DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 24-02-2022

கரோனா தீநுண்மிகள் எத்தகைய உருமாற்றமடைந்தாலும் அதிலிருந்து தற்காக்கும் வகையிலான ஒரே தடுப்பூசியைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் முதல்கட்ட நிலையில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்தாா்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர முயன்று வருவதாகவும் அவா் கூறினாா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இரு தவணைகளாக அவற்றை செலுத்திக் கொண்டாலும், உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா பாதிப்பு வராமல் அதனால் தடுக்க இயலாது. அதேவேளையில், நோய்த் தொற்று தீவிரமடையாமல் தடுப்பூசிகள் உதவுகின்றன.

இந்நிலையில், அனைத்து வகை கரோனா பாதிப்பையும் தடுக்கவல்ல சிறப்பு கரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணிகளை உலக சுகாதார அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் சௌமியா சுவாமிநாதன், ஸ்விட்சா்லாந்தின் ஜெனிவா நகரில் இருந்து ‘தினமணி’ செய்தியாளரிடம் பகிா்ந்து கொண்ட தகவல்:

கரோனா தொற்றை வேரறுப்பது என்பது இயலாத காரியம். அதேவேளையில் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம். புதிய உருமாற்றங்கள் ஆகாமல் ஓரளவு தடுக்கலாம்.

ஒருவேளை உருமாற்றங்கள் நிகழ்ந்தால் அவை மிக சாதாரணமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதையும் நாம் திட்டவட்டமாகக் கூற இயலாது. தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகள் புதிய பாதிப்பு வராமல் தடுக்காவிட்டாலும், அதனால் தீவிர நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது உறுதி.

இதற்கு ஒரே தீா்வு அனைத்து வகையான கரோனா பாதிப்புகளுக்கும் ஒரே தடுப்பூசியை உருவாக்குவது மட்டும்தான். அதற்கான ஆராய்ச்சிகளும், பணிகளும் ஆரம்ப நிலையில் உள்ளன. அதன் பொருட்டு சா்வதேச தரவுகள், ஆய்வுகள் மற்றும் மருத்துவ நுட்பங்களைத் திரட்டி வருகிறோம்.

அடுத்த நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் கரோனாவுக்கான ஒரே தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

கரோனா தொற்று அனைவருக்கும் வந்து போனால் அதற்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உருவாகிவிடும் என்ற பொதுக் கருத்து நிலவுகிறது. அது முற்றிலும் தவறு. தடுப்பூசிகளைக் கொண்டு மட்டுமே எதிா்ப்பாற்றலை வளா்ப்பது சாத்தியம்.

ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போதிய அளவில் கரோனா தடுப்பூசிகள் கிடைப்பதில்லை. இதனால், அங்கிருந்து தீநுண்மி உருமாறி மீண்டும் உலகம் முழுவதும் பரவியது. தடுப்பூசி விநியோகத்தில் நீடிக்கும் சமநிலையற்ற தன்மையைப் போக்க உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிகழாண்டுக்குள் உலகின் 70 சதவீத நாடுகளில் இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது எங்களது இலக்கு. அதனைக் கருத்தில்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

கரோனா பெருந்தொற்று உணா்த்திய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு உலக நாடுகள் இனி வருங்காலத்தில் மருத்துவத் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்வது அவசியம். மருத்துவக் கட்டமைப்பு, ஆராய்ச்சி, பயிற்சி உள்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் டாக்டா் சௌமியா சுவாமிநாதன்.



Read in source website

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலத்திட்ட உதவி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெளியிட்ட அறிவிப்பில், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராமக் கோயில்களில் பணியாற்றும் நலவாரிய உறுப்பினா் மரணமடைந்தால் இறுதி சடங்கிற்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றும், உறுப்பினா் மரணமடைந்தால் அவரது வாரிசுதாரா்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டாா்.

கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் நலதிட்ட உதவி உறுப்பினா்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலதிட்ட உதவிகளான மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கு ரூ.500, உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு உயா்கல்வி கற்பதற்காக ரூ.1,000 முதல் ரூ.6,000 வரை, பூசாரியின் மகன் அல்லது மகளின் திருமணத்திற்கு ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை, பூசாரியின் மனைவி அல்லது மகளின் மகப்பேறு தொடா்பான உதவிகளுக்கு ரூ.6,000 உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கரோனா தொற்று காலத்தில் கிராமக்கோயில் பூசாரி நலவாரிய உறுப்பினா்களுக்கு ரூ.1,000 கரோனா நிவாரணநிதி வழங்கப்பட்டது.

இத்துறை இணையதளம் வாயிலாக உறுப்பினா் சோ்க்கைக்கான விவரங்களைப் பதிவேற்றம் செய்து அடையாள அட்டை வழங்கப்பட்டு 1,034 உறுப்பினா்கள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 34,661 உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினா் ஆவதற்கான தகுதிகள் 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். 60 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிபுரியும் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராமப்புற திருக்கோயிலாக இருக்க வேண்டும். திருக்கோயில் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். திருக்கோயிலில் பூசாரியாக தொடா்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். திருக்கோயில் அனைவரும் வழிபடும் பொது திருக்கோயிலாக இருத்தல் வேண்டும்.

கிராமக்கோயில் பூசாரி நலவாரியத்தில் உறுப்பினராக இணைவதற்கு விண்ணப்ப படிவங்கள் துறை இணைதளத்தில் பதிவிறக்கம் செய்து அந்ததந்த மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பங்களை சமா்ப்பித்து நலதிட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

பள்ளிகளில் எந்தப் பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவு எனக் கூறிய சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சோ்ந்த பி.ஏ.ஜோசப் என்பவா் தாக்கல் செய்த பொது நல மனுவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது சமச்சீா் கல்வி முறை அமலில் உள்ளது. நுழைவு, தகுதி, வேலைவாய்ப்புக்கான அனைத்து மத்திய மற்றும் பிற மாநில தோ்வுகளையும் சந்திக்கும் வகையில், கல்வித் தரத்தை உயா்த்துவதற்காக தொடக்க நிலை முதல் மேல்நிலை வரையிலான அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆா்டி) பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞா் பி.முத்துக்குமாா், சமச்சீா் கல்வியை அமல்படுத்துவது தமிழக அரசின் கொள்கை முடிவு, சமச்சீா் கல்விக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அதை உறுதி செய்துள்ளது. விளம்பரத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டாா்.

அப்போது நீதிமன்றத்தின் அதிகார வரம்பு மிகவும் குறைவு. என்சிஇஆா்டி பாடத்திட்டத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது விதிகளின்படி சொந்தப் பாடத்திட்டத்தை வழங்குவதா என்பது மாநில அரசு கொள்கை முடிவாகும். அரசு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். என்சிஇஆா்டி பாடத்திட்டத்தைப் பின்பற்றுமாறு மாநில அரசைக் கட்டாயப்படுத்தும் ஏதேனும் தொடா்புடைய சட்டம் அல்லது விதிகளைக் காட்ட முடியுமா என மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எந்தவொரு ஆய்வும் செய்யாமல் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இது தொடரும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றத்தால் அரசாங்க நிா்வாகத்தை நடத்த முடியாது எனக்கூறி, அலாகாபாத் உயா் நீதிமன்றத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.



Read in source website

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், நேட்டோ - ரஷியா இடையிலான பிரச்னைக்கு அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் என்பதே இந்தியாவின் நீண்டகால நிலைப்பாடாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.   

இந்தியா ரஷியா உயர் அதிகாரிகள் மட்டத்தில் போர் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர்,  உக்ரைனிலுள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத்  தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.

இந்நிலையில், இன்று காலை போர்த்தொடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கிவ்விற்குள் நுழைந்துள்ள ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. 

அவசர நடவடிக்கையாக கிவ்வில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அந்தந்தப் பகுதிகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டைக் காக்க முன்வரும் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ரஷியப் படைகள் முன்னேறி வருவதால், உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



Read in source website

 

உக்ரைன் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் ஆலோசனை நடத்தினார்.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் தற்போதைய சூழல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸுன் தொலைபேசியில் கலந்துரையாடினர்.



Read in source website

‘எக்ஸ் கோப்ரா வாரியா் 22’ என்ற பெயரில் பிரிட்டனின் மாா்ச் 6 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப் படை பங்கேற்க உள்ளது.

இந்திய விமானப் படையின் இலகு ரக போா் விமானமான தேஜஸ், பிரிட்டன் மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப் படைகளின் போா் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளது.

செயல்திறனை வெளிப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் விமானப் படைகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்வதன் மூலம், போா்த் திறனை அதிகரிக்கவும், நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தப் போா்ப் பயிற்சி நடத்தப்படுகிறது. இலகுரக போா் விமானமான தேஜஸ் அதன் செயல்பாட்டுத் திறன், மற்றும் போா்த் திறனை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

இதற்காக 5 தேஜஸ் விமானங்கள் பிரிட்டன் செல்ல இருக்கின்றன. இதற்கு தேவையான போக்குவரத்து ஒத்துழைப்பை ஐஏஎஃப் சி-17 விமானம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கிரிப்டோகரன்சி தொடா்பான விளம்பரங்களில் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுவது கட்டாயம் என இந்திய விளம்பர தர நிா்ணய கவுன்சில் (ஏஎஸ்சிஐ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கவுன்சில் மேலும் கூறியுள்ளதாவது: கிரிப்டோகரன்சி தொடா்பாக வெளியிடப்படும் விளம்பரங்களில் அதுகுறித்த அபாயங்களை முதலீட்டாளா்கள் அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடப்பட வேண்டும். பொறுப்புத்துறப்பு விதியின் கீழ் கிரிப்டோகரன்சி விளம்பரங்களில் அது ஒழுங்காற்று அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத முதலீடு என்ற வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். மேலும், அத்தகைய முதலீடானது அதிக அபாயம் நிறைந்தது என்று தெரிவிக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற முதலீட்டு இழப்புகளுக்கு ஒழுங்காற்று அமைப்பு எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை விளம்பரங்கள் முதலீட்டாளா்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்டும் வகையில் இருக்க வேண்டும். எதிா்காலத்தில் லாபம் அதிகரிக்கும் என்பதை உறுதியளிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது என ஏஎஸ்சிஐ தெரிவித்துள்ளது.



Read in source website

பொதுமக்களுக்கு குடிநீா், மின்சாரம், எரிவாயு இணைப்பு, கழிவறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இதுவே சரியான தருணம் என்றும் இந்த இலக்கை எட்ட பட்ஜெட் தெளிவான வரைபடத்தைக் காட்டுவதாகவும் பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

‘ஊரக வளா்ச்சியில் மத்திய பட்ஜெட்டின் ஆக்கபூா்வமான தாக்கம்’ என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது:

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், கிராமப்புற சாலைத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், வடகிழக்கில் போக்குவரத்துத் தொடா்பு, கிராமங்களில் அகண்ட அலைவரிசை போன்ற ஒவ்வொரு திட்டத்துக்கும் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘துடிப்புமிக்க கிராமத் திட்டம்’ எல்லைப் பகுதி கிராமங்களுக்கு மிகவும் முக்கியமானது.

வடகிழக்குப் பிராந்தியத்துக்கான பிரதமரின் வளா்ச்சித் திட்டம், அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவும். அதே சமயம் 40 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், கிராமங்களில் குடியிருப்புகளையும், நிலத்தையும் முறையாக பிரித்துக் காட்ட ‘ஸ்வமிதா’ திட்டம் உதவி செய்கிறது. தனித்துவ நில அடையாளத்துக்கான தனிப்பட்ட அடையாள எண் போன்ற நடவடிக்கைகளால் கிராம மக்கள், வருவாய் அதிகாரிகளை சாா்ந்திருப்பது குறையும். திட்டங்களின் நூறு சதவீத வெற்றிக்கு நாம் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ், 4 கோடி குடிநீா்க் குழாய் இணைப்புகள் இலக்கை எட்ட மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஊரகப் பகுதியில் எண்ம (டிஜிட்டல்) தொடா்பு கட்டாயமாகியுள்ளது. அகண்ட அலைவரிசையானது கிராமங்களில் வசதிகளை மட்டுமல்லாமல், திறன்மிக்க இளைஞா்களின் தொகுப்பையும் உருவாக்குகிறது. இதுதொடா்பாக பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்.

எல்லையோர கிராமங்களை பல்வேறு போட்டிகளுக்கான தளமாக மாற்ற வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் தங்களின் அனுபவங்களைக் கொண்டு கிராமங்களைப் பயனடையச் செய்ய வேண்டும். கிராமத்தின் பிறந்த நாளாக ஒரு நாளை முடிவு செய்து, அதன் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் உணா்வுடன் அதைக் கொண்டாட வேண்டும். இதன்மூலம் பொதுமக்களுக்கு தங்களின் கிராமத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கும். கிராமப்புற வாழ்வும் வளமாகும் என்றாா் பிரதமா் மோடி.

இந்தக் கருத்தரங்கில் மத்திய அமைச்சா்கள், மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.



Read in source website

நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் மத்திய நிதியை உரிய காலத்துக்குள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையங்களில் தலைவா் மற்றும் உறுப்பினா் காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

முன்னதாக, ‘2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் மாவட்ட மற்றும் மாநில நுகா்வோா் குறைதீா் ஆணைய காலிப் பணியிடங்களை மகாராஷ்டிரம் தவிா்த்த பிற மாநிலங்கள் நிரப்ப வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுபோல, கடந்த ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘நுகா்வோா் குறைதீா் ஆணைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதி, உரிய திட்டமிடல் இல்லாததால் வீணாகும் சூழல் உள்ளது. எனவே, ஒதுக்கப்படும் மத்திய நிதியை அந்தக் காலத்துக்குள் பயன்படுத்துவதை எளிதாக்கவும், நிதிப் பயன்பாட்டுச் சான்றிதழ் சமா்ப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், நிதியின் எந்தப் பகுதியும் குறையாமல் இருக்க அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களுக்கு உதவி செய்யவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒரு வாரத்துக்குள்ளாக நியமிக்க வேண்டும்.

மத்திய நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவினா், ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆகிய அனைவரும் பொறுப்பாளிகள்’ என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கெளல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் ஆதித்யா நரைன், ‘நீதிமன்ற உத்தரவு தொடா்பாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளன. மேலும், ஒருங்கிணைப்பு அதிகாரியை 12 மாநிலங்கள் இன்னும் நியமிக்கவில்லை’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் மாநிலங்கள் மீண்டும் அலட்சியம் காட்டியுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியும், மாநிலங்கள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. நிலைமையின் தீவிரத்தை மாநிலங்களுக்குப் புரிய வைக்க இரக்கமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது’ என்று கூறிய நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியதற்கான பதில் மனுவைத் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா்.

மேலும், ‘விடுபட்ட மாநிலங்கள் அடுத்த 4 வாரங்களுக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யவேண்டும். தவறினால், மாநில அரசு தலைமைச் செயலா்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.



Read in source website

சா்க்கரை நோய்க்கான சைடஸ் நிறுவனத்தின் மாத்திரைகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய அந்த நாட்டின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (யுஎஸ்எஃப்டிஏ) அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து சைடஸ் குழுமம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சா்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் டபகிளிப்லோஸின் 5எம்ஜி மற்றும் 10எம்ஜி வடிவிலான மாத்திரைகளை அமெரிக்க சந்தைகளில் விற்பனை செய்ய யுஎஸ்எஃப்டிஏ அனுமதி வழங்கியுள்ளது. இது, 2-ஆம் வகை சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ரத்தத்தில் உள்ள சா்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க மிக பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் இதய செயலிழப்பு அபாயத்தையும் கணிசமாக குறைக்க உதவும் என சைடஸ் தெரிவித்துள்ளது.



Read in source website

குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலும், ஹிமாசல பிரதேசத்தில் சிம்லாவிலும் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் முறையே 3.4 மற்றும் 4 என்ற அலகில் ரிக்டா் அளவுகோலில் பதிவானது. இதனால் பெரிய அளவில பொருள் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடா்பாக காந்திநகரில் உள்ள புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், ‘பச்சாவ் பகுதிக்கு வடமேற்கே பூமிக்கு அடியில் 12 ஆடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பகல் 12.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 3.4 என்ற அலகில் பதிவானது. இதனால், பூமி அதிா்வதை பெரும்பாலான மக்கள் உணா்ந்தனா். நிலநடுக்க பாதிப்பு அதிகமுள்ள பகுதியில் குஜராத்தின் கட்ச் பகுதி அமைந்துள்ளது. எனவே, இங்கு அவ்வப்போது லேசான அதிா்வுகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு முன்பு கடந்த 18-ஆம் தேதியும் இதே பகுதியில் இருமுறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஹிமாசல பிரதேசம்: ஹிமாசல பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் புதன்கிழமை காலை 9.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4 என்ற அளவில் ரிக்டா் அளவுகோலில் பதிவானது. இதனால், யாருக்கும் காயமோ, பொருள் இழப்புகளோ ஏற்படவில்லை என்று அந்த மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

 

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் இக்கட்டான சூழலில் 9 வீராங்கனைகள் இருந்தாலே ஓர் அணி தனது ஆட்டத்தைத் தொடரலாம் என்கிற புதிய விதிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கரோனா சூழல் காரணமாகப் புதிய விதிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி. அணியில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தைத் தொடர்வதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஓர் அணியில் பலரும் கரோனாவால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால், அப்போது கரோனாவால் பாதிக்கப்படாத 9 வீராங்கனைகளைக் கொண்டு ஓர் அணி களமிறங்கலாம். வேண்டுமானால் அணியில் உள்ள இரு பெண்களை ஃபீல்டிங்குக்கு அனுமதிக்கலாம். ஆனால் அவர்கள் பேட்டிங், பந்துவீச்சில் ஈடுபட அனுமதி கிடையாது. ஒவ்வொரு அணியிலும் 15 வீராங்கனைகளோடு கூடுதலாக 3 மாற்று வீராங்கனைகளும் உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

நியூசிலாந்தில் 6,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.



Read in source website

 

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 அரை சதங்கள் எடுத்த முதல் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

5-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் நியூசிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களே எடுக்க முடிந்தது. இந்திய அணி இலக்கை நன்கு விரட்டி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை அடைந்தது. ஸ்மிருதி மந்தனா 71, ஹர்மன்ப்ரீத் கெளர் 63, கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாகத் தனது 50-வது அரை சதத்தை இன்று பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ். இதன்மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 50+ ரன்களை 50 முறை எடுத்த முதல் கேப்டன் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். 225 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள மிதாலி ராஜ், 7 சதங்களும் 62 அரை சதங்களும் எடுத்துள்ளார். இந்த ஒருநாள் தொடரில் மூன்று அரை சதங்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: அதிகமுறை 50+ ரன்கள் எடுத்த கேப்டன்கள்

மிதாலி ராஜ் - 50
சார்லோட் எட்வர்ட்ஸ் - 33
பெலிண்டா கிளார்க் - 29
பேட்ஸ் - 28
மேக் லேனிங் - 23



Read in source website

ஏா்திங்ஸ் மாஸ்டா்ஸ் ஆன்லைன் ரேப்பிட் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 11-ஆவது இடம் பிடித்து நிறைவு செய்தாா்.

முன்னதாக 12 சுற்றுகளில் விளையாடியிருந்த பிரக்ஞானந்தா, புதன்கிழமை 13-ஆவது சுற்றில் ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தாா். 14-ஆவது சுற்றில் அமெரிக்காவின் ஹன்ஸ் மோகோ நீமானிடம் தோல்வி கண்ட அவா், பின்னா் 15-ஆவது சுற்றில் ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆா்டெமிவை தோற்கடித்தாா். 15 சுற்றுகளின் முடிவி பிரக்ஞானந்தா 19 புள்ளிகளுடன் 11-ஆவது இடம் பிடித்திருந்தாா்.

முதல் 8 இடங்களில் இருப்பவா்கள் மட்டுமே காலிறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். பிரக்ஞானந்தா தனது 8-ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தி அசத்தினாலும், இதர சுற்றுகளில் அவா் கண்ட வெற்றி - தோல்விகளின் அடிப்படையில் நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தாா்.

பிரதமா் வாழ்த்து: முன்னதாக, காா்ல்செனுக்கு எதிராக பெற்ற வெற்றிக்காக பிரதமா் நரேந்திர மோடியும் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.



Read in source website

மூன்றாம் போருக்கு இணையான அச்சம் உலக மக்களிடையே நிலவிவருகிறது. கரோனாவால் ஏற்படுத்தப்பட்ட தாக்கமே குறையாத நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அமெரிக்க, பிரிட்டன், ரஷியா ஆகிய நாடுகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் உலகின் அதிகமான அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது நாடான உக்ரைன், கடந்த 1994ஆம் ஆண்டு, தங்களிடம் இருந்த அணு ஆயுதங்களை அழித்தது. தற்போது, இதை நினைத்து வருந்தும் அளவுக்கு நிலைமை மோசமாக மாறியுள்ளது.

தற்போது, நிகழ்காலத்தில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் முன்னொரு காலத்தில் நிகழ்ந்த வரலாற்று சுவடுகளே காரணம். அதேபோலதான், இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய தாக்குதலான உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கும் பனிப்போருக்கும் தொடர்பு இருக்கிறது. 

இரண்டாம் உலக போருக்கு பிறகு, எண்ணெய் விலை, பொருளாதார திறனற்றத் தன்மை, பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவிய பதற்ற நிலை, கோர்பச்சேவ் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் காரணமாக கம்யூனிசத்தை கட்டியெழுப்பி வல்லரசு நாடாக திகழ்ந்த சோவியத் ஒன்றியம் உடைந்தது.

கடந்த 1991ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தின் ஓர் அங்கமான உக்ரைன் வாக்கெடுப்புக்கு பிறகு சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில், உக்ரைன் சோவியத் குடியரசின் தலைவரான லியோனிட் கிராவ்சுக் வெற்றிபெற்றார். 

பின்னர், 1994ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிராவ்சுக்கை தோற்கடித்து லியோனிட் குச்மா வெற்றிபெற்றார். இது பெரும்பாலும், நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்ட தேர்தலாகவே கருதப்படுகிறது. ஆனால், கடந்த 1999ஆம் ஆண்டு, தேர்தல் முறைகேட்டின் காரணமாக, குச்மா மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 

2004ஆம் ஆண்டு, ரஷிய ஆதரவு அதிபர் வேட்பாளரான விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றார். ஆனால், தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து உக்ரைன் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆரஞ்சு புரட்சி எனப்படும் இந்த போராட்டத்தின் விளைவாக மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளராக கருதப்படும் முன்னாள் பிரதமரான விக்டர் யுஷ்செங்கோ, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், 2005ஆம் ஆண்டு, ரஷியாவின் கட்டுப்பாட்டிலிருந்து உக்ரைன் விடுவிக்கப்படும் என்றும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்கப்படும் என்றும் யுஷ்செங்கோ உறுதிமொழி அளித்தார். எண்ணெய் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான யூலியா திமோஷென்கோவை யுஷ்செங்கோ பிரதமராக நியமித்தார். ஆனால், மேற்கத்திய நாடுகளின் ஆதரவாளர்களாக கருதப்படும் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், அவரை பதவியிலிருந்து நீக்கினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு, தங்களின்  கூட்டணியில் உக்ரைன் இணைக்கப்படும் என நேட்டோ உறுதி அளித்தது. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் யானுகோவிச் திமோஷெங்கோவை தோற்கடித்தார். எண்ணெய் ஒப்பந்தத்தின் காரணமாக உக்ரைன் கருங்கடல் துறைமுகத்தை ரஷிய கடற்படைக்கு உக்ரைன் குத்தகைக்கு விட்டது.

2013ஆம் ஆண்டு, யானுகோவிச்சின் அரசு நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகம் மற்றும் கூட்டணி பேச்சுக்களை இடைநிறுத்தி, ரஷியாவுடனான பொருளாதார உறவுகளை புதுப்பிக்க விரும்பியது. உக்ரைன் தலைநகர் கீவில் பல மாதங்களாக நடைபெற்ற போராட்டத்திற்கு இது காரணமாக மாறியது. கீவ் சதுக்கத்தை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் 12க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் மரணம் அடைந்தனர். 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட யானுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அவர் நாட்டிலிருந்து தப்பியோடினார். சில நாட்களிலேயே, உக்ரைனில் உள்ள கிரிமியாவின் நாடாளுமன்றத்தை ஆயுதமேந்தியவர்கள் கைப்பற்றி ரஷ்ய கொடியை ஏற்றினர். மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, கிரிமியாவை ரஷியா தங்களுடன் இணைத்து கொண்டது.

2014ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், டான்பாஸின் கிழக்குப் பகுதியை சுதந்திர நாடாக ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இன்று நடைபெறும் போருக்கு இந்த அறிவுப்பு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.



Read in source website

உக்ரைன் மீது ரஷியா இன்று காலை ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இச்சூழலில், அரசுமுறை பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷியாவுக்கு சென்றுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்கா, "ரஷியாவின் நடவடிக்கைக்கு பொறுப்புமிக்க அனைத்து நாடுகளும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தது.

உக்ரைன் விவகாரத்தில் தங்களின் நிலைபாடு குறித்து பாகிஸ்தானிடம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைக்கத்தின் செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் புதினை இம்ரானின் கான் சந்திக்கவுள்ளார். இதுகுறித்து நெட் பிரைஸிடம் செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், "உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய படையெடுப்பு தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாகிஸ்தானுக்குத் தெரிவித்துள்ளோம். 

மேலும் போரில் இராஜதந்திரத்தைத் தொடர நாங்கள் எடுக்கும் முயற்சிகள் குறித்து அவர்களுக்கு விளக்கியுள்ளோம். உக்ரைனுடனான உறவை அமெரிக்க நலன் சார்ந்த பார்ப்பது முக்கியம்" என்றார்.

ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை மாஸ்கோவுக்கு சென்றார். கிழக்கு உக்ரைனில் ரஷியா படைகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் ரஷியா மீது பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து இம்ரான் கானும் புதினும் ஆலோசிக்கவுள்ளனர்.

இதையும் படிக்கஉக்ரைன் முக்கிய நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை

தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் பரஸ்பர நலன் குறித்தும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றியும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ரஷியா ராணுவம் நுழைந்த நிலையில், ரஷியாவுக்கு செல்லும் முதல் உலக தலைவர் இம்ரான் கானே ஆவார். 23 ஆண்டுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் பொறுப்பில் உள்ள ஒருவர் ரஷியாவுக்கு செல்வது இதுவே முதல்முறை.


 



Read in source website

ரஷிய படைகள் உக்ரைனை தாக்கி வரும் நிலையில் அண்டை நாடான லிதுவேனியாவில் அவசர நிலை அமல்படுத்துவதாக அதிபர் கிடானாஸ் நௌசேடா தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த்தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் லிதுவேனியாவில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அதிபர் கிடானாஸ் நௌசேடா அறிவித்துள்ளார்.
 



Read in source website


உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு அதிபர் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார், இது பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று புதின் கூறியுள்ளார். 

புதின் ஒரு தொலைக்காட்சி உரையில் கூறியிருப்பதாவது: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்று புதின் கூறியுள்ளார். 

மேலும் உக்ரைன் ராணுவம் தனது ஆயுத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள புடின், ரஷிய நடவடிக்கைகளால் ஏராளமான உயிர்கள் பலி மற்றும் ரத்தக்களரிகளுக்கு 'உக்ரைன் ஆட்சியாளர்களே' பொறுப்பு என்று புதின் கூறியுள்ளார். 

ரஷிய நடவடிக்கையில் தலையிடும் எந்தவொரு நாட்டின் முயற்சியும் "அவர்கள் பார்த்திராத விளைவுகளை" ஏற்படுத்தும் என்று புதின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க புதின் உத்தரவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 



Read in source website

 ஒட்டுமொத்த உலகத்தையும் தமிழகத்தை நோக்கித் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா என்கிற 16 வயதுச் சிறுவன். ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில் நார்வேயை சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்செனை அவர் தோற்கடித்திருப்பது சாதனை வெற்றி. 16 வீரர்கள் பங்குபெறும் ரேபிட் பார்மெட் இணையவழி செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
 கடந்த ஆண்டு செஸ் கிளாஸிக் பந்தயத்தில் இதே மேக்னஸ் கார்ல்செனுடனான போட்டி வெற்றி - தோல்வியில்லாமல் முடிந்தது. தன்னுடன் போட்டிபோடும் தகுதி இருப்பதாக அந்தச் சிறுவனிடம் காணப்பட்ட தன்னம்பிக்கையை, கார்ல்சென் வியந்து பாராட்டினார். இப்போது தன்னைத் தோற்கடித்திருக்கும் பிரக்ஞானந்தாவை வாழ்த்தி ஆசீர்வதித்திருக்கிறார்.
 மேக்னஸ் கார்ல்சென் சாதாரணமான விளையாட்டு வீரர் அல்ல. இதற்கு முன்னால் அவரை வென்ற இந்திய வீரர்கள் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும், கிராண்ட் மாஸ்டர் பெந்தல ஹரிகிருஷ்ணாவும் என்பதிலிருந்தே பிரக்ஞானந்தாவின் வெற்றி எத்தகையது என்பதை உணர முடியும். தனது போட்டியாளர்களை அசர அடிக்கும் கார்ல்செனை, பதற்றமே இல்லாத அமைதியான அணுகுமுறையால் பிரக்ஞானந்தா கடுமையான அழுத்தத்துக்கு உள்ளாக்கியதை உலகமே கண்டு வியந்தது.
 இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த அந்த 16 வயது சிறுவன், காய்களை எங்கேயும் நகர்த்த முடியாத தர்மசங்கடத்துக்கு மேக்னஸ் கார்ல்செனை உள்ளாக்கினார். 39-ஆவது நகர்வில் கார்ல்சென் கைகளை விரித்துத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். தனது கதாநாயகனைத் தோற்கடித்த பெருமிதமும், தன்னையே நம்ப முடியாத ஆச்சரியமும் பிரக்ஞானந்தாவை திக்குமுக்காடச் செய்தன.
 2016-இல் தனது 10-ஆவது வயதில், உலகின் மிகக் குறைந்த வயதில் செஸ் பந்தயத்தில் சர்வதேச மாஸ்டர் பட்டம் பெற்றவர் பிரக்ஞானந்தா. தொடக்கம் முதலே அவர் சர்வதேச விளையாட்டுக்காரருக்கான தகுதி பெற்றிருந்ததை செஸ் வல்லுனர்கள் அடையாளம் கண்டனர்.
 இரண்டாண்டு கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பிரக்ஞானந்தாவின் தன்னம்பிக்கை கடுமையாகக் குறைந்திருந்தது. செஸ் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்ததும், சர்வதேச பந்தயங்களில் பங்குபெறாமல் போனதும் அந்தச் சிறுவனுக்குத் தளர்வை ஏற்படுத்தியதாக பயிற்சியாளர் குறிப்பிட்டிருந்தார். சரியான நேரத்தில் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் கார்ல்செனை வென்றிருப்பது பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஊக்கம்.
 சதுரங்க ஆட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதொன்றுமல்ல. நமது புராண இதிகாச காலத்திலிருந்து அரண்மனைகளிலும் தெருவோரங்களிலும் விளையாடப்படுவதுதான் அது. பிற்காலத்தில் மேல்நாட்டு பாணி சதுரங்கமான செஸ் விளையாட்டு அறிமுகமானபோது இந்தியர்களுக்கு அதில் தேர்ச்சி பெறுவது சிரமமாக இருக்கவில்லை.
 சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா கடந்த 60 ஆண்டுகளாகத்தான் முத்திரை பதித்து வருகிறது. 1961-இல் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டராக மேனுவல் ஆரான் தடம் பதித்தார். அதற்கு பிறகு 26 ஆண்டுகள் கழித்து 1987-இல் 18 வயதுகூட நிரம்பியிராத விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டராக சாதனை நிகழ்த்தினார். 2000-இல் இந்தியாவின் முதல் உலக சாம்பியனாக உயர்ந்ததும் விஸ்வநாதன் ஆனந்தே. இதுவரை 5 முறை உலக சாம்பியனாகவும், ஒருமுறை ரஷியாவுடன் இணைந்து செஸ் ஒலிம்பிக் சாம்பியனாகவும் தேர்ந்தவர் ஆனந்த்.
 ஆனந்தை தொடர்ந்து இப்போது ஏராளமான சிறுவர்களும், இளைஞர்களும் செஸ் விளையாட்டில் சாதனை புரிந்து வருகின்றனர். பிரக்ஞானந்தா மட்டுமல்லாமல் திவ்யா தேஷ்முக், நிகல் ஷரின், வைஷாலி, பெந்தல ஹரிகிருஷ்ணா, விதீத் குஜராத்தி, கோனேரு ஹம்பி, ஹரிகா என்று வரிசையாகப் பலர் சர்வதேச அளவில் இந்தியக் கொடியை செஸ் பந்தயங்களில் உயர்த்திப் பிடிக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னோடியும், இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டியும் விஸ்வநாதன் ஆனந்த் என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
 1987-இல் விஸ்வநாதன் ஆனந்த முதலாவது கிராண்ட் மாஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, இப்போது இந்திய கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 73. பிரக்ஞானந்தா இந்திய விளையாட்டு வீரர்களில் 16-ஆவது இடத்திலும், உலகத் தர வரிசையில் 193-ஆவது இடத்திலும் இருக்கிறார். இன்றைய பதின்ம வயது இந்திய செஸ் விளையாட்டு வீரர்களில் அதீத திறமைசாலி என்று கருதப்படும் பிரக்ஞானந்தா இப்போது விஸ்வநாதன் ஆனந்தின் வழிகாட்டுதலில் இருக்கிறார் எனும்போது அவரது வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெறுவதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்த், அனடோலி கார்போவ், கேரி கேஸ்பரோவ், மேக்னஸ் கார்ல்சென் வரிசையில் பிரக்ஞானந்தா இடம்பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
 பிரக்ஞானந்தாவின் வளர்ச்சியும் வெற்றியும் நமக்கு சில செய்திகளைத் தருகின்றன. தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை செஸ் விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுபோல, அரசுப் பள்ளிகளில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. தொடக்கப்பள்ளி நிலையிலேயே செஸ் விளையாட்டுப் பயிற்சி வழங்குவதன் மூலம் வருங்கால விஸ்வநாதன் ஆனந்த்களையும், பிரக்ஞானந்தாக்களையும் அடையாளம் காண முடியும். அவர்களுக்குத் தகுந்த ஊக்கமும், அரசு ஆதரவும் ஆரம்பத்திலிருந்தே வழங்கப்பட்டால் தமிழகம், கிராண்ட் மாஸ்டர்களின் கேந்திரமாக உயரக்கூடும்!



Read in source website

 ஒரு மனிதன் தனித்துவமாக சிறந்து விளங்கி தன்னிலை தாழாது எப்போது அனைவராலும் விரும்பப்படுபவனாக இருக்க வேண்டுமானால் அவன் ஐந்து ஒழுக்க மந்திரங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சான்றோர்களால் என்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த ஐந்து ஒழுக்க மந்திரங்கள், பணிவு, உண்மை, தூய்மை, நேர்மை, இரக்கம். இவை ஐந்து விரல்களைப் போன்றவை.
 இவற்றில் பணிவு எனப்படும் மந்திரம் இன்று அருகி வருகிறது. இதனால் மனிதர்களிடையே போட்டி, பொறாமை, தற்பெருமை வளர்ந்து சமுதாயம் வெறுப்புணர்ச்சியை சந்தித்து மனிதர்கள் வெறுக்கப்படுபவனாகிறார்கள். ஒரு காலத்தில் வாய்மையே சான்றோர்களின் வாய்ச்சொல்லாக இருந்ததால் அது என்றும் வென்றது. உண்மையே அறிஞர்களின் உறைவிடமாக இருந்ததால் அது என்றும் நிலைத்தது. பணிவே ஆன்றோர்களின் பண்பாக இருந்ததால் அது என்றும் உயர்ந்தது. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வத் தகைத்து' என்கிறார் வள்ளுவர்.
 பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, நடிப்போ, தந்திரமோ கிடையாது. அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவையாகும். பிறரை புண்படுத்தாமல் பேசாமலிருப்பதும், மற்றவர்கள் சொல் கேட்டு புரிந்து, மதித்து நடப்பதும், விட்டுக் கொடுப்பதும் பணிவின் அடையாளங்களே.
 தற்பெருமை கொண்டவனிடம் எப்போதும் பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒருவன் உண்மையானவன் என்பதை மதிப்பிடும் அளவுகோல்தான் பணிவு. தனக்கு தனிப் பெருமை தருபவன் ஆணவத்தை வளர்க்கிறான். தன்னை அனைத்திலும் ஐக்கியப்படுத்துபவன் பணிவுடையவனாகிறான். தாழ்ந்த நிலத்தில் தான் தண்ணீர் ஓடி நிற்கும். பணிவுடையார் உள்ளத்தில்தான் அருள் வெள்ளம் பாய்ந்து நிற்கும்.
 பணிவு எளிதில் வராது. பணிவு வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த குணம். முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல் போல, நிறைந்த அறிவும், ஆற்றலும் உடையவர்கள் பணிந்து போவர். அது கோழைத்தனமன்று, குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி.
 ஒரு முறை கையின் விரல்களுக்குள் சண்டை வந்து விட்டது. அவற்றில் யார் பெரியவர் என்று தகராறு முற்றியது. கட்டைவிரல் சொன்னது, நான் குட்டையாக இருந்தாலும், முக்கியமானவன், நான் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது, நீங்கள் நான் இல்லாமல் இயங்க முடியாது என்று ஆணவத்துடன் கூறியது. வெற்றிக்கு என்னைத் தான் உயர்த்திக் காட்டுக்கிறார்கள் என்றும் பெருமையாகப் பேசியது. உடனே ஆள்காட்டி விரல், நான் தான் தீர்மானம் செய்வேன், நான் காட்டும் திசையில் தான் மற்றவர்கள் செல்ல வேண்டும், நான் பிறரை ஆட்டிப்படைப்பேன். நான் விரலைக் கீழே காட்டினால் உட்கார வேண்டும், மேலே உயர்த்தினால் எழ வேண்டும் என்றது.
 இதையெல்லாம் பார்த்து சிரித்த நடுவிரல், நான் உங்களையெல்லாம் விட உயரமானவன், அது மட்டுமல்ல, நான் நடுநாயகமாக இருக்கிறேன். முக்கியஸ்தர்கள் எப்போதும் நடுநாயகமாக வீற்றிருப்பார்கள், ஆகவே, நானே முக்கியம் என்று கர்வத்துடன் பேசியது. மோதிர விரல் இதைக் கேட்டு வறட்டு சிரிப்பு சிரித்தது. நீங்கள் எல்லாம் வீணாய் போனவர்கள். நான் மட்டும் பணக்காரன், மனிதர்கள் எனக்குத் தான் ராஜ மரியாதை கொடுப்பார்கள். தங்கம், வைரம் மற்றும் ரத்தினங்கள் பதித்த தங்க மோதிரங்களை என் மீது அணிவித்துத் தான் அழகு பார்ப்பார்கள் என்று அகங்காரத்துடன் கூறியது.
 இவையெல்லாம், தங்கள் பெருமையை பறைசாற்றி விட்டு சுண்டு விரலை ஆணவத்துடன் பார்த்தன. ஆனால், சுண்டு விரல் தான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லையே என்று, பணிந்து நின்று அவர்களேயே விழிக்க, விழிக்க பார்த்தது. மற்ற விரல்கள் அதைப் பார்த்து கேலி செய்து சிரித்தன. சுண்டு விரலுக்கு துக்கம் தொண்டையை அடைத்து, அழ ஆரம்பித்து விட்டது. பின்னர், இறைவனிடம் சென்று, இறைவா என்னை ஏன் படைத்தாய், நான் எதற்கும் பயன் இல்லையாம், நான் எல்லாரிடமும் பணிவாக இருக்கிறேன், இது தப்பா? இது நியாயமா ? என்று கேட்டது.
 இறைவன், சிரித்தபடி, "அன்பான சுண்டுவிரலே, நீ ஒன்றும் சாதாரண விரல் அல்ல, பணிவான விரல். மக்கள் திருக்கோவிலுக்கு வருகிறார்கள். என் முன்னால் நின்று என்னைப் பார்த்து கும்பிடுகிறார்கள். அப்போது என் பார்வை முதலில் உன் மீது தான் விழுகிறது. முதலில் உன்னை பார்த்து விட்டுத் தான் மற்ற பாகங்களைப் பார்க்கிறேன். உண்மையில் நான் உன்னைத்தான் முழுமையாகப் பார்க்கிறேன். மற்ற விரல்கள் என் கண்ணுக்குத் தெரிவதில்லை. நீ தான் என் அருகில் இருக்கிறாய்' என்றார்.
 "அது மட்டுமா, மனிதர்கள் எண்களை எண்ணும் போது உன்னிடமிருந்து தானே தொடங்குகிறார்கள், அதனால் நீ முதல்வன், வருந்தாதே, என்றும் இப்போது போல் பணிவாக இரு' என்றார். அதைக் கேட்டு சுண்டு விரல் மகிழ்ந்தது. தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு தான் பணிவு பிறக்கிறது.
 "பழங்கள் இருக்கும் கிளை எப்போதும் கனத்தினால் தாழ்ந்து வளைந்து இருக்கும். நீங்கள் பெருமை அடைய வேண்டுமானால் எப்போதும் அடக்கத்துடனும், பணிவுடனும் இருங்கள்' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
 பணிவு என்பது அடிமையின் குணமல்ல, தாழ்மையின் சின்னமுமல்ல, அது உயர்ந்த பண்பின் அறிகுறி. குடும்ப உறுப்பினர்கள் பெரியவர்களிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும், கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும், மாணவர்கள் ஆசிரியர்களிடமும், தொழிலாளிகள் முதலாளிகளிடமும், ஊழியர்கள் அதிகாரிகளிடமும், தொண்டர்கள் தலைவர்களிடமும் எப்போதும் பணிவாக இருந்தால் தான் அவர்களிடையேயான உறவு முறை சிறக்கும், ஒற்றுமை மேலோங்கும், வாழ்வு செம்மையுறும்.
 பணிவு என்பது ஒருவரின் முன்னேற்றத்திற்கான முதல் படி.



Read in source website

தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதுமான இலங்கையின் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை ஏறக்குறைய 900-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் பலியாகியும் உள்ளனர்.
 இதேபோல இலங்கை மீனவர்களை இந்தியக் கடல்படை சுட்டுக் கொன்றதுண்டா? இலங்கைப் படகுகளைப் பறிமுதல் செய்து சென்னை, ராமேஸ்வரம் துறைமுகங்களில் வைத்துள்ளதா? இல்லை என்பது நிஜமட்டுமல்ல. இதுபோன்ற இழிவை இந்தியா எப்போதுமே செய்தது இல்லை. செய்ய முடிந்தாலும் செய்ததே இல்லை.
 இந்தியா அணுஆயுத பலமுள்ள வல்லரசு நாடு. இந்திய ராணுவத்தின் ஆயுதபலம், சீன தேசத்தையும், பாகிஸ்தானையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் அளவுக்கு இருப்பதைக் காட்ட, நமது ஏவுகணைகள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போதும். இத்தனை பலமுள்ள இந்திய தேசம், அளவில் மிகச்சிறிய, ஆயுதபலமும் இல்லாத, பொருளாதாரத்தில் கடனாளியாகி பிற நாடுகளிடம் கையேந்தி நிற்கும் நாட்டோடு இப்படி நடந்துகொள்வது ஆச்சர்யம்தான்.
 இந்தியாவின் எட்டு கோடி தமிழர்களும் பெருமூச்சுவிட்டாலே போதும், இலங்கையில் அது சூறாவளியாகிவிடும். இலங்கைக்கு இந்தத் துணிச்சல் அல்லது ஆணவம் வருவதற்குரிய பின்புலம் என்ன? சீன தேசம் இலங்கையின் கடல் பரப்பில் 1,000 ஹெக்டரை செயற்கையாக நிலப் பகுதியாக்கி ஒரு ராணுவத் தளத்தையே உருவாக்கி வருகிறது. அது நாளை இந்தியாவை மிரட்டுவதற்கு பயன்படுத்தப்படலாம்.
 இவ்வாறு, பலவீனமான இலங்கை, யாருக்காவோ இந்தியாவின் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டாமா?
 இலங்கையில் சிங்கள இனம் மட்டும்தான் உள்ளதா?
 இலங்கையின் 2 கோடியே 10 லட்சம் மக்கள்தொகையில் 16 சதவீத மக்கள் (35 லட்சம் பேர்) தமிழர்கள். அவர்கள் மத ரீதியில் ஹிந்துக்கள். 7 சதவீதம் முஸ்லிம்கள். 6 சதவீதம் கிறிஸ்தவர்கள். 70 சத மக்கள் சிங்கள பெளத்தர்கள்.
 சிங்கள இன அரசு சிறுபான்மைத் தமிழர்களை நடத்தி வரும் விதத்தை நாம் நன்கு அறிவோம். இன்னும் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் ஒரு லட்சம் பேர் இருந்து வருவது ரகசியமல்ல. அவர்களின் நலத் திட்டங்களுக்காக தமிழக அரசு சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ. 317 கோடி ஒதுக்கியுள்ளதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து, இலங்கைத் தமிழர் கூட்டணியும், உலகத் தமிழர் கூட்டணியும் கடிதங்களை எழுதியுள்ளது நினைவுகூரத்தக்கதாகும்.
 இலங்கையின் வடக்குப் பகுதிகளில் மலையகத் தமிழர்கள் உள்ளனர். கிழக்குப் பகுதியில் யாழ் தமிழர்கள் உள்ளனர். சிங்களரைப் போலவே இலங்கையின் யாழ் தமிழர்கள் பூர்வகுடிமக்கள். அவர்கள் வந்தேறிகள் அல்லர்.
 ஒரு காலத்தில் இலங்கையின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தது. இப்போது இல்லை. இலங்கை ராணுவத்தில் தமிழர்கள் தளபதிகளாகவும் இருந்தனர். இப்போது காவல்துறை உயர் பதவிகளில்கூட இல்லை. அவர்களின் வசம் தடிகள் மட்டும் தரப்பட்டுள்ளது. துப்பாக்கிகள் இல்லை.
 உலகத்தின் பல நாடுகளுக்கு, குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் சுமார் 20 ஆண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
 சிங்களப் பேரினத்தின் கொடுமையால் தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் நீடிக்கின்றனர். அதன் காரணமாக தனிநாடு கேட்டுப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர். தமிழ் ஈழம் என்ற பிரிவினைக் கோரிக்கையை வைத்து 1983 முதல் 2009 வரை ஏறக்குறைய 25 ஆண்டுகளாகப் போரிட்டனர்.
 தமிழர்களை வெல்ல முடியாத இலங்கை சிங்கள அரசு, பிற நாடுகளின் ரகசிய ராணுவ உதவிகளால் தமிழர்களை அடக்கி ஒடுக்கிவிட்டது மட்டுமல்ல, 1 லட்சத்து 40 ஆயிரம் தமிழர்களை அமைதிப் பிரதேசத்திற்கு ஏமாற்றி வரவழைத்துக் கொன்று குவித்துவிட்டது. வெள்ளைநிற வேன்களில் கொண்டு செல்லப்பட்ட 20 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்ற ஐ.நா.வின் மனித உரிமைக் கழகத்தின் கேள்விக்குப் பதில்லை.
 இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் மேலும் இருண்டுபோய்க் கிடக்கிறது. 2 லட்சத்து 50 ஆயிரம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாகிவிட்டது.
 இந்தியாவின் ஓர் அங்கமாகத்தான் தமிழகம் உள்ளது. 1991-இல் தமிழகத்தின் பாக் ஜலசந்தியின் 9 தீவுகளில் ஒன்றான கச்சத் தீவு 1974-இல் இலங்கைக்கு அரசியல் பேரமாகத் தரப்பட்டது. அதனால் தமிழக மீனவர்கள் அந்தத் தீவின் மீதிருந்த சகல உரிமைகளையும் இழந்துவிட்டனர்.
 கச்சத் தீவில்தான் ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் மீன்பிடி வலைகளை உலர்த்துவார்கள். இப்போது உள்ளே நுழைய முடியாது. அவ்வளவு ஏன்? கச்சத் தீவில் ஆண்டுதோறும் நடக்கும் அந்தோணியார் தேவாலயத் திருவிழாவுக்குக்கூட தமிழ்நாட்டுக் கிறிஸ்தவ மீனவர்களுக்கு அனுமதி தர இலங்கை தாமதிக்கிறது.
 கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என மத்திய அரசு 2013-இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 8.7.2014-இல் பிரதமர் மோடிக்கு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுபற்றி ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.
 1991-இல் தமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வேண்டுமென்று தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
 இந்த நிலையிலும், இலங்கைக்கு ரூ. 6,700 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித்துள்ளதை இலங்கை அரசு நன்றியோடு நினைவுகூரத் தவறிவிட்டது.
 இலங்கையில் 13-ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த அழுத்தம் தர வேண்டுமென யாழ்ப்பாண மாகாண எம்.பி.-க்கள் பிரதமருக்குக் கோரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன், நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் இலங்கை இந்திய தூதரகத்தின் மூலமாக பிரதமருக்கு அக்கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
 கச்சத்தீவு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான தீவு. 1956 வரை நிலஅளவை ஆவணங்களில் கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட எந்தத் தடையும் இல்லை. அதற்கு உதாரணமாக உலக அரசியல் அரங்கில் தற்போது நமக்கு உதவிகரமாக உருவாகியுள்ள சம்பவங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
 சோவியத் யூனியன் 1917-இல் உருவானபோது, அதில் 30 ஐரோப்பிய நாடுகள் இணைந்தன. பின்னர் 1991-இல் சோவியத் யூனியனிலிருந்து எல்லா நாடுகளும் பிரிந்துவிட்டன. அவ்வாறு இணைந்து பின்னர் பிரிந்த நாடுதான் உக்ரைன் நாடு.
 அதில் கிழக்குப் பகுதியிலுள்ள கிரிமியா என்ற தீவில் வாழ்கிற மக்கள் இனத்தால் ரஷியர்கள். அத்தீவு உக்ரைன் ஆட்சியில் இருந்தாலும், அங்கு 10 சத மக்களே உக்ரைனியர்கள். 90 சத மக்கள் ரஷியர்கள்.
 அம்மக்கள் ரஷியாவோடு இணைந்துகொள்ள விரும்புகிறார்களா அல்லது உக்ரைனுடன் இருக்க விரும்புகிறார்களா என ரஷியா அங்கு ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. ரஷியாவுடன் இணைவதற்கு 97 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். 2014-இல் ரஷியா கிரிமியாவை இணைத்துக் கொண்டது. அதன்பின்னர் ரஷிய முதலீடுகள் கிரிமியாவுக்குக் கிடைத்து அது வளமாகி வருகிறது. கிரிமியாவை ரஷியா தனது இன உணர்வோடுதான் இணைத்துக் கொண்டுவிட்டது.
 கிரிமியா இல்லாத உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடிக்கிறது. காரணம், ரஷியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அணியில் உக்ரைன் சேரலாம் என்று ரஷியா சந்தேகப்படுகிறது. அச்சுறுத்தி அதைத் தடுக்கவே இந்தப் போர் என்கிறது ரஷியா.
 இந்த சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இலங்கையின் தமிழ் ஈழத்தை உருவாக்க அங்கு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு முன்பாக கச்சத்தீவை அதிரடியாகவே மீட்கவும் அறிவிப்பு செய்ய வேண்டும். உக்ரைன் நாடு கிரிமியாவை இனி மீட்டெடுக்க முடியாது. காரணம், அங்குள்ளவர்கள் இனவழியில் ரஷியர்கள்.
 31.1.2021-இல் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் சம்பந்தமான பிரச்சினையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்க கலந்துகொண்ட 10 நாடுகளில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். கிரிமியா ரஷியர்களைப் போல இலங்கை தமிழ் மக்கள் உள்ளனர்.
 அவர்களின் தனிநாடு கோரிக்கைக்கு முன்பாக, இலங்கையின் சம உரிமையுள்ளவர்களாக வாழ 13-ஆவது சட்டத் திருத்தத்தை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு பாரத அரசு தமது பலத்தையும் காட்டலாம். இது சம்பந்தமாக சென்ற ஆண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் திரும்பியுள்ளார். எவ்வகையிலும் இது ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டது அல்ல. ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான சுதந்திரக் கோரிக்கைக்கான ஆதரவு மட்டுமே ஆகும்.
 1971-இல் வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி உதவியதுபோல, தமிழ் ஈழ விடுதலைக்கு உதவுவது பற்றி பாரத பிரதமர் மோடி சிந்திக்க வேண்டிய நல்ல தருணம் இது. இதை நழுவ விடக் கூடாது.
 
 கட்டுரையாளர்:
 எழுத்தாளர்.



Read in source website

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு படிப்பதற்காக தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரவிந்த் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021-ம் ஆண்டு விதிகளின் படி வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு பயின்றால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும். அதன்பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள், மொரீசியஸ் நாட்டில் மருத்துவம் படித்து மருத்துவராகும் தனது கனவிற்கு இடையூறாக உள்ளன. மொரீசியஸில் 36 மாதங்கள் மட்டுமே மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. இந்நிலையில், 54 மாதங்கள் என்பது நிர்ணயித்திருப்பதும், புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரியில் பயிற்சி பெற வேண்டும் என்பதும் இடையூறாக இருப்பதால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நோயாளிகளின் உயிர் காப்பது தொடர்பான படிப்பை, விரைவு படிப்பாக படிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினர்.

நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில்தான் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளில் சமரசம் செய்ய முடியாது எனக் கூறி, மனுதாரர் அரவிந்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், மனுதாரர் மொரீசியல் கல்லூரியில் விண்ணப்பம் கூட செய்யாத நிலையில், யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறிய தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அந்த தொகையை 15 நாட்களில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிற்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.



Read in source website

சென்னை: பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர் நலவாரியம்' அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை: "தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021-22 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 6.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில், " தமிழகத்தில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்துப் பெருமை சேர்த்துள்ளார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செவ்வனே செயல்படுத்துவதோடு, நல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் "பத்திரிகையாளர் நல வாரியம்" ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளைத் தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு, பத்திரிகையாளர் நல வாரியக் குழு ஒன்றை அமைத்து, அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பின்வருமாறு நியமித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த நல வாரியத்தின் தலைவராக செய்தித்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை ஆணையர், நில நிர்வாகத்துறை ஆணையர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்/துணைச் செயலாளர் உள்ளிட்டோர் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிவந்தி ஆதித்யன் பாலசுப்பிரமணியன் (தினத்தந்தி குழுமம்), ஆர்.எம்.ஆர்.ரமேஷ் (தினகரன் நாளிதழ்), பி.கோலப்பன் (துணை ஆசிரியர், தி இந்து), எஸ்.கவாஸ்கர் (செய்தியாளர், தீக்கதிர் நாளிதழ்), எம்.ரமேஷ் (சிறப்பு நிருபர், புதிய தலைமுறை தொலைக்காட்சி), லெட்சுமி சுப்பிரமணியன் (முதன்மை சிறப்பு நிருபர், தி வீக் செய்தி வார இதழ்) ஆகியோர் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அரசாணையின்படி, பத்திரிகையாளர் ஓய்வூதியப் பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன், பத்திரிகையாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் மேற்காணும் குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும், நீதிப் பேராணை மனு என் 32091/2019-ன் மீதான மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டதாகும்" என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்கும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலஅவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018-ல் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது நடைபெற்ற கலவரத்தின்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, வன்முறை குறித்து விசாரிப்பதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அப்போதை முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு அமைத் தது.

2018 ஜூன் 4-ம் தேதி விசாரணை ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியது. முதலில் விசாரணைக்காக அளிக்கப்பட்ட 3 மாதகாலஅவகாசம், பின்னர் 6 மாதமாகநீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இடைக்கால அறிக்கை தாக்கல்

இந்நிலையில், கடந்த ஆண்டுமே 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், விசாரணை யின் இடைக்கால அறிக்கையை ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

ஆணையத்தின் காலஅவகாசம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 3 மாதங்கள் காலஅவகாசம்நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 22-ம் வரை காலஅவகாசம் வழங்கப்பட் டுள்ளது.



Read in source website

நியூயார்க்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை இன்று முதன்முறையாக 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு பீப்பாய் 100 டாலர் என்ற அதிகபட்ச விலையை தொட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரம்

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் இன்று 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ப்ரெண்ட் கச்சா எண்ணெய் தொடக்கத்தில் ஆசிய வர்த்தகத்தில் ஒரு பீப்பாய் 101.34 டாலராக ஆக உயர்ந்தது. இது 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு பிறகு மிக அதிகமான விலையாகும். ஜிஎம்டி சந்தையில் ஒரு பீப்பாய் 101.20 டாலராக ஆக இருந்தது. அதாவது ஒரே நாளில் 4.36 டாலர் அல்லது 4.5 சதவீதம் உயர்ந்தது.

அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் சந்தையில் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்த அடிப்படையிலான விலை 4.22 டாலர் அல்லது 4.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்தது. ஒரு பீப்பாய் 96.32 டாலராக ஆக உயர்ந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கச்சா இந்த சந்தையில் கச்சா எண்ணெய் 96.51 டாலர்களாக விற்பனையானது. தற்போது அதற்கு நிகராக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல்- டீசல் விலை உயரும்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலக அளவில் அதிகமாக பெட்ரோலிய பொருட்களை நுகரும் நாடுகளில் அதன் விலை உயரும் ஆபத்து உள்ளது.

அதுபோலவே கச்சா எண்ணெய் கையிருப்பு குறைவாக உள்ள நாடுகளிலும் உடனடியாக விலை உயரும் எனத் தெரிகிறது. இந்தியாவில் பல நாட்களாக பெட்ரோல்- டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ள நிலையில் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Read in source website

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனை தீவிரமாக தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைன் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழப்புகள் குறித்த தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் குறித்த உலக நாடுகளின் பார்வை இதோ...

அமெரிக்கா: "உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் நிச்சயமாக மனித உயிர்களுக்கு பேரிழப்பு ஏற்படும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவையே பொறுப்பாக்கும். இந்தத் தாக்குதல் நியாயமற்றது."

ஜெர்மனி: "உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அப்பட்டமான விதிமீறல்."

ஐக்கிய நாடுகள் சபை: "போரின் விளைவுகள் உக்ரைனுக்குப் பேரழிவை ஏற்படுத்தும்; உலகப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். ரஷ்ய அதிபரே... மனிதாபிமான அடிப்படையில் உங்களது படைகளைத் திரும்ப பெறுங்கள்."

பிரிட்டன்: "உக்ரைன் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ரத்தம் சிந்தும் அழிவுப் பாதையை ரஷ்ய அதிபர் தேர்ந்தெடுத்துள்ளார்."

ஐரோப்பிய யூனியன்: "இந்த கடுமையான நேரத்தில், உக்ரைனின் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள், ஆண்கள் பக்கம் நிற்கிறோம். உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும்."

நேட்டோ: "இறையாண்மை மற்றும் சுதந்திர நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்புப் பாதையை ரஷ்யா தேர்ந்தெடுத்துள்ளது."

செக் குடியரசு: "ரஷ்யாவின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது, சர்வதேச சட்டத்திற்கு முரணானது."

சீனா: "உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதால், அங்குள்ள சீன மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்."

போலந்து: "ரஷ்யாவின் குற்ற நடவடிக்கைக்கு எதிராக நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

ஹங்கேரி: "இப்போதைய பணி, எப்போதும் போல் ஹங்கேரிய மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாகும். உக்ரைனில் உள்ள ஹங்கேரி தூதரகத்தை ஹங்கேரி மக்கள் தொடர்பு கொள்ளுங்கள்."

ஆஸ்திரேலியா: "சட்டவிரோதமான, தேவையற்ற, நியாயமற்ற தாக்குதல்கள். இந்த அச்சுறுத்தலுக்கு நிச்சயம் விலை உண்டு."

பிரான்ஸ்: "ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பிரான்ஸ் உக்ரைனுடன் நிற்கிறது."

ஸ்பெயின்: "உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்."

கனடா: "இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான மீறல். இந்த பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான செயல்கள் தண்டிக்கப்பட கூடியது."



Read in source website

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். தடையற்ற வர்த்தகம், முதலாளித்துவப் பொருளாதாரம், அதிக ஜனநாயக உரிமைகள், மேற்கத்திய நாடுகளின் நுகர்வுக் கலாச்சாரம், பொழுதுபோக்குகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள் பழைய சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பெட்டியான வாழ்க்கை முறையிலிருந்து சுதந்திரமான வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றனர். ஒன்றியம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போன பிறகு மீண்டும், ரஷ்யாவின் பிடிக்குள் வாழ அவர்கள் அஞ்சுகின்றனர்.

பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. பிரதமர் டெனிஸ் ஷைமிஹால்.

செல்வாக்கை மீட்க புதின் முயற்சி: ரஷ்யாவில் அதிபர், பிரதமர், மீண்டும் அதிபர் என்று கடந்த 22 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார் விளாடிமிர் புதின். மக்களுக்கு புதினின் ஐக்கிய ரஷ்யா கட்சியின் ஆட்சி அலுத்துவிட்டது. ஆரம்ப காலத்தில் இருந்த பொருளாதார வளர்ச்சி இப்போது இல்லை. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது. ரஷ்ய அரசில் ஊழலும், வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் போக்கும், சலுகைசார் முதலாளித்துவ ஆதிக்கமும் வளர்ந்து வருகின்றன. ஆட்சியில் தானே தொடர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் வெவ்வேறு காரணங்களைக் கூறி ஒடுக்கி வருகிறார் புதின்.

மக்களுடைய ஜனநாயக விருப்பங்களுக்கு மேற்கத்திய நாடுகள் தூபம் போடுவதால், நாட்டை பழைய கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தைப் போல கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார். ரஷ்யாவிலேயே இயற்கை எரிவாயு, கச்சா பெட்ரோலிய எண்ணெய் கிடைப்பது அரசுக்குப் பொருளாதார வளத்தைத் தந்திருக்கிறது. சோவியத்கால ராணுவ பலம் அப்படியே குறையாமல் இருக்கிறது. எனவே இவற்றைக் கொண்டு தானும் ஒரு வல்லரசுதான் என்று நிரூபிக்க புதின் முயல்கிறார். புதிய வல்லரசாகவும் பொருளாதார வலிமை மிக்க நாடாகவும் வளரும் சீனம், ரஷ்யாவை நெருக்கமான நண்பனாகப் பெற்றிருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கும், சீனத்துக்கும் பொதுவான எண்ணமாக அமெரிக்க எதிர்ப்புணர்வு இருப்பதால் இரண்டும் இணைந்து செயல்படுகின்றன.

நெருக்கடி என்றால் சீனா நமக்குத் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவைச் சீண்டிப்பார்க்க விரும்புகிறார் புதின். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய அமெரிக்கா இப்போது தன்னுடைய நாட்டு தொழில், வர்த்தகத் துறை மீட்சியில் மட்டுமே அக்கறையாக இருக்கிறது. எனவே இந்த பலவீனமான நேரத்தில் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வைக்க உக்ரைன் விவகாரத்தில் நேரடியாகத் தலையிடுகிறது ரஷ்யா.

இது ராணுவ பலக் கூட்டை அடிப்படையாகக் கொண்ட போட்டியாகவும் ஐரோப்பிய சந்தையை யார் பிடிப்பது என்ற வர்த்தகப் போராகவும் கூட இருக்கிறது. அதைவிட முக்கியம் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள், தங்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடாமலிருக்க, தங்களை செல்வாக்குள்ள தலைவர்களாக காட்டிக் கொள்ளவும் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்கி வருகின்றனர்.

முதல் இரண்டு உலகப் போர்களைவிட மிகப் பெரிய போருக்கு உக்ரைன் விவகாரம் இட்டுச் செல்லும் என்று ஊடகங்கள் அஞ்சும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. இதற்கு ஒரே காரணம் உக்ரைன், ரஷ்யா இரண்டுமே அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளன. மோதல் முற்றி போர் மூண்டால் அணு ஆயுதங்களை இரண்டும் பயன்படுத்தும் என்ற அச்சமும் ஏற்பட்டது. இதனாலேயே உலக நாடுகள் உக்ரைன் விவகாரத்தை கவனமாகப் பின்பற்றுகின்றன.

கரோனா பெருந்தொற்று ஓயவில்லை. நோய்க் கிருமிகள் தொடர்ந்து உருமாற்றம் அடைகிறது. ஊரடங்கு உத்தரவுகள் மக்களுடைய அன்றாட வாழ்க்கையை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் மிக மோசமாகப் பாதித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ராணுவ ரீதியாகவும் எதையாவது சாதித்து விட வேண்டும் என்று சில நாடுகள் தீவிரம் காட்டுகின்றன.

ரஷ்யாவுக்கு அடுத்து பெரிய நாடு: கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு உக்ரைன். பரப்பளவில் ரஷ்யாவுக்கு அடுத்த இடம், 6,03,628 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை 4.13 கோடி. தலைநகரம் கிவாவ். சோவியத் ஒன்றியம் சிதறியபோது 1991-ல் சுதந்திரம் பெற்றது. இதன் கிழக்கிலும் வட கிழக்கிலும் இருப்பது ரஷ்யா. வடக்கில் பெலாரஸ். மேற்கில் போலந்து, ஸ்லோவாகியா, ஹங்கேரி உள்ளன. தெற்கில் மால்டோவியா, ருமேனியா உள்ளன. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் மிகப் பெரிய ராணுவ நாடு.

1994-ல் நேட்டோவுடன் கூட்டும் வைத்துக் கொண்டது. அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் ரஷ்ய சார்பு உள்ளவர். ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க முடிவு செய்தார். அதை மக்கள் ஏற்கவில்லை. ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தினர். மக்களுடைய ஐரோப்பிய சார்பு கிளர்ச்சிக்கு ‘ஐரோப்பிய மைதான்’ என்ற பெயரே ஏற்பட்டது. யனுகோவிச் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

2014 மார்ச்சில் கிரீமியாவை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் சேர்த்துக் கொண்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆழமான - அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விரிவான வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாக உக்ரைன் அறிவித்தது. அதை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. இவ்வாறு உக்ரைன் ஐரோப்பிய நாடுகள் பக்கம் சாய்வது பின்னாளில் தனக்கு ஆபத்தாகிவிடும் என்று அஞ்சுவதால் ரஷ்யா தீவிரமாகத் தலையிடத் தொடங்கியது.

கிரீமியாவை ஆக்கிரமித்து தனது நாட்டுடன் சேர்த்துக் கொண்டதைப் போல உக்ரைனையும் சேர்த்துக்கொள்ளப் பார்க்கிறது. இதனாலேயே ரஷ்யாவுக்கு அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. பக்கத்து நாடுகளுடன் தேவையில்லாமல் எல்லைப் பிரச்சினை செய்யும் சீனாவும், ரஷ்யாவும் இப்போது தங்களுடைய வல்லாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே தேவையின்றி முண்டா தட்டி வருகின்றன. இப்போதைக்கு இதுதான் உக்ரைன் நெருக்கடிக்கு ஒரே காரணம்.

இந்தப் பின்னணியில்தான் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

- ஆர்.என்.சர்மா



Read in source website

புதுடெல்லி: இந்தியாவிற்கான 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக மூடிஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.

இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. அதுபோலவே 2-வது கரோனா அலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. அதேசமயம் 3- வது அலையில் பாதிப்புகள் சற்று அதிகமாக இல்லை. கரோனா பாதிப்பு தற்போது குறையத் தொடங்கிய பிறகு இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கி வருகிறது.

இந்தநிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 சதவீதமாக இருக்கும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவிற்கான 2022-ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளோம். 2023-ம் ஆண்டில் 5.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்ததை மீண்டும் உறுதி செய்கிறோம்.

2022 காலண்டர் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும். ஏப்ரல் 1 முதல் வரும் நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 8.4 சதவீதமாக இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பொருளாதார சூழற்சியில் சிக்கல் இருக்கும். இது 2022-23 நிதியாண்டுகளில் 8.4 சதவீதமாகவும், 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும்.

கடந்த 2022-23 நிதியாண்டு நவம்பரில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணித்திருந்தோம். அதிகாரப்பூர்வ மதிப்பீட்டின்படி, மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 9.2 சதவீதமாக வளர்ச்சியடையும்.

கரோனா தொற்று பரவலின்போது முதல் அலையின் லாக்டவுனின் போது பொருளதாாரம் சரிவடைந்து மீண்டெழ சற்று காலதாமதமானது. ஆனால் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.

2021 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பொருளாதாரம் கோவிட்டுக்கு முந்தைய ஜிடிபி அளவை 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல், சில்லறை வணிகம் உயர்வு போன்றவை காரணமாக பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனத் தெரிகிறது. மற்ற பல நாடுகளில் உள்ளதைப் போலவே, தொடர்பு தீவிர சேவைத் துறைகளில் பொருளாதார மீட்பு தேக்கமடைந்துள்ளது. அதேசமயம் ஒமைக்ரான் அலை குறையும்போது சேவைத்துறைகளிலும் வளர்ச்சி அதிகரிக்கும்.

பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருவதால் சேவைத்துறை வேகமெடுக்கலாம். இப்போது பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட நிலையில் இந்தியா இயல்பு நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

2022-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. 2022-23 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.9 சதவீதமாகவும், மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 36 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தனியார் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ரிசர்வ் வங்கி பிப்ரவரி கூட்டத்தில் வட்டி விகிதங்களை மாற்றாமல் விட்டுவிட்டதால் இதற்கு ஏற்ப தனியார் முதலீடு உயர வாய்ப்புண்டு.

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். வளர்ச்சி வேகம் தொடர்ந்து மேம்படும். இதனால் நாங்கள் முன் வைக்கும் வளர்ச்சி விகிதம் சாத்தியமாக இருக்கக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

அடுத்து வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அந்தக் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது என்பது குறித்து இன்னும் தெளிவு பிறக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி என்பது எல்லோரையும் உள்ளடக்கக்கூடியதாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் பிராந்தியக் கட்சிகள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கிவிட்டன.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உதவியுடன் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு, பிராந்தியக் கட்சிகளின் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். அதுபோல, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவும் பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்க முயன்றுவருகிறார். இந்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணியைத் தொடர்ந்துவரும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இத்தகைய ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

விரைவில் சென்னையில் நடக்கவிருக்கும் அவரது புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக அல்லாத மாநில முதல்வர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மம்தா, கே.சி.ஆர். ஆகியோருடன் ஸ்டாலினும் இப்போது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துவருகிறார். காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பிராந்தியக் கட்சிகளின் முதல்வர்களோடும் அவர் அரசியல் நட்புறவைப் பேணிவருகிறார் என்பது அவரது அரசியல் நகர்வுகள் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.

தேசியக் கட்சியான காங்கிரஸ் தலைமையில் பிராந்தியக் கட்சிகள் ஒன்றிணைந்து நின்றால்தான் பாஜகவை வீழ்த்துவதற்கான வாய்ப்பு உண்டு, பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கிடையில் உருவாக்கும் கூட்டணி பலவீனமடைய நேரலாம் என்று திருமாவளவன் போன்றவர்கள் வெளிப்படையாகவே எச்சரித்துவருகிறார்கள். தங்களது அன்புக்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டவன் என்று மு.கருணாநிதி பாணியில் ஸ்டாலினும் பதில்சொல்வது திமுகவின் கூட்டணிக் கட்சிகளைப் பதற்றநிலையிலேயே வைத்திருக்கிறது.

காங்கிரஸ் தனது வலுவையும் செல்வாக்கையும் இழந்துநிற்கும் வேளையில், பிராந்தியக் கட்சிகள் தங்களுக்கான கூடுதல் வாய்ப்புகளைக் கேட்டுப் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பு. ஆனால், பிராந்தியக் கட்சிகள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுவிட முடியுமா என்றொரு சவாலும் அவற்றின் முன்னால் நிற்கிறது. இந்தக் கட்சிகளிடம் குறைந்தபட்சச் செயல்திட்டம்கூட இன்னமும் உருவாகவில்லை. மத்திய - மாநில உறவுகளை விவாதிக்கும் இக்கட்சிகள், மாநிலங்களுக்கு இடையிலான உறவைக் குறித்துப் பேசுவதில்லை.

திமுகவுடன் கொள்கை உறவு பேணும் கேரள இடதுசாரிக் கூட்டணி, பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களைக் கருத்தில் கொள்வதில்லை என்பது ஓர் உதாரணம். பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு இடையில் நட்புறவு உருவாகிவந்தாலும் தற்போது நடந்துகொண்டிருக்கும் ஐந்து சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே அதன் போக்கு உறுதிப்படும். பஞ்சாபில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு கோவாவிலும் உத்தராகண்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினால் மட்டுமே காங்கிரஸால் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமை தாங்க முடியும். நடைபெற்றுவரும் தேர்தலின் முடிவுகள் தேசிய அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கக்கூடும்.



Read in source website

ஒரு பதிப்பாளராக கரோனா பெருந்தொற்றின் தாக்கங்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்?

பெருந்தொற்றானது பதிப்பகங்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. பெருந்தொற்றுக் காலத்தில் பதிப்புலகத்துக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. குறைந்தபட்சம் நூலக ஆணைகளுக்கான பழைய நிலுவைத்தொகையைகூடச் செலுத்தவில்லை.

2019-ல் வாங்கிய நூல்களுக்கான தொகைகூட நிலுவையில் உள்ளது. அதே நேரம், இந்தக் காலகட்டத்தில் இளைஞர்கள் அதிகமாக வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் நூல்களை வாசிப்பவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. தமிழ் நூல்களின் தரமும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கிறது. கேரளம், கர்நாடகம், வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டிலும் நூல்கள் அதிக அளவில் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பின்புலம் கொண்ட பதிப்பகங்கள் பொது வாசகர்களை ஈர்ப்பதற்கு என்னென முயற்சிகளை மேற்கொள்கின்றன?

2,000 தலைப்புகளில் குழந்தைகளுக்கான நூல்கள், 300 தலைப்புகளில் அறிவியல் நூல்கள், 60-70 தலைப்புகளில் கல்வி, மாற்றுக் கல்வி குறித்த நூல்களை வெளியிட்டுள்ளோம். வரலாறு, பொருளாதார நூல்களையும் வெளியிட்டுள்ளோம். இவற்றை எந்த அரசியல் கட்சி, அமைப்போடும் தொடர்புபடுத்த முடியாது. அரசியல் என்னும் விரிவான அர்த்தத்தில் எடுத்துக்கொண்டால், அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. ஒரு நாவல், சிறுகதையில்கூட அரசியல் உண்டு.

பாரதி புத்தகாலயத்தின் சிறு வெளியீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன?

வெகுஜன இதழ்களை மட்டும் படித்துக்கொண்டிருந்தவர்களை சிறு வெளியீடுகள் புத்தக வாசிப்பு நோக்கி நகர்த்தியுள்ளன. அப்படி வருகிறவர்கள் தீவிரமான விஷயங்களைப் படிக்கத் தொடங்குகிறார்கள். தீவிரமான விஷயங்களைக் குறித்த சிறிய காத்திரமான நூல்களைப் படிப்பவர்கள், அவை குறித்த மேலும் அதிகமான நூல்களைத் தேடுகிறார்கள். அந்த வகையில் சிறுவெளியீடுகள் ஒட்டுமொத்த வாசகர் பரப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இன்று நிறைய பதிப்பகங்கள் சிறு நூல்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. சிறு வெளியீடுகளைத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் அனைவருக்கும் பரிசாகக் கொடுக்கிறார்கள்.

நல்ல புத்தகங்களைக் கொண்டுவரும் பல பதிப்பகங்கள் சந்தைப்படுத்தலில் தோல்வியடைந்துவிடுகின்றன. இந்த விஷயத்தில் பாரதி புத்தகாலயத்தின் வெற்றி எப்படிச் சாத்தியமானது?

பாரதி புத்தகாலயத்துக்கு தமிழ்நாடு முழுவதும் 24 கிளைகள் உள்ளன. கிளைகள் மட்டுமல்ல... வாசகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஆயிரக்கணக்கான முகவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ரூ.5,000 செலுத்தினால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை விற்பதற்குக் கொடுத்துவிடுவோம். ஒவ்வொரு புத்தகத்துக்கும் விளம்பரத்துக்கு அதிகத் தொகையைச் செலவிடுகிறோம். புத்தகங்களுக்காகவே ‘புத்தகம் பேசுது’ என்னும் இதழை நடத்துகிறோம். அது 5,000 சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இது தவிர, புத்தக விமர்சனங்களுக்கென்று ‘புக் டே’ இணையதளம், ‘பாரதி டிவி’ என்னும் யூடியூப் சேனல் போன்றவற்றை நடத்திவருகிறோம். இவற்றின் மூலமாகத்தான் எங்களுக்கு ரூ.10, ரூ.20-க்குச் சிறு நூல்களை வெளியிடுவதற்கான பொருளாதார பலம் கிடைக்கிறது.

இணையம்வழியாகப் புத்தக விற்பனை, கிண்டில், கைபேசி போன்றவற்றில் படிக்கும் வசதிகள் ஆகியவற்றுக்கிடையே சென்னை புத்தகச் சந்தை போன்ற பிரம்மாண்ட புத்தகத் திருவிழாக்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

புதிதாக வரும் வாசகர்களில் சிறு பகுதியினர் மட்டுமே இணையம்வழியாகப் புத்தகம் வாங்கவும், கிண்டில் உள்ளிட்டவற்றை நாடவும் செய்கிறார்கள். 85% புத்தகங்கள் நேரில்தான் வாங்கப்படுகின்றன. அச்சு நூல்களின் எண்ணிக்கையை மின்னூல்களால் குறைத்துவிட முடியாது. எனவே, சென்னை புத்தகக்காட்சியின் பிரம்மாண்டம் அதிகரிக்குமே தவிர குறையாது. அரசும் ஊடகங்களும் போதுமான ஆதரவு அளித்தால் சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் நடக்கும் அனைத்துப் புத்தகக்காட்சிகளும் பதிப்பாளர்களுக்கு லாபகரமாக அமையும். இந்தப் புத்தகக்காட்சி தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in



Read in source website

சமீபகாலமாகத் தொடர்ந்து உயர்ந்துவரும் பருத்தி நுாலின் விலை ஜவுளி உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிப்பதால், பஞ்சு ஏற்றுமதிக்கு அதிக வரி விதித்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதோடு, ஊக வணிகத்திலிருந்து பஞ்சை நீக்கி, அதன் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவுளித் துறையில் ஈடுபட்டுள்ளோர், உரத்த குரலில் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். நுால் விலையைக் குறைத்தால், பல காலமாகப் பல்வேறு இன்னல்களுடன் ஏறக்குறைய 134 லட்சம் ஹெக்டேரில் பருத்திச் சாகுபடி செய்துவரும் 58 லட்சம் விவசாயிகளைப் பாதிக்காதா? பருத்திச் சாகுபடியில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறதா என்ன?

பருத்திச் சாகுபடி

இந்தியாவில் பருத்தி ஒரு முக்கிய வணிகப் பயிராகப் பல நுாற்றாண்டுகளாகச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. 1960-61-ல் 76 லட்சம் ஹெக்டேர்களாக இருந்த பருத்திச் சாகுபடியின் பரப்பளவு, 2019-20-ல் 134 லட்சம் ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. 2019-20 ஆண்டு புள்ளிவிவரப்படி, மஹாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும், மொத்த பருத்திச் சாகுபடிப் பரப்பில் 70%-த்தைப் பெற்றுள்ளன. தமிழகத்தில் இதே காலகட்டத்தில் 3.96 லட்சம் ஹெக்டேரிலிருந்து 1.69 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது.

பரப்பளவில் இந்தியா பருத்திச் சாகுபடியில் உலக அளவில் முதலிடத்தில் இருந்தாலும் மகசூலில் மிகவும் பின்தங்கியுள்ளது. 1980-81-ல் 152 கிலோவாக இருந்த ஒரு ஹெக்டேர் மகசூல், 2000-01-ல் 190 கிலோவாக உயர்ந்துள்ளது. இதனால், உலக உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவாக இருந்தது. ஆனால், பிடி பருத்தியை 2002-ல் அறிமுகப்படுத்திய பிறகு, அதன் சாகுபடியில் மாற்றங்கள் ஏற்பட்டன. பருத்திச் சாகுபடிப் பரப்பளவானது 77 லட்சம் ஹெக்டேரிலிருந்து (2002-03), ஏறக்குறைய 134 லட்சம் ஹெக்டேர்களாக 2019-20-ல் உயர்ந்துள்ளது. மறுபுறம், பருத்தி உற்பத்தியானது 86 லட்சம் பேல்களிலிருந்து (ஒரு பேல் என்பது 170 கிலோ), 352 லட்சம் பேல்களாக உயர்ந்துள்ளது.

பருத்திப் பொருளாதாரம்

மற்ற பயிர்களைப் போல் அல்லாமல், பருத்தி விவசாயிகள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவருகிறார்கள். பருத்திப் பயிரானது ஏறக்குறைய 70%-ம் மானாவாரி நிலத்தில் பயிரிடப்படுவதால், பெரும்பாலான காலங்களில் மகசூலுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பருத்தியில் காய்ப்புழுவின் (bollworm) தாக்கம் அதிகம் இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு மிகவும் அதிகம். பருத்தி அறுவடை செய்வதற்கான கூலிச் செலவு மற்ற பயிர்களைவிட மிகவும் அதிகம். இதன் காரணமாக, பருத்திக்கான சாகுபடிச் செலவு படுவேகமாக உயர்ந்துவருகிறது.

இந்திய அரசின் விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் மொத்த பருத்திச் சாகுபடிப் பரப்பில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ள மஹாராஷ்ரத்தில், 2000-01-ல் பருத்திக்கான ஒரு ஹெக்டேர் மொத்த (C2 செலவு) சாகுபடிச் செலவு ரூ.14,234-லிருந்து, 2018-19ல் ரூ.84,743ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் இச்செலவானது ரூ.10,691–லிருந்து ரூ.75,186 ஆகவும், தமிழகத்தில் ரூ.28,149-லிருந்து ரூ.1,13,334ஆகவும் உயர்ந்துவிட்டது. கடந்த 19 ஆண்டுகளில் (2000-01 முதல் 2018-19 வரை), இந்த மூன்று மாநிலங்களில் சாகுபடிச் செலவு 4 முதல் 7 மடங்கு வரை அதிகரித்துள்ளது.

பருத்தியில் கிடைக்கும் மொத்த உற்பத்தி மதிப்பும் இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரத்தில், ரூ.12,148-லிருந்து ரூ.85,937 ஆகவும், குஜராத்தில் ரூ.8,696-லிருந்து ரூ.83,209 ஆகவும், தமிழகத்தில் ரூ.20,992-லிருந்து ரூ.98,966 ஆகவும் உற்பத்தி மதிப்பு மேற்கூறிய காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், பருத்திச் சாகுபடியில் கிடைக்கும் மொத்த உற்பத்தி மதிப்புச் செலவைவிட வேகமாக உயராத காரணத்தால், விவசாயிகள் பல காலங்களில் நஷ்டம் அடைந்துள்ளனர்.

2000-01 முதல் 2018-19 வரையிலான, 19 ஆண்டுகளில், மஹாராஷ்டிரத்தில் 11 ஆண்டுகளும், தமிழகத்தில் 12 ஆண்டுகளும் பருத்திச் சாகுபடியில் நஷ்டத்தை அடைந்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால், மஹாராஷ்டிரத்தில் தற்கொலை செய்துகொண்ட பெரும்பாலானோர் காலங்காலமாகப் பருத்திச் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்த விவசாயிகள். லாபம் ஈட்டிக்கொண்டிருந்த ஒரு ஜவுளி ஆலைகூட பருத்தி விவசாயிகளைக் காப்பாற்ற அப்போது முன்வரவில்லை!

பருத்திக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால், பெரும்பாலான காலங்களில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பருத்திக்கான எம்.எஸ்.பி. விலையானது தொடர்ந்து உயர்த்தி அறிவிக்கப்பட்டுவந்தபோதிலும், அரசால் கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மிகவும் குறைவு. இதனால், விவசாயிகள் பருத்தியைச் சந்தையில் வணிகர்களிடம் விற்க நேரிடுவதால், அவர்களால் எம்.எஸ்.பி. விலையைப் பெறமுடியவில்லை. சராசரிப் பருத்திச் சந்தை விலைப் புள்ளிவிவரங்களின்படி, சந்தை விலையானது ஜனவரி 2019–லிருந்து எம்.எஸ்.பி. விலைக்கும் கீழே நிலவியுள்ளது.

கோரிக்கைகள் நியாயமானவையா?

நீண்ட காலத்துக்குப் பிறகு, தற்போதுதான் பருத்தி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பஞ்சுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியான 11%-த்தை நீக்க வேண்டும் என்பதும், பஞ்சு ஏற்றுமதிக்கு உயர் வரி விதித்து ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் எப்படி நியாயமாகும்? இந்தியாவில் 1998-ம் ஆண்டு முதல் ஊக வணிகத்தில் பருத்தி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதைப் பற்றிப் பேசாத ஜவுளி உற்பத்தியாளா்கள், திடீரென ஊக வணிகத்திலிருந்து பருத்தியைத் தடை செய்ய வேண்டும் என்பதும் நியாயமில்லை!

கரோனாவால் முடங்கிக் கிடந்த ஜவுளி உற்பத்தி உலகமெங்கும் மீண்டும் வேகத்துடன் தொடங்கியதாலும், நூலுக்கான தேவை அதிகரித்ததாலும், பருத்தியின் விலை சற்று உயர்ந்துவருகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; இதுதான் சந்தைப் பொருளாதாரத்தின் உண்மை நிலை. இன்று பருத்தியின் விலையைக் குறைக்கக் கோரும், லாபம் ஈட்டும் பெரும் ஜவுளி உற்பத்தியாளா்கள், பருத்தி விலை குறைவாக இருந்த காலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏன் உதவி செய்ய முன்வரவில்லை?

வேளாண் பொருட்களுக்கான விலை சற்று உயரும்போதெல்லாம், அதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், பெரும் இன்னல்களுடன் வாழும் இந்திய விவசாயிகளின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்குச் சென்றுவிடாதா?

- அ.நாராயணமூா்த்தி, இந்திய விவசாயச் செலவு மற்றும் விலை ஆணையத்தின் முன்னாள் முழு நேர உறுப்பினா். தொடர்புக்கு: narayana64@gmail.com



Read in source website

கல்லூரி சேர்வதற்கு ஒரு தகுதி, இரண்டு, மூன்றாம் ஆண்டுகளில் அடி எடுத்து வைக்கவும் முதல் நிலைத் தகுதிகள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால் அதே ஆண்டில் அதே வகுப்பை மாணவர்கள் தொடர வேண்டும் என்கிறது வரைவு.

Entry Requirements in National Education Policy: கடந்த சில வருடங்களாக இந்தியாவின் கல்வி அமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர பல்வேறு முன்னெடுப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது. அனைத்து விதமான முன்னெடுப்புகளும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவிடுவதில்லை. மாநிலத்தில் நிலவும் சூழல், மக்களின் வாழ்வாதாரம், சமூக பொருளாதார சூழல், கல்வியின் தரம், கல்வி நிர்வாகம், கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சில முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சில முடிவுகள் நிராகரிக்கப்படுகிறது. மும்மொழிக் கல்வி, நீட் தகுதித் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை போன்றவற்றை மாணவர்களின் நலனுக்கு சிறிதும் உறுதுணையாக இருக்காது என்று வெளிப்படையாக தன்னுடைய எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது தமிழக அரசு.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய உயர்க்கல்வித் தகுதி கட்டமைப்பின் வரைவில் (Draft National Higher Education Qualification Framework) இடம் பெற்றுள்ள நுழைவுத் தகுதிகளுக்கு (Entry Requirements) கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாட்டை கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.02.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினைப் பெற்று விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு குறைவான நேரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே வரைவு செயலாக்கத்திட்டம் (Draft Implementation Plan) குறித்து ஆய்வு செய்து விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Entry Requirements in National Education Policy – வரைவின் அம்சங்கள்

“பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தகுதிகள் தேவை என்று வரைவு முன்மொழிவு செய்துள்ளது. 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியே பட்டப்படிப்பு படிக்க தேவையான அடிப்படைத் தகுதியாக இருக்கின்ற நிலையில், குறிப்பிட்ட அளவிலான சாதனைகள் உட்பட, நுழைவுத் தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு, சேர்க்கை விதிமுறைகளின் படி முதலாம் ஆண்டு படிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று வரைவு குறிப்பிட்டுள்ளது

முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலும், நுழைவுத் தகுதி என்று மத்திய அரசு வரையறை செய்திருக்கும் அளவுகளின் அடிப்படையிலும் தான் கல்வியை தொடர முடியும் என்பதையும் முன்மொழிகிறது இந்த வரைவு.

வரைவில் முதலாம் ஆண்டுடன் வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழும், இரண்டாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் வெளியேறும் மாணவர்களுக்கு பட்டமும் வழங்கப்படும். ஹானர்ஸ் படிப்பு படிக்க விரும்புபவர்கள் தங்களின் கல்வியை மேற்கொண்டு தொடரலாம். அதற்கு அவர்கள் 7.5% சி.ஜி.பி.ஏ-வைப் (CGPA) பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது வரைவு.

கல்வியாளர்களின் கருத்துகள் என்ன?

பல்கலைக்கழக மானியக் குழுவின், தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவின் மூலம் தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்தவே மத்திய அரசு முயல்கிறது என்று கூறுகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

”இந்திய அரசியல் அமைப்பில் பல்கலைக்கழங்கங்கள் மாநிலப் பட்டியலில் 32வது அதிகார வரம்புகளில் ஒன்றாக உள்ளது. தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி மற்றும் பல்கலைக்கழக கல்வி உள்ளிட்ட கல்வி பொதுப்பட்டியலில் 25-வது அதிகாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக, மத்திய அரசு இந்த அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவது இந்திய அரசியலமைப்பு, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மீறுவதற்கு சமமானது.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய உயர்க்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு பல்கலைக்கழகத்தின் அடிப்படையையே மாற்றி அமைக்கிறது. பல்கலைக்கழகம் தொடர்பான எந்த வித சட்டத்தையும் சம்பந்தப்பட்ட மாநில அரசே இயற்ற முடியும் என்கிற சூழலில், கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்க வரைவு பரிந்துரைக்கிறது. இதனால் பல்கலைக்கழகங்கள், தங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் வரையறை, தேர்வு நடத்துவது உள்ளிட்ட எந்தவிதமான கல்விப் பணிகளிலும் தலையிட முடியாத சூழலை தான் உருவாகும். இது கல்வி நிலையங்களின் நிர்வாக அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும்” என்று தெரிவித்தார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

சமூக நீதி எங்கே?

அனைத்துக் கல்லூரிகளும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுவிட்டால் பாடத்திட்டங்கள், மதிப்பெண், மாணவர் சேர்க்கை என்று அனைத்தையும் அந்த கல்லூரி நிர்வாகமே உறுதி செய்யும். இட ஒதுக்கீடு இந்த கல்லூரிகளில் வருங்காலத்தில் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. அரசுகளின் தலையீடும் குறைய வாய்ப்புகள் உண்டு.

தனியார் கல்லூரிகள் தொடர்ந்து இயங்க தேவையான நிதியை அவை பெற்றிருக்கும். ஆனால் அரசு நிதியில் இயங்கும் கல்லூரிகளின் நிலைமை என்னவாகும்? வரைவு அமலுக்கு வரும் பட்சத்தில் 3-ல் 2 பங்கு அரசுக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். இந்த கல்லூரிகளையே பெரிதும் நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

இடை நிற்றல் அதிகரிக்கும்

வரைவில், அனைத்து கல்வி ஆண்டுக்கும் தகுதி அடிப்படையில் வாய்ப்பு என்று அறிவிக்கிறது மத்திய அரசு. 12ம் வகுப்பில் அவர்கள் (மத்திய அரசு) எதிர்பார்க்கும் தகுதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்கள் கல்லூரியில் சேர முடியும். முதலாம் ஆண்டில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் வரை, பள்ளிகளில் இருப்பதைப் போன்றே அதே வகுப்பில் மாணவர்கள் படிப்பைத் தொடர வேண்டும் என்கிறது அரசு. ஒரு சில மாணவர்களுக்கு தங்களின் பாடத்திடங்களை புரிந்து கொள்ளவே அதிக காலம் எடுக்கும். சமூகம், பொருளாதாரம், அவர்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் அடிப்டையில் இந்த புரிதலுக்கான காலம் வேறுபடும்.

சிலர் முதலாம் ஆண்டில் தேர்ச்சி அடையாத பாடங்களை மூன்றாம் ஆண்டில் தேர்ச்சி செய்வதும் உண்டு. புதிய வரைவு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கல்வி கற்கும் காலத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது. இதனால் அதிக அளவில் கல்லூரியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களாகவே இருப்பார்கள்.

வரைவில் 3 ஆண்டுகளுக்கு மேல், விருப்பத்தின் அடிப்படையில், நான்காம் ஆண்டு படிக்கவும் மாணவர்கள் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் படிக்கும் மாணவருக்கும் அதே ”டிகிரி” வழங்கப்படும் எனில்,சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும், பணி உயர்வு தருணங்களிலும் எந்த கல்வி அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்?

பொருளாதார தேவைக்காக வேலைக்கு செல்ல அவசியம் இல்லை என்ற உயர்த்தட்டு மாணவர்கள் நான்காம் ஆண்டு படிக்க முடியும். இதர மாணவர்களின் நிலை என்னவாகும்? மீண்டும், வசதி படைத்த, நன்கு கல்வி கற்ற சமூகத்தை சேர்ந்த, சமூக கட்டமைப்பில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில பிரிவினரே தொடர்ந்து இத்தகைய திருத்தங்கள் / திட்டங்கள் மூலம் பயன் அடைவார்கள் என்றும் கூறினார் கஜேந்திர பாபு.

நிறைகளும் – குறைகளும் இருக்கிறது

கல்வி அமைப்பில் ஒரு சீர்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்றால் அதில் நிறை – குறை இரண்டுமே இருக்கும். கல்லூரியில் முதலாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு சான்றும், இரண்டாம் ஆண்டோடு வெளியேறும் மாணவர்களுக்கு பட்டயமும், மூன்றாம் ஆண்டில் பட்டமும் வழங்கப்படும் பட்சத்தில் அதனை நான் வரவேற்கின்றேன். இதற்கு முன்பு கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விடும் மாணவர்களுக்கு எந்த விதமான கல்வி தகுதிச் சான்றும் கிடைக்காது. ஆனால் இதில் அவர்களுக்கு சான்று கிடைப்பது ஒரு கல்வித் தகுதியாக கருதப்படும் என்கிறார் போட்டித் தேர்வு பயிற்சியாளரும் கல்வியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

பட்டயம் கிடைத்தது வரை போதும் என்று வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். “அரியர்ஸ்” இருந்தாலும் மூன்றாம் ஆண்டு முடித்தால் தான் “டிகிரி” கிடைக்கும் என்ற எண்ணம் மாறும் போது, மாணவர்கள் மேற்கொண்டு படிக்க ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

”அரசு தன்னுடைய வரைவில் குறிப்பிட்டிருக்கும் தகுதிகள் எதன் அடிப்படையில் அமைகிறது என்பதை ஆராய வேண்டும். ஏற்கனவே உள்ள தகுதியை உறுதி செய்கிறதா அல்லது புதிதாகத் தரம் பிரித்து, உயர் கல்விக்கான தகுதியை மறு நிர்ணயம் செய்கிறதா? முன்னதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மறுவரையறை – கண்டிப்பாக ஏற்பதற்கில்லை. ‘தகுதித் தேர்வு’ மூலம், புதிதாக ஒரு தகுதியை அறிமுகம் செய்தல், முற்றிலும் தவறானது.”

”கல்வி கற்றல் முறை, சூழல், கல்வி ஆண்டின் துவக்கம் என்பது தொடர்பாக நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விவகாரங்கள் நிறைய இருக்கிறது எனவே அரசு நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு, தகுதி வரையறை என்பது போன்ற விசயங்களை தவிர்த்து, தேவையான பிரிவுகளில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன்” என்றார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் அறிக்கை

இந்த சூழலில் வெளியான அமைச்சரின் 3 பக்க அறிக்கையில் மேலும், ”தேசியக் கல்விக் கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழக அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயில தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டுமென்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வு தடையாக இருந்த காரணத்தால், அன்றைய முதல்வர் கருணாநிதியால் ரத்து செய்யப்பட்டது. இலவசக் கல்வி, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தேவையான அளவு கல்லூரிகளும், அவற்றில் போதுமான அளவு வேலை வாய்ப்பிற்கேற்ற பாடப்பிரிவுகளும் அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட சமூகநீதி உத்தரவுகளால் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்வி என்பது தமிழக அரசால் உறுதிப்படுத்தப்பட்டது என்று மூன்று பக்க அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நீட் போன்ற தகுதி தேர்வுகள் நாடு முழுவதும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வுக்காக தனியாக சில ஆண்டுகள் படிப்பதும் அதிகரித்து வருகிறது. தோல்வி அடையும் போது விரக்தியில் தற்கொலை போன்ற தவறான முடிவுகளையும் மேற்கொள்கின்றனர். கல்வி கற்க வரும் முதல் தலைமுறையினர் ஏற்கனவே பிரச்சனைகளை அனுபவித்து வருகின்ற நிலையில் இது போன்ற ஒரு கட்டமைப்பு அவர்களின் கல்வி கற்கும் ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதை இத்தகைய திட்டங்கள், அறிவிப்புகள், வரையறைகள் உறுதி செய்கிறதா என்றால் ”இல்லை” என்பது தான் உண்மை.



Read in source website

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்து

Employer obligated to pay damages for delay in payment of EPF contribution: Supreme Court: ஒரு பணியாளரின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் கடமைப்பட்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கூறியுள்ளது.

நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் என்பது எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஈடுபடுத்துவதற்கான சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கான சட்டமாகும்.

வருங்கால வைப்பு நிதிக்கான கட்டாயப் பிடித்தம் செய்வது மற்றும் அதனை EPF அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்களின் கணக்கில் வைப்புச் செய்ய வேண்டிய கட்டாயத்தை நிறுவனத்தின் மீது சட்டம் சுமத்துகிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

“சட்டத்தின் கீழ் நிறுவனத்தால் EPF பங்களிப்பை செலுத்துவதில் ஏதேனும் தவறு அல்லது தாமதம் ஏற்பட்டால், அது சட்டம் 1952 இன் பிரிவு 14B இன் கீழ் நஷ்டஈடு விதிக்கப்படாது என்று நாங்கள் கருதுகிறோம், சிவில் கடமைகள்/பொறுப்புகளை மீறியதற்காக அபராதம்/சேதங்கள் விதிப்பதற்கு mens rea அல்லது Actus reus இன்றியமையாத அம்சம் அல்ல” என்று பெஞ்ச் கூறியது.

EPF-ன் பங்களிப்பை செலுத்தத் தவறினால், நிறுவனம் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்ற கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.



Read in source website