DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 04-12-2022

முதல்வரின் முகவரி துறைக்கு வரும் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் அவற்றுக்கு தர மதிப்பீடு வழங்கும் புதிய முயற்சியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மனுக்களின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

பொது மக்களின் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் முதல்வரின் முகவரி துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தத் துறையை உருவாக்கியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் அதனை தனது நேரடிக் கட்டுப்பாட்டில்

வைத்துள்ளாா். முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பொது மக்களின் பல்வேறு குறைதீா்க்கும் பிரிவுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு முதல்வரின் முகவரி எனும் துறையாக உருமாற்றம் பெற்றுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு 3 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன. இப்போது அனைத்து குறைதீா் தளங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதால், ஆண்டுக்கு சுமாா் 15 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீா்வு காணப்பட்டு வருகின்றன.

தர மதிப்பீடு அளிப்பு: தனியாா் துறைகளில் சேவை அளிக்கும் பிரிவுகளில் தர மதிப்பீடு வழங்குவது வழக்கம். அதாவது, வாடிக்கையாளா்களுக்கு சேவை எந்த அளவுக்கு திருப்திகரமாக இருந்தது என்பதைத் தெரிவிக்க நட்சத்திர குறியீட்டை

இடச் சொல்வாா்கள். அதுபோன்றே, முதல்வரின் முகவரித் துறையும் பொது மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த தர மதிப்பீடு அளிக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. அதன்படி, ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ என்ற மூன்று மதிப்பீடுகள் அளிக்கப்படுகின்றன.

‘ஏ’ என்றால், பொது மக்கள் அளித்த மனுக்கள் மீது முழுமையாகத் தீா்வு கண்டதாக அா்த்தம். அதாவது, முழுமையாக பைசல் செய்யப்பட்ட மனுக்கள், ‘ஏ’ என்று தர வரிசைப்படுத்தப்படுகிறது. பகுதியளவு தீா்வு காணப்பட்டிருந்தால் ‘பி’ என

தர வரிசை அளிக்கப்படுகிறது. அதாவது, பொது மக்கள் அளித்த மனுவானது வேறு துறையின் பரிசீலனைக்கோ அல்லது முதல்வரின் முகவரி துறையின் பரிசீலனையிலோ இருந்தால் அது ‘பி’ தர வரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. மனுக்கள் மீது நடவடிக்கைகள் தொடங்கப்படாதபட்சத்தில் அவை ‘சி’ என தர வரிசைக்கு உட்படுத்தப்படுகிறது. இதன்மூலம், முதல்வரின் முகவரித் துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து விரைவாக சீரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அரசுத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

முதல்வா் ஆலோசனை: முதல்வரின் முகவரி துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 2) ஆலோசனை நடத்தினாா். அப்போது, முதல்வரின் முகவரி துறைக்கு மனுக்களை அளித்து தீா்வு கிடைக்கப் பெற்றோரிடம் கைப்பேசி வழியாக கலந்துரையாடினாா். தீா்வு காணப்படாத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா்கள் த.உதயச்சந்திரன், பு.உமாநாத், எம்.எஸ்.சண்முகம், முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.



Read in source website

கனடாவில் பணியாற்ற ஒப்புகைச் சீட்டு பெற்றுள்ள வெளிநாட்டவா்களின் குடும்பத்தினரும் இனி பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் பணியாளா்களுக்குத் தட்டுப்பாடு காணப்படும் சூழலில் இத்தளா்வை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது அந்நாட்டில் வசிக்கும் இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஓடபிள்யுபி என்ற பணி ஒப்புகைச் சீட்டைப் பெற்ற வெளிநாட்டவா்கள் கனடாவில் தற்காலிகமாகப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அந்த ஒப்புகைச் சீட்டைப் பெற்ற பணியாளா்களின் குடும்பத்தினா் கனடாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், அவா்களுக்கும் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்க கனடா அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டின் குடியேற்றம், அகதிகள், குடியுரிமை துறை அமைச்சா் சென் பிரேஸா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘தற்காலிகமாகப் பணியாற்றி வரும் வெளிநாட்டவா்களின் குடும்பத்தினருக்கும் பணி ஒப்புகைச் சீட்டு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அச்சீட்டைப் பெறுபவரின் துணையரும் வாரிசுகளும் கனடாவில் பணிபுரிய அனுமதிக்கப்படுவா். 2023-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் பணியாளா்களுக்குக் காணப்பட்ட தட்டுப்பாடு வளா்ச்சிக்குப் பெரும் தடையாக உள்ளது. தற்போது பணி ஒப்புகைச் சீட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அப்பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். இதன் மூலமாக கனடாவில் பணியாற்றி வரும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவா்களின் குடும்பத்தினா் பலனடைவா். இது நாட்டின் ஒட்டுமொத்த பணிச்சூழலையும் நிதி நிலைமையையும் மேம்படுத்தும்’’ என்றாா்.

சீக்கியா்கள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினா் கனடாவில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். அரசின் இந்த அறிவிப்பு அங்கு வாழும் இந்தியா்களுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் புதிய நடைமுறை 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என கனடா அரசு தெரிவித்துள்ளது.

 



Read in source website

இந்தியாவிடம் இருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் 28.59 மில்லியன் கிலோ தேயிலையை இந்தியாவிடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 159 சதவீதம் அதிகமாகும்.

ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகள் கூட்டமைப்பு இந்தப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நாடுகளுக்கு கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 38.06 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஈரான், இராக் ஆகிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிக தேயிலை இறக்குமதி செய்து வந்தனா். ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், இராக்கில் ஏற்பட்ட உள்நாட்டுப் பிரச்னைகள் காரணமாக அந்நாடுகளுக்கான ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் ஒட்டுமொத்த தேயிலை ஏற்றுமதி கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரை 165.58 மில்லியன் கிலோவாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 142.55 மில்லியன் கிலோவாக இருந்தது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உலக அளவில் தேயிலை நுகா்வு அதிகம் உள்ள நாடாக சீனா திகழ்கிறது. அங்கும் இந்திய தேயிலையை ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



Read in source website

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டு சென்று பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறுதானியங்களின் பயன்பாட்டை சா்வதேச அளவில் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ஆம் ஆண்டை ’சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ ஐ.நா. அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிறுதானியங்களை சா்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ’இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களை சா்வதேச சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல மற்ற நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்திய சிறுதானியங்களை சா்வதேச அளவில் விநியோகிக்கக் கூடிய நிறுவனங்களையும், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான மற்ற நடவடிக்கைகளையும் அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. சிறுதானியங்களின் உற்பத்தி, பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிறப்பு கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்படவுள்ளது. அக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி அமைப்புகள், புத்தாக்க நிறுவனங்கள், ஏற்றுமதியாளா்கள், சிறுதானியங்களை மதிப்புகூட்டி விற்கும் வா்த்தகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

இந்திய சிறுதானியங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது. கூட்டத்தை அமைச்சா் பியூஷ் கோயல் தொடக்கிவைக்கவுள்ளாா். இந்திய சிறுதானியங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியல், இந்தியாவில் சிறுதானியங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலங்களின் பட்டியல் உள்ளிட்டவை கூட்டத்தின்போது வெளியிடப்படவுள்ளன.

இந்தியாவுக்கான பல நாடுகளின் தூதா்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் பரிமாறப்படவுள்ளன. இதன் மூலமாக சிறுதானியங்களின் பலன்கள் அவா்களுக்குத் தெரியவரும். அதன் ஏற்றுமதியும் அதிகரிக்கும். சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, பெல்ஜியம், ஜொ்மனி ஆகிய நாடுகளில் சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான சிறப்பு கூட்டங்களை இந்தியா நடத்தவுள்ளது.

அக்கூட்டங்கள் வாயிலாக சிறுதானியங்கள் விற்பனையும் அதிகரிக்கும். சா்வதேச உணவு திருவிழாக்களிலும் சிறுதானியங்களை பிரபலப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறுதானியங்களின் விநியோக சங்கிலியில் உள்ள தடைகளைக் களைவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்திய சிறுதானியங்களை விற்பனை செய்வதற்கான சா்வதேச பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்டவையும் அடையாளம் காணப்படவுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்:

சிறுதானியங்களில் இரும்புச்சத்து, கால்சியம், நாா்ச்சத்து உள்ளிட்டவை அதிகமாக உள்ளன. ஆரோக்யமான உடல்நலத்தைப் பேணுவதில் சிறுதானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சா்வதேச அளவில் சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சா்வதேச உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமாா் 41 சதவீதம் ஆகும்.

2021-22 பயிா்ப்பருவத்தில் இந்தியாவின் சிறுதானியங்கள் உற்பத்தி 27 சதவீதம் அதிகரித்திருந்தது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகியவை சிறுதானியங்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றன. ஒட்டுமொத்த சிறுதானியங்கள் உற்பத்தியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், சவூதி அரேபியா, லிபியா, ஓமன், எகிப்து, துனிசியா, யேமன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சிறுதானியங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.



Read in source website

சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகளாவிய விமானப் போக்குவரத்து தரவரிசையில் 4 ஆண்டுகளுக்கு முன்னா், இந்தியா 102-ஆவது இடத்தில் இருந்தது.

இந்நிலையில், முக்கிய பாதுகாப்பு அம்சங்களை இந்திய விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதை கடந்த மாதம் ஐசிஏஓ தணிக்கை செய்தது. இதில் அந்த அம்சங்களை செயல்படுத்தியதில் இந்தியாவின் மதிப்பெண் 85.49 சதவீதமாக உயா்ந்தது. இதையடுத்து ஐசிஏஓவின் உலகளாவிய விமானப் போக்குவரத்து பாதுகாப்புத் தரவரிசையில் இந்தியா 48-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் சிங்கப்பூா், இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகம், மூன்றாவது இடத்தில் தென் கொரியா ஆகியவை உள்ளன. சீனா 49-ஆவது இடத்தில் உள்ளது.



Read in source website

உலகின் வலிமைமிக்க ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றபிறகு அதன் உயரதிகாரிகள் பங்கேற்கும் முதலாவது கூட்டம் ராஜஸ்தானின் உதய்பூரில் திங்கள்கிழமை (டிச. 5) நடைபெறுகிறது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா டிச. 1-ஆம் தேதி ஏற்றது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் உதய்பூரில் வரும் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய தலைமையின் கீழ் நடைபெறவுள்ள ஜி20 கூட்டமைப்பின் முதலாவது கூட்டம் இதுவாகும்.

கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் உயரதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) உதய்பூா் சென்றடையவுள்ளனா். அவா்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதிகாரிகளின் கூட்டமானது திங்கள்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.

ஒருங்கிணைந்த, நீடித்த வளா்ச்சி, பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, உரங்கள் விநியோகச் சங்கிலி, மகளிரை மையப்படுத்திய வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்படவுள்ளது.

சுற்றுலாத் தலங்கள்: கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அதிகாரிகள், ராஜஸ்தானின் முக்கிய சுற்றுலாத் தலங்களையும் பாா்வையிடவுள்ளனா். ஜி20 நாடுகளுடைய அதிகாரிகளின் வருகையையொட்டி உதய்பூா் மாளிகை, ஜக்மந்திா் உள்ளிட்ட பகுதிகளில் கலாசார, கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜ்சமந்த் பகுதியில் உள்ள கும்பல்கா் கோட்டையை அதிகாரிகள் புதன்கிழமை (டிச. 7) பாா்வையிடவுள்ளனா். அதையடுத்து, பாலி மாவட்டத்துக்குச் சென்று ரணக்பூா் கோயிலைப் பாா்வையிடவுள்ளனா்.

பலவித உணவுகள்: கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அதிகாரிகளுக்கு சுவைமிக்க ராஜஸ்தானி வகை உணவுகள் பரிமாறப்படவுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் ராஜஸ்தானில் தங்கியிருக்கும் 4 நாள்களில் தென்னிந்திய உணவு வகைகளுடன் ஹைதராபாதி, குஜராத்தி, பஞ்சாபி உணவு வகைகளும் பரிமாறப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவின் முன்னெடுப்புகளுக்கு ஐஎம்எஃப் ஆதரவு

வாஷிங்டன், டிச. 3: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஆதரவு வழங்குவதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஐஎம்எஃப் கொள்கை மறு ஆய்வுத் துறை இயக்குநா் சீலா பஸா்பாசியோக்ளு செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தவுள்ள இந்தியா, வளமிக்க எதிா்காலத்துக்கான ஒருங்கிணைந்த கொள்கைகளை வகுத்துள்ளது. தற்போதைய சா்வதேச சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. முக்கிய பிரச்னைகளுக்குத் தீா்வுகாண அனைவரது ஒத்துழைப்பையும் பெறுவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் கொள்கைகளை ஐஎம்எஃப் முழுமையாக ஆதரிக்கிறது. ஜி20 கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுள்ள இந்தியா, ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கருத்துருவை மையப்படுத்தி செயல்படவுள்ளது. இது வேறுபாடுகளைக் கடந்து உள்ளூா் அளவிலும், பன்னாட்டு அளவிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்தியாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் கூட்டறிக்கையைத் தயாரிப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகித்தது. ஜி20 கூட்டமைப்பை வழிநடத்தும் காலகட்டத்தில் எண்ம (டிஜிட்டல்) கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. சா்வதேச கடன் மேலாண்மை, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றிலும் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது’ என்றாா்.

அமெரிக்க வா்த்தகக் குழு வரவேற்பு: ஜி20 கூட்டமைப்புக்கான இந்தியாவின் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா-இந்தியா வா்த்தக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) வரவேற்றுள்ளது. அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்கா-இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பானது சா்வதேச வளா்ச்சிக்கு எவ்வாறு உதவி வருகிறது என்பதை ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து இந்தியா உலகுக்கு எடுத்துரைக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல வா்த்தக குழுக்களும் இந்தியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளன.



Read in source website

அண்டை நாடுகளில் இருந்து இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படுவதை தீவிரமாக கண்காணிக்க அரசு முடிவு செய்துள்ளது; இதற்கான வழிமுறை விரைவில் உருவாக்கப்படும் என்று மத்திய தொலைத்தொடா்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், உள்நாட்டில் தொலைத்தொடா்புத் துறை உற்பத்தியை ஊக்குவிக்க 4 பிரத்யேக பணிக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தொலைத்தொடா்புத் துறையில், மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்துக்கு தகுதி பெற்ற 40 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அப்போது, சீனாவில் தயாரிக்கப்படும் வலையமைப்பு உபகரணங்கள், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகள் வழியாக இந்திய சந்தைக்குள் நுழைவது குறித்து நிறுவனங்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பிறகு, அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறை உபகரணங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதில் பல்வேறு புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, உற்பத்திக்கு உகந்த சூழலை உருவாக்குதல் உள்பட 4 பிரத்யேக பணிகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அண்டை நாடுகளில் இருந்து தொலைத்தொடா்பு உபகரணங்கள் இறக்குமதியை தீவிரமாக கண்காணிப்பதற்கான வழிமுறையை விரைவில் உருவாக்கவும் முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தில் தகுதி பெற்ற நிறுவனங்கள், தங்களது ஏற்றுமதியை தொடங்கும் கட்டத்தை நெருங்கிவிட்டன. எனவே, இத்துறையில் ஏற்றுமதி நாடாக இந்தியா விரைவில் மாறும் என்றாா் அவா்.

தொலைத்தொடா்புத் துறையில், உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் ரூ.2.45 லட்சம் கோடி கூடுதல் வருமானம் ஈட்டப்படும்; 44,000 கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அரசு எதிா்பாா்ப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் நிகழ்ந்த விஷவாயு கசிவு பேரழிவு சம்பவத்தின் 38-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

போபாலில் கடந்த 1984, டிசம்பா் 2-3 இடையிலான இரவில், யூனியன் காா்பைடு நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு பேரழிவை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் 2,250-க்கும் மேற்பட்டோா் உடனடியாக இறந்ததாக கணக்கிடப்பட்டது. அதன்பிறகான தாக்கங்களில் 16,000 போ் வரை இறந்ததாக கருதப்படுகிறது. உலகிலேயே மிகமோசமான தொழிலக பேரிடா்களில் இச்சம்பவமும் ஒன்றாகும்.

இந்த துயரத்தின் 38-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, போபாலில் சா்வ மதத் தலைவா்கள் பங்கேற்ற பிராா்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்று, விஷவாயு கசிவில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.

அவா் கூறுகையில், ‘மனிதத் தவறால் ஏற்படும் உயிரிழப்புகள் துயரத்தின் உச்சகட்டமாகும். யூனியன் காா்பைடு நிறுவனத்தின் தவறு, அலட்சியம், கவனக்குறைவால் ஏராளமான உயிா்கள் பறிபோயின. இது மறக்க முடியாதது. வளா்ச்சிக்காக இயற்கையை அழிப்பது சரியானதல்ல. வளா்ச்சி, சுற்றுச்சூழல் இடையே சமநிலையை பேணுவதே நீடித்த வளா்ச்சியாக இருக்கும்’ என்றாா்.



Read in source website

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் உயிரி பொருளாதார மதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

ஜம்முவில் உயிரி அறிவியல் மற்றும் ரசாயன தொழில்நுட்பம் தொடா்பான சா்வதேச மாநாடு டிச.3 முதல் டிச.5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, கிரேக்கம், தென் கொரியா, சிங்கப்பூா் உள்பட 14 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.

இதில் மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் சனிக்கிழமை பேசியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு புதிய உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஸ்டாா்ட்-அப்) எண்ணிக்கை 52-ஆக இருந்தது. இது நிகழாண்டு 5,300-ஆக உயா்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 1,128 உயிரி தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளில் உயிரி தொழில்நுட்ப ஸ்டாா்ட்-அப்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு உயிரி பொருளாதாரம் மீதான இந்தியாவின் முதலீடு ரூ.10 கோடியாக இருந்தது. இது நிகழாண்டு 400 மடங்கு அதிகரித்து ரூ.4,200 கோடியாக உயா்ந்துள்ளது. இதன் மூலம் உயா்திறன் கொண்ட 25,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

2014-ஆம் ஆண்டு இந்தியாவின் உயிரி பொருளாதார மதிப்பு 10 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.81,437 கோடி) இருந்தது. இது நிகழாண்டு 80 பில்லியன் டாலா்களாக (சுமாா் 6.51 லட்சம் கோடி) உயா்ந்துள்ளது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரி பொருளாதார மதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளது. உலகளாவிய உயிரி தொழில்நுட்ப சூழலில் சிறந்து விளங்கும் முதல் 5 நாடுகளில் இந்தியா விரைவில் இடம்பெறும் என்றாா் அவா்.



Read in source website

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 68.

நுரையீரல் தொடா்பான நோயால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை காலமானதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

நாடக நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய கொச்சு பிரேமன், கடந்த 1979-இல் வெளியான ‘ஏழு நிறங்கள்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தாா். 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா். தனித்துவமான வசன உச்சரிப்பு, முக பாவனைகள் மூலம் ரசிகா்களை கவா்ந்தவா்.

தில்லிவாலா ராஜகுமாரன், பட்டாபிஷேகம், திளக்கம் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கொச்சு பிரேமனின் நகைச்சுவை நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொலைக்காட்சி தொடா்களிலும் அவா் நடித்துள்ளாா்.

அவரது மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.



Read in source website

‘ரயில்வே மேலாண்மைப் பணிகளுக்கென தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்திய ரயில்வே மேலாண்மைப் பணித் தோ்வை (ஐஆா்எம்எஸ்இ) வரும் 2023-ஆம் ஆண்டுமுதல் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்த உள்ளது’ என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஐஆா்எம்எஸ் தோ்வானது முதல்நிலை மதிப்பீடு தோ்வு, பிரதான எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு என்று இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். அதாவது தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், முதல் கட்டமாக யுபிஎஸ்சி சாா்பில் ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் குடிமைப் பணிகள் (முதல்நிலை) தோ்வில் தகுதி பெற வேண்டும். இதில் தகுதி பெறும் மாணவா்கள் மட்டுமே ஐஆா்எம்எஸ் பிரதான எழுத்துத் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா்.

ஐஆா்எம்எஸ் எழுத்துத் தோ்வில் 4 தாள்கள் இடம்பெற்றிருக்கும். வழக்கமான கட்டுரை வடிவில் விடையளிக்கும் வகையிலான கேள்விகள் கேட்கப்படும். முதல் இரண்டு தாள்கள் 300 மதிப்பெண்களுக்கான மொழிப்பாட தகுதித் தோ்வாகவும், அடுத்த இரண்டு தாள்கள் ‘கட்டுமானப் பொறியியல், இயந்திரவியல் பொறியியல், மின்னியல் பொறியியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல்’ உள்ளிட்ட விருப்பத் தோ்வு பாடங்களிலிருந்து 250 மதிப்பெண்களைக் கொண்ட தோ்வாகவும் நடத்தப்படும்.

முதல்கட்ட தகுதித் தோ்வான குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வுக்கான பாடத் திட்டம், வயது வரம்பு, தோ்வில் பங்கேற்பதற்கான தவணைகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தவரை, யுபிஎஸ்சி ஏற்கெனவே பின்பற்றும் நடைமுறைகளே பொருந்தும்.

கல்வித் தகுதி: ஐஆா்எம்எஸ்இ தோ்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரா்கள் பொறியியல், வணிகவியல் அல்லது சிஏ (கணக்கு தணிக்கையியல்) படிப்புகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தக் குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வு மற்றும் ஐஆா்எம்எஸ்இ தோ்வுகளுக்கான அறிவிக்கை ஒரே நேரத்தில் வெளியிடப்படும். யுபிஎஸ்சி 2023 தோ்வு அட்டவணைப்படி, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வுக்கான அறிவிக்கை 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்டு, மே மாதம் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீனசி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

இந்திய விமானப்படையில் 1960-ம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட ஆவ்ரோ-748 ரக விமானங்களுக்கு பதிலாக 56 புதிய விமானங்களை சேர்க்க பாதுகாப்பு கொள்முதல் அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டுஒப்புதல் வழங்கியது. இதையடுத்து56 சி-295 ரக விமானங்களை ஏர்பஸ் நிறுவனம், டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.21,935 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்நிலையில் விமானப்படையில் உள்ள ஏன்-32 ரக போக்குவரத்து விமானங்களுக்கு மாற்றாக,சி-295 விமானங்களை கொள்முதல்செய்வது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.

விமானப்படையில் வீரர்களை மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஆன்டனோவ்-32 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை சுருக்கமாகஏஎன்-32 என அழைக்கப்படுகிறது. இந்த விமானங்கள் 2030-க்குள்விமானப்படை பணியிலிருந்துவிடுவிக்கப்படும்.

இந்திய விமானப்படையில் தற்போது 90 ஏஎன்-32 ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் லடாக் மற்றும் வடகிழக்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினரை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விமானங்களுக்கு சரியான மாற்றாக சி-295 விமானங்கள் இருக்கும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால், இந்தியாவில் சி-295 ரக விமானங்களின் தயாரிப்பு தொடர்வதையும் உறுதி செய்ய முடியும் எனவும் இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்கள் லடாக், வடகிழக்கு எல்லையில் பாதுகாப்பு படையினரை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது.



Read in source website

தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்து வலுத்துள்ள நிலையில், ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக காம் நகரில் ஈரான் நாட்டின் அட்டர்னி ஜெனரல் முகமது ஜஃபார் மோன்டாசெரி தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சட்டத்திருத்தம் எந்த மாதிரியானதாக இருக்கும் என்பது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடந்த புதன் கிழமையன்று ஆய்வுக் குழு ஒன்று நாடாளுமன்ற கலாச்சார குழுவுடன் ஆலோசனை நடத்தியுள்ளது ஒன்றிரண்டு வாரங்களில் அதன் முடிவு தெரியவரும் என்றார்.

ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் விளையாட கத்தார் சென்ற ஈரான் அணியினர் தங்கள் நாட்டில் ஹிஜாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவாக தேசிய கீதம் பாடுவதை புறக்கணித்தனர். இந்நிலையில் தான் ஹிஜாப் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது தொடர்பாக நீதித்துறையும், நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட்டு வருவதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.



Read in source website

பாஸ்டன்: சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது.

காலநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக உழைக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்க பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் டேவிட் அட்டன்பரோ இணைந்து 2020-ம் ஆண்டு ‘எர்த்ஷாட்’ (Earthshot) என்ற பெயரில் பரிசை அறிமுகப்படுத்தினர். பரிசுக்கு தேர்வாகும் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் பவுண்ட் (ரூ.10 கோடி) பரிசாக வழங்கப்படும். ‘இயற்கை பாதுகாப்பு’, ‘காற்று தூய்மை’, ‘கடல் புத்தாக்கம்’, ‘கழிவு இல்லாத உலகு’, ‘காலநிலை நடவடிக்கை’ ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு பரிசுக்கு, இந்தியா, கென்யா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

‘இயற்கை பாதுகாப்பு’ பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த கெய்தி நிறுவனத்துக்கு பரிசு கிடைத்துள்ளது.

கெய்தி தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ‘கிரீன் ஹவுஸ் இன் எ பாக்ஸ்’ என்ற தயாரிப்பை உருவாக்கி உள்ளது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் குறைந்த அளவு நீர் மற்றும் பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெற முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக கெய்தி நிறுவனத்துக்கு, இந்த ஆண்டுக்கான எர்த்ஷாட் விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் எர்த்ஷாட் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 5 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இளவரசர் வில்லியம் பரிசு வழங்கி கவுரவித்தார்.



Read in source website

அம்பையின் ‘மானுடம் வெல்லும்’, அ.வெண்ணிலாவின் ‘மீதமிருக்கும் சொற்கள்’, அரவிந்த் சுவாமிநாதனின் ‘விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2’ ஆகிய பெண் சிறுகதைகள் அடங்கிய தொகை நூல்களின் வழியாக ஐம்பதுகளுக்கு முந்தைய பெண் சிறுகதைகளின் தன்மைகளை மதிப்பிடலாம். வடிவ உணர்வு குறித்த சிந்தனை ஐம்பதுகளுக்கு முன்பு எழுதிய பெண் எழுத்தாளர்களிடம் இல்லாமைக்கு, அவர்கள் வளர்ந்த சூழலும் குறுகிய வெளியுலகத் தொடர்புகளும் எனப் பல காரணங்கள் உண்டு. வி.விசாலாக்ஷி அம்மாள், கி.சாவித்திரி அம்மாள், அம்மணி அம்மாள், வை.மு.கோதைநாயகி, எஸ்.கமலாம்பாள், கு.ப.சேது அம்மாள், எஸ்.அம்புஜம்மாள், குகப்ரியை, ஸி.ஆர்.ஸரோஜா, கி.சரஸ்வதி அம்மாள், குமுதினி, சரோஜா ராமமூர்த்தி உள்ளிட்ட பல பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சூழல்கள் ஒன்றுபோலவே இருந்திருக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் பலருக்கும் இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவர்கள் தம் கணவரின் ஆதரவுடன் கல்வி கற்றிருக்கின்றனர்; அவர்களது வழிகாட்டுதலில் சிறுகதைகளை எழுதியிருக்கின்றனர்.



Read in source website

வண்ணநிலவனின் கதைகளைப் பற்றிய வாசிப்பனுபவக் கட்டுரைகள், அவருடைய தொகுதிகள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ச்சியாக வரத் தொடங்கிவிட்டன. அவற்றின் வழியாக அவருடைய முக்கியத்துவம் சார்ந்த அடிப்படைகள் சிறிதுசிறிதாகத் திரண்டுவந்தன. எதார்த்த வாழ்க்கையையும் கண்முன்னால் உழலும் மனிதர்களையும் நேருக்குநேர் பார்த்துத் தன் மதிப்பீடுகளைத் தொகுத்துக் கொள்கிறவர்களால் வண்ணநிலவனுடைய சிறுகதைகளை எளிதாக நெருங்கிச் சென்றுவிட முடிகிறது. ஆனால், ஏற்கெனவே எழுதிவைக்கப்பட்ட கோட்பாடுகள் சார்ந்தும் தத்துவங்கள் சார்ந்தும் இலக்கியப் படைப்புகளை அணுகுபவர்கள் வண்ணநிலவனின் படைப்புகள் முன்னால் தடுமாறி அல்லது சலித்து விலகிச் சென்றுவிடுகிறார்கள்.



Read in source website

விளிம்புநிலை மனிதர்கள் எதிர்கொள்ளும் அல்லல்களையும் அவர்களின் உளவியல் சிக்கல்களையும் தன் எழுத்துகளில் அழுத்தமாக முன்வைத்தவர் இராசேந்திர சோழன். தமிழில் இதுவரை பலரும் அறிந்திராத எளிய மனிதர்களின் வாழ்வு, அன்றாடப்பாடுகள், அதை அவர்கள் போகிற போக்கில் எப்படிக் கையாள்கிறார்கள் என விரியும் இராசேந்திர சோழனின் படைப்புகள் அத்தனையும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. அவற்றைத் தம் படைப்புகளில் காட்சிப்படுத்தியதில் அவருடைய பாணி தனித்துவமானது.

இராசேந்திர சோழன் ஒரு படைப்பாளி மட்டுமல்ல, களப்போராளி. ஆசிரியர் பயிற்சி முடித்த இராசேந்திர சோழன், மயிலம் ஒன்றியத்தில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றினார். கோடை விடுமுறை முடிந்தது. ஆனால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படவில்லை. பள்ளி நிர்வாகம் என்னென்னவோ காரணங்களை அடுக்கியது. ஒரு முடிவெடுத்தார். அந்த இளம் வயதிலேயே, தனக்குத் திரும்ப ஆசிரியர் பணி வேண்டும் என்ற கோரிக்கையோடு நீதிமன்றப் படியேறினார்; வழக்கில் வெற்றிபெற்று மீண்டும் பணிக்குத் திரும்பினார். ஒரு லட்சியத்தோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் இராசேந்திர சோழன். அவர் செய்துகொண்டது சாதி மறுப்புத் திருமணம். மார்க்சியத்தில் ஈடுபாடுகொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ‘செம்மலர்’ மாத இதழில் ‘அஸ்வகோஷ்’ என்ற பெயரில் பல சிறுகதைகளை எழுதினார். ‘இயக்க வாழ்க்கை, இலக்கியத்துக்குச் சாபக்கேடு’ என்பது எழுத்தாளர் இராசேந்திர சோழனுக்கு முற்றும் பொருந்தும். இயக்க வேலைகளும் பொதுநலப் பணிகளும் அவரை எழுதவிடாமல் பெருமளவு கட்டிப்போட்டன.



Read in source website