DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 28-01-2022

சத்தியமங்கலத்தில் திருநீலகண்டர் நாயனார் குருபூஜை விழா எளிமையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொங்கு குலாலர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில் திருநீலகண்டர் குருபூஜை கொண்டாடப்படும். இதன்படி, 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகணடர் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை மற்றும் வழிபாடுகளும் அதனைத் தொடர்ந்து திருநீலணகண்டர் நாயனார் ரத்தினசாலா ச உற்வசமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள்  மகாதீபாரதனை நடைபெற்றன. 

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து திருநீலகண்டர் கோயிலில் அன்னாதானம் வழங்கப்பட்டது. இளைஞர் மன்றம் சார்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழா ஏற்பாடுகளை திருநீலகண்டர் பொதுநல அறக்கட்டளை தலைவர் கின்னஸ் என்.ரவிசந்திரன், செயலாளர் எஸ்.எம். ஜெகதீசன், பொருளாளர் எஸ்.எஸ்.சுந்தரராஜ், இளைஞர் மன்ற தலைவர் எஸ்.ஜி. தினேஷ், செயலாளர் எஸ்.பி.கண்ணன், பொருளாளர் எஸ்.டி. பிருத்திவிராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.



Read in source website

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ’ஏஎல்எச் எம்கே 3’ முன்னேறிய இலகுரக ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.

பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே 3 புதிய ரக ஹெலிகாப்டர்கள் இன்று முறைப்படி போர்ட்பிளேரில் உள்ள ஐஎன்எஸ் உத்க்ரோஷ் ராணுவத் தளத்தில்  சேர்க்கப்பட்டன. இதனை,  அந்தமான் - நிக்கோபர் ராணுவப் பிரிவின் லெப்டினண்ட் ஜெனரல் அஜய் சிங் பெற்றுக்கொண்டார்.

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஏஎல்எச் ஹெலிகாப்டர்களை இந்திய ராணுவத்திற்கு தயாரித்துள்ளது. அதில் ஏஎல்எச் எம்கே 3 ரக ஹெலிகாப்டர் அதிநவீன வசதி கொண்டது.



Read in source website


போபால்: பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சுவாமி விஷ்ணுவின் கற்சிலை பந்தவ்கார் தேசியப் பூங்காவில், இந்திய தேசிய கலை மற்றும் பழம்பெரும் கலாசார அமைப்பினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கல்சுரிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த விஷ்ணு சிலை சேஷ சாயி என்று அழைக்கப்படும் வடிவமைப்பில் அமைந்துள்ளது. இது வரலாற்று ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பழம்பெருமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

இவ்வளவு புராதான பெருமைகளைக் கொண்டிருக்கும் இந்த விஷ்ணு சிலையானது, இத்தனை ஆண்டுகளும், பாசிகளும், அழுக்குகளும் மூடிக் கிடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியிருக்கும் இந்திய தேசிய கலை மற்றும் பழம்பெரும் கலாசார அமைப்பினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் பழமையான சிலை இதுவாகும்.

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம்,  தாலா புலிகள் சரணாலயத்துக்கு மிக அருகே நடந்து வரும் இந்த அகழ்வாராய்ச்சியில், கண்டுடெடுக்கப்பட்டிருக்கும் இந்த விஷ்ணு சிலையானது 1,000 ஆண்டுகள் பழமையானது. 40 அடி நீளம் கொண்டது. கடந்த 2 மாதங்களாக இந்த சுற்றுலாத் தலம் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டிருந்தது.

பாசி உள்ளிட்டவை பல ஆண்டுகளாக படிந்திருந்ததால், இந்த சிலைக்கு எந்த சேதமும் ஏற்படாதவகையில், நீராவி முறையில் சுத்தம் செய்யப்பட்டு, பாசிகள் அகற்றும் பணி நடந்தது. 

இதில் மேலும் முக்கியத்துவம் தரும் தகவல் என்னவென்றால், விஷ்ணுவின் சிலைக்கு அருகே பிரம்மா மற்றும் சிவலிங்கங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உடனடியாக இந்த சிலைகளின் புகைப்படங்கள் பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன் காலம் உள்ளிட்டவை கண்டுபிடிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. 
 



Read in source website

பிக் பாஷ் லீக் டி20 போட்டியை பெர்த் அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற பிபிஎல் இறுதிச்சுற்றில் பெர்த் ஸ்கார்சர்ஸ் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெர்த் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆஷ்டன் டர்னர் 54 ரன்களும் லாரி இவான்ஸ் ஆட்டமிழக்காமல் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தார்கள். இதன்பிறகு பேட்டிங் செய்த சிட்னி அணி, 16.2 ஓவர்களில் 92 ரன்கள் மட்டும் எடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டேனியல் ஹியூக்ஸ் அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பிபிஎல் கோப்பையை வென்ற பெர்த் அணி, 4-வது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. பிபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற முதல் அணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. 


Read in source website

டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் மாஸ்டா்ஸ் பிரிவில் இந்தியாவின் பிரக்னானந்தா தனது முதல் வெற்றியை வியாழக்கிழமை பதிவு செய்தாா்.

தொடா்ந்து 3 சுற்றுகளில் தோல்வியை சந்தித்த பிரக்னானந்தா, இந்த 10-ஆவது சுற்றில் சக இந்தியரும், புள்ளிகள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இந்தியருமான விதித் குஜராத்தியை வீழ்த்தினாா். வெற்றி கிடைத்தாலும் பிரக்னானந்தா 3.5 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்திலேயே நீடிக்கிறாா்.

மறுபுறம் விதித் குஜராத்தி 5.5 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்துக்கு சறுக்கினாா். 10 சுற்றுகளின் முடிவில் நாா்வே வீரா் மேக்னஸ் காா்ல்சென் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறாா். முன்னதாக அவரும் - ரஷியாவின் சொ்கே கா்ஜாகினும் ஆடிய 10-ஆவது சுற்று, இந்தப் போட்டியிலேயே மிகக் குறுகிய கால அளவாக 16 நகா்வுகளில் முடிவுக்கு வந்தது.

இப்போட்டியின் ‘சேலஞ்சா்ஸ்’ பிரிவில் 10 சுற்றுகள் முடிவில் இந்தியாவின் அா்ஜூன் எரிகாய்சி முன்னிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளாா். 10-ஆவது சுற்றில் அவா் ரஷியாவின் பாலினா ஷுவாலோவாவுடன் டிரா செய்தாா். மாஸ்டா்ஸ் மற்றும் சேலஞ்சா்ஸ் என இரு பிரிவுகளிலுமே இன்னும் 3 சுற்றுகள் ஆடப்படவுள்ளன.



Read in source website

இந்தியாவிலிருந்து முதன்முறையாக பிரமோஸ் வகை ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பின்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்படும் பிரமோஸ் வகை ஏவுகணை நாட்டின் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பிலிருந்து ஏவும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வகை ஏவுகணைகளை பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டில் முதல்முறையாக இவ்வகை ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பிலிப்பின்ஸ் அரசுடன் 37.4 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது இருதரப்பு அதிகாரிகள் மத்தியில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

கரையிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான பிரமோஸ் ஏவுகணைகளின் ஏற்றுமதி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏற்கெனவே பிரமோஸ் வகை ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

அரசு மருத்துவமனைகளின் தரத்தை உறுதி செய்ய அவற்றின் கட்டமைப்பு வசதி, பராமரிப்பு, தூய்மை, நோயாளிகளை கையாளும் விதம், மருத்துவ கழிவுகளை கையாள்வது ஆகியவற்றை ஆய்வு செய்து மத்திய சுகாதாரத்துறை தேசிய தர உறுதி சான்று (என்ஃகியூஏஎஸ்) வழங்கி வருகிறது.

இத்தகைய சான்று பெறும் அரசு மருத்துவமனைக்கு ஊக்கத்தொகை, இதர வசதிகளை மேற்கொள்ள 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, கோவையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் முறையாக சர்க்கார் சாமக்குளம் (எஸ்.எஸ்.குளம்) ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய சுகாதாரத் துறை தேசிய தர உறுதி சான்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் அருணா, எஸ்.எஸ்.குளம் வட்டார மருத்துவ அலுவலர் யக்ஞ பிரபா ஆகியோர் கூறியதாவது: முதல்கட்டமாக மாநில சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2021 மார்ச் மாதம் மருத்துவ குழுவினர் இங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் கடந்த நவம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 100-க்கு 87.15 சதவீத மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, தேசிய தர உறுதி சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், சிகிச்சை பெறும் நோயாளிகளின் கருத்தையும் பதிவு செய்து இந்த சான்றை வழங்கியுள்ளனர்.

மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவும் ஒன்று. இங்கு உள் நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவு, விபத்து, அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் என மொத்தம் 9 துறைகள், 30 படுக்கை வசதிகள் உள்ளன. முன்பு இங்கு மகப்பேறு அறுவைசிகிச்சை கிடையாது. தற்போது இங்கேயே மகப்பேறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, குடும்பநல அறுவைசிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. எக்ஸ்ரே-வசதி உள்ளது. இங்கு மாதத்துக்கு 15 முதல் 20 பிரசவங்கள் வரை நிகழ்கின்றன.

தினமும் 250 பேர் பயன்

தினசரி புறநோயாளிகளாக சுமார் 250 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். சரவணம் பட்டி, வெள்ளானைப்பட்டி, கணேசபுரம், வெள்ளமடை, அக்ரஹார சாமகுளம், கள்ளிப்பாளையம், குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த மருத்துவமனையால் பயனடைந்து வருகின்றனர். சிகிச்சைக்கு தேவைப்படும் ரத்தத்தை, ரத்த வங்கியில் இருந்து பெற்று, இருப்பு வைத்து, உபயோகிக்கும் வசதியை விரைவில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை ஏற்படுத்த அரசு அனுமதிக்காக காத்திருக்கிறோம். மருத்துவமனையின் உள் கட்டமைப்பு, மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதி மூலம் சுமார் ரூ.50 லட்சம் அளவுக்கு உதவிகள் கிடைத்தன. இதுதவிர, பல தன்னார்வ அமைப்பினரும் உதவி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



Read in source website

விருத்தாசலம்: தமிழ் மொழியியலில் ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார்(91) நேற்று முன் தினம் இரவு காலமானார்.

தமிழ் மொழியியலின் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய தமிழறிஞர் செ.வை.சண்முகனார், அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டசோழபுரத்துக்கு அருகில் உள்ள செங்குந்தபுரத்தில் 1932-ல் பிறந்தவர்.

சொந்த ஊரில் தொடக்கக் கல்வியையும், உயர்நிலை மற்றும் மேல்நிலை படிப்புகளை ஜெயங்கொண்டம் மற்றும் கும்பகோணத்திலும் பயின்ற சண்முகனார், கல்லூரிப் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று அங்கேயே, விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர், இயக்குநர் உள்ளிட்ட பல நிலைகளில் பணிபுரிந்தவர்.

மொழியியல் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழ் மரபு இலக்கணங்களை மொழியியல் நோக்கில் ஆராய்ந்துஇலக்கண உருவாக்கம், தொல்காப்பியத் தொடரியல், மொழித் தொல்லியல், எழுத்திலக்கணக் கோட்பாடு, சொல்லிலக்கணக் கோட்பாடு, பொருளிலக்கணக் கோட்பாடு, குயில் பாட்டுத் திறன்,குறள் வாசிப்பு, இக்கால எழுத்துத்தமிழ் போன்ற தமில் இலக்கண மொழியியல் குறித்த நூல்களை வழங்கியுள்ளார்.

இதுவரை 26 நூல்களையும் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ள செ.வை.சண்முகனார், பணியில்இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி மொழியியல்பண்பாட்டு ஆய்வு நிறுவனம்,மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் ஆகியவற்றில் உயராய்வுகளை நிகழ்த்தியவர். மொழியியலுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, ‘மொழி ஞாயிறு’ என்னும் பட்டம், குடியரசுத் தலைவரின் தொல்காப்பிய விருதாளர் என பல பெருமைக்குரிய இவருக்கு தமிழக அரசு 2014-ல் கம்பர் விருது வழங்கி கவுரவித்தது.

பணி ஓய்வுக்குப் பின்பு மனைவி தனலட்சுமியுடன் சிதம்பரம் அண்ணாமலை நகரையொட்டிய மாரியப்பா நகரில் வாழ்ந்து வந்த செ.வை.சண்முகனாரின் பவளவிழா, அவருடைய மாணவர்களால் அண்மையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி இருந்த இவர், நேற்று முன்தினம் இரவு காலமானார். இவரது மறைவுச் செய்தியறிந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் நேற்று அவரது இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இவரது இறுதிச்சடங்கு இன்று காலை 8 மணியளவில் நடக்கிறது.



Read in source website

ராணி விக்டோரியா பதின்பருவத்தில் வலம் வந்துகொண்டிருந்த காலத்தில் ஜொனாதன் பிறந்தது. 120 வருடங்களுக்கு முன்னர், தனது 81 வயதில் ராணி விக்டோரியா மரணித்துவிட்டார். ஆனால், இன்றும் ஜொனாதன் இன்னமும் செயின்ட் ஹெலினா தீவில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டில் 190-வது பிறந்தநாளை கொண்டாடுவதன் மூலம், இதுவரை வாழ்ந்த ஆமைகளில் மிகவும் வயதான ஆமை என்ற பெருமை, ஜொனாதனுக்கு கிடைக்கவுள்ளது.

1832-ஆம் ஆண்டு பிறந்ததாகக் கருதப்படும் ஜொனாதன், சர் வில்லியம் கிரே-வில்சன் என்பவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. இவர் 1882 ஆண்டு பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் ஹெலினாவுக்கு கவர்னராக வருகை புரிகிறார். இவருடன்தான் ஜொனாதனும் செயின்ட் ஹெல்னாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை செயின்ட் ஹெலினாவில், சுமார் 31 கவர்னர்களை ஜொனாதன் சந்திருக்கிறது. செயின்ட் ஹெலினாவின் கவர்னர் இல்லத்தில்தான் ஜொனாதன் தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்திருக்கிறது.

செயின்ட் ஹெலினாவில் சுற்றுலாத் தலைவர் மேட் ஜோஷுவா கூறும்போது, ”ஜொனாதனுக்கு உண்மையில் 200 வயது இருக்கலாம். ஏனெனில் ஜொனாதன் செயின்ட் ஹெலினா தீவுக்கு வந்ததைப் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஜொனாதன் எந்த ஆண்டு, எந்த தினத்தில் பிறந்தது என்பதற்கான பதிவும் இல்லை” என்று தெரிவித்தார்.

ஜொனாதனுக்கு முன்பு, டோங்கா தீவை சேர்ந்த தூய் மலிலா என்ற ஆமைதான் உலகின் வயதான ஆமையாக இருந்தது. தூய் மலிலா தனது 188 வயது வரை வாழ்ந்தது. 1965-ஆம் ஆண்டு தூய் மலிலா உயிரிழந்தது.

ஜொனாதனும் - உலகின் மாற்றமும்

ஜொனாதன் பிறந்ததிலிருந்து, உலகம் அளவிட முடியாத அளவில் மாறியுள்ளது. ஜொனாதன் பிறந்த பிறகுதான் உலகில் முதன்முதலில் புகைப்படம் 1838-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ஒளிரும் விளக்கு 1878-இல் கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் முதல்முதலாக 1903-இல் விண்ணில் பறந்தது, 1969-ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதலில் காலடி வைத்தார். இரண்டு உலகப் போர்களை உலகம் கண்டது.

ஆனால், ஜொனாதனின் உலகில் இதுவரை எந்த மாற்றமும் நடக்கவில்லை. தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது செய்வது இதைதான் ஜொனாதன் இத்தனை வருடங்களாக செய்து கொண்டிருக்கிறது.

இனச்சேர்கை சேர்க்கையில் ஆர்வம்

வயோதிகம் காரணமாக வாசனை உணர்வு, கண் பார்வையை ஜொனாதன் இழந்துள்ளது. பார்வை இழந்துள்ளதால் ஜொனாதனுக்கு உணவு கையில் வழங்கப்படுகிறது. ஜொனாதன் இன்னமும் இனச்சேர்க்கையில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருக்கிறது. கேரட், கோஸ், ஆப்பிள், வெள்ளரி போன்றவை ஜொனாதன் விரும்பி உண்ணும் உணவுகள் என்று அதன் பராமரிப்பார்கள் கூறுகின்றனர்.

கொண்டாட்டங்களுக்கு தயாராகும் செயின்ட் ஹெலினா தீவு

செயின்ட் ஹெலினா தீவில் உள்ள அதிகாரிகள் தற்போது ஜொனாதனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தயார் செய்து வருகின்றனர். ஜொனாதனின் பிறந்தநாள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு ஜொனாதனை சந்திக்கும் அனைவரும் அதன் கால்தடத்தின் படத்தை பெறுவார்கள் என்றும் செயின்ட் ஹெலினா தீவின் சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.

- உறுதுணைக் கட்டுரை: CNN



Read in source website