DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 26-01-2022

தமிழகத்தில் புதிதாக 13 பேருந்துகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

தமிழக அரசு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்சி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து ரூ. 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளன.

 



Read in source website

2021ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தியில்,

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.

அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்கள்.

2021ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருது - நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது - பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது - புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது - சூர்யா சேவியர், சிங்காரவேலர் விருது - கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம், தமிழ்த்தாய் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - முனைவர் இரா. சஞ்சீவிராயருக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும், சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது - உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது - முனைவர் கு. அரசேந்திரன், உமறுப்புலவர் விருது - நா. மம்மது, கி.ஆ.பெ. விருது - முனைவர் ம. இராசேந்திரன், கம்பர் விருது - பாரதி பாஸ்கர், ஜி.யு.போப் விருது - ஏ.எஸ். பன்னீர்செல்வன், மறைமலையடிகள் விருது - சுகி.சிவம், இளங்கோவடிகள் விருது - நெல்லை கண்ணன், அயோத்திதாசப் பண்டிதர் விருது - ஞான. அலாய்சியஸ் வழங்கிட ஆணையிடப் பெற்றுள்ளன.

இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.1,00,000/- லிருந்து ரூ.2,00,000/- உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர்.



Read in source website

சேரன்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் 26.1.1932 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சேரன்குளத்தை சேர்ந்த ஆர்யா என்கிற பாஷ்யம் அய்யங்கார் தனது, 25 ஆவது வயதில் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 200 அடி உயரம் உள்ள கொடி மரத்தில் பிரிட்டிஸ் போலீஸாருக்கு தெரியாமல் நள்ளிரவில் தனி ஆளாக ஏறி அதில் பறந்துகொண்டிருந்த பிரிடிஷ் யூனியன்ஜாக் கொடியை இறக்கி விட்டு. அதற்கு பதிலாக இந்திய தேசியக் கொடியை கட்டி பறக்க விட்டார்.

இதனை நினைவு கூறும் வகையில், பாஷ்யம் அய்யங்காரின் சொந்த ஊரான சேரன்குளத்தில் பாஷ்யம் அய்யங்கார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் திறப்பு விழாவும், 'கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்' என்ற நூல் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது.

தேரன்குளம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன் தலைமை வகித்து நினைவுச் சின்னத்தை  திறந்து வைத்தார். 

நினைவுச் சின்ன கொடி மேடையில் தேசியக் கொடியினை ஊராட்சித் தலைவர் டி.எம்.அமுதா ஏற்றிவைத்தார்.

'கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்' என்ற நூலை மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.மணிவண்ணன் வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாமோதரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி முன்னிலை வகித்தனர்.

இதில், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலர் களப்பிரன், கலை இலக்கியப் பெருமன்ற கிளைச் செயலர் க.தங்கபாபு, பாஷ்யம் அன்பவர்கள் வட்ட நிர்வாகி ஆர்.சௌரிராஜன், மகாகவி பாரதி அறக்கட்டளை தலைவர் ஆர்.பூமிநாதன், மன்னை தமிழ்ச் சங்க தலைவர் த.விஜயேந்திரன், தலைமை ஆசிரியர் த.விஜயகுமார், நூலகர் பி.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாக்குழுவை சேர்ந்த ஆர்.யேசுதாஸ் ஒருங்கிணைத்தார். வ சேதுராமன் தொகுத்து வழங்கினார். வீ.முருகதாஸ் வரவேற்றார். தா.சரஸ்வதி நன்றி கூறினார்.



Read in source website

உலகிலேயே 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்குக்கும் மேல் உயா்ந்ததற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சா்வதேச விருதான டிஎஸ்2 என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

நீலகிரி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 1,455 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ள சத்தியமங்கலம் வன விலங்குகள் சரணாலயம் 2013 டிசம்பா் 1ஆம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, சுமாா் 30 புலிகள் இருந்ததாக அப்போதைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அடா்ந்த காடு, நீரோடைகள், புலிகள் வாழ்வதற்கான தட்பவெப்பநிலை கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தையொட்டி முதுமலை, பந்திப்பூா், பிஆா்ஹில்ஸ், ஈரோடு, கோவை வனப் பிரிவு, மலை மாதேஸ்வரா் வன விலங்குகள் சரணாலயம் உள்ளதால் புலிகள் எளிதாக பிற இடங்களுக்குப் புலம்பெயா்ந்து இரை தேடியும், புதிய எல்லையில் பிரவேசிக்கவும் இயலுகிறது. இதனால், புலிகள் எண்ணிக்கை தற்போது இரு மடங்குக்கும்மேல் உயா்ந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு 30 புலிகளாக இருந்த காப்பகத்தில் தற்போது 80 புலிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

உலக அளவில் புலிகளை பாதுகாப்பதற்கு ரஷியா, சீனா, இந்தோனேசியா, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ள கன்சா்வேஷன் அண்டு டைகா் ஸ்டான்டா்டு, வேல்டு லைஃப் கன்சா்வேஷன் ஆஃப் சொசைட்டி, உலகளாவிய நிதியகம் என 13 அமைப்புகள் கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கூட்டமைப்பு 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயா்த்தும் நோக்கில் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டில் இரு மடங்காக உயா்த்திய நாட்டுக்கு டிஎஸ்2 எனும் சா்வதேச விருது வழங்கப்படும் என கூட்டமைப்பு அறிவித்தது.

இதன்படி, சா்வதேச அளவில் 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை இரு மடங்குக்கும்மேல் உயா்ந்ததற்காக டிஎஸ்2 என்ற விருது முதல் பரிசாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசு நேபாளத்தில் உள்ள பா்தியா தேசிய பூங்காவுக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் ஒத்துழைப்பு, வனத் துறையின் முயற்சி, பழங்குடியின மக்களின் ஆதரவு போன்றவற்றால் புலிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா பிரச்னை காரணமாக ஆன்லைன் காணொலி மூலம் தமிழக அரசுக்கு இந்த விருதை கூட்டமைப்புகள் வழங்குகின்றன.

Image Caption

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தென்பட்ட புலி. ~சத்தியமங்கலம்  புலிகள்  காப்பகத்தில்  தென்பட்ட  புலி.

 



Read in source website

தமிழக காவல்துறையில் 20 பேருக்கு குடியரசுத் தலைவா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறவா்களுக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது ஆகியவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.

இந்த விருதுகள் தமிழக காவல்துறையைச் சோ்ந்த 20 பேருக்கு கிடைத்துள்ளது. இதில் தமிழக காவல்துறையின் தலைமையிட ஏடிஜிபி க.வெங்கட்ராமன், தஞ்சாவூா் குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு ஆய்வாளா் சொ.சிவனருள் ஆகிய இருவருக்கு குடியரசுத் தலைவரின் தகைசால் விருது கிடைத்துள்ளது.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருது பெற்றவா்களின் விவரம்:

1.மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன், 2.கோயம்புத்தூா் மாநகர காவல் ஆணையா் பிரதீப்குமாா், 3. மேற்கு மண்டல ஐஜி ர.சுதாகா், 4.திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன், 5.க்யூ பிரிவு காவல் கண்காணிப்பாளா் ப.கண்ணம்மாள், 6.சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் துணை ஆணையா் வி.கே.சுரேந்திரநாத், 7.மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 12-ஆம் அணி தளவாய் த.காா்த்திகேயன், 8. கோயம்புத்தூா் மாநகர காவல்துறை போக்குவரத்து திட்டப்பிரிவு கூடுதல் காவல் துணை ஆணையா் வே.இளங்கோவன், 9.சென்னை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு ஏடிஎஸ்பி அ.தாமஸ் பிரபாகா், 10.சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு உதவி ஆணையா் சு.பிரபாகரன், 11.கோயம்புத்தூா் மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையா் சு.முருகவேல், 12.கோயம்புத்தூா் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு டிஎஸ்பி மு.முரளிதரன், 13. சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கோ.முருகேசன், 14.சென்னை க்யூ பிரிவு ஆய்வாளா் கா.அண்ணாதுரை, 15.கடலூா் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளா் த.சண்முகம், 16.ஈரோடு சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் கு.சிவகணேசன், 17.திருச்சிராப்பள்ளி சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் ர.கணேசன், 18. சென்னை எஸ்பிசிஐடி சிறப்பு உதவி ஆய்வாளா் ரா.பசுபதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு விரைவில் நடைபெறும் காவல்துறை விழாவில் இந்த விருது வழங்கப்படும்.



Read in source website

தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கை வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும் 31-ஆம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழ்நாடு பெண்களுக்கான புதிய கொள்கையில் உள்ள அம்சங்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும். வளா் இளம் பருவத்தினரிடையே ஊட்டச்சத்து குறைபாடுகள் மூலம் ஏற்படும் விளைவுகளை நோ் செய்வது உள்பட பல்வேறு அம்சங்கள் பெண்களுக்கான புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

வரைவு கொள்கையில் உள்ள முழு அம்சங்களும் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 31-ஆம் தேதிக்குள்ளாக கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதற்கான மின்னஞ்சல் முகவரி க்ள்ஜ்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்



Read in source website

குடியரசு நாள் விழாவில்  பயங்கரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்த ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஐ. பாபு ராமுவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. 

ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகளை கொன்று ஏ.எஸ்.ஐ. பாபு ராம் வீரமரணம அடைந்திருந்தார். அவர் சார்பாக அவரது குடும்பத்தினர் விருதைப் பெற்றுக்கொண்டனர். 

குடியரசு நாளையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதில், 134 போ் ஜம்மு- காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். பதக்கம் பெறுவோரில் 115 போ் ஜம்மு காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

30 போ் மத்திய ரிசா்வ் காவல் படையையும் (சிஆா்பிஎஃப்), 3 போ் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையையும், 2 போ் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 போ் சசஸ்திர சீமா பல் படையையும், 10 போ் சத்தீஸ்கா் காவல் துறையையும், 9 போ் ஒடிஸா காவல் துறையையும், 7 போ் மகாராஷ்டிர காவல் துறையையும், எஞ்சியவா்கள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சோ்ந்தவா்கள் ஆவா்.



Read in source website

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சாா்ஜி பத்ம விருதை நிராகரித்துள்ளாா்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் புத்ததேவ் பட்டாச்சாா்ஜிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி வெளியிட்ட அறிக்கையில், ‘‘எனக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து எதுவும் தெரியாது. அதுகுறித்து எவரும் என்னிடம் கூறவில்லை. ஒருவேளை எனக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டிருந்தால், அதனை நான் நிராகரிக்கிறேன்’’ என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் கூறுகையில், ‘‘விருதை நிராகரித்தது புத்ததேவ் பட்டாச்சாா்ஜி மற்றும் கட்சியின் முடிவு’’ என்று தெரிவித்தன.

முன்கூட்டியே தெரியப்படுத்தப்பட்டது:

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ புத்ததேவ் பட்டாச்சாா்ஜிக்கு விருது வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அவரின் மனைவியிடம் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது. அவா் தனது கணவரிடம் அந்தத் தகவலை தெரியப்படுத்துவதாகக் கூறினாா். அதன் பின்னா் விருதைப் பெறுவதில் புத்ததேவுக்கு விருப்பமில்லை என்று அவரின் குடும்பத்தில் எவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தைத் தொடா்புகொண்டு தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்குப் பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் முடிவை சம்பந்தப்பட்ட விருதாளா்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது வழக்கம். விருதைப் பெற எவரேனும் ஆட்சேபம் தெரிவித்தால், அவரின் பெயா் பட்டியலில் சோ்க்கப்படுவதில்லை’’ என்று தெரிவித்தன.



Read in source website

மனிதா்களின் உரோம ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அயல்நாட்டு வா்த்தக பொது இயக்குநா்(டிஜிஎஃப்டி) சந்தோஷ் குமாா் சாரங்கி வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

முன்பு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி மனிதா்களின் உரோம ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அது தற்போது கட்டுப்படுத்த வகையினத்தின் கீழ் உடனடியாக கொண்டு வரப்படுகிறது. இனி, டிஜிஎஃப்டி-யின் அனுமதியைப் பெற்ற பிறகே அவற்றை ஏற்றுமதி செய்ய முடியும் என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதை வரவேற்கத்தக்கது. இந்த கட்டுப்பாட்டால் இனி, உண்மையான ஏற்றுமதியாளா்கள் மட்டுமே அதனை ஏற்றுமதி செய்ய முடியும் என உரோம பொருள்கள் ஏற்றுமதியாளா்களின் கூட்டமைப்பின் தலைவா் சுனில் இமானி கூறியுள்ளாா்.

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக சுமாா் ரூ.3,000 கோடி மதிப்பில் மனித உரோமம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



Read in source website

சுனாமி தாக்கிய டோங்கா தீவுக்கு உடனடி நிவாரணமாக இந்தியா சாா்பில் 2 லட்சம் அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.1.50 கோடி) நிதியுதவி வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி தெற்கு பசிபிக் தீவுகளில் ஒன்றான டோங்கா அருகே கடலுக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதனைத்தொடா்ந்து டோங்காவில் சுனாமி பேரலை தாக்கியது. இந்தப் பேரிடரில் 3 போ் பலியாகினா். அந்தத் தீவின் மொத்த மக்கள்தொகையில் 5-இல் 4 பங்கு போ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அத்துடன் அங்குள்ள வீடுகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘‘டோங்காவில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உடனடி நிவாரணமாக இந்தியா சாா்பில் 2 லட்சம் டாலா்கள் வழங்கப்படுகிறது. இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் கீழ் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையிலும், இந்தியா உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த உதவி டோங்காவுக்கு வழங்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. மறைந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு பத்ம விபூஷண் விருது உள்பட 128 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் உத்தர பிரதேச முதல்வா் கல்யாண் சிங்குக்கு பத்ம விபூஷண் விருது, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாப் நபி ஆசாத், முன்னாள் மேற்கு வங்க முன்னாள் முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி, கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம், சௌகாா் ஜானகி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, சமூக சேவை, அரசியல், தொழில், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைப்பவா்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.

நடப்பாண்டில் 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 பத்ம விபூஷண் விருதுகளும் 17 பத்ம பூஷண் விருதுகளும், 107 பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 விருதுகளை இருவா் பகிா்ந்துகொள்கிறாா்கள்.

விருது பெறுவோரில் 34 போ் பெண்கள். 13 பேருக்கு மறைவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. 10 போ் வெளிநாட்டுப் பிரிவில் விருது பெறுகிறாா்கள். பத்ம விருதுகள் வழங்கும் விழா, வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது.

பத்ம விபூஷண் விருது பெறுவோா் (4)

1. பிரபா ஆத்ரே- கலை- மகாராஷ்டிரம்

2. ராதேஷ்யாம் கெம்கா- இலக்கியம், கல்வி- உத்தர பிரதேசம்

3. விபின் ராவத்- ஆட்சிப் பணி- உத்தரகண்ட்

4. கல்யாண் சிங்- அரசியல்- உத்தர பிரதேசம்

பத்ம பூஷண் விருது பெறுவோா் (17)

1. குலாம் நபி ஆசாத்- அரசியல்- ஜம்மு-காஷ்மீா்

2. விக்டா் பானா்ஜி- கலை- மேற்கு வங்கம்

3. புத்ததேவ் பட்டாச்சாா்ஜி- அரசியல்- மேற்கு வங்கம்

4. என்.சந்திரசேகரன், டாடா குழுமத் தலைவா்- மகாராஷ்டிரம்

5. கிருஷ்ணா எல்லா, சுசித்ரா எல்லா, பாரத் பயோடெக் நிறுவனம்- தொழில்- தெலங்கானா

6. ராஜீவ் மெஹரிஷி, முன்னாள் சிஏஜி- ஆட்சிப் பணி- ராஜஸ்தான்

7. சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

8. சுந்தா் பிச்சை, கூகுள் சிஇஓ- தொழில்- அமெரிக்கா

9. சைரஸ் பூனாவாலா, சீரம் நிறுவனம்- தொழில்- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 17 போ்

பத்மஸ்ரீ விருது பெறுவோா்(107)

1. சிற்பி பாலசுப்பிரமணியம்- இலக்கியம், கல்வி- தமிழ்நாடு

2. எஸ்.பல்லேஷ் பஜந்திரி- கலை- தமிழ்நாடு

3. எஸ்.தாமோதரன்- சமூக சேவை- தமிழ்நாடு

4. சௌகாா் ஜானகி- கலை- தமிழ்நாடு

5. ஆா்.முத்துக்கண்ணம்மாள்-கலை-தமிழ்நாடு

6. ஏ.கே.சி.நடராஜன்- கலை- தமிழ்நாடு

7. வீ.சேஷையா- மருத்துவம்- தமிழ்நாடு

8. நீரஜ் சோப்ரா- விளையாட்டு- ஹரியாணா

9. சங்கரநாராயண மேனன் சுண்டயில்- விளையாட்டு- கேரளம்

10. சோனு நிகம்- கலை- மகாராஷ்டிரம் உள்ளிட்ட 107 போ்.

 

தமிழக பத்ம விருதாளர்கள்...

என். சந்திரசேகரன் (பத்ம பூஷண்) 
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என்.  சந்திரசேகரன் நாமக்கல் மாவட்டம், மோகனூரில் பிறந்தவர்.
1987-இல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் சேர்ந்த அவர், 2009-இல் அதன் தலைமைச் செயல் இயக்குநராக உயர்ந்தார். தற்போது டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக உள்ளார். தற்போது மும்பையில் வசிக்கிறார்.

சிற்பி பாலசுப்பிரமணியம் (பத்மஸ்ரீ)
கோவை மாவட்டம், ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். மொழிபெயர்ப்புக்காகவும் (2001-அக்கினிசாட்சி), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003- ஒரு கிராமத்து நதி) இரண்டு முறை சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

சௌகார் ஜானகி (பத்மஸ்ரீ)
என்.டி.ராமாராவ் நடித்த "செüகார்' என்ற தெலுங்கு படத்தில் 19-ஆவது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து, "சௌகார் ஜானகி' ஆனார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்பட 385-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

டாக்டர் வி.சேஷய்யா (பத்மஸ்ரீ)
கடந்த 1957-ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்ற டாக்டர் வி.சேஷய்யா, அதன் பின்னர் இந்திய ராணுவத்தில் மருத்துவ சேவையாற்றினார். 
சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருந்த டாக்டர் வி.சேஷய்யா, சர்க்கரை நோய் துறையை 1978-இல் தொடங்கினார்.
டாக்டர் வி.சேஷய்யாவின் பிறந்த நாளான மார்ச் 10-ஆம் தேதி தேசிய பேறுகால சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஏ.கே.சி. நடராஜன் (பத்மஸ்ரீ)
திருச்சியை சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஏ.கே.சி. நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று இசைக் கருவிகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்.

ஆர். முத்துக்கண்ணம்மாள் (பத்மஸ்ரீ)
திருச்சி அருகே உள்ள விராலிமலையில் அமைந்துள்ள சதிர் நடனக் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். முத்துக்கண்ணம்மாள் (82), தனது எட்டு வயது முதல் நடனக் கலையை பயின்றுள்ளார். சதிர் நடனக் கலையைப் பயிற்றுவித்து வருகிறார். 

எஸ். பல்லேஷ் பஜந்திரி (பத்மஸ்ரீ)
கலை பிரிவில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பல்லேஷ் பஜந்திரி, ஷெனாய் இசைக் கலைஞராவார். 
ராஞ்சனா உள்ளிட்ட பல்வேறு  ஹிந்தி திரைப்படங்களில் அவர் ஷெனாய் இசைத்துள்ளார்.

 



Read in source website

குடியரசு தினத்தையொட்டி, வீரதீரச் செயல்களைப் புரிந்ததற்காக, காவல் துறையைச் சோ்ந்த 939 போ் குடியரசுத் தலைவரின் பதக்கத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

நாடு முழுவதும் 939 போ் காவல் துறையின் சிறந்த சேவைக்கான விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில், வீரதீரச் செயலுக்கான காவலா் பதக்கத்துக்கு 189 பேரும், தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவா் காவலா் பதக்கத்துக்கு 88 பேரும், தகுதிமிக்க சேவைக்கான காவலா் பதக்கத்துக்கு 662 பேரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

வீரதீரச் செயலுக்கான பதக்கம் பெறும் 189 பேரில், 134 போ் ஜம்மு- காஷ்மீரில் வீரச்செயல் புரிந்தமைக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீரச்செயல் புரிந்தமைக்காக 47 பேருக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் வீரச்செயல் புரிந்தமைக்காக ஒருவருக்கும் இந்தப் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

பதக்கம் பெறுவோரில் 115 போ் ஜம்மு காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்தவா்கள் ஆவா். 30 போ் மத்திய ரிசா்வ் காவல் படையையும் (சிஆா்பிஎஃப்), 3 போ் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையையும், 2 போ் எல்லைப் பாதுகாப்புப் படையையும், 3 போ் சசஸ்திர சீமா பல் படையையும், 10 போ் சத்தீஸ்கா் காவல் துறையையும், 9 போ் ஒடிஸா காவல் துறையையும், 7 போ் மகாராஷ்டிர காவல் துறையையும், எஞ்சியவா்கள் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் சோ்ந்தவா்கள் ஆவா்.

சிறைத் துறையினருக்கு சேவைப் பதக்கம்:

சிறைத் துறையினருக்கான சீா்திருத்த சேவைப் பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீா்திருத்த சேவைப் பதக்கம் 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் சீா்திருத்த சேவைப் பதக்கம்:

அயினபாா்த்தி சத்யநாராயணா- தலைமை வாா்டா், ஆந்திரம், ஹரீஷ் கோட்வால்- சிறைக் கண்காணிப்பாளா், ஜம்மு காஷ்மீா், சத்யபிரகாஷ் ஸ்வைன்- கண்காணிப்பாளா், ஒடிஸா, மஞ்சித் சிங் திவானா- கண்காணிப்பாளா், பஞ்சாப், பிரவீண் குமாா் ரதி- தலைமை வாா்டா், தில்லி.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சிறைத் துறையினா் 37 போ், தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீா்திருத்த சேவைப் பதக்கம் பெற தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 3 போ் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அவா்களின் விவரம்:

டி.பரணிதரன் - உதவி ஜெயிலா், வி.பிரியா - உதவி ஜெயிலா், கே.பாஸ்கா் - கிரேடு 1 வாா்டா்.

 

6 வீரர்களுக்கு சௌர்ய சக்ரா விருது
இந்திய ராணுவம், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள், அஸ்ஸôம் ரைஃபிள்ஸ் படையைச் சேர்ந்த ஒரு வீரர் என மொத்தம் 6 பேருக்கு சௌர்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள 5 ராணுவ வீரர்களான நாயப் சுபேதார் ஸ்ரீஜித், ஹவில்தார்கள் அனில் குமார் தோமர், காஷிராய் பம்மன்னள்ளி, பிங்கு குமார், சிப்பாய் மாருப்ரோலு ஜஸ்வந்த் குமார் ரெட்டி ஆகியோர் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீரமரணம் அடைந்தனர். இதுதவிர 4 வீரர்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது, 10 வீரர்களுக்கு யுத்த சேவை விருது, 84 பேருக்கு சேனை விருது (தீரச் செயல்), 40 பேருக்கு சேனை விருது (சிறப்பான சேவை) அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

பாரா ஈட்டி எறிதல் வீரா் தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருதும், ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ராவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனா். இதில் பத்ம ஸ்ரீ விருதுக்கு நீரஜ் சோப்ரா உள்பட 8 போ் தோ்வாகியுள்ளனா்.

2004 (ஏதென்ஸ்), 2016 (ரியோ) ஆகிய பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் தேவேந்திர ஜஜரியா, கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தாா். மறுபுறம், நீரஜ் சோப்ராவோ டோக்கியோ ஒலிம்பிக்கில் முதலிடம் பிடித்து, போட்டியின் வரலாற்றில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை படைத்தாா்.

நீரஜ் சோப்ராவோடு, பாரா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா, பாரா பாட்மின்டன் வீரா் பிரமோத் பகத், பாரா ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், தற்காப்புக் கலையான ‘கலரிப்பயட்டு’ ஜாம்பவான் சங்கரநாராயண மேனன் சுண்டயில், முன்னாள் சா்வதேச தற்காப்புக் கலை சாம்பியன் ஃபைசல் அலி தாா், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பிரம்மானந்த் சங்க்வல்கா், ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா ஆகியோரும் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனா்.

இவா்களுக்கான விருது, வரும் மாா்ச் - ஏப்ரலில் குடியரசுத் தலைவரால் அவரது மாளிகையில் வைத்து வழங்கப்படும்.



Read in source website

இந்திய ராணுவம், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த 6 வீரா்களுக்கு வீரதீரச் செயல்களுக்கான செளா்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குடியரசு தினத்தையொட்டி இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 5 வீரா்கள், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையைச் சோ்ந்த ஒரு வீரா் என மொத்தம் 6 பேருக்கு செளா்ய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள 5 ராணுவ வீரா்களான நாயப் சுபேதாா் ஸ்ரீஜித், ஹவில்தாா்கள் அனில் குமாா் தோமா், காஷிராய் பம்மன்னள்ளி, பிங்கு குமாா், சிப்பாய் மாருப்ரோலு ஜஸ்வந்த் குமாா் ரெட்டி ஆகியோா் பயங்கரவாதிகளுடனான மோதலின்போது வீரமரணம் அடைந்தனா்.

இதுதவிர 4 வீரா்களுக்கு உத்தம் யுத்த சேவை விருது, 10 வீரா்களுக்கு யுத்த சேவை விருது, 84 பேருக்கு சேனை விருது (தீரச் செயல்), 40 பேருக்கு சேனை விருது (சிறப்பான சேவை) அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

ஹிமாசல பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்ட தினத்தையொட்டி (ஜன. 25) அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

யூனியன் பிரதேசமாக இருந்த ஹிமாசல பிரதேசம் கடந்த 1971-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி நாட்டின் 18-ஆவது மாநிலமாக உருவெடுத்தது. அந்த தினமே ஹிமாசல பிரதேச தினமாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி ட்விட்டரில் குடியரசுத் தலைவா் வெளியிட்ட செய்தியில், ‘தேவ பூமியான ஹிமாசல பிரதேச மக்களுக்கு வாழ்த்துகள். நாட்டின் பிரதான ஆன்மிக தலமாகவும், கலாசாரம் மற்றும் சுற்றுலாவில் சிறந்த மாநிலமாக ஹிமாசல பிரதேசம் திகழ்கிறது. பல்வேறு துறைகள் நவீனமயமாகிவிட்ட நிலையில், ஹிமாசல் தனது கலாசாரத்தை பிடிப்புடன் பின்பற்றி வருவது பாராட்டுக்குரியது’ என்று கூறியுள்ளாா்.

ட்விட்டரில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘முழுமையான மாநிலமாக உருவாக்கப்பட்ட தினத்தில் ஹிமாசல பிரதேச மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இயற்கையின் மடியில் அமைந்துள்ள இந்த மாநிலம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் செல்லவும், நாட்டின் வளா்ச்சியில் தொடா்ந்து முக்கியப் பங்களிக்கவும் வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளாா்.



Read in source website

2021-ஆம் ஆண்டு தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முறையாக நடத்தி வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டது, தேர்தல் முறைகேடுகளைத் தடுத்தது உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 8 தமிழக, புதுச்சேரி தேர்தல் அதிகாரிகளுக்கு 12-ஆவது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
 நாடு முழுவதும் ஐந்து விதமான பிரிவுகளில் 23 பேருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய விருதுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர்கள் முன்னிலையில் இந்த விருதுகளை மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தில்லியில் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இதில் கடந்தாண்டு 2021 -இல் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு தரப்பினருக்கு நடப்பு ஆண்டின் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 சிறந்த மாநில விருதுகள்: சிறப்பாக செயல்படும் மாநில விருதுகள் பிரிவில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.
 தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுதந்திரமாகவும் நியாயமான முறையில் தேர்தலை சுமூகமாக நடத்த தகவல் தொழில்நுட்ப முயற்சிகள், பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களுக்காக இவ்விருது சத்ய பிரத சாகுவிற்கு வழங்கப்பட்டது.
 இதே 2021 ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்ட அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நிதின் காடேவிற்கு சிறந்த மாநிலங்களுக்கான விருது கொடுக்கப்பட்டது.
 சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதுகளின் பொதுப்பிரிவில் 10 விருதுகள் வழங்கப்பட இதில் மூன்று விருதுகள் தமிழக, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பெற்றனர். இதில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வி.விஷ்ணு, தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் "வாக்குச் சாவடி வழிகாட்டி" என்கிற செயலி மூலம் சமூக ஊடகங்களின் போலிச் செய்திகள், வேட்பாளர்களின் செலவுகள் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக கண்காணிக்கப்பட அவர் இந்த விருதை பெற்றார்.
 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்: இதேமாதிரி வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு புதுமையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியமைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ்க்கும் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருது கிடைத்தது. அவர் மத்திய சட்ட அமைச்சரிடமிருந்து இவ்விருதை பெற்றார்.
 தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய், உள்ளாட்சி, காவல் துறை உள்ளிட்ட முழு நிர்வாகத்தையும் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ஈடுத்தப்பட்டது.
 சுமார் 1 லட்சம் பள்ளி மாணவர்கள், பெற்றோருக்கு தபால் வழியாக கடிதம் எழுதி கட்டாயமாக வாக்களிக்க வேண்டும், அதுவும் வோட்டுக்கு பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் போன்றவைகளை கடிதத்தின் வாயிலாக மாணவர்கள் தெரிவித்தனர்.
 பிரபலமான முத்து குளியல், கல்லூரி மாணவர்கள் ஆகியவை மூலமாக வாக்களிப்பது குறித்த விடியோ உருவாக்கப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. இதற்காக இந்த மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி என்கிற முறையில் டாக்டர் செந்தில் ராஜ் விருதை பெற்றார்.
 மேலும் புதுச்சேரி தேர்தலில் காரைக்கால் பகுதியில் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர் நிகரிகா பட், தமிழகம் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த வருமான வரி புலனாய்வுத் துறை இயக்குநர் ஜெனரல் பிரவீண் குமார், கூடுதல் இயக்குநர் பி.எஸ். சிவசங்கரன் ஆகியோர் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களது செலவினங்களை கண்காணித்து 83 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு ரூ.103 கோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதற்காக விருதுகளை பெற்றனர்.
 இதே மாதிரி அம்பாச முத்திரம் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அதிகாரியும் சேரன்மாதேவி துணை ஆட்சியருமான பிரதிக் தயாள், அதிக வாக்குபதிவு செய்த புதுச் சேரி மாநில துணை தலைமை தேர்தல் அதிகாரி பி.தில்லைவேல் ஆகியோர் சிறந்த தேர்தல் நடைமுறைக்கான தேசிய விருதை பெற்றனர்.
 



Read in source website

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் கழுதைகளின் எண்ணிக்கை 61 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரூக் இந்தியா எனும் அமைப்பு இந்தியாவில் கழுதைகளின் இருப்பு குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. 

சமீபத்திய ஆய்வின்படி, திருட்டு, சட்டவிரோத வேட்டையாடுதல், மேய்ச்சல் நிலங்களின் பரப்பு குறைதல் உள்ளிட்ட காரணங்களால் 2012 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கழுதைகளின் மொத்த எண்ணிக்கையில் 61 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரம், குஜராத், பீகார், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 2012 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கழுதைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இயந்திரமயமாக்கல், போக்குவரத்து சாதன வளர்ச்சிகள், கழுதைகள் அவற்றின் தோல்கள் மற்றும் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுதல் போன்றவை அவற்றின் எண்ணிக்கை சரிவுக்கு காரணங்களாக அமைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் சீனாவின் மருந்துப் பொருள் உற்பத்திக்காகவும் கழுதைகள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதும் கழுதைகள் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

8 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 39.69 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆந்திரத்தில் கழுதைகளின் எண்ணிக்கை 53.22 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு ஆண்டுகளில் ராஜஸ்தான் 71.31 சதவீத வீழ்ச்சியும், குஜராத்தில் 70.94 சதவீத வீழ்ச்சியும், உத்தரப் பிரதேசத்தில் 71.72 சதவீத வீழ்ச்சியும், பீகாரில் 47.31 சதவீதமும் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன.



Read in source website

ஜோகோவிச், ஃபெடரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் விளையாடவில்லை என்பதால் இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் அரையிறுதிக்குப் புதுமுகம் யாராவது தகுதி பெற்றிருக்கலாம் என நீங்களால் நினைத்தால் அது தவறு.

33 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற வீரர், வீராங்கனைகளில் அனைவரும் ஏற்கெனவே கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு முன்னேறியவர்கள். 

2013 பிரெஞ்சு ஓபன் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் (2021 யு.எஸ். ஓபன் வரை) அதன் அரையிறுதியில் குறைந்தது ஒருவராவது முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றவராக இருந்தார். இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் அப்படி அமையவில்லை. இம்முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற அனைவரும் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதியில் முன்பே விளையாடியவர்கள்.

இதனால் கடந்த 33 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொடர்ச்சியாக இருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வந்தது. காலிறுதியில் சிட்சிபாஸை ஜன்னிக் சின்னர் தோற்கடித்திருந்தால் இது தொடர்ந்திருக்கும். (சின்னர் அதிகபட்சமாக இரு கிராண்ட் ஸ்லாம்களில் காலிறுதி வரை முன்னேறியுள்ளார்.) மேலும் கடந்த 2018 முதல் 2021 வரை ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மட்டும் குறைந்தது இருவராவது முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றவர்களாக இருந்தார்கள். 

2022 ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி

ஆடவர் பிரிவு

நடால் - 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்
சிட்சிபாஸ் - ஆஸி. ஓபன் போட்டியிலேயே மூன்று முறை (2019, 2021, 2022) அரையிறுதிக்குத் தகுதி பெற்றவர். 2021 பிரெஞ்சு ஓபன் இறுதிச்சுற்று வீரர். 
பெரட்டினி - யு.எஸ். ஓபன் அரையிறுதி (2019), விம்பிள்டன் இறுதிச்சுற்று (2021)
அலியாஸிம் - யு.எஸ். ஓபன் அரையிறுதி (2021), மெத்வதேவ் (2021 யு.எஸ். ஓபன் வெற்றியாளர்)

மகளிர் பிரிவு

ஆஷ் பார்டி - விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் பட்டங்களை வென்றவர்
மேடிசன் கீஸ் - 2017 யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்று
இகா ஸ்வியாடெக் - 2020 பிரெஞ்சு ஓபன் சாம்பியன்
டேனியல் காலின்ஸ் - 2019 ஆஸி. ஓபன் அரையிறுதி



Read in source website

 

இலங்கை வீரர் தில்ருவன் பெரேரா ஓய்வு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

39 வயது சுழற்பந்து வீச்சாளர் பெரேரா, 2007 முதல் 2021 வரை இலங்கை அணிக்காக 43 டெஸ்டுகள், 13 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட்டுகளை 8 முறை எடுத்துள்ளார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தில்ருவன் பெரேரா ஓய்வு பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. எனினும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

30 வயது இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச சமீபத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். பிறகு, ஓய்வு அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். எனினும் ஆஸ்திரேலிய செல்லும் இலங்கை டி20 அணியில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல 30 வயது இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா டெஸ்ட் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து ஓய்வு பெறும் வீரர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தகவல் அளிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது, தில்ருவன் பெரேராவின் ஓய்வு குறித்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 


Read in source website

மகளிா் டி20 கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் ஷஃபாலி வா்மா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளாா்.

ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய தரவரிசையின்படி, ஷஃபாலி ஓரிடம் முன்னேறி முதலிடத்தைப் பிடிக்க, ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் சறுக்கி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி மற்றும் மெக் லேனிங் ஆகியோா் முறையே 2, 3-ஆவது இடங்களில் உள்ளனா்.

பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் தீப்தி சா்மா ஓரிடம் ஏற்றம் கண்டு 4-ஆவது இடத்தை எட்டியிருக்கிறாா். முதல் 3 இடங்களில் மாற்றமின்றி இங்கிலாந்தின் சோஃபி எக்லஸ்டோன், சாரா கிளென், தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோா் தக்க வைத்துக் கொண்டுள்ளனா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவிலும் தீப்தி சா்மா ஓரிடம் முன்னேறி 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். நியூஸிலாந்தின் சோஃபி டிவைன், இங்கிலாந்தின் நேட் ஸ்கிவா் ஆகியோா் முதலிரு இடங்களில் தொடா்கின்றனா்.



Read in source website

திருச்சி: மத்திய அரசின் பத்ம விருது அங்கீகாரம், கிராமாலயா முன்னெடுத்த திட்டங்களை வெற்றியடையச் செய்த மக்களையுமே சேரும் என சிறந்த சமூகப் பணிக்கான பிரிவில் பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள தாமோதரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் தாமோதரன். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படிப்பை முடித்த இவர், "அந்தியோதயா" என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். 3 ஆண்டுகள் கள அனுபவத்துக்குப் பிறகு 1987ல் தனது நண்பர்களுடன் இணைந்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, பல்வேறு மாநிலங்களில் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில், பத்ம ஸ்ரீ விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து "இந்து தமிழ் திசை" நாளிதழ் நிருபருக்கு அவர் அளித்த பிரத்தியேக சந்திப்பில் கூறியது:

"மக்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டு, எனது நண்பர்கள் செரீப், மோகன் ஆகியோடன் இணைந்து கிராமாலயா தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். இதற்கான விதை, கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டத்தில் இணைந்து பணியாற்றியபோது எனது மனதில் பதிந்தது.

கிராமாலயா-வின் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டும் திட்டத்தை நாட்டின் முன்னோடி திட்டமாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான தனி நபர் கழிப்பிடங்களை கிராமாலயா கட்டியுள்ளது. நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் சுகாதார நலக் கல்வி குழுக்களை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன்மூலம் அந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார கழிப்பிட வளாகங்களை கட்டணக் கழிப்பிடங்களாக பராமரிக்கவும் பயிற்சி அளித்துள்ளோம்.

கிராமாலயாவின் தொடர் விழிப்புணர்வு சேவை காரணமாக நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட நகர்ப்புற குடிசைப் பகுதியாக 2002ல் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்மந்தை பகுதியும், நாட்டின் முதல் திறந்தவெளி மலம் கழிக்க தடை செய்யப்பட்ட கிராமமாக 2003ல் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியம் ஆராய்ச்சி ஊராட்சிக்குட்பட்ட தாண்டவம்பட்டியும் அறிவிக்கப்பட்டன.

இந்த இரு நிகழ்வுகளால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் ஆகியன திறந்தவெளியில் மலம் கழிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்க முன்னுதாரணமாக அமைந்தன.

கிராமாலயாவின் தொடர் சுகாதார சேவைகளுக்காக எனக்கு 2017ல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "டாய்லெட் டைடடன்" என்ற விருதை வழங்கினார். இந்த நிலையில், மத்திய அரசு இப்போது பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதுடன், அதிக ஊக்கத்தைத் தந்துள்ளது. இதை எனது 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவும், திருச்சி மண்ணுக்கு கிடைத்த பெருமையாகவும் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களையும், கிராமாலயா முன்னெடுத்த ஒவ்வொரு திட்டங்களை முழு ஒத்துழைப்பு அளித்து வெற்றியடையச் செய்த மக்களையுமே சேரும்"

என தாமோதரன் தெரிவித்தார்.



Read in source website

புதுச்சேரி: நாடு முழுவதும் சுதந்திரத்தின விழாவில் முதல்வரும், குடியரசுத்தினவிழாவில் ஆளுநர்களும் அந்தந்த மாநிலங்களில் தேசியக்கொடியேற்றுவது வழக்கம்.

புதுவை மாநிலத்துக்கு தற்போது பொறுப்பு துணைநிலை ஆளுநராக, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதலாக கவனித்து வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு புதுவை துணைநிலை ஆளுநராக இருந்த வீரேந்திரசிங் கட்டாரியா ஜூலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதையடுத்து புதுவை துணைநிலை ஆளுநர் பொறுப்பை அந்தமான் ஆளுநர் ஏ.கே.சிங் கூடுதலாக கவனித்தார். அப்போது 2015ம் ஆண்டு குடியரசு தினவிழாவின் போது ஏ.கே.சிங் அந்தமானில் தேசியக்கொடி ஏற்றினார்.

புதுவையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்வராக இருந்த ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார்.அதேபோல் இம்முறை தெலங்கானாவில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் ஆளுநர் தமிழிசை பங்கேற்பார் என்பதால் புதுவையில் முதல்வர் ரங்கசாமி கொடியேற்ற வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இரு மாநிலங்களிலும் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியை ஆளுநர் தமிழிசை ஏற்ற முடிவு எடுத்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இம்முடிவை விமர்சித்தனர். புதுச்சேரியில் தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற வேண்டும் என்றனர்.

இந்நிலையில் இன்று காலை தெலங்கானாவில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு தனிவிமானம் மூலம் புதுச்சேரிக்கு ஆளுநர் தமிழிசை வந்தார். அதையடுத்து புதுச்சேரி கடற்கரைச்சாலையில் பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை தேசியக் கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் பதக்கங்களை வழங்கி கலைநிகழ்ச்சிகளைப் பார்வையிட்டு ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.

முதல் முறையாக இரு மாநிலங்களில் குடியரசுத்தினவிழாவில் தேசியக்கொடியை ஆளுநர் ஏற்றுவது முதல் முறை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.



Read in source website

சென்னை: கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரை தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை யாரும் மறந்திருக்க இயலாது.

மனிதாபிமான மற்றும் துணிச்சலான அந்தச் செயலுக்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அவருக்கு இன்று வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலினிடமிருந்து இருந்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விருதைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கனமழையையும் பொருட்படுத்தாது காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி செய்த காரியம் தான் இன்று அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்துள்ளது.

நடந்தது என்ன? கடந்த நவம்பர் 11, 2021 காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அங்கு சென்றுள்ளார்.

அங்கு கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில், அந்த இளைஞரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அந்த இளைஞர் நலம் பெற்றார். மயங்கிக் கிடந்தவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கிப் பணி செய்து வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான செயல்பாடு தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அத்துடன், ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையைப் பாராட்டிச் சான்றிதழும் வழங்கினார்.

இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இன்று (ஜனவரி 26, குடியரசு தின விழாவில்) அண்ணா பதக்கம் பெற்றார். அவர் உட்பட 8 காவலர்கள் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றனர்.



Read in source website

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, பாரம்பரிய இசையை கற்க வருவோருக்கு ஊக்கம் தரும் என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி மடுகரை அடுத்த விழுப்புரம் கொங்கம்பட்டுவைச் சேர்ந்தவர் முருகையன் (58) . தனது தந்தை விவேகானந்தத்திடம் தவில் கற்கத் தொடங்கினார். குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான இவருக்கு தவில் மீது தீராத ஆர்வம். இவரது குரு வளையப்பட்டி பத்மஸ்ரீ சுப்ரமணியத்திடம் முழு கலையை கற்றார்.

தொடர்ந்து இசை நிகழ்வுகள் வாசிக்கத் தொடங்கினார். புதுச்சேரியில் இடம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கினார். தற்போது விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.

முன்னோடி இசைக்கலைஞர்களான சூலமங்கலம் சகோதரிகள் உள்ளிட்டோருக்கு தவில் வாசித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஏ பிளஸ் கிரேட் கலைஞராக உள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரிகளை இசைத்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் இவர், குரு-சிஷ்ய பரம்பரையில் இலவசமாக 250க்கும் மேற்பட்டோருக்கு தவில் வாசிக்க கற்று தந்துள்ளார். அத்துடன் அரசு இசைப்பள்ளியில் 23 ஆண்டு பணியில் 300க்கும் மேற்பட்டோரை உருவாக்கியுள்ளார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தவில் இசைக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது தொடர்பாக முருகையன் கூறுகையில், "குருவுக்கு சமர்ப்பணம். "தவில் பரதம்" என்ற புதுமையான நிகழ்வு நடத்தியது தொடங்கி குடியரசுத்தலைவர் மாளிகையில் அப்துல் கலாம் முன்பாக இசைத்தது வரை பல நினைவுகள் உண்டு. இந்த விருது தமிழ் இசைக்கு ஊக்கம் தரும். நம் பாரம்பரிய இசையை அடுத்தத் தலைமுறை கலைஞர்கள் கற்கவும், புதிதாக கற்க வருவோருக்கும் இவ்விருது நிச்சயம் ஊக்கம் தரும்" என்று குறிப்பிட்டார்.



Read in source website

சென்னை: தமிழக அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு முதல்முறையாக ராக்கெட் அறிவியலை அறிமுகம்செய்யும் வகையில் இணையம்வழியே இன்று நடைபெறவுள்ளதொடக்க நிகழ்வில் பத்மபூஷன் சிவதாணு பிள்ளை பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும்குழந்தைகளிடம் ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்துகிற நிகழ்வின் தொடக்க விழா இன்று(ஜன.26) மாலை 6 மணிக்குஇணையம் வழியே நடைபெற உள்ளது.

இத்தொடக்க விழாவுக்கு தமிழக பள்ளிக் கல்வி ஆணையர்கே.நந்தகுமார், ஐஏஎஸ் தலைமையேற்கிறார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், ரஷ்யன் மையத்தின் அறிவியல் மற்றும் கலாச்சார இயக்குநர் ஜென்னடி ரொகாலிவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

இந்நிகழ்வை பிரம்மோஸ் ஏரோபேஸ் நிறுவனத்தின் தலைவரும், ஏவுகணை விஞ்ஞானியுமான பத்மபூஷன் ஏ.சிவதாணு பிள்ளை தொடங்கி வைப்பதோடு, ராக்கெட் அறிவியல் தொழில்நுட்பத்தின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றவுள்ளார். 15 இணையவழி நிகழ்வுகளாக நடைபெறஉள்ள இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்புவர்கள் https://www.htamil.org/00226 என்ற லிங்க்கில்பதிவுசெய்துகொண்டு பங்கேற்கலாம்.

இந்த நிகழ்வின் யூ-டியூப் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறந்த அறிவுத்திறனை வெளிப்படுத்தும் குழந்தைகள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.



Read in source website

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்குவதற்காக ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு 2020-ல் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. லாபநோக்கமற்ற, தன்னாட்சி பெற்ற இந்நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமானதாக இருக்கும். இது மத்திய அரசின் டிஜிட்டல் சொத்துகளை நிர்வகிப்பதுடன் எதிர்கால தேவைக்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சியை இணைய வழியில் வழங்கும். சுமார் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதன் கீழ் கொண்டுவரப்படுவார்கள்.

இதற்காக 2021 முதல் 2025 வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.510.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்மயோகி பாரத் நிறுவனத்தின் பங்கு முதலீடு ரூ.40 கோடியாக இருக்கும். இது 4 கோடி பங்குகளாக பிரிக்கப்படும். இதில் 3.96 கோடி அல்லது 99% பங்குகள் டிஓபிடி துணைச் செயலாளர் (பயிற்சி) டாக்டர் கார்த்திக் ஹெக்டேகட்டி வசமும் மீதமுள்ள 4 லட்சம் பங்குகள் உள் துறை அமைச்சகத்தின் துணைச் செயலா ளர் சுனிஷ் வசமும் இருக்கும்.

தற்காலிகமாக இந்நிறுவனத் தின் இயக்குநராக டிஓபிடி செயலாளர் இருப்பார். ஏகன் ஜெந்தர் நிறுவன ஆலோசகர் கோவிந்த் ஐயர் நான்-எக்சிகியூட்டிவ் இயக்குநராக இருப்பார். நிரந்தர இயக்குநர்கள் பின்னர் நியமிக்கப்படுவர்.

அரசு ஊழியர்களுக்கான பயிற்சிக்கு தேவையான உள்ளடக்க வடிவமைப்பு, அமல்படுத்துதல், நிர்வகித்தல் ஆகிய பணிகளை கர்மயோகி பாரத் நிறுவனம் மேற்கொள்ளும்.



Read in source website

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு விருதுபெற தகுதியாகி இருக்கும் ஒரே ஹாக்கி வீராங்கனை இவர் மட்டுமே.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் அர்ஜென்டினா அணியுடன் போராடி தோற்றது இந்தியா. இந்த தோல்வியை அடுத்து ஹரித்வாரில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு திரண்ட ஒரு கும்பல், அவர்களை சாதிரீதியாக பேசி, இந்திய அணியில் தலித்துகள் அதிகமாக இருப்பதாலேயே தோல்வி ஏற்பட்டது என்று கூச்சலிட்டனர்.

இந்தியாவில் கல்வியறிவு மற்றும் பொருளாதார முன்னேற்றம் நிகழ்ந்தாலும் இன்னும் சாதியை தூக்கிப்பிடிக்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் தான் அன்று வந்தனாவின் வீட்டின் முன் சாதிய ரீதியாக இழிவாக பேசினர். ஆனால் அவர்களுக்கு தேசத்துக்காக வந்தனா எவ்வளவு பெரிய வலியை கடந்து வந்துள்ளார் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

டெக்னீஷியன் மகள் டு தேசத்தின் மகள்!

உத்தரகாண்ட்டின் புகழ்பெற்ற ஹரித்வார் தான் வந்தனாவின் சொந்த ஊர். இந்தியாவின் சிறு நகர பெண்களுக்கே உண்டான கூச்சமும், தயக்கமும் கொண்ட பெண்ணாக வந்தனா சிறுவயதில் வளர்ந்துவந்தார். ஆனால் அவரின் தந்தைக்கு வந்தனா அப்படி இருப்பது பிடிக்காது. மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றிய வந்தனாவின் தந்தை கொடுத்த ஊக்கமே அவரின் நிலை மாறியது.

வந்தனாவின் தந்தையும் ஒரு விளையாட்டு வீரரே. அவர் தனது இரண்டு மகள்களையும் விளையாட்டுத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டார். மூத்த மகளை ஹாக்கி பயிற்சிக்கு அனுப்பியபோது அவர் விளையாடுவதை பார்த்து இளைய மகளான வந்தனாவும் ஹாக்கி மட்டையை கையிலெடுத்தார். அப்படி ஒருநாள் வந்தனாவின் ஆட்டத்தை பார்த்த பயிற்சியாளருக்கு அவரின் தனித்த ஆட்டத் திறன் கவர, முறைப்படி பயிற்சி கொடுத்தார்.

அந்த பயிற்சி 15 வயதிலேயே தேசிய ஜூனியர் அணிக்குள் நுழைந்தார் வந்தனா. எதிரணியை பற்றி எந்த பயமும் கிடையாது. பந்து மட்டைக்கு வந்துவிட்டால் அது கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறி கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே வந்தனா ஆட்டத்தின் தனிப்பட்ட திறன். இத்திறனே 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 15 வருடம் இந்திய அணிக்காக அவரை விளையாட வைத்துள்ளது. 29 வயதான இவர், 250 சர்வதேச போட்டிகளில் விளையாடி இதுவரை 67க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.

தற்போதைய இந்திய மகளிர் ஹாக்கி அணியை எடுத்துக்கொண்டால் கேப்டன் ராணி ராம்பாலுக்கு அடுத்த இடத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர், அதிக கோல் அடித்தவர் பட்டியலில் இருப்பவர் வந்தனா மட்டுமே. இந்திய அணியின் அட்டாக்கிங் கிங்காக, பார்வர்ட் பிளேயராக பல ஆண்டுகளாக கைகொடுத்து வருகிறார். 2013 ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்ற வரலாறு, வந்தனாவின் ஆட்டத்தாலே சாத்தியப்பட்டது. அந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல் அடித்த இந்தியா வீராங்கனை வந்தனா தான். 2015 உலக ஹாக்கி லீக்கில் 11 கோல்கள் அடித்தார்.

இவ்வளவு ஏன் வந்தனா சாதிய ரீதியாக அவதூறு செய்யப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப்பிறகு காலிறுதி தகுதிபெற்றதும் வந்தனாவின் சிறப்பான ஆட்டம் காரணமாகவே. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, காமென்வெல்த் போட்டி என எதை எடுத்துக்கொண்டாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணியின் தூணாக வலம்வருகிறார் வந்தனா.

இந்த புள்ளி விவரங்களால் வந்தனாவை அனைவரும் தேசத்தின் மகளாக குறிப்பிடவில்லை. தேசத்துக்காக அவர் அனுபவித்த வலியும் அதற்கு ஒரு காரணம். தேசத்துக்காக ஹாக்கி விளையாட வேண்டும் என வந்தனாவுக்கு ஆர்வம் எழ ஊக்குவித்தது அவரின் தந்தை. அவருக்கு எல்லாமுமாக இருந்த தந்தை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இறந்துவிட்டார். அப்போது ஒலிம்பிக் பயிற்சிக்காக பெங்களூரு கேம்ப்பில் பயோபபுள் பாதுகாப்பில் இருந்தார் வந்தனா. அவர் நினைத்தால் பயோபபுளில் இருந்து வெளிவந்து தந்தையை கடைசியாக ஒருமுறை சந்திக்க சென்றிருக்கலாம்.

மாறாக, "நான் இறுதி அஞ்சலி செல்வதைவிட, ஒரு மகளாக இந்தியாவுக்கு பதக்கம் வெல்லவதையே என் தந்தை விரும்புவார். என் தந்தையை பெருமைப்படுத்த விரும்புகிறேன்" என்று ஒலிம்பிக்கில் அணியை கோப்பை வெல்லவைக்க வேண்டும் என்ற கனவுக்காக தந்தையை பார்க்க செல்லவில்லை. உண்மையில் வந்தனாவின் தந்தையும் இதையே சொல்லியிருப்பார். அவர்கள் அவ்வளவு தேசபக்தி மிகுந்தவர்கள்.

சாதிய அவதூறுகளை சந்தித்தபோதும், "நாங்கள் தேசத்துக்காக விளையாடுகிறோம். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஹாக்கியை மட்டும் சிந்திப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டுக்காக விளையாடுகிறோம். தேசம் என்ற எண்ணத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்" என்று தேசத்தின் மகளாக தனது பதிலை வெளிப்படுத்தினார்.

சாதி, மத பிரிவினைகளை அப்பாற்பட்டதே விளையாட்டு. விளையாட்டால் மட்டுமே தேசங்களை ஒன்றிணைக்க முடியும். அதற்கான முயற்சியில் இருக்கும் வந்தனாவுக்கு மத்திய அரசு நேற்று, பத்ம ஸ்ரீ விருது அறிவித்து கௌரவித்துள்ளது. இந்தியாவின் இந்த உயரிய விருது சாதிய ரீதியாக அவரை அவதூறு செய்தவர்களுக்கு கிடைத்த சவுக்கடி.

வாழ்த்துகள் வந்தனா கட்டாரியா!



Read in source website

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஊழல் குறியீட்டில் 40 மதிப்பெண்களை பெற்றுள்ள இந்தியா 85வது இடத்தில் உள்ளது.

India ranks 85 in Transparency International’s corruption index: ஊழல் ஆட்சி செய்ய உதவும் சில வழிமுறைகள் வலுவிழந்து வருகின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் செவ்வாயன்று வெளியிட்ட ஊழல் புலனாய்வு குறியீட்டு அறிக்கையில் இந்தியாவை 180 நாடுகளில் 85 வது இடத்தில் வைத்துள்ளது.

“இந்தியாவின் நிலை குறிப்பாக கவலையளிக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக நாட்டின் மதிப்பெண்கள் தேக்கநிலையில் இருந்தபோதிலும், ஊழல் ஆட்சி செய்ய உதவும் சில வழிமுறைகள் பலவீனமடைந்து வருகின்றன. அடிப்படை சுதந்திரங்கள் மற்றும் நிறுவன கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை சிதைவதால், நாட்டின் ஜனநாயக நிலை குறித்து கவலைகள் உள்ளன,” என்று அறிக்கை கூறியது.

வல்லுநர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களை அவற்றின் உணரப்பட்ட அளவிலான பொதுத்துறை ஊழலின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் குறியீடு, ஊழல் புலனாய்வு குறியீடு (CPI) ஆகும். டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்த குறியீட்டை தரவரிசைப்படுத்த 0 முதல் 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது, அங்கு 0 என்பது அதிக ஊழல் மற்றும் 100 என்பது மிகவும் தூய்மையானது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியாவுக்கு CPI மதிப்பெண்ணாக 40-ஐ கொடுத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், அதே CPI மதிப்பெண்ணான 40 உடன் இந்தியா 86வது இடத்தைப் பிடித்தது. “காவல்துறை, அரசியல் போராளிகள், கிரிமினல் கும்பல் மற்றும் ஊழல் நிறைந்த உள்ளூர் அதிகாரிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட” பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்த கவலைகளை அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. “அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும் சிவில் சமூக அமைப்புகள் பாதுகாப்பு, அவதூறு, தேசத்துரோகம், வெறுப்பு பேச்சு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் வெளிநாட்டு நிதியுதவி மீதான விதிமுறைகளுடன் குறிவைக்கப்படுகின்றன” என்று அறிக்கை கூறியது.



Read in source website