DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 20-02-2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 12,838 பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. தோ்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (பிப். 22) நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 



Read in source website

மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டன. 
பிப்ரவரி 27ஆம் தேதி மராத்தி மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்பாக மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு 4,000 அஞ்சல் அட்டைகள் இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் இந்த அட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரபதி பவனுக்கு ஏற்கெனவே இதே கோரிக்கையை வலியுறுத்தி அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. 
தற்போது இது இரண்டாவது தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

எல்லை ஒப்பந்தத்தை சீனா மீறியதால், இந்தியா- சீனா உறவு தற்போது கடினமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், எல்லை நிலவரம்தான் இரு தரப்பு உறவையும் தீா்மானிக்கும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

ஜொ்மனியின் மியூனிக் நகரில் பாதுகாப்பு மாநாட்டு (எம்எஸ்சி) நடைபெற்று வருகிறது. மாநாட்டினிடையே சனிக்கிழமை நடைபெற்ற குழு விவாதத்தில், இந்தியா- சீனா விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவா் அளித்த பதில்:

இந்தியா- சீனா இடையே பிரச்னை இருப்பது உண்மைதான். கடந்த 45 ஆண்டுகளாக எல்லையில் அமைதி நிலவியது. எல்லை சீராக நிா்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 1975 முதல் ராணுவத்தில் ஓா் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. கடந்த 2020 ஜூன் வரை இருதரப்பு உறவும் சுமுகமாக இருந்தது.

ஆனால், எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என சீனாவுடன் நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னரே நிலைமை மாறியது. அந்த ஒப்பந்தத்தை சீனா மீறியது. தற்போது இந்தியா- சீனா உறவு கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. எல்லை நிலவரம்தான் இரு தரப்பு உறவையும் தீா்மானிக்கும்; அது இயல்பானதுதான் என்றாா் எஸ். ஜெய்சங்கா்.



Read in source website

நாட்டின் நகா்ப்புறங்களில் குப்பைகளால் சூழப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலத்தை பசுமை மண்டலமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

மேலும், அடுத்த இரு ஆண்டுகளில் 75 மாநகராட்சிகளில் உயிரி-இயற்கை எரிவாயு ஆலைகள் அமைக்கப்படும் என்றாா்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 550 டன் திறன் கொண்ட ‘கோபா் தான்’ உயிரி- இயற்கை எரிவாயு ஆலையை சனிக்கிழமை காணொலி வாயிலாக பிரதமா் மோடி திறந்துவைத்துப் பேசியது:

நாடு முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக நகா்ப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலத்தில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இவை காற்றுக்கும் நீருக்கும் சீா்கேட்டை ஏற்படுத்தி, நோய்ப் பரவுவதற்கு காரணமாகின்றன. ஆகையால், தூய்மை பாரத திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில், அந்த நிலத்திலிருந்து குப்பைகளை அகற்றி, தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் இந்த நிலங்கள் குப்பைக்கூளத்திலிருந்து விடுபட்டு, பசுமை மண்டலமாக மாற வேண்டும் என்பதே நமது இலக்கு. இதற்காக மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுகின்றன. ஒவ்வொரு நகரத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகளை மேம்படுத்தி, சுழல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நமது நாட்டின் ஒவ்வொரு நகரும் வரலாற்று ரீதியிலும், வழிபாட்டு ரீதியிலும் புகழ் பெற்ற இடங்களைக் கொண்டிருப்பதால், தூய்மையைப் பேணும்போது அது சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.

அடுத்த 2 ஆண்டுகளில் இதுபோன்ற உயிரி- இயற்கை எரிவாயு ஆலைகள் நாடு முழுவதும் 75 மாநகராட்சிகளில் ஏற்படுத்தப்படும். இந்தப் பிரசாரம் இந்தியாவின் நகரங்களை தூய்மையானதாகவும், சுகாதாரச் சீா்கேடு இல்லாததாகவும் மாற்றுவது மட்டுமன்றி, தூய்மையான ஆற்றலை நோக்கி நகரவும் வழிவகுக்கும்.

நகா்ப்புறங்களில் மட்டுமன்றி ஊரகப் பகுதிகளிலும் உயிரி- இயற்கை எரிவாயு ஆலைகள் நிறுவப்படும். இதன் வாயிலாக கால்நடை வளா்ப்போா் மாட்டுச் சாணத்தின் மூலம் கூடுதல் வருவாய் பெற முடியும்.

பெட்ரோலிய பொருள்களுக்கு வெளிநாடுகளைத்தான் நாம் சாா்ந்துள்ளோம். இந்தியாவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோலில் எத்தனால் கலவை வெறும் 1 அல்லது 2 சதவீதம்தான் இருந்தது. தற்போது 8 சதவீதமாக உள்ளது.

2014-க்கு முன்பாக பெட்ரோல் கலவைக்கான எத்தனால் விநியோகம் (சப்ளை) சுமாா் 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 300 கோடி லிட்டரை கடந்துவிட்டது. இதன்மூலம் கரும்பு ஆலைகளும், விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனா்.

2014-க்கு முன்பாக இருந்த அரசுகள், சூரிய மின் உற்பத்தியை அலட்சியம் செய்தன. ஆனால், நமது அரசு 2014-க்குப் பின்னா், சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததன் வாயிலாக இன்றைக்கு இந்தியா உலக அளவில் சூரிய மின் உற்பத்தியில் முதல் 5 இடத்தில் உள்ளது. விவசாயிகள் தற்போது சூரிய ஆற்றலை வழங்குபவா்களாக மாறிவிட்டனா்.

நீா்வளம் மிக்க நகராக இந்தூா் விளங்குகிறது. இதேபோல, நாடு முழுவதும் ஏராளமான நகரங்களை இந்தப் பிரிவின்கீழ் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் மத்திய பிரதேச ஆளுநா் மங்குபாய் படேல், முதல்வா் சிவ்ராஜ்சிங் செளஹான், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.



Read in source website

இந்திய-ஐக்கிய அரபு அமீரக தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்நாட்டில் ஆபரண துறையின் ஏற்றுமதியை பெரிதும் ஊக்குவிக்கும் என மத்திய வா்த்தக செயலா் பி.வி.ஆா். சுப்ரமணியம் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 800 டன் தங்கத்தை நம்நாடு இறக்குமதி செய்து கொள்கிறது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய-ஐக்கிய அரபு அமீரக வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் ஆபரண துறையை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கும். ஏனெனில், இந்த ஒப்பந்தத்தில் யுஏஇ சந்தையை இந்திய ஆபரண துறை வரி விதிப்பின்றி அணுகுவதற்கு வழிகோலப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த 2020-21-ஆம் ஆண்டில் இந்தியா யுஏஇ-விலிருந்து 70 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், 200 டன் தங்கம் வரையிலான இறக்குமதிக்கு வரிச் சலுகை அளிக்க இந்த ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புதல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு ஆபரண தயாரிப்பாளா்கள் ஐக்கிய அரபு அமீரக சந்தையை வரி விதிப்பின்றி பயன்படுத்திக் கொள்வது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆதாயத்தை அளிக்கும்.

தற்போது இந்திய ஆபரணங்களுக்கு ஐக்கிய அரபு அமீரக சந்தையில் 5 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தில் அது பூஜ்யமாக மாற்றப்பட்டுள்ளது என்றாா் அவா்.



Read in source website

முனிச் பாதுகாப்பு மாநாட்டுக்காக ஜொ்மனி சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஈரான், சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஜொ்மனியின் முனிச் நகரில் பாதுகாப்புசாா் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்கவுள்ளாா். அதற்கு முன்னதாக ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஆனலீனா போ்பாக்-வுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது பருவநிலை மாற்றம், ஐ.நா. நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகள், பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக ட்விட்டரில் அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா். மேலும், ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள், உக்ரைன் சூழல் உள்ளிட்டவை குறித்தும் அவா்கள் விவாதித்தனா்.

ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹெச்.அமீா் அப்துல்லாஹியனை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் சூழல், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம், போக்குவரத்துத் தொடா்பு உள்ளிட்டவை குறித்து தலைவா்கள் இருவரும் விவாதித்தனா்.

ஸ்லோவேனிய வெளியுறவு அமைச்சா் ஆனி லோகருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு நடத்தினாா். அப்போது இருதரப்பு, பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து அவா்கள் ஆலோசனை நடத்தினா். சா்வதேச விவகாரங்கள் குறித்தும் அவா்கள் விவாதித்ததாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சா் அலெக்சாண்டா் ஸ்காலன்பொ்க், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவூத், ஜாா்ஜியா வெளியுறவு அமைச்சா் டேவிட் ஜல்காலியனி, சிங்கப்பூா் பாதுகாப்பு அமைச்சா் நிக் எங் ஹென், மங்கோலிய வெளியுறவு அமைச்சா் பேட்ஸ்செக் பத்முங்க், ஸ்வீடன் வெளியுறவு அமைச்சா் ஆன் லிண்டே ஆகியோரையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேச்சு நடத்தினாா்.

அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் ஜேம்ஸ் மேட்டிஸை சந்தித்த அமைச்சா் ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு சாா்ந்த அவரது கண்ணோட்டத்தைப் பாராட்டினாா்.

முனிச் மாநாட்டில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்த விவாதத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்க உள்ளாா். உக்ரைன் எல்லையில் போா்ப் பதற்றம் நிலவி வருவது தொடா்பாக மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் வகையில் முனிச் நகரில் உள்ள இந்திய தூதரகம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியிலும் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்து கொள்ளவுள்ளாா்.

 

 



Read in source website


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான கடைசி டி20 ஆட்டம் மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபிஞ்ச் மற்றும் பென் மெக்டெர்மாட் மோசமான தொடக்கத்தைத் தந்து முறையே 8 மற்றும் 3 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு, ஜோஷ் இங்லிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஓரளவு நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தனர். இறுதியில் மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதனால், ஆஸ்திரேலிய ஸ்கோர் 150 ரன்களைத் தாண்டியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

155 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்கு தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கைக்கு மெண்டிஸ், கேப்டன் தசுன் ஷனாகா இணை சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தது. ஷனாகா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து 58 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார்.

19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்த இலங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழப்பதிலிருந்து இலங்கை தப்பியது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி பிப்ரவரி 24-ம் தேதி முதலில் டி20 தொடரில் விளையாடுகிறது.



Read in source website

பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் ஃபிகா் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஜோடிகளுக்கான பிரிவில் சீனா தங்கம் வென்றது.

ஒலிம்பிக் போட்டியின் 16-ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற இந்த விளையாட்டில் சீனாவின் வென்ஜிங் சுய்/காங் ஹான் இணை 239.88 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. ரஷியாவின் ஈவ்ஜினியா டராசோவா/விளாதிமீா் மோரோஸோவ் இணை 239.25 புள்ளிகளுடன் வெள்ளியும், அதே நாட்டைச் சோ்ந்த அனஸ்தாஸியா மிஷினா/அலெக்ஸாண்டா் காலியாமோவ் இணை 237.71 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றது.

பதக்கப்பட்டியலில் சனிக்கிழமை நிலவரப்படி, நாா்வே 35 பதக்கங்களுடன் (15 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 24 பதக்கங்களுடன் (11 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், சீனா 15 பதக்கங்களுடன் (9 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நீடித்த பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.



Read in source website

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கோயில்களில் நிரப்பப்படாமல் உள்ள அறங்காவலர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரியும், இந்த நியமனங்களை கண்காணிக்க முன்னாள் நீதிபதி தலைமையில், அறநிலையத் துறைஅதிகாரிகள் அடங்கிய குழுவைஅமைக்கக் கோரியும் ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்தவழக்கு மீதான விசாரணை நடந்தது.

மனுதாரர் குற்றச்சாட்டு

அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘கோயிலை நிர்வகிக்கும் நபர்களாக அறநிலையத் துறை அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். 97 சதவீத கோயில்களில் இன்னும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை’’ என்று குற்றம் சாட்டப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்டக் குழுக்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிக் காலம் முடிந்த 6 மாவட்டங்களில் இந்த குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் தமது உத்தரவில் கூறியதாவது:

கடந்த 15 ஆண்டுகளாக...

அதிக வருமானம் வரக்கூடிய 314 கோயில்களுக்கு மட்டுமே உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக முறையாக நிரப்பப்படாத அறங்காவலர் பதவிகளை நிரப்ப தற்போதைய அரசு முன்வந்துள்ளது. அந்த பணிகளை முழுமையாக முடிக்க மனுதாரரும் சில காலம் காத்திருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எத்தனைகோயில்கள் உள்ளன, அவற்றில்எத்தனை கோயில்கள் பரம்பரைஅறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் வரும், அறங்காவலர், பரம்பரை அறங்காவலர் காலியிடங்கள் எத்தனை உள்ளன, அத்தகைய அறங்காவலர்களை நியமிக்க என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 4 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.



Read in source website

புதுடெல்லி: இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு புதிய சந்தைகளை திறக்க இந்தியா - ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம், இந்திய பொருட்கள் மற்றும் சேவைகளின் புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் அவர், “இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், புதிய தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு வணிகங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்று கூறினார்.

துறைசார் ஆதாயங்களைப் பற்றி பேசுகையில், ‘‘ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் நகைகள், தோல் பொருட்கள் மற்றும் பாதணிகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் போன்ற உழைப்பு சார்புமிகுந்த தொழில்கள் அதிகப் பயன்பெறும் தொழில்களில் முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.

விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், CEPA ஒரு சமநிலையான, நியாயமான, விரிவான மற்றும் சமமான கூட்டு ஒப்பந்தம் என்றும் , இது இந்தியாவிற்கு பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டிலும் மேம்பட்ட சந்தை வசதியை வழங்கும் என்றும் கோயல் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை வழங்கும் என்றும், இதன் மூலம் வர்த்தகப்போட்டியும் , பொருளாதார வளர்ச்சியும் உத்வேகம் பெற வழிவகை ஏற்படும் என்றும் கூறினார்.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 88 நாட்களில் கையெழுத்தாகி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பியூஷ் கோயல், மே மாத தொடக்கத்தில் அதாவது 90 நாட்களுக்குள் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று கூறினார். ‘‘ஒப்பந்தத்தை அமல்படுத்துவதன் மூலம் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% தயாரிப்புப் பொருட்களும் , 80% வர்த்தகம் பூஜ்ஜிய வரியை ஈர்க்கும்’’ என்றார். மீதமுள்ள 20% நமது ஏற்றுமதியை அதிகம் பாதிக்காது என்பதால், இது ஒரு வெற்றி-வெற்றி ஒப்பந்தம் என்று அவர் தெரிவித்தார்.



Read in source website

மத்திய பிரதேசம் இந்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சாண எரிவாயு ஆலையைபிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்து வைத்தார்.

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன் பகுதியாகவே இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஆலையை காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘சாண எரிவாயு ஆலை மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 நகராட்சிகளில் சாண எரிவாயு ஆலை தொடங்கப்படும். தூய்மையான, மாசுபாடற்ற நகரங்கள் உருவாக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

இந்த ஆலை தினமும் 550 டன்மட்கும் குப்பைகளை பிரித்தெடுக்கும் என்றும் நாளொன்றுக்கு 17,000 கிலோ இயற்கை எரிவாயுவையும் 100 டன் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் திறன்கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் உற்பத்தி செய்யப்படும் இயற்கை வாயுவில் 50 சதவீதத்தை இந்தூர் நகராட்சி கொள்முதல் செய்யும் என்றும் இந்த எரிவாயு நகரப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழகம் உட்பட நாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளுக்கான ட்ரோன் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.

வேளாண் பணிகளில் நவீன ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) பயன்படுத்த ஊக்கம் அளிக்கப்படும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த கருடா ஏர்ஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. இவை தமிழகம் உட்படநாடு முழுவதும் 100 இடங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ட்ரோன்களை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொள்கைகள் சரியாக இருந்தால் ஒரு தேசம் உச்சத்தை தொட முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் என்பது ராணுவம் தொடர்பான தொழில்நுட்பம் என்று கருதப்பட்டது. இன்று மானேசர் மற்றும் சென்னையில் வேளாண் பணிக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை தொடங்கியுள்ளோம்.

இது 21-ம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையின் புதிய அத்தியாயம் ஆகும். அடுத்த 2 ஆண்டுகளில் ஒருலட்சம் ட்ரோன்களை உருவாக்க கருடா ஏரோஸ்பேஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும்.

இப்போது 75-வது ஆண்டுசுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த காலகட்டம்இளைஞர்களுக்கு சொந்தமானது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் இளைஞர்களின் திறமைக்கு ஊக்கத்தை அளித்துள்ளன.

ட்ரோன்கள் மூலம் நிலம், சொத்து அளவீடு செய்யப்படுகிறது. மருந்துகள் விநியோகம் செய்யப்படுகிறது. கரோனா தடுப்பூசிகள் தொலைதூர பகுதிகளை சென்றடைகின்றன. பல்வேறு பகுதிகளில்வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தவரிசையில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள வேளாண் ட்ரோன்கள் புதிய புரட்சியின் தொடக்கமாக அமையும்.

வரும் காலங்களில் அதிக திறன் கொண்ட ட்ரோன்களின் உதவியுடன், விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து காய்கறிகள், பழங்கள், பூக்களை சந்தைகளுக்கு அனுப்பலாம். குளங்கள், ஆறுகள்மற்றும் கடலில் இருந்து நேரடியாகசந்தைக்கு மீன்களை அனுப்ப முடியும். ட்ரோன்கள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்கள் விரைவாக சந்தைக்கு கொண்டு செல்ல முடியும்.

நாட்டில் தற்போது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் இந்த எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். - பிடிஐ



Read in source website

தெலங்கானா மாநிலம், மேடா ரம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு களுக்கும் மேலாக அப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் சம்மக்கா - சாரக்கா என்ற இருவரை வன தேவதைகளாக பூஜித்து வருகின்றனர். இவர்களுக்காக ஆண்டுதோறும் பிரம்மாண்ட விழா நடத்துகின்றனர். இதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மக்கள் லட்சக்கணக்கில் பங்கேற்கின்றனர். தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் இவ்விழாவை ‘சம்மக்கா-சாரக்கா ஜாத்திரை’ என அழைக்கின்றனர்.

கடந்த 16-ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் கரோனா நிபந்தனைகள் இருந்தாலும், கடந்த 4 நாட்களில் 1 கோடியே 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்றதாக மாநில பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தயாகர் ராவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று பேசும்போது, “இந்த விழாவில் 1200 அரசு அதிகாரிகள் பணியாற்றினர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 900 மருத்துவத் துறையினரும் 4 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்களும் பணியில் ஈடுபட்டனர். குடிநீர், போக்குவரத்து உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டன. இந்த ஆண்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பங்கேற்று, அம்மனுக்கு ஆளுயர வெல்லம் காணிக்கையாக வழங்கினார்.



Read in source website

படைப்பு என்ற தொடரோட்டத்தில் அயர்வின்றி நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுள் இரா.முருகன்(69), யுவன் சந்திரசேகர்(61), இமையம்(56), எஸ்.ராமகிருஷ்ணன்(55) ஆகியோர் முக்கியமானவர்கள். இந்தப் புத்தகக்காட்சியை ஒட்டி இவர்களின் நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தருணத்தில் அவர்களின் உணர்வுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்:

மிளகு: மல்ட்டிவெர்ஸ்-வரலாற்றுப் பெருநாவல் - இரா.முருகன்

இன்றைய கர்நாடகத்தின் உத்தர, கன்னட மாவட்டத்தில் ஹொன்னவர், கெருஸொப்பா போன்ற பகுதிகளிலிருந்துதான் மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்தப் பகுதி ஒரு மிளகு அரசாகவே இருந்துள்ளது. கெருஸொப்பா பகுதியை சென்னபைராதேவி என்னும் அரசி ஆண்டுவந்தார். இங்கு மிளகு வாங்கவந்த போர்த்துக்கீசியர்கள் அவருக்கு மிளகு ராணி என்றே பட்டம் கொடுத்திருந்தார்கள். அருகில் இருந்த பிற குறுநில மன்னர்கள் சென்னபைராதேவியின் ஆட்சியைக் கைப்பற்றி, அவரைக் கைதுசெய்தனர். சிறையிலேயே அவர் இறந்துவிட்டார். வரலாற்றின் அடிக்குறிப்பாகக்கூட இடம்பெறாமல் சென்னபைராதேவி மறைந்துவிட்டார். கன்னட எழுத்தாளர் கஜானனிடமிருந்து நிறைய தகவல்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டும் நானாக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டும் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன். அது வளர்ந்து, கிட்டத்தட்ட 1,200 பக்கங்களுக்குப் போய்விட்டது. இந்த நாவலில் அக்காலத் தமிழகமும் வந்து வந்து போகும். தமிழர்கள் வருவார்கள். கொங்கணி மக்களும் வருவார்கள். சென்னபைராதேவி கொங்கணி மகாராணிதான். 21-ம் நூற்றாண்டிலிருந்து ஒரு கதாபாத்திரம் பின்னோக்கிச் செல்லும். அந்தக் கதாபாத்திரம் மட்டுமல்லாமல், அந்தக் கதாபாத்திரத்தின் பிரதிகள் ஒருவர் பின்னால் ஒருவராக மாற்றி மாற்றிச் செல்வார்கள். இதை மல்டிவெர்ஸ் (Multiverse) என்பார்கள். இப்படியாக இந்த நாவலில் வரலாறு மட்டுமல்லாமல் அறிவியல் புனைவும் உள்ளது.

மிளகு
இரா.முருகன்
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.1,400

****

‘எண்கோண மனிதன்’: காணாமல்போன கலைஞரைத் தேடும் பயணம் - யுவன் சந்திரசேகர்

ஒவ்வொரு எழுத்தாளருக்கும் குறிப்பிட்ட ஒரு விஷயம் மீது கூடுதல் ஆர்வமும் பிடிப்பும் இருக்கும். சிலருக்குத் தத்துவம் மீது, சிலருக்கு அறிவியல் மீது, சிலருக்கு மெய்யியல் மீது. அப்படியாக எனக்கு இசை. நான் 35 ஆண்டுகளாக இசையை மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன். குறிப்பாக, இந்துஸ்தானி இசையை. எப்போதும் இசையுடன் பயணித்துக்கொண்டிருப்பதால், அதைச் சுற்றியே என் மனம் இயங்குகிறது. அதுதான் என் படைப்புகளில் வெளிப்படுகிறது. இசையைப் பற்றிய தகவல் குறிப்புகள் வழியாக இல்லாமல், அது வழங்கும் அனுபவம் வழியாகவே என் படைப்புகளை உருவாக்க விரும்புகிறேன். இசை கேட்கும்போது மனித மனதுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் என்னுடைய அக்கறையாக இருக்கிறது. எனினும், ‘எண்கோண மனிதன்’ முற்றிலுமாக இசையைப் பற்றிய நாவல் அல்ல. இந்த நாவலில் வரும் இரண்டு மையக் கதாபாத்திரங்களில் ஒருவர் இசைக் கலைஞராகவும் இருந்திருக்கிறார். அவ்வளவுதான். அவருடைய பிரச்சினை இசை கிடையாது. அவருடைய பெருமிதமும் இசை கிடையாது. அந்த வகையில், காணாமல்போன கலைஞரைத் தேடிப்போகும் பயணம்தான் இந்நாவல். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டியில் ஜெயமோகன் நடத்திய கவிதைப் பட்டறையில், நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, வி.வி.சடகோபன் என்ற பழைய தலைமுறை இசைக் கலைஞரைப் பற்றிப் பேச்சுவந்தது. அவர் 1980 வரை பொதுவெளியில் இருந்தவர். அதன் பிறகு மாயமாகிவிட்டார். ‘எண்கோண மனிதன்’ நாவலுக்கான விதை அந்த உரையாடலின்போதுதான் விழுந்தது.

எண்கோண மனிதன்
யுவன் சந்திரசேகர்
எழுத்துப் பிரசுரம்
விலை: ரூ.300

*****

‘இப்போது உயிரோடிருக்கிறேன்’: ஒரு உலகத் துயரத்தின் கதை - இமையம்

இந்த நாவல் 15 வயதிலேயே சிறுநீரகம் செயலிழந்துவிட்ட ஒரு சிறுவனின் துன்பத்தைப் பேசுகிறது. சிறுநீரகச் செயலிழப்புக்காகத் தினமும் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொள்கிறவர்கள், தமிழக அளவில் சுமார் 2 லட்சம் இருக்கலாம். இந்திய அளவில், உலக அளவில் இந்த எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு உலகத் துயரம். இதற்கான ஒரே மாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான். அதிலும் வெற்றி-தோல்வி விகிதம் உள்ளது. பலருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் மாற்றுச் சிறுநீரகம் பயனளிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழலில் இருக்கும் ஒரு 15 வயதுச் சிறுவனின் பார்வையில் இந்தக் கதை நகர்கிறது. ஒரு கார்ப்பரேட் மருத்துவமனையில் அவன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நாவல் பேசுகிறது. சிறுநீரகக் கொடை அளிப்பவரைக் கண்டறிவது, பின் சிறுநீரகத்தைப் பெறுவதற்கான சிக்கலான, கடுமையான நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. அறுவை சிகிச்சைக்கும் டயாலிசிஸுக்கும் ஆகும் செலவுகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, ஒரு குடும்பத்தை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடும். நாவலில் மருத்துவர் கூறுவார்: ‘உங்க பையனுக்குப் பணம்தான் இனிமே கடவுள். அத நீங்க நெறய சம்பாதிச்சு வைங்க’. ஒவ்வொரு நிமிடமும் பணம் இருந்தால்தான் உயிர் வாழ முடியும். அரசு இலவச அறுவை சிகிச்சை வழங்குகிறது. ஆனால்,
ரூ.75,000-க்குக் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் மட்டும்தான் அதன் மூலம் பயன்பெற முடியும். அதேபோல் இதற்கான மருந்துகளை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும்தான் வாங்க முடியும். மேலும், இலவச மருந்து வாங்குவதற்கான சான்றை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த நாவலை 15 வயதுச் சிறுவனின் மனநிலையிலிருந்து எழுதியிருக்கிறேன். என்னுடைய மற்ற நாவல்களிலிருந்து மொழி மாறுபட்டது, கதை சொல்லல் மாறுபட்டது. இந்த நாவல் வெளியாகியிருக்கும் தருணத்தில், அரசுக்கு நான் முன்வைக்கும் கோரிக்கை இதுதான்: டயாலிசிஸ் செய்துகொள்ளும் அனைவருக்கும் மாதம் ரூ.5,000 உதவித்தொகை அளிக்க வேண்டும்.

இப்போது உயிரோடிருக்கிறேன்
இமையம்
க்ரியா வெளியீடு
விலை: ரூ.345

******
‘மண்டியிடுங்கள் தந்தையே’:டால்ஸ்டாய் பற்றி தமிழில் ஒரு நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்

தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செக்காவ் உள்ளிட்ட ரஷ்ய இலக்கிய மேதைகளைப் போலவே அவர்களின் கதாபாத்திரங்கள், நிலப்பரப்பு ஆகியவையும் எப்போதும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. என் நில மக்களின் கதைகளைச் சொல்வதுபோல், என்னை உருவாக்கிய படைப்பாளிகளைப் பற்றியும் ஒரு புனைவு எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. என்னுடைய தேர்வு டால்ஸ்டாய். ஏனென்றால், என்னுள் தாக்கம் செலுத்தியவர்களில் முதன்மையானவர் அவர். மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்கிய ஒரு படைப்பாளியையே ஒரு கதாபாத்திரமாக மாற்றுவது என் முன்னிருந்த பெரிய சவால். மாபெரும் படைப்பாளி, சீர்திருத்தவாதி, குடும்பஸ்தர் என டாஸ்டாய்க்குப் பல முகங்கள் உண்டு. இதில் எந்தப் பக்கத்தை எழுதுவது என்ற கேள்வி என் முன் இருந்தது. அவருடைய எல்லாப் பக்கங்களையும் எழுதலாம் என்று முடிவுசெய்தேன். ‘மண்டியிடுங்கள் தந்தையே’ நாவலில் டால்ஸ்டாயின் பலம், பலவீனம், ஞானம், வெகுளித்தனம், குடும்ப உறவுகள் என எல்லாமும் இருக்கும். டால்ஸ்டாயை மையப்படுத்தி நாவல் எழுதும் எண்ணம் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எனக்குத் தோன்றிவிட்டது. அந்நாவலை எழுதுவதற்கு என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அவரைப் பற்றி தேடித் தேடி படிக்கத் தொடங்கினேன். கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தப் பயணம் தீவிரமானது. அப்படியாக உருவாகிவந்ததுதான் ‘மண்டியிடுங்கள் தந்தையே’. இந்திய மொழிகளிலே டால்ஸ்டாயைப் பற்றி இதுவரை நாவல் வந்ததில்லை என்று நினைக்கிறேன். அந்த வகையில், இந்த நாவல் ஒரு முன்னோடியாக இருக்கும். ரஷ்ய அரசு சார்பில் இந்நாவலை ரஷ்ய மொழியில் கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஓராண்டுக்குள் இந்நாவலை ரஷ்ய மொழியிலும் எதிர்பார்க்கலாம்.

மண்டியிடுங்கள் தந்தையே
எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி
பதிப்பகம்
விலை: ரூ.350



Read in source website

கடந்த சில ஆண்டுகளில் தமிழில் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஊர்ப் பெயர் ‘கீழடி’யாகத்தான் இருக்கும். வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆர்வலர்களிடம் ஒரு புதிய உற்சாகத்தைத் தோற்றுவித்திருக்கின்றன. கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பில் சில புத்தகங்கள் வெளிவந்திருந்தாலும், வைகை ஆற்றுச் சமூகம் பழைய கற்காலம் முதல் சங்க காலம் வரை எப்படியெல்லாம் மாற்றமடைந்துவந்துள்ளது என்பதை வரிசைப்படுத்தி ‘வைகைவெளி தொல்லியல்’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் பாவெல்பாரதி. வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பை நிறுவி நடத்திவரும் பாவெல்பாரதி, இந்நூலில் தொல்லியலுடன் மானிடவியல், நாட்டாரியல் ஆய்வுகளையும் இணைத்திருப்பது சிறப்பு. கருத்துப்பட்டறை வெளியிட்டுள்ள இந்நூலுக்கு முதுபெரும் தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அணிந்துரை எழுதியுள்ளார்.

தொல்லியல் அகழாய்வுகளால் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துவரும் வரலாற்று ஆர்வம், இந்த ஆண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் பற்றிப் பேசுவதாகவும் மாறியிருக்கிறது. அந்த வகையில், வேலூர்ப் புரட்சியைக் குறித்த விரிவான சான்றாதாரங்களோடு வெளிவந்திருக்கும் வரலாற்றுப் பேராசிரியர் கா.அ.மணிக்குமாரின் ‘வேலூர்ப் புரட்சி 1806’ முக்கியத்துவம் பெறுகிறது. 1806 ஜூலை 10 அன்று, அந்த ஒரு நாளில் வேலூர்க் கோட்டையில் நடந்தது என்ன, அதற்கான காரணங்கள், விளைவுகளைப் பற்றி லண்டன் பிரிட்டிஷ் நூலகம், ஸ்காட்லாந்தின் எடின்பரோ ஆவணக்காப்பகம் உட்பட பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட ஆவணங்களிலிருந்து இந்நூலை மணிக்குமார் எழுதியிருக்கிறார். விஐடி கல்வி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து இந்நூலைப் பதிப்பித்துள்ளன.

பண்பாட்டு மானிடவியல், இனவரைவியல் தொடர்பாக ஞான.வள்ளுவன் எழுதியிருக்கும் ‘இசைவேளாளர்’ என்ற புத்தகம், இன்றைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்று. இசைத் தமிழையும் நடனத்தையும் நாடகத்தையும் குலத்தொழிலாகக் கொண்டிருக்கும் இச்சமூகத்தை அரசியல் நோக்கோடு வடுகத் தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்துவதை மறுக்கிறது. முத்தமிழையும் வளர்த்த இந்த இசைக் கலைஞர்கள் தமிழ்க்குடிகளே என்று நிறுவுகிறது. வைத்தீஸ்வரன்கோவிலைச் சேர்ந்த இனியன் பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. ‘திராவிட இயக்கமும் எங்கள் ஊரும் (வைத்தீஸ்வரன்கோவில்)’ என்றொரு உள்ளூர் வரலாற்று நூலையும் ஞான.வள்ளுவன் எழுதியுள்ளார்.

உள்ளூர் வரலாறு குறித்த சமீபத்திய வரவுகளில் ‘தமிழ்த் தாத்தா உ.வே.சா.வும் பெரம்பலூரும்’ என்ற தலைப்பிலானது. ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ என்ற தலைப்பில் பெரும்புலியூரின் நீண்ட நெடிய வரலாற்றை எழுதிய ஜெயபால் இத்தினத்தின் அடுத்த நூல் இது. உ.வே.சா. என்றதுமே மாயவரம் நாட்கள்தான் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும். மீனாட்சிசுந்தரனாரிடம் குருகுலவாசம் செல்வதற்கு முன்பான, உ.வே.சா.வின் இளமைக்காலம் பெரம்பலூருடன் தொடர்புடையது என்பதை அவரது சுயசரிதத்திலிருந்தும் பிற குறிப்புகளிலிருந்தும் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஜெயபால் இரத்தினம். 150 ஆண்டுகளுக்கு முந்தைய பெரம்பலூரின் சமூகப் பொருளாதார நிலையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. நூலாசிரியரே தனது விச்சி பதிப்பகத்தின் வழியாக இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் வரலாறு தொடர்பான புத்தகங்களில் ஓலைச் சுவடிகள் பராமரிப்பு தொடர்பான ப.பெருமாளின் ‘மெனுஸ்க்ரிப்ட் கன்சர்வேஷன்: பாஸ்ட் அண்ட் ப்ரெஸென்ட்’ என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் வேதிமுறைப் பாதுகாவலராகப் பணியாற்றிய ப.பெருமாள் ஓலைச் சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள் பராமரிப்பில் நிபுணத்துவம் கொண்ட அரிதான ஓர் ஆளுமை. முயன்று தான் பெற்ற கல்வியறிவையும் அனுபவ அறிவையும் அடுத்த தலைமுறைக்கு அவர் இந்நூலின் வழியே கற்றுக்கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

தமிழில், வரலாற்றுக்கான ஆய்விதழ்கள் மிகவும் குறைவே. ‘கல்வெட்டு’, ‘ஆவணம்’, ‘வரலாறு’ ஆகியவை தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் ‘புது எழுத்து’ மனோன்மணி ஆசிரியராகப் பொறுப்பேற்று வெளியிட்டுவரும் ‘சாசனம்’ இருமொழி அரையாண்டிதழும் இணைந்திருக்கிறது. அண்மையில் வெளிவந்திருக்கும் நான்காவது இதழ், பிராமி கல்வெட்டுகளுக்கான சிறப்பிதழாகவே வெளிவந்துள்ளது. கா.ராஜன், எ.சுப்பராயலு ஆகியோரின் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. இலங்கை பிராமி கல்வெட்டுகள் குறித்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத் தொல்லியல் ஆய்வு மையத்தின் சார்பில் ‘சாசனம்’ ஆய்விதழ் வெளியிடப்பட்டுவருகிறது.

மதுரையிலிருந்து வெளிவரும் சமூக, அரசியல், பண்பாட்டுக் காலாண்டிதழான ‘மானுடம்’, கீழடி அகழ்வாய்வுகள் குறித்த குறிப்பிடத்தக்க கட்டுரையுடன் வெளிவந்துள்ளது. இரா.மோகன்ராஜன் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். இளைஞரான தங்க.செங்கதிர் நடத்தும் இவ்விதழில் தமிழின் மூத்த அறிவாளுமைகளான ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரும் பங்கெடுத்துக் கொள்வது தமிழில் இன்னும் சிற்றிதழ் இயக்கம் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதற்கான சான்று.



Read in source website