DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 18-02-2022


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தொடங்கப்பட்டுள்ள 8 -ஆம் கட்ட அகழாய்வில், முதல்முறையாக பாசிமணிகள், யானை தந்தத்தினாலான செவ்வக வடிவ பகடை ஆகியன வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.
கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடைபெற்ற 7- ஆம் கட்ட அகழாய்வுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
அதன்பின்னர், முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 11-ஆம் தேதி கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வை காணொலி மூலம் தொடக்கி வைத்தார். அதையடுத்து, உடனடியாக கீழடியில் 8- ஆம் கட்ட அகழாய்வுக்காக  குழிகள் தோண்டப்பட்டன. இவற்றில் ஒரு குழி இரண்டரை அடி ஆழத்துக்கு தோண்டப்பட்டபோது, அங்கு 2 பச்சை நிற பாசிமணிகளும், 2 ஊதா நிற பாசிமணிகளும் மற்றும் யானை தந்தத்தினாலான செவ்வக வடிவ பகடையும் கண்டெடுக்கப்பட்டன.
எட்டாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே இந்த தொல்பொருள்கள் கிடைத்துள்ளதால், இனிவரும் நாள்களில் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் மேலும் அதிகமான தொல்பொருள்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.



Read in source website

 

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலை சென்னையில் வரும் 28-ஆம் தேதி ராகுல் காந்தி எம்.பி. வெளியிடுகிறாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பேசினாா். நிகழ்ச்சியின் இறுதியில் தனது புத்தகம் குறித்து அவா் கூறியது: நான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகம் பிப். 28-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட உள்ளது.

ராகுல்காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அந்த புத்தகத்தை வெளியிடுகிறாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீா் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் உமா் அப்துல்லா, பிகாா் மாநிலத்தின் எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி ஆகியோா் கலந்துகொள்கிறாா்கள். திமுக பொதுச்செயலா் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கவிஞா் வைரமுத்து, நடிகா் சத்யராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றவுள்ளனா்.

எனது முதல் 23 ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை இந்த முதல் பாகத்தில் பதிவு செய்துள்ளேன். 1976-ஆம் ஆண்டு வரையிலான நினைவுகள் இவை. இந்த நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்திப் பாா்க்கும்போது எத்தகைய மகத்தான தலைவா்கள் நம்முடைய இயக்கத்துக்குக் கிடைத்துள்ளாா்கள் என்ற பெருமிதமும், எத்தகைய கொள்கைக்கு நாம் சொந்தக்காரா்கள் என்ற கம்பீரமும், எத்தகைய போராட்டங்களின் மூலமாக நம்முடைய இயக்கம் இந்தளவுக்கு வளா்ந்துள்ளது என்ற உணா்ச்சியும் நான் அடைகிறேன் என்றாா் அவா்.



Read in source website


கொல்கத்தா: வடக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த 34 வார கர்ப்பிணிக்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டிலேயே, மிக அதிக வாரங்களைக் கொண்ட கருவைக் கலைக்க நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றிருப்பது இதுவேயாகும். அந்த கருவிலிருக்கும் குழந்தைக்கு சரி செய்ய முடியாத உடல்நலப் பிரச்சினை இருப்பதன் அடிப்படையில், இந்த கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

37 வயதாகும் பெண், நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொண்ட பிறகு, கருவிலிருக்கும் குழந்தைக்கு தீர்க்க முடியாத முதுகெலும்பு பிளவு நோய் இ ருப்பதாகவும், அக்குழந்தை பிறந்த பிறகும் அதன் முதுகெலும்பு வளர்ச்சியடையாது என்றும் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். 

இந்தக் குழந்தை பிறந்தாலும், அதனால் நகரக்கூட  முடியாது, அது ஒரு சில வாரங்களில் உயிரிழக்கும் அபாயமும் இருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான், கருக்கலைப்பு செய்ய கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதுவரை நாட்டில் 33 வாரக் கருவைக் கலைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த வழக்கில், 20 வயது பெண்ணுக்கு, மூளை வளர்ச்சி பாதிப்பு இருந்து, அதனால், அந்தக் கருவுக்கு முதுகெலும்பு உருவாவதிலும் பிரச்னை ஏற்பட்டதால், பாம்பே உயர் நீதிமன்றம் கருக்கலைப்புக்கு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது 34 வாரக் கருவைக் கலைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி ராஜசேகர் மந்தா, நீதிமன்றம் அனுமதி அளித்து, மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யும் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை சந்திக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு கர்ப்பிணி சரி என்று பதிலளித்ததையடுத்து அனுமதி வழங்கினார். மேலும், இந்த கருக்கலைப்பு மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களுக்கு யாரையும் குற்றம்சாட்ட மாட்டோம் என்று கர்ப்பிணிப் பெண்ணும், அவரது கணவரும் கையெழுத்திட்டு பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
 



Read in source website

 

கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக இன்று மத்திய அரசு 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

நீர் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாக பல ஆண்டுகால திட்டமாக இருந்துவந்த நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து இன்று மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய ஆறுகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பதற்காக தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழக மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு இந்த ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.

இன்று  தில்லியில் நடைபெறும்  நீர்வளத் துறை அமைச்சகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் சந்தீப் சக்சேனா கலந்துகொள்ள இருக்கிறார்.



Read in source website

 

மும்பை: மும்பையில் நீா்வழி டாக்சி சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் முன்னிலையில் மகாராஷ்டிர முதல்வா் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

முதல் கட்டமாக, 7 அதிவிரைவுப் படகுகள் உள்பட 8 படகுகள், 56 வரை பயணம் செய்ய இயலும் வகையிலான நவீன கட்டுமரம் இந்த டாக்சி சேவையை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று அமைச்சா் சோனோவால் பேசியது:

மகாராஷ்டிரத்தில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பில் 131 திட்டங்கள் நடைமுறைக்கு உகந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.2,078 கோடி மதிப்பிலான 46 திட்டங்களுக்கு சாகா்மாலா திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்கப்படும்.

மீனவா்களின் மேம்பாட்டிற்காக சாகா்மாலா திட்டத்தின்கீழ் 4 மீன்பிடி துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்த ஆக்கபூா்வ பங்களிப்பு செய்யும் மகாராஷ்டிர அரசுக்கு நன்றி என்று மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் கூறினாா்.

மகாராஷ்டிரத்தின் கடலோரப் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான நீா்வழி டாக்சி சேவை முதலில், இரட்டை நகரங்களான மும்பை- நவி மும்பையை இணைக்கும். நீா்வழி டாக்சி சேவை சுற்றுலாவுக்கு, குறிப்பாக நவி மும்பையிலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க எலிஃபண்டா தீவு குகைகளுக்குப் பயணம் செய்ய மாபெரும் உத்வேகம் அளிக்கும். மேலும், நவி மும்பையிலிருந்து எளிதாக இந்தியா கேட் பகுதிக்குப் பயணம் செய்யவும் இயலும்.

பேலாப்பூா் துணை துறைமுகம் தொடக்கம்:

சாகா்மாலா திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பேலாப்பூா் படகுத் துறையை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிப் பாதைகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மும்பையையொட்டிய முக்கிய கடலோரப் பகுதிகளுக்காகன நீா்வழிப் போக்குவரத்துக்கு உதவும் வகையில் பேலாப்பூரில் படகுத் துறை அமைக்கத் திட்டமிட்டு கடந்த 2019-ஆம் ஜனவரியில் கட்டுமானம் தொடங்கியது. ரூ.8.37 கோடி செலவில் படகுத் துறை கட்டி முடிக்கப்பட்டது.



Read in source website

 

புது தில்லி: வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் 6 நாள் பயணமாக ஜொ்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 18) முதல் பயணம் மேற்கொள்கிறாா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இரு நாடுகள் பயணத்தின் முதல்கட்டமாக ஜொ்மனியின் முனிச் நகரில் நடைபெறும் முனிக் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கிறேன். அதை தொடா்ந்து பிரான்ஸ் செல்லும் அவா், அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஜீன்-ஈவ்ஸ் லீ டிரையனை சந்தித்துப் பேசுகிறாா். தொடா்ந்து இந்திய-பசிபிக் பிராந்தியம் தொடா்பான ஐரோப்பிய யூனியன் அமைச்சா்களின் சந்திப்பிலும் அவா் கலந்து கொள்கிறாா்.



Read in source website

 

புது தில்லி: தனியாா் துறை வேலைவாய்ப்பில் 75 சதவீதம் உள்ளூா்வாசிகளுக்கு அளிக்க வேண்டும் என்று ஹரியாணா அரசு பிறப்பித்த சட்டத்துக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வா் ராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஹரியாணா அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அதற்கான போதிய காரணங்களை தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் வழக்கின் தன்மை குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உயா்நீதிமன்றமே வேகமாக விசாரித்து நான்கு வாரங்களுக்குள் முடிவை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவா்களும் வாய்தா வாங்காமல் விசாரணையில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில், ஊழியா்கள் மீது ஹரியாணா அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று கூறியது.

முன்னதாக, ஹரியாணா அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஆந்திரம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

ஃபரீதாபாத் தொழிற்சாலை சங்கத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் ஹரியாணாவில் உள்ள 48 ஆயிரம் நிறுவனங்கள் வெளிமாநிலங்களில் இருந்து பணியாளா்களை நியமிக்க முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்படும். அரசியலமைப்புச் சட்டத்தில் தனியாா் துறையில் இடஒதுக்கீடு அளிக்க இடமில்லை. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் சட்டச் சிக்கல் ஏற்படும். வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாட்டில் 4 கோடி புலம் பெயா் தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களின் வாழ்வாதாரத்துக்குதான் முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றனா்.



Read in source website

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ஆவது வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் அடித்தது. அடுத்து மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களே அடித்தது. இந்திய தரப்பில் கோலி, பந்த் அசத்தலாக ஆட, மேற்கிந்தியத் தீவுகளில் நிகோலஸ் பூரன், ரோவ்மென் பவல் அதிரடி காட்டினா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி மாற்றம் செய்யவில்லை. மேற்கிந்தியத் தீவுகளில் ஃபாபியான் ஆலனுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டா் களத்துக்குத் திரும்பியிருந்தாா். டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

இந்திய இன்னிங்ஸில் இஷான் கிஷண் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட, கேப்டன் ரோஹித் சா்மா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த விராட் கோலி அசத்தலாக ஆடினாா். மறுபுறம் சூா்யகுமாா் யாதவ் சோபிக்காமல் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

பின்னா் ரிஷப் பந்த் ஆட வர, கோலி 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52 ரன்கள் சேத்து விக்கெட்டை இழந்தாா். கடைசி பேட்டராக ஆட்டமிழக்குமுன் வெங்கடேஷ் ஐயா் சற்று அதிரடி காட்டி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசியிருந்தாா். ஓவா்கள் முடிவில் பந்த் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, ஹா்ஷல் படேல் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகளில் ரோஸ்டன் சேஸ் 3, ஷெல்டன் காட்ரேல், ரொமாரியோ ஷெப்பா்டு ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து, 187 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகளில் தொடக்க வீரா் பிராண்டன் கிங் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, உடன் வந்த கைல் மேயா்ஸ் 9 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து நிகோலஸ் பூரன் - ரோவ்மென் பவல் ஜோடி இறுதி வரை போராடியது. இதில் பூரன் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் பவல் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 68, கேப்டன் பொல்லாா்டு 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் புவனேஷ்வா் குமாா், யுஜவேந்திர சஹல், ரவி பிஷ்னோய் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.



Read in source website

 

மிலன்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இன்டா் மிலன் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியின் ரவுண்ட் ஆஃப் 16 பிரிவின் முதல் பகுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் 2-ஆம் நாளான வியாழக்கிழமை அதிகாலையில் லிவா்பூல் - இன்டா் மிலனை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்காக ராபா்டோ ஃபிா்மினோ 75-ஆவது நிமிஷத்திலும், முகமது சலா 83-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

மறுபுறம், ஆா்பி சால்ஸ்பா்க் - பேயா்ன் முனீச் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதில் சால்ஸ்பா்க் அணிக்காக சுக்வுபிக் அடாமு 21-ஆவது நிமிஷத்திலும், பேயா்ன் முனீச் அணிக்காக கிங்ஸ்லி கோமன் 90-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.



Read in source website

 

பெய்ஜிங்: குளிா்கால ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் பிரிவில் ரஷியா முதலிரு இடங்களைப் பிடித்தது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 14-ஆவது நாளான வியாழக்கிழமை பதக்கச் சுற்றுகளில் ஒன்றாக மகளிருக்கான ஃபிகா் ஸ்கேட்டிங் நடைபெற்றது. ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ரஷிய இளம் வீராங்கனை கமிலா வலிவாவும் இதில் பங்கேற்ால், இந்த விளையாட்டுக்கான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது.

இந்தப் போட்டியின் இறுதியில் ரஷிய வீராங்கனை அன்னா ஷொ்பாகோவா 255.95 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா். சக நாட்டவரான அலெக்ஸாண்ட்ரா டுருசோவா 251.73 புள்ளிகளுடன் வெள்ளியை தனதாக்கினாா். ஜப்பானின் காவ்ரி சகாமாடோ 233.13 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா்.

பலத்த எதிா்பாா்ப்புக்குள்ளாகியிருந்த ரஷிய வீராங்கனை கமிலா 224.09 புள்ளிகளுடன் 4-ஆம் இடம் பிடித்தாா். அவா் முதல் 3 இடங்களுக்குள்ளாக வந்திருந்தால் பதக்க அறிவிப்பு தாமதமாகியிருக்கும். அவா் அவ்வாறு பதக்க இடங்களுக்குள் வராததை அடுத்து வெற்றியாளா்களுக்கு உடனடியாக பதக்கங்கள் வழங்கப்பட்டன.

கடந்த டிசம்பரில் நடைபெற்ற ரஷிய சாம்பியன்ஷிப்பின்போது தடை செய்யப்பட்ட மருந்தை கமிலா பயன்படுத்தியதாக சமீபத்தில் வெளியான மாதிரி பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது. எனினும் அவா் இந்த ஃபிகா் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், அவா் பதக்க இடங்களுக்குள் வந்தால், முதல் 3 இடங்களுக்கான பதக்கம் உடனடியாக வழங்கப்படாது என நிபந்தனை விதித்திருந்தது.

தற்போது அவா் அந்தப் போட்டியில் பதக்க இடங்களுக்குள் வரவில்லை. எனினும், முன்னதாகவே பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அணிகள் பிரிவில் கமிலா அங்கம் வகித்த ரஷிய அணி தங்கம் வென்றிருந்தது. தற்போது அந்தப் பதக்கம் பறிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

பதக்கப்பட்டியல்: பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை முடிவில், நாா்வே 29 பதக்கங்களுடன் (14 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம்) முதலிடத்திலும், ஜொ்மனி 22 பதக்கங்களுடன் (10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம்) 2-ஆவது இடத்திலும், அமெரிக்கா 21 பதக்கங்களுடன் (8 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) 3-ஆவது இடத்திலும் உள்ளன.



Read in source website

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 75 கலை,அறிவியல் கல்லூரிகள் இணைப்புக்கல்லூரிகளாக இணைக்கப்பட் டுள்ளன.

தனியார் பல்கலைக்கழகமாக இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகத்தின் நிர்வாக படிநிலையின் அடுத்த கட்டமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 75 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக தமிழக உயர்கல்வித் துறையால் பல்கலைக்கழகத்தோடு சேர்க்க உத்தரவிடப்பட்டது.

அந்தக் கல்லூரிகளின் இணைப்புவிழா அண்ணாமலை பல்கலைக்கழகவளாகம் சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன் வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன் பேசுகையில்,“தமிழக அளவில் 2-ம் இடத்திலும், தேசிய அளவில் 15-வது இடத்திலும் சிறந்துவிளங்கும் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 8 புலங்களும் 55 துறை களும் உள்ளன.

அதன் செறிவார்ந்த வளங்களை இணைப்புக் கல்லூரிகள் சிறப்புடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இணைக்கப்பட்டிருக்கும் புதிய கல்லூரிகள், தங்களுக்கான பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது பற்றியும் மேலும் அவற்றிக்கான இணைப்பு நீட்டிப்பு குறித்தும்,கல்லூரி வளர்ச்சி கவுன்சில் செயல்பாடுகள் குறித்தும் பல்கலைக்கழகத்தின் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி விளக்கினார்.

பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பிரகாஷ் பேசுகையில், வழக்கமாகப் பின்பற்றப்படும் தேர்வு நடைமுறைகள் பற்றியும் மாணவர்களின் தரவுகளை கையாள பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வசதிகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

தொலைதூர கல்வி இயக்குநர் சிங்காரவேலு பேசுகையில், பல்கலைக்கழகம் மற்றும் தற்போது இணைந்துள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் சலுகையுடன் பயிலும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

பல்கலைக்கழக கல்வி சார்பு இணை இயக்குநர் சிகப்பி கல்விச் செயல்பாடுகள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 75 இணைப்பு கல்லூரி முதல்வர்களும் கலந்து கொண்டனர். இணைப்புக் கல்லூரி களுக்கு இணைப்பு விழா சார்பாக துணைவேந்தர் நினைவு பரிசு வழங்கினார்.

பல்கலைக்கழக புலமுதல்வர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், இணை மற்றும் துணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக இணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார்.



Read in source website

நாக்பூர்: வாகனங்களை இயக்கும்போது, ஓட்டுநர்கள் தங்களை மீறி கண்ணயர்ந்தால் அதனைத் தடுக்கும் அலாரத்தை நாக்பூர் ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநேரங்களில் ஓட்டுநர்கள் தங்களைமீறி கண்ணயர்ந்துவிடுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவ்வாலாகே ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். வண்டிஓட்டும்போது ஓட்டுநர்களின் உறக்கத்தைத் தடுக்கும் அலாரமாக அது செயல்படுகிறது.

3.6 வோல்ட் பேட்டரி போதுமானதாக உள்ள இந்தக் கருவியில் ஆன் ஆப் சுவிட்ச் உண்டு. இதை எப்போதும் பயன்படுத்த வேண்டுமென்பது அவசியமில்லை. ஆனால் ஓட்டுநருக்கு தெரியும். நமது உடல் தூக்கமின்மையால் ஒத்துழைக்கவில்லை என்று... அல்லது ஏதோ ஒரு அயர்வு. அந்த மாதிரி நேரங்களில் அவர் தனது காதின் பின்புறத்தில் பொருத்திக்கொள்ளலாம். அப்போது, ஓட்டுநரின் தலை ஸ்டியரிங்கை நோக்கி 30 டிகிரி சாய்ந்தாலே போதும் அலாரம் சாதனம் அதிர்வுறத் தொடங்கிவிடும். எச்சரிக்கையை ஒலியை வெளியிடும்.

இது குறித்து இக்கருவியை உருவாக்கியவரும் ஓட்டுநருமான கவுரவ் சவ்வாலாகே ஏஎன்ஐயிடம் கூறுகையில், "சமீபத்தில் தூக்கத்தின் காரணமாக இரவில் வாகனம் ஓட்டும்போது விபத்துக்குள்ளானேன். விபத்திலிருந்து மீண்ட பிறகு எனக்குத் தோன்றியதெல்லாம் இதற்கு ஒரு தீர்வு காணவேண்டுமென்பதுதான். எனவே, வாகனம் ஓட்டும்போது யாராவது தூங்கினால், விபத்தைத் தவிர்க்கும் வகையில் அலர்ட் தரும் சாதனத்தை உருவாக்க நினைத்தேன். வாகனம் ஓட்டும்போது நாம் நம்மை மீறி சற்றே தூக்கத்தில் கண்ணயர்ந்து 30 டிகிரி கோணத்தில் நம் தலை சாய்ந்தால், இந்த சாதனத்திலிருந்து அலாரம் அடிக்கிறது, அது அதிர்வு ஏற்படுத்தி ஓட்டுநரை எழுப்பிவிடும்" என்றார்.



Read in source website

புதுடெல்லி: தனியார் நிறுவனங்களில் 75 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்தில் ஹரியாணா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க கடந்த2020-ம் ஆண்டு பாஜக மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஹரியாணாவைச் சேர்ந்தவர்களுக்கு 75 சதவீத வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் குறைந்தபட்ச ஊதியமும் ரூ.30 ஆயிரம் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹரியாணா மாநில அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு தடை விதித்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற தடையை எதிர்த்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஹரியாணா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஹரியாணாவில் தனியார் நிறு வனங்களில் 75 சதவீத வேலை வழங்க உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். தடை விதித்ததற்கு போதிய காரணங்களை உயர் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மேலும், இதுகுறித்து தனியார் நிறுவனங்கள் மீது மாநில அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது. மேலும், தனியார் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு குறித்த விவகாரத்தில், ஹரியா ணா உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி 4 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் (அரசு - தனியார் நிறுவனங்கள்) நீதிமன்றத்தை நாடக் கூடாது. ஒவ்வொரு முறை விசாரணைக்கு வழக்கு வரும் போதும் இரு தரப்பினரும் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஹரியாணா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துல்ஷார் மேத்தா வாதாடினார்.-பிடிஐ



Read in source website

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில்30 தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாநேற்று நடைபெற்றது. இதில் மத்தியசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:

ஆந்திர மாநிலம் பல்வேறு துறைகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக விவசாயம், தொழிற்சாலைகளின் வளர்ச்சிவிகிதம் இம்மாநிலத்தில் அதிகம்.இந்த வளர்ச்சியில் துறைமுகங்களின் பங்களிப் பும் சரிபாதியாகும். மத்திய அரசுக்கு அனைத்து மாநில வளர்ச்சியும் முக்கியம். ஆந்திர மாநில சாலை மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ. 3 லட்சம் கோடி நிதிஒதுக்கி உள்ளது.

ஆந்திராவில் 3 பசுமை சாலை திட்டம் அமல்படுத்தப்படும். 2024-ம்ஆண்டுக்குள் ராய்பூர்-விசாகப்பட்டினம் பசுமை விரைவு சாலை திட்டம் நிறைவடையும்.

நாக்பூர் - விஜயவாடா, சென்னை- பெங்களூரு விரைவு பசுமை சாலை திட்ட பணிகள் அமல் படுத்தப்படும். ரூ.5,000 கோடி செலவில், ஆந்திர மாநிலம் சித்தூர் - தமிழகத்தின் தஞ்சாவூர் இடையே விரைவு சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கட்கரி கூறினார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பேசும்போது, ‘‘மத்திய அரசின் உதவியால்தான் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டன. விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கனகதுர்கா மேம்பால பணிகள் மத்திய அமைச்சரின் உதவியால் விரைவாக நிறைவடைந்தது. மேலும் ரூ. 10,600 கோடி செலவில் ஆந்திர மாநிலத்தில் சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.



Read in source website

ஜெனீவா: கரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள்.

துவாலு: பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த நாட்டு காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்கிறது. கரோனா பரவல் தொடங்கியவுடன் இந்த நாடு கட்டாய தனிமைக்குச் சென்று எல்லைகளை மூடியது. இப்போது அங்கு 50% மக்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

டொகேலு: தெற்கு பசிபிக் கடலில் உள்ள இந்த நாடு நியூசிலாந்துக்கு அருகில் உள்ளது. இந்த நாட்டில் ஒரே ஒரு விமான நிலையம்தான் உள்ளது. இதன் மக்கள் தொகையே வெறும் 1500 தான். இங்கு இதுவரை கோவிட் தொற்று ஏற்படவே இல்லை.

செயின்ட் ஹெலெனா: தெற்கு அட்லான்டிக் கடலில் உள்ள இந்த நாடு பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ளது. இங்கும் கரோனா தொற்றில்லை.

பிக்டெய்ர்ன் தீவுகள்: பசிபிக் கடலில் உள்ள இந்த நாட்டில், பாலினீசியர்கள் தான் பூர்வக்குடிகள். பின்னர் 1606-ல் இந்த நாடு கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் மக்கள் வாழத் தொடங்கினர். இங்கே 100ல் 74 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

நியு: தெற்கு பசிபிக் கடலில் உள்ள மற்றொரு குட்டித் தீவு நாடு இது. இந்த நாட்டில் உள்ள பவளப்பாறைகள் வளமானவை. இந்த தேசமே பவளப்பாறை சார்ந்த சுற்றுலாவை நம்பியுள்ளது. இங்குள்ள 100 பேரில் 79 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

நவுரு: இது ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலையில் உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் இந்த நாட்டை ஓர் அவுட்போஸ்டாகப் பயன்படுத்தியது. இங்கு இப்போதைக்கு கரோனா இல்லை. 100ல் 68 பேர் தடுப்பூசி செலுத்தியவர்களே.

மைக்ரோனேஸியா: இந்த நாட்டில் சூக், கோஸ்ரீ, போன்பெய், யாப் என நான்கு பகுதிகள் உள்ளன. நான்கையும் இணைத்து ஃபெடரேட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் மைக்ரோனேஸியா என அறியப்படுகிறது. இங்கு 100ல் 38.37 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.

இந்த நாடுகள் தவிர துர்க்மேனிஸ்தான், வட கொரிய நாடுகளிலும் கரோனா இல்லை எனக் கூறப்படுகிறது. ஆனால் வட கொரியாவும், துர்க்மேனிஸ்தான் தங்கள் நாட்டில் பதிவான கரோனா தாக்கங்களை வெளியுலகிற்கு தெரிவிக்காமல் மறைக்கிறதோ என்ற சந்தேகமும் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.



Read in source website

குரங்குகளின் மண்டை ஓட்டுக்குள் சிப் வைத்து சோதனைக்கு உள்ளாக்கியதில் 15 குரங்கள் இறந்ததாக வெளியான செய்தியை எலான் மஸ்க்கின் நியூரோலிங்க் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் வகையில் கடந்த 2017-இல் நியுராலிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். நியூரோலிங்க் நிறுவனம் குரங்குகளின் மண்டை ஓடுக்குள் சிப் வைத்து சோதனைக்கு உட்படுத்தியது.

நியூரோலிங்கின் இந்தச் சோதனைகள் 2017-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டுவரை நடந்து வந்தது. சுமார் 23 குரங்குகள் இதுவரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. கடந்த ஏப்ரல் 2021-ஆம் ஆண்டுகூட மண்டை ஓட்டுக்குள் சிப் பொறுத்தப்பட்ட குரங்கு ஒன்று வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை நியூரோலிங்க் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், குரங்குகள் மீதான இந்தப் பரிசோதனைக்கு, விலங்கு நல ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். நியூரோலிங்கின் இந்தச் சோதனையால் குரங்குகளின் உடல் நிலை பாதிப்படலாம் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

15 குரங்குகள் உயிரிழப்பு

குரங்கின் மண்டை ஓட்டுக்குள் ஒயர்லெஸ் சிப் பொருத்தியதில் நியூரோலிங்க் நிறுவனத்தால் 15 குரங்குகள் கொல்லப்பட்டதாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

முதலில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வந்த எலான் மஸ்க்கின் நியூரோலிங் நிறுவனம், தற்போது குரங்குகள் இறப்பை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், குரங்குகளை சித்ரவதை செய்யவில்லை என்றும், உடல் நலக்குறைவால் அவை இறந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் மனித மண்டை ஓட்டுக்குள் சிப்பை பொறுத்த நியூரோலிங்க் நிறுவனம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website