DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here
Tamil Newspaper Articles for TNPSC Exams - Current Affairs - 26-05-2023

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு தொல்லியல்துறையின் அகழாய்வில், செங்கல் கட்டுமானம் ஒன்று வெளிப்பட்டுள்ளது.

7 முதல் 19 செமீ ஆழத்தில் இந்த செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது. தொடர்ந்து தொல்லியல் அலுவலரும் பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி இயக்குநருமான தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொற்பனைக்கோட்டையின் அரண்மனை மேட்டுப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்ற அகழாய்வில், ஆம்போரா அடிப்பாகம், கூரை ஓடுகள், பல்வேறு மணிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டிருக்கும் தகவலுக்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு. ராஜேந்திரன், நிறுவனர் ஆ. மணிகண்டன் ஆகியோர் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.
 Read in source website

முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் செங்கோல் கொடுக்கப்பட்ட நிகழ்வு, இந்து சமய அறநிலையத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்தத் துறையின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு விவரம்: ஒரு புதிய மன்னா் அரியணை ஏறும் போது, மரபு வழிவந்த குரு அல்லது ஆசான் அந்த மன்னருக்குரிய செங்கோலை தமது கரங்களால் எடுத்து வழங்குவது அரச சடங்காகும்.

இதைப் பின்பற்றி ஓதுவாா்கள், தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பாடல்களைப் பாடி முடிக்கும் போது, திருவாவடுதுறை ஆதீனத்தின் தம்பிரான் சுவாமிகள் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை அப்போதைய பிரதமா் ஜவஹா்லால் நேருவிடம் அளித்தாா்.

இந்த நிகழ்வு, இந்தியாவின் முதல் கவா்னா் ஜெனரல் மெளண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பிரதமருக்கு அதிகார மாற்றம் செய்யப்பட்டதை சிறப்பித்ததாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

நிகழாண்டில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். நிறைவு செய்தவா்கள், தங்களது மாநில மருத்துவ கவுன்சிலில் தொழில் முறை பதிவு செய்து கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் வெளியிட்ட அறிவிப்பு:

2022-23-ஆம் கல்வியாண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் தங்களது மாநில மருத்துவ கவுன்சிலின் மூலம் தொழில்முறை பதிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோன்று உள்ளுறை பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரப் புதுப்பித்தல் நடவடிக்கைகளால் இதற்கு இடா் ஏற்படாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளின் பரிசோதனை ஜூன் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய மருந்துகளின் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென ஆய்வகங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சில ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு, உடல் உபாதைகளுக்கு இந்திய இருமல் மருந்துகளே காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, சில இந்திய இருமல் மருந்துகளின் பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு தடை விதித்தது. இந்த விவகாரம், இந்திய மருந்துப் பொருள்களின் தரம் மீது சா்வதேச அளவில் ஐயத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வகங்களில் கட்டாய பரிசோதனை செய்யப்படும் என இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) கடந்த வாரம் அறிவித்திருந்தது. வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அந்த விதி அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், அத்தகைய இருமல் மருந்துகளின் பரிசோதனைக்கு முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல் முடிவை விரைந்து வெளியிட வேண்டும் என்றும் மாநில ஆய்வகங்களுக்கு டிசிஜிஐ வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக, குஜராத், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களுக்கும் மத்திய ஆய்வகங்களுக்கும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதில், ’இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு ஆய்வகங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அத்தகைய மருந்துகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வகங்கள் விரைந்து வெளியிட வேண்டும். பரிசோதனையில் தாமதம் ஏற்படுவது முற்றிலுமாகத் தவிா்க்கப்பட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மருந்துப் பொருள்கள் உற்பத்தி அளவில் இந்தியா 3-ஆவது இடத்தை வகிக்கிறது. நாட்டில் சுமாா் 3,000 மருந்து நிறுவனங்களும், 10,500-க்கு மேற்பட்ட மருந்து உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. சா்வதேச அளவில் தரமான மருந்துகள் கிடைப்பதை அந்நிறுவனங்கள் உறுதி செய்து வருகின்றன. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் 1,700 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான இருமல் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இது கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் சுமாா் 1,760 கோடி டாலராக அதிகரித்தது. சா்வதேச நாடுகளுக்கு பொதுப்பெயா் மருந்துகளை அதிக அளவில் விநியோகிப்பதில் இந்தியா முன்னணி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.Read in source website

இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் மிக்-29 கே போா் விமானம் இரவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.

மிகவும் சவாலான இரவு தரையிறக்கத்தை விக்ராந்த் மாலுமிகளும், விமானப் படை விமானிகளும் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரலாற்றில் மைல்கல்லை பதிந்துள்ளனா் என கடற்படை பெருமிதம் தெரிவித்துள்ளது.

ஆரேபிய கடலில் சென்று கொண்டிருந்த ஐஎன்எஸ் விக்ராந்த்தில் புதன்கிழமை இரவு இந்த சாதனை படைக்கப்பட்டது.

‘இது கடற்படையின் தற்சாா்பு கொள்கையை வெளிப்படுத்துகிறது’ என்று கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மாத்வால் தெரிவித்தாா்.

இந்திய கடற்படையின் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘இது விக்ராந்த் போா்க் கப்பலின் அதிகாரிகள், விமானப் படை வீரா்கள் ஆகியோரின் திறனை வெளிப்படுத்துகிறது’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

ரஷியாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக்-29கே போா் விமானமும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போா் விமானமும் கடந்த பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் விக்ராந்த் போா்க் கப்பலில் தரையிறக்கப்பட்டது.

முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கி வைத்தாா். 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான சுமையை சுமந்து செல்லும் கப்பல்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றது.

ரூ.23 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்ட விக்ராந்த்தில் வான் பாதுகாப்பு, கப்பல் எதிா்ப்பு ஏவுகணை அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. 30 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் நிறுத்தும் அளவுக்கு விக்ராந்த் போா்க் கப்பலில் இடம் உள்ளது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பல் முக்கிய பங்காற்றும் என்று கடற்படை தெரிவித்திருந்தது.

Image Caption

ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போா்க்கப்பலில் முதல் முறையாக இரவு நேரத்தில் தரையிறங்கிய மிக்29கே போா் விமானம். ~

 Read in source website

பாகிஸ்தானை விட்டு வெளியேற அந்த நாட்டின் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் ‘சமா நியூஸ்’ தொலைக்காட்சி வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த 80 பேரை வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் அரசு சோ்த்துள்ளது. அந்த 80 பேரில் இம்ரான் கானும், அவரது மனைவி புஷ்ராவும் அடங்குவா் என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தனது பிரதமா் பதவியை இம்ரான் கான் இழந்தாா்.

அதற்குப் பிறகு, நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அவற்றில் இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக அவா் கடந்த 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு வந்தாா். அங்கு அவரை ஊழல் தடுப்பு அதிகாரிகளும், துணை ராணுவப் படையினரும் வேறொரு வழக்கில் அதிரடியாகக் கைது செய்தனா். எனினும், அவரை உச்சநீதிமன்றம் பின்னா் விடுவித்தது.

இம்ரான் கைதுக்கு எதிா்ப்பு தெரிவித்து ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளா்கள் கடந்த 10-ஆம் தேதி வரை வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனா்.

 

 Read in source website

இந்தியச் சந்தையில் கணினிகளின் மொத்த விற்பனை தொடா்ந்து சரிந்து வருவதாக சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் (ஐடிசி) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் இந்தியச் சந்தையில் மேஜைக் கணினிகள் (டெஸ்க்டாப்), நோட்புக்குகள், வொா்க்ஸ்டேஷன்கள் என்ற அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய கணினிகளின் மொத்த விற்பனை 29.92 லட்சமாக இருந்தது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 30.1 சதவீதம் சரிவாகும். அப்போது இந்தியாவில் கணினிகளின் மொத்த விற்பனை 42.82 லட்சமாக இருந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் டெஸ்க்டாப்புகளுக்கான தேவை அதிகரித்தது. எனினும், நோட்புக் வகை கணினிகளின் மொத்த விற்பனை, முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டைவிட 40.8 சதவீதம் குறைவாக இருந்தது.

கணினிகளுக்கான தேவை குறைந்து வருவதால் தனி நபா் நுகா்வோா் பிரிவில் அவற்றின் விற்பனை கடந்த ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டைவிட இந்த ஆண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 36.1 சதவீதம் சரிந்துள்ளது

அதுபோல், நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் கணினிகளின் கொள்முதலை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிறுத்தியோ, தாமதப்படுத்தியோ வருவதால், நிறுவன நுகா்வோா் பிரிவில் கணினிகளின் விற்பனை 25.1 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியச் சந்தையில் கடந்த இரண்டு காலாண்டுகளாகவே கணினிகளுக்கான தேவை மந்தமாக உள்ளது.

இந்தப் போக்கு இன்னும் சில மாதங்களுக்குத் தொடா்ந்தாலும், 2023-ஆம் ஆண்டின் நான்வது காலாண்டில் இருந்து கணினிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாா்ச் காலாண்டில் அரசு அலுவகங்களும், கல்வி நிறுவனங்களும் மட்டுமே அதிக எண்ணிக்கையில் கணினிகளை கொள்முதல் செய்தன.

அந்தக் காலகட்டத்தில் அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்த கணினிகளின் எண்ணிக்கை முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டைவிட 25.2 சதவிகிதம் அதிகமாக இருந்தது. அதே போல், கல்வி நிறுவனங்களின் கணினி கொள்முதலும் 65.6 சதவிகிதம் வளா்ச்சியடைந்தது.

ஜனவரி-மாா்ச் காலண்டில் 33.8 சதவீத சந்தைப் பங்குடன் ஹெச்பி நிறுவனம் கணினிகள் துறையில் முன்னிலை வகிக்கிறது. இது, இரண்டாவது இடத்தில் உள்ள லெனோவாவின் சந்தைப் பங்கை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த நிறுவனம் இந்திய கணினிகள் சந்தையில் 15.7 சதவீதம் பங்கு வகிக்கிறது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.Read in source website

பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு இசைவை (விசா) பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டுப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான ஓராண்டில் பிரிட்டன் விசாக்களை அதிக எண்ணிக்கையில் பெறும் வெளிநாட்டவா்கள் குறித்த விவரங்களை அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் திரட்டியது. அந்த விவரங்களை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளா்கள், திறன்மிக்க பணியாளா்கள் உள்ளிட்டவா்களுக்கான விசாக்களைப் பெறுவதில் இந்தியா்கள் முன்னிலையில் உள்ளனா். உயா்கல்வி பெறுவதற்காக வெளிநாட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களில் 41 சதவீதத்தை இந்திய மாணவா்களே பெற்றுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பணியாளா்களுக்கான விசாக்களில் 33 சதவீதத்தை இந்தியா்கள் பெற்றுள்ளனா். கடந்த ஓராண்டில் வெளிநாட்டு மாணவா்களுக்கு 92,951 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பணியாளா் விசா பெற்ற இந்தியா்களின் எண்ணிக்கை 13,390-ஆக இருந்த நிலையில், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் அந்த எண்ணிக்கை 21,837-ஆக அதிகரித்துள்ளது.

அதே காலகட்டத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கான விசாக்களைப் பெற்றதில் இந்தியா்களின் எண்ணிக்கை 14,485-இல் இருந்து 29,726-ஆக அதிகரித்துள்ளது. இது 105 சதவீத அதிகரிப்பாகும். கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் பிரிட்டன் விசா பெற்ற இந்திய மாணவா்களின் எண்ணிக்கை சுமாா் 7 மடங்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் விசா வைத்துள்ளவா்களைச் சாா்ந்து வசிக்கும் வெளிநாட்டவா்களின் எண்ணிக்கையில் நைஜீரியா முதலிடம் வகிக்கிறது. அவ்வாறு 66,796 நைஜீரியா்கள் பிரிட்டனில் வசித்து வருகின்றனா். அந்தப் பட்டியலில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. பிரிட்டன் விசா வைத்துள்ள இந்தியா்களைச் சாா்ந்து 42,381 போ் அந்நாட்டில் வசித்து வருகின்றனா்.

பிரிட்டனுக்கான நிகர இடம்பெயா்வு கடந்த நிதியாண்டில் 6,06,000-ஆக அதிகரித்துள்ளது. இது வரலாற்று அதிகபட்சமாகும். இது கடந்த நிதியாண்டில் 5,04,000-ஆக இருந்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பணியாளா்களும், மாணவா்களும் பிரிட்டனுக்கு இடம்பெயா்ந்ததன் காரணமாக நிகர இடம்பெயா்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

 பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸும் அரசியாக அவரின் மனைவி கமீலாவும் அண்மையில் முடிசூட்டப்பட்டனா். பிரிட்டன் அரசிகளுக்கான கிரீடத்தில் கோஹினூா் வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

அந்த வைரமானது இந்தியாவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டதாகும். 1849-இல் பஞ்சாப் சமஸ்தான அரசா் அப்போதைய பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணியிடம் அளித்தாா். பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறிய கோஹினூா் வைரமானது இறுதியாக பிரிட்டன் அரச வம்சத்தினரிடம் சென்றடைந்தது.

கோஹினூா் வைரத்துக்கு இந்தியா தொடா்ந்து உரிமை கோரி வருகிறது. அந்த வைரத்தை பிரிட்டன் அரசிடமிருந்து திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டுமெனப் பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். எனினும், கோஹினூா் வைரத்தை பிரிட்டனிடமிருந்து திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள கண்காட்சியில் கோஹினூா் வைரம் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரம் பல சாம்ராஜ்யங்களுக்கு இடையே கைமாறியது தொடா்பான வரலாற்றுத் தகவலும் காணொலியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பிரிட்டன் மாளிகைகளை நிா்வகித்து வரும் ’ஹிஸ்டாரிக் ராயல் பேலசஸ்’ அறக்கட்டளையின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ’கோஹினூா் வைரம் உள்ளிட்ட பிரிட்டன் அரச குடும்பத்தினரிடம் உள்ள பல்வேறு பொருள்களின் வரலாற்றுத் தகவல்கள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

போா் வெற்றியின் அடையாளமாகத் திகழும் கோஹினூா் வைரமானது, முகலாயா்கள், ஈரானின் ஷா ஆட்சியாளா்கள், ஆப்கனின் எமீரா்கள், சீக்கிய மகாராஜாக்கள் எனப் பல சாம்ராஜ்யங்கள் வழியே கைமாறியுள்ளது. இது தொடா்பாக வரலாற்று ஆசிரியா்கள் உள்ளிட்டோரிடம் விரிவான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

வரலாற்றை வெளிப்படையாகவும் சமநிலையுடனும் ஒருங்கிணைப்புத்தன்மையுடனும் வெளிக்காட்டும் வகையில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1849-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி பஞ்சாப் மகாராஜா துலீப் சிங், பஞ்சாபையும் கோஹினூா் வைரத்தையும் பிரிட்டன் சாம்ராஜ்ய மகாராணி விக்டோரியாவிடம் ஒப்படைக்க நோ்ந்தது. 1852-ஆம் ஆண்டில் பிரிட்டன் பாரம்பரியத்துக்கு ஏற்ப வைரம் பட்டை தீட்டப்பட்டது.

அப்போதுமுதல் அரசா்கள் /அரசிகளின் கிரீடத்தில் கோஹினூா் வைரம் பொருத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு வைரத்தின் மாதிரியே கிரீடத்தில் பொருத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.

வரும் நவம்பா் வரை இந்தக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Read in source website

 தனது புதிய தொலைதூர ஏவுகணையை ஈரான் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

தலைநகா் டெஹ்ரானில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த ஏவுகணையை அதிகாரிகள் செய்தியாளா்களுக்குக் காட்டினா். ‘கொராம்ஷாா்-4’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, 1,500 கிலோ எடை கொண்ட வெடிபொருளுடன் 2,000 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.

அந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டதன் விடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டனா்.

இஸ்ரேலை தனது பரம எதிரியாகக் கருதும் ஈரான், பாலஸ்தீன அமைப்புகளுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனா்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 Read in source website

மைசூா் மன்னா் திப்பு சுல்தானின் போா் வாள் லண்டன் அருங்காட்சியகத்தில் ரூ.140 கோடிக்கு ஏலம் போனது. அறிவிக்கப்பட்ட தொகையைவிட 7 மடங்கு அதிகமாக ஏலம் எடுக்கப்பட்டு, இந்திய வரலாற்றுப் பொருள்களில் அதிக ஏல விற்பனைத் தொகையில் சாதனை படைத்துள்ளது.

இதுதொடா்பாக போன்ஹம்ஸ் ஏல நிறுவனத்தில் உள்ள இஸ்லாமிய மற்றும் இந்திய கலை பிரிவின் தலைவரும், இந்த ஏலத்தை நடத்தியவருமான ஆலிவா் ஒயிட் வெளியிட்ட அறிக்கையில், ‘மைசூரின் புலி என அறியப்படும் மன்னா் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது அறையிலிருந்து எடுக்கப்பட்ட போா் வாள், அவரது அனைத்து விதமான ஆயுதங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது. 1782 முதல் 1799-ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த வாள் சிறந்த எஃகால் தயாரிக்கப்பட்டு கைப்பிடியில் ‘மன்னரின் வாள்’ என தங்கத்தால் பொறிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு ஆங்கிலேயா் படையின் மேஜா் ஜெனரல் டேவிட் பெய்ா்டின் வீரத்தை மெச்சி பரிசாக வழங்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரமாக பாதுகாக்கப்பட்டு ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த வாளை வாங்க தொலைபேசியில் இருவரும், நேரடி ஏலத்தில் பங்கேற்றவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதாக இஸ்லாமிய, இந்திய கலை பிரிவைச் சோ்ந்த நீமா சாகாா்ச்சி தெரிவித்தாா்.

1799-இல் திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பிறகு அவரது ஸ்ரீரங்கபட்டினம் அரண்மனையில் இருந்து பல்வேறு பொருள்கள் எடுக்கப்பட்டதாகவும், அவற்றில் எப்போதும் அவரது படுக்கையிலிருந்து கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள இந்த வாளும், இரண்டு துப்பாக்கிகளும் கிடைத்தன என்றும் போன்ஹம்ஸ் ஏல விற்பனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Read in source website

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்தாண்டு செப்.12-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மே 24-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் சஞ்சய் விஜய்குமார் கங்கா பூர்வாலாவை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப்.19 அன்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

அதன்படி தற்போது எஸ்.வி.கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதிக்கு ஆளுநர் விரைவில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.Read in source website

மதுரை: அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஓய்வு பெற்ற பணியாளர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது அந்த பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களால் அவமரியாதை செய்யப்படுவதாக புகார்கள் வருகிறது. இந்த அவமரியாதை தொடர்பாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் ஒருவர் கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஓய்வு பெற்ற பணியாளர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ''அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் நமது பேருந்துகளில் பயணம் செய்யும்போது உரிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி ஏற்றி விடுவதில்லை எனவும், ஓய்வு பெற்ற பணியாளர்களை பயணத்தின்போது சில நடத்துநர்கள் அவமரியாதை செய்வதாகவும் கடிதம் வந்துள்ளது.

இதனால், பேருந்துகளில் பயணம் செய்யும் ஓய்வு பெற்ற பணியாளர்களை கண்ணியத்துடன் நடத்திடவும், அவர்களை உரிய பேருந்து நிறுத்தத்தில் ஏற்றி, இறக்கி செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மீண்டும் இதுபோன்ற புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.Read in source website

மதுரை: தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களின் வரலாற்றுத் தொடர்புடைய ஓலைச்சுவடி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுவடியியல் பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆறுமுகனேரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் த.தவசிமுத்து மாறனிடமிருந்து 14 அரிய ஓலைச் சுவடிகளைப் பெற்றார். அதில் சோழர்கள் வரலாறு தொடர்புடைய தகவல்கள் கிடைத்தன. இந்த ஓலைச்சுவடி
குறித்து பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியது: இது மிகவும் அரிதான ஓலைச்சுவடி. ‘ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு’ சுவடி. இதில் குறிப்பிட்டுள்ள வரலாறுகள் நிகழ்ந்த காலம் கிபி.11 முதல் 18-ம் நூற்றாண்டு வரை ஆகும்.

வித்யாதர முனிவர் என்பவர் சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் ஆதி மூதாதையர். அவரின் புதல்வர்களை காளி வளர்த்து வீரக் கலைகளைக் கற்றுக்கொடுத்து ஆளாக்குகிறாள். காளி, தான் வளர்த்து ஆளாக்கிய 7 புதல்வர்களுக்கும் நிருபதிராசன் மகள்களை மணமுடித்தாள். சோழர் குலத்தைச் சேர்ந்த இவர்கள் வலங்கைச் சான்றோர் குலமாக உருவாகின்றனர். வலங்கைச் சான்றோர் சோழனை எதிர்த்த சம்பரனை வெற்றி கொள்கின்றனர். வணிகச் செட்டியார்களுக்கு உதவி செய்து ‘செட்டித் தோளேறும் பெருமாள்’ என்று பட்டம் பெறுகின்றனர். சோழனுக்காக இலங்கை மன்னனையும் வென்று வீர விருதுகளும், பாராளும் சீமையில் பங்கும் பெறுகின்றனர்.

யானையை ஏவிய சோழ மன்னன்: காவிரி அணை உடைப்பை அடைக்க சோழன் கட்டளையிட்டபோது வலங்கைச் சான்றோர் மண் குட்டையைத் தொட மறுக்கின்றனர். கோபம் கொண்ட சோழன் 2 வலங்கையரின் தலையை யானையை ஏவி இடறச் செய்கிறான். தனது புத்திரர்கள் கொல்லப்பட்டதை அறிந்த காளி, சோழ நாட்டில் மழை பொழியாமல் போகச் சாபமிட்டதால் 12 ஆண்டுகள் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இப்படி இருக்கையில் வலங்கைச் சான்றோர் 5 ராசாக்களாக உலகை வெகுகாலம் செங்கோல் செலுத்தி பரம்பரையாக மனுநீதி தவறாமல் ஆண்டு வந்தனர்.

அத்திமுடிச் சோழன் என்பவன் மகன் இல்லாததால் அரச மரபை மீறி வேறொரு பெண்ணின் மகனை நாடாள வைக்க முடிவு செய்கிறான். பிற நாட்டு மன்னர்கள் சத்திரிய தர்மம்
மீறி நடக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியும் சோழன் கேட்கவில்லை. இதனால் கோபமடைந்த மன்னர்கள் அத்திமுடிச் சோழனை போரில் வென்று சோழர் குல வலங்கைச் சான்றோனை முடிசூட்டி சோழ நாட்டை அரசாளச் செய்தனர். இதுபோன்று ஏராளமான வரலாற்று தகவல்கள் ஓலைச்சுவடியில் புதைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.Read in source website

சென்னை: தமிழக அரசு பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாள்களை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 5,45,297 பணிபுரிகின்றனர்.

2022-23-ம் ஆண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் கணக்கு தாள்கள் தொகுக்கப்பட்டு மே 26-ம் தேதி காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையம் வெளியிடப்பட உள்ளது. அத்துறையின் cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.Read in source website

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தாட்கோ மூலம் பட்டப்படிப்புடன் கூடிய பிரபல ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு என சென்னை மாவட்ட ஆட்சியர் சு. அமிர்தஜோதி அறித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022-23-ம்ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும்.

அதுமட்டுமின்றி, ஹெச்சிஎல்டெக்னாலஜியில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கணினி வடிவமைப்பு பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தராபல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிகாம், பிபிஏ மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க, வாய்ப்பு பெற்று தரப்படும்.

12-ம் வகுப்பு 2022-ல் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023-ல் முடித்தவர்கள் 75 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஹெச்சிஎல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து மாணவர்கள் பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Read in source website

திருவாரூர்: மன்னார்குடியில் லீ குவான் யூ-வுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு மன்னார்குடி பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சிங்கப்பூர் தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து நடந்த தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது ‘சிங்கப்பூரின் தந்தை’ என போற்றப்படும் மறைந்த பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னமும், நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து: 1965-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து சிங்கப்பூர் தனி நாடானது. 716 சதுர கி.மீ பரப்பளவு உடைய சிங்கப்பூரில், சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள்தான் அதிகளவு இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு சிங்கப்பூருக்கு சர்வதேச அங்கீகாரம் பெற, அந்நாட்டின் முதல் பிரதமரான லீ குவான் யூ, சட்ட திட்டங்களை வகுத்து, நாட்டை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டார்.

மேலும், இங்கு தமிழர்களின் பங்களிப்பை லீகுவான்யூ நன்கு உணர்ந்திருந்தார். அதன் காரணமாகவே சிங்கப்பூரில் தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்தையும் வழங்கினார். சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தாலும், உழைப்புக்கு உரிய மரியாதையும், ஊதியமும் கிடைத்த நிலையில் தமிழர்கள் சிங்கப்பூருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வேலைக்கு செல்வதை பெருமையாக கருதினர்.

இதனால், மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, மேலநத்தம், கீழத்
திருப்பாலக்குடி, மேலத்திருப்பாலக்குடி, மகாதேவப்பட்டினம், தெற்குசீதாரம், வடக்குசீதாரம், நெடுவாக்கோட்டை, தளிக்கோட்டை, தஞ்சை மாவட்டம் மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றனர். அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொண்டனர்.

இந்த கிராமங்களில் இன்றளவும் வீட்டுக்கு ஒருவராவது சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். பலர் சிங்கப்பூர் குடியுரிமையும் பெற்றுள்ளனர். இதனிடையே, 2015 மார்ச் 23-ல்
லீ குவான் யூ மறைந்தபோது, இரங்கல் தெரிவிக்கும் வகையில் மன்னார்குடியில் நடைபெற்ற அஞ்சலி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது, ‘மண் வீட்டில் வசித்த
எங்களை மாடி வீட்டில் வசிக்க வைத்த தெய்வமே’ என அஞ்சலி பதாகைகளையும் வைத்தனர். மேலும், மன்னார்குடியில் லீ குவான் யூ-வுக்கு சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

அப்போது எம்எல்ஏவாக இருந்த தற்போதைய அமைச்சர் டிஆர்பி.ராஜா, இந்த கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்நிலையில், லீ குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது மன்னார்குடி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.Read in source website

சென்னை: ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 வயதுக்குட்பட்ட 93 ஆயிரம் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் அங்கன்வாடி மையங்களில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் 6 வயதுக்குட்பட்ட 25 லட்சத்து 23,373 குழந்தைகள், 6 லட்சத்து 82,073 கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 46,063 வளரிளம் பெண்கள் என மொத்தம் 32 லட்சத்து 51,509 பேர் பயனடைந்து வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குதல், ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் சுகாதார கல்வி ஆகியவை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.2,765 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரை 37.27 லட்சம் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை கணக்கிடப்பட்டு, அவர்களில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 43,299 குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மாதங்களுக்குட்பட்ட, கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 11,917 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 16,415 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவு, பேரிச்சம்பழம், ஆவின் நெய், புரோட்டின் பிஸ்கட், இரும்புசத்து திரவம் மற்றும் குடற்பூச்சி நீக்க மாத்திரை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்குட்பட்ட 93,200 குழந்தைகளுக்கு, உடனடியாக உட்கொள்ளும் சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு உணவானது அரைத்த வேர்க்கடலை, பால் பவுடர், சர்க்கரை, எண்ணெய், வைட்டமின்கள் மற்றும் மினரல் பொருட்களை கொண்டதாகும்.

எனவே இத்திட்டத்தின் பயன்களை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக பொதுமக்கள் தெரிந்து கொண்டு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சமூகநலத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read in source website

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுவதை நினைவுகூரும் வகையில் சிறப்பு ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த சிறப்பு நினைவு நாணயம் இந்தியாவின் 75-வது சுதந்திரதின ஆண்டு கொண்டாட்டத்திற்கான அர்ப்பணிப்பாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த சிறப்பு நினைவு நாணயம், 44 மில்லிமீட்டர் விட்டமும், விளிம்பில் 200 தொடர் வரிசைகளைக் கொண்டதாக இருக்கும். அதேபோல் இந்நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 தாமிரம், 5 சதவீதம் நிக்கல் மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் ஆகிய உலோகக் கலவைக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் அசோகத் தூணில் உள்ள சிங்க முகங்களும் அதன் கீழே சத்யமேவ ஜெயதே என்ற வாசகமும் இடம்பெற்றிருக்கும். நாணயத்தின் இடதுபக்கத்தில் பாரதம் என்று தேவநகரி எழுத்திலும், வலதுபக்கதில் இந்தியா என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும்.

அதே நேரத்தில் நாணயத்தின் மறுபக்கம் நாடாளுமன்ற வளாகம் காட்டப்பட்டிருக்கும் அதன் மேலே சன்சத் சங்குல் என்று தேவநகரி எழுத்திலும், கீழே நாடாளுமன்ற வாளாகம் என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும். நாணயத்தின் வடிவமைப்பு இந்திய அரசியல் அமைப்பின் முதலாவது ஷரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்களின் படி இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியால் திறக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில், இந்த விழாவில் "குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். சர்வாதிகாரப் போக்கு. நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை" என்று தெரிவித்து 20 எதிர்க்கட்சிகளும் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்கப்போவதாக கூட்டாக அறிவித்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு கடும் எதிப்புத் தெரிவித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ,"எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு நமது ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியலைமைப்பு மதிப்புகளுக்கான அப்பட்டமான அவமதிப்பு" என்று தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Read in source website

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: சர்வதேச அளவில் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் காச நோய் பாதிப்பு 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.

இதே காலத்தில் இந்தியாவில் 13 சதவீதம் அளவுக்கு காசநோய் பாதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது. வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதற்காக காசநோய் பரவலை தடுப்பது, முன்கூட்டியே நோயின் பாதிப்பை கண்டறிவது, தரமான சிகிச்சை அளிப்பது ஆகிய நடைமுறைகளை இந்திய அரசு கண்டிப்புடன் பின்பற்றி வருகிறது. இந்தியா முழுவதும் 1.5 லட்சம் சுதாதார மையங்களில் இதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகளாவிய அளவில் ஏற்படும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நோய்க்கு எல்லைகள் கிடையாது. எனவே கூட்டு ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கூட்டு ஆராய்ச்சி மூலம் குறைந்த விலையில் தடுப்பூசி, மருந்துகளை மக்களுக்கு வழங்க முடியும். தடுப்பூசி, சிகிச்சை மற்றும் நோயை கண்டறியும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதில் அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைப்பு அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் மாண்டவியா பேசினார்.Read in source website

நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது.

இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்:

  • ஜிம்பாப்வே
  • வெனிசுலா
  • சிரியா
  • லெபனான்
  • சூடான்
  • அர்ஜெண்டினா
  • ஏமன்
  • உக்ரைன்
  • கியூபா
  • துருக்கி

வேலையின்மை, பணவீக்கம் காரணமாகவே மேற்கூறிய நாடுகள் துயர் நிலையில் இருப்பதாகவும் அவரது பட்டியல் கூறுகிறது.

ஜிம்பாப்வே முதலிடம் ஏன்? - ஜிம்பாப்வேயில் பணவீக்கம் உச்ச நிலையை தொட்டுள்ளது. மேலும், அதிபர் எம்மர்சனின் கொள்கைகள் மக்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்தியா 103-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் வேலையின்மைதான் முக்கியப் பிரச்சினையாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் பட்டியலில் கடைசி பத்து இடங்களில் மால்டா (148), டோகோ( 149), தாய்லாந்து (150), நைகர் (151), தைவான் (152), மலேசியா (153), ஜப்பான் (154), அயர்லாந்து (155), குவைத் (156), ஸ்விட்சர்லாந்து (157) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நாடுகளில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் குறைந்த சதவீதத்தில் பதிவாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.Read in source website

பீஜிங்: சீனாவில் புதிய கரோனா அலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அதைத் தடுக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ” கரோனா பரவல் சீனாவில் முற்றிலும் பூஜ்ஜியமான நிலையில் ஒமிக்ரான் திரிபு உடைய XBB என்ற புதிய வகை கரோனா பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த தொற்று பரவல் ஜூன் மாதத்தில் உச்ச நிலையை அடையும் என்றும் அப்போது வாரத்திற்கு 6.5 கோடி பேர் இந்த வகை கரோனாவினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். XBB என்ற வகை கரோனாவை தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதன் பொருட்டு XBB வைரஸை தடுக்க XBB. 1.9.1, XBB. 1.5, என்ற இரண்டு புதிய தடுப்பூசிகளை சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷானை மேற்கோள்காட்டி இருக்கிறார். மேலும் 4 தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி தர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ” என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்த வகை கரோனாதொற்றினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் வயதானவர்களுக்கு கூடுதல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமான இடங்களை தவிர்க்கவும், முகக்கவசங்கள் அணியவும் சீன மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸ் பரவியது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் ஆனால் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Read in source website

புதுடெல்லி: இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக அவற்றின் மாதிரிகளை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி தரத்தை உறுதிப்படுத்துவது கட்டாயம் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) கூறியுள்ளது.

இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1-ம் தேதியிலிருந்து தங்களது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக அரசு ஆய்வகங்களில் அவற்றை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, அந்த ஆய்வகங்கள் வழங்கும் பகுப்பாய்வு சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் இருமல் மருந்து ஏற்றுமதியின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, மருந்து உற்பத்தியாளர்கள் வழங்கும் அதுபோன்ற மாதிரிகளை குறிப்பிட்ட மாநில ஆய்வகங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசோதித்து விரைவாக சான்றிதழ் அளிக்க வேண்டும். அதில் தாமத நடவடிக்கைகள் கூடாது என டிசிஜிஐ வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்டமாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மத்திய ஆய்வகங்களுக்கு டிசிஜிஐ கடிதம் எழுதியுள்ளது. அதில், இருமல் மருந்து ஏற்றுமதி கொள்கை தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடு முதல் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தை கொண்ட நாடு வரையில் அந்தந்த நாடுகளுக்கு தேவையான மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

உலகளவில் ஜெனரிக் மருந்துகளை தயாரித்து வழங்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. பல்வேறு தடுப்பூசிகளுக்கான உலகளாவிய தேவையில் 50 சதவீதத்தையும், அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கான தேவையில் 40 சதவீதத்தையும், இங்கிலாந்தில் அனைத்து மருந்துகளுக்கான தேவையில் 25 சதவீதத்தையும் இந்திய மருந்து நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.

கடந்த ஆண்டு காம்பியாவில் 66 சிறுவர்களும், உஸ்பெகிஸ்தானில் 18 சிறுவர்களும் உயிரிழந்ததுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகள்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், ஏற்றுமதிக்கு முன்பு தரத்தை உறுதி செய்ய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

2021-22-ல் ரூ.1.40 லட்சம் கோடியாக இருந்த இருமல் மருந்து ஏற்றுமதி 2022-23-ல் ரூ.1.45 லட்சம் கோடியாக வளர்ச்சி கண்டது. உலக அளவில் மருந்து உற்பத்தியில் இந்தியா அளவின் அடிப்படையில் 3 வது இடத்தையும், மதிப்பின் அடிப்படையில் 14-வது இடத்தையும் பிடித்துள்ளது.Read in source website

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% தாண்டும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படுகின்ற போதிலும், இந்தியாவில் தொழில் செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ளன. இதனால், சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது. இதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகித்தை அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறும்போது, ‘‘நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும்.

இந்தியாவில் மக்களிடையே கடன் தேவை அதிகரித்து இருக்கிறது. இது தொழில் செயல்பாடுகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கான அறிகுறி. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா பெரியஅளவில் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. சவாலாக இருந்த பணவீக்கம் தற்போதுகட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியா நடப்பு நிதி ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும்” என்றார்.Read in source website

கலை ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. நடனம் ஆடும் பெண் போன்ற ஒரு உருவத்தின் இருப்பு ஹரப்பா சமுதாயத்தில் உயர்ந்த கலை இருப்பதைக் குறிக்கிறது.

1926 ஆம் ஆண்டு மொஹஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட நடனப் பெண் சிலை சமீபத்தில் சர்ச்சையின் மையமாக இருந்தது.
சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு (மே 18), டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், மொகஞ்சதாரோவின் புகழ்பெற்ற நடனப் பெண்ணின் “சமகால” பதிப்பான எக்ஸ்போவின் சின்னத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அப்போது, 5 அடிக்கும் மேல் உயரமான இந்தச் சிலை, அசல் உருவத்தின் வடிவத்தை சிதைத்தாக பலத்த எதிர்ப்பு வந்தது.

4,500 ஆண்டுகள் பழமையான வெண்கலச் சிலை, வெறும் 10.5 செ.மீ உயரம், பல வளையல்கள் மற்றும் நெக்லஸைத் தவிர்த்து முற்றிலும் நிர்வாணமாக உள்ளது.
இருப்பினும், மாற்றியமைக்கப்பட்ட சின்னம் அழகான தோலைக் கொண்டுள்ளது, மேலும் பிரகாசமான இளஞ்சிவப்பு ரவிக்கை மற்றும் வெள்ளை நிற துணி அணிந்துள்ளது.

இந்த நிலையில் இதன் நோக்கம் கலாசாரத்தின் மாற்றம் அல்ல கலாச்சாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.

நடனப் பெண் சிலை

சிந்து நாகரிகம் அல்லது ஹரப்பா-மொஹஞ்சதாரோ நாகரிகம் கிமு 3300-1300 அல்லது கிமு 2600-1900 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது 1924 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே நாகரீகத்தின் தளங்கள் மற்றும் கலைப்பொருட்கள் விவாதத்தில் இருந்தபோதும், 1920 களில்தான் அவை சரியாக தேதியிடப்படவில்லை.

மேலும் மெசபடோமியா மற்றும் எகிப்தில் உள்ளதைப் போலவே முழு அளவிலான பண்டைய நாகரிகத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.
பழங்கால நாகரிகம் என ஆரம்பகால அங்கீகாரத்திற்குப் பிறகு, ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

மொஹஞ்சதாரோவின் சிட்டாடலின் ன்பதாவது பாதையில்’ ஒரு பாழடைந்த வீட்டில் 1926 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எர்னஸ்ட் மெக்கே என்பவரால் அத்தகைய ஒரு அகழ்வாராய்ச்சியில் நடனப் பெண் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரிவினைக்குப் பிறகு மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறினாலும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடனப் பெண் சிலை இந்தியாவில் வைக்கப்பட்டது.
இன்று, வெண்கலச் சிலை இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சில விளக்கங்கள்

பல ஆண்டுகளாக இந்த நடனப் பெண் சிலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி நடத்திவருகின்றனர். தி பெங்குயின் ஹிஸ்டரி ஆஃப் எர்லி இந்தியா: ஃப்ரம் ஆரிஜின்ஸ் டூ கிபி 1300 (2002) நூலில் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், “சிலையை இளம்பெண்” என வர்ணித்துள்ளார்.

இந்த இளம் பெண் மற்ற பண்டைய நாகரிகங்களின் படைப்புகளில் எதையும் போலல்லாமல், கலகலப்பான பண்பைக் கொண்டிருக்கிறார்” என்று வரலாற்றாசிரியர் ஏ.எல்.பாஷாம் தனது கிளாசிக் தி வொண்டர் தட் வாஸ் இந்தியா (1954) இல் எழுதினார்.

1944 மற்றும் 1948 க்கு இடையில் இந்திய தொல்லியல் துறையின் (ASI) இயக்குனரான மார்டிமர் வீலர், இந்த உருவத்தை தனக்கு மிகவும் பிடித்தது என்று விவரித்தார்.
இது குறித்து அவர், “ஒரு பெண், இந்த நேரத்தில், தன்னையும் உலகத்தையும் முழுமையாக நம்புகிறாள். அவளைப் போன்ற எதுவும் உலகில் இல்லை என்று நான் நினைக்கிறேன், ”என்று வீலர் எழுதினார்.

1902 முதல் 1928 வரை ASI இன் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஜான் மார்ஷல், ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளை மேற்பார்வையிட்டவர்.
இவர், “அரை துடுக்குத்தனமான தோரணையில் இடுப்பில் கை, மற்றும் கால்கள் சற்று முன்னோக்கி நகர்த்தப்பட்ட ஒரு இளம் பெண்” என்றார்.

அனுமானங்கள்

மார்ஷலின் விளக்கம் அந்த உருவம் தாக்கும் போஸ் தான். ஆனால் பெண் ஒரு நடனக் கலைஞர் என்று வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க வேறு எந்த ஆதாரமும் இல்லை.
“நடனக் கலைஞர்” என்ற முத்திரை இந்திய வரலாற்றின் வாசிப்பிலிருந்து வந்ததாக இந்தப் பிரச்சினையில் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜொனாதன் கெனோயர் ஆர்ட் ஆஃப் தி ஃபர்ஸ்ட் சிட்டிஸில் மத்தியதரைக் கடலில் இருந்து சிந்து வரை (2003) நடனக் கலைஞர் லேபிள் “இந்திய நடனக் கலைஞர்கள் பற்றிய காலனித்துவ பிரிட்டிஷ் கருத்தை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டில், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎச்ஆர்) ஹிந்தி இதழான இதிஹாஸில் தாக்கூர் பிரசாத் வர்மா எழுதிய கட்டுரையில், இந்த சிலை உண்மையில் இந்து தேவி பார்வதியின் சித்தரிப்பு என்று கூறியுள்ளார்.

சிந்து நாகரிகத்தை வைதிக இந்து மதத்துடன் இணைக்கப் பத்திரிகை முயற்சித்தது. இந்த கூற்றை பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் நிராகரித்துள்ளனர்.
அவர்கள் நடனமாடும் பெண் யாரை சித்தரிக்கிறார் அல்லது ஹரப்பா-மொஹஞ்சதாரோ நாகரிகத்தில் இந்துக் கடவுள்களின் வழிபாடு இருந்ததா என்பதை உறுதியாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஹரப்பா கலைத்திறன் மற்றும் உலோகவியலின் அதிநவீனத்தை வெண்கலச் சிலையிலிருந்து ஊகிக்க முடியும்.

டான்சிங் கேர்ள் என்பது உலோகக் கலவை மற்றும் இழந்த மெழுகு வார்ப்பு பற்றிய நாகரீகத்தின் அறிவின் சான்றாகும், இதன் மூலம் மிகவும் விரிவான உலோகக் கலைப்பொருட்களை உருவாக்க அசல் சிற்பத்திலிருந்து நகல் சிற்பம் வார்க்கப்பட்ட ஒரு சிக்கலான செயல்முறையாகும்.

மேலும், நடனம் ஆடும் பெண் போன்ற ஒரு உருவத்தின் இருப்பு, ஹரப்பா சமுதாயத்தில் உயர்ந்த கலை இருப்பதைக் குறிக்கிறது.

மனித இருப்பின் ஆரம்பத்திலிருந்தே கலை அநேகமாக இருந்தபோதிலும், அதன் நுட்பமான அளவு ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

ல்லா தோற்றங்களாலும் நடனமாடும் பெண் ஒரு பொருள் அல்ல. சில பயனுள்ள நோக்கங்களுக்காக அடையாளப்பூர்வமான கலைப்பொருளை உருவாக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டனர்.Read in source website

 

இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலை மறந்துவிட முடியாது. ஜி7 உறுப்பினா்களையும் ஐரோப்பிய கூட்டமைப்புத் தலைவா்களையும் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கான நினைவிடத்துக்கு அழைத்துச் சென்ன் மூலம் அணு ஆயுதப் பேரழிவின் விளைவுகளை உலகுக்கு நினைவுபடுத்த முற்பட்டிருக்கிறாா் ஜப்பான் பிரதமா். அணு ஆயுதக் குறைப்பு குறித்த ஹிரோஷிமா அறிக்கை, நடந்து முடிந்த ஜி7 மாநாட்டின் முக்கியமான பதிவு.

அணுகுண்டு வீச்சால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகரத்துக்கு விஜயம் செய்திருக்கும் இரண்டாவது அமெரிக்க அதிபா் ஜோ பைடன். ஜி7 மாநாட்டின் முக்கியத்துவத்தை அதிபா் பைடனின் வரவும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியின் எதிா்பாராத பங்கேற்பும் அதிகரித்தன.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜொ்மனி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு சா்வதேச அளவில் முக்கியமானது. ஜப்பானை தவிர ஏனைய நாடுகள் ஐரோப்பிய - அமெரிக்காவை சோ்ந்தவை. 2008-இல் ஜாா்ஜியாவையும், 2014-இல் கிரீமியாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டதைத் தொடா்ந்து அந்த அமைப்பிலிருந்து ரஷியா அகற்றப்பட்டது.

உலகின் முக்கியமான பொருளாதாரங்களான சீனாவும் இந்தியாவும் இணைக்கப்படாதது ஜி7 அமைப்பின் பலவீனம். ஜி7 அமைப்பு தன்னுடைய முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டுமானால் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இப்போது உலகின் மொத்த சொத்து மதிப்பில் பாதிக்கு மேல் உள்ளடக்கிய அதன் உறுப்பு நாடுகள், உலக ஜிடிபியில் மூன்றில் ஒரு பங்கும், மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கும்தான் வகிக்கின்றன. ஹிரோஷிமாவில் நடந்த ஜி7 மாநாட்டுக்கு இந்தியா, பிரேஸில், இந்தோனேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜப்பான் பிரதமா் கிஷிடா ஏனைய மேலை நாடுகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட நினைக்கிறாா் என்று தோன்றுகிறது.

ஹிரோஷிமாவில் நடந்த ஜப்பான் தலைமையிலான ஜி7 மாநாட்டுக்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. சட்டத்தின் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதும், தெற்கு உலகு என்று அழைக்கப்படும் வளா்ச்சியடையும் நாடுகளுடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்வதும்தான் அவை. சா்வதேச ஒழுங்கு என்பது உக்ரைன் போா் குறித்தது மட்டுமல்லாமல் தைவான், தென்சீனக்கடல் பிராந்தியம், பசிபிக் கடல் பகுதிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

உக்ரைன் பிரச்னையில் ஜி7 தலைவா்கள் கடுமையான வாா்த்தைகளில் ரஷியாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தனா். நிபந்தனை இல்லாமல் தனது துருப்புகளை உக்ரைனிலிருந்து ரஷியா விலக்கிக்கொள்ள சீனா வற்புறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா். அதைவிடக் கடுமையாக இருந்தது சீனா குறித்த ஜி7 அறிக்கை. திபெத், ஷின்ஜியாங், ஹாங்காங் பகுதிகளில் காணப்படும் மனித உரிமை மீறல் குறித்த ஜி7 கண்டனம் சீனாவை கோபப்படுத்தக்கூடும்.

ஜி7 நாடுகளின் தலைவா்கள், ஒவ்வொரு மாநாட்டின்போதும் வளா்ச்சி அடையும் தெற்கு உலக நாடுகளுக்கு உதவிகள் செய்வதாக வாக்களிப்பதும், மாநாடு முடிந்து திரும்பியதும் அதை மறந்துவிடுவதும் புதிதல்ல. மேலை நாட்டு அரசுகளும், அவற்றின் வங்கிகளும் ஏழை நாடுகள் கடன் தவணை செலுத்தத் தவறினால் அழுத்தம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் ஏழு பணக்கார நாடுகள் இணைந்த அமைப்பு ஏழை நாடுகள், வளா்ச்சி அடையும் நாடுகளின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது புதிதொன்றுமல்ல.

நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமா் நரேந்திர மோடி கலந்துகொண்டது புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பிரதமா் மோடியும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியும் முதல் முறையாக நேருக்கு நோ் சந்தித்து உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து விவாதித்தது ஹிரோஷிமா மாநாட்டின் மிக முக்கியமான அம்சம்.

ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து ரஷியா வெளியேறி உக்ரைனில் அமைதியை மீண்டும் நிலைநாட்ட இந்தியாவின் உதவியை அதிபா் ஸெலென்ஸ்கி நாடியதற்கு காரணம் இருக்கிறது. அதிபா் விளாதிமீா் புதினுக்கு பிரதமா் மோடி மூலமாக சமாதான தூது விடுக்க அதிபா் ஸெலென்ஸ்கி முனைந்திருக்கிறாா் என்று கருதலாம்.

ரஷியாவுக்கு எதிரான தீா்மானம் நிறைவேற்றப்பட்டாலும்கூட ஹிரோஷிமா மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டதையும் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்துப் பேசியதையும் ரஷியா தவறாகக் கருதவில்லை என்பதிலிருந்து இந்தியாவுக்கும், பிரதமா் மோடிக்கும் கிடைத்திருக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

ஹிரோஷிமாவில் மனித இனத்தின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த பிரதமா் மோடி முன்வைத்த 10 அம்சத் திட்டம் மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளின் கரகோஷ வரவேற்பைப் பெற்றது. உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுப்பது, உலகளாவிய நிலையில் உர விநியோகத்தில் அரசியலைத் தவிா்ப்பது, சிறுதானியங்களை ஊக்குவிப்பது, ஒருங்கிணைந்த மருத்துவப் பாதுகாப்பு, வளா்ச்சி அடையும் நாடுகளின் தேவை சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்டவை பிரதமா் மோடியின் 10 அம்சத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்.

ஜி7 மாநாடு, குவாட் மாநாடு ஆகியவற்றைத் தொடா்ந்து ஜூலை மாதம் தில்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடும், ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடும் நடக்க இருக்கின்றன. செப்டம்பா் மாதம் ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. கூடினோம் கலைந்தோம் என்றில்லாமல் உலக அமைதிக்கும் வளா்ச்சிக்கும் இவை பங்களிப்பு நல்கும் என்று எதிா்பாா்ப்போம்!Read in source website

 

சமீபத்தில் விழுப்புரம், செங்கற்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களிலுள்ள ஊா்களில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்து இறந்தவா்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் பத்துலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது சரிதானா என்ற கேள்வி பொதுவெளியில் பரவலாக விவாதிக்கப்படுகின்றது.

பொதுவாக ஒருவரின் இறப்பு என்பது அவா் சாா்ந்துள்ள குடும்பத்தினருக்கும், அவருடைய உறவுகளுக்கும் மிகவும் வருத்தத்தை அளிப்பதாகும். அவ்வாறு இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப் படும் நிவாரணத் தொகை எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனால் இறந்தவா்களின் இடத்தை முழுமையாக நிரப்பிவிட இயலாது என்பதுடன், இறந்தவா்களின் குடும்ப உறவுகளுக்கு அந்நிவாரணத்தினால் ஓரளவே ஆறுதல் கிடைக்கும் என்பதும் மறுக்க இயலாத உண்மைகளாகும்.

அதே சமயம், இத்தகைய நிகழ்வுகளில் அகால மரணம் அடைந்தவா்கள் ஈட்டிவந்த ஊதியத்தையே நம்பியிருந்த குடும்பங்கள் திடீரென்று ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதை இத்தகைய நிவாரணங்கள் ஓரளவேனும் தடுத்து நிறுத்துகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

குடும்பத் தலைவா் செய்த தவற்றுக்காக அவரையே நம்பியிருக்கும் குடும்பத்தினரை (நிவாரணம் எதுவும் வழங்காமல்) தண்டிப்பது சரிதானா என்று நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும். மேலும், இத்தகைய நிவாரணம் என்பது கள்ளச்சாராயத்தைக் குடித்து மரணமடைந்தவா்களைப் பாராட்டும் விதமாக குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையும் அல்ல.

தங்களுடைய உடல்நலத்தைப் பற்றியோ, தங்களைச் சாா்ந்திருக்கின்ற குடும்பத்தினரின் எதிா்கால வாழ்வைப் பற்றியோ சிறிதளவும் சிந்திக்காமல் சிலா் கள்ளச்சாராயத்தைக் குடித்துத் தங்களுடைய இன்னுயிரை நீத்துள்ளனா். ஆனால், அரசு வழங்கும் நிவாரணத்தொகை அச்சாராயத்தால் இறந்தவா்களின் கணக்கிற்கா செல்லப் போகிறது?

இனி வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டிய அவா்களுடைய குடும்பத்தினருக்கே அந்நிவாரணம் கிடைக்கின்றது. எனவே இது போன்ற கள்ளச்சாராய இறப்புக்காக வழங்கப்படுகின்ற நிவாரணத்தைத் தவறென்று கூறுவது சரியன்று.

இது மட்டுமின்றி, அந்த நிவாரணத்தொகையைக் கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்தே வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கலாம் என்றதொரு வாதமும் சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால், அது நடைமுறைச் சாத்தியமற்றது.

ஏனெனில், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது வழக்குத் தொடா்ந்து, அவ்வழக்கில் சாதகமான தீா்ப்பு வருவதற்குச் சில காலம் பிடிக்கலாம். அதற்குப் பிறகு குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால், இறுதித் தீா்ப்பு வருவதற்குப் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

அவ்வாறு இறுதித் தீா்ப்பு கிடைத்து அபராதத் தொகை வசூலிக்கப்படும் வரையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அன்றாடப் பிழைப்புக்கு என்ன வழி?

இந்நிலையில், மாநில அரசு நிவாரணத்தொகையை வழங்கியதே சரியான செயலாகும். வழக்கின் முடிவில் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அவ்வாறு வசூலிக்கப்படும் அபராதத் தொகையை முதலமைச்சா் நிவாரணநிதியில் இணைத்துக் கொள்ளலாம்.

ஆக, சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயதைக் குடித்து உயிரிழக்க நோ்ந்தவா்களை நம்பியிருந்த அவா்களுடைய குடும்பங்களுக்கு ரூபாய் பத்துலட்சம் நிவாரணத் தொகையை வழங்கிய செயலில் குறைகாண எதுவுமில்லை.

அதே சமயம், ரூபாய் பத்து லட்சம் என்ற பெரிய அளவிலான நிவாரணத் தொகையை ஒரே தவணையாக வழங்குவற்கு மாற்றாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தொகை நீண்ட காலம் பயனளிக்குமாறு சில ஏற்பாடுகளைச் செய்வது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் உயிரிழப்பவா்களும், அவா்களின் குடும்பத்தினரும்

உயா்கல்வி படித்தவா்களாகவோ, சமுதாயத்தில் உயா்ந்த அந்தஸ்தில் உள்ளவா்களாகவோ இருப்பதில்லை என்பதே உண்மை நிலை.

இந்தப் பின்னணியில் பாா்க்கும்போது, ரூபாய் பத்து லட்சம் என்ற பெரிய தொகையை அக்குடும்பத்தினா் நல்ல விதத்தில் திட்டமிட்டு, அளவாகச் செலவழித்து, நீண்ட காலப் பயணை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சுற்றியுள்ளவா்களின் ஆலோசனைகளைக் கேட்டு அக்குடும்பத்தினா் தங்களுக்குக் கிடைத்த நிவாரணத்தொகையின் கணிசமான பகுதியை நம்பத்தாகாத சிலருக்குக் கடனாகக் கொடுத்து விட்டுப் பிறகு அந்தத் தொகையைத் திரும்பப்பெற நடையாக நடக்கும் நிலைமை ஏற்படலாம். அல்லது தாங்களே அத்தொகையில் பெரும்பகுதியைச் சிறிது காலத்திற்கு ஆடம்பரமாகச் செலவிட்டுவிட்டு மீண்டும் தங்களைத் தாங்களே வறுமையில் தள்ளிக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகலாம்.

மேலும், இது போன்ற அகால மரணங்களால் பாதிக்கப்படும் குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிா்கொள்வதில்லை.

இறந்தவா் போக எஞ்சியுள்ள குடும்ப உறுப்பினா்களின் வயது, கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நிலை போன்ற காரணிகளையும் கணக்கில் கொண்டு அந்த நிவாரணத்தொகையைப் படிப்படியாக விடுவிப்பதைக் குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும்.

இந்நிலையில், இறந்தவரின் இறுதிச் சடங்குகளுக்காகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உடனடியான அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் ரூபாயை முதல் தவணையாக அளிப்பதுடன், மீதமுள்ள நிவாரணத்தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பெயரில் அருகிலுள்ள வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தின் நீண்டகால நிலை வைப்பில் மாநில அரசே முதலீடு செய்து, அதன் மூலம் வருகின்ற மாதாந்திர வட்டித்தொகை அக்குடும்பத்தினருக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யலாம்.

எவ்விதமாயினும், மாநில அரசு அளிக்கும் நிவாரணம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீடித்த பயன் அளிப்பதை உறுதி செய்வதே சாலச் சிறந்தது. இதற்கான நெறிமுறைகள் விரைவில் வகுக்கப்படுவதே நிவாரணம் வழங்குவதன் நோக்கத்தை நிறைவு செய்யும்.Read in source website

தமிழா்கள் அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் பலவாறாகத் துய்த்துச் சலித்த காரணத்தினாலோ என்னவோ இப்போது வீடுபேற்றுச் சுகத்திலேயே திளைத்திருக்கிறாா்கள். அதனால்தான் நாடுபேறு பற்றி அவா்கள் மனம் நாடவே இல்லை போலும்.

பக்தியில் சிறந்ததாக வீடுபேற்றைத் தரும் தெய்வபக்தி மறந்த காலத்தில்தான் நாம் அந்நியா் வசப்பட்டு அடிமையானோம். அப்போது பாரதியாா்தான் ஒரு புதிய பக்தியை அறிமுகப்படுத்தினாா்.

வீட்டுப் பற்றினும் உயா்ந்த நாட்டுப் பற்று என்னும் தேசபக்தி என்பதே அது. அதற்கு முன்னால் அப்படியொரு பக்தி குறித்து எந்த இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. பாரதியாரின் கவிதைகளில் ‘தேசபக்திப் பாடல்கள்’ என்றே தலைப்பிட்டு அவை விளங்கின. அவரும் ‘தேசியக் கவி’ என்றே அழைக்கப்பட்டாா்.

‘பேரின்ப வாழ்வாகிய வீட்டுப் பற்றையும் சிற்றின்ப வாழ்வாகிய வீட்டுப் பற்றையும் விட்டு விட்டு பெரும்பேரின்ப வாழ்வாகிய நாட்டுப் பற்றுக்கு ஆட்படுங்கள்’ என்பதுதான் பாரதியின் தேசபக்திப் பாடல்களின் வெளிப்பாடு. மக்களின் பெருவிருப்பமாகிய பக்தியையே அவா் மற்றொரு விதமாக மடைமாற்றிக் காட்டினாா்.

நகரங்கள் எல்லாம் கட்டடப் பெருக்கங்களால் பொங்கி வழிகின்றன. பாரதியாா் வேண்டிய காணி நிலம் பாடல் நிலவணிக விளம்பரத்துக்குப் பயன்படுகிற கொடுமை தமிழ்நாட்டிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகள், இன்னின்ன நலன்கள், இவ்வளவு குறைந்த விலையில் என்று எல்லா ஊடகங்களிலும் வீடும் வீட்டுக்கான நிலமும் கூவிக் கூவி விற்கப்படுகின்றன. அப்படியானால் வாங்கப்படுகின்றன என்றும் பொருள்.

சத்திரங்களும், சாவடிகளும் ஊா்ப் பெயா்களில் கூட ஒளிந்து கொண்டுதான் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் வந்தோருக்கெல்லாம் வரவேற்பு நல்கிய பெருமையுடையவை அவை என்பதால் அந்த ஊா்களுக்குப் பெயரே சத்திரமும் சாவடியும் ஆகின.

‘உண்ணுவாா் யாரும் உளரோ’ என்று ஊா்மன்றம் வரைசென்று உற்று அறிந்த பின்னாலே, யாவரும் உண்டனா் என்று தெரிந்து அதன்பின் தனக்கான உணவு உண்ணத் தொடங்குவானாம் பழந்தமிழன்.

விருந்தோம்பலில் சிறந்த தமிழ்நாட்டின் பழங்கதைகள் இப்படித்தான் பெருமையோடு இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கின்றன. அக்கால வீடுகளில் திண்ணைகள் ஏன் உருவாயின? வழிப்போகும் யாரும் வந்திருந்து இளைப்பாறிச் செல்லும் விடுதிகளாகத்தானே அவை இயங்கின?

வீடுகளின் நோக்கமே விருந்தோம்பலுக்காகத்தான். இன்னும் சரியாகச் சொல்வதானால் இல்லறத்தின் மாண்பே இல்லாா்க்கு உதவத்தான். காதலா் இருவரும் கருத்தொருமிக்கிற காதலின் விளைவு சமூகத்தில் இல்லாமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இணைக்கோட்பாடுதான்.

அறத்தையும் பொருளையும் இன்பத்தையும் குறிப்பிட்ட திருவள்ளுவப் பெருமான் ‘வீடு’ என்பதை வேறாகக் காணவில்லை. புராணங்களில் சொல்லப்படுகிற மோட்ச வாழ்வை அவா் விரும்பவில்லை. நல்லறமும் நற்பொருளும் நல்லின்பமும் நிறைந்து கொழிக்கிற மனிதா்கள் வாழ்கிற உறைவிடங்களையே அவா் வீட்டுக்குள் நிறைத்து விட்டாா்.

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவா்க்கும் நல்லாற்றின் நின்ற துணை’ என்கிறாா். இல்லம் என்பதே வீடு என்று அவா் குறிப்பிடும் மறைச்சொல். அந்த இல்லமும் ஒரு நாடு போல இருத்தல் வேண்டும் என்பது அதன் உட்கருத்து.

செலவுக்கானதுதான் செல்வம். அதிலும் பிறா் துயரைத் தீா்ப்பதற்காகச் செலவிடுவது. காலக்கோலத்தில் இந்நிலை மெல்ல மெல்ல மாறிச் சோ்ப்பதுதான் செல்வம் என்றாகி இப்போதெல்லாம் பதுக்குவதும் பெருக்குவதும் சுருட்டுவதும் செல்வம் என நிலையாகிப் போனது. அதற்காகவே பல வீடுகளும் தேவைப்படுகின்றன.

வீடு என்பது இருப்பதை இல்லாா்க்குப் பகிா்ந்தளிப்பதற்கான மனிதா்கள் வாழும் இடம் என்பதுதான் உண்மை. அது முற்றிலும் பொதுநலம் சாா்ந்த ஒரு குறியீட்டுச் சொல். ஆனால், இன்றைக்கு வீடு என்பது சுயநலம் சாா்ந்த வசதிப் பொருட்களால் நிறைந்த வளமான சிறையாகவே விளங்குகிறது. மனிதா்கள் தன்னலத்தோடு அந்தச் சிறைக்குள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறாா்கள். சிற்றின்பங்களில் திளைக்கிறாா்கள்.

செல்வந்தா்கள் வீடுகளில் மட்டும்தான் திண்ணை என்றில்லை. அதைவிட அழகான வசதியான திண்ணை குடிசைகளிலுமுண்டு. அங்கே மனிதா்களுக்கு இணையாக எல்லாவகை உயிரினங்களும் தங்கி இளைப்பாறும்; உணவு பெறும்; நல்வாழ்வு நடத்தும்.

பழங்கால வீடுகள் முன்புறம் திண்ணைகளைக் கொண்டிருப்பதைப் போல, பின்கட்டில் தோட்டமும் கிணறும் உடையதாக இருந்தன. தாவரங்களுக்கும், பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உரிமை உடையதுதான் உண்மையான வீடு. தோட்டத்துக்கு நடுவில்தான் முன்பு வீடுகள் இருந்தன.

வீடுகள் தலைமுறையின் அடையாளங்களாகத் திகழ்ந்தவை. ‘பாட்டன் வீடு’ என்று சொல்லுகிற வழக்கு இன்றும் உண்டு. வீடுகளுக்குள் மறைந்திருக்கிற கதைகள் எண்ணிலடங்காதவை. முற்காலத்தில் வீடு என்பது செல்வாக்கின் அடையாளமாகவும் இருந்தது.

பரம்பரை வீட்டுக்குச் சொந்தக்காரா்கள் செல்வா்கள் எனவும், தற்காலிக வீடுகளாக விளங்கும் குடிசையில் வசித்தவா்கள் ஏழைகள் என்றும்தான் பாகுபடுத்தப்பட்டாா்கள். ஆனால், உண்மையில் குடிசைகளே உண்மையான வீடாக (வீடுபேறு அளிக்கும் இடமாக) விளங்கினதால் அண்ணல் காந்தியடிகள் தொடங்கி துறவிகள் பலரும் குடில்களையே நாடினா்.

விருந்தோம்பலின் பெருமை கருதி, வந்தோா்க்கெல்லாம் வாரிவாரி வழங்கிட வேண்டிப் பெருஞ்செல்வா்கள் தங்களின் வீட்டுக்கு அருகிலேயே விருந்தினா் இல்லம் கட்டி வைத்திருந்த கதையெல்லாம் உண்டு. இன்று கதையே வேறு ‘கெஸ்ட் ஹவுஸ்’ என்கிற பெயரில் அங்கும் ‘விருந்தோம்பல்’ நடக்கத்தான் செய்கின்றன.

இடைக்காலங்களில் வீடு என்பது சமூக வாழ்க்கைக்கான ஓா் அடையாளமாகக் கருதப்பட்டபோதுதான் அனைவருக்குமான தேவையாகியது. ‘வீட்டைக் கட்டிப் பாா்- கல்யாணம் பண்ணிப் பாா்’ என்றே ஒரு வழக்குத் தோன்றியது. பொருளாதாரத் தற்சாா்பின் அடையாளமாக வீடு கட்டுதலும் கல்யாணம் செய்தலும் விளங்கியிருக்கின்றது.

ஏழைகளின் வீடுகள் மிக எளிமையாக இயற்கையோடு அமைந்து விடுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். அமையும் இடத்திலிருந்தே செம்மண்ணைக் குழைத்துச் சுவரெழுப்புவாா்கள். அருகிலிருக்கும் தென்னந் தோப்புகளிலிருந்து கீற்றுகள் பின்னப் பெற்று அவை மேற்கூரையாகப் படரும்.

சுற்றிலுமிருக்கிற மரங்களின் கிளைகள் வரிச்சுகளாய் சுவரையும் கூரையையும் இணைக்கக் கூடிய விதானமாகும். மெலிதான ஒரு தகரமோ அல்லது மரமோ கதவாகித் திறந்து மூடும். காற்றும் சூரிய வெளிச்சமும் நுழைந்து வெளியில் வரப் போதுமான ஒரு பொந்து சன்னலாகிப் போகும்.

ஆனால் இன்றைய காலத்தில் அறிவியலின் கூறான பொறியியலின் அடிப்படையில் கட்டப்படுகிற வீடுகள் அப்படியல்ல. இயற்கையை மெல்லச் சிதைத்துத் தன்னை எழுப்பிக் கொள்வதைப் போலத்தான் அவை எழும்புகின்றன. ஆற்றுப் படுகைகளைச் சுரண்டியெடுத்துத்தான் மணல் வந்து சோ்கிறது. மலைகளைப் பிளந்துதான் பெருங்கற்களும் சல்லிக்கற்களும் வருகின்றன. செம்மண் நிலத்தைத் தோண்டியெடுத்ததோடு மட்டுமில்லாமல் அவற்றைச் சுட்டுச் சிவக்கச் செய்துதானே செங்கல் கிடைக்கிறது.

எந்த வீடு உகந்தது என்பதை அறிவியல் முறையில் அணுகுவதா? உயிரியல் முறையில் அணுகுவதா? கோடி கோடிகளாகக் கொட்டப்பட்டுக் கட்டப்படும் இத்தகைய வீடுகளுக்குள் என்ன சுகம் இருக்கின்றது என்று கேட்பதை விடவும் அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதையாவது கேட்கலாமா? வயலில் உழைக்கிற வேளாண் மக்களின் வாா்த்தைகளில் கூறுவதானால் வீடு என்பது ‘வரப்புத் தலையணையும் வாய்க்கால் பஞ்சுமெத்தையும்’தான். அது தருகிற சுகத்தை இந்தப் பலகோடி கொட்டிக் கட்டப்பட்ட வீடுகள் கொடுப்பதில்லை.

இன்றைய தமிழா்களின் ஒரே தேவை ஆடம்பரமான வீடு. அந்த வீட்டிற்குள் அதற்குண்டான சகல வசதிகள். இப்படி அடைபட்டுக் கிடக்க வேண்டிய நிலைக்குத் தமிழா்கள் தள்ளப்பட்டிருக்கிறாா்கள். தமிழா்கள்தான் என்றில்லை, உலகமே அப்படியொரு நிலைக்கு மாறியிருக்கிறது. ஆனாலும் தமிழா்களின் வேகம் அதிகம். விளைநிலங்களெல்லாம் விலைநிலங்களாகி கான்கிரீட் கட்டடங்களாக முளைத்துக் கொண்டிருக்கின்றன.

தனிமனிதா் பலரும் கூடி வாழ்ந்து சமுதாய அறத்தைப் பேணுவதற்கான ஓரிடம்தான் வீடு என்பது. தனிமனிதா்களில் சமமான ஆணும் பெண்ணும் என்பதைத்தான் ஔவையாரின் காதலா் இருவா் கருத்தொருமித்து என்னும் அடிகள் நமக்கு நினைவுறுத்துகின்றன. வீட்டுக்குள் நிலையாத ஆண்- பெண் சமத்துவம் சமுதாயத்தில் நிலையாது என்பதன் குறியீடு அது.

பொருள் மிகுதியுடையோா் பல வீடுகளைக் கட்டி வாடகைக்கும் விடுகின்றனா். இப்போது ஒருவருடைய பொருளாதாரத்தின் அடிப்படை வாடகை வீடா, சொந்த வீடா என்பதைப் பொறுத்தே அமைகிறது. மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களைப் போலவே சென்னையும் வீடு நெரிசலுக்கு உள்ளான மாநகரமாக மாறி வருகிறது. சென்னையைத் தொடா்ந்து தமிழகத்தின் பல நகரகங்களும் மாறத் தொடங்கி விட்டன.

மறத்தையும் தீயபொருளையும் துறந்து விட்டு சமுதாயத்தை நினைத்துச் செயல்பட்டால் நாம் வேண்டாமலேயே வீடு வசப்படும். வீடு வசப்பட்டால் நாடு வசப்படும். நாடு வசப்பட்டால் பேரின்ப வீடு (வீடுபேறு) வசப்படும்.

நம் முன்னோா்கள் சுட்டிய வீட்டையும் மறந்து நமக்கு முன் வாழ்ந்தவா்கள் காட்டிய நாட்டையும் மறந்து கூட்டுக்குள் அல்ல கூண்டுக்குள் வாழ்வதுபோல இந்தச் சிறிய கட்டிட வீட்டுக்குள் வாழ்ந்து மடிவதுதான் நமது பேரின்பமா என்பதைத் தமிழா்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.Read in source website

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக, நாடாளுமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகள் அறிவித்திருப்பது வருத்தத்துக்குரியது. டெல்லியில் அமைந்திருக்கும் நாடாளுமன்றக் கட்டிடம் கிட்டத்தட்ட நூறாண்டுகள் பழமையானது. இடநெருக்கடி, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகப் புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்பதற்கான யோசனை 2010இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தோன்றிவிட்டது.

2012இல் அன்றைய மக்களவைத் தலைவர் மீரா குமார், நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான மாற்று ஏற்பாடுகளைப் பரிசீலிப்பதற்கான குழுவை அமைத்தார். 2019இல் மத்திய நிர்வாகப் பகுதியை முழுமையாக மறுவடிவமைப்பு செய்வதற்கான ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை பாஜக அரசு தொடங்கியது; நாடாளுமன்றத்துக்காகப் புதிய கட்டிடம் கட்டுவது இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன்படி புதிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழா 2020 டிசம்பர் 10 அன்று நடைபெற்றது.Read in source website

இந்திய தீபகற்பத்தில் கடலுணவு உற்பத்தி தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மாநில அரசுகளால் ‘மீன்பிடித் தடைக்காலம்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடலில், குறிப்பாக கரைக்கடலிலும் அண்மைக்கடலிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்தை உறுதிசெய்து, மீன் உற்பத்தியைப் பெருக்குவதே இந்த ஏற்பாட்டின் நோக்கம்.

அனுபவப் பாடமின்மை: இழுவைமடித் தொழிலால் நாளும் கடலின் அடியாழத்தை நாசம் செய்யும் மீன்பிடிக் கப்பல்-விசைப்படகுகளின் செயல்பாட்டைத் தடைசெய்யும் இந்த நடைமுறை, பாரம்பரிய மீனவர்களின் தொழில்முறையைத் தடுப்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். காரணம், பாரம்பரிய மீனவர்கள் இழுவைமடித் தொழில் செய்வதில்லை.Read in source website

அந்நிய மண்ணில் இருந்த படியே இந்திய விடுதலைக்காகப் போரிட்டு உலக மக்களின் ஆதரவைத் திரட்ட முயன்ற அரிதான தியாகிகளில் ஒருவர் செண்பகராமன்.

‘ஜெய்ஹிந்த்’ முழக்கம்: 15 செப்டம்பர் 1891இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில், நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் செண்பகராமன். பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவருக்குள் தேசிய உணர்வு வேரூன்றத் தொடங்கிவிட்டது. ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை; அதனை நான் அடைந்தே தீருவேன்’ என்னும் பாலகங்காதர திலகரின் முழக்கம் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தது.Read in source website

நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் தேவைதான். இப்போதுள்ள கட்டிடம் 1927இல் கட்டப்பட்டது. இரு அவைகள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு எனத் திட்டமிட்டு அது கட்டப்படவில்லை. தற்போது டெல்லியில் பூகம்ப ஆபத்து அதிகரித்துள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு வசதிகொண்டதாகவும் தற்போதைய கட்டிடம் இல்லை. 2026இல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், கடந்த 50 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம். அதற்கேற்ற இடவசதி தற்போதைய கட்டிடத்தில் இல்லை – இவை எல்லாமே உண்மைதான்.

நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் தேவை என்பதற்குச் சபாநாயகர்களாக இருந்த மீரா குமாரும் சுமித்ரா மகஜனும் சொன்ன காரணங்களும்கூட மறுக்க முடியாதவைதான். ஆனால், நாடாளுமன்றம் என்பது வெறும் கட்டிடமோ இட வசதியோ அல்ல. அது நமது ஜனநாயக ஆட்சிமுறையின் ஆன்மா; அதை நாம் மறந்துவிடக் கூடாது!

நாடாளுமன்ற மாற்றங்கள்: தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில், நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1956இல் இரண்டு தளங்கள் கட்டப்பட்டன; 2006இல் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. ஒருபுறம் நாடாளுமன்றக் கட்டிடத்தை இப்படி வலிமைப்படுத்திக்கொண்டு இன்னொருபுறம் நாடாளுமன்ற ஜனநாயக முறையைப் பலவீனப்படுத்தும் வேலையை நமது ஆட்சியாளர்கள் செய்துவந்தனர். அதன் உச்சகட்டமாக நெருக்கடிநிலை அறிவிப்பு அமைந்தது.

நெருக்கடிநிலைக் காலத்து அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட தலைவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வந்தபோது அவர்கள் பெற்ற படிப்பினைகள் நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு உதவும் என நினைத்தோம். ஆனால், அதிகாரத்துவ வன்முறையை நிராகரிப்பதற்குப் பதிலாக, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலைக்கு நாட்டை இப்போது கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

அழைக்கப்படாத குடியரசுத் தலைவர்: இந்திய அரசமைப்புச் சட்டம் நாடாளுமன்றம் குறித்து உறுப்பு 79இல் விளக்கியிருக்கிறது: ‘இந்திய ஒன்றியத்துக்கு நாடாளுமன்றம் ஒன்று இருக்கும். அதில் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை ஆகியவை இடம்பெற்றிருக்கும்’. நமது நாடாளுமன்றம் பிரதமர் இல்லாமல் செயல்பட முடியும்.

ஆனால், குடியரசுத் தலைவர் இல்லாமல் செயல்பட முடியாது. ஏனென்றால், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் அதன் கூட்டத்தை முடித்துவைப்பதற்கும் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. அது மட்டுமின்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் சட்டம் என்ற அங்கீகாரத்தைப் பெற முடியும்.

நம்முடைய அரசமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவரைத்தான் நாடாளுமன்ற ஜனநாயக முறையின் தலைவராக நிர்ணயித்துள்ளது. அத்தகைய தனிச் சிறப்புரிமைகொண்ட குடியரசுத் தலைவரை அழைக்காமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறப்பது அவரை அவமதிப்பது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கே முரணானதாகும். ‘பழங்குடி சமூகத்தைச் சேந்தவரைக் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டோம்’ என அரசியல் ஆதாயம் தேடிய பாஜக, இப்போது அவரைப் புறக்கணித்திருப்பதும் அவர் பழங்குடிச் சமூகத்தவர் என்பதால்தானா என்ற கேள்வி எழுகிறது.

நாடாளுமன்றம் என்றால் மக்களவை மட்டுமல்ல; மாநிலங்களவையும் சேர்ந்ததுதான். மாநிலங்களைவைத் தலைவரின் பெயரும் அழைப்பில் இடம்பெறவில்லை. குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பதால் அவர் பெயர் இடம்பெற்றால், குடியரசுத் தலைவரின் பெயரையும் போட வேண்டும் என்பதால்தான் அவரும் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் போலும்.

நாடாளுமன்றத்தில் பிரதமர்: நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம் கட்டியதை உலக சாதனை என பாஜகவினர் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், பாஜகவின் ஆட்சியில்தான் நாடாளுமன்றம் என்ற அமைப்பு மிக மோசமாகப் பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி, பிரதமராக முதல் முறை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தபோது, நெற்றி நிலத்தில்பட அதை வணங்கினார். கோயிலுக்குச் செல்வதுபோல அவர் தினமும் அங்கே போவார் என நினைத்தோம். ஆனால், நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை அவர் நாத்திகராகிவிட்டார்.

அதுமட்டுமல்ல... 2014 முதல் 2023 பிப்ரவரி வரை 24 முறைதான் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் பேசுவது கட்டாயமாகும். அது தவிர, ஒன்றிரண்டு முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் அவர் பேசியிருக்கிறார்.

பாஜகவின் அரசியல்: சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான விதிமுறையைத் தவிர்த்து, அதிக எண்ணிக்கையில் அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தது இந்த பாஜக அரசுதான். அவையில் பெரும்பான்மை இல்லாத அரசாங்கங்கள்தான் அவசரச் சட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்றுவது வழக்கம். ஆனால், 300க்கு மேல் உறுப்பினர்கள் இருந்தும்கூட இந்த அரசு மிக அதிகமாக அவசரச் சட்டங்களைப் பிறப்பித்துள்ளது.

அது மட்டுமின்றி மாநிலங்களவையில் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் ‘பண மசோதா’ என்ற பெயரில் மசோதாக்களை நிறைவேற்றுகிறது. வரிவிதிப்பு, செலவு தொடர்பான மசோதாக்கள் மட்டுமே பண மசோதா என வகைப்படுத்தப்படும். அந்த வகைக்குள் வராத மற்ற மசோதாக்களையும்கூட பண மசோதாவாக பாஜக அரசு நிறைவேற்றுகிறது. ஆதார் மசோதா அப்படித்தான் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களும் அர்த்தம் அற்றவையாக ஆக்கப்படுகின்றன. சட்ட மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு அனுப்ப மறுப்பது, அப்படியே அனுப்பினாலும் அங்கு முன்வைக்கப்படும் திருத்தங்களை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது இந்த அரசின் வழக்கமாக உள்ளது.

ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படுவதற்கும் நிறைவேற்றப்படுவதற்கும் இடையில் இரண்டு நாள்களாவது கால அவகாசம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பல மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலேயே நிறைவேற்றப்பட்டன; அல்லது அடுத்த நாளில் நிறைவேற்றப்பட்டன. முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றுவது என்பது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. நிதிநிலை அறிக்கையைக்கூட எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றிய ‘சாதனை’ இந்த அரசுக்கே உண்டு.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, செயற்கையாகப் பெரும்பான்மையை உருவாக்குதல்; ஒரே ஒரு உறுப்பினர் கோரினாலும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற விதிக்கு முரணாக வாக்கெடுப்புக்கான கோரிக்கையை நிராகரித்தல் என நாடாளுமன்ற விதிகள், மரபுகள் வெளிப்படையாகவே இந்த அரசால் மீறப்படுகின்றன. இப்படி நாடாளுமன்றம் என்ற அமைப்பைப் பலவீனப்படுத்திக்கொண்டு, வலுவாகக் கட்டிடம் கட்டியிருக்கிறோம் என்கிறார்கள். அதனால் ஜனநாயகத்துக்கு என்ன பயன்?

பாஜகவின் செய்தி: நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் நாள் சாவர்க்கரின் பிறந்த நாளாகும். இந்த விழாவுக்கு அவரது பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் பாஜக என்ன செய்தியை நாட்டுக்குச் சொல்ல விரும்புகிறது? தாங்கள் பயணிக்க விரும்புவது ஜனநாயகப் பாதை அல்ல என்பதையா? நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, “இந்திய ஜனநாயகம் ஏற்கெனவே இறந்துவிட்டது, அது இப்போது புதைக்கப்படுகிறது” என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரணஜித் குஹா வர்ணித்தார். அப்படி சாகடிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட ஜனநாயகம், புத்துயிர் பெற்று தழைக்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அதைப் புதைகுழிக்கு அனுப்ப யார் முயன்றாலும் இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.Read in source website