவட்டங்களிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் பகுதிகளிலும் இந்தப் பாதிப்பு அதிகம்.

மனித உயிர்கள் இழப்பு, உணவு உற்பத்திப் பாதிப்பு, கால்நடைகளின் இழப்பு, மக்கள் வசிக்கும் வீடுகள் சேதம் என்று பேரிடர் இந்த ஆண்டும் மக்கள் வாழ்வை முடக்கியது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் உதவி கேட்டு முறையீடு செய்தது. மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டின் பாதிப்புகளைக் கணக்கெடுக்க ஒரு குழுவை அனுப்பியது. மத்திய உள்விவகாரங்கள் அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் 7 உறுப்பினர்கள் அடங்கிய குழு தமிழ்நாடு வந்தது. இரு பிரிவுகளாகப் பிரிந்து, இந்தக் குழுவினர் மழை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டனர்.

தங்கள் ஆய்வை முடித்த பின் 24.11.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய மத்திய வேளாண்மைக் கூட்டுறவு மற்றும் உழவர் நலத் துறை இயக்குநர் விஜய்ராஜ்மோகன் “மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டோம். அதுபற்றிய அறிக்கையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் மத்திய அரசுக்கு அளிப்போம்” என்று கூறினார். அதன்பின் எந்த அறிவிப்பும் வந்தபாடில்லை.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களைத் தற்காலிகமாகச் சீரமைக்க முதல் கட்ட மதிப்பீடாக ரூ.549.63 கோடி, நிரந்தரமாகச் சீரமைக்க ரூ.2,079.89 கோடி என மத்திய அரசிடம் உதவி கோரப்பட்டது. மொத்தம் ரூ.2629.29 கோடியைத் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு அரசு கோரியது. இந்த ஆய்வுக்குப் பின் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், கோரப்பட்ட ரூ.549.63 கோடி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சேதங்கள் ரூ.521.28 கோடி என்று மதிப்பிடப்பட்டுத் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.1070.92 கோடியும் நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.3554.88 கோடியும், ஆக மொத்தம் ரூ.4,625.80 கோடி கூடுதலாக வழங்கும்படி தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கேட்டது.

ராஜராஜசோழன் காலத்திலேயே இயற்கையின் கோரதாண்டவம் நிகழ்ந்திருக்கிறது. காவிரியில் வெள்ளத்தால் கரைகள் உடைப்பெடுத்துப் பலத்த சேதம் ஏற்பட்டபோது, விவசாயிகளால் அரசுக்கு வரி கட்ட முடியவில்லை. மன்னரிடம் வரித் தள்ளுபடி கோரி உழுகுடிகள் விண்ணப்பித்துள்ளனர். ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்ற நூலில் வே.தி.செல்வம் இதனைப் பதிவுசெய்திருக்கிறார். தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலும் காற்று, புயல், சூறாவளி ஆகியவற்றின் கொடுங்கரங்கள் உழவர்களின் கழுத்தை வளைத்துள்ளன. 1677, 1681, 1858, 1850, 1920, 1924 ஆகிய ஆண்டுகளில் வெள்ளம் காவிரிப் பகுதியை வாரிச் சுருட்டியுள்ளது. அப்போதைய அரசாங்கங்களும் வரித் தள்ளுபடி உள்ளிட்ட விவசாய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

1681-ல் 10,000 பேருக்கும் மேல் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். வெள்ளி, தங்கம், ரொக்கம் ஆகியவற்றையும் மக்கள் இழந்தனர். குறிப்பாக, 1858-ல் ஏற்பட்ட வெள்ளம் குறித்து ஜெரே சுவாமிகள், லவூயெனான் சுவாமிகள் உள்ளிட்ட கிறித்தவப் பாதிரிமார்கள் குறிப்புகள் எழுதியுள்ளனர். அந்த வெள்ளத்தில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆகிய நதிகளில் வெள்ளம் கரைகளை உடைத்துள்ளது. கல்லணையை ஒட்டியுள்ள குழிமாத்தூர், கடம்பங்குடி, பூண்டி ஆகிய ஊர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு அழிவைச் சந்தித்தன. கொள்ளிடக் கரைகளில் 4,000 மனிதர்களின் சடலங்கள் கிடந்தன. அப்போதைய அரசு அன்றைய மதிப்பில் ரூ.9 லட்சம் வரை வரித் தள்ளுபடி செய்ததாக பாதிரியார்களின் குறிப்புகள் கூறுகின்றன.

இதற்கு முன் 1823-24 இயற்கைப் பேரிடரிலும் அரசு செய்த 7% வரையிலான வரி தள்ளுபடி குறித்துக் குறிப்புகள் உள்ளன. சுதந்திர இந்தியாவிலும் வெள்ளத்தின் பேரிரைச்சல், இயற்கைப் பேரிடரின் கோர தாண்டவம் ஆகியவை தொடர்கின்றன. அப்போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிவாரணக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

அண்மையில் ஏற்பட்ட சில இயற்கைப் பேரிடர்களின் விவரமும் தமிழ்நாடு அரசு கோரிய உதவியையும் மத்திய அரசு வழங்கிய தொகையையும் பார்ப்போம்: 2011-ல் தானே புயல் பாதிப்புகளுக்குத் தமிழ்நாடு அரசு கோரியது ரூ.5,249 கோடி, கிடைத்தது ரூ.500 கோடி மட்டுமே. 2015 வெள்ளப் பாதிப்புகளுக்குக் கேட்டது ரூ.25,912 கோடி. கிடைத்தது ரூ.2,195 கோடி. 2016-ல் வார்தா புயலின்போது கேட்டது ரூ.22,573 கோடி, கிடைத்தது ரூ.266 கோடி, 2017-ல் ஒக்கி புயலின்போது கேட்டது ரூ.5,255 கோடி, கிடைத்தது ரூ.133 கோடி. 2018-ல் கஜா புயலின்போது கேட்டது ரூ.15,000 கோடி. கிடைத்தது ரூ.1,146 கோடி மட்டுமே.

தமிழ்நாடு அரசு கோரும் தேசியப் பேரிடர் நிவாரணம் முழுமையாகவும் கிடைப்பதில்லை, உரிய காலத்திலும் கிடைப்பதில்லை என்கிற ஆதங்கம் விவசாயிகளிடம் தொடர்ந்து நிலவுகிறது. அதைப் போலவே மத்திய அரசின் பரிந்துரைகளும் வெளிப்படையாக இல்லை. நடப்பாண்டு குறுவைப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியபோது, நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு குறித்து தமிழ்நாடு அரசால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை அறுவடைக் காலம் முடிந்த பிறகே மத்திய அரசு வெளியிட்டது.

இரண்டு விதமான தீர்வுகளை இத்தருணத்தில் விவாதிக்க வேண்டும். ஒன்று, உரிய காலத்தில் வழங்கப்படும் நிவாரண உதவிகள் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஓரளவாவது காப்பாற்றும். மற்றொன்று, காலம் நெடுகிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பேரிடர்களால் உழவர்கள் அல்லல்படுவதைத் தடுக்க அறிவியல்பூர்வமான திட்டங்களை வகுக்க வேண்டும். பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்திய மனித வளக் குறியீடுகளில் முன்னணியிலும் ஜி.எஸ்.டி பங்களிப்பில் நாட்டின் இரண்டாவது இடத்திலும் உள்ள தமிழ்நாட்டுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைக்கவும் அவற்றைப் பெறவும் தார்மிக நியாயம் உள்ளது. இனிமேலாவது, மத்திய அரசின் தாமதப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.comRead in source website

சமீபத்தில், வங்கியில் உயர் பதவியில் இருக்கும் ஊழியர் ஒருவர் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில், ஆன்லைன் சூதாட்டத்தால் பெரும் பணத்தை அவர் இழந்திருப்பதும், அதன் விளைவாக எழுந்த மன உளைச்சலில் அவர் இப்படிச் செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

சமீப காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றிப் பெருமளவு நடக்கின்றன. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டுதான் வருகின்றன. போதைப் பொருட்களை விளம்பரப்படுத்தக் கூடாது என்று இங்கு சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த இணைய சூதாட்டங்களை இன்னும் நாம் போதையாகவே கருதவில்லை.

ஏன் இன்னும் தடைசெய்யப்படவில்லை?

நமது சட்டம் பொதுவாகச் சூதாட்டங்கள் போன்ற விளையாட்டுகளை இரண்டாகப் பிரிக்கிறது. ஒன்று, அறிவைக் கொண்டு விளையாடும் விளையாட்டு (Game of skill), மற்றொன்று வாய்ப்பால் விளையாடும் விளையாட்டு (Game of chance). அறிவைக் கொண்டு விளையாடும் விளையாட்டுகளுக்கு எந்தத் தடையும் இல்லை; ஆனால், வாய்ப்பினால் விளையாடும் விளையாட்டுகளுக்குத் தடை உண்டு. இதில் வேடிக்கை என்னவென்றால், எது அறிவால் விளையாடப்படுவது? எது வாய்ப்பால் விளையாடப்படுவது என்பதற்கெல்லாம் தெளிவான விளக்கங்களோ அல்லது நெறிமுறைகளோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அப்படி நெறிமுறைகள் கொண்டுவருவதற்கு முன்பாகவே இந்தச் சூதாட்டங்கள் சமூகத்தின் ஆழம் வரை ஊடுருவியிருக்கும்.

ஆன்லைன் சூதாட்டங்களின் ஆபத்துகள் என்னென்ன?

நேரடியாக விளையாடுவதைவிட இணையத்தில் விளையாடுவது சுலபமானது, கட்டுப்பாடுகளற்றது. விளையாடும் நேரத்தையோ அல்லது இழக்கும் பணத்தையோ குடும்பத்தைச் சார்ந்த யாரும் கண்காணிக்க முடியாது, விளையாடும் தனிநபர் மட்டுமே அறியக்கூடிய வகையில்தான் அது இருக்கிறது. எனவேதான், இதில் விளையாடுபவர்களை ஆரம்ப நிலையிலேயே நம்மால் தடுக்க முடியாமல் போகிறது.

விளையாடுபவரைத் தொடர்ந்து இதில் ஈடுபடச் செய்யும் உளவியல் உத்திகளைக் கொண்டே இந்த விளையாட்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் இந்தச் சூதாட்டங்கள் அதில் ஈடுபடுபவரை முற்றிலுமாகத் தம்வசப்படுத்திவிடுகின்றன. போதைப் பொருளுக்கு ஒருவர் அடிமையாவதைப் போல இந்த சூதாட்டங்களுக்கு ஒருவர் அடிமையாகிறார். சுயகட்டுப்பாட்டை இழக்கிறார், வெளியே வர முடியாமல் தவிக்கிறார். மற்ற போதைகளிலாவது அடிமைநிலை வெளியே தெரியும், பெரிய பொருளாதார இழப்பிருக்காது. ஆனால், இங்கே வெளியே தெரியாததாலும், மிகப் பெரிய பொருளாதார இழப்பை வீட்டில் சொல்ல முடியாததாலும் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

“அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தற்கொலைகள்தானே நடக்கின்றன, இதற்காக இந்த விளையாட்டுகளையே தடை செய்ய வேண்டுமா? இதனால் அரசாங்கத்துக்கு வரும் வருவாய் எவ்வளவு தெரியுமா?” என்றுகூடச் சிலர் கேட்கிறார்கள். இப்போது நாம் கேள்விப்படும் தற்கொலைகள் எல்லாம் மிகப் பெரிய பிரச்சினையின் சிறிய உதாரணங்கள்தான். இந்தப் பிரச்சினையின் மேற்பரப்பில் நாம் வண்ணச் சாயங்களைப் பூசி, இதற்கு வர்த்தக அடையாளங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒரு பெரும் நோய்மை இதன் அடியில் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நோய்மையின் பிடியில் மாணவர்களும் இளைஞர்களும் குடும்பங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இவர்களைப் பாதுகாப்பது நோக்கமென்றால், இதன் வர்த்தகப் பலன்களைப் புறந்தள்ளிவிட்டு, இதை எப்படி முறைப்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். இல்லையென்றால், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தற்கொலைகளைத் தாண்டி ஒரு சமூகமே நோயுற்று நொடித்துப்போவதை நாம் காண நேரிடும்.

எப்படி முறைப்படுத்தலாம்?

இணைய உலகம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. அதன் வாடிக்கையாளர்களாகிய நமது மனநிலையைப் பற்றியோ, பொருளாதார பாதிப்புகளைப் பற்றியோ அங்கு யாருக்கும் கவலை கிடையாது. ஆன்லைன் விளையாட்டுகளும் சூதாட்டங்களும் ஒரு கட்டத்தைத் தாண்டி, நம்மை அதற்குள் இழுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. ஏனென்றால், அவை அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்து, தனிநபர்களாகிய நாம்தான் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் இணையத்தில் இருக்க வேண்டும்.

திட்டமிட்ட நேரத்தைவிடநேரத்தை அதிக நேரம் ஒன்றில் செலவழிக்கிறோம் என்பது தெரிந்தால், உடனடியாக நாம் அந்தச் செயலின் மீது எச்சரிக்கை கொள்ள வேண்டும் அல்லது வெளியேற வேண்டும். எந்த ஒரு விளையாட்டும் ஆரம்பத்தில் இருந்த பரவசமும் உற்சாகமும் இல்லாமல் ஒருவிதக் கட்டாயத்தின் பேரில் விளையாடுகிறோம் என்பதை உணர்ந்தால் நாம் அதற்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். எனவே, உடனடியாக அதிலிருந்து வெளியேற வேண்டும். நம்மால் தனிப்பட்ட முறையில் இதிலிருந்து வெளியே வர முடியவில்லை என்று தெரிந்தால், உடனடியாக வீட்டில் இருப்பவர்களிடம் தெரிவிக்க வேண்டும். நாம் அதில் பணத்தை இழக்கிறோம் என்பதை உணர்ந்தால், உடனடியாக நிதி சார்ந்த பொறுப்புகள் அனைத்தையும் வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

அரசாங்கம் ஒரு தெளிவான வரையறையைக் கொண்டுவர வேண்டும். ஒரு விளையாட்டு, அடிப்படையில் என்னவாக இருக்கிறது என்பதைவிட, அது சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கணித்து அதனை முறைப்படுத்த வேண்டும். ஏராளமான இளைஞர்களின் நேரத்தையும் சிந்தனைத் திறனையும் மனிதவளத்தையும் ஒரு விளையாட்டு விரயம் செய்யுமானால், அது நாட்டின் வளர்ச்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, அது போன்ற விளையாட்டுகளைத் தடைசெய்ய வேண்டும் அல்லது குறைந்தபட்சம் முறைப்படுத்த வேண்டும்.

இது போன்ற விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களும் சமூகப் பொறுப்புடன் இருப்பதும் அவசியமாகிறது. இணைய உலகில் பல்வேறு செயலிகளை உருவாக்குவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் சவாலானதுதான். ஆனால், அப்படி உருவாக்கும் செயலிகளை யாருக்காக உருவாக்குகிறோம், யாரையெல்லாம் அவற்றின் பயனாளர்களாகக் கருதுகிறோம் என்பதை வரையறை செய்வதும் முக்கியமானது. அதே போல இந்தச் சூதாட்டங்கள் இணைய உலகில் வந்ததற்குப் பிறகு அவற்றின் தாக்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைத் திறந்த மனதுடன் அணுகி, அதை எப்படிக் குறைப்பது, அது உருவாக்கும் சீர்கேடுகளை எப்படிச் சரிசெய்வது என்பதையெல்லாம் பல்வேறு சமூக ஆர்வலர்களுடன் உரையாடி முறைப்படுத்த வேண்டும்.

இணைய உலகில் வெறும் பொருளாதார நோக்கங்களுடன் மட்டுமே இயங்க முடியாது. குழந்தைகள் முதல் அனைத்துத் தரப்பினரும் உலவும் இடம் என்பதால், சமூகப் பொறுப்புடனும் மனித நேயத்துடனும் இருக்க வேண்டியது அவசியம்.

செயலிகளை உருவாக்கும் அனைத்து மென்பொருள் நிறுவனங்களுக்கும் இருக்கும் முதன்மையான நோக்கம் ‘பயனாளர்களை எவ்வளவு நேரம் தங்களுடைய இணைப்பில் நீடித்திருக்க வைப்பது’ என்பது மட்டும்தான். அதற்காக ஏராளமான உளவியல் நிபுணர்களைக் கொண்டு, பல செயலிகளை வடிவமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மக்களைப் பற்றி, குழந்தைகளைப் பற்றி, இளைஞர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை; அவர்களின் எதிர்காலம் தொடர்பான எந்தக் கரிசனங்களும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அனைவரும் அவர்களின் வாடிக்கையாளர்கள்தான்.

இந்த இணைய உலகில் நம்மை அனைவரும் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள். நமது விருப்பங்கள், தேவைகள், எண்ணங்கள், லட்சியங்கள், கனவுகள், பலங்கள், பலவீனங்கள் என அத்தனையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றன. இந்த மிகப் பெரிய வலைப்பின்னலிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால், நம்மை நாம் கண்காணிக்க வேண்டும், எந்த வித மறுப்பும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் நமது அடிமை நிலையை அல்லது அதனை நோக்கிய நிலையை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையென்றால், பெரும் சமுத்திரத்தில் தொலையும் சிறு காகிதம்போல நாமும் இந்த இணையத்தில் காணாமல் போய்விடுவோம்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர், எழுத்தாளர். தொடர்புக்கு: sivabalanela@gmail.comRead in source website