DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 05-02-2022

தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு நிலங்களை உபயோகிக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக, காகிதங்களின் வழியே விண்ணப்பிக்கும் முறை அமலில் இருந்தது. இப்போது இணையதளத்தின் வழி (ஜ்ஜ்ஜ்.ங்க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இதற்கென தமிழ்நாடு நில சீா்திருத்தச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலை செய்தித் துறையால் பராமரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாடு மாநில உயா்கல்வித் துறை மன்ற வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் சிலையை நிறுவிட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு உயா்கல்வி மன்ற வளாகத்துக்கு, டாக்டா் ஜெ. ஜெயலலிதா வளாகம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்த தினத்தன்று அவரது பெயரிலான வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தி அரசு விழாவாக நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், உயா் கல்வி மன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையை செய்தி மக்கள் தொடா்புத் துறை தன்வயப்படுத்தலாம் எனவும், சிலையின் நிா்வாக பொறுப்பை செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வசம் ஒப்படைக்கலாம் எனவும் அரசு உத்தரவிடுகிறது.

செய்தி மக்கள் தொடா்புத் துறை நிா்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற சிலைகளின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது போன்றே ஜெயலலிதா சிலையின் தொடா் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளலாம் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளாா்.



Read in source website

ஹைதராபாத் முச்சிந்தலாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் மிகப் பிரமாண்டமாய் ராமானுஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் துத்தநாகம் என ஐந்து விதமான உலோகங்களின் கலவையான "பஞ்சலோக' சிலையாக நிறுவப்பட்டுள்ளது. 
ராமாநுஜர் சிற்பம் மேல் கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமாநுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமாநுஜர் இந்தப் பூமியில் 120 வருடங்கள் வாழ்ந்ததை நினைவுகூரும் வகையில் 120 கிலோ தங்கத்தைக் கொண்டு சிலையின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.  

கருவறை தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அதேநேரத்தில் 216 அடி கொண்ட வெளிப்புறச் சிலை, உட்கார்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில் ஒன்றாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கான சிலை' என வர்ணிக்கப்படும் இச்சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


முன்னதாக, பிப்ரவரி 2-ஆம் நாள் முதலே ஆன்மிக நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. கருவறை அமைந்துள்ள உள் அறையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிப்ரவரி 13-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். 
உட்கார்ந்த நிலையில் தாய்லாந்தில் அமைந்துள்ள 302 அடி உயரம் கொண்ட புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்து வருகிறது.   இதற்கடுத்ததாக, உலகின் இரண்டாவது பெரிய சிலை என்ற பெருமையை ராமாநுஜரின் 216 அடி உயர சிலை பெறவுள்ளது. 


ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கும் பணி கடந்த 2014-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. 



Read in source website

புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்கலை., கல்லூரி மாணவா்களிடம் தீவிர விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கும் அது குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இது தொடா்பான செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அவ்வப்போது சுற்றறிக்கைகள் மூலமாக அறிவுறுத்தி வருகிறது.

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருள்களைத் தடை செய்யும் ‘கோட்பா’ சட்டம் 2003 பிரிவு 4-இன் படி, பொது இடங்களில் புகைபிடிப்பதும், கல்வி நிலையங்களின் அருகில் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய அரசு ஆகியவை இணைந்து பல்வேறு வழிகாட்டுதல்களை இணையதள முகவரியில் வெளியிட்டுள்ளன. அதேவேளையில் இந்த நெறிமுறைகள், வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உயா்கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவா்களின் மத்தியில் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறித்து தீவிரமாக விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். புகையில்லாத கல்வி நிறுவன வளாகங்களை உருவாக்குவதன் மூலம் இளைய சமுதாயத்தின் உடல் நலன் பேணிப் பாதுகாக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தானியங்கி சோதனை நிலையங்கள் (ஏடிஎஸ்) மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் வாகனங்களின் தகுதியை பரிசோதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கும் இந்தத் திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

ஏடிஎஸ்-இல் முற்றிலும் இயந்திர உபகரணங்களை பயன்படுத்தி வாகனங்களின் தகுதியை உறுதி செய்ய தேவையான பல்வேறுவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் மோட்டாா் வாகனங்கள் ஏடிஎஸ் மூலம் தகுதிச் சான்று பெறுவது 2023- ஏப்ரல் 1-இலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நடுத்தர சரக்கு வாகனங்கள், நடுத்தர பயணிகள் மோட்டாா் வாகனங்கள் மற்றும் இலகு ரக மோட்டாா் வாகனங்களுக்கு (போக்குவரத்து) ஏடிஎஸ் மூலமான தகுதிச் சான்றிதழ் 2024 ஜூன் மாதத்திலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கு உட்பட்ட வாகனங்களுக்கு (போக்குவரத்து) இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், எட்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு (போக்குவரத்து) ஆண்டுக்கு ஒருமுறையும் தகுதிச் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

”ஆடை என்பது எங்களது தனிப்பட்ட உரிமை. எங்களை கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கூட பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. நாங்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களது குழந்தைகளை இந்த விதத்தில்தான் நடத்துவார்களா? நாங்கள் ஆதரவற்றவர்கள்போல் சாலைகளில் அமர்ந்துள்ளோம்”- ஹிஜாப் அணிவதற்கு பள்ளியில் அனுமதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவி ஒருவரது குரல் இது..

கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் இந்து மதம் சார்ந்த அமைப்பினரின் அழுத்தம் காரணமாக அங்குள்ள சில பள்ளிகள் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஜாப் அணிவது தங்களது உரிமை என பள்ளி வளாகத்துக்கு வெளியே 3 நாட்களுக்கு மேலாக மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மாணவிகளின் குரலுக்கு கர்நாடக பாஜக அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் இது தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும்வரை, தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. பள்ளிகளில் ஹிஜாப் போராட்டத்துக்குப் போட்டியாக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் மாணவர்கள் சிலர் ஈடுபட்டது அனைத்துத் தரப்பு மாணவர்களிடத்திலும், மக்களிடத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 'நம்பிக்கையின் அடிப்படையில் நீங்கள் ஒன்றை நீண்ட காலமாக பின்பற்றுவதற்கும், தூண்டுதலின் பேரில் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் தள்ளப்படுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடுதான் கர்நாடகவில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த வேறுபாடுகள்தான் வரலாற்றில் பல வன்முறைகளுக்கு காரணமாகியுள்ளன. இவ்வாறான சூழலில் கர்நாடக அரசும், கல்வி நிறுவனங்களும் இந்த விவகாரத்தை முதிர்ச்சியுடன் கையாள்வது அவசியம்' என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சமூகப் பிரச்சினை குறித்த கவனிக்கத்தக்க பார்வைகள்...

சமூக ஆர்வலர் ஓவியா: ”இந்த விவகாரத்தை நாம் கவனமாக ஆராய்ந்தால், இதில் முற்போக்கான முகமூடியை அணிந்துகொண்டு கருத்தியல் வன்முறையை இந்துத்துவ அமைப்புகள் விதைக்கின்றனர் என்பது தெரியும். பள்ளிக் கூடங்களில் மத, சாதிய அடையாளங்களோடு வரக் கூடாது என்பது சரியான கருத்துதான். ஆனால் இதனை ஒரு சமூகத்தின் மீது மட்டும் தேர்வு செய்து திணிக்க முயல்வது தவறு. இந்தக் கருத்து அனைத்து மதத்தினருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரையும் சமப்படுத்துவதாக இருக்க வேண்டும். உண்மையில் இந்துதுத்துவா அமைப்புகள் இங்கு பாகுப்பாட்டைதான் விதைக்கிறார்கள்.

பொதுவாகவே நான் புர்காவுக்கு எதிரானவள். மத அடையாளம் என்றாலும் இஸ்லாமிய பெண்கள் புர்காவிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்றுதான் நான் கூறுகிறேன். ஆனால், அந்த முடிவை இஸ்லாமிய பெண்கள்தான் எடுக்க வேண்டும். நான் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் எனது எல்லை என்பது இதில் பிரச்சாரம் செய்யும்வரைதான்; அவர்களிடம் சென்று புர்காவை கழட்டு என்பதற்கான அதிகாரம் நமக்கு கிடையாது. அவர்களாக அந்த புர்காவிலிருந்து வெளியே வர வேண்டும் என்றுதான் நான் பேசுவேனே ஒழிய, சட்டத்தின் மூலமாகவோ வற்புறுத்தியோ இருக்க கூடாது. புர்கா போட்டுக் கொண்டால் மத அடையாளம் தெரிகிறது என்றால், இந்துக்கள் பொட்டு வைத்துக்கொள்வதால் மத அடையாளம் தெரியாதா? இதில் தாலி என்பது சாதி, மதம் என அனைத்தையும் குறிக்கிறது. அவ்வாறு இருக்கையில் இவர்கள் அனைத்தையும்தானே தடை செய்ய வேண்டும். இந்தக் கேள்வியை நிச்சயம் எழுப்ப வேண்டும்.

அவர்கள் புர்கா போட்டால், நாங்கள் காவித் துண்டு அணிவோம் என்று சொல்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன்... யாரோ ஒருவர் சொல்கிறார்கள் என்பதற்காக அப்பெண்கள் புர்கா போடவில்லை. புர்கா போடுவது அவர்கள் மதத்துக்குள்ளாக நிகழ்வது. ஆனால் காவித் துண்டைப் போர்த்திக் கொள்வது என்பது இந்து பெண்களிடம் கிடையாது. துண்டு என்பதே பெண்களுக்கான உடை அல்ல. புர்கா எதிர்ப்புக்காக இவர்கள் துண்டு போடுகிறார்களே தவிர, அது பாரம்பரியமானது அல்ல. ஆனால் இஸ்லாமிய பாரம்பரிய உடையில் புர்கா உள்ளது. எனவே, இரண்டையும் சமப்படுத்தக் கூடாது. இதையும் மீறி அவர்கள் துண்டு போடுவோம் என்று கேட்டால் அவர்களையும் அனுமதியுங்கள். அதைவிட்டு இவர்களை புர்கா போடக் கூடாது என்று சொல்ல கூடாது.

கடந்த 3 ஆண்டுகளாகவே மக்கள் நிறைய இன்னல்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் எவ்வாறு களையப் போகிறோம் என்ற அச்சமிகுந்த சூழலில் உள்ளோம். எந்த வீடுகளுக்குச் சென்றாலும் அங்குள்ள பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்காகவே படிக்கிறார்கள். இந்த நாடே வேண்டாம் என்று கூறுகிறார்கள். இவ்வாறான சூழலில்தான் நாம் இருக்கிறோம். வரும் தலைமுறையினர் இந்த நாட்டில் வாழ விரும்பாத சூழலில்தான் நாம் இந்த நாட்டை வைத்திருக்கிறோம். அதனைப் பற்றிதான் நாம் சிந்திக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இருக்கும் மக்களையும் புண்படுத்திக் கொண்டிருந்தால் யார் இந்த நாட்டில் வாழ்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.”

கவிஞர் சல்மா: ”பெண்களுடைய கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அடிப்படையான விஷயம். இது ஒரு சமூக பெண்களுக்கு இத்தனை ஆண்டு காலமாக சாத்தியப்படாமல் இருந்த சூழலில்தான் பெண்கள் கல்வி கற்பிதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிப்படுகிறார்கள். பாஜக ஆட்சியில் அமர்ந்ததிலிருந்து எதாவது ஒரு விதத்தில் இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்குவதற்கான முயற்சியை அவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். உணவு தொடங்கி அவர்கள் மீதான் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. கல்வி என்பது எப்படி அடிப்படையான உரிமையோ, அதேபோல் யார் எந்த மதத்தைப் பின்பற்றுவது அவர்களின் அடிப்படை உரிமை. இதில் யாரும் தலையிட முடியாது. இத்தனை ஆண்டு காலமாக கல்விக்கு வராத பெண்கள் தற்போது வரத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எது சரியான உடை என்று நினைகிறார்களோ, அதனை அணிந்து வருவதுதான் இத்தனை ஆண்டுகாலம் சாத்தியமாகி உள்ளது. அதனால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு கர்நாடகா மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்துத்துவ அடிப்படைவாதிகள், இஸ்லாமிய சமூகத்தினர் மீது மிக மோசமான வெறுப்பை கட்டமைக்கும் நிலையை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். இஸ்லாமிய மாணவிகளின் கல்வியைப் பறிக்கும் நோக்கத்தில் இந்துத்துவா அடிப்படைவாதிகள் செயல்படுகின்றனர். கேராளவிலிருந்து ஐடிடிக்கும் படிக்க வந்த ஃபாத்திமா என்ற இளம்பெண்ணை, அங்கிருந்த இந்துத்துவ பேராசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார். ஒரு சமூகம் மேலே வந்துவிட கூடாது என்று இந்துதுவா சக்திகள், பாஜக அரசின் துணையோடு நாடு முழுக்க செயல்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

பொட்டு வைப்பது, ஹிஜாப் அணிவது, சிலுவை அணிவது என்பது அவரவர் விருப்பம். ஆனால், இதனை சுட்டிக்காட்டி மாணவர்களை கல்வி நிலையங்களில் மறுப்பது என்பது மிக மோசமான காலத்தை நோக்கி பாஜக அழைத்து செல்வதை காட்டுகிறது. கல்வி மறுக்கப்படுவது மிகக் கடுமையான ஒடுக்குமுறை. இதனைத்தான் அவர்கள் இஸ்லாமிய பெண்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது கல்வி மறுப்பது என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது, இஸ்லாமிய சமூகத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கான சதியாகதான் தெரிகிறது. அரசியல் சாசனம் அளித்த உரிமை மறுக்கப்படுவது நிச்சயம் வேதனையான ஒன்று. இங்குள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து இப்பெண்களின் கல்விக்காக குரல் கொடுக்க வேண்டும்.”

தன்னார்வலர் ராஸ்மி மஜித் (கடையநல்லூர்): ”நான் இஸ்லாம் பெண்ணாக இருந்தும் ஹிஜாபை நான் அணிவதில்லை. ஹிஜாப் அணிவது சரி என கூறும் சமூகத்தில் ஹிஜாப் சரியல்ல என்ற கூறுவதற்கும் எங்களுக்கு உரிமை உள்ளது. இம்மாதிரியான விவாதங்கள் சமூகத்துக்குள் இருக்கும்போது ஆரோக்கியமானது. ஆனால், ஹிஜாப்பை அடிமைக் குறியீடு என்று மற்ற மதங்கள் அணுகுவது முற்றிலும் தவறானது. இதனை அந்த சமூகத்துக்குள்ளான மக்கள்தான் ஆலோசிக்க வேண்டும். ஆனால், இதனை இன்னொரு மதத்தின் அளவுகோலிருந்து வைத்து பார்ப்பது வன்முறைக்குத்தான் இட்டுச் செல்லும்.

ஆடை மட்டும் இல்லாமல், பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகும் நிறைய விஷயங்கள் இங்கு உள்ளன. ஆடை மட்டுமே அடக்குமுறை அல்ல. மாதவிடாய்க் காலங்களில் எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் எங்கள் சமூகத்தில் விதிப்பதில்லை. ஆனால் பிற மதங்களில் உள்ளது. இதை வைத்து மற்ற மதங்களில் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்று நாங்கள் கூற முடியுமா? எனவே ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை மற்றொரு மதத்திலிருந்து பார்க்கக் கூடாது என்பதுதான் என் பார்வை” என்றார் அவர்.

"இந்திய அரசியலைப்பு சட்டப் பிரிவு 25-ன் படி, ஒருவர் தனது மத நம்பிக்கைகளை சுதந்திரமாக பின்பற்ற முழு உரிமையும் உண்டு. ஆனால், இதற்கு மாறாக கடந்த சில ஆண்டுகளாகவே மதத்தின் அடிப்படையிலான பிரிவினைகளும், சிறுபான்மை சமூகத்தினர் மீதான தேவையற்ற வெறுப்புகளும் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வழிபாட்டுத் தளங்கள் தொடங்கி தற்போது கல்வி நிலையங்களை நோக்கி அந்த வெறுப்பு நகர்ந்திருக்கிறது.அதற்குச் சான்றுதான் போராடும் முஸ்லிம் மாணவிகளுடன், பிற மதங்களைச் சேர்ந்த மாணவிகள் உடன் நிற்காதது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வாறான சூழலில் நாட்டின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவது அவசியம்" என்று சமூக ஆர்வலர்கள் பகிர்கின்றனர்.

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in



Read in source website

மன்னார் வளைகுடா தீவுகளை ராமேசுவரத்திலிருந்து படகில் சென்று பார்வையிடும் வகையில் சூழல் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாம்பன் முதல் தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் 21 தீவுகள் உள்ளன. இவற்றைச் சுற்றி பவளப்பாறை, டால்பின், கடல்பசு உட்பட இரண்டாயிரத்துக்கும் அதிகமான அரியவகை உயிரினங்கள் வசிக் கின்றன.

இதில் ராமேசுவரத்துக்கு வெகு அருகே உள்ள குருசடைத்தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சான் தீவு ஆகியவற்றுக்கு படகு மூலம் செல்லலாம். அங்கு அரியவகை பவளப் பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள், மாங் குரோவ் காடுகள் ஆகியவற்றைப் பார்வையிடலாம்.

இதற்காக சூழல் சுற்றுலாத் திட்டத்தைத் தொடங்க வனத் துறை ஏற்பாடு செய்து வருகிறது. சுற்றுலாவுக்காக இரு கண்ணாடி இழைப்படகுகள், ஒரு பெரிய படகு வாங்கப்பட்டுள்ளன. பாம்பன் குந்துகால் பகுதியிலும், குருசடை தீவிலும் படகுகள் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குந்துகாலில் இருந்து பெரிய படகில் குருசடைத் தீவுக்குப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவர். அங் கிருந்து மூன்று சிறிய தீவுகளுக்கு கண்ணாடி இழைப்படகில் அழைத்துச் செல்லப்படுவர்.

படகின் அடிப்பகுதி மூலம் கடலில் உள்ள பவளப் பாறைகள், மீன்கள், கடல் பாசிகளை பார்க்கலாம். நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.300.

ஏற்கெனவே, தொண்டி அருகே காரங்காடு அலையாத்தி காடுகள் மற்றும் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசை கிராமத்திலிருந்து நடுக்கடலில் உருவான மணல் திட்டைப் பார்வையிட சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 15 மீனவ இளை ஞர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான ஒரு வாரப் பயிற்சி முகாம், பிரப்பன் வலசையில் அண்மையில் நடைபெற்றது.

மன்னார் வளைகுடா உயிர்க் கோள தேசிய பூங்காவில் இயக்கப்பட்டு வரும் சூழல் சுற்றுலா தலங்களான காரங்காடு சூழல் சுற்றுலா, பிச்சை மூப்பன் வலசை சூழல் சுற்றுலா மற்றும் புதிதாக மன்னார் வளைகுடா தீவுகளுக்கு தொடங்க உள்ள சூழல் சுற்றுலா தலங்களில் இந்த 15 இளைஞர்களுக்கும் உயிர் காக்கும் நீச்சல் வீரர் பணி வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது.



Read in source website

தெள்ளாறு அருகே பென்னாட கரன் என்ற கிராமத்தில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த 4 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா, சரவணன் உள்ளிட் டோர் அடங்கிய குழுவினர் வந்த வாசி அருகேயுள்ள தெள்ளாறு பகுதியில் நடத்திய ஆய்வில் பென்னாடகரன் என்ற கிராமத்தில் உள்ள சிவன் கோயில் அருகே 2 சிலைகளை கண்டறிந்தனர். அதில், ஒன்று விஷ்ணு சிலை மண்ணில் பாதி புதைந்திருந்தது.

நான்கு கைகளுடன் மேல் வலது கையில் பிரயோக சக்கரமும், மேல் இடது கையில் சங்கும், கீழ் வலது கையில் அபய முத்திரையும், கீழ் இடது கையில் கடி முத்திரையில் இடையின் மீது வைத்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் பட்டையான சரப் பளியும், தோளில் இருந்து சரிந்து மார்பின் மீது பரவி பின் வலது கைக்கு மேல் ஏறும் நிவித முப்புரி நூலுடன் நான்கு கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளைகளுடன் உள்ளன. இது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதப்படுகிறது.

இதன் அருகில் பலகை கல்லில் பிள்ளையார் புடைப்புச் சிற்பம் உள்ளது. நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் பருத்த வயிற்றுடன் பீடத்தில் அமர்ந்தவாறு இருக்கும் சிலை மிகவும் தேய்மானம் அடைந்துள்ளது. பல்லவர் கால பிள்ளையார் சிலையுடன் ஒத்துப் போவதால் இந்த சிலை 7-ம் நூற்றாண்டில் கடைசி பகுதியில் அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடிக்கப்பட்ட சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதே கிராமத்தில் உள்ள ஏரிக்கரை வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த சிற்பம் கொற்றவை என தெரியவந்தது. அழகான ஜடா மகுடம் தலையை அலங்கரிக்க கழுத்தில் கண்டிகை மற்றும் சவடி அணிந்து அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் உள்ளார். எட்டு கரங்களில் மேல் வலது கரத்தில் பிரயோக சக்கரம், ஏனைய வலது கரங்கள் முறையே போர் வாள், சூலம் ஏந்திய நிலையில் நான்காவது வலதுகரம் அபய முத்திரையும், மேல் இடது கரத்தில் சங்கும் ஏனைய கரங்களில் முறையே குறுவாள், மான் கொம்பு ஏந்தியும், கீழ் இடது கரம் இடையின் மீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளன. கொற்றவையின் இருபுறமும் வீரர்களும், கலைமான் காட்டப்பட்டுள்ளது.

மேலும், எருமை தலையின் மீது திரிபங்க நிலையில் காட்சி தருவதுடன் கொற்றவையின் தலை அருகே பெரிய சூலம் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. சிலை வடிவத்தின் அடிப்படையின் இது 8-ம் நூற்றாண்டாக கருதப் படுகிறது.

இதே கிராமத்தில் கற்பலகை யில் தவ்வை சிற்பம் உள்ளது. மாந்தன், மாந்தியுடன் அவரின் ஆயுதமான துடைப்பம் மற்றும் காக்கை கொடியுடன் தவ்வை அமர்ந்த நிலையில் உள்ளது. இந்த சிற்பங்கள் அனைத்தும் பல்லவர் கால கோயிலில் இருந்துள்ளது. கால ஓட்டத்தில் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.



Read in source website

குடியரசு தின அணிவகுப்பு 2022-ன் சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த அணிவகுப்புக் குழுக்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பிற துணைப் படைகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புக் குழுக்கள் ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. நீதிபதிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்திய கடற்படை அணிவகுப்புக் குழு முப்படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படைகள் மற்றும் பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ‘சுபாஷ் @125’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (CPWD) அலங்கார ஊர்தி மற்றும் ‘வந்தே பாரதம்’ நடனக் குழு ஆகியவை சிறப்புப் பரிசுப் பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 26, 2022 அன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது. இதில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திக்கு இரண்டாவது இடமும், மேகாலய மாநில அலங்கார ஊர்திக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.

மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தி வெற்றி பெற்றது.மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி 'பல்வகைமை மற்றும் மகாராஷ்டிராவின் மாநில உயிர் சின்னங்கள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்தது. மக்கள் விருப்ப தேர்வு என்பது இந்த முறை தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மக்கள் வாக்களிப்பு செய்ததன் மூலம் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தி வெற்றிபெற்றுள்ளது. இதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்டது. மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் உத்தர பிரதேசம் இரண்டாமிடம் பிடித்தது.



Read in source website

ஸ்டார்லிங்கின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. முதலில் 10 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் இந்த இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் பயனர்களுக்காக ப்ரீ ஆர்டர்களை துவங்கியது.

Elon Musk’s Starlink now offering a ‘premium’ service : எலோன் மஸ்க்கின் செயற்கைகோள் இணைய சேவை ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக இந்தியாவில் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தற்போது சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட இணைய வேகத்தை வழங்கும் உத்தரவாதத்துடன் ப்ரீமியம் சேவையை வழங்கி வருகிறது. புதிய பிரீமியம் சலுகை – மாதத்திற்கு $500 – இந்தியா போன்ற சந்தைக்கான தொழில்நுட்பத்தின் செலவு-தடையை இந்த மதிப்பு கோடிட்டு காட்டுகிறது.

செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை என்றால் என்ன?

குறைந்த புவி சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்களின் தொகுப்பைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள தொலைதூர பகுதிகளுக்கு லோ-லேட்டன்ஸி பிராட்பேண்ட் இணைய சேவையை இந்த ஸ்டார்லிங்க் வழங்க உள்ளது.

அமேசான் மற்றும் ஒன்வெப் ஆகியவை இந்த செயற்கைக்கோள் இணைய தொழில்நுட்பம் தொடர்பான தங்களின் சொந்த திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

ஸ்டார்லிங்கின் ப்ரீமியம் சேவை என்றால் என்ன?

பிரீமியம் சேவையானது 150 முதல் 500 எம்பிபிஎஸ் வரையிலான வேகத்தில் இணைய சேவை வழங்குவதாகும். பிரீமியம் சேவையின் தாமதம் 20-40ms இடையே உள்ளது. ஆனால் வழக்கமான ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்தும் நபர்களுக்கு 100 முதல் 200 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை உறுதி செய்யப்படும். ஸ்டார்லிங்க் இணையத்தின் தரவுகள் படி வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் மொபைல் ஆப் மூலமாக உதவியை பெற்றுக் கொள்ள இயலும்.

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் பயணம் எந்த அளவில் உள்ளது?

ஸ்டார்லிங்கின் முக்கிய சந்தையாக இந்தியா உள்ளது. முதலில் 10 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் இந்த இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் முடிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவில் பயனர்களுக்காக ப்ரீ ஆர்டர்களை துவங்கியது. இருப்பினும், அரசாங்க அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பரில் இவை அனைத்தும் செயல் இழந்தது. இது முன்பதிவு தொடங்கும் முன் அதன் சேவைகளுக்கான உரிமத்தைப் பெற வேண்டும் என்று இந்திய அரசு அந்நிறுவனத்தை எச்சரிக்கை செய்தது.

அரசின் உத்தரவுக்கு பிறகு, ஸ்டார்லிங்க் சேவைக்காக ப்ரீ-புக்கிங் செய்திருந்த நபர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க முடிவு செய்தது அந்த நிறுவனம். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் ப்ரீ ஆர்டர்களை புக் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஸ்டார்லிங்க் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் பார்கவா 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.

இந்தியாவில் சாட்டிலைட் ப்ராட்பேண்டுக்கான சந்தை உள்ளதா?

ஸ்டார்லிங் மற்றும் ஒன்வெப் நிறுவனங்கள் தங்களின் சாட்டிலைட் ப்ரோட்பேண்ட் சேவைகளை இந்தியாவில் 2022ம் ஆண்டு வழங்க முடிவு செய்துள்ளன. அதே நேரத்தில் ரந்த ஆப்டிக் ஃபைபர் கவரேஜ் இல்லாத நிலையில், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் அரசு மற்றும் மக்களுக்கு இடையே ஒரு தற்காலிக தீர்வை வழங்குகிறது. பாரத்நெட் அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், இத்தகைய அதிக செலவு கொண்ட தொழில்நுட்பம் பெரிய அளவில் வெற்றி அடையாது.

டிசம்பர் 2021 இல், பார்கவா இந்தச் சேவைக்கு இந்தியாவில் முதல் ஆண்டில் ஒரு பயனர் டெர்மினலுக்கு ரூ. 1.58 லட்சம் செலவாகும் என்றும், இரண்டாம் ஆண்டில் இருந்து சுமார் ரூ.1.15 லட்சம் செலவாகும் என்றும் கூறியிருந்தார். ஸ்டார்லிங்கின் வேகத்தோடு ஒப்பிடும் போது பாரத்நெட் சேவைகள் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. மேலும் ஓராண்டுக்கு இதனால் ஏற்படும் செலவானது ரூ. 32 ஆயிரம் முதல் 57 ஆயிரம் வரை மட்டுமே.

இந்த சேவைகள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சேவைகளுக்கு சவாலாய் அமையுமா?

ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் போன்ற நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட சேவைகள் முக்கியமாக குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை சார்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் இணைப்பை மேம்படுத்த ஏற்கனவே திட்டங்களை தயார் செய்து வருகின்றன. சாதாரண நெட்வொர்க் சேவைகள் சென்று சேராத இடங்களுக்கு சேவையை வழங்கவே இந்த ஸ்டார்லிங் போன்ற சேவைகள் உருவாக்கப்பட்டாலும், இணைய சேவைகள் நன்று மேம்படுத்தப்பட்ட பகுதிகளிலும் கூட ஃபைபர் ஆப்டிக்ஸ் வழங்கும் சேவையைக் காட்டிலும் அதிவேக இணைய சேவையை வழங்கும் என்பதால் இது ஒரு போட்டியில் முடிவடையும்.



Read in source website

தொழில்நுட்பத்தின் வளா்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. தொழில்நுட்பங்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடா்ந்து எளிமைப்படுத்தி வருகின்றன. அதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள மத்திய அரசு, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கல்வி, சுகாதாரம், தொழில், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் சாா்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், அத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது முக்கியமான பல்வேறு விவகாரங்களை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

பட்ஜெட்டில் தொழில்நுட்பம் சாா்ந்த அறிவிப்புகளில் அதிமுக்கியமானது 5-ஆம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை ஏலம். இந்த ஆண்டிலேயே 5ஜி அலைக்கற்றை, தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படவுள்ளது. அலைக்கற்றை ஏலம் விடப்படும் நடைமுறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாா்தி ஏா்டெல், ஜியோ, வி (வோடஃபோன்-ஐடியா) எனத் தொலைத்தொடா்புத் துறை மும்முனைப்போட்டிக் களமாக மாறிவிட்டது (பிஎஸ்என்எல் தற்போதுதான் 3ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டைத் தொடங்கியுள்ளது). அந்நிறுவனங்கள் ஏற்கெனவே சேவைக் கட்டணங்களை உயா்த்தியுள்ளன. கட்டண உயா்வு மேலும் தொடர வாய்ப்புள்ளது. அபரிமிதமான கட்டணம் வாடிக்கையாளா்களை பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

கிராம ஊராட்சிகளை கண்ணாடி ஒளியிழை மூலம் இணைக்கும் ‘பாரத்நெட்’ திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் அரசு-தனியாா் ஒத்துழைப்பின் கீழ் அடுத்த நிதியாண்டில் வெளியிடப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 2,000 கி.மீ. தொலைவிலான அமைப்புகள் ‘கவச்’ என்ற நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்படவுள்ளன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கில் உதயம், இ-ஷ்ரம் வலைதளங்கள் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்) பல்வேறு துறைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் உற்பத்தியைக் கணக்கிடவும், நிலத்தை அளக்கவும், பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும் ட்ரோன்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படவுள்ளது. அதற்காக ‘கிசான் ட்ரோன்கள்’ என்ற நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞா்களின் திறனை மேம்படுத்துவதற்காக வலைதளம் உருவாக்கப்படவுள்ளது. ‘பிஎம்-இவித்யா’ திட்டத்தின் கீழ் ‘ஒரு வகுப்பு-ஒரு தொலைக்காட்சி சேனல்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பிராந்திய மொழிகளில் 200 சேனல்கள் ஒளிபரப்பாகும்.

இணையவழியில் கல்வி கற்பதற்கான வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. எண்ம (டிஜிட்டல்) பல்கலைக்கழகம் நிறுவப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய எண்ம சுகாதார அமைப்பின் கீழ் வலைதளம் உருவாக்கப்படும். மக்களின் மனநலனைக் காப்பதற்காக ஆலோசனைகளை வழங்க தேசிய தொலைத்தொடா்பு மனநலத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் உள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களும் ‘கோா் பேங்கிங்’ வசதியின் கீழ் கொண்டுவரப்பட்டு, வங்கி சேவைகளுடன் இணைக்கப்படவுள்ளன. அதன் மூலமாக தபால் நிலையங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போா், இணையவழி பணப் பரிவா்த்தனை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியும். இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவிப்பதற்காக, பட்டியலிடப்பட்ட வங்கிகள் 75 மாவட்டங்களில் 75 எண்ம வங்கிப் பிரிவுகளை அமைக்கவுள்ளன.

‘சிப்’ பொருத்தப்பட்ட அதிநவீன இ-பாஸ்போா்ட் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) எண்ம செலாவணியை நடைமுறைப்படுத்தவுள்ளது. பதிவு செய்யப்படும் நிலங்களுக்கு அடையாளக் குறியீட்டு எண் வழங்கப்படவுள்ளது. 2 லட்சம் அங்கன்வாடிகள் நவீனமயமாக்கப்படவுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, புவிசாா் அமைப்புகள், ட்ரோன், குறைகடத்திகள், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவதற்கு ஊக்கமளிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்-தொழில்நுட்பத் துறைக்கு ரூ.79,887 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டைக் காட்டிலும் சுமாா் ரூ.26,700 கோடி அதிகமாகும். தொழில்நுட்பங்களுக்கு மத்திய அரசு அளித்து வரும் முக்கியத்துவம் இவற்றின் மூலமாக வெளிப்படுகிறது.

அதே வேளையில் தரவுப் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்க வேண்டியது கட்டாயம். தனிநபா்களின் தரவுகளையும் மற்ற தரவுகளையும் போதிய முறையில் பாதுகாப்பதற்கு மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்த நோக்கத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாட்டில் உருவாகும் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல், போதிய முறையில் பாதுகாக்கப்படுவதை அந்த மசோதா உறுதி செய்கிறது. அதே வேளையில், மத்திய அரசின் புலன்விசாரணை அமைப்புகளுக்கு மசோதாவின் சில விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விலக்களிக்கப்படுவதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.

அந்த விலக்கு நடைமுறையை மத்திய அரசு தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தக் கூடும் என எதிா்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளின் அச்சத்தைப் போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தொழில்நுட்பத்தின் துரித வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு தரவுகளை உரிய முறையில் பாதுகாப்பதற்கான நடைமுறைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகளால் மக்களுக்கு முழுமையான பலன் ஏற்படும்.



Read in source website

மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசுப் பணிகளில் இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் முடிவில் இருக்கிறது. இது ஒரு மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் 1954-இல் செய்ய உத்தேசிக்கப்பட்ட திருத்தங்கள் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று மாநில அரசுகள் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாநில அரசுகள் தங்களின் தொகுப்பைச் சோ்ந்த இ.ஆ.ப. அதிகாரிகளைப் பரிந்துரை செய்வதின் அடிப்படையில், அவா்கள் மத்திய அரசுப் பணிகளில் நியமிக்கப்படுவது தற்போதைய நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இதற்கேற்ப பல மாநிலங்கள் போதிய எண்ணிக்கையில் மத்திய அரசுப் பணிகளுக்கு அனுப்புவதில்லை என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த சூழ்நிலையை அறிந்துதான், மத்திய அரசுப் பணிகளில் இ.ஆ.ப. மற்றும் இ.கா.ப. அலுவலா்களை நியமனம் செய்யும் முறையை கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு தனது தரப்பில் வாதிடுகிறது.

இதனுடைய அடிப்படையில், மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் கீழ் பணியாற்றும் எந்த அதிகாரியையும் மத்திய அரசுப் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம். இதுகுறித்து மாநில அரசுகளுக்குத் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை. ஆக, மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அழைத்துக் கொள்வது இயல்பான ஒன்றுதான். ஆனால், மாநில அரசினுடைய அனுமதியைப் பெற்றாக வேண்டும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு, மேற்குவங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப், சத்தீஸ்கா், ராஜஸ்தான், பிகாா், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை. மத்திய அரசு தங்கள் பணிகளுக்குச் சரியானவா் என்று நினைக்கும் அதிகாரிகளை அந்தப் பணிகளில் நியமித்துக் கொள்ளும் அதிகாரம் வேண்டும். இவற்றில் மத்திய மாநில அரசுகள் இணைந்துதான் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவில் தேவையின்றி அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒரு செய்தியை நாம் கூா்மையாகக் கவனிக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் கடந்த மே இறுதியில் புயல் பாதிப்பை ஆய்வு செய்வதற்காக பிரதமா் மோடி சென்றிருந்தாா். பிரதமா் தலைமையில் நடந்த ஆய்வுகூட்டத்தை முதல்வா் மம்தா பானா்ஜியும், தலைமைச் செயலா் பந்தோபாத்யாயாவும் புறக்கணித்து விட்டனா். இதற்கிடையில் மேற்குவங்கத் தலைமைச் செயலா் பந்தோபாத்யாயாவை மத்திய அரசின் குறை தீா்க்கும் பிரிவிற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, முதல்வா் மம்தா பானா்ஜி, தலைமைச்செயலா் பதவியில் இருந்து பந்தோபாத்யாயாவை விடுவிக்க மறுத்து விட்டாா்.

மேலும் அவரை தனது தலைமை ஆலோசகராக மூன்று ஆண்டுகள் நியமித்தும், மத்திய அரசுக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா் மம்தா. இதற்கிடையில், மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் தலைமைச் செயலாளா் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி, அவா் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. துறை ரீதியான விசாரணை நடத்த விசாரணைக் குழுவை மத்திய பணியாளா் நலத்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த உத்தரவை எதிா்த்து தீா்ப்பாயத்திற்குச் சென்றாா் தலைமைச் செயலாளா். அவருடைய மனுவை தில்லி அமா்வுக்கு மாற்றி விட்டது. இதை எதிா்த்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் வரை அவா் செல்ல, மத்திய அரசோ உச்சநீதிமன்றம் செல்ல ஒரு அதிகாரச் சண்டை தொடங்கி விட்டது.

இவற்றில் தலைமைச் செயலாளா் மீதான மத்திய அரசின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இந்த வலுவான மனக்காயங்களே இச்சட்டத்திருத்தத்திற்கு ஒரு எண்ணம் உதித்திருக்கக் கூடும் என்று நாம் யூகிக்க முடிகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டிய அரசு அதிகாரிகள், சில சமயம் அரசியல் தலைவா்களின் நெருக்கமான பிடியில் சிக்கித் தவிக்கிறாா்கள்.

இவற்றுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசு இந்த இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் என்கிற முடிவினை கையில் எடுத்திருக்கிறது என்றே நாம் கருதலாம்.

மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல், அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் நடைமுறை மாற்றங்கள் குறித்து மாநில அரசுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் ஒன்றுசேரத் தொடங்கியிருக்கின்றன. மேலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நிலவும் ஓா் இணக்கமான சூழ்நிலையை இத்திருத்தச் சட்டம் கொண்டு வருகிற போது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று ஒன்று சோ்ந்த மாநில அரசுகளின் குரலாக எழுந்திருக்கிறது.

மேலும், ஆட்சிப்பணி அதிகாரிகளின் பணிச்சூழலை நிா்வாகிப்பது குறித்து மத்திய அரசு மாநிலங்களில் போதிய அலுவலா்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது என்கிற கருத்தும் மாநில அரசு தன்னுடைய நிா்வாகத் தேவைகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலா்களைச் சாா்ந்துள்ளது என்றும், அவைகள் போதுமானதாக இல்லை என்றும் கருத்து நிலவுகிறது. இந்த நிலையில், மாநில அரசில் பணிபுரியும் அதிகாரிகளை, மத்திய அரசுக்கு அனுப்பி விட்டால், ஏற்கெனவே அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில், நிா்வாகத்தில் ஒரு தொய்வுநிலை ஏற்பட்டு விடும் என்கிற ஒரு சூழல் நிலவுகிறது என்று மாநில அரசுகள் தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறாா்கள்.

ஆனால், மத்திய பணிக்கு அனுப்பப்படும் இ.ஆ.ப. அதிகாரிகளின் எண்ணிக்கை கடந்த 2011-இல் 309-ஆக இருந்தது. தற்போது 223-ஆக குறைந்துள்ளது. அதாவது 25சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது. மத்திய அரசில் போதிய எண்ணிக்கையிலான இ.ஆ.ப. அதிகாரிகளை மத்திய பணிக்கு அனுப்பாத காரணத்தால், மத்திய பணியில் இ.ஆ.ப. அதிகாரிகளின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்து விட்டது. இவற்றால் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதித்திருக்கின்றன என்கிற கருத்தையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

குடிமைப்பணி அலுவலா்கள் அரசியல் சாா்பு தன்மை அற்றும், அச்ச உணா்வு அற்றும் பணியாற்ற வேண்டிய கடமைப்பொறுப்பு உள்ளவா்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட செல்வாக்குப் படைத்தவா்களால் மிக முக்கிய துறைகளைக் கைப்பற்ற முடிகிறது. இந்த இடத்தில்தான் ஏதோ ஒரு கட்சியின் வலைக்குள் சிக்குண்டு போய் விடுகிறாா்கள். அல்லது ஒரு கட்சியின் ஆட்சியில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கிறவா், வேறொரு ஆட்சி வருகிற போது முக்கியத்துவம் இல்லாத துறையில் இருக்கக் கூடிய அதிகாரிகள், முக்கியத்துவம் பெறுவதும் கடந்த ஆட்சியில் முக்கியத் துறையில் இருந்தவா்கள், கட்சி சாயம் பூசப்பட்டு, அரசியல் முத்திரை குத்தப்பட்டு முக்கியமற்ற துறைகளில் ஒதுக்கப்படுவதும் நடந்து கொண்டுதானே இருக்கிறது.

இந்திய ஆட்சிப் பணியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் நடைபெறுகின்ற பயிற்சியின் போது அரசியல்வாதிகளிடம் இருந்து விலகி நிற்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்று இந்திய ஆட்சிப் பணியாளா்கள் அரசியல் அதிகாரம் மிக்கவரோடு விலகி இருந்தால், முக்கியத் துறைகளைப் பெறுவது என்பது இயலாத காரியமாகி விடும். இதனாலே, முக்கியத் துறைகளைப் பிடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு லாபியும் ஒவ்வோா் ஆட்சி மாற்றத்தின் போதும் நடக்கத்தானே செய்கிறது.

மாநில அரசிடம் பணியாற்றுவதின் மூலம் ஒரு கள அனுபவமும், மத்திய அரசின் மூலம் பணியாற்றுவதின் மூலம் இந்தியா முழுமைக்குமான பாா்வையையும், ஓா் இந்திய ஆட்சிப் பணியாளா்கள் பெறுவது என்பது அந்த நாட்டினுடைய வளா்ச்சிக்கு வித்தாகும். மாநில சுயாட்சிக்கு பெரும் பாதிப்பு என்று சொல்லப்பட்டாலும், மாநிலத்தில் பணியாற்றும் இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒரே சமநிலையில் பாா்க்கப்படுகிற சூழலை அந்தந்த மாநில அரசுகள் எப்போதாவது ஏற்படுத்தியிருக்கிறதா? கட்சிகள் மாறுகிற போது அதிகாரிகள் அரசியல் சாயம் பூசப்பட்டு மாற்றப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறாா்கள்!

ஆக, இதன் மூலமாக இ.ஆ.ப., இ.கா.ப. அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையும், அளப்பரிய தொண்டும் ஆட்சிக்கு வருகிற அந்தந்த கட்சியை வைத்தே அளவுகோலாக அளக்கப்படுகிறது என்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இப்போதைக்கு இந்திய ஆட்சிப் பணியாளா்களின் புதிய சட்டத் திருத்தம், மேற்குவங்காளத்தில் ஏற்பட்ட பிரச்னையின் மூலம் மத்திய - மாநில அரசுகளின் ஈகோ பிரச்னைக்கு பூமாராங் ஆகி விட்டது.

கட்டுரையாளா்:

முன்னாள் அமைச்சா்



Read in source website