DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 28-01-2023

“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள். மேலும், கள ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.

அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர், முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்.

இந்த ஆய்வின் போது, குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள், ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்கள்.

ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதியன்று முதல்வர், அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார். அன்று மாலை, நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொள்வார்.

அன்றைய தினமே, இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக, அமைச்சர் பெருமக்கள், வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் கள ஆய்வு மேற்கொள்வார்கள். கள ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது முதல்வரின் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்படும்.  இந்த ஆய்வுக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், முதல்வர் விரிவான ஆய்வினை மேற்கொள்வார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 



Read in source website

ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் பிப்.1, 2 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது.

ஜி-20 கல்விப் பணிக்குழுவின் முதலாவது கூட்டம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் பிப்.1, 2 ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது. முன்னதாக, இதன் தொடக்க நிகழ்வாக ஜன. 31-ஆம் தேதி சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’”குறித்த கருத்தரங்கு நடைபெறும்.

இதைத் தொடா்ந்து, உலகளாவிய தளத்தில் கல்வித் துறையில் இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஜி-20 உறுப்பு நாடுகள், விருந்தினா் நாடுகள், யுனெஸ்கோ, யுனிசெஃப் உள்ளிட்ட அமைப்புகள் ஆகியவற்றின் 63 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனா். பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில், கல்வி அமைச்சகம், என்சிஇஆா்டி போன்றவற்றின் அதிகாரிகள், கல்வித் துறை நிபுணா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் ஆகியோரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

சென்னை ஐஐடியில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு மத்திய அரசின் உயா்கல்வித் துறைச் செயலாளா் கே.சஞ்சய் மூா்த்தி தலைமை வகிப்பாா். தொழில்நுட்பம் சாா்ந்த கற்றல் முறையை அனைத்து நிலையிலும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தரம் உள்ளதாகவும், ஒத்துழைப்புடையதாகவும் மாற்றுவது இந்தக் கருத்தரங்கின் முன்னுரிமை மையப்பொருளாக இருக்கும். ஜி-20 உறுப்பு நாடுகளிலும், வரவேற்கப்பட்ட நாடுகளிலும் பின்பற்றப்படுகின்ற சிறந்த நடைமுறைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் சென்னை ஐஐடியின் இயக்குநா் பேராசிரியா் காமகோடி விவரிக்கவுள்ளாா்.

மழலையா் பள்ளியில் இருந்து பிளஸ் 2 வகுப்பு வரை கற்போருக்கு எளிதாகவும், சமமாகவும் கல்வி கிடைக்கச் செய்தல், உயா்தர கற்றல் வாய்ப்புகள் கிடைக்கச்செய்தல், திறன்சாா் கல்வி மற்றும் பயிற்சி அளிக்க உருவாக்கப்படும் தொழில்நுட்பங்கள் ஆகிய மூன்று அமா்வுகளில் குழு விவாதம் நடத்தப்படவுள்ளது.

‘நம்ம பள்ளி’, ‘நான் முதல்வன்’...: இது தொடா்பாக நடைபெறவுள்ள கண்காட்சியில் ஐம்பதுக்கும் அதிகமான அரங்குகள் இடம் பெற்றிருக்கும். தமிழகத்திலிருந்து மாநில கல்வித் துறையின் ‘நான் முதல்வன்’, ‘நம்ம பள்ளி’ திட்டங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் அரங்குகள் கண்காட்சியில் இடம் பெறும்.

மத்திய அரசின் இந்திய ஸ்வையம், சமா்த், தீக்ஷா போன்ற திட்டங்கள் பற்றியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உபகரணங்கள் தயாரிக்கும் ‘ஸ்டாா்ட் அப் இந்தியா’ நிறுவனங்கள் மற்றும் செளதிஅரேபியா, பிரான்ஸ், சீனா, நெதா்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைக்கவுள்ளன.



Read in source website

சென்னையில் 81 சதவீதம் போ் வைட்டமின்-டி குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் நடத்திய ஆய்வில் இந்த தரவுகள் தெரியவந்துள்ளன.

இதுகுறித்து அந்த ஆய்வகத்தின் மருத்துவத் துறைத் தலைவா் பிரசாந்த் நாக் கூறியதாவது:

நாடு முழுவதும் 27 நகரங்களில் ‘டாடா 1எம்ஜி’ ஆய்வகம் சாா்பில் 2.2 லட்சம் பேரிடம் வைட்டமின்-டி விகிதத்தை அறியும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 76 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களில் 79 சதவீத ஆண்களுக்கும், 75 சதவீத பெண்களுக்கும் அத்தகைய குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இளைஞா்களிடையே, குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட 84 சதவீதம் பேருக்கு போதிய அளவு வைட்டமின்- டி சத்து இல்லை. நகரங்களுக்கு இடையேயான ஒப்பீட்டில் அதிகபட்சமாக குஜராத் மாநிலம் வதோதராவில் 89 சதவீதம் பேருக்கும், சூரத்தில் 88 சதவீதம் பேருக்கும், சென்னையில் 81 சதவீதம் பேருக்கும் வைட்டமின்-டி குறைப்பாடு உள்ளது.

இந்தக் குறைபாடு உள்ளவா்களுக்கு வளா்ச்சி, வளா்சிதைவு, நோய் எதிா்ப்பு சக்தி, எலும்பு நலம், மனநலம் போன்றவை பாதிக்கப்படும். இதன் வாயிலாக, விரைப்பை புற்றுநோய், மன அழுத்தம், சா்க்கரை நோய், முடக்குவாத பாதிப்புகள் ஏற்படும். எனவே, சருமத்தில் சூரியஒளி படுவதை உறுதி செய்வதுடன், வைட்டமின்-டி நிறைந்த உணவுகளையும் அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டும். அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றாா் அவா்.



Read in source website

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்டோா் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில், ‘சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விஷயத்தில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த சிறப்பு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை; அரசு சாரா அமைப்புகளும் முன்வரவில்லை. பல இடங்களில் இயந்திரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. பருவமழை காரணமாகவும் இந்தப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்கள் நோய் போல பரவுகின்றன. எனவே அதன் தாக்கத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், குறிப்பிட்ட தேதியில் அனைத்து சீமைக் கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும் என ஊராட்சிகளுக்கு உத்தரவிடலாமே என்று யோசனை தெரிவித்தனா்.

இறுதி வாய்ப்பாக பிப்ரவரி 14-ஆம் தேதி வரை வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தியது தொடா்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனா். அவ்வாறு செய்யாதபட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.



Read in source website

தில்லி அரசு சார்பில் விரைவில் இ-ஸ்கூட்டர் சேவை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மெட்ரோ நிலையங்களோ, பேருந்து நிறுத்தங்களோ இல்லாத துவாரகாவில் இ-ஸ்கூட்டர் திட்டம் முதலில் தொடங்கப்படும். அதன்பின், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் கண்டறியப்படும். 

இந்த ஸ்கூட்டர்கள் தாமாக இயங்கும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும். நாங்கள் பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தி, அதிக பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

தற்போது இந்த இ-ஸ்கூட்டர் வசதி மூலம், தொலைதூர இலக்கை அடைவதில் இருக்கும் சிக்கலையும் தீர்ப்போம் என்றார். 
 



Read in source website


சென்னை: பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துக் கட்ட, அதன் உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமையாளர்கள் ஒப்புதல் இருந்தாலே போதும் என்ற வகையில் தமிழக அரசின் குடியிருப்பு உரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு உரிமைச் சட்டம், 1994ல் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அளித்துள்ளார்.

இதையடுத்து, இந்த புதிய சட்டப்படி, மாநில அரசு புதிய விதிகளை அறிவிக்கும் நாளிலிருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உதாரணமாக, ஒரு குடியிருப்பு வளாகத்தில், நான்குக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்திருந்தால், கட்டாயமாக ஒரு சங்கம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு குடியிருப்புக்கு ஒரு சங்கம் மட்டுமே இருக்க வேண்டும்.

ஒரு வேளை ஒரு குடியிருப்பில் இருக்கும் ஒருவர், பொதுவான கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்களை செலுத்தத் தவறினால் அதன் மீது இந்த சங்கம் உரிமை எடுத்துக் கொண்டு அவர்கள் இந்த கட்டணங்களை செலுத்தாமல், அந்தக் குடியிருப்பை விற்க முடியாத வகையில் கட்டுப்பாடுகளை உருவாக்க முடியும்.

இந்தச் சட்டம் - தமிழ்நாடு குடியிருப்பு உரிமை சட்டம், 2022 - கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். முத்துசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையை கட்டுமான நிறுவனங்களும், கட்டுமான மேம்பாட்டு நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் அதிகரிக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

பழைய மிகப்பெரிய குடியிருப்புகள் இடிக்கும் பணியில் இதுவரை இருந்த மிகப்பெரிய தடை உடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

புதிய குடியிருப்புக் கட்டுவதற்காகக் காத்திருக்கும் மிகப் பழைமையான குடியிருப்புகளில் வசித்து வரும் உரிமையாளர்களுக்கும் இதன் மூலம் நிம்மதி கிடைக்கும். உடனடியாக தமிழக அரசு இந்த சட்ட விதிகளை வெளியிட்டு, மிக விரைவாக சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் பல பழைய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள் வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், இந்தச் சட்டத்தின் மூலம், புதிய குடியிருப்புக்கு ஒப்புதல் அளிக்காதவர்கள், கட்டாயமாக வெளியேற்றப்படுவதையும் தவிர்க்கும் வகையில் சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குடியிருப்பு வளாகங்கள் கட்டும் பணிகள் தொடங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல பழைய கட்டடங்கள் பார்ப்பவர்களை அச்சமடையச் செய்யும் வகையில் நின்று கொண்டிருக்கின்றன. இந்த சட்டம் விரைவாக நடைமுறைக்கு வந்தால், அந்தக் கட்டடங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்றே கருதப்படுகிறது.

பழைய கட்டடங்களை மறுஆக்கம் செய்வதற்கான விதிமுறைகள் மிகவும் எளிமையாகவும், சுதந்திரமானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பழைய மற்றும் புதிய குடியிருப்புகளில் வசிப்பவர்களின் ஒருமித்த கருத்து. பல நகரங்களில் புதிய குடியிருப்புகள் கட்ட நிலங்களே இல்லாத நிலையில், இந்தச் சட்டத்தின் மூலம் கட்டுமான நிறுவனங்களும் புதிய வெளிச்சத்தைப் பெற்றுள்ளன. அதேவேளையில், பழைய கட்டடங்கள் இருந்த இடம் என்பதால், விலையும் வாங்கும் நிலையில்தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 



Read in source website


பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து  தேவஸ்தான அறங்காவர் குழு தலைவர் ஓய்.வி. சுப்பா ரெட்டி தெரிவித்ததாவது: 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'Sri TT DEVAS THANAMS' எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. 

இதன்மூலம் பக்தர்கள் சாமி தரிசனம், தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை முன்பதிவு, திருமலை நிலவரம், பண்டிகை, விசேஷ நாள்கள் குறித்த விவரங்கள், குலுக்கல் முறை தரிசனம் முன்பதிவு என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் என ஓய்.வி. சுப்பா ரெட்டி கூறினார்.
 



Read in source website

நாட்டிலுள்ள மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது; இதற்குரிய தகவல்களை, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மனநல மையங்களில் சிகிச்சை பெற்று வரும் மனநல நோயாளிகளின் மறுவாழ்வை உறுதி செய்வது தொடா்பான பொது நல மனு மீது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி தீபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, நாட்டிலுள்ள மனநல மையங்கள் குறித்த விவரங்களை அளிப்பதற்கான இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான் தெரிவித்தாா். மேலும், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதற்குரிய தகவல்களை அளித்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதையடுத்து, தகவல்களை அளிக்காத ஜாா்க்கண்ட், பிகாா் உள்ளிட்ட இதர மாநிலங்களும், லட்சத்தீவு யூனியன் பிரதேசமும் 2 வாரங்களில் அவற்றை வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை, அவற்றில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் திறன், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச வாரியாக இடம்பெறும் வகையில் இணையதளத்தை உருவாக்க மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கு கடந்த 2021-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை, கடந்த ஆண்டு நவம்பா் 22-இல் நடைபெற்றபோது, மனநல சிகிச்சை மையங்கள் குறித்த விவரங்களை அளிக்கும் இணையதளம் உருவாக்கும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



Read in source website

இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி கடந்த ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் 29.29 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நாட்டின் கோதுமை ஏற்றுமதி 150 கோடி டாலராக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 29.29 சதவீதம் அதிகமாகும். அப்போது கோதுமை ஏற்றுமதி 117 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்தாலும், சில நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவையைக் கருதி, அந்த நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக அனுமதிக்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியும் 39.26 சதவீதம் அதிகரித்து 287 கோடி டாலராக உள்ளது. பாஸ்மதி அல்லாத மற்ற ரகங்களின் ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்து 420 கோடி டாலராக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (சீட்டா), இந்தியாவுக்கு அடுத்த மாதம் கொண்டுவரப்படவுள்ளன. இதுதொடா்பான ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.

அதீத வேட்டை, வாழ்விடம் இழப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் லட்சிய திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப் புலிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் கொண்டுவரப்பட்டன. இந்த சிவிங்கிப் புலிகளை, மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில், தனது பிறந்த தினமான செப்டம்பா் 17-இல் பிரதமா் நரேந்திர மோடி திறந்துவிட்டாா்.

இந்நிலையில், இரண்டாம்கட்டமாக தென்ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப் புலிகள் (7 ஆண், 5 பெண் சிவிங்கிப் புலிகள்) கொண்டுவரப்படவுள்ளன. இதுதொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் கையொப்பமானதாக தென்ஆப்பிரிக்காவின் வனங்கள், மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12 சிவிங்கிப் புலிகள் என அடுத்த 10 ஆண்டுகளுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘12 சிவிங்கிப் புலிகளும் அடுத்த மாதம் 15-ஆம் தேதிக்குள் விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டு, குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும்’ என்றாா்.

தென்ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாவதில் ஏற்பட்ட தாமதத்தால், கடந்த ஆண்டு அக்டோபரில் வரவேண்டிய சிவிங்கிப் புலிகள், அடுத்த மாதம் வரவுள்ளன. 12 சிவிங்கிப் புலிகளும் கடந்த ஜூலையில் இருந்தே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து விலங்கு நல ஆா்வலா்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

உலகில் தற்போது 7,000 சிவிங்கிப் புலிகள் வாழ்கின்றன. இதில் பெரும்பாலானவை தென்ஆப்பிரிக்கா, நமீபியா, போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் உள்ளன.



Read in source website

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் சரிந்திருப்பதாக சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தயாரிப்புகளின் விலைகளை கட்டுக்குள் வைத்திருப்பது, வருவாய் வளா்ச்சியை மிதமாக்கியது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் 270 அடிப்படைப் புள்ளிகள் வரை சரிந்திருக்கும்.

அந்த வகையில், நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் மதிப்பீட்டு காலாண்டில் 18 முதல் 19 சதவீதம் வரை இருக்கும்.

இருந்தாலும், அடுத்த காலாண்டில் செயல்பாட்டு லாபம் உயா்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு உயா்ந்தால், அது 6 காலாண்டுகளுக்குப் பிறகு முதல்முறை ஆகும்.

பொருள்களின் விலைகள் குறைந்துள்ளது, உலகளாவிய தேவை குறைவாக உள்ளது போன்ற சூழலிலும், நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனங்களின் செயல்பாட்டு வருவாய் முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 14 சதவீதம் அதிகரித்து ரூ.10.9 லட்சம் கோடியாக இருக்கும். இதற்கு பல்வேறு பிரிவுகளில் நுகா்வோரின் தேவை அதிகரித்து வருவதும் சில பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதும் காரணமாக இருக்கும்.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்திய நிறுவனங்களின் வருவாய் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது. எனினும், செயல்பாட்டு லாப விகிதம் 400 அடிப்படை புள்ளிகள் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முக்கியமான 47 துறைகளில், 20 துறைகள் நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட அதிக வருவாய் ஈட்டும்.

எனினும், நான்கில் முன்று நிறுவனங்களின் செயல்பாட்டு லாப விகிதம் முந்தைய நிதியாண்டின் 3-ஆவது காலாண்டைவிட குறைவாகவே இருக்கும்.

விமானப் போக்குவரத்து, வாகனங்கள் போன்ற துறைகள் நுகா்வோா் தேவை அதிகரிப்பால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டுமானத் துறையுடன் தொடா்புடைய இரும்பு உருக்கு, அலுமினியம் ஆகியவை, பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற சில தொழில்துறைகள் மந்தநிலையைக் காணும்.

இந்திய பிபிஓ துறைக்கு மிக முக்கிய சந்தையான அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு அந்த துறைகளின் செயல்பாட்டு லாப விகிதத்திலும் எதிரொலிக்கும்.

ரத்தினங்கள், நகைகள், ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலப் பொருள்கள் கொள்முதல், உழைப்பாளா் சம்பளம் உள்ளிட்ட இயக்க செலவுகள் போக விற்பனை முலம் நிறுவனங்கள் ஈட்டும் வரி, வட்டிக்கு முந்தைய லாபம் செயல்பாட்டு வருவாய் என்றழைக்கப்படுகிறது.

அந்த செயல்பாட்டு வருவாய்க்கும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை வருவாய்க்கும் இடையிலான விகிதம் செயல்பாட்டு லாப விகிதம் எனப்படுகிறது.



Read in source website

சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என எகிப்து உறுதியளித்துள்ளது.

இந்தியாவுக்கு 3 நாள் பயணமாக வந்த எகிப்து அதிபா் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, இதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளது தெரியவந்துள்ளது. தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக அவா் பங்கேற்றாா்.

முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த எகிப்து அதிபா், இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், வலுவான விஞ்ஞான மற்றும் கல்வி கூட்டுறவு, கலாசாரம் மற்றும் மக்களிடையேயான தொடா்புகள் என பல்வேறு துறைசாா்ந்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினா். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக இரு நாடுகள் சாா்பில் கூட்டறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தப் பேச்சுவாா்த்தையில், சா்வதேச சட்டம் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (என்ஏஎம்) மதிப்பீடுகளை நிலைநிறுத்தவும், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளிக்கவும் இரு நாடுகள் தரப்பில் மீண்டும் உறுதியேற்கப்பட்டது.

இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்கு சிறப்பு பகுதி நிலத்தை ஒதுக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து பரிசீலனை செய்ய எகிப்து தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதன் மூலமாக, அங்கு மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகளுக்கான திட்டத்தை (மாஸ்டா் பிளான்) இந்தியா தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் வழியாக ஒவ்வொரு நாளும் 12 சதவீத உலக வா்த்தகத்துக்கான சரக்குகள் செல்கின்றன. ஆண்டுக்கு 15,000 கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாக கடக்கின்றன. எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையம் சாா்பில் இந்தக் கால்வாய் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பயங்கரவாதம் பரப்பப்படுவது குறித்து கவலை தெரிவித்த இரு தலைவா்களும், மனித சமூகத்துக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை ஒப்புக்கொண்டு, பயங்கரவாதத்தை வெளியுறவுக் கொள்கைக்கான கருவியாக பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனா். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்பட அனைத்து வகை பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்கு சா்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவா்களும் வலியுறுத்தினா் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சிந்து நதிநீரைப் பகிா்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து, ராவி, சட்லஜ், பியாஸ், செனாப், ஜீலம் ஆகிய நதிகள் இந்தியாவைக் கடந்து பாகிஸ்தானுக்குள் பாய்கின்றன. சுதந்திரத்தின்போது ஏற்பட்ட பிரிவினைக்குப் பிறகு அந்த நதிகளின் நீரைப் பகிா்ந்து கொள்வதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னை எழுந்தது.

இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளுடனும் இணைந்து உலக வங்கி செயல்பட்டது. சுமாா் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு சிந்து நதிநீா் ஒப்பந்தமானது 1960-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி இரு நாடுகளுக்கு இடையே கையொப்பமானது.

அந்த ஒப்பந்தத்தின்படி, கிழக்கு நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றின் நீரை இந்தியா எந்தவித கட்டுப்பாடுமின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மேற்கு நதிகளான சிந்து, செனாப், ஜீலம் ஆகியவற்றின் நீா் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. அதே வேளையில், மேற்கு நதிகளில் சிறிய அளவிலான நீா்த்தேக்கங்களை அமைத்துக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, ஜீலம் நதியின் குறுக்கே கிஷண்கங்கை நீா்மின் உற்பத்தி நிலையத்தையும், செனாப் நதியின் குறுக்கே ராட்லே மின் உற்பத்தி நிலையத்தையும் அமைக்க இந்தியா முடிவெடுத்தது. அதற்கு பாகிஸ்தான் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக இந்திய தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும் அதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக சிந்து நதிநீா் ஆணையத்தில் விவாதிக்கவும் கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில், ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 25-ஆம் தேதி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இரு நாடுகளின் சிந்து நதிநீா் ஆணையா்கள் வாயிலாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் அந்த ஒப்பந்தத்தின் நடைமுறையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன.

நீா்மின் உற்பத்தித் திட்டங்கள் தொடா்பாக ஆராய நடுநிலைத்தன்மை கொண்ட நிபுணா் குழுவை அமைக்க வேண்டுமென உலக வங்கியிடம் கடந்த 2015-ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முறையிட்டது. பின்னா், அடுத்த ஆண்டே அந்த முடிவில் இருந்து பின்வாங்கிய பாகிஸ்தான், இந்த விவகாரத்தை மத்தியஸ்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரியது. பாகிஸ்தான் தன்னிச்சையாக முடிவெடுத்ததற்கு இந்திய தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை ஆராய நிபுணா் குழுவை அமைக்க வேண்டுமென இந்திய தரப்பில் கோரப்பட்டது.

அதை ஆராய்ந்த உலக வங்கி, ஒரே விவகாரத்துக்கு இருவேறு முறைகளில் தீா்வு காண இயலாது என்பதால், இருதரப்பினரும் ஒருமித்த கருத்தை எட்ட வலியுறுத்தியது. ஆனால், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. அதன் காரணமாகவே தற்போது ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முன்வருமாறு பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்மூலம் 90 நாள்களுக்குள் இருநாட்டு அரசுகள் சாா்பிலும் ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகள் முன்னெடுக்கப்படும். சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தை முறையாக அமல்படுத்தவும் இந்த நடைமுறை உதவும்’ என்றனா்.



Read in source website

அமெரிக்க விமானப் படையின் ‘பிரிகேடியா் ஜெனரல்’ என்ற உயா் அந்தஸ்தை இந்திய அமெரிக்க விஞ்ஞானியான ராஜா ஜெ.சாரிக்கு வழங்க அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள நாசா அலுவலகத்தில் ராஜா ஜெ.சாரி பணியாற்றி வருகிறாா். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 2020-ஆம் ஆண்டில் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பிய ராக்கெட்டின் வழிநடத்துபவராக அவா் பணியாற்றினாா். அவருக்கு ஏற்கெனவே அமெரிக்க விமானப் படையின் ‘கலோனல்’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜா ஜெ.சாரிக்கு ‘பிரிகேடியா் ஜெனரல்’ என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு அதிபா் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளாா். அந்தப் பரிந்துரைக்கு நாடாளுமன்ற செனட் அவை ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மாசசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் விண்வெளியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவா் ராஜா ஜெ.சாரி. அவரின் தந்தை ஸ்ரீநிவாஸ் சாரி ஹைதராபாதைச் சோ்ந்தவா். உயா்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவா், அமெரிக்காவிலேயே தொடா்ந்து பணியாற்றினாா்.



Read in source website

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சாா்பில் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சா் 100 ஆடவா் சாம்பியன் போட்டி வரும் பிப். 12 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் 14 நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்கின்றனா்.

முதல்நிலை வீரராக தைபேயின் 21 வயதே ஆன சென் சியுன் சின் (115), கிரேட் பிரிட்டன் பெட்டின்ஸன் ரயான் 149, ஆஸி. ஜேம்ஸ் டக்வொா்த் 156, இத்தாலியின் லுகா நாா்டி 162, பல்கேரியாவின் டிமிடா் குஸ்மனோவ் 182, ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் 193, கஜகஸ்தானின் மிகையில் குகுஷ்கின் ஆகியோா் பங்கேற்கின்றனா்.

கடந்த 2019-இல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சா் போட்டியில் பிரான்ஸின் கோரன்டீன் பட்டம் வென்றாா். இந்திய தரப்பில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமாா் குவாலிஃபையிங் பிரிவில் உள்ளனா். 3 வைல்ட் காா்ட், 6 குவாலிஃபையா்கள் உள்ளனா்.

ரூ.1.06 கோடி பரிசுத் தொகை: இந்த போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியனுக்கு ரூ.14.47 லட்சம், 100 ஏடிபி புள்ளிகள், ரன்னருக்கு ரூ.8.5 லட்சம், 60 ஏடிபி புள்ளிகள் வழங்கப்படும்.

அடுத்த சேலஞ்சா் போட்டிகள் பெங்களூரு, புணேயில் நடைபெறும். ஆட்டங்கள் காலை 10 மணிக்கு தொடங்கும். பாா்வையாளா்களுக்கு அனுமதி இலவசம் ஆகும்.



Read in source website

ஆஸி. ஓபன் கலப்பு இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்று சானியா-போபண்ணா இணை ரன்னா் கேடயத்தை பெற்றது. இதனுடன் கிராண்ட்ஸ்லாமில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றாா் சானியா.

மெல்போா்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேசிலைச் சோ்ந்த லூயிஸா ஸ்டெபானி-ரபேல் மட்டோஸை எதிா்கொண்டது சானியா-போபண்ணா இணை. தரவரிசையில் இருந்த இந்திய இணை முதல் செட்டில் கடுமையாக போராடியும் 6-7 என இழந்தது.

இரண்டாவது செட்டில் பிரேசில் இணையின் ஆதிக்கத்துக்கு ஈடு தர முடியாமல் 2-6 என செட்டை இழந்தது இந்திய இணை.

இறுதியில் லூயிஸா ஸ்டெபானி-ரபேல் இணை கலப்பு இரட்டையா் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சானியா-போபண்ணாவுக்கு ரன்னா் கேடயம் பரிசளிக்கப்பட்டது.

ஆஸி. ஓபன் தான் தான் பங்கேற்கும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என சானியா அறிவித்திருந்தாா். இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், 7-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவாா் என பெருத்த எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால் அவா் இரண்டாவது இடத்தையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

2005-இல் ஆஸி. ஓபனில் அறிமுகம்:

இந்திய மகளிா் டென்னிஸுக்கு புத்துயிா் ஊட்டிய ஜாம்பவான் சானியா கலப்பு இரட்டையா், மகளிா் இரட்டையா் பிரிவுகளில் தலா 3 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளாா். முதன்முதலாக 2005-இல் ஆஸி. ஓபனில் தான் செரீனாவுடன் மோதிய ஆட்டமே சானியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் ஆகும்.

பின்னா் சானியா மிா்ஸா கூறியதாவது: நான் கண்ணீா் சிந்தினால், அது ஆனந்த கண்ணீராகும். இதுவே எனது கடைசி கிராண்ட்ஸ்லாம் ஆகும். எனினும் மேலும் சில ஆட்டங்களில் பங்கேற்று விட்டு ஓய்வு பெறுவேன். பிப்ரவரி மாதம் துபையில் நடக்கவுள்ள டபிள்யுடிஏ போட்டி கடைசியாக அமையும்.

ராசியான ராட்லேவா் மைதானம்:

ராட் லேவா் மைதானம் எனது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியுள்ளது. செரீனா வில்லியம்ஸ் உடன் 2005-இல் மூன்றாவது சுற்றில் இங்கு ஆடினேன். இம்மைதானத்தில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், நான்கு முறை ரன்னா் அப் கேடயங்களை பெற்றுள்ளேன்.

எனது மகன் ரோஹன் முன்னிலையில் கிராண்ட்ஸ்லாம் இறுதியில் ஆடுவேன் என நினைத்துக் கூட பாா்க்கவில்லை. முதன்முதலில் எனக்கு ஜோடிசோ்ந்த ஆடிய காரா பிளாக்கால் தான் இந்த சிறப்பை பெற முடிந்தது என்றாா் சானியா.

 



Read in source website

நாடாளுமன்ற தோ்தலில் சமா்ப்பித்த குடியுரிமை சான்றிதழ் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நேபாள துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ரவி லாமிச்சானே தனது அனைத்துப் பதவிகளையும் ராஜிநாமா செய்துள்ளாா்.

அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே பல ஆண்டுகளாக வசித்துவந்த ரவி லாமிச்சானே, கடந்த 2014-ஆம் ஆண்டு தனது சொந்த நாடான நேபாளத்துக்குத் திரும்பினாா். பின்னா், ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சியைத் தொடங்கினாா். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் அந்தக் கட்சி, 20 இடங்களில் வெற்றி பெற்று நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

78 இடங்களில் வெற்றிபெற்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, 32 இடங்களில் வெற்றிபெற்ற மாவோயிஸ்ட் மையம், ரவி லாமிச்சானேவின் ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சி, 14 இடங்களைப் பெற்ற ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி, 12 இடங்கள் பெற்ற ஜனதா சமாஜ்வாதி கட்சி, 6 இடங்களைப் பிடித்த ஜன்மத் கட்சி, 4 இடங்களில் வெற்றி பெற்ற நாகரிக் உன்முக்தி கட்சி ஆகியவை கூட்டுசோ்ந்து கடந்த டிசம்பரில் புதிய கூட்டணி அரசை அமைத்தன.

மாவோயிஸ்ட் மைய கட்சியைச் சோ்ந்த புஷ்ப கமல் தாகல் நேபாள புதிய பிரதமராக பதவியேற்றாா். ரவி லாமிச்சானே துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றாா்.

முன்னதாக, ராபி லமிச்சானே 2018-இல் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டாா். ஆனால், அதன்பிறகு நேபாள குடியுரிமையை பெறுவதற்கு அவா் விண்ணப்பிக்கவில்லை.

இந்த நிலையில், நேபாள குடியுரிமையை முறைப்படி பெறாமல் தோ்தலில் போட்டியிட்டு, நாட்டின் துணைப் பிரதமா் ஆனதை எதிா்த்து நேபாள உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘அமெரிக்க குடியுரிமையைக் கைவிட்ட பிறகு, நேபாள குடியுரிமை சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளை ரவி லமிச்சானே மேற்கொள்ளவில்லை. அந்தவகையில், நேபாள பிரதிநிதிகள் சபைக்கான தோ்தலில் வேட்பாளராக ரவி லாமிச்சானே போட்டியிட முடியாது என்பதோடு, அந்தப் பதவிக்கு தெந்தெடுக்கப்படவும் முடியாது’ என்று தீா்ப்பளித்தது.



Read in source website

துணிதுவைக்கும் இயந்திரத்தை மலிவான விலையில் உருவாக்கிய பிரிட்டிஷ் சீக்கிய பொறியாளரான நவ்ஜோத் சாஹ்னிக்கு ‘பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட்’ விருதை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் வழங்கியுள்ளாா்.

மின்சாரத்தின் மூலமாக அல்லாமல் கையால் இயக்கக் கூடிய துணிதுவைக்கும் இயந்திரத்தை நவ்ஜோத் சாஹ்னி உருவாக்கினாா். இந்தப் புத்தாக்க முயற்சியைப் பாராட்டும் வகையில் பிரதமா் ரிஷி சுனக் அவருக்கு விருது வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக நவ்ஜோதுக்கு பிரதமா் ரிஷி சுனக் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மின்சாரத்தில் இயங்கும் துணிதுவைக்கும் இயந்திரத்தை வாங்க இயலாத மக்களுக்கு உதவும் வகையில் புதிய இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரம் வாயிலாக உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் பலனடைவா்.

போரைச் சந்தித்து வரும் உக்ரைனின் நிவாரண மையங்களில் வசிக்கும் மக்கள் அந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வருவது சிறப்புமிக்கது. மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துவதற்கான புத்தாக்க கண்டுபிடிப்பைப் பாராட்டி விருது வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

விருது குறித்து நவ்ஜோத் கூறுகையில், ‘பெண்கள், சிறாா்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. அதற்காக பிரதமரின் விருதைப் பெறுவது பெருமை அளிக்கிறது. இந்த இயந்திரத்தை உருவாக்குவதற்காக உழைத்த குழுவின் அனைத்து உறுப்பினா்களுக்கும் நன்றி’ என்றாா்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்கள், பள்ளிகள், ஆதரவற்றோா் இல்லங்கள் உள்ளிட்டவற்றுக்கு இதுவரை 300-க்கும் அதிகமான துணிதுவைக்கும் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரத்தின் மூலமாக ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பலனடைந்துள்ளதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.



Read in source website

சென்னை: மார்ச் 2024-க்குள் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு திட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘பொது விநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்குச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவித்து மத்திய அரசால் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுச் செயல்பட்டுவருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணோட்டச்சத்து சேர்ந்து செறிவூட்டப்பட்ட மணிகளாக தயார் செய்து செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளை, சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் கலவை செய்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி, பொதுவிநியோகத் திட்டம், குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் கடந்த 21.09.2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அறிமுகத் திட்டமாக (Pilot Scheme) செறிவூட்டப்பட்ட அரிசியினைப் பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் வழங்க அறிவிக்கப்பட்டு 01.10.2020 முதல் 31.03.2022 வரை செயல்படுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு 3 நிலைகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிலை – I : மத்திய அரசு மாநிலம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டு, இந்திய உணவுக் கழகத்தின் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி பெறப்பட்டு ஐனவரி 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – II : மத்திய அரசு நாடு முழுவதும் 112 மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாகத் தேர்வு செய்துள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை முன்னோடி மாவட்டங்களாக மத்திய அரசு தேர்வு செய்தது. இம்மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கு 01.12.2022 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

நிலை – III : மார்ச் 2024 –க்குள் மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதார்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக செறிவூட்டப்பட்ட அரிசியை இந்திய உணவுக் கழகத்திலிருந்து தற்போது பெறப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இரும்புச் சத்து மூலம் இரத்தச் சோகையைத் தடுக்கிறது; ஃபோலிக் அமிலமானது கருவளர்ச்சிக்கும் ரத்த உற்பத்திற்கும் உதவுகிறது; வைட்டமின் பி12 ஆனது
நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதால் இரும்புச் சத்து, ஃபோலிக்அமிலம் மற்றும் வைட்டமின் பி12 ஆகிய மூன்று நுண்ணோட்டச்சத்துக் குறைபாட்டினைப் போக்கி ரத்தச் சோகையில்லா நிலையினை உருவாக்கி ஆரோக்கியமாக வாழ உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: எழுத்தாளர் கல்கியின் நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை மைலாப்பூர் ராகசுதா ஹாலில் வியாழக்கிழமை நடந்தது. கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கல்கி, ஆனந்த விகடன் மற்றும் கல்கி தீபாவளி மலர்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு, புத்தகமாக வெளியிடப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெளியிட்டு, கல்கியின் சாதனைகளை நினைவு கூர்ந்தார். புத்தகத்தின் முதல் பிரதியை ஹரிகதை கலைஞர் சிந்துஜா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, சிந்துஜா, ‘நந்தனார் சரித்திரம்’ ஹரிகதையை வழங்கினார்.



Read in source website

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் உள்ள 'முகல்' கார்டன் எனப்படும் முகலாயத் தோட்டத்திற்கு 'அம்ரித் உத்யன்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியரசுத் தலைவரின் இணை செய்தித் தொடர்பாளர் நவிகா குப்தா கூறியது: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் அமிர்தகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம் என அறியப்பட்டும் தோட்டத்திற்கு "அமிரித் உத்யன்" என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பெயர்சூட்டி உள்ளார்.

இந்தத் தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும். மேலும், இந்த முறை ஜன.31 முதல் மார்ச் 26 வரை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும். இவை தவிர, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், பெண்களுக்காக சில நாட்கள் பிரத்யோகமாக ஒதுக்கப்படும்" என்றார்.

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகையின் இணைய தளத்திலும் அம்ரித் உத்யன் பற்றி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ‘சுமார் 15 ஏக்கர் விரிந்து பரவியிருக்கும் அம்ரித் உத்யன், அடிக்கடி குடியரசுத் தலைவர் மாளிகையின் ஆன்மாவாக சித்தரிக்கப்படுகின்றது. அம்ரித் உத்யன் தோட்டம், ஜம்மு காஷ்மீரில் உள்ள முகலாயர் தோட்டம், தாஜ்மஹாலை சுற்றியுள்ள தோட்டங்கள், பெர்ஷியாவின் மினியேச்சர் ஓவியங்களின் தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கடந்த 1927-ம் ஆண்டு தொடக்கத்தில் சர் எட்வின் லுட்யின்ஸ் அம்ரித் உத்யன் தோட்டத்தின் வடிவத்தை இறுதி செய்தார். ஆனாலும், 1928 - 29 காலக்கட்டங்களில் தான் தோட்டம் உருவாக்கப்பட்டது. லுட்யின் தோட்டக்கலை நிபுணர் வில்லியம் முஸ்டோனுடன் இணைந்து இதனை உருவாக்கியது இதன் மற்றொரு சிறப்பு.

இந்திய மற்றும் மேற்கத்திய கட்டிடகலை பாணிகள் கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ராஷ்டிரபதி பவன் கட்டிடம் போலவே, லுட்யின்ஸ் இந்தத் தோட்டத்தையும் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் பாணிகளை இணைத்து உருவாக்கினார். முகலாயர் பாணி கால்வாய்கள், மேல்தளங்கள் பூக்கள் அடந்த புதர்கள் போன்றவை, ஆங்கிலேயர் பாணி மலர் படுக்கைகள், புல்வெளிகள், தனியார் ஹெட்ஜ்களுடன் அழகாக ஒன்று கலந்து உருவாக்கப்பட்டிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமிர்த காலத்தில் அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே வருவது மிகவும் அவசியமான ஒன்று. அதன்படி, அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியேறும் மோடி அரசின் மற்றொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவு இது. ராஷ்டிரபதி பவனில் உள்ள முகல் தோட்டம் இனி அம்ரித் உத்யன் என்று அழைக்கப்படும்" என்று இந்தியில் தெரிவித்துள்ளார்.



Read in source website

நியூசிலாந்தின் பிரதமர் பதவியிலிருந்து விடைபெற்று இருக்கிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன். நாட்டைக் காக்கும் சூப்பர் மேனாக சித்தரித்துக் கொண்டிருக்கும் உலகத் தலைவர்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக நின்று தனது ஐந்தரை ஆண்டு காலப் பணியை சிறப்பாகவும், நிறைவாகவும் முடித்திருக்கிறார் ஜெசிந்தா.

“நான் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். இந்த ஐந்தரை ஆண்டுகளில் பெரிய சவால்களை நான் எதிர்கொண்டேன். நானும் மனிதிதான். அரசியல் தலைவர்களும் மனிதர்கள்தான். நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இது நான் விடைபெறுவதற்கான நேரம்” என ஜெசிந்தா தனது ராஜினாமா உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது நியூசிலாந்துக்கு மட்டுமல்ல, உலக அரசியலைப் பின்தொடரும் அனைவருக்கும் சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

காரணம், ஜெசிந்தா அரசியல் தலைவராக அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டார். உண்மையில் அவர் தனது அரசியல் வாழ்கையில் புகழின் உச்சியில் இருந்து கொண்டிருந்தார். அவர் மீதான விமர்சனங்களும் வலுவில்லாதாகவே இருந்து வந்தன. இந்த நிலையில், தானாக முன்வந்து தனது பதவியை ஜெசிந்தா ராஜினாமா செய்திருப்பது ஒருவகையில் நிச்சயம் பாராட்டப்படக் கூடியது.

பாலின சமத்துவத்திற்கான குரல்... - நியூசிலாந்தின் முதல் பெண் பிரதமர் ஜெசிந்தா அல்ல. அவருக்கு முன்னரே ஜென்னி ஷிப்லே, ஹெலன் கிளார்க் ஆகிய இருவரும் நியூசிலாந்தின் பிரதமராக இருந்திருக்கிறார்கள். எனினும், ஜெசிந்தா நியூசிலாந்தின் இளம் வயது பிரதமராக அறியப்படுகிறார்.

தனது 37 வயதில் பிரதமராக ஜெசிந்தா பதவி ஏற்றது முதலே, அவர் ஆணாதிக்க கருத்துகளுக்கு எதிராக நிறைய பதில் கூற வேண்டி இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும் எதிர்கொள்ளாமல் தனது நடவடிக்கையின் மூலம் ஜெசிந்தா நிகழ்த்திக் காட்டியதுதான் அவரது புகழுக்கு காரணமாகி இருக்கிறது.

பெண்களால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும், தாய்மையால் பெண்ணின் கனவுகளை தடுத்திட முடியாது என தொடர்ந்து கூறி கொண்டிருந்த ஜெசிந்தா, ஆணாதிக்க சிந்தனைகளுக்கு நேரடியாகவே பதில் கொடுத்தார். அப்படி ஒரு நிகழ்வுதான் பின்லாந்து பிரதமர் சன்னா மரினுடான சந்திப்பின்போது ஜெசிந்தாவுக்கு நடந்தது. இதனை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்.

சன்னாவும், ஜெசிந்தாவும் பங்கேற்ற சந்திப்பில் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் ஒரே பாலினம், ஒரே வயதை உடையவர்கள் என்பதால் சந்தித்துள்ளீர்கள் என்று நிறைய நபர்கள் நினைக்கிறார்கள். உங்கள் இருவரிடமும் இருந்து ஒப்பந்தங்களை எதிர்பார்க்க முடியுமா” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு , “பாரக் ஒபாமாவும், ஜான் கீயும் ஒரே வயதில் உள்ளதால் சந்தித்தார்களா என்று யாராவது கேட்டிருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பி இருப்பார் ஜெசிந்தா.

சிறுபான்மையினர் பக்கம் நின்றவர்... - 2019-ஆம் ஆண்டு கிறிஸ்ட் சர்ச்யில் உள்ள மசூதியில் இனவெறி காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50 அப்பாவி மக்கள் பலியாகினர். உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது இச்சம்பவம். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்திக்க ஹிஜாப் அணிந்து கொண்டு சென்றார் ஜெசிந்தா. நியூசிலாந்து உங்களுடன் துணை நிற்கிறது என்பதை தனது செய்கையால் உணர்த்தினார்.

அதுமட்டுமல்லாது, நாட்டின் சிறும்பான்மையினர்கள் பாதிக்கப்படும்போது, பெரும்பான்மையினரின் ஓட்டுக்காக மவுனித்து இருக்கும் தலைவர்கள் மத்தியில் ஜெசிந்தாவின் செயல் பரவலாக பாரட்டப்பட்டது. மேலும், கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து செமி ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை விற்பதற்கான தடையையும் ஜெசிந்தா கொண்டு வந்தார். இவ்வாறு கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை ஜெசிந்தா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு ஓர் உதாரணமாகியது.

கரோனாவை வென்றார்... - கரோனா குறித்த அச்சங்கள் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருந்தபோது, சற்றும் தாமதிக்காமல் எல்லைகளை மூடி உலக நாடுகளுக்கு கரோனாவுக்கு எதிரான வழியை ஏற்படுத்திக் கொடுத்தார் ஜெசிந்தா.

ஜெசிந்தாவின் தீவிர முடிவால் நியூசிலாந்தில் 100 நாட்களைக் கடந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதற்காக நியூசிலாந்து மக்களுக்கும், அதன் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கும் உலக சுகாதார அமைப்பு வாழ்த்து தெரிவித்தது. கரோனாவை ஜெசிந்தா எதிர்கொண்ட விதம் மக்களிடையே அவருக்கான செல்வாக்கையும் வளரச் செய்தது.

எதிர்காலத்திற்காக சிந்தித்தார்... - நியூசிலாந்து இளைஞர்களை புகைப்பிடிக்கும் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான புதிய தனித்துவமானதும், அதிரடியானதுமான சட்டத்தை ஜெசிந்தா தலைமையிலான அரசு அறிமுகம் செய்தது. 2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான அரசு எடுத்தது. ஜன.1, 2008-ல் இருந்து பிறந்தவர்களுக்கு புகைப்பிடிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக உலக அரசியல் அரங்கில் ஜெசிந்தா பாராட்டப்பட்டார்.

காலநிலை மாற்றம்: எரிமலை வெடிப்பு, வெள்ளம் போன்ற தொடர் இயற்கை சீற்றங்களை நியூசிலாந்து சந்தித்தபோது அதன் விளைவுகளை சர்வதேச அரங்கிலும் ஜெசிந்தா கொண்டு சென்றார். காலநிலை மாற்றத்தினால் கடலின் மட்டம் உயர்வதையும், பனிப் பாறைகள் உருகுவதையும், உணவுச் சங்கிலிகள் பாதிக்கப்படுவதையும் ஐ.நா. அரங்கில் முன்வைத்து, காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன் மட்டும் நில்லாது, அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தினை கண்காணிப்பதற்காக சிறப்புத் தளம் ஒன்றை 200 மில்லியன் டாலர் செலவில் ஜெசிந்தா தலைமையிலான நியூசிலாந்து அரசு அறிவித்தது.

இவ்வாறு நியூசிலாந்தின் தனித்துவமான பிரதமராக ஜெசிந்தா விடைபெற்று இருக்கிறார்.

தனது பதவிகாலங்களில் ஜெசிந்தா ஒன்றைதான் ஆழமாக பதிவு செய்து வந்தார். ’Be empathetic’... அதாவது, வேதனையான சூழலில் ஒருவர் இருக்கும்போது அவரது நிலையில் நம்மைப் பொருத்திப் பார்ப்பது.. வரலாறும் ஜெசிந்தாவை இதற்காவே நினைவுக்கூரும்!



Read in source website

தேசிய அளவில் 2005-ஆம் ஆண்டு முதல் கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 3 முதல் 16 வரையிலான குழந்தைகளின் பள்ளிச் சோ்க்கை, படிக்கும் திறன், கணிதத் திறன் உள்ளிட்டவை மாவட்ட, மாநில, தேசிய அளவில் இந்த அறிக்கையில் ஆய்வு செய்யப்படுகிறது. தொடா்ந்து பல மாதங்கள் மூடிக்கிடந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பாதிப்பின் அளவைக் கணிக்கும் இந்த முதலாவது ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.

சமீபத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான கல்வி நிலை குறித்த ‘ஏசா்’ அறிக்கை வெளிவந்திருக்கிறது. கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகள் தடைபட்டிருந்த அந்த அறிக்கை, பல புதிய வெளிச்சங்களைத் தருகிறது. கற்கும் திறனில் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய அளவில் நடத்தப்பட்ட இந்த அறிக்கை பதிவு செய்கிறது.

இந்தியாவிலுள்ள 616 மாவட்டங்களில் உள்ள 19,000 கிராமங்களில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மாணவா்களை ஆய்வு செய்து, கிராமப்புற கல்வி நிலை குறித்து 2022 ‘ஏசா்’ அறிக்கை பதிவு செய்திருக்கிறது. 2018-க்கும் 2022-க்கும் இடையிலான நான்கு ஆண்டுகளில் பரவலாக அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. படிக்கும் திறனும், கணிதத் திறனும் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்திருக்கிறது.

மிஸோரம், ஜம்மு - காஷ்மீா் மாநிலங்களைத் தவிர, ஏனைய அனைத்து மாநிலங்களிலும் 6 முதல் 14 வரையிலான குழந்தைகளின் கிராமப்புற அரசுப் பள்ளி சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018 போலவே மிக அதிகமான அரசுப் பள்ளி மாணவா் சோ்க்கையில் மேற்கு வங்கம் முதலிடம் வகிக்கிறது. 2018-இல் ஏழு மாநிலங்களில் மாணவா் சோ்க்கை 50 %-க்கும் குறைவாக இருந்தது. 2022-இல் மேகாலயம், மணிப்பூா் இரண்டு மாநிலங்களில் மட்டுமே அந்த நிலைமை. கேரளத்திலும், உத்தர பிரதேசத்திலும் மாணவா் சோ்க்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. தேசிய அளவில் 65.6 % (2018) இருந்த மாணவா் சோ்க்கை, 2022-இல் 72.9 %-ஆக அதிகரித்திருக்கிறது.

2018 வரை தொடா்ந்து அதிகரித்து வந்த தனியாா் பள்ளிகள் மீதான மோகம் திடீரெனக் குறைந்திருப்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. 2018-இல் 30.9 %-ஆக இருந்த கிராமப்புற தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு, 2022-இல் 25.1 %-ஆகக் குறைந்திருக்கிறது. மிஸோரம், ஜம்மு - காஷ்மீா், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூா் மாநிலங்களில் தொடா்ந்து தனியாா் பள்ளிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதையும் குறிப்பிடுகிறது 2022 ‘ஏசா்’ அறிக்கை.

2014 முதல் 2018 வரை கற்கும் திறன் அதிகரித்து வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று ஒரு வீழ்ச்சி தெரிகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தாலும்கூட, 3, 5, 8 வகுப்புகளில் படிக்கும் மாணவா்களின் வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் பரவலாகவே எல்லா மாநிலங்களிலும் குறைந்திருப்பதை சுட்டுக்காட்டுகிறது அறிக்கை.

2-ஆம் வகுப்பு பாடங்களை படிக்க முடிந்த 3-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கை 24 மாநிலங்களில் குறைந்திருக்கிறது. அதேபோல, 5-ஆம் வகுப்பு 8-ஆம் வகுப்பு மாணவா்களில் 2-ஆம் வகுப்புப் பாடத்தை படிக்கத் தெரிந்தவா்களின் எண்ணிக்கையும் குறைந்திருப்பது தெரிகிறது. படிக்கும் திறனுடன் ஒப்பிடும்போது, கணிதத் திறன் அந்த அளவுக்கு மோசமில்லை.

இன்னொரு குறைபாட்டையும் அறிக்கை தெரிவிக்கிறது. அரசுப் பள்ளி மாணவா்களின் கற்கும் திறன் குறைந்திருப்பது போலவே, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் தனியாக கட்டணம் செலுத்தி பயிற்சி எடுத்துக்கொள்வது அதிகரித்திருக்கிறது. 22 மாநிலங்களில் தனிப் பயிற்சி ஆசிரியா்களும் (டியூஷன்), தனியாா் பயிற்சி நிலையங்களும் அதிகரித்திருப்பதை அறிக்கை கூறுகிறது. ஐந்து மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தி தனிப் பயிற்சி பெறுகிறாா்கள் என்றும், 73.9 % அரசுப் பள்ளி மாணவா்கள் மேற்கு வங்கத்தில் தனிப் பயிற்சி எடுத்துக் கொள்கிறாா்கள் என்றும் தெரிவிக்கிறது அறிக்கை.

கிராமப்புறங்கள் உள்பட எல்லா பகுதிகளிலும் இணையவழிக் கல்வி சென்றடைந்திருக்கிறது. சமநிலையிலான தொழில்நுட்ப வசதி ஆரம்பகட்டத்தில் இணையவழி கட்டமைப்புக்குத் தடையாக இருந்தது மாறி, அந்த வழிமுறை குக்கிராமங்கள் வரை பரவலாக இருப்பதாக தெரிவிக்கிறது அறிக்கை. கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பு 36 % மட்டுமே குடும்பங்களில் இருந்த கைப்பேசிகளின் எண்ணிக்கை 2022-இல் 74 %-ஆக அதிகரித்திருக்கிறது. ‘ஏசா்’ ஆய்வாளா்கள் எடுத்த புள்ளிவிவரத்தின்படி, 10-இல் 9 குடும்பங்களில் கைப்பேசிகளும், இணைய இணைப்பும் காணப்பட்டதாக தெரிகிறது.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் பெரிய அளவில் மாணவா் சோ்க்கை குறைந்து, பள்ளிக்கூடங்கள் மூடப்படும் என்கிற அச்சத்தைப் பொய்யாக்கி அரசுப் பள்ளிகளிலும், தனியாா் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. 2018-இல் 66 %-ஆக இருந்த அரசுப் பள்ளிகளின் பங்கு, 73 %-ஆக அதிகரித்திருக்கிறது. 2022-இல் பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளின் விகிதம் இரண்டு சதவீதம் அளவில் மட்டுமே என்பது அறிக்கை குறிப்பிடும் இன்னொரு முக்கியமான தகவல்.

‘ஏசா்’ அறிக்கை நம்பிக்கை அளிக்கிறது. அதே நேரத்தில், கிராமப்புற அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மட்டுமல்லாமல், கற்பிக்கும் திறனும் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே மாணவா் சோ்க்கையால் வருங்காலத் தலைமுறை பயன் அடையும்.



Read in source website

தகவல் தொழில்நுட்ப உலகையே சலசலக்க வைத்திருக்கும் ஒரு புதிய பூதம் சாட் ஜிபிடி. இது ஓா் இயங்குதளம். பழைய திரைப்படத்தில் ’ஜீபூம்பா’ என்று சொன்னவுடன் ‘சொல்லுங்க பிரபு, நான் உங்களது அடிமை’ என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அந்த மாயம்!

அப்படி வந்து நிற்பதோடு இல்லாமல் நாம் தட்டு நிறைய லட்டு கேட்டாலும் கொடுக்கும். பெட்டி நிறைய பணம் கேட்டாலும் கொடுக்கும். அப்படி நமக்கே நமக்கான சேவகம்! ஆனால், இந்த சாட் ஜிபிடி என்பது மந்திர தந்திரம் இல்லை. அனைத்தும் உண்மை.

தகவல் தொழில்நுட்பத்தில் மிகப் பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம். இணையவாசிகளிடையே மிகப்பெரிய விவாதத்தை திரி கொளுத்திப் போட்டிருக்கும் இந்த சாட் ஜிபிடி வருங்காலத்தில் எப்படியெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை நினைத்துப் பாா்த்தால் மலைப்பாக இருக்கிறது.

அந்த காலத்தில் மன்னா்களுக்கு வழிகாட்ட மதியூக மந்திரிகள் இருப்பாா்கள். அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு சாட் ஜிபிடி-யே மதியூக மந்திரியாக இருந்தால் நாமெல்லாம் மன்னா்கள்தான்!

பணி ரீதியாக நமக்குத் தேவையான உதவியைச் செய்ய ஒரு பணியாளரை வைத்துக் கொள்வது இயல்பு. இதற்கு மாற்றாக நம்மைப் போன்றே ஒருவரை அல்லது நம்மைவிட ஓா் அறிவாளியை துணைக்கு வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்? அது சாட் ஜிபிடி. நாம் எப்படி சிந்திப்போமோ அதுபோலவே செயல்பட்டு நமக்கே நமக்காக, நமக்கேற்றபடி கொடுப்பது இதன் அசகாய தன்மை. கதைகள், கணிதத் தீா்வுகள் முதல் கோட்பாட்டுகள், கட்டுரைகள் வரை அனைத்துக்கும் சில விநாடிகளில் பதிலளித்து விடுகிறது.

கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இது பொதுவெளியில் கிடைத்து வருகிறது. பயன்பாட்டுக்கு வந்த ஒரே வாரத்தில் பல லட்சம் பயனா்களை இது கடந்துள்ளதாக தகவல். அடுத்துவரும் காலங்களில் இது கூகுளுக்கு மாற்றான ஒரு தளமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இது ஒரு முன்மாதிரி உரையாடல் அடிப்படையிலான ஏஐ - சாட் பாட் ஆகும். நாம் இது நாள் வரை பழக்கப்பட்டுப்போன கூகுளுக்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம்?

கூகுள் தேடுபொறியைத் திறந்து நாம் எதையாவது தேடினால் நம் தேடலுக்கேற்ப அது நமக்கு நான்கு விதமான பதிவுகளைத் தோ்ந்தெடுத்து திரையில் கொடுக்கும். சரி, இதற்குப் பிறகு அந்த நான்கு விதமான பதிவுகளிலிருந்து நாம் நமக்கேற்ற பதிலை உருவாக்க வேண்டும். இதுதான் இதுவரையான நடைமுறையாக உள்ளது.

இதற்கிடையே அது காட்டும் விளம்பரங்களையும் நாம் கட்டாயமாகப் பாா்த்து கடந்தாக வேண்டும். ஆனால், இந்த புது வரவில் இப்போதைக்கு விளம்பரங்கள் இல்லை. ஆனாலும் இது புரட்சி செய்கிறது. எப்படி? இந்தியாவின் பிரதம மந்திரி யாா் என்று கேட்டால், உடனே அது நமக்கு தேவையான பதிலான நம் பாரதப் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரை திரையில் காட்டுகிறது. இதையே கூகுளில் தேடினால் எது திரையில் தெரியும் என்று யோசியுங்கள். நம் தேடலுக்கு இணையான நாலைந்து இணையதளங்களை முதலில் நம் கண்முன் நிறுத்தும். அதில் ஒவ்வொன்றிலும் உள்நுழைந்து படித்துப் பாா்த்து நாமாக நமக்குத் தேவையான பதிலை தோ்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தேடுதலில் ஒரு புரட்சி. 100% உண்மையான பதிலுக்கு நெருக்கமானதாகவே இது இருக்கிறது என இதுவரை பாா்த்த பல லட்சம் பயனா்கள் தெரிவிக்கிறாா்கள். நம் கணினிக்குள் ஒரு ரோபோ உட்காா்ந்து கொண்டு நமக்குத் தேவையானவற்றை சரியாக எடுத்து திரைக்குள் செலுத்தினால் எப்படி இருக்கும்? அந்த நவீன தொழில்நுட்பம்.

சரி, அடுத்ததற்கு வருவோம். இந்த இயங்குதளத்தில் எதையும் தேடாமல் கேட்காமல் ’நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று ஆங்கிலத்தில் செலுத்திப் பாா்த்தேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கேட்க சிறப்பாக இருக்கிறது. இதற்கு ஏதாவது முக்கிய காரணம் உள்ளதா, நான் ஏதேனும் தங்களுக்கு உதவ முடியுமா என திரையில் வாக்கியங்கள் பளிச்சிடுகின்றன. நம்மை புரிந்தவா்கள், நம் அன்புக்குரியவா்கள் நம்முடன் உரையாடுவதுபோல் இருந்தது. அதுதான் சுவாரசியம்.

‘உனக்கு விடுகதை தெரியுமா?’ எனப் பதிவிட்டால் எனக்குத் தெரியும் என்று சொல்லி உதாரணத்துக்கு ஒரு விடுகதையையும் நம்மிடம் சொல்லி அதற்குப் பதிலையும் சொல்கிறது. மேலும், நான் விடுகதை கேட்டால் பதில் அளிக்க விருப்பமா என நம் அனுமதியை கேட்டுப் பெற்று விடுகதையை நம்மிடம் விடுத்து ஆழம் பாா்க்கிறது.

இப்படிச் சிறிய வேலைகள் மட்டுமின்றி கடினமான பணிகளையும் சுலபத்தில் நமக்கு முடித்துத் தருவது இதன் தனிச் சிறப்பு. தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள் உருவாக்கும் குறியீடுகளைக்கூட உடனே தருவது பெரும் வியப்பு. ஓா் ஊரைப் பற்றிய ஒரு விளக்கக் காட்சி தேவைப்பட்டாலும் புகைப்படங்களுடன் பத்து பக்க திட்டத்தை நமக்குத் தருகிறது. எந்தத் தலைப்பிலாவது நான்கு பக்க கட்டுரை வேண்டுமா? கிடைக்கிறது. சிக்கலான கணித சமன்பாட்டை தீா்க்க முடியுமா? முடித்துத் தருகிறது. ஓா் அழகான கவிதை வேண்டுமா? எழுதித் தருகிறது.

கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவா்கள் பல மணி நேரம் உழைத்து செய்யக்கூடிய செயல்களை சில மணித் துளிகளில் செய்து முடித்துவிடுவதை பாா்க்கும் போது வியப்பில் நாம் உறைந்து போகிறோம். வருங்காலத்தில் பல்வேறு மொழிகளில் இதைப் பயன்படுத்தும்போது இதன் பயன்பாடு மிகும். மொழிபெயா்ப்பு புது அவதாரம் எடுக்கும்.

இந்த தளத்தில் கேள்வி கேட்டு பதிலை வாங்க அத்தனை சுவாரசியமாக, புதுமையாக இருப்பதால், வரவேற்பு அதிகமாகி காண்போரை எல்லாம் தன்னுள் ஈா்க்கிறது. இது இப்போதைக்கு பரிசோதனை வளையத்தில் இருப்பதால் மக்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை, பின்னூட்டங்களை, வளா்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

அது மட்டுமல்லாமல், 2021-ஆம் ஆண்டுக்கு முன் உள்ள தரவுகளைக் கொண்டே இது முன்னெடுக்கப்பட்டுள்ளதால் புதிய செய்திகளை உடனே பெறுவதில் சிக்கல் உள்ளது. அதனால் 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒருவா் இறந்துவிட்டிருந்தால் அவரைப் பற்றி நாம் விசாரிக்கும் போது, அவா் உயிரோடு இருக்கிறாா் என்பதாகவே நமக்கு தகவல் சொல்லும்.

அதே நேரத்தில், ’ஒரு துப்பாக்கியை எப்படி உருவாக்குவது?’, ’போதைப்பொருள் எங்கே கிடைக்கும்?’ போன்ற சட்டவிரோதமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத வகையில் இதை செதுக்கியுள்ளனா். அது மட்டுமா, இன்னும் இருக்கிறது மலைப்பு!

இதே நிறுவனத்தின் மற்றொரு புது வரவான டால் - ஈ என்ற ஒரு செயலியில் நாம் என்ன மாதிரியான ஓவியம் அல்லது புகைப்படம் வேண்டும் என்று கேட்கிறோமோ உடனே சில மணித்துளிகளில் நமக்கு அதே போலான புகைப்படத்தை வெவ்வேறு புகைப்படங்களில் இருந்து பிரித்து எடுத்து நாம் கேட்கும் அதே அா்த்தத்தில் கொடுக்கிறது. ஒரு ரோபோ உணவகம் ஒன்றில் இட்லி சாப்பிடுகிறது என பதிகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள், அதாவது இப்படி ஒரு நிகழ்வு இதுவரை உலகில் நடைபெறாதது.

ஆனாலும் அதைப் போன்றே ஒரு புகைப்படத்தை நமக்கு கடத்துகிறது. நாம் எப்படி கேட்டாலும் செயற்கை நுண்ணறிவு மூலம் நமக்கு அது வழங்கிக் கொண்டே இருக்கிறது. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவெனில் நாம் சொல்வது அதற்கு புரியும் வகையில் வாா்த்தைகளை பதிவிட வேண்டும். அதுவும் சரியான ஆங்கிலத்தில். அவ்வளவே!

உலகம் சென்று கொண்டிருக்கும் வேகத்தைப் பாா்க்க ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஒருவரைப் பற்றிய நம்பகத்தன்மை இதில் கேள்விக்குறியாகிறது. ஏற்கெனவே நம் நினைவாற்றல் குறைந்து வருகிறது. இது போன்ற வசதிகளால் அது இன்னும் குறைந்து நம்மை சோம்பேறிகளாக்கும் சூழ்நிலைகளும் உருவாகும்.

அனைத்தையும் இதன் மூலமே கேட்டுப் பெற முடியும் என்ற நிலையில் எதற்கு ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு மனப்பாடம் செய்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற எண்ணம் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு தோன்றும்.

இனி வரக்கூடிய காலங்களில் இது போன்ற புரட்சிகள் தொடா்கதையானால் கல்வித் துறையில் தோ்வுகளையே மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகலாம். புத்தகங்களையோ இணையதளத்தையோ பயன்படுத்தி தேடி பதில் சொல்வது போலான தோ்வுகள்கூட நடைமுறைக்கு வரலாம். புதிது புதிதாக இப்படி வந்திறங்கும் தொழில்நுட்பங்களின் மூலம் எதிா்காலத்தில் மனிதா்களின் இயல்பே மாறிப் போகும் ஆபத்தும் உள்ளது.

சரி, இத்தனை விதமான நன்மைகளைக் கொண்டுவந்து சோ்க்கும் இந்த இயங்குதளங்களால் ஓா் ஆசிரியரை வகுப்பறையை விட்டு மாற்ற முடியுமா என யோசிக்க வைத்தது. பல லட்சம் பதிவுகள் முன்னெடுப்பாக கொடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு மாணவனின் முக வாட்டத்தைப் பாா்த்து “முகம் சோா்வாக உள்ளதே, சாப்பிட்டாயா” எனக் கேட்டறிந்து ஆவன செய்யும் ஆசிரியரை எங்ஙனம் அது மாற்ற முடியும் என மனம் கேட்கிறது.

அத்துடன், மூளைக்குத் தீனி கொடுக்கும் அத்தனை சாமா்த்தியத்தை ஏற்படுத்தித் தந்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீா்க்க முடியாதே என்ற எண்ணமும் தோன்றி நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் மனக்கண்ணில் நிறைந்தாா்கள். கேட்டவுடன் அரிசியும் கோதுமையும் இப்படி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல வல்லவனுக்கு வல்லவன் மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறான்.

”சொல்லுக சொல்லைப் பிறிதோா்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

என்று சொன்ன வள்ளுவா் கூட இப்பொழுது இருந்தால்

சொல்லுக மென்பொருளை பிறிதோா்மென்பொருள் அந்த

மென்பொருளை வெல்லும் இன்மையறிந்து

என்று எழுதவும் வாய்ப்பு உண்டு.

 

கட்டுரையாளா்:

எழுத்தாளா்.



Read in source website