DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 24-03-2022

சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்  நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வியாழக்கிழமை(இன்று) நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நான்கு ஆண்டுகள் அல்லது 67 வயது வரை பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்த புஷ்பா சத்தியநாராயணா பிப்ரவரி 27-ல் ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை-அறிவியல் கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச இடம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் கெளரி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வகையில், சென்னைப் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு தலா ஒரு இலவச இடம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 131 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் தலா ஒரு இடத்தை திருநங்கைகளுக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் பெறப்படும். வரும் கல்வியாண்டிலிருந்து (2022-2023) இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா்.

இந்த அறிவிப்பு திருநங்கைகளுக்கு உயா்கல்வி பயில ஊக்கத்தை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு முதுநிலை பட்டப்படிப்பு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

 


பெங்களூரு: மனைவியை பலாத்காரம் செய்தது கணவராகவே இருந்தாலும் அதுவும் பலாத்காரம்தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

மனைவி அளித்த பலாத்கார புகார் மீது கணவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஆண் என்பவர் ஆண்தான். சட்டம் என்பதும் சட்டம்தான். பலாத்காரம் என்றால் அது பலாத்காரம்தான். ஒரு ஆண் பலாத்காரம் செய்து, அது கணவராக இருந்தாலும், பலாத்காரத்துக்குள்ளான பெண் மனைவியாகவே இருந்தாலும் பலாத்காரம் தான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி எம். நாகபிரசன்னா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

திருமணமானது முதல் தன்னை பாலியல் அடிமையாக நடத்துவதாகக் கூறி மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா இந்தத் தீர்ப்பை அளித்து, மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.

 

 



Read in source website

புது தில்லி: நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரமேஷ் சந்திர லஹோட்டி(81) உடல்நல குறைவு காரணமாக, நேற்று புதன்கிழமை மாலை தில்லியில் மருத்துவமனையில் காலமானார். 

நீதிபதி  லஹோட்டி ஜூன் 1, 2004 அன்று நாட்டின் 35 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், நவம்பர் 1, 2005 அன்று ஓய்வு பெற்றார். நவம்பர் 1, 1940 இல் பிறந்தார் லஹோட்டி, 1962 இல் வழக்குரைஞராகப் பதிவு செய்து பணியை தொடங்கினார். 

ஏப்ரல் 1977 இல், மாநில உயர்நீதிமன்ற பணிக்கு நேரடியாகப் பணியமர்த்தப்பட்டார். பின்னர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார்.

ஒரு ஆண்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய பிறகு, மே 1978 இல் பணியை ராஜிநாமா செய்துவிட்டு, உயர்நீதிமன்றங்களில் வழக்குரைஞர் பணிக்கு திரும்பினார்.

பின்னர் 1988 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார், அதன் பிறகு 1988, டிசம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 31, 2005 அன்று ஓய்வு பெறுவதற்கு முன்பு ஜூன் 1, 2004 அன்று தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

2006 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், நீதி நிர்வாகத் துறையில், மக்களுடன் மிகவும் நட்பாக இந்த வகையில் அவரது தனித்துவமான பங்களிப்பிற்காக, அவருக்கு தேசிய சட்ட தின விருதை வழங்கி பாராட்டினார்.

நீதிபதி லஹோட்டிக்கு சட்ட உதவி சேவைகள் அளிப்பது, கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் இந்திய கலாச்சார விழுமியங்கள் மற்றும் மரபுகளை பரப்புவதில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 



Read in source website

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புதன்கிழமை ரஷியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தது.

ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், புதன்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைனில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ரஷியத் தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷியா மற்றும் சீனா வாக்களித்த நிலையில், இந்தியா உள்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது.

முன்னதாக, ரஷியா நடத்தும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

கைப்பேசி பயன்பாட்டாளர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டில் இதுவரை 320 கைப்பேசி செயலிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டப்படி முடக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய வணிகம், தொழிற்சாலைத் துறை இணை அமைச்சர் சோம் பர்காஷ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
 நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு ஆகியவற்றின் நலன்களைக் கருத்தில்கொண்டு இந்தச் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு முடக்கப்பட்ட செயலிகள் மறுபெயரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பது கண்டறியப்பட்டு அவையும் முடக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 கைப்பேசி செயலிகள் மறுமுடக்கம் செய்யப்பட்டுள்ளன.
 கைப்பேசி பயன்பாட்டாளர்களின் இணையப் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பொறுப்புணர்வை உறுதி செய்வதற்காக மத்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, விதி 69 ஏ-இன் கீழ் இதுவரை 320 கைப்பேசி செயலிகளின் பயன்பாடு மத்திய அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

பொதுத் துறை தொலைத்தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பங்கு விலக்கல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பான கேள்விக்கு மக்களவையில் புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் தேவ்சிங் சௌஹான் மேலும் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதுள்ள பணியாளா்களே நிறுவனத்தை திறம்பட நடத்துவதற்குப் போதுமானதாக உள்ளனா். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அரசின் பங்களிப்பைக் குறைத்து, பங்கு விலக்கல் நடவடிக்கை மேற்கொள்ளும் திட்டம் ஏதுமில்லை. நிறுவனத்தின் அசையாத சொத்துகளின் மதிப்பு மாா்ச் 31, 2021 நிலவரப்படி ரூ.89,878 கோடியாக உள்ளது. 2021 ஆண்டு இறுதி நிலவரப்படி நாட்டின் கைப்பேசி இணைப்பு சேவையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்களிப்பு 9.90 சதவீதமாக உள்ளது. அகண்ட அலைவரிசை இணைய இணைப்பில் 15.40 சதவீத வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் வசம் உள்ளனா் என்றாா்.

ஒரு காலத்தில் நாட்டின் பெரும்பாலான மக்களால் பிஎஸ்என்எல் தொலைத்தொடா்பு சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னா் தனியாா் நிறுவனங்களின் வரவு, நிா்வாகச் சீா்குலைவு, சேவைக் குறைபாடு, 4ஜி சேவை வழங்க முடியாத நிலை போன்றவற்றால் தனது வாடிக்கையாளா்களை பிஎஸ்என்எல் படிப்படியாக இழந்தது. பணியாளா்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையும் உருவானது.

2019, அக்டோபரில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 50 வயதைக் கடந்த ஊழியா்களுக்கு விருப்ப ஓய்வு, 4ஜி சேவை வழங்க நிதி வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.



Read in source website

ஹைட்ரோப்ளூரோகாா்பன்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபிரிட் மற்றும் ஏசி-களில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோப்ளூரோகாா்பனை (ஹெச்எஃப்சி) ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் அந்த ரசாயனத்தின் இருப்பை ஊக்கவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ஹெச்எஃப்சி ரசாயனத்தை கட்டுப்பாடற்ற வகை பிரிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு, அதன் ஏற்றுமதிக்கு அரசின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைப்பிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறுவது ஹெச்எஃப்சி ஏற்றுமதியாளா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஹெச்எஃப்சி-யின் இறக்குமதிக்கும் இதேபோன்ற தடையை மத்திய அரசு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

சிஎஸ்கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியதால் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி மார்ச் 26-ல் தொடங்கி மே 29 அன்று நிறைவுபெறவுள்ளது. 70 லீக் ஆட்டங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணேவில் நடைபெறவுள்ளன. 10 அணிகளும் தலா 14 ஆட்டங்களில் விளையாடவுள்ளன. 10 அணிகளும் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் விளையாடவுள்ளன. குரூப் ஏ-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி-வில் சென்னை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. சிஎஸ்கே அணி - மும்பை, சன்ரைசர்ஸ், ஆர்சிபி, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் இருமுறையும் மீதமுள்ள 4 அணிகளுடன் ஒருமுறையும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. (2022 ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைந்துள்ளன.)

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டியில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருட ஐபிஎல் போட்டியில் கேப்டனாக அல்லாமல் வீரராக மட்டுமே விளையாட தோனி முடிவெடுத்துள்ளார். இதையடுத்து புதிய கேப்டனுடன் ஐபிஎல் போட்டியில் களமிறங்குகிறது சிஎஸ்கே அணி.

2012 முதல் சிஎஸ்கே அணியில் விளையாடும் ஜடேஜா, அந்த அணியின் 3-வது கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 



Read in source website

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் தகவல் தெரிவித்துள்ளன. 

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

இம்மாத தொடக்கத்தில் ஏவுகணை சோதனை நிகழ்த்திய வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானும் இதனை உறுதி செய்துள்ளது. 

இந்த பாலிஸ்டிக் ஏவுகணை 1,100 கிமீ தூரம் வரையிலும் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாகவும் செல்லும் என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று சோதனை நடத்திய ஏவுகணை சக்திவாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

5 வருடங்களுக்கு முன்னதாக வடகொரியா சுமார் 6,000 கிமீ தூரத்துக்கு செல்லக்கூடிய சோதனை நடத்திய ஏவுகணையே இதுவரையில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 



Read in source website

 

உக்ரைனுக்கு ரசாயன மற்றும் அணு ஆயுத தடுப்பு ஆயுதங்களை வழங்க, நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் தயாராகி வருவதாக, நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிா்ப்பு தெரிவித்த ரஷியா, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உக்ரைன் மீது போா் தொடுத்தது. வான்வழியாகவும், கடல் மாா்க்கமாகவும் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைனிலிருந்து இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோா் அகதிகளாக இடம்பெயர நோ்ந்தது. இதில் பெரும்பாலானோா் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா்.

இந்தப் போா் ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ஆயினும், உக்ரைன் தலைநகரான கீவ் மீது ரஷியா தொடா்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வந்தாலும் அந்நகரை ரஷிய ராணுவத்தினரால் இன்னமும் முழுமையாகக் கைப்பற்ற முடியவில்லை. ரஷியாவின் இலக்கு இன்னமும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தத் தருணத்தில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நான்கு நாள் பயணமாக ஐரோப்பாவுக்கு நேற்று புதன்கிழமை சென்றாா். இந்தப் பயணத்தின் வாயிலாக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ளலாம் என்றும், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவி அளிக்க முன்வரலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து நேட்டோ அமைப்ப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் கூறுகையில், உக்ரைன் மீதான ரஷியப் படைகளின் தாக்குதல் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நேட்டோ அமைப்பின் அவசர கூட்டம் இன்று வியாழக்கிழமை (மார்ச். 24)  பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெறுகிறது. 

இதில், "ரசாயனம், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பதற்கான" உபகரணங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு உதவி உள்பட உக்ரைனுக்கு "கூடுதல் ஆதரவை" வழங்குவதற்கு நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் ஒப்புக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் அதிகரித்து வரும் அச்சங்களுக்கு மத்தியில் பேரழிவு ஆயுதங்களை எதிர்கொள்வதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் குறிப்பாக உக்ரைனுக்கு பொருள்களை அனுப்புவதற்கான முதல் முயற்சி இதுவாகும் என்றார்.

"எந்தவொரு ரசாயன ஆயுதப் பயன்பாடும் மோதலின் தன்மையை முற்றிலும் மாற்றிவிடுவதுடன்" தொலைநோக்கு விளைவுகளை ஏற்படுத்தும்." இதுகுறித்த "உண்மையான அச்சுறுத்தல்" ரஷியாவிற்கு இருப்பதாக ஜோ பைடன் ஐரோப்பாவிற்கு புறப்படுவதற்கு முன்னதாகக் கூறியிருந்தார்.

புதன்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுள்ள பைடன், நேட்டோ உச்சி மாநாட்டில் கீவிற்கு ஆதரவை அதிகரிப்பதற்கும், ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளுடன் அவா் ஆலோசனை மேற்கொள்ளலாம் .

மேலும் ரஷிய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் பல்கேரியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் நேட்டோ படைகளின் நான்கு போர்க் குழுக்களை அமைக்க நேட்டோ கூட்டமைப்பு  ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் கூறினார்.



Read in source website

சிமெண்ட் துறையின் விற்பனை வளா்ச்சி விகிதம் நடப்பு 2021-22-ாம் நிதியாண்டில் 18-20 சதவீதமாக இருக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2021-22-ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் சிமெண்ட் துறையின் வளா்ச்சி விகிதம் விற்பனை அளவின் அடிப்படையில் 18-20 சதவீதமாக இகுக்கும். இதையடுத்து, சிமெண்ட் விற்பனை 355 மில்லியன் மெட்ரிக் டன் என்ற அளவில் இருக்கும் என எதிா்பாா்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் சிமெண்ட் விற்பனையானது கரோனா பாதிப்புக்கு முந்தைய வளா்ச்சியை தாண்டி 6 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்கட்டமைப்பு நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளதையடுத்து சிமெண்ட் விற்பனை வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இக்ரா தெரிவித்துள்ளது.



Read in source website

'181'-க்கு ஓர் அழைப்பு... உங்களுக்காக என்னவெல்லாம் செய்யும் என்பதைத் தெரியப்படுத்துவதே இந்தக் கட்டுரையின் இலக்கு. இந்த தொழில்நுட்ப யுகத்தில் தனக்கென தனியாக செல்போன் இல்லாதோர் மிக மிகக் குறைவானவர்களாகவே இருக்கக்கூடும். அதுவும், கரோனா புகுத்திய ஆன்லைன் வகுப்புகளால் மாணாக்கர் கைகளில் செல்போன் எளிதாக சென்று சேர்ந்துவிட்டது. இந்த செல்போன் வாயிலாக பல்வேறு குற்றங்களும் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பாலியல் குற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. செல்போனில் ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், ஷாப்பிங் ஆப், டேட்டிங் ஆப், மேம் ஆப் என பல ஆப்களை வைத்துள்ள இளம் தலைமுறையின் '181' என்ற எண்ணை சேமித்து வைத்துக் கொள்வதும் அவசியம்.

'181'-க்கு ஓர் அழைப்பு... உங்களுக்காக என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? - * விருதுநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் 8 மாதங்களாக இரண்டு சிறுவர் உட்பட 5 பேரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். அந்தத் தொல்லையைத் தாங்க முடியாத அந்த இளம்பெண் '181' எண்ணை அழைத்துப் புகார் தெரிவித்தார். இந்த எண்ணைப் பயன்படுத்தி புகார் செய்ததன் மூலம் அவர் எதிர்கொண்ட துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சட்டப்பேரவையில் முதல்வர் உத்தரவிட்டார்.

* மயிலாடுதுறையைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மனநலன் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி தற்கொலைக்கு முயல்வதாக 181-க்கு அவரது அண்டை வீட்டார் புகார் தெரிவித்தனர். அந்தப் பெண்ணை பாதுகாக்க முடியாமல் அவரது தாத்தாவும், சிறு வயது தம்பியும் சிரமப்படுவதாகக் கூறினர். இதனையடுத்து அப்பெண் குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பெண் மீட்கப்பட்டு மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

* வேலூரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவரை அவரது 60 வயது தாய்மாமன் பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்தச் சிறுமி 60 வயது மாமனை தன் கணவன் என நம்பிவந்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து தகவல் அக்கம்பக்கத்தினர் வாயிலாக 181-ஐ எட்ட, வேலூர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியின் தாயும், மாமனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

மேற்கூறிய சம்பவங்கள் எல்லாம் 181 வாயிலாக நடந்த சில நன்மைகள். இந்த எண்ணிற்கு அழைத்ததன் மூலம் தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மனநல ஆலோசனைகளை பெண்கள் பெற்றுள்ளனர். சட்ட வழிகாட்டுதல்களைப் பெற்று தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். டேட்டிங் வன்முறையில் இருந்து மீண்டுள்ளனர். நிதி ரீதியான அச்சுறுத்தல்களில் இருந்து விடுபட்டுள்ளனர். இப்படி பற்பல நன்மைகள் நடந்துள்ளன.

எதற்காக, எப்போது அறிமுகமானது? - 181 என்பது மகளிருக்கான உதவி எண். இது கட்டணமில்லா தொலைபேசி எண். இது முதன்முதலில் தலைநகர் டெல்லியில் தான் தொடங்கப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். நிர்பயா என அரசால் அடையாளப்படுத்தப்படும் அவரின் வழக்குக்குப் பின் நீதிபதி வர்மா ஆணையம் பல்வேறு பரிந்துரைகளையும் அளித்தது. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனையும் அவரால் தான் பரிந்துரைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசு நிர்பயா நிதி என்ற நிதியை ஏற்படுத்தியது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் தான் மகளிருக்கான உதவி எண் 181 தொடங்கப்பட்டது. முதலில் டெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை இப்போது குஜராத், மும்பை, ஹைதராபாத் என ஆறு இடங்களில் அந்தந்த மாநில போலீஸாரின் உதவியுடன் சேஃப் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2018 டிசம்பர் 10 முதல் இச்சேவை செயல்படுகிறது. இங்கு அன்றாடம் குடும்ப வன்முறை, சொத்துரிமை பிரச்சினைகள், குடிகார கணவர்கள், வரதட்சணை கொடுமை, திருமணத்தை மீறிய உறவால் எழும் சிக்கல்கள், பாலியல் தொந்தரவுகள், பாலியல் ரீதியான மிரட்டல்கள் என பலதரப்பட்ட புகார்கள் வருகின்றன.

3 ஸ்டெப் சொல்யூஷன்... - 181 கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஒருவர் அழைக்கும் போது அந்த நபரின் புகார் தன்மை முதலில் அதன் வீரியத்தின் அடிப்படையில் க்ரைஸிஸ், நான் க்ரைஸிஸ் அதாவது தீவிரமான, தீவிரத்தன்மை குறைவான என்றளவில் பிரிக்கப்படுகிறது. பிரச்சினையின் தீவிரம் கருதி சில நேரங்களில் அவை 100-க்கு மடைமாற்றப்படுகின்றன. சில நேரங்களில் பெண்கள் ஆலோசனைகள் கேட்டோ, புகலிடம் கோரியோ அழைப்பார்கள். அப்படியான நேரத்தில் அதற்கான சரியான அமைப்புடன் தொடர்பில் இணைக்கப்படுவர். அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒன் ஸ்டாப் சென்டர்கள் உள்ளன.

இது பெண் குழந்தை, இளம் பெண், மூதாட்டி என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் அவர்களுக்கான பிரச்சினைகளுக்கான தீர்வைக் கண்டறிய உருவாக்கப்பட்டது. எங்கள் மையம் மூலம் பெண்கள் அவர்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு தெளிவான மனநிலையில் முடிவுகளை எடுக்க உதவி செய்கிறது. உளவியல் ரீதியான, சட்ட ரீதியான, காவல்துறை ரீதியான அனைத்து உதவிகளையும் செய்வதோடு மறுவாழ்வு என்பதையும் உறுதி செய்கிறது.

ஸ்கில் ட்ரெய்னிங் மூலம் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்கிறது. சிலர் குழந்தைகளாக இருக்கும்போது ஒன் ஸ்டாப் சென்டரை அணுகியிருக்கலாம் அவர்கள் 18 வயதை அடையும் போது அவர்களுக்கான உயர் கல்வி, தொழிற்கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறது இந்த ஒன் ஸ்டாப் சென்டர். முதியோர் இல்லம் தேடும் மூதாட்டிக்கும் ஒன் ஸ்டாப் சென்டரில் தீர்வு கிட்டுகிறது.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்பத்தினருடன் சேர்த்தே ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அப்போது குழந்தைகளுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, குடும்பப் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு குழந்தைமையை அனுபவிக்க சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இணையதளத்திலும் புகார்.. - 181 எண்ணை அழைத்துப் புகார் சொல்ல இயலாத நேரத்தில் https://tn181whl.org/tamil/ என்ற இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள சேட் (Chat) சேவையைப் பயன்படுத்தியோ இ ஃபார்ம் பயன்படுத்தியோ புகார் அளிக்கலாம். 24 மணி நேரமும் இயங்கக் கூடிய டோல் ஃப்ரீ எண்ணைப் பற்றி அறிந்து கொள்வதோடு அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.



Read in source website

சென்னை: வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் கனிம வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என வலியுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், மணல் மற்றும் கனிமப் பொருட்களை கடத்த பயன்படுத்தியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேரிடமிருந்து சட்டவிரோதமாக மணல் மட்டும் கனிம பொருட்களை கடத்தியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க நாகை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மறுத்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கில், தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. தங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வாகனங்கள் வெயில், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் சிக்கி பாதிப்புக்குள்ளாகிறது . இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுவதால் அவற்றை விடுவிக்க வேண்டுமெனவும், விசாரணைக்கு தேவைப்படும்போது அந்த வாகனங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வாகன உரிமையாளர் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், இழுத்தடிப்பு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

மேலும், நமது தாய் மண்ணை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் முன்னோர்கள் வழங்கியுள்ளனர். இதை வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் எந்தக் காரணத்தையும் முன்னிட்டும் கனிம வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. இந்த இயற்கை வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படும். இந்த பூமி மீது ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பாதிப்பையும் கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கக் கூடாது.

சுத்தமாக ஓடிய ஆறுகள் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மணல் கடத்தல் வழக்குகளில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதையும் மேற்கோள் காட்டி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.



Read in source website

சென்னை: கதர் வாரியம் தயாரித்துள்ள புதிய பொருட்கள் விற்பனை மற்றும் நெசவாளர் குறைதீர்க்கும் மையம் ஆகியவற்றை கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் ‘காதி பராம்பரியம்’ என்றபெயரில் தூயமல்லி, கருப்பு கவுனி, பூங்கார், சீரக சம்பா,மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி மற்றும் பூங்கார் அரிசி வகைகளையும், ‘காதி நியூ லைப்’ என்றபெயரில் கடலெண்ணெய், நல்லெண்ணெய், ‘காதி ஃபிரஷ்’ என்ற பெயரில் நறுமணங்களைக் கொண்ட அகர்பத்திகள், மதிப்புக் கூட்டப்பட்ட தேன் வகைகளை தயாரித்துள்ளது.

இப்புதிய பொருட்கள் அறிமுகவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று புதிய பொருட்களை அறிமுகப்படுத்தினர்.

பின்னர், கைத்தறித் துறை ஆணையரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தையும் அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நெசவாளர்கள் வேலைவாய்ப்பு, கூலி உயர்வு உள்ளிட்ட தங்களது குறைகளைத் தெரிவிக்கவும், கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும் வேண்டி இந்தகுறைதீர்ப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. https://gdp.tn.gov.in/dhltx என்ற இணையதளம் மூலமாகவும், wgrcchennai@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும், 044-25340518 என்ற தொலைபேசி எண்மூலமாக தொடர்பு கொண்டு நெசவாளர்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்” என்றார்.



Read in source website

புதுடெல்லி: மாணவர்களுக்கான தேசிய மதிய உணவுத் திட்டத்தில் காலை உணவு சேர்க்கப்படவில்லை என மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ''தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4,000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22 ஆண்டில் மத்திய அரசு மதிப்பிட்டது. அதன்படி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ததா?'' எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவியின் எழுத்துபூர்வமானப் பதில்: ''தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ஆண்டின்படி 1 முதல் எட்டாம் வகுப்பு வரை அல்லது 6 முதல் 14 வயது இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஊட்டச்சத்துடன் சமைக்கப்பட்ட மதிய உணவு பெற தகுதியானவர்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதத்தை உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவு அளிக்கப்படுகிறது. இது, தொடக்கப் பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால், முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன'' என பதில் அளித்துள்ளார்.



Read in source website

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடைமுறைப்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேர முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அவர்கள் தேசிய தகுதித்தேர்வு (நெட்) மற்றும் ஆராய்ச்சிக்கான மானியத்தொகை (ஜெஆர்எப்) தேர்ச்சி பெற்றிருந்தால் உதவித்தொகை பெற முடியும், பட்டம் பெற்றபின்பு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவர்.

இந்த நடைமுறையை முழுமையாக மாற்றும் வகையில் புதிய விதிமுறைகளை யுஜிசி கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் எந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பிஎச்டி படிப்பில் சேருவதென்றாலும் நுழைவுத்தேர்வு அவசியம் என்பதே அந்த நடைமுறை. தேசிய தேர்வு முகமை(என்டிஏ) நடத்தும் நெட், ஜெஆர்எஃப் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்தந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிஎச்டி படிக்க இடம் கிடைக்கும்.

தகுதி மதிப்பெண்

நெட், ஜெஆர்எஃப் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 60 சதவீத இடங்களும், கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 40 சதவீதம் என்ற வகையிலும் மாணவர் சேர்க்கை இருக்கும். நெட், ஜெஆர்எஃப் தேர்ச்சி பெற்று விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேர விரும்பும் படிப்பு தொடர்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும். இதிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். நுழைவுத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெறுவது கட்டாயம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு. பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் இடம் கோரும் மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வுக்கு 70 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 30 மதிப்பெண்கள் என்ற வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். இரண்டு வழியிலும் பிஎச்டி படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இடம் வழங்கப்படும்.

முதுநிலை பட்டம் முடித்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு நுழைவுத்தேர்வை எழுதி பிஎச்டி படிப்பில் சேர முடியும். தேசிய கல்விக் கொள்கையின்படி கொண்டு வரப்படும் 4 ஆண்டு பட்டம் முடித்த மாணவர்கள் 10க்கு 7.5 தர மதிப்பீடு இருந்தால் நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். வெறும் 55 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்திருந்தால் அவர்கள் 4 ஆண்டு இளநிலை படிப்பிற்குப் பிறகு ஓராண்டு படிப்பை முடித்தால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். இரண்டு வழியிலும் ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் இடம் காலியாக இருந்தால் மற்ற பிரிவு வழியாக தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு இடங்கள் நிரப்பப்படும்.

படிப்புக்கான கால அளவு

தற்போது பிஎச்டி படிப்புகளை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளில் இருந்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 6 ஆண்டுகளாகவும் மாற்றப்படுகிறது. இதில் பெண்களுக்கு 240 நாட்கள் வரை பேறுகால சலுகையும் வழங்கப்படுகிறது. பிஎச்டி ஆராய்ச்சியை முடிக்கும் மாணவர்கள் அதை சமர்ப்பிக்கும் முன்பு ஆராய்ச்சியின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் காப்பியடிப்பதை கண்டறியும் மென்பொருள் சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையின்படி, பிஎச்டி பட்டப்படிப்பை தரமானதாக மாற்றும் முயற்சியாக இத்தகைய மாற்றங்களை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்தங்களை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்காக யுஜிசி வெளியிட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை அவர்களின் கருத்துகளைப் பெற்று பின்னர் மத்திய கல்வித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி மாற்றங்களை இறுதி செய்யவுள்ளது.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேருகின்றனர். அவர்கள் அனைவரும் இனி யுஜிசி குறிப்பிட்டுள்ள இந்த 2 நுழைவுத்தேர்வுகள் வழியாக மட்டுமே பிஎச்டி படிப்பில் சேர முடியும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை. எந்த நுழைவுத்தேர்வையும் அனுமதிக்க மாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் யுஜிசி-க்கும் இடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது.



Read in source website

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள பிரபல துலிப் மலர்த் தோட்டம் நேற்று பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் நகரில் உலகப் புகழ்பெற்ற தால் ஏரியை ஒட்டி, இந்திரா காந்தி நினைவு துலிப் மலர்த் தோட்டம் உள்ளது. ஆசியாவில் மிகப்பெரிய துலிப் மலர்த் தோட்டமான இது,நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. பல வண்ணங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட துலிப் மலர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் வசந்த காலத்தில் நடைபெறும் துலிப் திருவிழாவுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். துலிப் விழாவையொட்டி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக மலர் சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த மலர்த்தோட்டம் நேற்று பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் ஏ.கே.மேத்தா இதனைதிறந்து வைத்தார். நாட்டில் கரோனா நிபந்தனைகள் தளர்த்தப்பட்ட பிறகுகாஷ்மீருக்கு இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப்பருவத்தில் சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதில் துலிப் மலர்த் தோட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என நம்பப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மலர் வளர்ப்புத் துறை ஆணையர் ஷேக் பயாஸ் கூறும்போது, “துலிப் மலர்த் தோட்டப் பணியில் கடந்த 9 மாதங்களாக ஈடுபட்டு வந்தோம். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக சுற்றுலாப் பயணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

முதல் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தோட்டத்தில் குவிந்தனர். அங்கு அவர்களை மகிழ்விக்கும் வகையில் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



Read in source website

இம்பால்: மணிப்பூர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று முதல்வராக பிரேன் சிங் மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

இதில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி, ஞாயிறு ஆகிய2 நாட்கள் விடுமுறை என்றும் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அரசுஅலுவலகங்கள் 5 நாள் மட்டுமே செயல்படும் என்ற அறிவிப்பால் அரசு ஊழியர்களின் பணி மற்றும்உற்பத்தித் திறன் மேம்படும். 2 நாள்விடுமுறையில் அவர்கள் தங்களை புதுப் பித்துக் கொள்ளவும் உதவும். அலுவலக நேரம் காலை 9 மணிக்கே தொடங்கும். வீட்டு நிர்வகம் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பள்ளிகளில் வகுப்புகள் காலை 8 மணிக்கே தொடங்கும். மதிய நேரங்களில் பள்ளி மாணவர்கள் வீடுகளில் பாடத்தை பயில நேரம் கிடைக்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.



Read in source website

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியா 400 பில்லியன் டாலர் அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. நிதி ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே திட்டமிட்ட இந்தஇலக்கை இந்தியா அடைந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘400 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்து, அதை அடைந்துள்ளது. இதற்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். நமது ‘தற்சார்பு இந்தியா’ பயணத்தில் இது ஓர் மைக்கல். உள்ளூர் பொருட்கள் உலக அளவில் செல்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியா, சரக்குகள் (400 பில்லியன் டாலர்) மற்றும் சேவைகள் (250 பில்லியன் டாலர்) என மொத்தமாக 650 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது.

இந்நிலையில் நிதி ஆண்டு முடிய இன்னும் 9 தினங்கள் உள்ள நிலையில், சரக்குகள் ஏற்றுமதியில் திட்டமிட்ட இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீத உயர்வு ஆகும். 2020-21-ம் நிதி ஆண்டில் 292 பில்லியன் டாலர் அளவில் இந்தியா ஏற்றுமதி செய்தது.

அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 33 பில்லியன் டாலர் அளவில் சரக்குகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. பெட்ரோலியம் தயாரிப்புகள், மின்னனு சாதனங்கள், பொறியியல் பொருட்கள், தோல், காஃபி, பிளாஸ்டிக், ஜவுளிகள், இறைச்சி மற்றும் பால் தயாரிப்புகள், புகையிலை உள்ளிட்டவை ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

- பிடிஐ 



Read in source website

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார்.

உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது:

உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். ஒரு நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்பட்டு மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்த மாநில அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அவ்வாறு செய்யும் முதல் மாநிலம் உத்தராகண்ட் இருக்கும். .

இவ்வாறு அவர் கூறினார்.



Read in source website

கீவ்: இரண்டாம் உலகப் போரில் உயிர்பிழைத்தவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர், போரிஸ் ரோமன்சென்கோ (96).இவர் இரண்டாம் உலகப் போரின்போது, கொடுங்கோலர் ஹிட்லரின் 4 வதை முகாம்களில் இருந்து உயிர் தப்பியவர் ஆவார். பின்னர் இவர் உக்ரைன் நாட்டுக்குத் திரும்பி வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் அவரது பேத்தி யூலியா கூறியதாவது:

கடந்த 18-ம் தேதி, கார்கிவ் நகரில் சால்டிவ்கா குடியிருப்பு பகுதியில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அறிந்தேன். அங்கு வசித்து வரும் என் தாத்தா பற்றி ஏதாவது தெரியுமா என்று அங்கிருந்த எனது நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் தாத்தாவின் எரியும் வீட்டை படம் எடுத்து அனுப்பினர். அத்துடன் அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இதைப்பற்றி நான் அறிந்தேன். எனவே என்னால் அங்குஉடனடியாக செல்ல முடியவில்லை. அவர் இறந்தது எனக்குபெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என்று சோகத்துடன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை டிமிட்ரோ குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், பீனமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். அவர் கார்கிவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய ராணுவம் வீசிய வெடிகுண்டு இவரது வீட்டில்விழுந்து இவர் உயிரிழந்தார். ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

1926-ல் போன்டாரி என்ற பகுதியில் பிறந்த போரிஸ், 2-ம் உலகப் போரில் பங்கேற்றார். 1942-ல் டார்ட்மண்ட் பகுதிக்கு நாடு கடத்தப்பட்ட போரிஸ், அங்கு ஹிட்லரின் 4 வதை முகாம்களில் சிக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பி உக்ரைன் திரும்பினார்.

இந்நிலையில் அவரது மறைவு,கார்கிவ் பகுதியிலுள்ள பலருக்குபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் வெளியுறவு, பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அமைச்சகங்களின் ட்விட்டர் பக்கத்தில், “ஹிட்லரால் செய்ய முடியாததை எல்லாம் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு செய்துள்ளது” என பதிவிடப்பட்டுள்ளது.



Read in source website

Lapsus$ ஹேக்கர் குழு, மைக்ரோசாஃப்ட், சாம்சங், ஓக்டா மற்றும் என்விடியா நிறுவனங்களை குறிவைத்துள்ளது. எப்படி இந்தத் தாக்குதல்களை நடத்தியது உட்பட அனைத்து தகவல்களையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

என்விடியா, சாம்சங், யுபிசாஃப்ட், ஓக்டா போன்ற பிற முக்கிய நிறுவனங்களும் இதே ஹேக்கர் குழுவால் டாக்கெட் செய்யப்பட்டதாக தகவல் கிடைத்ததையடுத்து, மைக்ரோசாஃப்ட் தகவலை வெளியிட்டுள்ளது. ஓக்டாவின் பாதுகாப்பு சிஸ்டம் ஹேக்கர் ஊடுருவலை முதலில் தடுத்துள்ளது. , ஆனால் பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஹேக்கர்கள் ஊடுருவலால் சுமார் 366 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறுகிறது.

தென் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Lapsus$ ஹேக்கர் குழு, டெலிகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களில் தங்கள் ஹேக்குகள் மற்றும் திருடப்பட்ட தரவுகளின் ஸ்கிரீன்ஷாட்களைப் பற்றிய விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. சமீபத்திய சைபர் தாக்குதல் குறித்து இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

மைக்ரோசாஃப்ட் ஹேக் செய்யப்பட்டது எப்படி?

லாப்சஸ்$ குழு இந்த வாரம் மைக்ரோசப்ட் நிறுவனத்திடமிருந்து தரவைத் திருடியதாக அறிவித்தது. முக்கிய மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளான பிங், கோர்டானா மற்றும் பிங் மேப்ஸிற்கான சோர்ஸ் கோட் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக மைக்ரோசாஃப்ட் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளரின் கோட் அல்லது தரவு திருடுப்போகவில்லை என்பது உறுதியானாலும், ஒரு கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், ஹேக்கர்கள் குறுகிய அளவிலான தகவல்களை திருடியிருக்க வாய்ப்புள்ளது.

மைக்ரோசாஃப்ட் பதிவில், ” எங்கள் சைபர் பாதுகாப்பு குழு, ஹேக் செய்யப்பட்ட கணக்கை மீட்டெடுக்கும் பணியிலும், எதிர்காலத்தில் இத்தகைய ஊடுருவல்களை தடுப்பதற்கான பணயிலும் ஈடுபட்டுள்ளனர். தயாரிப்புகளின் சோர்ஸ் குறியீடை பார்ப்பது பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதமுடியாது. அதை தெரிந்துக்கொள்வதால் தயாரிப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது” என குறிப்பிட்டிருந்தனர்.

Lapsus$ குழுவின் இலக்கு யார்? Okta கவனம் பெற என்ன காரணம்?

லாப்சஸ்$ பல நிறுவனங்களை குறிவைத்திருப்பதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்திருந்தது. இந்த ஹேக்குகள் குறித்து, Lapsus$-வும் தங்களது டெலிகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர். இந்த குழு, சைபர் தாக்குதலின் போது மற்ற குழுக்களை போல் மறைந்துக்கொள்ளாமல், பகிரங்கமாக குற்றத்தை ஒப்புக்கொள்கிறது.

கிடைத்த தகவலின்படி, NVIDIA, Samsung, Ubisoft மற்றும் Okta ஆகியவை Lapsus$ ஹேக்கர்கள் குறிவைத்த சில நிறுவனங்களாகும். இதில், okta ஹேக் செய்யப்பட்டது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சான் பிரான்ஸ்சிஸ்கோவை தளமாக கொண்ட okta நிறுவனம், FedEx Corp, T-Mobile, Moody’s Corp மற்றும் Coinbase Global மற்றும் கிளவுட் சேவை வழங்குநரான Cloudflare போன்ற பல முக்கிய நிறுவனங்களுக்கு ஆன்லைன் அங்கீகார சேவைகளை வழங்குகிறது.

Okta தனது வாடிக்கையாளர்களில் சுமார் 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதேசமயம், ஹேக்கர்களால் ஒட்டுமொத்த சிஸ்டம் அணுகலை பெற முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தது.

Okta இன் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் Okta கணக்கு லாகின் செய்யப்பட்ட கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளனர். ஜனவரி 2022 இல் வாடிக்கையாளர் சப்போர்ட் என்ஜினியர் கணக்கை ஹேக் செய்ய முயற்சித்ததின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் கருதப்படுகிறது.அச்சமயத்தில், okta தனது வாடிக்கையாளர்களை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செக் பாயிண்ட் சாப்ட்வேரின் அச்சுறுத்தல் நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சியின் தலைவரான லோடெம் ஃபிங்கெல்ஸ்டீனின் கூற்றுப்படி, ஹேக்கிங் உண்மையென்றால், Okta இல் உள்ள ஊடுருவல் Lapsus$ தனது இலக்கை எவ்வாறு அடைய முடிந்தது என்பதை விளக்கலாம். ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் Okta ஐப் பயன்படுத்துகின்றன.

Okta-வில் இருந்து தனியார் கீம் நம்பரை ஹேக் செய்வது மூலம், கார்ப்பரேட் நெட்வொர்க்குகள் மற்றும் பயன்பாடுகளுக்கான அணுகல் சைபர் மோசடி கும்பலுக்கு கிடைக்கிறது. எனவே, ஒக்டா ஊடுருவல் பேரழிவு தரக்கூடிய விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றார்.

Okta இன் சேவைகள் மற்ற பயனர்களால் ஆன்லைன் பயன்பாடுகள் மற்றும் இணையதளங்களில் உள்நுழைய அனுமதிக்க பயன்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், Nvidia கூறுகையில், ஹேக்கிங் தாக்குதலின் தாக்கத்தை கண்டறிவதிலும், மதிப்பீடு செய்வதிலும் ஈடுப்பட்டுள்ளோம். இந்த சம்பவம் ஒரு ransomware தாக்குதல் என்று தெரிவித்தது.

சாம்சங்கைப் பொறுத்தவரை, ஹேக்கர் குழுவானது கிட்டத்தட்ட 200GB தரவுக்கான அணுகலைக் காட்டும் ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டது. இதில், கேலக்ஸி சாதனங்களில் என்கிரிப்ஷன் மற்றும் பயோமெட்ரிக் அன்லாக் செயல்பாடுகளில் சாம்சங் பயன்படுத்திய குறியீடுகளும் இருந்தன.

சாம்சங் கூற்றுப்படி, இது நிறுவனத்தின் உள் செயல்பாட்டின் தரவு ஊடுருவல் மட்டுமே ஆகும். ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு எதுவும் திருடப்படவில்லை என விளக்கியுள்ளது. இது, கேலக்ஸி சாதனங்கள் தொடர்பான மூலக் குறியீடு ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

Lapsus$ தாக்குதலை எப்படி நடத்தியது?

மைக்ரோசாப்டின் வலைப்பதிவு, இந்த தாக்குதல் எப்படி நடந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியங்களை கூறுகிறது. சைபர் குற்றவாளிகள் ஃபிஷிங் தாக்குதல்கள் மூலம் தனி நபர்களின் முக்கியமான தகவலை சேகரிக்கின்றனர். பின்னர் அதனை பயன்படுத்தி, கணக்கை ஹேக் செய்கின்றனர்.

உதாரணமாக, ஒருவரின் பிறந்த தேதி, தாயார் பெயர், பிடித்த உணவு போன்ற தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் கணக்கெடுப்பை ஆன்லைனில் நடத்துவார்கள். பின்னர், அந்த தரவை பயன்படுத்தி, கணக்கின் பாஸ்வேர்டை யுகித்து ஹேக்கில் ஈடுபடுவார்கள்.

மைக்ரோசாப்டின் கூற்றுப்படி, இந்த ஹேக்கர் குழு ransomware-ஐ களமிறக்காமல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அழிக்கும் மாதிரியை” நம்பியுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்க நிறுவனங்களை மட்டுமே டார்கெட் செய்த இந்தக் குழு, தற்போது உலகளவில் உலகளவில் விரிவடைந்துள்ளது. அவர்களின் இலக்குகளில் அரசு, தொழில்நுட்ப தொலைத்தொடர்பு, ஊடகம், சில்லறை வணிகம் மற்றும் சுகாதாரம் என பல்வேறு துறைகளில் உள்ளன. ஏன், கிரிப்டோகரண்சி முதலீடுகளை திருட, அதன் பரிவர்த்தனையும் ஹேக் செய்ய முயற்சிக்கின்றனர்.

முக்கியமாக இந்த குழு, மற்ற ஹேக்கர்களால் பயன்படுத்தப்படாத சில தந்திரங்களை நம்பியுள்ளது. அதாவது, கணக்குகளை ஹேக் செய்ய சிம் மாற்றுதல், இலக்கு நிறுவன பணியாளர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கின் அணுகலை பெறுதல் போன்றவை ஆகும்.

சில சமயங்களில், நெட்வொர்க்குகள் மற்றும் அமைப்புகளுக்கான அணுகலைப் பெறுவதற்காக, நிறுவன பணியாளர்கள் அல்லது சப்ளையர்களுக்கு பணம் கொடுக்கவும் செய்துள்ளது.

மற்றொரு உதாரணம், இலக்கின் நம்பிக்கையை பெற ஒரு நிறுவனத்தின் ஹெல்ப் டெஸ்கை அழைத்து பேசுவைதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ஹெல்ப் டெஸ்க்கை ஏமாற்றி அணுகலை பெற, அந்த இலக்கு குறித்து பெறப்பட்ட தகவல்களை உபயோகிக்கும் பழக்கமும் உள்ளது.

தப்போதைக்கு, இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வணிகங்கள் மல்டி-ஃபாக்டர் அங்கீகாரத்தை (MFA) நம்பியிருக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் பரிந்துரைத்துள்ளது. சிம் மாற்றி ஹேக் செய்வதால், மெசேஜ் போன்ற பலவீனமான MFA காரணிகளை நம்பியிக்க வேண்டாவும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. எளிய குரல் ஒப்புதல்கள், புஷ் அறிவிப்புகள் அல்லது “இரண்டாம் நிலை மின்னஞ்சல்” அடிப்படையிலான MFA முறைகளும் பாதுகாப்பற்றது என தெரிவித்துள்ளது.

இந்த ஷோசியல் இன்ஜினியரிங் தாக்குதல் குறித்து ஊழியர்களிடமும், நிறுவனங்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.



Read in source website

தங்கள் சமூக படைப்பிரிவை ராணுவத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அஹீர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் மார்ச் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்கள் சமூக படைப்பிரிவை ராணுவத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி அஹீர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி-குர்கான் நெடுஞ்சாலையில் மார்ச் 23ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குர்கானில் கேர்கி டெளலா சுங்கச் சாவடியில் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் அஹீர் சமூகத்தினர் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம் வாருங்கள்.

அஹீர்வால் பிராந்தியம் ஹரியானாவில் தெற்கு மாவட்டங்களான ரெவாரி, மகேந்திரகர், குர்கான் ஆகியவற்றை ஒருங்கிணைந்த பகுதியாக கொண்டுள்ளது.

அஹீர் சமூகத்தினர் அதிக அளவில் இந்திய ராணுவத்தில் இருந்தவர்கள் ஆவர். 1962-ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிரான போரில் அஹீர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பங்காற்றினர். இதையடுத்து, அவர்கள் நாடு முழுவதும் அறியப்பட்டவர்களாக ஆகினர்.

குமாவன் படைப்பிரிவிலும், மேலும் சில படைப்பிரிவிலும் அஹீர் சமூகத்தினர் அங்கம் வகித்து வருகின்றனர்.
ஆனால், அஹீர் படைப் பிரிவு என்ற பெயரில் மீண்டும் அந்தப் பிரிவை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2012ஆம் ஆண்டில் அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆண்டு தான் சீனாவை எதிர்த்து போராட்டம் நடத்தி 50 ஆண்டுகள் நிறைவு செய்த ஆண்டாகும். தற்போது 60 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் அஹீர் சமூகத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சியினரும் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குமாவன், இந்தியா ராணுவத்தில் அஹீர் சமூகத்தினரின் வரலாறு என்ன?

குமாவன், ஜாட், ராஜ்புத் ஆகியோரை கொண்ட படைப்பிரிவில் அஹீர் சமூகத்தினர் சேர்க்கப்பட்டனர்.

அஹீர் சமூகத்தினர் 19 ஹைதராபாத் படைப்பிரிவில் தொடக்கக் காலத்தில் கணிசமான அளவில் சேர்க்கப்பட்டனர். 19 ஹைதராபாத் படைப்பிரிவில் ஆரம்ப காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராஜ்புத் சமூகத்தினரும், தக்காண பீட பூமியிலிருந்து முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டனர். மேலும் சில சமூகத்தினரும் சேர்க்கப்பட்டனர்.

1945ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி இந்த படைப்பிரிவின் பெயர் 19 குமாவன் என்று மாற்றப்பட்டது.
சுதந்திரத்துக்கு பிறகு குமாவன் என்று ஆனது.

குமாவன் படைப் பிரிவின் 13ஆவது பட்டாளம், ரெஸாங் லா பகுதியில் சீன ராணுவத்தினரை விரட்டி அடித்ததில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பட்டாளத்தில் குமாவனிகள் மற்றும் அஹீர் சமூகத்தினர் சரிசம விகிதத்தில் கலந்திருந்தனர்.

குமாவன் படைப் பிரிவில் 13ஆவது குமாவன் பட்டாளம் 1960களில் உருவாக்கப்பட்டது. அதில் அஹீர் சமூகத்தினர் முக்கிய அங்கம் வகித்தனர்.

ரெசாங் லா பகுதியில் அஹீர் சமூகத்தினரின் பங்கு என்ன?

கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங் லா பகுதியில் 13ஆவது குமாவன் படை சீனர்களை விரட்டி அடித்தது.
இந்தச் சண்டை 1962ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கியது. சண்டை நடந்த இடம் நிலப் பரப்பிலிருந்து 17,000 அடி உயரத்தில் இருந்தது.

117 பட்டாளங்களில் 114 பட்டாளங்களைச் சேர்ந்த அஹீர் சமூகத்தினர் உயிர்த் தியாகம் செய்தனர்.

அரசியல் கட்சிகளும் இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பது ஏன்?

கடந்த சில பத்தாண்டுகளாக அரசியல் கட்சிகள் அஹீர் சமூகத்தினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அஹீர் சமூகத்தினர் செல்வாக்கு உள்ளது. கடந்த 2018இல் இரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் இந்திரஜித் சிங், அஹீர் படைப்பிரிவை ராணுவத்தில் சேர்க்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதினார்.

அஹீர் சமூகத்தினரின் வீரத்தை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹூடா மாநிலங்களவையில் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான ஷியாம் சிங் யாதவும் அஹீர் படைப் பிரிவை இந்திய ராணுவத்தில் சேர்க்குமாறு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

அஹீர் சமூகத்தினரின் கோரிக்கைக்கு ராணுவத்தின் பதில் என்ன?

ஏற்கனவே இருக்கும் ஜாதி, மத அடிப்படையிலான படைப் பிரிவு மட்டும் தொடர்ந்து செயல்படும். புதிய கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

டோக்ரா, சீக், ராஜ்புத் பஞ்சாப் ஆகிய படைப் பிரிவுகளை தொடரவும், அஹீர், ஹிமாசல், கலிங்கா, குஜராத் மற்றும் பழங்குடியின படைப் பிரிவைச் சேர்க்க கோரும் கோரிக்கைகளை நிராகரிப்பதாகவும் ராணுவம் தெரிவித்தது.



Read in source website

1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

1914ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்ட நிலக்கரி எஞ்சின் 2017ம் ஆண்டு வரை நீலகிரி மலை ரயில் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. நூறாண்டுகளைக் கடந்தும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த எஞ்சினுக்கு ஓய்வு வழங்கப்பட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

அதன் திறன் குறித்தும், பழுதற்று செயல்படும் தன்மை குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் இந்த எக்ஸ் க்ளாஸ் எஞ்சி ந் 37384 திருச்சியில் உள்ள கோல்டன் ராக் பணி மணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு என்னென்ன பழுது இருக்கிறதோ அவை அனைத்தும் சரி செய்யப்பட்டது. இன்னும் 20 நாட்களில் அந்த பணி முடிவுற்றவுடன் மீண்டும் நீலகிரிக்கு கொண்டு வந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது நீலகிரி மலை ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர். ”உலகத்தில் வேறெங்கும் இந்த வகை ரயில் எஞ்சின்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்டு நூற்றாண்டை தாண்டியிருக்கும் இந்த எஞ்சின் மீண்டும் மலை ரயில் சேவையில் இணைக்கப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று இந்த பாரம்பரிய நினைவு சின்னத்தை பாதுகாக்க விரும்பும் ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கோல்டன் ராக் பணி மனை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்த எஞ்சினை (எண் 37400) 2021ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் பயன்பாட்டிற்கு வைத்தது. பழைய எஞ்சின் நிலையாக செயல்பட, 10 நாட்களுக்கு ஒரு முறையாவது பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் இந்த எஞ்சினின் அருமையை உணர்த்தும் பொருட்டு, இதன் தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.



Read in source website

ஈஷா அறக்கட்டளை நிறுவனர், ஆன்மீக தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மண் வளத்தைப் பாதுகாப்பதற்காக 100 நாள்களில் 30,000 கி.மீ சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு லண்டனில் திங்கள்கிழமை தனது பயணத்தை தொடங்கினார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் உலக அளவில் மண் வளத்தைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றவும் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 3 கண்டங்களில் உள்ள 27 நாடுகள் வழியாக 100 நாள்களில் 30,000 கி.மீ தொலைவு பி.எம்.டபில்யூ பைக்கில் உலக சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் BMW K1600 GT பைக்கில் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு 30,000 கிமீ பயணத்தை மார்ச் 21ம் தேதி தொடங்கினார். சத்குருவின் மோட்டார் பைக் பயணம் ஜூன் 21-ம் தேதி கோடைகால சங்கிராந்தியுடன் முடிவடைகிறது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான சத்குருவின் பி.எம்.டபிள்யூ பைக்கில் 30,000 கிமீ தொலைவு சுற்றுப்பயணம் லண்டன் பார்லிமென்ட் சதுக்கத்தில் தொடங்கியது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவுக்குச் செல்லும் வழியில் மண்ணைக் காப்பாற்றுங்கள் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்.

64 வயதான யோகா குரு ஜக்கி வாசுதேவ், 100 நாள் சுற்றுப்பயணத்திற்காக தனது பைக் சூட்டை அணிந்துள்ளார். அவர் இந்த வாரம், BMW K1600 GT பைக்கில் ஆம்ஸ்டர்டாம், பெர்லின் மற்றும் ப்ராகுவே நகரங்களுக்கு செல்கிறார்.

தனது சுற்றுப் பயணத்தின் வழியில் முக்கிய நகரங்களில் திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்ற பிறகு, இந்தியாவின் 75வது சுதந்திரத்தை முன்னிட்டு 75 நாட்களில் புதுடெல்லிக்கு தாயகம் திரும்புகிறார்.

“நாம் இப்போது செயல்படுவதுதான் மிகவும் முக்கியம். நான் 24 ஆண்டுகளுக்கும் மேலாக இதைப் பற்றி பேசி வருகிறேன். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் நேர்மறையான கொள்கை இருந்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்” என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது பைக் பயணம் பற்றி லண்டனில் உள்ள தூதரகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஐரோப்பாவின் பல பகுதிகளில் இன்னும் பனிப்பொழிவு உள்ளது, நாங்கள் இரு சக்கர வாகனத்தில் செல்வோம். இந்த வயதில், இது உண்மையில் மகிழ்ச்சியான சவாரி அல்ல. நான் ஏன் இதைச் செய்கிறேன் என்றால், 300,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இது நடக்கிறது… மண்வளம் குறைவது முக்கிய கவலைகளில் ஒன்று” என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்.

இந்த உலக சுற்றுப் பயணம், பயிரிடக்கூடிய மண்ணில் கரிம உள்ளடக்கத்தை அதிகரிப்பதற்கான தேசிய கொள்கைகளை நிறுவுவதற்கு நாடுகளை ஒப்புக்கொள்ளச் செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.

“நாம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தாலும் சரி, வாழ்க்கை மைதானத்தில் இருந்தாலும் சரி, நாம் நன்றாக விளையாட வேண்டுமானால், மண் நன்றாக இருக்க வேண்டும். ஒன்று கூடி விஷயங்களை மாற்றுவதற்கான நேரம். அதைச் செய்வோம்” என்று அவர் லண்டனில் கூறினார். அவரது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மிடில்செக்ஸ் கிரிக்கெட் கிளப் உடனான உரையாடலுக்காக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் வந்தார்.

கடந்த வாரம் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பேசிய ஜக்கி வாசுதேவ், “நம்மிடம் எவ்வளவு செல்வம், கல்வி, பணம் இருந்தாலும், மண்ணையும் நீரையும் மீட்டெடுக்காத வரை நம் குழந்தைகள் நலமாக வாழ முடியாது. பிரக்ஞை பூர்வமான கிரகம்தான் முன்னோக்கி செல்வதர்கான ஒரே வழி” என்று கூறினார்.

சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் தனிமையான பைக் உலக சுற்றுப் பயணம் ஜூன் 21-ம் தேதி கோடைகால சங்கிராந்தியுடன் முடிவடைகிறது. இந்த சுற்றுப் பயணம், காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள தனியார் விவசாய நிலங்களில் 2.42 பில்லியன் மரங்களை நடவு செய்து, கடுமையாக வறண்டு போன நதியை மீட்டெடுக்கவும், மண்ணுக்கு புத்துயிர் அளிக்கவும் உதவுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் (UNCCD) படி, 2050 ஆம் ஆண்டளவில் பூமியின் மண்ணில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலம் சிதைந்துவிடும். இது உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, வறட்சி மற்றும் பஞ்சம், பாதகமான காலநிலை மாற்றங்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்தல், மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகளாவிய பேரழிவு நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மண்ணைப் பாதுகாக்கும் பிரச்சாரமானது குறைந்தபட்சம் 3.5 பில்லியன் மக்களை அல்லது உலக வாக்காளர்களில் 60 சதவீத மக்களை மண்ணுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் அழிவை தடுப்பதற்கும் நீண்டகால அரசாங்கக் கொள்கைகளை ஆதரிக்க ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.



Read in source website

மக்களுக்கு அதிகம் கொரோனா பரவிவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் பொது இடங்களில் மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கும் தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் 1939 ஆம் ஆண்டு சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கோள் காட்டியது.

பல்வேறு மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ஜாகோப் புலியேல் உச்சநீதிமனஅறத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் தமிழக அரசு சார்பில் கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு அதிகம் கொரோனா பரவிவிடக் கூடாது என்ற காரணத்துக்காகவே கொரோனா தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டது.

தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வதை பொதுமக்களுக்கு கட்டாயமாக்கலாம் என்று தமிழக அரசின் 1939ஆம் ஆண்டு சுகாதாரச் சட்டத்தின் பிரிவு 76 (2) (b) பிரிவில் அம்சம் உள்ளது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஐநா பொதுச் சபையில் இரண்டு மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒன்று என மூன்று தீர்மானங்கள் தற்போது உள்ளன. மூன்று தீர்மானங்களின் மையமும் மனிதாபிமான சூழ்நிலையில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி’ தொடர்பான வரைவுத் தீர்மானங்கள் மீது ஐ.நா பொதுச் சபையும், பாதுகாப்புச் சபையும் வியாழன் அதிகாலை வாக்கெடுப்பு நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நியூயார்க் சென்றடைந்தார்.

புதனன்று ஐ.நா மற்றும் அரபு நாடுகளின் லீக் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற ஷ்ரிங்லா, ஐ.நா.வில் உக்ரைன் தொடர்பான மூன்று தீர்மானங்களை பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கியமாக இருப்பார்.

ஐநா பொதுச் சபையில் இரண்டு மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒன்று என மூன்று தீர்மானங்கள் தற்போது உள்ளன. மூன்று தீர்மானங்களின் மையமும் மனிதாபிமான சூழ்நிலையில் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்திருக்கிறது.

முதலாவது’ பிரெஞ்சு மற்றும் மெக்சிகன்களால் நிதியுதவி செய்யப்படுகிறது மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அதன் கண்டன மொழியில் “வலுவானது” என்று கூறப்படுகிறது, மேலும் இது மேற்கு நாடுகளால் ஆதரிக்கப்படுகிறது.

உக்ரைன் மற்றும் 70 க்கும் மேற்பட்ட மாநிலங்களின் இணை அனுசரணையுடன் ‘உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பின் மனிதாபிமான விளைவுகள்’ என்ற தலைப்பில் வரைவு தீர்மானத்தின் மீது’ ஐ.நா. பொதுச் சபை மீண்டும் வாக்களிக்கும்.

தென்னாப்பிரிக்க தீர்மானம் ஐ.நா. சபையில் ஒரு “நடுநிலை முயற்சி” ஆகும். ரஷ்யாவை பற்றி எதுவும் குறிப்பிடாத ஐ.நா.சபைக்கு’ போட்டித் தீர்மானத்தை ஆப்பிரிக்கா முன்வைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா பிரிக்ஸ் குழுவில் உறுப்பினராக உள்ளது. முன்னதாக ரஷ்யாவைக் கண்டிக்கும் தீர்மானத்தில் இந்தியாவுடன் சேர்ந்து வாக்களிக்கவில்லை.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனை விமர்சிக்கும் ரஷ்ய தீர்மானம் உள்ளது., அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பார்ப்பது முக்கியம்.

இந்த மூன்று தீர்மானங்களும் வியாழக்கிழமை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, “நியூயார்க்கில் வெளியுறவுச் செயலர் ஹர்ஷ வர்த ஷ்ரிங்லாவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐநா மற்றும் அரபு நாடுகளின் லீக் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வெளியுறவு செயலாளர் பங்கேற்பார் என்று ட்வீட் செய்திருந்தார்.

வெளியுறவு அமைச்சர்கள் தொடர் இந்தியாவுக்கு வருகை தரும் போது, கிரீஸ் மற்றும் ஓமன் வெளியுறவு அமைச்சர்கள் டெல்லியில் இருக்கும் போது ஷ்ரிங்லா நியூயார்க் சென்றிருப்பது, இந்த தீர்மானங்களுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.



வரலாறு பாடப் புத்தகங்கள் முற்றிலும் உண்மைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல; வாதங்கள் மற்றும் கருத்துக்கள் அடிப்படையிலானவை – மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர்

Textbooks based on facts, opinions, arguments; need to learn to distinguish: School Education Secy: NCERT பாடப்புத்தகங்களின் சில பகுதிகள், குறிப்பாக வரலாற்றுப் பகுதிகள் “விமர்சனம்” செய்யப்படுகின்றன, ஏனெனில் அவை “கருத்துகள் அல்லது வாதங்களை” அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவை “முற்றிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல” என்று பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் செயலாளர் அனிதா கர்வால் கூறினார். திங்கள்கிழமை நடைபெற்ற பாடத்திட்ட திருத்தம் தொடர்பான தேசிய கலந்தாய்வின் போது இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் சிபிஎஸ்இ தலைவரும், பள்ளிக் கல்வியின் மூத்த அரசு அதிகாரியுமான அனிதா கர்வால் கூறுகையில், தற்போது நாட்டின் கல்வி முறை ஒரு உரிமைகோரல், ஒரு உண்மை, ஒரு கருத்து அல்லது ஒரு வாதத்தை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்ட ஒரு குழந்தையை உருவாக்குவதில்லை, மாறாக இந்தியாவும் பங்கேற்கும் சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான (PISA) திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

“உதாரணமாக, அறிவியல் கற்றலைப் பற்றி நாம் பேசும்போது, ​​​​இது நாம் உண்மையில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு பகுதி, இது விமர்சன சிந்தனை பகுதி. அது அறிவியலாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி. மொழி பாடங்களிலும், சில NCERT நூல்களில் எழுதப்பட்ட சில விஷயங்களுக்காக மக்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவை உண்மையில் கருத்துக்கள் அல்லது வாதங்கள் மட்டுமே, அவை உண்மைகள் அல்ல, அதனால்தான் அவை விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் இதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளன. நமது வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் முற்றிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அவை கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை, அவை வாதங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு குழந்தை சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை வெளிப்படுத்துவதற்கு முன் இதையெல்லாம் வேறுபடுத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும், இது நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஒன்று, ”என்று அனிதா கர்வால் கூறினார்.

தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை (NCF) திருத்தியமைக்கும் தேசிய வழிகாட்டுதல் குழுவுடன் 25 நிபுணர்கள் அடங்கிய குழுவின் ஒரு நாள் நீடித்த உரையாடலின் போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்திய அறிவு முதல் கணிதக் கல்வி வரையிலான பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள், மே 15 ஆம் தேதிக்குள் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைத் தெரிவிக்கும் நிலைத் தாள்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சமூக அறிவியலில் கவனம் செலுத்தும் குழுவின் தலைவரான பேராசிரியர் (ஓய்வு) சி ஐ இசாக், தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்படும் வரலாறு “அகநிலை (Subjective) சார்ந்தது, புறநிலை (Objective) சார்ந்தது அல்ல” என்று கூறியதாக அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். அரசியலமைப்பின் முதல் பிரிவு நாட்டின் பெயரை விவரிக்கும் வரிசையை மாற்றியமைப்பது திருத்தத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றார்.

“இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று அரசியலமைப்பின் முதல் பிரிவு கூறுகிறது.

“குழந்தைகளின் மென்மையான மனங்களில், நாம் அவர்களுக்கு முதலில் பாரதத்தையும், பிறகு இந்தியாவையும் கற்பிக்க வேண்டும். அதாவது அரசியலமைப்பில் உள்ளதைப் போல இந்தியா என்ற பாரதத்திற்கு பதிலாக. மென்மையான மனதுக்கு சமூக அறிவியல் கற்பித்தல் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம், பள்ளி பாடத்திட்டத்தில் நமது வரலாறு அகநிலை சார்ந்து உள்ளது, புறநிலை சார்ந்து அல்ல. இந்தியத் தோல்வி, இந்துத் தோல்வி என்பதே பள்ளி பாடத்திட்டத்தின் முக்கிய கருப்பொருள். முஹம்மது கோரியின் வெற்றிகளைப் பற்றி நீங்கள் கேட்கலாம்… அலெக்சாண்டர் தி கிரேட்? என்று நாம் சொல்லலாம் அவரைப் சிறந்தவர் ஆக்கியவர் யார்? கிரேக்க மக்களுக்கு அலெக்சாண்டர் சிறந்தவர், அவர் இந்தியாவா அல்லது பாரதத்தைச் சேர்ந்தவரா? எனவே சமூக அறிவியலில் கவனம் செலுத்தும் குழுவின் கூட்டங்களில் இந்த பிரச்சனைகளை நாங்கள் விவாதித்தோம்” என்று அவர் கூறினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 இல் வலியுறுத்தப்பட்டுள்ள பண்டைய இந்திய அறிவு அமைப்பின் கூறுகளை பாடங்கள் முழுவதும் ஒருங்கிணைக்க, இந்தியாவின் அறிவு பற்றிய நிலைப் பத்திரம் மற்ற மையக் குழுக்களால் பின்பற்றப்படும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை செயலாளரின் கருத்துக்கள் முக்கியமானவை.

இதற்கிடையில், ஐஐடி பாம்பேயைச் சேர்ந்த பேராசிரியரும் இந்திய அறிவு பற்றிய கவனம் குழுவின் உறுப்பினருமான கே ராமசுப்ரமணியன் இருந்த பகல்நேர அமர்வுகளின் போது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பற்றி குறிப்பிடப்பட்டது: “இன்று காலை, யாரோ தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பற்றிய ஒரு கிளிப்பை அனுப்பிய மின்னஞ்சலைப் பார்த்தேன். உண்மைகளை மறைப்பதும், தவறாக சித்தரிப்பதும்தான் காலம் காலமாக நடந்து வந்தது, இந்திய அறிவைப் பொறுத்தமட்டில் இதுவே நடந்துள்ளது. இது அகற்றப்படும் என்று நான் நினைக்கிறேன், அதை நான் உறுதியாக உணர்கிறேன், மேலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் மிகைப்படுத்தப்பட்ட எந்த அறிக்கையையும் நாங்கள் ஒருபோதும் வெளியிட மாட்டோம் என்பதைப் பார்க்க, உருவாக்கப்பட வேண்டியவற்றை உருவாக்குவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம், ”என்று அவர் கூறினார்.

NCF திருத்தப் பயிற்சியின் 12 பேர் கொண்ட தேசிய வழிநடத்தல் குழு முன்னாள் ISRO தலைவர் கே கஸ்தூரிரங்கன் தலைமையில் உள்ளது. NCF கடைசியாக 2005 ஆம் ஆண்டு UPA அரசாங்கத்தின் கீழ் திருத்தப்பட்டது, அதற்கு முன் 1975, 1988 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் திருத்தப்பட்டது.

தற்செயலாக, கடந்த ஆண்டு டிசம்பரில், பாஜக எம்பி வினய் பி சஹஸ்ரபுத்தே தலைமையிலான ராஜ்யசபா கமிட்டி, பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிரதிநிதித்துவத்தை மறுஆய்வு செய்து, “சார்பு இல்லாத” புத்தகங்களுக்கான பிரதியை உருவாக்கி, ஒரு அறிக்கையை சபையில் தாக்கல் செய்தது. மேலும், மற்றும் வேதங்களில் இருந்து “பண்டைய ஞானம் மற்றும் அறிவு” பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.



Read in source website

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அவர் பதவியில் நீடிப்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாகி ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள எதிர்ப்பை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பிலாவல் புட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி), ஜமாத்-உலேமா-இஸ்லாம் (எஃப்) ஆகிய கட்சிகள் இணைந்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) ஆட்சியின் மீது கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் மார்ச் 25-ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினத்திலிருந்து மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற கீழவையில் இம்ரான் கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆறு கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 21 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கானுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவு இருந்து வந்தது. ஆனால், சொந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 அதிருப்தி உறுப்பினர்கள் அண்மைக்காலமாக இம்ரான் கானுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதன் விளைவாக கடும் விலைவாசி உயர்வு ஆகியவையே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டுகள். உலகையே கதிகலங்கச் செய்த கரோனாவின் தாக்கத்திலிருந்து பாகிஸ்தான் தப்பினாலும், பொருளாதார நெருக்கடி, அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதால் பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரிப்பு என பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த இம்ரான் கானின் தலைக்கு மேல் கத்தியாக இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொங்கிக் கொண்டிருக்கிறது.
 இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க இம்ரான் தரப்பு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அது எந்த அளவுக்குப் பலன் தரப்போகிறது என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் 63-ஏ பிரிவின்படி, முக்கிய பிரச்னைகளில் கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்களிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
 ஆனால், இந்த முறை கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்கூட்டியே தகுதி நீக்கம் செய்ய முடியுமா என விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது ஆளும் கட்சி. இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
 இறுதி முயற்சியாக, ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்கிற பாகிஸ்தான் கட்சிகளின் வழக்கமான உத்தியையும் இம்ரான் கான் கையில் எடுத்துள்ளார். கடந்த வாரம் ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை இம்ரான் கான் சந்தித்ததும், இதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது.
 ஆனால், அதில் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்ரான் கானுக்கும் ராணுவத் தலைமைக்கும் அண்மைக்காலமாக உறவில் விரிசல் விழுந்துள்ளதே அதற்குக் காரணம்.
 இரு பெரும் கட்சிகளை வீழ்த்திவிட்டு 2018-இல் இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்தபோது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். ஆனால், பாகிஸ்தானின் கடந்த கால வரலாற்றைப் போலவே அவரது ஆட்சியின் பிடியும் ராணுவத்தின் வசமே இருந்து வருகிறது. இரு தரப்புக்குமான உறவில் கடந்த ஆண்டு விரிசல் விழுந்தது.
 நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஃபயஸ் ஹமீதை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக நதீம் அன்ஜுமை ராணுவ தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பஜ்வா நியமித்தபோது அதற்கு இம்ரான் கான் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த உத்தரவில் கையொப்பமிடாமல் மூன்று வாரங்கள் காலம் தாழ்த்தினார்.
 இம்ரான் உதவியுடன் ராணுவ தலைமைத் தளபதி ஆவதற்கு ஃபயஸ் ஹமீதும், ஃபயஸ் ஹமீது உதவியுடன் மீண்டும் பிரதமர் ஆவதற்கு இம்ரானும் மறைமுக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பின. அதன்பிறகு ஐஎஸ்ஐ புதிய தலைவராக நதீம் அன்ஜும் நியமனத்தை இம்ரான் கான் அங்கீகரித்தாலும், அவருக்கும் ராணுவத்துக்குமான உறவில் விரிசல் தொடர்கிறது.
 இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட எதிர்க்கட்சிகள், இம்ரானுக்கு எதிராக ஒன்று திரண்டன. படிப்படியாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இப்போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கையில் எடுத்துள்ளன.
 தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளில் நாடாளுமன்றத்துக்கு வெளியே பலத்தைக் காட்ட இரு தரப்பும் முடிவு செய்துள்ளன. தலைநகரில் ஆதரவாளர்கள் திரள வேண்டும் என இம்ரான் கானும், எதிர்க்கட்சிக் கூட்டணியும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இம்ரான் கான் தனது ஆட்டத்தைத் தொடர்வாரா அல்லது முடித்துக் கொள்வாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி தோல்வி ஒருபுறம் இருந்தாலும், அத்துடன் பாகிஸ்தானின் அரசியல் பிரச்னை முடிந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!



Read in source website

உலக சுகாதார நிறுவனம் 2030-ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டின் காசநோய் தினத்தின் கருப்பொருளாக "காசநோயை ஒழிக்க முதலீடு செய்யுங்கள்; உயிர்களைக் காப்பாற்றுங்கள்' என்பதை அறிவித்துள்ளது.
 மைக்கோபாக்டிரியம் எனும் பாக்டீரியா மூலமாக காசநோய் பரவுகிறது. காசநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் காசநோய் கிருமி வெளிப்படுகிறது. காசநோயின் அறிகுறிகளாக இருமல், எடை குறைதல் , காய்ச்சல் ஆகியவை இருக்கின்றன. காசநோய் பெரும்பாலும் சளி பரிசோதனை மூலமே உறுதி செய்யப்படுகிறது. காசநோய் பெரும்பாலும் 75 % நுரையீரலை பாதிக்கிறது. நமது உடலில் நகம், தலைமுடியை தவிர அனைத்துப் பகுதிகளையும் காசநோய் தாக்கும். தினந்தோறும் காசநோயால் சராசரியாக 4,100 பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
 பிரதமர் நரேந்திர மோடி 2018-இல் "காசநோயில்லா இந்தியா 2025' (டிபி ஃபிரீ இண்டியா 2025) என்ற அறிவிப்பை வெளியிட்டார். தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோயை முற்றாக ஒழிக்க மருத்துவத்துறையினர் முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறார்கள்.
 காசநோய் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 162 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்; 37 பேர் உயிரிழக்கின்றனர். காசநோய் பெரும்பாலும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களையும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களையும், சர்க்கரை நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகளையும் எளிதில் பாதிக்கிறது.
 காசநோய் பரிசோதனையும், அதற்கான மருந்துகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும், காசநோய் அறிகுறிகளுடன் உள்ள நபர்களை காசநோய் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் பலரும் பரிசோதனை செய்து கொள்வதில்லை. பின்னர் உடல் பலவீனமான நிலையில் மருத்துவமனையை நாடுகின்றனர். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுக்கவில்லை எனில் உடல் மெலிந்துவிடுவர். காசநோய் காற்றின் மூலமாக பரவும் என்பதால் சிகிச்சை எடுக்க தாமதமானால் காசநோயால் பாதிக்கப்பட்ட நபர் மூலமாக அவருடன் தொடர்பில் உள்ள மற்றவர்களுக்கும் காசநோய் பரவும் ஆபத்து இருக்கிறது.
 காசநோயாளிகளுக்கு புரதச்சத்து அவசியம் என்பதால், மத்திய அரசு "நிக்சன் போஜன் யோஜனா' எனும் திட்டத்தின் கீழ் காசநோயாளிகள் சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.500 செலுத்தி வருகிறது. 2019-ஆம் ஆண்டு காசநோய் கண்டறியபட்டோர் சுமார் 23 லட்சம் பேர். இதில் சிகிச்சையை பாதியில் கைவிட்டவர்கள் 81,306 பேர். காசநோய் சிகிச்சையை பாதியில் கைவிடுபவர்களால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படுவதோடு, அவர்கள் குடும்ப உறுப்பினர்களையும் நோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
 காசநோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, மருத்துவர்கள் காசநோய் பாதித்தோரின் வீட்டிற்கே சென்று மருந்து மாத்திரைகளை அளிக்கின்றார்கள். ஆயினும், நோயாளிகள் பாதியில் சிகிச்சையைக் கைவிடுவது எதிர்கால சமூகத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று 2,81,122 நபர்களை பரிசோதனை செய்ததில் 395 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் வீடுவீடாகச் சென்றாலும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே காசநோயை ஒழிக்க முடியும். காசநோய் ஒழிப்புத் துறையில் களப்பணியாளர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப காசநோய் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதனால் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
 கரோனோ நோய்த்தொற்றுப் பரவலின்போது பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும், வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும் கரோனோ பரிசோதனை செய்துகொண்டு நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்கிற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அது போலவே காசநோய் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் காசநோய் பரிசோதனையை கட்டாயப்படுத்தினால் காசநோயைக் கண்டறிவது எளிதாக இருக்கும். அதோடு, காசநோயை ஒழிக்கவும் முடியும். காசநோய் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு அது ஆரம்ப நிலையிலேயே தெரிவதில்லை. தாமதமாக கண்டறிந்து சிகிச்சை செய்துகொள்வதைவிட ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் நிச்சயம் காசநோயிலிருந்து மீண்டு விடலாம்.
 உலகையே அச்சுறுத்தும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்கள் அதிகமாக செய்யப்பட வேண்டும். இன்றைக்குக் கூட காசநோயின் ஆபத்து குறித்து அறியாதவர்கள் உள்ளனர். நாம் சுவைக்காக உண்ணாமல் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களில் காசநோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கூட்டம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிவது பாதுகாப்பைத் தரும்.
 இரண்டு ஆண்டுகளாக மனித சமூகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கரோனோ தீநுண்மி தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. தடுப்பூசிகளும் , முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளுமே அதற்குக் காரணம். இதுபோன்றே காசநோயையும் விரைவில் ஒழிக்க வேண்டும். அதற்கு, காசநோய் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், போலியோ இல்லாத இந்தியா
 உருவானதைப் போல காசநோய் இல்லாத இந்தியா உருவாகும்.
 
 இன்று (மார்ச் 24)
 காசநோய் விழிப்புணர்வு நாள்.
 



Read in source website

 அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் "குற்ற நிகழ்வுகளைக் குறைப்பதைக் காட்டிலும், குற்றங்களே நடைபெறாத சூழ்நிலையை காவல்துறை உருவாக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால், புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுகின்றன' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் சமீபத்தில் கூறினார்.
 நாட்டில் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதிகரித்துவரும் குற்றங்களைக் காரணம்காட்டி, புதிய காவல் நிலையங்களையும், புதிய நீதிமன்றங்களையும் திறப்பதன் மூலம் குற்றங்கள் நிகழாத சூழலை உருவாக்கவோ குற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்கவோ முடியுமா?
 வேலைவாய்ப்பின்மை, வறுமை உள்ளிட்ட காரணங்களால் நிகழும் குற்றங்களைக் காட்டிலும், தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு, பழி வாங்கும் குணம், முறையற்ற வழிகளில் பொருள் ஈட்டுதல் போன்ற காரணங்களால் நிகழும் குற்றச் செயல்களே அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையைச் சரிகட்டிவிடலாம் என்ற தைரியமும், நீதிமன்ற விசாரணையைச் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் குற்றம் புரிபவர்களிடம் இருக்கும்வரை குற்றங்களின் எண்ணிக்கை சமுதாயத்தில் குறைய வாய்ப்பில்லை.
 அதிகரித்துவரும் குற்ற நிகழ்வுகளைக் கணிசமாகக் குறைக்க புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமா? காவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டுமா? அதிகமான நபர்களை என்கவுன்ட்டர் செய்ய வேண்டுமா? காவல்துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்தான் என்ன?
 இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் காவல் அமைப்பின் முதுகெலும்பாக இருந்து வருவது ஆங்கிலேயர்கள் 1861-ஆம் ஆண்டில் இயற்றிய "காவல் சட்டம்' ஆகும்.
 இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று குறிப்பிடப்படும் 1857-ஆம் ஆண்டின் சிப்பாய் கலகம் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குத் துணைபுரியும் வகையில் காவல் அமைப்பு ஒன்றினை இந்தியாவில் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை சிப்பாய் கலகம் ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. அதன் விளைவாகத்தான் ஆங்கிலேய அரசாங்கம் 1861- ஆம் ஆண்டில் இந்தியாவிற்கான காவல் சட்டத்தை இயற்றி, காவல்துறை என்ற அமைப்பை ஏற்படுத்தியது.
 சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், நிகழ்ந்த குற்றங்களைத் துப்பறிந்து கண்டுபிடித்தல் போன்ற பணிகளைக் காவல்துறை செய்துவந்தாலும், இந்தியாவை ஆட்சி செய்துவந்த ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகவும், இந்தியாவின் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்பவர்களை நசுக்கி, ஒடுக்குவதுதான் காவல்துறையின் முக்கிய கடமையாக அன்று இருந்து வந்தது.
 நீதிமன்ற விசாரணையின்றி யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம் என்ற அதிகாரத்தை 1919-ஆம் ஆண்டின் சட்டத்தின்படி ஆங்கிலேய அரசாங்கம் உயர் காவல் அதிகாரிகளுக்கு வழங்கியது. உடல் வலிமை மிக்கவர்களாகவும், உயரதிகாரிகளின் ஆணைகளுக்கு கீழ்படிந்து நடப்பவர்களாகவும் இருந்தவர்கள் காவல் நிலையங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 24 மணி நேரமும் பணிபுரிந்த அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்பட்டது.
 வழக்கு பதிவு செய்தல், சந்தேகப்படும் இடங்களில் சோதனையிடுதல், பொருட்களைக் கைப்பற்றுதல், கைது செய்து சிறையில் அடைத்தல் உள்ளிட்ட அதிகாரங்கள் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களிடம் குவிந்திருந்தன. இதனால் கையூட்டு பெறும் பழக்கம் காவல் நிலையங்களில் பணிபுரியும் களப்பணியாளர்களிடம் மிகுந்து காணப்பட்டது. இதை 1902-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அமைத்த காவல் ஆணையமும் உறுதி செய்துள்ளது.
 இந்தியா விடுதலை அடைந்த பின்னரும், காலனித்துவ மனப்பான்மை காவல்துறையின் செயல்பாடுகளில் நிலவி வருவதும், ஆங்கிலேய அரசாங்கத்திற்கு பதிலாக மாநிலங்களில் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களின் மனப்பாங்கறிந்து செயல்படுவதும் காவல்துறையில் தொடர்ந்து நிலவிவருகிறது.
 மக்களாட்சி முறைக்கு இந்தியா மாறிவிட்ட பின்னரும், குடிமக்களின் நலனைப் பாதுகாப்பதே காவல்துறையின் முக்கிய கடமை என்பதை உறுதிபடுத்தும் வகையில் காவல் சட்டம் முழுமையாக மாற்றியமைக்காமல், தேவைக்கேற்ப சிற்சில திருத்தங்களுடன் ஆங்கிலேயர்கள் இயற்றிய "காவல் சட்டம்-1861' தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
 வழக்குகள் பதிவு, குற்றவாளிகள் கைது போன்றவைகளைக் காரணம் காட்டி கையூட்டு பெறுவதும், சூதாட்டம், பாலியல் தொழில், போதைப் பொருட்கள் விற்பனை, கள்ளக் கடத்தல் போன்ற சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு கையூட்டு பெறுவதும் விடுதலையடைந்த இந்தியாவில் களப்பணியாற்றும் காவல்துறையினரிடம் தொடர்கின்றன.
 காவல் நிலையங்களில் களப்பணியில் ஈடுபடுபவர்களிடம் நிலவிவந்த கையூட்டு கலாசாரம், சுதந்திர இந்தியாவில் காவல் உயர் அதிகாரிகள்வரை பரவிய நிலையைக் காணமுடிகிறது. காவல் அதிகாரிகளின் பணி இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளை கவனிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, காவல்துறை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய "காவல் நிர்வாக வாரியம்' அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த வாரியத்தின் செயல்பாடுகளை பெரும்பாலும் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைகளும், கையூட்டுமே தீர்மானிக்கின்றன.
 "அரசுத் துறைகள் பலவற்றில் கையூட்டு பரவலாக இருந்து வரும்பொழுது, காவல்துறையின் கையூட்டு சம்பவங்களை மட்டும் ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்' என்று முணுமுணுக்கும் காவல்துறையினர், சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு தங்ளுடையது என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. கையூட்டு கலாசாரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வேகப்படுத்துவதுதான், குற்ற நிகழ்வுகளை கணிசமாக குறைக்கும் வழிமுறைகளில் முதன்மையானது என "இந்திய காவல்துறை சீர்திருத்தங்கள்' குறித்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
 அதிகமான தமிழர்கள் வசித்துவரும் சிங்கப்பூர், முதலில் ஆங்கிலேய காலனி நாடாக இருந்த போதும், பின்னர் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஆளுமையின் கீழ் இருந்த போதும் அங்கு காவல்துறையால் கையூட்டு கலாசாரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 1960-களில் சிங்கப்பூரில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, கையூட்டுக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் விளைவாக, சிங்கப்பூரில் குற்றங்கள் கணிசமாகக் குறைந்தன.
 இந்தியாவில் கையூட்டு பெற்ற குற்றத்திற்காக 2018, 2019, 2020-ஆகிய ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முறையே 4,129, 4,243, 3,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று ஆண்டுகளில் முறையே 1,074, 928, 369 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. கரோனா பெருந்தொற்று காரணமாக 2020-ஆம் ஆண்டில் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
 தமிழ்நாட்டில் இந்த மூன்று ஆண்டுகளில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முறையே 264, 418, 363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டுகளில் முறையே 110, 93, 62 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
 தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரத்தின்படி 2020-ஆம் ஆண்டின் இறுதியில் இந்திய நீதிமன்றங்களில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட 25,819 வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளன. இந்த வழக்குகள் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைய குறைந்தது 25 ஆண்டுகள் ஆகும் என்ற கணிப்பு, இந்திய நாட்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பலவீனத்தையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறது.
 காவல்துறையினர் வாங்கும் ஒவ்வொரு கையூட்டும் மேலும் பல குற்றங்கள் நடைபெற துணைபுரிவதோடு, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் மன தைரியத்தையும் குற்றவாளிகளுக்குக் கொடுக்கிறது. காவல்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவி வரும் கையூட்டு கலாசாரத்தைத் தடுத்து நிறுத்த எடுக்கும் நடவடிக்கைகள்தான் குற்றங்களைக் குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளில் முதன்மையானது.
 நவீன புலனாய்வு முறைகள், தெளிவான சட்ட அறிவு, நீதிமன்ற வழக்குகள் விசாரணையில் கவனம் செலுத்துதல் போன்றவையும் குற்ற நிகழ்வுகளை கணிசமாகக் குறைக்கத் துணைபுரியும். நீதிமன்றங்களில் விசாரணைக்காக தேங்கிக் கிடக்கும் வழக்குகள், குற்றவாளிகள் குற்றச் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான துணிவைக் கொடுக்கின்றன. வழக்கு விசாரணையை துரிதப்படுத்தாமல், என்கவுன்ட்டர் போன்ற செயல்களில் ஈடுபடுவது பிரச்னையைத் திசை திருப்பும் செயலாகும்.
 ஒரு வழக்கு பதிவு செய்வதில் தொடங்கி, அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடியும் வரை காவல்துறையினர் பல்வேறு காரணங்களுக்காக பணம் செலவழிக்க வேண்டிய கட்டாய சூழல் நடைமுறையில் இருந்து வருகிறது.
 இத்தகைய செலவினங்கள் குறித்து காவல்துறை முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றால், களப்பணியாற்றும் காவலர்கள் எதிர்கொள்ளும் தேவையற்ற செலவினங்களுக்குத் தீர்வு கிடைக்கும்; நீண்ட காலமாக நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்கும் முடிவு வரும்.
 
 கட்டுரையாளர்:
 காவல்துறை உயர் அதிகாரி (ஓய்வு).
 



Read in source website

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர்த் தாக்குதல்களின் காரணமாக வேளாண் விளைபொருட்களுக்கான உலகளாவிய சந்தை தேக்கநிலையை எட்டியுள்ளது. ரஷ்யாவின் சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில், இந்தியாவின் வேளாண் விளைபொருட்களுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை வளர்த்தெடுப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. இவ்விஷயத்தில், மத்திய அரசும் மாநில அரசுகளும் கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக, கோதுமை, கடுகு, சோளம், பார்லி போன்றவற்றைக் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவில் இந்தியாவால் ஏற்றுமதிசெய்ய முடியும்.

கோதுமையைப் பொறுத்தவரையில், இந்த நிதியாண்டில் ஏற்கெனவே இதற்கு முன்பு எப்போதும் இல்லாதவகையில் அதிக அளவு ஏற்றுமதியாகியுள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் ஏற்றுமதியான கோதுமையின் அளவு 20.86 லட்சம் டன்கள். ஆனால், 2021-22-ல் ஜனவரி மாதத்துக்குள்ளாகவே 60.20 லட்சம் டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதியைப் பொறுத்தவரை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஏற்றுமதி அளவு பல மடங்கு அதிகரித்துள்ளது. 2019-20-ம் நிதியாண்டில் பாசுமதி அல்லாத மற்ற அரிசி வகைகளின் ஏற்றுமதி 50.36 லட்சம் டன்கள். ஆனால், 2020-21-ம் நிதியாண்டில் அது 130.88 லட்சம் டன்களாக உயர்ந்தது; நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதத்துக்குள்ளாக, 139.50 லட்சம் டன்கள் ஏற்றுமதியாகியுள்ளது. அரிசியின் ஏற்றுமதி அளவு அதிகரித்ததற்கான காரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட வறட்சியாகும்.

உலகளவிலான கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும் வகிக்கும் பங்கு சுமார் 28%. இது போலவே மக்காச்சோள ஏற்றுமதியில் இந்நாடுகளின் பங்களிப்பு 19%, பார்லி ஏற்றுமதியில் 30%, சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதியில் அதிகபட்சமாக 78% ஆகும். இவையெல்லாம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பான மதிப்பீடுகளாகும். போர் தொடங்கிய பிறகு, கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. காஸ்பியன் கடல் வழியாகச் செல்லும் ரஷ்ய சரக்குக் கப்பல்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதிசெய்வதில் முதன்மை நாடுகளாக விளங்கும் ரஷ்யா, உக்ரைன் இரண்டுமே தங்களது வழக்கமான ஏற்றுமதி அளவை எட்ட முடியாத நிலையில், அதனால் ஏற்படும் வெற்றிடத்தை இந்தியாவால் சிறிய அளவிலேனும் நிரப்ப இயலும்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணா மாநிலங்களில் கடுகு, பார்லி ஆகியவற்றின் சாகுபடி பெருமளவில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரித்துள்ளது. நாட்டின் மக்காச்சோள உற்பத்தியில் பிஹார் 25% வகிக்கிறது. எனவே, இம்மாநிலங்களுக்குப் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்குவது எளிதாக அமையும். தமிழ்நாட்டில் கரிசல் மட்டுமின்றி எல்லா மண் வகைகளிலும் சாகுபடி செய்யக்கூடிய பயிராகப் பரிந்துரைக்கப்படும் சூரியகாந்தியின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை உள்ளூர் உற்பத்தியால் ஈடுகட்ட முயலலாம்.



Read in source website

காசநோய் என்ற தொற்றுநோய் 15 கோடி ஆண்டுகளாக உலகில் பரிணமித்துவந்திருந்தாலும் அதற்கான காரணி 140 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டறியப்பட்டது. 1882, மார்ச் 24-ம் தேதி ஜெர்மானிய மருத்துவர் ராபர்ட் கோச் தனது தொடர் ஆய்வுகளின் மூலம் காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸ் எனும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது என்பதைத் தக்க சான்றுகளோடு நிறுவினார். காசநோய்க்கு எதிரான பல நூற்றாண்டு கால சமரில், சீரிய முன்னேற்றத்துக்கு வழிவகுத்த ராபர்ட் கோச்சுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 1905-ல் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி, காசநோயின் காரணியான டியூபர்குலோசிஸ் பாக்டீரியாவைப் பிரித்தெடுக்கும் வழிமுறையை ராபர்ட் கோச் கண்டறிந்த தினமான மார்ச் 24-ஐ உலகக் காசநோய் தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

காசநோய் ஏறத்தாழ 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களைப் பீடித்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ‘உட்கொள்ளுதல்’ எனும் பொருள்படும் ‘ஸ்காஸெபெத்’ என்ற ஹீப்ரு சொல் காசநோயைக் குறிக்க இரு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பண்டைய கிரேக்கத்தில் ‘தைசிஸ்’ என்று அறியப்பட்ட காசநோயை நுரையீரலை அரிக்கும் ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் என்று ஹிப்போகிரட்டீஸ் துல்லியமாகத் தனது குறிப்புகளில் பதிவிட்டிருக்கிறார்.

இடைக்காலத்தில், நிணநீர்க் கழலைகளைத் தாக்கும் நோய் என்று வரையறுக்கப்பட்ட காசநோய், ‘ஸ்க்ரோஃபுலா’ என்றும் அறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ‘அரச தீண்டுதல்’ எனும் நடைமுறையின் மூலம் காசநோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பி, நோயாளிகளை அரசர்கள் தங்கள் கரங்களால் தீண்டும் நடைமுறை பழக்கத்தில் இருந்துவந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் மட்டும் ஐரோப்பாவின் 9% இறப்புகளுக்குக் காரணமாகக் காசநோய் இருந்திருக்கிறது.

1950-களில் காசநோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருந்துகள் கண்டறியப்படும் வரையிலும் சுத்தமான காற்று, சத்துள்ள உணவு, குறைவான உடற்பயிற்சி, நல்ல ஓய்வு என்பவையே காசநோய்க்கான மருத்துவமாக இருந்துவந்தது. காசநோயாளிகளுக்கு இவற்றை வழங்கும் மருத்துவச் சாலைகளாக 1859 முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரையிலும் சானடோரியங்கள் விளங்கின. சானடோரியங்களால் நோய் குணமடைதல் என்பது பெருமளவில் இல்லையென்றாலும் நோய் பரவுதல் விகிதம் கட்டுக்குள் இருந்தது. இங்கிலாந்தில் மருத்துவம் பயின்று திரும்பிய மருத்துவர் டேவிட் ஜேக்கப் ஆரோன் சவரிமுத்துவால் தமிழகத்தின் முதல் சானடோரியம் 1928-ல் சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்டது.

விடுதலை அடைந்தபோது, இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சம் காசநோயாளிகள் இருந்த நிலையில் 23,000 சானடோரியம் படுக்கைகள் மட்டுமே நாட்டில் இருந்தன. போதிய படுக்கைகளின்றி நோயாளிகள் வாடிய நிலையில், சானடோரியங்களுக்கு மாற்றாக வேதிச்சிகிச்சையை முன்னெடுக்கும் நோக்கில், இந்தியாவில் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஒன்றிய அரசின் சார்பு அமைப்பான இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.), தமிழக அரசு, உலக சுகாதார ஆய்வு நிறுவனம், பிரித்தானிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஆகியவற்றின் துணையுடன் பிரித்தானிய மருத்துவ ஆய்வுக் கழகத்தைச் சார்ந்த மருத்துவர் வாலஸ் ஃபாக்ஸின் தலைமையில் 1956-ல் காசநோய் வேதிச்சிகிச்சை மையத்தை சென்னையில் நிறுவியது.

சானடோரியங்களில் மட்டுமே காசநோய்க்கு மருத்துவம் பார்க்க இயலும் என்று உலகம் முழுவதும் நம்பப்பட்ட வேளையில், சென்னையில் அமைக்கப்பட்ட காசநோய் வேதிச்சிகிச்சை மையம் நடத்திய புகழ்பெற்ற மெட்ராஸ் ஆய்வானது, காசநோய் சிகிச்சை முறை குறித்தான உலகின் நம்பிக்கைகளை மாற்றியமைத்தது. மொத்தம் 193 காசநோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட மெட்ராஸ் ஆய்வில், நோயாளிகள் அவரவர் இல்லங்களிலும் தாம்பரம் சானடோரியத்திலுமாக இரு குழுக்களாகப் பிரித்து, ஒரே வகையான வேதிச்சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

நல்ல காற்றோட்டம், போதுமான அளவு ஓய்வு, சத்துள்ள உணவு, தகுதிவாய்ந்த மருத்துவ ஊழியர்களைக் கொண்டு தொடர் கண்காணிப்பு என சானடோரியத்தில் கிடைக்கும் சிறப்பு வசதிகள் ஏதுமில்லாத நிலையிலும், இல்லங்களில் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமடைந்தவர்களின் விகிதம் சானடோரியத்துக்கு நிகராக இருந்தது 12 மாத தொடர் சிகிச்சைக்குப் பிறகான ஒப்பீட்டில் தெரியவந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. மெட்ராஸ் ஆய்வின் முடிவுகள் உலகெங்கிலும் சானடோரியங்களில் இடமின்றி வாடிய பல நோயாளிகளுக்குப் புது நம்பிக்கைச் சுடரை ஏற்றியதோடல்லாமல், காசநோய் சிகிச்சை வழிமுறையில் ஒரு புதிய மாற்றத்தையும் ஏற்படுத்தின.

1964-ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் நிரந்தர உறுப்பு நிறுவனமாக மேம்படுத்தப்பட்ட காசநோய் வேதிச்சிகிச்சை மையம், காசநோய்க்கான வேதிச்சிகிச்சை குறித்த ஆய்வுகள் மட்டுமின்றிக் காசநோய் ஏற்படுத்தும் பொருளாதாரச் சிக்கல்கள், நோய்த்தொற்றியல், காசநோய் எதிர்ப்பு, மருந்தகவியல் என காசநோய் குறித்தான பல்வேறு ஆய்வுகளைத் தொடர்ந்து செய்துவந்தமையால், அதன் பன்னோக்குச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு 1978-ல் ‘காசநோய் ஆராய்ச்சி மையம்’ எனவும் பின்னர் 2011-ல் ‘தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மருத்துவ ஆய்வு வகைமைகளில் உயரிய மதிப்புமிக்க ஆய்வு முறையாகக் கருதப்படும் சார்பற்ற பகுப்புமுறை மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்படுவது இந்நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்.

காசநோய் குறித்தான முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட சார்பற்ற பகுப்புமுறை ஆய்வுகள் இதுவரையிலும் இந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளவில் காசநோய் மருத்துவத்தின் அடிநாதமாக இன்று விளங்கும் குறுகிய கால நேரடிக் கண்காணிப்புச் சிகிச்சை முறையான டாட்ஸ் சிகிச்சை இந்நிறுவனத்தின் தொடர் ஆய்வுகளால் கண்டறியப்பட்டு, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறை என்பது குறிப்பிடத்தக்கது. காசநோய்க்கும் மனிதர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முடிவின்றி நடந்துவரும் சமரில் பன்மருந்து எதிர்ப்புக் காசநோய், முற்றியநிலை பன்மருந்து எதிர்ப்புக் காசநோய், எச்.ஐ.வி.யுடன் அணிசேர்க்கை எனக் காசநோய்க் கிருமி தனது இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக வெவ்வேறு வகைகளில் பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களை நோக்கிக் கணைகளை வீசிவரும் சூழலில், மானுடம் காப்பதற்காக ‘தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவன’மும் தனது களத்தை விரிவாக்கி, தொடர்ந்து வெவ்வேறு ஆய்வுகளைச் சமரசமின்றிச் செய்துவருகிறது.

கரோனா பெருந்தொற்றைவிடவும் அதிக உயிர்களைப் பலிகொண்டிருக்கும் காசநோய், இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கப்படும் நாள்வரையில் ‘உலகக் காசநோய் நாள்’ என்பது கொண்டாட்டத்துக்குரிய தினமாக அல்லாமல், காசநோய் இதுவரை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், அதனைத் தடுத்து நிறுத்தும் முறைகள் குறித்தும் மக்களிடம் புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பாகவே அமையும்.

- திருமாறன் செங்குட்டுவன், மருத்துவர், மருத்துவ அலுவலர், தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், சேத்துப்பட்டு. தொடர்புக்கு: dr.thirutamizh@gmail.com

இன்று உலக காசநோய் தினம்



Read in source website

அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. விவசாயத்துக்கென தனி நிதிநிலை அறிக்கையை வழங்குவதாகக் கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டிருந்தபடி, ஆகஸ்ட் 14, 2021 அன்றும் மார்ச் 19, 2022 அன்றும் இதுவரை இரண்டு வேளாண் நிதிநிலை அறிக்கைகள் தமிழ்நாடு அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வேளாண் நிதிநிலை அறிக்கையின் வெற்றி என்பது, அதன் பலன்கள் கடைசி விவசாயியையும் சென்று சேர்கிறதா என்பதைப் பொறுத்தே அமையும். தமிழ்நாட்டின் நெல் சாகுபடிப் பரப்பு கடந்த ஆண்டைவிட 4,86,000 ஏக்கர் இப்போது கூடுதலாகிறது. அம்பாரம் அம்பாரமாக அறுவடையான நெல்மணிகள் குவிக்கப்படுகின்றன. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கை அந்த அளவுக்கு உயர்ந்ததா, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் விவசாய விளைபொருளானது பலன் ஈட்டுகிறதா என்பதெல்லாம் முக்கியக் கேள்வியாகும்.

அருகமை மாநிலங்களுடன் நாம் ஒப்பிடலாம். கேரளத்தில் குவிண்டாலுக்கு நெல்லின் விலை ரூ.2,630. ஆந்திரத்தில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தெலங்கானாவில் ரயத்பந்த் திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. உத்தர பிரதேசம், பஞ்சாப், மஹாராஷ்ரம் ஆகிய மாநில விவசாயிகளும் பல கூடுதல் உரிமைகளைப் பெற்றுள்ளனர். திமுக அரசோ தன் தேர்தல் அறிக்கையில் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவதாக அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

நடக்கவில்லை. இப்போது 2-வது நிதிநிலை அறிக்கையிலும் அந்த வாக்குறுதிகள் நிறைவேறவில்லை. அதேசமயம், சீர்மிகு நெல் சாகுபடித் திட்டம் என்று கூறி, அதற்கு ரூ.32 கோடியே 42 லட்சம் என மதிப்பீடு காட்டப்படுகிறது. இதேபோல்தான் கரும்புக்கும் குவிண்டாலுக்கு ரூ.4,000 வழங்குவதாகத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எப்போது இந்த வாக்குறுதிகள் அமலாக்கப்படும் என்றும் தெரியவில்லை. நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் உதவி ரூ. 1,83,435 கோடி வழங்கும் விரிவான திட்டம் என்ற அறிவிப்பு உள்ளது.

2022-23-ல் திறன் சார்ந்த கடன் திட்டம் என்று இது அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதுவும் நடக்குமா என்ற அச்சமே விவசாயிகளிடம் உள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆயினும் இப்போது 13 லட்சம் பேர் மட்டுமே நகைக் கடன் தள்ளுபடிக்கு உரியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய கால மறுமாற்றுக் கடன் தள்ளுபடி ஆகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்கும் முன்பு பல கட்டங்களில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டன. எனினும், விவசாயிகளின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, அறுவடையான 4 மாதங்களில் வேளாண்மைக் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி வழங்கலாம் என ஆலோசனை கூறப்பட்டது. ஏக்கருக்கு ரூ.40,000 வேளாண் கடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எவற்றையும் வேளாண் துறை கண்டுகொள்ளவேயில்லை.

இதேபோல், பயிர்க் காப்பீடு வழங்குவதிலும் சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றத்தில் இதற்காகத் தனியே வழக்குகள் போடப்படுகின்றன. தனியார் ஏஜெண்டுகளிடம் பயிர்க் காப்பீட்டை ஒப்படைக்கக் கூடாது என்ற கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. விவசாயம் டிஜிட்டல் மயமாகும், உயர்தரமான மென்பொருள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும், கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட் வாங்க மானியம் வழங்கப்படும் என்றெல்லாம் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

இலவச மின்சாரத்துக்கு ரூ.5,15,157 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு அறிவித்த 1 லட்சம் பேருக்கான இலவச மின் இணைப்பு இன்னும் முறையாக வழங்கப்படவில்லை. இத்தகு மின் இணைப்புக்காக ஏற்கெனவே காத்திருப்போரின் எண்ணிக்கை 4,00,000-க்கும் அதிகமாகும். சிறுகுறு விவசாயிகள் நலன் கருதிப் பூந்தோட்டங்களுக்கான மின் இணைப்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் செவிமடுக்கப்படவில்லை.

சென்ற ஆண்டு நிறுத்தப்பட்ட குடிமராமத்துப் பணிகள் இந்த ஆண்டு நடக்குமா? தூர்வாரும் பணிகளைத் தேர்வுசெய்யவும் கண்காணிக்கவும், பாசனதாரர் சபை அமைக்கப்படுமா என்பதிலும் தெளிவு இல்லை. மாறிவரும் பருவநிலைகளின் காரணமாக அடிக்கடி ஈரமாகும் நெல்லுக்கு 22% என்று கொள்முதல் தளர்வு இருக்கலாம். 60,000 விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2023 ஆண்டை சர்வதேசச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அங்கீகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான சிறப்பு நிதிஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சிறுதானிய உற்பத்தியை அரசு கொள்முதல் செய்யாவிட்டால் இத்திட்டம் வெற்றிபெறுவது சந்தேகமே.

10 லட்சம் பனை விதைகள், மண்புழு உரம் உள்ளிட்ட சில நம்பிக்கைக் கீற்றுகள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிகின்றன. அதே சமயம், சென்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திருச்சி-நாகை பகுதி வேளாண் பெருந்தொழில்தடம் அறிவிப்பு செயல் வடிவம் பெறவில்லை. வேளாண் தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டில் 7வகையான விவசாய மண்டலங்கள் உள்ளன. அவற்றுக்கு வேளாண் கிளினிக்குகள், வேளாண் டாக்டர்கள் இப்போது தேவைப்படுகின்றனர். மண் மற்றும் நீர்வள ஆய்வு, எந்த மண்ணில் எந்தப் பயிர்வகையைச் சாகுபடி செய்யலாம் என்பது பற்றிய ஆய்வு, தாவர வளர்ச்சியின் ஊடுருவும் திறன் ஆகியவற்றை ஆய்வுசெய்வது வேளாண் டாக்டர்களின் பணிகளாக இருக்கலாம்.

வேளாண் அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டமான ‘கிருஷி விக்யான் கேந்திரா’ எனப்படும் விவசாய அறிவியல் மையம் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படாமை குறித்து விவசாயிகளால் வினவப்பட்டது. அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டவில்லை. பயிர்களுக்கு உரம் தேவைப்படும் தருணங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனைக் களையும் வகையில் உர உற்பத்தியையும் விநியோகத்தையும் அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரிப் படுகை பகுதிகளில் கச்சா எண்ணெய்க் கிணறுகளில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் முறையீடு செய்ய காவிரிப் படுகைப் பகுதியிலேயே ஒரு அலுவலகம் தொடங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகளிடம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது உழவர்களால் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், நிதிநிலை காரணங்களால் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கு மேலும் சில ஆண்டுகளேனும் விவசாயிகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது.

- வெ.ஜீவகுமார், வழக்கறிஞர், விவசாயிகள் உரிமைச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: vjeeva63@gmail.com



Read in source website