DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 30-08-2022


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. 

இதன் மூலம் முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்ட உதவித் தொகை, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களது படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்துவர்களில் 9 நபர்களும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரச்சனைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒருவரும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒருவரும் என 11 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதனை ஊக்குவிக்கும் வண்ணம் இவர்களது சிறந்த இலக்கிய
படைப்பினை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2022-2023-ஆம் ஆண்டுமுதல் உதவித்தொகை ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு சில நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. 

  1. எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. 
  2. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிறமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ்மொழி படைப்பாகவும் இருக்கலாம்.
  3. எம்.பில்., பி.எச்,டி., போன்ற படிப்புகளுக்குத் தயாரிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.
  4. படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். 
  5. ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது.
  6. ஒருமுறை விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.
  7. படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.


Read in source website


எழுத்தாளர் வத்திராயிருப்பு தெ. சுந்தரமகாலிங்கம் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலமானார். அவருக்கு வயது 82.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பலகுடி வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் தெ.சுந்தரமகாலிங்கம். ஓய்வு பெற்ற ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், தமிழில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும், பல இலக்கிய கூட்டங்களிலும் சிறப்புரையாற்றியுள்ளார்.

இதனிடையே, வயது மூப்பு காரணமாக கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தெ. சுந்தரமகாலிங்கம், இன்று (ஆக.30) காலமானார்.

இவர், காலத்தை வாசித்தல், துரோகம் வெட்கம் அறியாது ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். பிடல் காஸ்ட்ரோ புத்தகத்தை  தமிழாக்கம் செய்துள்ளார்.

மேலும், தினமணி, ஜனசக்தி, தீக்கதிர், உள்ளிட்ட நாளிதழ்களில் கட்டுரைகளும் உயிரெழுத்து, அம்ருதா,காலச்சுவடு உள்ளிட்ட மாத இதழில் கட்டுரைகள் மற்றும் வாசக கடிதம் எழுதியுள்ளார்.

இவரின் மனைவி அமர்ஜோதி 2021ஆம் ஆண்டு  உயிரிழந்தார். இவருக்கு திலீபன் (53)கோபிநாத் (52)கௌதமன்(47) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டே தனது கண் மற்றும் உடலை தானம் செய்ய வேண்டும் என அவர் எழுதி வைத்திருந்தார். அதன்படி, தெ. சுந்தரமகாலிங்கத்தின் உடல் மற்றும் கண்ணை குடும்பத்தினர் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக வழங்கினர்.

மேலும், தனக்கு எந்தவிதமான சடங்குகளும் செய்ய வேண்டாம் என அவர் எழுதி வைத்திருந்தததால்,  அதனையும் அவரின் குடும்பத்தினர் நிறைவேற்றினர்.


 



Read in source website

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்கும் மாநாடு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லி பயணத்தையொட்டி  இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று தொடங்கியிருக்கிறது.

மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவது, உயர்கல்வியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது. 

இது மட்டுமல்லாமல், இந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படயிருப்பதாகவும் கூறப்படுகிறது.



Read in source website

தமிழகத்தில் உள்ள அனைத்து முதுநிலை திருக்கோயில்களையும் ‘மாஸ்டா் பிளான்’ திட்டம் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் சென்னை மண்டலத்துக்கு உள்பட்ட திருக்கோயில்களின் செயல் அலுவலா்களுடன் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை மண்டலம் 1 மற்றும் 2 இணை ஆணையாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,216 திருக்கோயில்களில் 108 முதுநிலை திருக்கோயில்கள் உள்ளன. இத்திருக்கோயில்களில் இதுவரை சுமாா் ரூ.160 கோடி அளவுக்கு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டிய திருக்கோயில்கள், திருக்கோயிலுக்கு திருமண மண்டப வசதி செய்து தருதல், திருக்கோயில்களில் இருக்கின்ற பசு மடங்களை புதுப்பிக்கின்ற பணிகள், பயன்பாட்டில் இல்லாத நிலங்களை வாடகைக்கு விட்டு திருக்கோயிலின் வருவாயை பெருக்குதல் போன்றவை குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இன்று திருத்தணியில் ஆய்வு: சென்னையைத் தொடா்ந்து 38 வருவாய் மாவட்டங்களில் உள்ள 20 மண்டலங்களிலும் இதேபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறும். மேலும், முதுநிலை திருக்கோயில்கள் என்று கண்டறியப்பட்ட 48 திருக்கோயில்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த வாரம் அருள்மிகு வடபழனி ஆண்டவா் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை தினம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த திருக்கோயிலை மேம்படுத்த, அதனை மாஸ்டா் பிளான் திட்டத்தில் எடுத்திருக்கிறோம். இத்திருக்கோயிலுக்கு செல்வதற்கு ஏற்கெனவே ஒருபக்க படிக்கட்டுகளையே பயன்படுத்தி வந்தனா். பின்புறம் உள்ள படிக்கட்டுகளையும் பக்தா்கள் பயன்படுத்தும் வகையில் சரிசெய்யப்பட்டு வருகிறது. திருக்கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு தவில் மற்றும் நாகஸ்வர பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும். பக்தா்கள் தங்கும் விடுதியை புனரமைப்பதற்கும், புதிதாக விடுதிகள் கட்டுவதற்கும் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இல்லாத அளவில் அதிக வருமானமும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

பணம் பெறக்கூடாது: இங்கு நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தா்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்படும். இதுபோன்ற அடுக்கடுக்கான திட்டங்களை அனைத்து முதுநிலை திருக்கோயில்களிலும் மாஸ்டா் பிளான் மூலம் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருக்கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்களிடம் பணம் பெறும் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா்கள் இரா.கண்ணன் ந.திருமகள், சி.ஹரிப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website

கடந்த ஆண்டு நாட்டில் பதிவான கள்ள நோட்டு வழக்குகளில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இதுதொடா்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நாட்டில் மொத்தம் 639 கள்ள நோட்டுகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 82 வழக்குகள் பதிவாகியுள்ளன. வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் சா்வதேச எல்லைகளை மேற்கு வங்கம் பகிா்ந்து வரும் நிலையில், அங்கு அதிக அளவில் கள்ள நோட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் 208 கள்ள நோட்டு வழக்குகளும், 2020-ஆம் ஆண்டு 109 கள்ள நோட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு கள்ள நோட்டு வழக்குகள் அதிகம் பதிவான மாநிலங்களில் அஸ்ஸாம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 62 வழக்குகள் பதிவாகின.

அடுத்தடுத்த இடங்களில் 55 வழக்குகளுடன் மகாராஷ்டிரம், 54 வழக்குகளுடன் ராஜஸ்தான், 42 வழக்குகளுடன் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் கடந்த ஆண்டில் அதிகளவில் தற்கொலைகள் பதிவானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் 2-ஆம் இடமும், மத்திய பிரதேசம் 3-ஆம் இடமும் வகிக்கின்றன.

இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்சிஆா்பி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

தொழில்சாா்ந்த பிரச்னைகள், தனிமைப்படுத்தப்பட்ட உணா்வு, வேதனை, வன்முறை, குடும்ப பிரச்னைகள், மனநல பிரச்னைகள், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகுதல், நிதி இழப்பு, நாள்பட்ட வலி போன்றவை தற்கொலைக்கு காரணங்களாகின்றன. நாட்டில் கடந்த 2021-இல் 1,64,033 தற்கொலைகள் பதிவாகின. இது கடந்த 2020-இல் (1,53,052) பதிவானதைக் காட்டிலும் 7.2 சதவீதம் அதிகமாகும்.

நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிகளவில் 22,207 (13.5%) தற்கொலைகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 18,925 (11.5%) தற்கொலைகளும், மத்திய பிரதேசத்தில் 14,965 (9.1%) தற்கொலைகளும், மேற்கு வங்கத்தில் 13,500 (8.2%) தற்கொலைகளும், கா்நாடகத்தில் 13,056 (8%) தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் பதிவான ஒட்டுமொத்த தற்கொலை வீதத்தில், மேற்கண்ட 5 மாநிலங்களும் 50.4 சதவீதம் பங்கு வகிக்கின்றன. மீதமுள்ள 49.6 சதவீத தற்கொலைகள் 23 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளன. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 16.9 சதவீதத்தை உள்ளடக்கிய உத்தர பிரதேசத்தில், தற்கொலை வீதம் 3.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

யூனியன் பிரதேசத்தை பொருத்தமட்டில், மக்கள்தொகை அதிகம் நிறைந்த தில்லியில் 2,840 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக புதுச்சேரியில் 504 போ் தற்கொலை செய்து கொண்டனா். நாடு முழுவதும் பெருநகரங்களில் இதே காலகட்டத்தில் 25,891 தற்கொலை பதிவாகியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website


ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்தால், சேவைக் கட்டணத்துடன் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிமுறை பொருந்தும் எனவும் மத்திய நிதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் ஒப்பந்த நிறுவனங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ஏசி அல்லது முதல் வகுப்பில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவைக் கட்டணத்துடன் 5 சதவிகித ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று விமானப் பயணம், தங்கும் விடுதிகள் போன்றவற்றின் முன்பதிவை ரத்து செய்தாலும், ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Read in source website

 

2021ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி மகாராஷ்டிரா 22,207 தற்கொலைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகம் 18,295 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் 2020ஐ விட 2021இல் 0.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பார்த்தால் 11.5 சதவிகிதம் தற்கொலைகள் தமிழகத்தில் மட்டுமே நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த தகவலின்படி 25.6 சதவிகிதம் பேர் தினக்கூலி செய்பவர்கள், 14.1 சதவிகிதம் குடும்ப தலைவிகள், 12.3 சதவிகிதம் சுய தொழில் பணி புரிபவர்கள், 9.7 சதவிகிதம் ஊதியம் பெறுபவர்கள், 8.4 சதவிகிதம் வேலையில்லாதவர்கள், 8 சதவிகிதம் பள்ளி மாணவ மாணவிகளும் அடங்கும்.

கர்நாடகாவில் 2469 பேரும், ஆந்திராவில் 2496 பேரும் நோய்மையின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

“சமூகம் இன்னும் ஆதரவு தேவைப்படும் நபர்களை ஒதுக்கி வைக்கிறது, மேலும் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மனநலம் சரியில்லாதவர்கள் என்ற முத்திரை குத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு என்.ஜி.ஓ.உதவி எண்களை வழங்குகிறது” என ஸ்ராதாவின் தலைவர் சுகன்யா நம்பியார் தெரிவித்துள்ளார்.



Read in source website

 

உலக பணக்காரர்களின் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட்யைப் பின்னுக்குத் தள்ளி 3-வது  இடத்தைப் பிடித்தார் அதானி.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி(60) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இருப்பவர்.

இந்நிலையில், ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 137.4 பில்லியன் டாலர் (ரூ. 10.8 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் 3-வது இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுடன் உலகின் 4-வது பெரிய பணக்காரராக இருந்தார்.

இந்நிலையில் தற்போது, பணக்காரர்கள் பட்டியலில் ஆசியாவில் முதலிடத்தையும் உலகளவில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் (ரூ. 20 லட்சம் கோடி) முதலிடத்திலும் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ் (ரூ. 12.4 லட்சம் கோடி) 2-வது மற்றும் எல்விஎம்எச் நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் அர்னால்ட் (10.6 லட்சம் கோடி) 4-வது இடத்திலும் உள்ளனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 111.4 பில்லியன் (ரூ. 8.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பில் 5-வது இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 7.4 லட்சம் கோடியுடன் 10 ஆம் இடத்திலிருந்து 11-வது இடத்திற்குப் பின்னடைந்துள்ளார்.



Read in source website

நெதா்லாந்து அரசி மாக்சிமா குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நெதா்லாந்து அரசியான மாக்சிமா, அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேம்பாட்டுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் ஆலோசகருமாவாா். இவா், ஆகஸ்ட் 29 முதல் 31 வரை மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது இந்தியா-நெதா்லாந்து உறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா். மேலும், பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசி மாக்சிமாவிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எடுத்துரைத்தாா்.

அந்த வகையில், வங்கி பரிவா்த்தனை நடவடிக்கையுடன் ஒவ்வோா் இந்தியரையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் மத்திய அரசின் நலத் திட்டங்கள் இடையூறின்றி, கடைக்கோடியில் இருப்பவரையும் எட்டும் வகையில் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குடியரசுத் தலைவா் தெரிவித்தாா். இதற்காக இந்திய அரசுக்கு நெதா்லாந்து அரசி மாக்சிமா பாராட்டு தெரிவித்தாா்.



Read in source website

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, விளையாட்டு வீரா்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

மறைந்த ஹாக்கி வீரா் மேஜா் தயான் சந்தின் நினைவாக அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பிரதமா் மோடி ட்விட்டரில் திங்கள்கிழமை விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘மேஜா் தயான் சந்தின் பிறந்த நாளையொட்டி அவரை நினைவுகூருகிறேன். சமீபத்திய ஆண்டுகள் விளையாட்டுத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளாக அமைந்தன. இந்த நிலை தொடர வேண்டும். நாடு முழுவதும் விளையாட்டுகள் புகழ்பெற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

விளையாட்டுத் துறை இணையமைச்சா் நிசித் பிரமாணிக் ட்விட்டரில், ‘இந்தியாவை விளையாட்டின் மையமாக உயா்த்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.



Read in source website

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு வாகன ஓட்டுநா், உதவியாளா் சேவைகள் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளை வழங்க வழிவகுக்கும் நோக்கில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான விதிகள் 1959-ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டன. ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகை குறித்த விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கும் நோக்கில், விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற நீதீபதிகளுக்கு வழங்கப்படவுள்ள சலுகைகளின் விவரங்கள்:

உதவியாளா்கள்

வாகன ஓட்டுநா், வீட்டு உதவியாளா் உள்ளிட்ட சேவைகள் நீதிபதிகளின் வாழ்நாள் வரை நீட்டிப்பு. (முன்பு ஓராண்டு வரை சேவைகள் வழங்கப்பட்டன)

வாழ்நாள் முழுவதும் அலுவலக உதவியாளா் சேவைகள்.

உதவியாளா்களுக்கான செலவுகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தால் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு வசதி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரை இருப்பிடத்தில் 24-மணி நேர பாதுகாப்பு வசதி; தனிப்பட்ட பாதுகாவலா் வசதி.

அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு நீதிபதிக்கு பணியின்போதே உயா்நிலை பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டிருந்தால், பணிஓய்வுக்குப் பிறகும் அத்தகைய வசதிகள் தொடா்ந்து வழங்கப்படும்.

நீதிபதிகளுக்கு 3 ஆண்டுகள் வரை 24-மணி நேர பாதுகாப்பு வசதிகள்; தனிப்பட்ட பாதுகாவலா் வசதி.

வாடகை இல்லா வீடு

ஓய்வுபெறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தில்லியில் 6 மாதங்கள் வரை வாடகை இல்லா வீடு (7-ஆம் தரத்திலானது). தலைமை நீதிபதிக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள தங்குமிடத்துக்குக் கூடுதலாக இந்த வசதி. இந்த வசதி, முன்பு அமைச்சராக இருந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிக்கும் தற்போது இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி, இணையசேவை கட்டணம்

இலவச தொலைபேசி வசதி. தொலைபேசி, கைப்பேசி, இணையசேவை ஆகியவற்றுக்கான கட்டணமாக மாதந்தோறும் அதிகபட்சமாக ரூ.4,200 (வரிகள் நீங்கலாக).

விமான நிலைய ஓய்வறைகள்

நீதிபதிகள் விமானத்தில் பயணம் மேற்கொண்டால், விமான நிலையத்தில் உள்ள வசதிமிக்க ஓய்வறைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வசதி. உயா்நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகளுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34

ஓய்வுபெறும் நீதிபதிகளின் சராசரி எண்ணிக்கை ஆண்டுக்கு 3 போ்

 



Read in source website

தங்களது நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றிலிருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் எட்ட கெயில் இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் மனோஜ் ஜெயின் கூறியதாவது:

நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கரியமில வாயு கலப்பதை வெகுவாகக் குறைக்க கெயில் இந்தியா உறுதி பூண்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிபொருள் பிரிவில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் அதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலையை எட்ட இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா் அவா்.

முன்னதாக, வரும் 2046-ஆம் ஆண்டுக்குள் கரியமில சமநிலை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும் அதற்காக ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அறிவித்திருந்ததது.

உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ப பூமியை வெப்பமாக வைத்திருப்பதற்கு, கரியமில வாயு போன்ற பசுமை வாயுக்கள் உதவுகின்றன. இந்த வாயுக்களின் அளவு அதிகமானதால் புவியின் சராசரி வெப்பம் அதிகரித்து, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக கனமழை வெள்ளம், உஷ்ண அலை, வறட்சி, காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் ஏற்படுகின்றன.

அதனைத் தடுப்பதற்காக காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும், காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு கால இலக்குகளை நிா்ணயித்துள்ளன.

இந்தியாவும் 2070-க்குள் இந்த சமநிலையை அடைய இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு முன்னதாகவே அந்த நிலையை அடைய கெயில் இந்தியா முடிவு செய்துள்ளது.



Read in source website

 

துபை ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார்.

அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் 18 வயது அர்ஜூன் எரிகைசி சமீபத்தில் வென்றார்.  9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். 

இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறினார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் இருந்தார்கள். 

அபுதாபி ஓபன் செஸ் போட்டிக்கு அடுத்ததாக துபை ஓபன் செஸ் போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் எரிகைசி, முதல் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா உள்பட 7 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார். இதையடுத்து தரவரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளார். 

தற்போதைய செஸ் தரவரிசையில் முதல் இடத்தில் கார்ல்சன் தொடர்ந்து நீடிக்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் 12-ம் இடத்தில் உள்ள நிலையில் குகேஷைப் பின்னுக்குத் தள்ளி  2728.7 புள்ளிகளுடன் 20-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 2725.7 புள்ளிகளுடன் குகேஷ் 24-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் நெ.2 செஸ் வீரராக முன்னேறியுள்ளார் அர்ஜுன் எரிகைசி. 



Read in source website

கோஸ்டா ரிகாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான (யு20) ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வாகை சூடியது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன் மூலம், கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்பெயின்.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயினுக்காக இன்மா கப்பாரோ (12’), சல்மா செலஸ்டே (22’, 27’) ஆகியோரும், ஜப்பானுக்காக சுஸு அமானோவும் (47’) கோலடித்தனா். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 9 ஆட்டங்களில் தோல்வி காணாத ஜப்பானுக்கு, ஸ்பெயின் தோல்வியை பரிசளித்திருக்கிறது.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை இன்மா கபாரோ அடித்த கோல், நடப்பு போட்டியில் அவரது 8-ஆவது கோலாகும். இதன் மூலம் கடந்த 12 ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டியின் ஒரு சீசனில் 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். அதேபோல், சல்மா செலஸ்டேவும் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்த 2-ஆவது வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளாா்.

பிரேஸில் 3-ஆம் இடம்: 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேஸில் 4-1 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது. ஆட்டத்தில் பிரேஸிலுக்காக அனா கிளாரா (9’), டாா்சியேன் காரென் (59’, 79’), கி ஃபொ்னாண்டஸ் (89’) ஆகியோரும், நெதா்லாந்துக்காக ரோசா வான் கூலும் (21’) கோலடித்தனா்.

சிறப்பு விருது: இப்போட்டியில் சிறப்பாக கோல்கள் அடித்ததற்காக ‘தங்கப் பந்து’ விருது ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கும், ‘வெள்ளிப் பந்து’ விருது ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கும், ‘வெண்கலப் பந்து’ விருது பிரேஸிலின் பிரேஸிலின் டாா்சியேனுக்கும் வழங்கப்பட்டன.

அதிக கோல்கள் அடித்தோரில் ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கு (8 கோல்கள்) ‘தங்க பூட்’ விருதும், ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கு (4 கோல்கள்) ‘வெள்ளி பூட்’ விருதும், யுஸுகி யமாமோடோவுக்கு (3 கோல்கள்) ‘வெண்கல பூட்’ விருதும் வழங்கப்பட்டன. சிறந்த கோல்கீப்பா் விருது ஸ்பெயினின் மெரிட்ஸெல் ஃபான்டுக்கு கிடைத்தது.



Read in source website

இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய இந்தியா உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருள்களைத் தயாரிக்கும் நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள், தங்களது நிதியைப் பயன்படுத்தி, இலங்கையில் நீண்டகால அடிப்படையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய முன்வருமாறு அந்நாட்டின் மின்சாரம், எரிசக்தித் துறை கடந்த ஜூலையில் அழைப்பு விடுத்தது.

இதன்பேரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, ரஷியா, பிரிட்டன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 24 நிறுவனங்கள், இலங்கையில் பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்திருப்பதாக இலங்கை மின்சாரம், எரிசக்தித் துறை அமைச்சா் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளாா்.

இந்தத் தகவலை ‘கொழும்பு பேஜ்’ என்ற இணையதள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் தீா்மானங்களை இலங்கை அமைச்சரவை நியமித்த குழு பரிசீலித்து, 6 வாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் என்றும் அமைச்சா் காஞ்சனா விஜேசேகர கூறியுள்ளாா்.

இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) இலங்கையில் 50 பெட்ரோல் நிலையங்களைத் திறந்தும், சேமிப்புக் கிடங்கில் முதலீடு செய்தும் அதன் செயல்பாட்டை விரிவுபடுத்தப் போவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தது.



Read in source website

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக் கலம் ஒன்றை அனுப்பும் நாசாவின் திட்டம், ராக்கெட் என்ஜின் கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டது.

அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்கான ‘ஆா்ட்டமிஸ்’ என்ற ஆய்வு திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது.

அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் ஃபுளோரிடா மகாணம், கேப் கனாவெரலில் உள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் திங்கள்கிழமை ஏவப்படுவதாக இருந்தது. எனினும், ராக்கெட் எரிபொருள் கசிவு மற்றும் என்ஜின் கோளாறு காரணமாக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.



Read in source website

இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கக் கூடும் என்று அந்நாட்டு நிதியமைச்சா் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் மழையை தொடா்ந்து ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ள பாதிப்பில் சிக்கி 1,000-க்கும் மேற்பட்டவா்கள் இறந்துள்ளனா். வெள்ளம் காரணமாக பாகிஸ்தானின் பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் பகுதிகளில் இருந்து இதர பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகிக்கப்படுவது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் லாகூா் பகுதி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை சுமாா் ரூ.500-ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.400-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அந்நாட்டு நிதித்துறை அமைச்சா் மிஃப்தா இஸ்மாயில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக பயிா்கள் சேதமடைந்துள்ளன. எனவே நாட்டு மக்கள் நலன் கருதி இந்தியாவிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கக் கூடும்’’ என்று தெரிவித்தாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதனைத்தொடா்ந்து இந்தியாவுடனான வா்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

புதுச்சேரி: “பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும்” என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா பதில் அளித்து பேசியது: "சிறப்பு கூறு நிதி கடந்தாண்டு மொத்தம் 23 துறைகளுக்கு ரூ.414 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ரூ.333.50 கோடி செலவு செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.172.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.142.86 கோடி செலவு செய்யப்பட்டது. சிறப்பு கூறு நிதியை கண்காணிக்க மாநில அளவிலான மேம்பாட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். காலாப்பட்டு தொகுதியில் வசிக்கும் 29 பழங்குடியினர் குடும்பத்துக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்கான நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு வீடுகட்டும் மானியம் உடனடியாக வழங்கப்படும்.

மாணவர்களுக்கு கல்விக் கடன் விரைவில் வழங்கப்படும். மேலும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஆட்டோ ஓட்டுவதற்கு போக்குவரத்து துறை மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு நூறு சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி சிறப்பு கூறு நிதி ஒதுக்கப்படும். சென்னை, திருப்பதி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு தனியார் பங்களிப்புடன் சொகுசுப் பேருந்துகள் விடப்படும்.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிடையே கலந்தாலோசித்து மாநிலங்களிடையேயான போக்குவரத்தை அதிகப்படுத்த உத்தேசிக்கப்படும். பிஆர்டிசியில் உள்ள பழைய மற்றும் சீர் செய்ய முடியாத நிலையில் உள்ள பேருந்துகளை தணிக்கை செய்து விற்று அந்த நிதியை புதுவாகனங்கள் வாங்க பயன்படுத்தப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைக்குரிய விஷயமான பயணிகள் பேருந்து இயக்குவதற்கான வழித்தட மாற்றம் மற்றும் நேர மறுநிர்ணயம் ஆகியவற்றை உடனடியாக மேற்கொண்டு பொதுப் போக்குவரத்து மேம்படுத்தப்படும்.

மகளிர் ஆட்டோ ஓட்டுவதை ஊக்குவிக்கவும், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்திடவும், பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி இலவசமாக அளித்து பர்மிட் வழங்கப்படும். மத்திய அரசு நிதியுதவி மூலம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதுச்சேரியில் ஓட்டுநர் பயிற்சி மற்றும் காரைக்காலில் மண்டல ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும். இம்மையங்களின் மூலம் ஓட்டுநர் பயிற்சி, தானியங்கி ஓட்டுநர் சோதனை ஆகியன மேற்கொள்ளப்படும்.

டீசல், பெட்ரோல் வாகனங்களை சிஎன்ஜி மற்றும் பேட்டரியில் இயங்கும் வாகனங்களாக மாற்றுவதற்கு உரிய ரிட்ரோ கிட் பொருத்துதல் மையங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்கள் நடமாடும் மையங்கள் மூலம் வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இரண்டு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இணையதளம் வியே வாடகை்கு அமர்த்திக் கொள்வதற்கான ஆன்லைன் போர்டல் உருவாக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை எவ்வித அச்சமும் இன்றி தெரிவிக்க மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்படும். அனைத்து நூலகங்களிலும் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். நூலகர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கூடுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு கலைமாமணி, தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா விருதுகள் விரைவில் வழங்கப்படும். சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்பு வாசிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண ஒரு நபர் நீதிபதி கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022-ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி பட்ஜெட்டில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ரங்கசாமி பேசியது: ''எம்ல்ஏக்கள் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்வோம். நிர்வாகத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தொடர்கிறது. அதை களைந்து புதுவையை வளர்ச்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதே அரசின் எண்ணம். உறுப்பினர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் செய்ய முடியுமா என பார்க்க வேண்டும். அவர்கள் திருப்தி அடையும் வகையில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்.

மார்ச்சில் பட்ஜெட் சமர்ப்பித்தால் நன்றாக இருக்கும். அதிக நாட்கள் பேரவை நடத்த வேண்டும் என உறுப்பினர்கள் கூறினர். வரும் காலத்தில் மார்ச்சில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தவேண்டும் என்பதே அரசு எண்ணம். மத்திய அரசும் இதை அறிவுறுத்தியுள்ளனர். நிச்சயம் மார்ச்சில் கூட்டத் தொடர் நடத்தப்படும். மத்திய அரசிடம் புதுவைக்கு தேவையான கூடுதல் நிதியைக் கேட்டுள்ளோம். வரும் டிசம்பருக்குள் நிதியை முழுமையாக பயன்படுத்தினால் கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலர், செயலர்கள், அதிகாரிகள் அனைவரும் கோப்புகளில் கவனம் செலுத்தினால் மாநிலம் வளர்ச்சி அடையும்.

தேவையற்ற கேள்வி கேட்டு காலம் கடத்துவதை விட தேவையான கேள்விக் கேட்டு விரைவாக செயல்பட்டால் மாநிலம் வளர்ச்சி பெறும். கடந்த கால குறைகளை மறந்து வளர்ச்சியில் அக்கறை எடுத்து அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். நாம் அனைவரும் நல்ல வளர்ச்சி காணவேண்டும். புதுவைக்கு சட்டப்பேரவை கட்ட வேண்டும். பழமையான கட்டடத்தில் நடக்கிறது. புது கட்டிடம் எங்கு கட்டுவது என்பதில் சிறு ஆலோசனை உள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்குவோம். 10 ஆண்டுகள் பணி செய்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அரசு சார்பு நிறுவனங்களில் பல மாதங்களாக சம்பளம் இல்லாத நிலை நீக்கப்படும்.

விவசாயத்தைப் பொறுத்தவரை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 2022-ம் ஆண்டு வரையிலான ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவுத்துறை சங்கங்கள், சர்க்கரை ஆலை, நிறுவனங்கள் சிரமமான நிலையில் உள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்துவதில் சிரமம் உள்ளது. எத்தனால் ஆலை போடலாம் என்றால் அந்த பகுதி மக்கள் எதிர்த்தனர்.

தற்போது மக்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். தனியார் பங்களிப்புடன் விரைவில் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும். அமுதசுரபி, கான்பெட், பாண்டெக்ஸ் நல்ல நிலையில் சிறந்த முறையில் சேவை செய்தது. தற்போது ஊதியம் தரமுடியாத நிலையில் உள்ளது. ரூ.30 கோடி ஒதுக்கி தந்து இவற்றை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏஎப்டி, சுதேசி, பாரதி மில்கள் நலிநடைந்துள்ளது.

அதன் தொழிலாளர்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்ல முடிவு எடுத்து ஆலைகளை செயல்படுத்துவோம். இதனால் படித்த இளையோருக்கு வேலை தர இயலும். பட்ட மேற்படிப்பு, சென்டாக் உதவித் தொகை வழங்கப்படும். மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொகுதி வளர்ச்சிக்கு தொகுதி தோறும் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்படுவர். மரபணு குறைப்பாடு உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்படும். என்ஆர்எச்எம் ஊழியர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் லிட்டருக்கு ரூ.12 மானியம் தரப்படும்.

கட்டிட நல வாரியம் வழங்கி வரும் திருமண உதவித்தொகை ரூ.7 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மகப்பேறு உதவி ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஈமச்சடங்கு நிதி ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரமாகவும், மருத்துவ உதவித்தொகை ரூ.500ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும். இதய பிரச்சினை உள்ளோருக்கு ரூ.1 லட்சமும், சிறுநீரக பிரச்சினை உள்ளோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

கட்டிட தொழிலாளர் நல வாரிய பயனாளிகளின் பிள்ளைகள் 1 முதல் 8 வரை ஆண்டுக்கு ரூ.1000, 9,10ம் வகுப்புகளுக்கு, ரூ.1,500, 11,12ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆட்டோ நலவாரியம் அமைக்கப்படும். முதியோர் உதவித்தொகை 70 முதல் 80 வயது வரை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவர். நகராட்சி, கொம்யூன் ஊழியர்களுக்கு ஊதியம் அரசே தரவேண்டியுள்ளது. இதுகுறித்து கலந்து பேசி, கமிட்டி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அரசு சம்பளம் தரமுடியாது என சொல்லவில்லை. எனவே, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெறவேண்டும்'' என்று அவர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் 5 ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்கள் தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் (ஆய்வகம்) ராஜு ஆகியோர் நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ளஆய்வகங்கள், வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி உயிர் வேதியியல் துறையின் வெளிப்புற தர உத்தரவாத சேவைகள் மூலம் ஆய்வக ஆய்வுகளின் தரத்தை உறுதி செய்வதற்கான திட்டத்தில் பங்கேற்கின்றன. ஆய்வக முடிவுகளின் தரம் மூன்றாம் தரவு திறன் சோதனை வழங்குநரால் மதிப்பிடப்படுகிறது.

இந்தியாவிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ஆய்வகங்களுக்கும் தரக்கட்டுப்பாடு திட்டத்தை தமிழகம் மட்டுமே செயல்படுத்தியுள்ளது.

ஆய்வகங்களுக்கான தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் என்பது இந்திய தர கவுன்சிலின் ஓர் அங்கமாகும். இது சர்வதேச தரத்திலான மருத்துவப் பரிசோதனை ஆய்வகங்களுக்கு ஆய்வக அங்கீகாரம் வழங்குகிறது.

தமிழகத்தில் பொது சுகாதாரம்மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் திருப்பூர் மாவட்டம், தளவாய்பட்டினம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் மாவட்டம், பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம், ராமநாதபுரம் மாவட்டம், வெங்கிட்டாங்குறிச்சி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம், தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கூடுதல் ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை தேசிய தர நிர்ணயஅங்கீகார வாரியத்தின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, நாட்டிலேயே முதன் முறையாக தர உறுதி சான்றிதழைப் பெற்றுள்ளன.

கடந்த 25-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மாநாட்டில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் மற்றும் 5 ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு தேசிய தர நிர்ணய அங்கீகார வாரியம் இந்த தரச் சான்றிதழ்களை வழங்கியது.

அனைத்து ஆய்வகங்களும் படிப்படியாக இந்த அங்கீகாரத்தைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: ஷாப்பிங் மால் முதல் தெருவோர தள்ளுவண்டி கடை வரை தற்போது ‘க்யூஆர் கோடு’ அட்டையை ஸ்கேன் செய்து, ஃபோன்பே, கூகுள்பே, பேடிஎம் போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்த முடிகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை முறைகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து முயற்சி மேற்கொண்டதன் விளைவாக கடந்த 2009-ம் ஆண்டு உருவானது ‘யுபிஐ’.

நேரடி பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக, பாதுகாப்பான, மிக எளிமையான, அனைத்தையும் உள்ளடக்கிய பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ. இது நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளை ஒருங்கிணைத்து, அவற்றுக்கு இடையிலான பரிவர்த்தனை நடைமுறையை எளிதாக்குகிறது. ஸ்மார்ட்போன் செயலி வழியாக ஒரு வங்கியில் இருந்து எந்தவங்கிகளுக்கு வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை இது சாத்தியப்படுத்துகிறது.

கடந்த 2016 ஏப்ரல் மாதம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்த யுபிஐ மூலமாக, முதல் ஆண்டிலேயே ரூ.707 கோடி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், படிப்படியாக அதிகரித்து கடந்த ஆண்டு ரூ.73 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2016-ல் யுபிஐயின் கீழ் 35 வங்கிகள் இருந்தன. தற்போது 282 வங்கிகள் உள்ளன. யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இந்நிலையில், யுபிஐ க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது:

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணுசேவையை அறிமுகம் செய்து வருகிறது. மக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் சேவைகள் கிடைப்பது மட்டுமின்றி, ஊழியர்களுக்கு பணிச் சுமையை குறைக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், அஞ்சல் துறையில் தற்போது மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்காக யுபிஐக்யூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட 20 தலைமை அஞ்சல் நிலையங்கள், 545 துணை அஞ்சலகங்களிலும்இந்த சேவை கடந்த ஏப்ரலில் அறிமுகமானது.

முதல்கட்டமாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கு அனுப்பும் பதிவு தபால்கள், விரைவு தபால்கள், பார்சல்களுக்கு யுபிஐ க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தலாம்.

இதன்மூலமாக தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கடந்த 19-ம்தேதி வரை 12,208 பரிவர்த்தனைகள், சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 5,341 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிளை அஞ்சலகங்களில் இது சோதனை கட்டத்தில் உள்ளது. சோதனை முடிந்ததும் விரைவில் அங்கும் அமல்படுத்தப்படும். சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு,மணியார்டர் உள்ளிட்ட மற்ற சேவைகளுக்கும் யுபிஐ மூலம் பணம்செலுத்தும் வசதி படிப்படியாக அறிமுகம் செய்யப்படும் என்றார்.



Read in source website

சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் வகையில், பிரதமரின் ‘மக்கள் மருந்தகம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் மருந்தகங்களில் மருந்து, மாத்திரைகள் குறைவான விலையில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் கலந்துரையாடினார்.

அவர் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள 8,700 மக்கள் மருந்தகங்கள் மூலம் 1,600 மருந்துகள், 250 அறுவை சிகிச்சை
உபகரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.5,000 கோடி அளவுக்கு பொதுமக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. மத்திய மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் துறை சார்பில், அதிக தேவையுள்ள மருந்துகளை இதில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



Read in source website

சென்னை: ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் விதமாக, ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ என்ற குத்துச்சண்டை பகுப்பாய்வு மென் பொருளை சென்னை ஐஐடி உருவாக்கி வருகிறது.

2024 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் நோக்கில், குறிப்பிட்ட சில விளையாட்டுகளை பட்டியலிட்டு, அதில் வெற்றி பெறும் முயற்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதில் வில்வித்தை, குத்துச்சண்டை, ஹாக்கி, தடகளம் உள்ளிட்டவை அடங்கும்.

அந்த வகையில், சென்னை ஐஐடியின் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையம் ‘ஸ்மார்ட் பாக்ஸர்’ என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். இதில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் பகுப்பாய்வு தளத்தில் மாற்றங்கள் செய்து, பயிற்சியாளர்கள், குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவும் வகையில் இந்த மென்பொருளை திறம்பட பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி ரசாயன பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல், பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கநாதன் சீனிவாசன் கூறும்போது, “பயிற்சியாளருக்கும், உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்துகொள்ளவும், ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தவும் இத்தொழில்நுட்பம் பாலமாக செயல்படும்” என்றார்.

இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் குத்துச்சண்டைப் பிரிவு இளைஞர் மேம்பாட்டு தலைவர் ஜான் வார்பர்டன் கூறும்போது, “குத்துச்சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இது உதவியாக இருக்கும். வீரர்களின் பலம், செயல்பாடு நிலைகள், பஞ்ச்கள்,தற்காப்பு திறமைகளில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் எவை என்பதையும் தொழில் நுட்ப அடிப்படையில் எங்களால் எடுத்துரைக்க முடியும்” என்றார்.



Read in source website

சென்னை: அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அறநிலையத் துறைஆணையர் ஜெ.குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்துவதற்கு ஏதுவாககோயில்களில் திருமணம் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திலும் 25 ஏழை, எளியஇணைகளைத் தேர்வு செய்துகோயில்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவின்படி அக்டோபர் மாதத்தில் திருமணங்களை நடத்த தயார் நிலையில் இருக்க வேண்டும்.

மேலும், இணை ஆணையர் மண்டலம், கோயில் பெயர், மணமக்களின் பெயர் மற்றும் முகவரி, திருமணம் நடைபெறும் நாள், திருமணம் நடத்தப்பட உள்ள இடம் ஆகிய விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பவும் மண்டல இணை ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



Read in source website

சென்னை: பணி செய்யாமல் ஏமாற்றும் போக்குவரத்து போலீஸாரை கண்காணிக்க, சென்னை காவல் துறை செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக அருண் இருந்தபோது, 2018 மார்ச் முதல் விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் ‘பணமில்லா பரிவர்த்தனை’ என்ற டிஜிட்டல் முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதாவது, விதிமீறல் வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸார் நேரடியாக பணமாக வாங்க மாட்டார்கள். ரசீதைக் கொண்டு வங்கி, அஞ்சலகம், நீதிமன்றம் உட்பட 5 இடங்களில் வாகன ஓட்டிகள் அபராதத்தை கட்ட வேண்டும். இந்த முறையில் ஆரம்ப காலங்களில் அபராதத்தை செலுத்தி வந்தனர். ஆனால், காலப்போக்கில், விதிமீறல் வாகன ஓட்டிகள் பலர் அபராதம் செலுத்தாததால் அபராதம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த தேக்க நிலையை சரி செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ‘அழைப்பு மையங்கள்’ முறையை 11.04.2022 அன்று அறிமுகம் செய்தார். அதன்படி 12 அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சாலை விதிகளை மீறியவர்களுக்கு நிலுவையில் உள்ள அபராதம் குறித்து போக்குவரத்து போலீஸார் எச்சரித்தனர். இதன்மூலம் அபராதம் செலுத்து வோரின் எண்ணிக்கை 21-லிருந்து 47 சதவீதமாக உயர்ந்தது. இருப்பினும், 100 சதவீத இலக்கை எட்டவில்லை.

எனவே பேடிஎம் உடன் இணைந்து க்யூஆர் (QR) குறியீடு மூலம் அபராதம் செலுத்தும் மேம்படுத்தப்பட்ட கட்டண செலுத்தும் புதிய வசதியை 04.08.2022 அன்று சென்னையில் தொடங்கி வைத்தனர். வாகன ஓட்டிகளுக்கு பல கிடுக்குபிடிகளை போடும் போக்க
வரத்து போலீஸாரில் பலர் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது இல்லை. ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று களப்பணி செய்வது இல்லை. மேலும் காலதாமதமாக பணிக்கு வருகின்றனர்.

உரிய நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாததால் பல நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டு பொது மக்கள் இன்னல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசித்த கூடுதல் ஆணையர், ‘இ-வருகை பதிவேடு’ என்னும் புதிய வகை செல்போன் செயலியை கொண்டு வந்துள்ளார்.

முதல் கட்டமாக, சென்னையில் உள்ள 309 சிக்னல்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீஸாருக்கு இது அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் படிப்படியாக அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதை பயன்படுத்துவது குறித்து தற்போது போக்குவரத்து போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கபில் குமார் சி.சரத்கர் கூறும்போது, "சிக்னல்களில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் உள்ள போக்குவரத்து போலீஸாரின் செல்போனில் இ-வருகை பதிவேடு செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டு அவர்கள்கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்கப்படுவார்கள்.

இதன் மூலம் அவர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வந்தனரா? ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ளனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு
தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு போன் இல்லை என கூறும் போலீஸாருக்கு செய்ய வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்
பட்டு வருகிறது. விரைவில் இப்புதிய முறை பயன்பாட்டுக்கு வர உள்ளது" என்றார்.



Read in source website

புதுடெல்லி: கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15.3% அதிகம்.

இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.

கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.

கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.

பாலியல் வன்கொடுமை

மேலும், 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.

2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.

எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றம்

2021-ல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1.49 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020-ல் பதிவான வழக்குகளுடன் ஒப்பிடுகையில் இது 16.2% அதிகமாகும். 2021-ல் பதிவான குழந்தைகளுக்கு எதிரான மொத்த குற்ற வழக்குகளின் எண்ணிக்கையில் கடத்தல்தொடர்பாக பதிவான வழக்குகளின் பங்கு 45% ஆகவும், பாலியல் தொடர்பான வழக்குகளின் பங்கு38.1 சதவீதம் ஆகவும் இருந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: 'உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே...' - இப்படித்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார். டெல்லி அரசியலில் அன்றாடம் சிபிஐ ரெய்டு, விசாரணைகள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்போது கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் அன்னா ஹசாரே.

அன்னா ஹசாரே கடித விவரம்: “நீங்கள் முதல்வரான பின்னர் நான் உங்களுக்கு முதன்முறையாகக் கடிதம் எழுதுகிறேன். அதற்குக் காரணம் அண்மையில் வெளியான டெல்லி மதுபானக் கொள்கை பற்றிய செய்திகள். நீங்கள் உங்களது ஸ்வராஜ் என்ற புத்தகத்தில் மதுபானக் கொள்கை பற்றி சில மகத்தான பரிந்துரைகளை சொல்லியிருந்தீர்கள். அந்த புத்தகத்திற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன். நீங்கள் அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். ஆனால், முதல்வரான பிறகு அதை எல்லாவற்றையும் மறந்துவிட்டீர்கள் போல்!

டெல்லி அரசிடமிருந்து நான் இப்படி ஒரு கொள்கையை எதிர்பார்க்கவில்லை. நீங்கள் முதல்வரான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள். சட்டப்பேரவையில் ஒருமுறை கூட லோக் ஆயுக்தாவைக் கொண்டுவர நீங்கள் முயற்சிக்கவில்லை. இப்போது உங்கள் அரசாங்கம் மக்களின் வாழ்வை, பெண்களை பாதிக்கும் ஒரு கொள்கையைக் கொண்டு வந்துள்ளது. இது ஒன்றே போதும் உங்கள் வார்த்தைகளும் செயல்பாடும் வெவ்வேறு என்பதைக் காட்ட.

மகாராஷ்டிராவில் மதுபானக் கொள்கைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக மது விற்பனைக்கு எதிராக கிராமப்புற பெண்கள் குரல் கொடுக்கும் அதிகாரம் கிடைத்தது. ஆனால், இன்று டெல்லி அரசு மதுபானக் கொள்கையை அமல்படுத்த முயன்று அதன் நிமித்தமான ஊழலில் சிக்கியுள்ளது. டெல்லியில் மூலைமுடுக்கெல்லாம் மதுபானக் கடைகள் வந்துவிட்டன. ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா? நீங்கள் அதிகார போதையில் இருக்கிறீர்கள்” என்று அன்னா ஹசாரே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னா ஹசாரேவும் ஆம் ஆத்மியும்: கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அன்னா ஹசாரே தலைமையில் நடந்த இந்தப் போராட்டம் பிரம்மாண்ட போராட்டமாக உருவெடுத்து உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்னா ஹசாரே ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அந்த மேடையில்தான் மக்களுக்கு அரவிந்த கேஜ்ரிவால் அறிமுகமானார். அன்னா ஹசாரேவின் தொப்பி அடையாளம் பெற்றது. அந்தத் தொப்பியில் ஆம் ஆத்மி என்று எழுதி விளக்குமாற்றை கட்சியின் சின்னமாக்கி டெல்லி தேர்தலில் களம் கண்ட கேஜ்ரிவால் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்றார். 2012ல் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. இப்போது 2வது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது.

தீவிர அரசியலில் ஈடுபட மறுத்த அன்னா ஹசாரே கட்சிக்கும் கேஜ்ரிவாலுக்கும் தனது ஆதரவை வெளியில் இருந்து அளித்தார். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பின்னர் அதனை பலமுறை விமர்சனங்களுக்கு உள்ளாக்கினர். இதனால், கேஜ்ரிவால் அன்னா ஹசாரேவைப் பற்றி பேசுவதைக் கூட தவிர்க்கலானார். இந்நிலையில்தான் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கொள்கை: தலைநகர் டெல்லியும், முதல்வர் கேஜ்ரிவாலும் அவரது சகாக்களும் சமீப காலமாகவே ஊடகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். காரணம் டெல்லி மதுபானக் கொள்கை. டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கை, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே, டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், அதை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்ற மறைமுகமாக முயல்கிறது என்று கூறிவருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

நியூயார்க் டைம்ஸ் செய்தியும் ரெய்டும்: டெல்லி அரசியல் சர்ச்சை ஆரம்பித்தது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளில் டெல்லியில் கல்வி மற்றும் மருத்துவத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்தும் அதற்குப் பின்னணியில் இருந்த மணிஷ் சிசோடியா குறித்தும் முதல் பக்கத்தில் முழுநீள கட்டுரை வெளியானதற்கு அடுத்த நாள். ஆகையால் டெல்லியில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமலேயே பாஜக சிபிஐ அமைப்பை ஏவிவிடுகிறது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மியே நேரடி போட்டி என்று மணிஷ் சிசோடியா கூறினார். அன்று ஆரம்பித்த சர்ச்சை இன்று பல்வேறு ரூபங்கள் எடுத்து வளர்ந்து நிற்கின்றது.



Read in source website

புதுடெல்லி: அடிப்படை கட்டுமான மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விரைவான திட்ட ஒப்புதல் பெற மர வங்கி திட்டத்தை சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலை யங்கள் மற்றும் துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான அமைப்புகள் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் கணக்கு தொடங்க அனுமதிக்கபடும். இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் மரங்களை வேறு இடத்தில் மாற்றி நடுவது அல்லது வெட்டுவதற்கான அவசியம் ஏற்படும் போது, அந்த நிறுவனத்தால் எத்தனை மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன என்று அதன் மர வங்கி கணக்கு ஆராயப்படும். இதன் அடிப் படையில் விரைவான ஒப்புதல் அளிக்கப்படும்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “மர வங்கிக்காக மரக் கன்றுகள் நடுவதற்கு பயன்பாட்டில் இல்லாத நிலம், பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளை இந்த அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலுக்கு ‘எகோ-டெபிட்’, பாதுகாக்கும் செயல்களுக்கு ‘எகோ-கிரெடிட்’ புள்ளிகள் வழங்கப்படும். இத்திட்ட கணக்குகளை பராமரிக்க
மத்திய, மாநிலங்களில் அமைப்புகள் ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.



Read in source website

புதுடெல்லி: நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த நியமனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்திய உயர் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த 2014-ல் 40 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 60 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில், 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 2.52 லட்சம் வழக்குகளும் அடங்கும். கரோனா பேரிடருக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 13 லட்சம் அதிகரித்துள்ளது.

நீதித் துறையில் சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. கடந்த 2014-ல் 984 ஆக இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை, 124 அதிகரித்து தற்போது 1,108 ஆக உயர்ந்துள்ளது. நீதித் துறை சீர்திருத்தங்கள் தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளன. ஆனால், இ-பைலிங், இ-பேமன்ட், நீதிமன்ற கட்டணம், இ-சம்மன் உள்ளிட்ட நவீன நீதி வழங்கல் முறைகளை பின்பற்ற நீதித்துறை உயரதிகாரிகளும், வழக்கறிஞர்களும் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர்.



Read in source website

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணம் செய்யாமல் ஒன்றாக இணைந்து வாழ்வது (லிவிங் டுகெதர்) மற்றும் தன் பாலின ஈர்ப்பினால் இனி குடும்ப உறவுகள் வினோதமான வகையில் மாற்றங்களைக் காணலாம். இதுபோன்று மாற்றமடையும் வித்தியாசமான குடும்ப உறவு அமைப்புகளும் சட்டத்தின்படி முழு பாதுகாப்பையும் பெற அவற்றுக்கு உரிமை உள்ளது.

தாய், தந்தை அமைப்பு

தற்போதைய சமூகத்தின் பார்வையில் தாய், தந்தை குழந்தைகளுடன் வசிப்பது என்பதுதான் குடும்ப அமைப்பாக பார்க்கப்படுகிறது. இந்த அனுமானம் இரண்டு சூழலை புறக்கணிப்பதாக உள்ளது. ஒன்று பல சூழ்நிலைகள் ஒரு குடும்ப அமைப்பில் மாற்றத்தை உருவாக்க காரணமாக அமையலாம். மற்றொன்று பல குடும்பங்கள் இந்த கருத்தாக்கத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பது ஆகும். வாழ்க்கைத் துணையின் மரணம், பிரிவு அல்லது விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒரு குடும்பம் ஒற்றைப் பெற்றோர் குடும்பமாக எப்போது வேண்டுமானாலும் மாறலாம். அதேபோன்று, குழந்தைகளின் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் மறுமணம், தத்தெடுப்பு செய்வதன் மூலமாகவும் அந்த வடிவம் மாற்றத்துக்கு உண்டாகலாம்.

காதல் மற்றும் குடும்ப சூழல் அடிப்படையில் மாற்றமடைய நேரிடும் குடும்பங்களும் பாரம்பரிய குடும்ப உறவு அமைப்பைப் போலவே உண்மையானவை. எனவே, அதுபோன்ற மாற்றமடைய நேரும் வித்தியாசமான குடும்ப வடிவங்களும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல சமூக நலச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களையும் சமமாகப் பெறத் தகுதியானவை. இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாக கருதப்படுகிறது. சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையும் வேறாக உள்ளது. இதுதொடர்பான வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் தன் பாலின உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பிறகு, மாற்று பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, லிவிங் டுகெதர் தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதைஅனுமதிப்பது உள்ளிட்ட உரிமைகளுக்காக ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வரும் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.



Read in source website

ஓட்டப் பந்தயம் என்றால் எல்லோருக்கும் உசைன் போல்ட் பெயர்தான் மின்னல் வேகத்தில் நினைவுக்கு வரும். அந்த வகையில் அம்லன் போர்கோஹைனை இந்தியாவின் உசைன் போல்ட் என சொல்லலாம். அதற்கு காரணம் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அவர் படைத்துள்ள சாதனை தான்.

24 வயதான அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். 100 மீட்டர் தூரத்தை 10.25 வினாடிகளில் கடந்து அசத்தியுள்ளார் அவர். அனைத்திந்திய ரயில்வே தடகள சாம்பியன்ஷிப்பில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதன் மூலம் கடந்த 2016 வாக்கில் படைக்கப்பட்ட தேசிய சாதனையை அவர் தகர்த்துள்ளார். அப்போது 10.26 வினாடிகளில் 100 மீட்டர் தூரம் கடக்கப்பட்டது. அமியா மல்லிக் (Amiya Mallick) அந்த சாதனையை அப்போது படைத்திருந்தார்.

கடந்த ஆண்டு அவர் 10.34 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பால்ய பருவத்தில் அவர் கால்பந்து விளையாட்டின் மீது தான் அதிக ஆர்வம் கொண்டிருந்துள்ளார். ரொனால்டோ மற்றும் சுனில் சேத்ரி தான் விளையாட்டில் அவரது ரோல் மாடல். கால்பந்து விளையாட்டில் காயமடைந்த காரணத்தால் தனது அம்மாவின் ஆலோசனையின் படி வேறு விளையாட்டான தடகளத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.



Read in source website

வாஷிங்டன்: தைவானுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,700 கோடி) மதிப்பிலான ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ஒப்புதலை பைடன் அரசு கோரவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பைடன் அரசு தைவானுக்கு போர் விமானங்கள், கப்பல்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை விற்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதலை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு பைடன் அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தைவான் - சீனா விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் அமெரிக்க எம்.பி. நான்சி பெலோசி தைவானுக்கு சீனாவின் எதிர்ப்பை மீறி வருகை தந்தார். அவரது வருகைக்குப் பின்னர் சீனா தைவான் எல்லையில் தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அமேசான்: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்துவந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழந்திருக்கிறார்.

1970கள் - 1980களில் ஏஜென்ட்டுகள், நிலப்பிரபுக்கள் அமேசான் பகுதியிலிருந்த பழங்குடியினரைக் கொன்று குவித்தனர். எஞ்சியவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

அப்படி விரட்டப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் உயிருடன் தப்பித்தார். அதனைத் தொடர்ந்து பொலிவியாவின் எல்லையான ரொண்டோனியா மாகாணத்தில் உள்ள தனாரு பூர்வீகப் பகுதியில் இவர் வசித்து வந்தார்.

அவர் எந்த பழங்குடி இனத்தை சேர்ந்தவர், அவர் எந்த மொழியைப் பேசினார் என்ற தகவலை இதுவரை யாராலும் அறியமுடியவில்லை.

ஆனாலும் தனிமையில் தொடர்ந்து அமேசானில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரை 1996 ஆம் ஆண்டு முதல் பிரேசிலில் செயல்பட்டு வரும் ஃபுனாய் என்ற அமைப்பு கடந்த 26 ஆண்டுகளாக கண்காணித்து தொடர்ந்து வீடியோ எடுத்து வந்தது.

கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு காட்டின் புதர் ஒன்றிலிருந்து அந்த நபர் எட்டி பார்க்கும் புகைப்படங்கள்,வீடியோ வெளியாகின.

நீண்ட முடியுடன், மிக திடகாத்திரமான உடல்வாகுடன் இருந்த அந்த மனிதர் பன்றி, குரங்குகள், பறவைகளை தனது அம்பைக் கொண்டு வேட்டையாடி உண்டு வருவதாக ஃபுனாய் அமைப்புக் கூறியது.

தனது பழங்குடி மக்களை பிற மனிதர்கள் கொன்றதால் அவர் தொடர்ந்து மன ரீதியான அழுத்தத்தில் இருந்ததால் குழுவாக வாழும் சமூகத்திடம் இணைந்து வாழ அந்தப் பழங்குடி மனிதர் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த பழங்குடி நபர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணம் குறித்து பழங்குடி நிபுணர் மார்செலோ டோஸ் சாண்டோஸ் கூறுகையில்,” அவர் இறக்கப் போகிறார் என்பதை அறிந்து, அவர் தன் மீதே இறகுகளை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் தன்னுடைய மரணத்துக்காக காத்திருந்திருக்கிறார். அவர் உடலில் எந்தக் காயமும் இல்லை. அவர் 40 - முதல் 50 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அமேசான் காடுகள் வன அழிப்பினாலும், கால நிலை மாற்றத்தாலும் கடுமையான விளைவை சந்தித்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட வேண்டும் என பழங்குடி ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



Read in source website

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், எளிதான வழியில் மொபைல் போன் மூலம் அதை மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து பாப்போம்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவு இருப்பதால், ஆதார் எண்ணை கட்டாயம் தர வேண்டும் என்று அறிவுறுத்தாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் வெளிப்படைத் தன்மையை பேணும் வகையில், ஆதார் அல்லது குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட 11 ஆவணங்களையும் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஆதார் இணைப்புக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. குறிப்பாக, இதற்கென ‘6B’ என்ற படிவத்தையும் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய வாக்காளர் சேவை அமைப்பான ‘NVSP போர்ட்டல்’, வாக்காளர் சேவை எண் மூலமாக இந்த இணைப்பை மேற்கொள்ளலாம். அல்லது, வீடு வீடாக வரும் வாக்காளர் பதிவு அலுவலரிடம் ‘6பி’ படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கூறிய வழிகளில் மட்டுமல்லாது ‘Voter Helpline App’ என்ற செயலி (அப்ளிகேஷன்) மூலமாகவும் செல்போன் துணை கொண்டு இந்த இணைப்பு பணியை சுலபமாக மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி மூலம் இணைப்பது எப்படி?

  • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Voter Helpline செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • அந்த செயலியை ஓபன் செய்ததும் ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்
  • அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • அதில் அங்கீகார படிவம் 6B-யை ஓபன் செய்ய வேண்டும்.
  • தொடர்ந்து ‘லெட்ஸ் ஸ்டார்ட்’ ஆப்ஷனை கிளிக் கொடுக்க வேண்டியுள்ளது.
  • அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • மொபைல் எண்ணுக்கு வரும் OTP -யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும்.
  • அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.
  • தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் விவரத்தை எடுக்க வேண்டி உளள்து.
  • அந்த விவரங்கள் வந்ததும் ‘Proceed’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அதை செய்ததும் ‘Done’ கொடுத்தால் படிவம் 6B ஓபனாகிறது. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.

முக்கியமாக இதனை செய்ய வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியம்.



Read in source website

சிங்கப்பூர்: திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது, “வரும் ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise – ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா வழங்கப்படும். இத்துடன் அவர்களை சார்ந்த வர்கள் வேலை தேடவும் அனுமதிக்கப்படும்.

விளையாட்டு, கலை அறிவியல் மற்றும் கல்வித் துறையில் சிறந்து விளங்குவோருக்கு இந்த சம்பள அளவுகோல் பொருந்தாது. அவர்களும் ஜனவரி 1 முதல் ‘ஒன்’ விசாக்களை பெற முடியும்” என்று தெரிவித்தன.

மனித ஆற்றல் துறை அமைச்சர் டான் சீ லெங் கூறும்போது, “முதலீட்டாளர்களும் திறமை யாளர்களும் முதலீடு செய்யவும் வேலை பார்க்கவும் பாதுகாப்பான மற்றும் ஸ்திரமான இடங்களை தேடுகின்றனர். சிங்கப்பூர் அத்தகைய இடமாகும். எனவே திறமைகளுக்கான உலகளாவிய மையமாக சிங்கப்பூரின் நிலையை உறுதிப்படுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்” என்றார்.

கரோனா பாதிப்புக்கு பிறகு வெளிநாட்டில் இருந்து ஒயிட்-காலர் பணியாளர்கள் சிங்கப்பூர் வருவது குறைந்தது. இந்நிலையில் திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையை போக்கவும் சர்வதேச வர்த்தகத்தை ஈர்க்கவும் இந்த ஆண்டு சிங்கப்பூர் அரசால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளில் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.



Read in source website

கேரளாவில் உள்ள கோயில்கள் தங்களின் வருவாயை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதற்கு பதிலாக, ஐந்து தேவசம் போர்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசிடமிருந்து பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சமூக ஊடகங்களில் பழைய காணொலி காட்சி ஒன்று பரவியது. அந்தக் காணொலியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இந்து மல்கோத்ரா , “இந்து கோயில்களில் உள்ள வருமானத்தை கருத்தில் கொண்டு இடதுசாரிகள் கோயில்களை கட்டுப்படுத்த நினைக்கின்றனர்” என்று கூறுவது போல் இருந்தது.
இந்தக் கருத்துகளை கேரளத்தின் இடதுசாரிகள் நிராகரித்தனர். மேலும் வாரியத்தின் கீழ் உள்ள கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிதியையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

கேரளத்தில் கோயில்களை நிர்வகிப்பது யார்?

கேரளத்தில் கோயில்கள் மாநில அரசின் கீழ் உள்ள அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளை, நாயர் சர்வீஸ் சொசைட்டி, ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், கவுடா சரஸ்வத் பிராமண சபா போன்ற சமூக அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
இது தவிர தீவார சபா, விஸ்வகர்மா சபா, ஐயப்ப சேவா சமிதி, பாஜக ஆதரவு பெற்ற கேரள ஷத்திரிய சம்ரக்ஸனா சமிதி, தனிகுடும்பங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் உள்ளன.

மாநிலத்தில் எத்தனை கோயில்கள் உள்ளன?

கேரளத்தில் 5 மாநில அரசின் கீழ்வரும் தன்னாட்சி தேவஸ்தான அறக்கட்டளைகள் உள்ளன. இதன் கீழ் 3,058 கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் புகழ்பெற்ற மலைக் கோயிலான சுவாமி ஐயப்பன் கோயில் உள்பட 1250 கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
கொச்சின் தேவஸ்தானத்தின் கீழ் 406 கோயில்களும், மலபார் தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் 1357 கோயில்களும், குருவாயூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 11 கோயில்களும், கூடல் மாணிக்கம் வாரியத்தின் கீழ் 12 கோயில்களும் வருகின்றன.
மாநிலத்தில் இடதுசாரி அரசாங்கம் தேவஸ்தானம் அமைச்சரவையும் உருவாக்கியுள்ளது. தேவஸ்தானத்தின் அமைச்சராக கே. ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகிக்கிறார்.

கோயில் பணியாளர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்?

அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியாளர்கள், அந்தந்த வாரியங்களால் நியமிக்கப்படுகின்றனர். முந்தைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆட்சி, இந்த செயல்முறையை சீரமைக்க தேவசம் ஆள்சேர்ப்பு வாரியத்தை கொண்டு வந்தது.
2017 ஆம் ஆண்டில், திருவிதாங்கூர் வாரியம் முதன்முறையாக அதன் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில் தலித்துகளை அர்ச்சகர்களாக நியமித்தது. பின்னர், கொச்சி போர்டு பிராமணர் அல்லாத அர்ச்சகர்களையும் நியமித்தது.
இந்தக் கோயில்களுக்கு ஆட்சேர்ப்பு இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1951 இன் படி செய்யப்படுகிறது, பாரம்பரியமாக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பதவிகள் தவிர. தற்போதுள்ள விதிமுறைகளின்படி, பட்டியலின (எஸ்சி) மக்களுக்கு 10% இடஒதுக்கீடு கிடைக்கும், அதே சமயம் பழங்குடியின (எஸ்டி) மக்களுக்கு 2% இட ஒதுக்கீடு கிடைக்கும்.

கோயில் வருமானம்

கேரளாவில் உள்ள கோயில்கள் தங்களின் வருவாயை மாநில அரசுடன் பகிர்ந்து கொள்வதில்லை. அதற்கு பதிலாக, ஐந்து தேவசம் போர்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசிடமிருந்து பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2016-17 முதல் 2019-2020 நிதியாண்டுகளுக்கு இடையில், கேரளாவில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு மாநில அரசு ரூ.351 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு தவிர, திருவிதாங்கூர் வாரியம் 2018 வெள்ள நிவாரணம் மற்றும் தொற்றுநோய் உதவியாக 120 கோடி ரூபாய் கூடுதலாகப் பெற்றது.
இதேபோன்ற நெருக்கடி உதவியின் ஒரு பகுதியாக, கொச்சி வாரியத்திற்கு ரூ.25 கோடியும், மலபார் வாரியத்துக்கு ரூ.20 கோடியும், கூடல்மாணிக்கம் வாரியத்துக்கு ரூ.15 லட்சமும் ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, தற்போதைய இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) ஆட்சி 2021 மே மாதம் பதவியேற்ற பிறகு, திருவிதாங்கூர் வாரியத்திற்கு ரூ.20 கோடி மானியம் வழங்கப்பட்டது. அதேபோல், மலபார் வாரியமும் ரூ.44 கோடி பெற்றது நினைவு கூரத்தக்கது.



Read in source website

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி ஏற்றிருக்கிறாா். நீதிபதி யு.யு. லலித் தலைமை நீதிபதியாக உயா்ந்திருப்பது, நீதித்துறையிலும் வாரிசுகளின் ஆதிக்கம் நிலவுவதன் அடையாளம். இவா் மட்டுமல்ல, இவரைத் தொடா்ந்து தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய். சந்திரசூடும் வாரிசு பட்டியலைச் சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த உமேஷ் ரங்கநாத் லலித்தின் மகனான உதய் உமேஷ் லலித் பிரபல வழக்குரைஞராக இருந்தவா். மூத்த வழக்குரைஞராக இருந்த யு.யு. லலித், கடந்த 2014 ஆகஸ்ட் 13-ஆம் தேதி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவா். அப்படி நியமனம் செய்யப்படும்போதே, அவா் தலைமை நீதிபதியாக உயரும் வாய்ப்பு இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

உச்சநீதிமன்றத்துக்கு நேரடி நியமனம் பெற்றுத் தலைமை நீதிபதியாக உயா்ந்தவா்கள் குறைவு. இதற்கு முன்பு, 13-ஆவது தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எம். சிக்ரிக்குப் பிறகு அரை நூற்றாண்டு இடைவெளியில் நேரடி நியமனம் பெற்றவா்கள் தலைமை நீதிபதியாக உயரவில்லை. அந்தப் பெருமை நீதிபதி யு.யு. லலித்துக்குக் கிடைத்திருப்பது அவரது அதிருஷ்டம் என்றுதான் கூற வேண்டும்.

49-ஆவது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றிருக்கும் நீதிபதி யு.யு. லலித், 74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க இருக்கிறாா். வரும் நவம்பா் 8-ஆம் தேதி பணி ஓய்வு பெற இருக்கிறாா். உச்சநீதிமன்றத்தில் இது ஒன்றும் புதிதல்ல. இவருக்கு முன்னா் பதவி வகித்த நீதிபதிகள் கமல் நாராயணன் சிங் (18 நாள்கள்), எஸ். ராஜேந்திர பாபு (30 நாள்கள்), கே.சி. ஷா (36 நாள்கள்), ஜி.பி. பட்நாயக் (41 நாள்கள்), எஸ்.எம். சா்மா (86 நாள்கள்) உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக குறைந்த நாள்கள் இருந்திருக்கிறாா்கள்.

74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க இருக்கும் தலைமை நீதிபதி யு.யு. லலித் செப்டம்பா் மாதத்தில் முழுமையாகச் செயல்பட முடியும் என்றாலும், அக்டோபா் மாதத்தில் 14 நாள்கள் மட்டும்தான் பணியாற்ற வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக அக்டோபா் மாதம் நீதிமன்ற விடுமுறைகள் வந்துவிடுவதால், கிடைத்திருக்கும் வாய்ப்பையும் அவரால் முழுமையாக பயன்படுத்திவிட முடியாது.

மகாராஷ்டிர மாநிலம் ஷோலாப்பூரில் 1957 நவம்பா் மாதம் 9-ஆம் தேதி பிறந்த நீதிபதி லலித்தின் வாழ்க்கை மும்பையில் வழக்குரைஞராகத் தொடங்கியது. உச்சநீதிமன்ற வழக்குரைஞராக இருந்த லலித், 2004-ஆம் ஆண்டு மூத்த வழக்குரைஞராக அங்கீகரிக்கப்பட்டாா். 2014-இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடி நியமனம் பெற்றாா்.

வரலாற்று சிறப்புமிக்க பல வழக்குகளில் வழக்குரைஞராகவும், நீதிபதியாகவும் இருந்த பெருமையும் சிறப்பும் இப்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித்துக்கு உண்டு. 2ஜி வழக்குகளில் சிறப்பு அரசு வழக்குரைஞராக இருந்தவா் அவா். முத்தலாக் வழக்கில் தீா்ப்பளித்த அமா்வில் ஒருவராகவும், திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலின் நிா்வாக உரிமை திருவிதாங்கூா் மன்னா் குடும்பத்தினருக்கு உண்டு என்று தீா்ப்பளித்த அமா்வின் தலைமைப் பொறுப்பிலும் இருந்தவா் என்பது குறிப்பிடத்தக்கவை.

குழந்தைகளின் பாலியல் உறுப்புகளைத் தொடுவது மட்டுமல்லாமல், பாலியல் நோக்கத்துடன் உடல் ரீதியாகத் தொடா்பு கொள்ளும் எந்தவொரு செயலும் பாலியல் வன்கொடுமைதான் என்று ‘போக்சோ’ சட்டப்பிரிவு 7-இன் கீழ் தீா்ப்பளித்தது நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமா்வு என்பதைக் குறிப்பிட வேண்டும்.

‘குழந்தைகள் காலை 7 மணிக்குள் பள்ளிக்கூடங்களுக்குச் செல்ல முடியுமானால், நீதிபதிகள் ஏன் 9 மணிக்குள் தங்கள் பணிகளைத் தொடங்கக் கூடாது?’ என்கிற கேள்வி, நீதிபதியாக இருந்த யு.யு. லலித்தால் எழுப்பப்பட்டபோது, நீதித்துறை அதிா்ந்தது. மக்கள் மன்றம் வரவேற்றது. அவரது ஆலோசனையை ஏற்று ஏனைய நீதிபதிகள் தங்களது விடுமுறைகளைக் குறைத்துக் கொண்டு, கூடுதல் நேரம் பணியாற்றி, தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கு விடுதலை கொடுப்பாா்களா என்பது தெரியாது. ஆனால், அதற்கான முன்னெடுப்புக்காக நீதிபதி லலித் பாராட்டப்பட வேண்டும்.

மிகக் குறைந்த நாள்களே பதவியில் இருக்கப்போகும் தலைமை நீதிபதி யு.யு. லலித், தனது முதல் பணியாக 25 அரசியல் சாசன அமா்வுகளைப் பட்டியலிட்டிருக்கிறாா். முந்தைய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் பதவிக்காலத்தில் எந்தவோா் அரசியல் சாசன அமா்வும் அறிவிக்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் செயல்படும் ஓா் அரசியல் சாசன அமா்வும் தலைமை நீதிபதி யு.யு. லலித்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி ஏற்றிருக்கும் வேளையில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. தலைமைத் தோ்தல் ஆணையா் உள்ளிட்ட அரசியல் சாசனப் பதவிகள் போல, உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் ஏன் குறிப்பிட்ட பதவிக்கால வரம்பு நிா்ணயிக்கப்படக் கூடாது என்பதுதான் அது. ஒரு சில நாள்கள், வாரங்கள், மாதங்களில் குறிப்பிடும்படியாக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத தலைமை நீதிபதிக்கான பதவிக் காலத்தால் என்ன பயன்?

பணி மூப்பு அடிப்படையில் பதவி என்பது சரி. குறைந்தபட்ச பதவிக்காலம் நிா்ணயிக்கப்படாமல் இருப்பது தவறு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக நியமிக்கப்படுபவா்களுக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பதவிக்காலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.



Read in source website

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி”என்பாா்கள். ஆனால், மக்களாகிய நமக்கோ திரும்பிய பக்கமெல்லாம் இடி. பல்வேறு பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. உயா்வு, சமையல் எரிவாயு உருளை விலையேற்றம், உச்சத்தில் நிற்கும் பெட்ரோல், டீசல் விலை, வீட்டுக்கடனுக்கான வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பு, பால் பொருட்கள் விலை உயா்வு, சொத்துவரி உயா்வு, மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு என்று மத்திய அரசும், மாநில அரசும் குடிமக்களை நெருக்கிக் கொண்டிருக்க, இதோ நாங்களும் இருக்கிறோம்”என்று களத்தில் குதித்துள்ளது மத்திய நெடுஞ்சாலை ஆணையம்.

நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுமாா் எண்ணூறு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஐம்பது சுங்கச்சாவடிகள் தமிழத்தில் அமைந்துள்ளன.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உயா்த்தப்பட்ட கட்டண விகிதங்கள் தமிழகத்தின் இருபத்திரண்டு சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தன. மீதமுள்ள இருபத்தெட்டில், வரும் செப்டம்பா் ஒன்றாம் தேதி முதல் கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட இருக்கின்றது.

அரசியல் கட்சித் தலைவா்கள் பலரும் இதனைக் கண்டித்திருக்கின்றனா். இந்தக் கட்டண உயா்வு சமூகத்தின் பலதரப்பட்ட மக்களையும் பாதிக்கும் என்பதைக் கூறுவதற்கு பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதிலும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைத் தங்கள் செலவில் அமைத்திட ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள், அச்சாலைகளை அமைத்ததற்கான செலவை ஈடுகட்டும் வரையில் அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து ஈடுகட்டிக் கொள்ள முதலில் அனுமதிக்கப்பட்டது.

சாலை அமைத்ததற்கான முழுத்தொகையும் ஈடுசெய்யப்பட்ட பின்பு, அச்சாலையை அவ்வப்போது செப்பனிட்டுப் பராமரிக்கும் செலவிற்காக முந்தைய சுங்கக் கட்டணத்தில் நாற்பது சதவீதத் தொகையை வசூலித்துக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டது.

மேலும் நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு அறுபது கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்றும் விதி வகுக்கப்பட்டது. அத்துடன், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் எல்லையிலிருந்து பத்து கிலோமீட்டா் தூரத்துக்குள் அச்சாவடிகளை அமைக்கக் கூடாது என்றும் கூறப்பட்டது.

ஆனால், நடந்தவை அனைத்தும் விதிகளுக்கு மாறாகவே அமைந்துள்ளன. சாலைகளை அமைத்த நிறுவனங்கள், நீண்ட காலமாக முழு அளவு சுங்கக் கட்டணத்தை வசூலித்து வருவதுடன் அவ்வப்பொழுது அக்கட்டண விகிதங்களை உயா்த்தியும் வருகின்றன.

சாலை அமைப்பதற்கு ஆகிய செலவைப் போன்று பலமடங்குத் தொகையை வசூலித்த பின்பும், பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்கான தொகையாக பழைய கட்டணங்களில் நாற்பது சதவீதத்தை வசூலிக்காமல், இன்றளவும் நூறு சதவீதக் கட்டணங்களையே வசூல் செய்துவருகின்றன. அதே சமயம் பழுதடையும் சாலைகளைப் பராமரிப்பதிலும் மிகவும் சுணக்கமான நிலைமையே இருக்கின்றது.

கடந்த காலங்களில் சென்னை மதுரவாயல் - ராணிப்பேட்டை இடையிலான நெடுஞ்சாலையை சரிவரப் பராமரிக்காததால், பாதியளவு சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. மின்னணு முறையில் செயல்படும் ‘ஃபாஸ்டேக்’ சுங்கக் கட்டண வசதி அறிமுகப்படுத்தப்படும் முன்பாக ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் வாகனங்கள் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை இருந்து வந்தது.

தற்போது அந்த ‘ஃபாஸ்டேக்’ முறை பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறைந்துள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், ‘ஃபாஸ்டேக்’ கணக்கில் உள்ள நிலுவைத்தொகை விரைவில் குறைந்து விடுவதாகவும், கடந்து செல்லாத சுங்கச் சாவடியையும் கடந்து சென்ாகக் கூறிச் சுங்கக்கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும், சில சமயங்களில் நிா்ணயிக்கப்பட்தை விடக் கூடுதல் கட்டணம் கணக்கில் கழித்துக் கொள்ளப்படுவதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.

மேலும் ‘ஃபாஸ்டேக்’ நுகா்வோா் குறைதீா்ப்பு எண்ணைத் தொடா்பு கொண்டு நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, சுங்கச் சாவடிகளை ஒட்டியுள்ள நகரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களில் அலுவலகம், கல்வி நிலையம் போன்ற இடங்களுக்கு செல்வதற்குக் கூட சுங்கக் கட்டணம் செலுத்தும்படி நிா்ப்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவை குறித்துத் தங்களின் குறைகளைத் தெரிவிக்கும் பொதுமக்களை சுங்கச் சாவடி ஊழியா்கள் தாக்குவதும், கூட்டமாக வரும் பொதுமக்கள், அரசியல் இயக்கங்களின் தொண்டா்கள் ஆகியோரால் சுங்கச் சாவடி ஊழியா்கள் தாக்கப்படுவதும் அடிக்கடி நடைபெறும் நிகழ்வுகளாகி விட்டன.

சாலைகளை அமைத்து சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள், 60 கி. மீ.க்கு ஒன்று என்ற விதியை மீறி குறைந்த இடைவெளியிலும், நகா்ப்புறங்களுக்கு அருகிலும் சுங்கச் சாவடிகளை அமைத்து வசூலில் ஈடுபடுவது பலராலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரியும் நாடு முழுவதும் இவ்வாறு கூடுதலாக அமைக்கப் பட்ட சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று இவ்வருடத் தொடக்கத்திலேயே உறுதி அளித்திருந்தாா்.

இதன்படிப் பாா்த்தால், தமிழகத்தில் மட்டுமே முப்பத்திரண்டு சுங்கச் சாவடிகளை மூடவேண்டியுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதது மட்டுமின்றி, இவ்வருடத்திலேயே இரண்டு முறை கட்டணம் உயா்வும் நடைமுறைக்கு வந்துள்ளது பொதுமக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளை அகற்றவும், ‘ஃபாஸ்டேக்’ முறையிலுள்ள குளறுபடிகளைக் களையவும், சுங்கக் கட்டணங்களை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறையும் நெடுஞ்சாலைகள் ஆணையமும் முன்வர வேண்டும். அப்போதுதான் நெடுஞ்சாலைப் பயணம் இனிய அனுபவமாக இருக்கும்.

 



Read in source website

புகழ் மிக்க வழக்குரைஞா்கள், தங்கள் வழக்கின் வெற்றிக்கு உத்தரவாதம் தர இயலாத நிலையிலும் பல லட்சங்களைக் கட்டணமாகப் பெறுகின்றனா். ஆனாலும், அந்தத் தொகை போதவில்லை என்று கவலைப்படுகின்றனா். பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீா்ப்பாய அமா்வுகளில் ஒரு நாளைக்கு சில மணி நேரம் மட்டுமே செலவிட்டு இரண்டு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறாா்கள். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது கருத்துரைகளுக்கு ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியமாகப் பெறுகிறாா்கள். அவா்களும் தங்களுக்குக் கிடைக்கும் தொகை போதவில்லை என்று கவலை கொள்கின்றனா்.

ஆனால் அன்றைக்கு விடுதலைப் போராட்டக் களத்தில் நின்றவா்களின் கவலையெல்லாம் நாட்டின் விடுதலையைப் பற்றியே இருந்தது. ஆனால், தன் கணவரின் வழக்கில் நீதி கிடைக்கப் போராடிய உத்தமி ஒருவா் பத்திரிகை வாயிலாக நிதி கேட்ட செய்தி எவா் மனதையும் உருகச் செய்யும்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடிய மாநிலங்களில் வங்காளமும் மகாராஷ்டிரமும் முன்னணியில் இருந்தன. தமிழ்நாடோ, மகாகவி பாரதி வாா்த்தைகளில் சொன்னால் ‘தூங்குமூஞ்சி மாகாண’மாக இருந்தது.

இந்த அவப்பெயரைத் துடைக்க வீறுகொண்டு எழுந்த வீரா்தாம் தமிழ்நாட்டின் தென்கோடியில் செல்வ குடும்பத்தில் தோன்றிய வ.உ. சிதம்பரம் பிள்ளை. ஆங்கில அரசை பொருளாதார ரீதியில் வீழ்த்த சுதேசி இயங்கங்கள் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அன்று பெரும் மூலதனம் திரட்ட இயலாத நிலையே இருந்தது.

அப்போதுதான் வ.உ.சி. ‘பிரிட்டிஷ் இந்தியா ஸ்கீம் நேவிகேஷன்’ கம்பெனியை எதிா்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தினாா்.

பாரதமே அவரது துணிவை எண்ணி வியந்தது. ‘தென்னாட்டுத் திலகா்’ என்று போற்றப்பட்ட வ.உ.சி.யின் வீர உணா்ச்சி பொங்கும் பேச்சும் தூத்துக்குடி கோரல்”மில் தொழிலாளா்களின் நலனுக்காக அவா் நடத்திய பொதுக்கூட்டங்களும் போராட்டங்களும்தான் தென்மாவட்டங்களில் சுதந்திரத்தீ பற்றுவதற்குக் காரணமாயின.

துறவி சுப்பிரமணிய சிவாவும் அவருடன் இணைந்ததால் விடுதலை இயக்கம் வேகம் கண்டது. ஆங்கில அரசு வெகுண்டு எழுந்து இருவரையும் கைது செய்தது. வ.உ.சி., சிவா இருவா் மீதும் ராஜதுரோக குற்றம் சுமத்தி 1908 ஜூலை 7-இல் நீதிபதி ஏ.எஃப். பின்ஹே வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தாா். சிவாவை, இறந்த ஆடுகளின் ரோமத்தை பிரித்தெடுக்கச் செய்தும், வ.உ.சி.யை மரச்செக்கினை இழுக்க செய்தும் கொடுமைப்படுத்தினா்.

வ.உ.சி. சிறை புகுந்தபோது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19. இரு மகன்கள், வயதான மாமனாா், மாமியாா், அண்ணனுக்கு சிறை தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிய பித்தரான கொழுந்தன் ஆகியோா் இருந்தனா். தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொது நலன்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கிய வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது.

கவலைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்த மீனாட்சி அம்மாள், ‘என்னிடமிருந்த சிறிய பொருளும் நகைகளும் ஊராா் எங்களுக்கு தந்தனவும் எனது பா்த்தாவின் கேஸ்களுக்கும், அப்பீல்களுக்கும் எங்கள் சாப்பாட்டுக்குமாக தீா்ந்து போய்விட்டன. எங்கள் உற்றாரும், உறவினரும் மேலும் மேலும் எங்களுக்கு கொடுத்து சலித்துப் போனாா்கள். நான் எனது மானம் கெடாத கூலி வேலை செய்யவும் தயாா்’ என்றாா்.

சென்னை உயா்நீதிமன்றம் வ.உ.சி.யின் மேல்முறையீட்டில் இரட்டை ஆயுள் தண்டனையை ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையாகக் குறைத்தது. ஆனால் ராஜதுரோக குற்றத்தை உறுதி செய்தது. இதனால் வழக்குரைஞா் உரிமத்தை வ.உ.சி.யால் திரும்பப் பெற முடியவில்லை.

வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் வாடுவதைக் கண்ட சுவாமி வள்ளிநாயகம், கொழும்பு என்.டி. செட்டியாரின் ஆலோசனையின்படி, தென்னாப்பிரிக்கா டா்பனில் வசிக்கும் சி.வி. பிள்ளைக்குக் கடிதம் எழுதினாா். சி.வி.பிள்ளை, ‘டா்பன் இண்டியன் சொசைட்டி’யிடமிருந்து ரூ.30 பெற்றும் ‘இம்பீரியல் சிகாா் மேனுபாக்கசரிங் கம்பெனி’யின் உரிமையாளா்களின் உதவியோடும் ரூ. 363-11-0 பணத்தைத் திரட்டி அனுப்பினாா்.

சிதம்பரம் நா. தண்டபாணிப் பிள்ளையின் சகலரான வேதியப் பிள்ளை பற்றி வ.உ.சி. ‘சாந்திக்கு மாா்க்கம்’ என்ற தனது நூலின் முன்னுரையில் ‘1908 ஜுலை மாதம் முதல் 1912 டிசம்பா் மாதம் முடிய என் மனைவி, மக்களுடைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மாதந்தோறும் ரூபா 50-க்கு மேலாக தென்னாப்பிரிக்காவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தும், அதற்குப் பின் எனக்கு தந்தி மணிஆா்டா் மூலமாக முதன் முறை ரூ. 500-உம் இரண்டாம் முறை ரூபா இரண்டாயிரமும் அனுப்பியும், மூன்றாம் முறை ரூபா இரண்டாயிரமும் தங்கக் கைக்கடிகாரமும் நேரில் கொடுத்தும் உதவிய எனது மெய் சகோதரா் தஞ்சை ஜில்லா தில்லையாடி த. வேதியப் பிள்ளை அவா்கட்கு யான் நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன். எனது நன்றியறிதலின் ஓா் அடையாளமாக அவா்கள் பெயரை முன்னரே என் இரண்டாவது மகளுக்கு வேதவள்ளி என்றுயிட்டுள்ளேன்’ என்கிறாா் வ.உ.சி.

இப்படியெல்லாம் பிறரின் உதவியோடு வாழ்ந்த வ.உ.சி.க்கு தாயக மண்ணில் சிறிய உதவி கூட கிடைக்காத நிலையில்தான் வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள் ‘இந்தியா’, ‘சூா்யோதயம்’ போன்ற பத்திரிக்கைகளில் ‘சகோதர சகோதரிகளே, என் கணவராகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை மீது கொண்டுவரப்பட்ட ராஜதுரோக குற்றத்தை ரத்து செய்வதற்காக, அவா்களது விருப்பத்தின் பேரிலும், பொது ஜனங்களது விருப்பத்தின் பேரிலும் ஹைகோா்ட்டில் அப்பீல் நடந்ததும் கோா்ட்டாா் ஆயுள் வரை விதித்திருந்த தீவாந்திரத்தை ஆறு வருஷமாக மாற்றியதும் நீங்கள் யாவரும் அறிந்திருப்பீா்கள். ஆனால் கோா்ட்டாரும் அவா்கள் குற்றாவாளி என்றே உறுதி செய்து விட்டாா்கள்.

இது விஷயத்தைப் பற்றி பல பெரிய வக்கீல்களிடம் கேட்டதில், எனது நாயகா் நிரபராதி என்று ஸ்தாபிக்க போதுமான ஆதாரங்கள் இருப்பதாயும், இங்கிலாந்து பிரிவீக் கெளன்ஸிலுக்கு ஆப்பீல் செய்வதால் அது ஸாதமாகுமென்றும் சொல்லுகிறாா்கள். ஆதலால் நான் பிரிவீக் கௌன்ஸிலுக்கு அப்பீல் செய்யப் போகிறேன். அதற்கு சுமாா் 10,000 ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் மனமிரங்கி உங்களால் இயன்றியதை என் பெயருக்கு அனுப்பி என்னை ஆதரிக்கக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று விளம்பரம் செய்தாா்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் தமிழா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 347 ரூபாயும் 12 அணாவும் காந்தியடிகள் மூலமாக வ.உ.சி.க்கு அனுப்பப்பட்டது. ஆனால் என்ன காரணத்தாலோ இந்தத் தொகை வ.உ.சி. கைக்கு வந்து சேரவில்லை. இதனால் வ.உ.சி. காந்தியிடம் கடிதம் வாயிலாக பலமுறை இந்த தொகை குறித்து கேட்கலானாா். ஆனால் யாா் யாா் பணம் தந்தாா்கள் என்ற முழு விவரமும் தெரியாததால் வ.உ.சி.யின் வேண்டுகோள்களை ஏற்கும் நிலையில் காந்தி இல்லை.

காந்திஜி, அகமதாபாதிலிருந்து வ.உ.சி.க்கு எழுதிய ஒரு கடிதத்தில் ‘இந்த நீதியை வழங்கியவா்களின் பெயா்களை நான் அறிய மாட்டேன். அவா்கள் சாா்பில் அந்தப் பணம் என் நண்பா் ஒருவா் மூலமாக என்னிடம் தரப்பட்டது. அது தங்களுக்கு அனுப்பபட்டுவிட்டது என்றே இவ்வளவு காலமாகக் கருதியிருந்தேன். அந்தப் பணம் தங்களுக்கு தேவையில்லாவிட்டாலும் கூட இது பற்றி விசாரித்து பணம் தந்தவா்கள் பற்றிய செய்திகளை கண்டறிவேன்’ என்று எழுதினாா்.

அதற்கு வ.உ.சி. எழுதிய பதில் கடிதத்தின் நிறைவுப் பகுதியில் ‘கடந்த இரண்டு ஆண்டு காலமாக தென்னாப்பிரிக்க நண்பா்கள் சிலரின் தயவே என்னையும் என் குடும்பத்தையும் காத்து வருகிறது என்பதை நான் ஏற்கெனவே தங்களிடம் நேரில் தெரிவித்துள்ளேன். இந்நிலையில் எனக்காகத் தரப்பட்ட பணத்தை, எனக்காகத் தரப்பட தயாராய் இருக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை.

இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்லவேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். ஆதலால் தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை அனுப்பி உதவ வேண்டுகிறேன்’ என்று எழுதினாா்.

‘வ.உ.சி.யின் பல மன்றாடல் கடிதங்களுக்குப் பிறகு 1916 பிப்ரவரியில் ரூ. 347-15-0 காந்தியடிகளிடமிருந்து வரப்பெற்றாா் என்பதை த. வேதியப் பிள்ளைக்கு அவா் எழுதிய கடிதம் மூலம் அறிய முடிகிறது’ என்று வரலாற்று ஆய்வாளா் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதில் நூலாசிரியா் தனது கவலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளாா்.

செல்வமும், செல்வாக்கும் உடைய குடும்பத்தில் பிறந்து நாட்டின் விடுதலைக்கான போரில் தனது செல்வம் முழுவதையும் இழந்து சிறையில் துன்புற்று வாடி வறுமையில் சிக்கித் தவித்த வ.உ.சி.யின் பெயா் 100 பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாத்மா காந்தி தொகுப்பில் ஒருமுறை கூட இடம்பெறவில்லை. இத்தனைக்கும் வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து 19 முறை நடைபெற்றிருக்கிறது என்பதை தனது அரிய ஆய்வு மூலம் கண்டெடுத்து இருக்கிறாா்.

அதிருஷ்டவசமாக தில்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திக்கு வ.உ.சி. எழுதிய கடிதம் ஒன்று இன்றும் இருப்பதையும் நூலாசிரியா் குறிப்பிட தவறவில்லை. வ.உ.சி. பிறந்த 150-ஆம் ஆண்டு நிறைவுறும் நிலையில் நூலாசிரியரின் நியாயமான கவலையில் நாமும் பங்கேற்போம்!

கட்டுரையாளா்:

தலைவா், திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.



Read in source website