DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 14-02-2022

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை பதவியேற்கிறாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதன் பிறகு முனீஸ்வா் நாத் பண்டாரி சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டாா்.

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவா் சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக முதல் அமா்வில் வழக்குகளை விசாரித்து வந்தாா். அவரை, சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்து, சட்டத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

இதன்படி, முனீஸ்வா் நாத் பண்டாரி திங்கள்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளாா்.

அவருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகை அரங்கில் திங்கள்கிழமை காலை நடக்கிறது. நிகழ்வில், முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சா் ரகுபதி, மூத்த அமைச்சா்கள், அரசு உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, மாா்ச் 15-ஆம் தேதி முதல் அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் அக்.10-ஆம் தேதி வரையில் அலாகாபாத் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்துள்ளாா். பின்னா் தலைமை நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாகப் பதவி வகித்தாா்.



Read in source website


புது தில்லி: ஒரு சில புகைப்படங்களை மட்டும் பார்த்தால், இது விமான நிலையமோ என்று சந்தேகிக்கப்படும் வகையில், பெங்களூருவில் உள்ள எம். விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலைய சந்திப்பு உருவாகிவருகிறது.

இதன் மூலம், நாட்டின் உலகத்தரம் வாய்ந்த மூன்றாவது ரயில் நிலையம் என்ற பெருமையை வென்றெடுக்க, இந்த ரயில் நிலையச் சந்திப்பு தயாராக உள்ளது. வரும் மார்ச் மாதத்தில், இந்த ரயில் நிலையம் திறப்பு விழாக் காணவிருக்கிறது.

முன்னதாக, குஜராத் மாநிலம் காந்திநகர் ரயில் நிலையம், உலகத்தரம் வாய்ந்த முதல் ரயில் நிலையமாகவும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

விரைவில் அயோத்தியோ, சஃப்தர்ஜங்க், பிஜ்வாசன், கோமதிநகர், அஜ்னி ஆகியவையும் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக சீரமைக்கப்பட உள்ளன.
 



Read in source website

இணையவழி விளையாட்டுக்குத் தடைவிதிக்கும் சட்டத்திருத்தத்தை ரத்துசெய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கர்நாடகத்தில் பணம் பரிமாறப்படும் அல்லது பணயம் வைக்கப்படும் அனைத்துவகையான இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் சட்டத்திருத்தத்தை கர்நாடக அரசு கொண்டுவந்தது. இணையவழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பொதுநலநலமனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க கர்நாடக காவல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. 

இந்த சட்டத்திருத்தம் அக்.5-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்திருத்ததை எதிர்த்து அகில இந்திய விளையாட்டியல் கூட்டமைப்பு, இந்திய கற்பனை விளையாட்டு கூட்டமைப்பு, கைப்பேசி பிரீமியர் லீக், கேம்ஸ்24இன்டு7, ஏஸ்2த்ரீ, ஜங்கிலீ கேம்ஸ், கேம்ஸ்கிராஃப்ட் மற்றும் பெசிபிக் கேம்ஸ் ஆகியவை தனித்தனியாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 
கர்நாடக காவல் சட்டத்திருத்தம், அரசியலமைப்புச்சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதால், இச்சட்டத்தை ரத்துசெய்ய வேண்டுமென்று மனுவில் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த மனுக்களை முதலில் விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித், இவற்றை கூடுதல் அமர்வுக்கு மாற்றினார். அதை தொடர்ந்து, தலைமைநீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு விசாரணை நடத்தியது. 
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், டிச.22-ஆம் தேதி அன்று தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீக்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை வழங்கியது. அதில், இணையவழி விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் கர்நாடக காவல் சட்டத்திருத்தத்தை ரத்து செய்துள்ளது. 
ஆனால், பணயம் வைத்து விளையாடுவது அல்லது சூதாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்க, அரசியலமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர தடையில்லை என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.



Read in source website


சான் பிரான்சிஸ்கோ: மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்-ஆப் செயலியில்,  முகநூல் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்-ஆப் செயலி மேம்படுத்துப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவம் பீட்டா இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த புதிய வசதியின் மூலம், நாம் புரொஃபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம்.

முதற்கட்டமாக, இந்த வசதி வாட்ஸ்ஆப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது.
 



Read in source website


ஹைதராபாத்; பொதுமக்கள் சாப்பிடும் 100  விதமான உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவற்றில் 10 சதவீதத்துக்கும் அதிகமான உணவுப் பொருள்கள் பாதுகாப்பற்றவையாகவும், தரமற்றவையாகவும் இருக்கின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் தான் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி கடந்த 2021ஆம் ஆண்டில் ஜூன் 1 முதல் டிசம்பர் 15 வரையிலான காலக்கட்டத்தில்  மேற்கொண்ட உணவுப் பரிசோதனை குறித்த முடிவுகள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலாகக் கிடைத்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வு முடிவு குறித்து, அதிகாரி ஒருவர் கூறுகையில், மொத்தமாக 926 உணவு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில், 98 உணவுப் பொருள்கள் பாதுகாப்பற்றவையாகவும், தரமற்றவையாகவும் இருந்தது தெரிய வந்துள்ளது.

ஹைதராபாத் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்கள், ஓட்டல்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட பல பொருள்கள் கலப்படம் நிறைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக மசாலா பொருள்கள் அதிகளவில் கலப்படம் நிறைந்ததாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் விலை குறைந்த எண்ணெய்கள், விலை அதிகம் கொண்ட பேக்குகளில் அடைத்து இதுபோன்ற உணவகங்களுக்கு விற்கப்படுகிறது.  பாமாயிலும், கலப்படம் செய்து பயன்படுத்தப்படுகிறது. சில உணவகங்களில் பருத்திக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

சில உணவகங்களில் விலங்குகளின் கொழுப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது மனிதர்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பல உணவகங்களில் இரண்டு அல்லது மூன்று முறைக்கும் மேல் காய்ச்சி மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார்கள். food safety

பல உணவகங்களில், காய்கறிகள் பழங்கள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதே இல்லை, அதில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடனேயே சமைக்கப்படுகின்றன. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



Read in source website

 

புவி கண்காணிப்புக்கான இஒஎஸ்-04 (ரிசாட்-1ஏ) செயற்கைக்கோளுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டாக இன்று அதிகாலை 5.59 மணிக்கு சி-52 செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பூமியில் இருந்து 529 கிலோ மீட்டா் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதையில் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் தாங்கிச் செல்லும் 1,710 கிலோ எடைகொண்ட  இஒஎஸ்-04 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் ஆயுள்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்பு, வேளாண், வனம் சாா்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இது பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது.

இதனுடன் ஆய்வுத் திட்டத்தின்கீழ் மாணவா்களால் வடிவமைக்கப்பட்ட இன்ஸ்பயர் சாட்-1, ஐஎன்எஸ்- 2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோள்களும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இஸ்ரோ தலைவராக சோமநாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் முதல் ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தின் விவசாய விளை நிலத்தில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர் கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் சீ.ராஜகோபால், முனைவர் பிறையா, ஆகியோர் தலைமையிலான குழுவினர் தரையின் மேற்பரப்பில் பரவிக் கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்காலத்து கல்வெட்டுக்கள் தொடர்பாக கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் வரலாற்று துறை மாணவர் வீரமல்லைய்யா என்பவர் கொடுத்த தகவல் அடிப்படையில் கல்லூரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் நொச்சிக்குளம் கிராமத்தில் கள ஆய்வு செய்தனர்.

அப்போது, ஓர் உருளை வடிவ கல் ஒன்று விவசாய நிலத்தில் பாதி புதைந்தும், பாதி வெளியே நீண்டும் இருப்பதை கண்டனர். இக்கல்வெட்டை நிலத்தின் சொந்தக்காரர் அப்பையா நாயக்கர் உதவியுடன் எடுத்தனர்.

இதுகுறித்து உதவி்பேராசிரியர்கள் ராஜகோபால், பிறையா கூறுகையில், ‘‘இக்கல்வெட்டு 5 அடி உயரமும் மேற்பகுதியில் அரை அடி அகலமும், கீழ்பகுதியில் ஒரு அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இந்த உருளை வடிவ கல்லானது ஒரு செவ்வக வடிவ கல்லின் மீது அமைந்திருக்கிறது. இந்தக் கல்வெட்டு தமிழ் வருடம் சய ஆண்டு இரண்டாம் பாண்டியர் காலத்தில் மன்னன் குலசேகர பாண்டியன் ஆட்சி காலத்தில் 1294 - 1295-வது வருடம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் கல்லக நாட்டு கீழ் பிடாகை காருலபயார் நல்லாண்டி கொடுத்த தான கல்வெட்டு எனும் வரிகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கல்வெட்டில் 18 வரிகள் காணப்படுகின்றன. அதில் 13 வரிகள் தெளிவாகும் மீதமுள்ள ஐந்து வரிகள் தெளிவற்ற நிலையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டு முன்னால் தமிழக தொல்லியல் துறை உதவி இயக்குனர் சொ.சாந்தலிங்கம் துணையோடு படிக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுப்பதிவுகள் மூலம் பல சமூக அரசியல் மற்றும் நன்கொடை தொடர்பான வரலாற்று பதிவுகள் அறிவதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்களும், தன்னார்வ மாணவர்களும் கல்வெட்டு தொடர்பான மதிப்புமிக்க தகவல்களை அரசாங்கத்திற்கோ அல்லது ஆர்வமுள்ளவர்களுக்கோ கூறுவதால் உண்மையான வரலாற்று நிகழ்வுகளை மறுவரையரை செய்ய மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றனர்.



Read in source website

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந் தாண்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில், மாவட்டத்தில் தேர்த்தங்கால், சித்திரங்குடி, காஞ் சிரங்குளம், சக்கரக்கோட்டை, கீழ செல்வனூர், மேலச்செல்வனூர் ஆகிய பறவைகள் சரணாலய கண் மாய்கள் மற்றும் திருஉத்தரகோச மங்கை கண்மாய், ராமநாதபுரம் பெரிய கண்மாய், மல்லல் கண்மாய், ஆர்.எஸ்.மங்கலம், மேல்மாந்தை கண்மாய்களில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பிப்.12,13-ல் நடைபெற்றது. வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆலோசனையின்படி உதவி வனப் பாதுகாவலர் சோ.கணேசலிங்கம் மற்றும் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் பா.ஜெபஸ் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

இதில் சென்னை, கோவை, மதுரையைச் சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர் கள் பங்கேற்றனர். சரணாலய பகுதியைக் காட்டிலும், வெளியிலும் பறவைகள் அதிகம் காணப்படுவது தெரிய வந்தது. சிக்கல் கண்மாயில் சுமார் 241 பூ நாரைகள் (பிளமிங்கோ) இருந்தன. சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இதனால் பறவைகள் 2 மற்றும் 3 முறை இனப்பெருக்கம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இக் கணக்கெடுப்பில் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டன. அதிகளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகம் மற்றும் கொக்கு வகைகள் கண்டறியப்பட்டன. இதில் சுமார் 25,000 பறவைகள் உள்ளன.

இது கடந்த 5 ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என வனச்சரகர் பா.ஜெபஸ் தெரிவித்தார்.



Read in source website

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-ல் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில், ரூ.97 கோடியில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.

ஆர்சிஎஃப் மற்றும் எம்சிஎஃப் தொழிற்சாலைகளில் மொத்தம் 95 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இப்பணிகள் இன்னும் இரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.

இதையடுத்து, சென்னை ஐசிஎஃப்-ல் ஏற்கெனவே ரயில் வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி மொத்தம் 51 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Read in source website

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான 25 மணி30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு தொடங்கியது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன. ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டு பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்விசி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது. அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன.

மொத்தம் 1,710 கிலோ எடை கொண் ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்துஅனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 14-ம் தேதி (இன்று) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு ராக்கெட் ஏவுதல் அதிகார வாரியம் அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து, ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கியது. ஏற்கெனவே, திட்டமிட்டபடி இன்று காலை 5.59 மணிக்கு 3 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: 'தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை எதிர்க்க வேண்டியது அவசியம்' என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) முன்னாள் தலைவர் சுகதியோ தோரட் வலியுறுத்தியுள்ளார். நுழைவுத் தேர்வுகளின் தாக்கம் குறித்து சமூக பொருளாதார சமுத்துவத்துக்கான கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இணையவழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது, "மருத்துவக் கல்விக்கான நீட் (National Eligibility-cum Entrance Test NEET) நுழைவுத் தேர்வை தமிழகம் வழியில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மருத்துவக் கல்விக்குக் கொண்டுவந்ததுபோல் மத்திய அரசு விரைவில் அனைத்துக் கல்விக்கும் நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவந்துவிடும். தேசிய கல்விக் கொள்கையும் அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு என்பதையே பரிந்துரைக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால், பணம் உள்ளவர்கள், நேரம் உள்ளவர்கள் மட்டுமே தனிப்பட்ட முறையில் பயிற்சி மையங்களில் இணைந்து கல்வி கற்பது சாத்தியமாகும்" என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வி கிடைக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நீட் கொண்டுவரப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையும் அந்த அடிப்படையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு அண்மையில் வெளியிட்ட தேசிய உயர் கல்வி தகுதிக்கான வரைவு வழிகாட்டுதல்களும் இதனை நோக்கியே உள்ளன.

விவரமறிந்தவர்கள் நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திமுக தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு பெறப்படும், தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று வாக்குறுதி கொடுத்தது. மக்கள் திமுகவை வெற்றி பெறவைத்தனர். எனவே, நீட் எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்பது மக்களின் எண்ணமாகவே இருக்கிறது" என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான சாணக்கியா ஷா, ’உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வு, சமூக அந்தஸ்து, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எப்படி எந்தெந்த வகையில் எல்லாம் கேடாக இருக்கிறது’ என்று விரிவாகப் பட்டியலிட்டார்.



Read in source website

புதுடெல்லி: ஆப் லாக், ப்யூட்டி கேமரா, விவா வீடியோ எடிட்டர் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா 59 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை விதித்தது. அவற்றில் டிக்டாக், வீசேட், ஹெலோ உள்ளிட்ட இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செயலிகள் இருந்தன. நாட்டின் இறையான்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இந்த செயலிகளுக்கு தடை விதித்ததாக அரசு தெரிவித்தது.

இந்தியா - சீனா எல்லையில் கடந்த 2020 தொடக்கத்தில் இருந்தே பதற்றம் அதிகரித்துள்ளது. அப்போது தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட 300 சீன மொபைல் செயலிகளை இந்திய அரசு தடை செய்திருக்கிறது.

கடந்த 2020 ஜூன் 15ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொள்ளப்பட்ட பின்னர் முதல் சுற்று சீன செயலிகளுக்கான தடை நடைபெற்று வருகிறது.

தற்போது, ஸ்வீட் செல்ஃபி, ப்யூட்டி கேமரா, செல்ஃபி கேமரா, விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் ஸ்ரைவர், ஆன்மையோஜி அரேனா, ஆப்லாக், டூயல் ஸ்பேஸ் லைட் உள்ளிட்ட 54 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே தடை செய்யப்பட்ட செயலிகள் சில புதிய பெயர்களுடன் மீண்டும் இந்தியாவில் புழக்கத்தில் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Read in source website

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் இன்று (பிப்.14) காலை விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

வெற்றிகரமான நிலைநிறுத்தம்: மொத்தம் 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்து அனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், ”இஓஎஸ்-04 முதன்மை செயற்கைக்கோள் வெற்றிகரமாக துல்லியமான சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அத்துடன் அனுப்பப்பட்ட மற்ற செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த பிஎஸ்எல்வி செயற்கைக்கோள் விரைவில் ஏவப்படும்'' என்றார்.

சோம்நாத் கடந்த ஜனவரி மாதம், இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற பின்னர் ஏவப்பட்டுள்ள முதல் செயற்கைக்கோள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன. ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டு பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்விசி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது. அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3 செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று (பிப்.14) காலை, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3 செயற்கைக்கோள்களை சுமந்தவாறு பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. 2022ல் இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான பிஎஸ்எல்வி சி-52 வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.



Read in source website

புதுடெல்லி: பிரான்சில் இருந்து கடைசி கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் இந்தியா வருகின்றன.

பிரான்சிடம் இருந்து ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 2020 ஜூலையில் 5 விமானங்கள் இந்தியா வந்தன. தொடர்ந்து பல கட்டங்களாக ரஃபேல் விமானங்கள் வந்தன. இதுவரை 33 விமானங்கள் வந்துள்ளன. கடைசி கட்டமாக மீதியுள்ள 3 ரஃபேல் போர் விமானங்கள் அடுத்த வாரம் மத்தியில் இந்தியாவுக்கு வருகின்றன. இந்தத் தகவலை விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, ரஃபேல் விமானங்கள் இந்தியா வந்ததுபோல இம்முறையும் பயணத்தின்போது இந்த விமானங்கள் எரிபொருள் நிரப்பப்பட்டு நேரடியாக பிரான்சில் இருந்து இந்தியா வரும். வானில் இலக்கை குறிவைத்து தாக்குதல், ஏவுகணையை இடைமறித்து தாக்குதல் போன்ற திறன்களுடன் எதிரிகளை அடையாளம் காணும் ரேடார் எச்சரிக்கைக் கருவியும் ரஃபேல் போர் விமானத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ரத்னகிரி: மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கரின் பூர்வீக கிராம மான அம்படவேயில் உள்ள அம்பேத்கரின் நினைவுக் கலசத் துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் பூஜை செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் அம்பேத்கர், நாட்டின் கல்வித் துறைக்கு முக்கிய பங்காற்றி யுள்ளார். மாணவர்கள் கல்வி பெறவும், கல்வி வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டார். அம்பேத்கர் 1900-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பள்ளியில் சேர்ந்தார். இதை நினைவு கூரும் வகையில் மகாராஷ்டிர அரசு நவம்பர் 7-ம் தேதியை மாணவர் தினமாக கொண்டாடுகிறது. அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில், கல்விக்கு அவர் அளித்துள்ள பங்களிப்பை போற்றும் வகையில், நவம்பர் 7-ம் தேதி நாடு முழுவதும் தேசிய மாணவர் தினமாக கொண்டாடப்பட வேண்டும்.

அம்பேத்கர் போற்றிய நல்லிணக்கம், கருணை மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சமூக அமைப்பு இருக்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசினார்.

- பிடிஐ



Read in source website

ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே முச்சிந்தல் சின்ன ஜீயர் ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 120 கிலோ எடையுள்ள தங்க ராமானுஜர் சிலையை நேற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஹைதராபாத் நகரின் அருகில் முச்சிந்தல் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் வைணவ ஆச்சாரியார் ராமானுஜருக்கு சின்ன ஜீயர் சுவாமிகள் ரூ.1,000 கோடியில் 216 அடியில் ஐம்பொன்னாலான பிரம்மாண்ட சமத்துவ சிலையை நிறுவியதோடு, அங்கு 108 வைணவ திவ்ய தேச சன்னதிகளையும் அமைத்துள்ளார்.

ராமானுஜரின் 1,000 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து, அவருக்கு 216 அடி உயர ஐம்பொன் சிலையை கடந்த 5-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுடமை ஆக்கினார். பிரதமரைத் தொடர்ந்து, ராமானுஜர் சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கைய்ய நாயுடு, ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கண்டு தங்களது வியப்பை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2-ம் தேதி முதல் 14-ம்தேதி வரை சின்ன ஜீயர் ஆசிர மத்தில் லட்சுமி நாராயண ஹோமம் நடைபெற்று வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக ஹோம பூஜைகள் செய்து வருகின்றனர். நாட்டுடமை ஆக்கப்பட்ட பின்னர் ராமானுஜர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது துணைவியாருடன் தனிவிமானம் மூலம் நேற்று ஹைதராபாத் வந்தார். அவரை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் பல உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசு தலைவர், ராமானுஜர் சிலை அமைந்துள்ள சின்ன ஜீயர் ஆசிரமம் அமைந்துள்ள முச்சிந்தலுக்கு சென்றார். அங்கு அவரை பூரண கும்ப மரியாதையுடன் சின்ன ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத பண்டிதர்கள் வரவேற்றனர். அதன் பின்னர், 216 அடி உயர ராமானுஜரின் சிலையை குடியரசு தலைவர் பார்வையிட்டார்.

பின்னர், 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜருக்கு அதன் நினைவாக 120 கிலோ தங்க சிலையை திறந்து வைத்து நாட்டுடமை ஆக்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். இதனை தொடர்ந்து அவர், அங்கு கட்டப்பட்டுள்ள 108 வைணவ திவ்ய தேச கோயில்களை பார்வையிட்டார். பிறகு அவர் பேசியதாவது:

மகான் ராமானுஜரின் தங்க சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது என்னுடைய பாக்கியமாகும். ராமானுஜரின் போதனைகள் சாஸ்திரங்களுக்கு மட்டுமே அடங்கி விடாமல், இந்தியர்களின் பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

 ராம் நகர் பெயரில் உள்ள இந்த நிலம் ஓர் உண்மையான சமத்துவ நிலமாகும். தென்னிந்தியாவில் ராமானுஜர் தொடங்கி வைத்த சமத்துவ போராட்டம் வட இந்தியாவிலும் பரவியது. டாக்டர் அம்பேத்கார் கூட ராமானுஜரின் சமத்துவ போராட்டமே தன்னை ஊக்குவித்தது என குறிப்பிட் டுள்ளார்.

ஆழ்வார்களின் முக்கியத் துவத்தை ராமானுஜர் உலகிற்கு எடுத்துரைத்தார். மகாத்மா காந்தியும் ராமானுஜரை பின்பற்றி வாழ்ந்துள்ளார். நாட்டில் புது சரிதம் தொடங்கி உள்ளது. கடவுளை வணங்க அனைவருக்கும் தகுதி உள்ளது.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசினார்.

அதன் பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் தம்பதியினர் ஹெலிகாப்டர் மூலம் ஹைதராபாத் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு இரவு தங்கி, இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.



Read in source website

நியூயார்க்: வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் 'டைனோபேபிஸ்' (Dinobabies) எனக் குறிப்பிட்டு, அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 3,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தொழில் போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடியை இந்நிறுவனம் 2010 இறுதியில் சந்திக்கத் தொடங்கியது. இதையடுத்து, வயதான அதிக சம்பளம் பெறும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து புதிய ஊழியர்களை பணி அமர்த்தி வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சில ஊழியர்கள் தாங்கள் தவறான முறையில் பணிநீக்கம் செயயப்பட்டதாகக் கூறி சான் பிரான்சிஸ்கோ, டெக்ஸ்சாஸ், நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

2019 வரையிலுமே இந்நிறுவனத்தில் அடிக்கடி வேலை நீக்கங்கள் நடைபெற்றன. இதில் நியூயார்க் நீதிமன்றத்தில் 2010-ல் நடந்த மாபெரும் லேஆஃப் தொடர்பான வழக்கில், வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் 'டைனோபேபிஸ்' (Dinobabies) எனக் குறிப்பிட்டு அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் மையமாக உள்ளது.

அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனத்தின் அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட் இ-மெயில் உரையாடல்கள் வயதின் அடிப்படையில் ஊழியர்களை மிகவும் மோசமான வகையில் பாகுபடுத்தியுள்ளது. எனவே, அப்போதிருந்த அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்ற நீதிபதி, இந்த இ-மெயில் அனுப்பிய அதிகாரிகளின் பெயர் விவரம் அடங்கிய ஆவணங்களை வெளியிடுமாறு ஐபிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ஐபிஎம் நிறுவனத்தில் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”எங்களின் நிறுவனம் இதுபோன்று வயது அடிப்படையிலான பாகுபாட்டை எப்போதுமே கடைப்பிடித்ததில்லை. குறிப்பிட்ட இ-மெயில்களுக்குப் பின்னர் நடந்த லேஆஃப் நிறுவனத்தின் வர்த்தக நிலைமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதே தவிர, வயதின் காரணமாக அல்ல’’ என்று கூறியுள்ளார்.

மேலும், 2022ல் ஐபிஎம் நிறுவனத்தின் ஊழியர்களின் மத்திய வயதாக 48 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் வெளியானதாகக் கூறப்படும் 2010-லும் மத்திய வயது 48 ஆகவே இருந்தது என்று கூறியுள்ளார். அத்துட்ன, ஐபிஎம் இமெயில் எனக்கூறப்படும் அந்த மெயில்களில் உள்ள மொழிநடையானது ஐபிஎம்மின் மொழிநடையே அல்ல. எங்களின் மொழி மாண்பில் குறைவில்லாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த வழக்கில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் லிஸ் ரியோர்டன், ஐபிஎம் நிறுவனத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ஐபிஎம் காலங்காலமாக வயது அடிப்படையில் ஊழியர்கள் மீது பாகுபாடு காட்டுகிறது. ஆனால் இப்போது தந்திரமாக அவற்றை மறைக்கிறது'' என்று கூறியுள்ளார்.



Read in source website

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை மேலும் ஏறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திடீரென பொருளாதாரத்தில் இத்தனை மாற்றங்கள் நிகழ ஒரே காரணமாகக் கூறப்படுகிறது உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை. உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை உருவானது எப்படி? - இதோ ஒரு டைம்லைன் அப்டேட்.

நேட்டோவில் இணைய எதிர்ப்பு: சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இந்த நிலையில் 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறுகிறது. தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாக குற்றம்சாட்டுகிறது. இந்தப் பின்னணியில் கடந்த 3 மாதங்களாக நிகழ்ந்த முக்கியமான சம்பவங்களின் டைம்லைன்:

நவம்பர் 2021: உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதற்கான சாட்சியாக செயற்கைக்கோள் புகைப்படம் வெளியானது. ராணுவ டாங்குகள், இன்னும் பிற போர் உபகரணங்கள், 1,00,000 வீரர்கள் என எல்லையில் குவிந்திருப்பது அந்தப் புகைப்படத்தில் தெளிவானது.

டிசம்பர் 7, 2021: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் மீது படையெடுத்தால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதிக்கும் என்றார்.

டிசம்பர் 17, 2021: ’நேட்டோ தனது அங்கமாக உக்ரைனை இணைக்கக் கூடாது. உக்ரைன் மட்டுமல்ல, முன்னாள் சோவியத் குடியரசின் எந்த ஓர் உறுப்பு நாட்டையும் இணைக்க முற்படக்கூடாது. இதனால் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு ஆபத்துள்ளது. ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியான கிரிமியாவிற்கும் ஆபத்துள்ளது’ என்று ரஷ்யா தெளிவாக எடுத்துரைத்தது.

ஜனவரி 3, 2022: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரு வாக்குறுதி அளிக்கிறார். ’ஒருவேளை உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அமெரிக்கா உரிய வகையில் பதிலடி கொடுக்கும்’ என்று வாக்குறுதி அளித்தார். தொலைபேசி வாயிலாக பைடன், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இதனைத் தெரிவித்தார்.

ஜனவரி 10, 2022: அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஜெனீவாவில் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தினர். மாஸ்கோ தரப்பில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கப்பட வேண்டும் எனக் கோர அமெரிக்கத் தரப்பு எதிர்க்க, பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

ஜனவரி 24, 2022: நேட்டோ தனது படைகளை உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்துகிறது. கிழக்கு ஐரோப்பாவில் தனது கப்பல்களையும், போர் விமானங்களையும் குவித்தது. உக்ரைன் தலைநகர் கியவ்வில் இருந்து அத்தியாவசியப் பணிகளில் இல்லாத தூதரக ஊழியர்கள் சிலர் வெளியேற்றப்பட்டனர். 8,500 படைகளை அமெரிக்கா உஷார் நிலைக்குக் கொண்டு வந்தது.

ஜனவரி 26, 2022: வாஷிங்டன் தரப்பில் ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. நேட்டோவின் நிலைப்பாட்டை விளக்கி, மாஸ்கோ கூறும் பாதுகாப்புப் பிரச்சினைக்கு கொள்கை அடிப்படையில் நடைமுறைக்கேற்ற தீர்வு எட்டப்படும் என்று கூறியிருந்தது.

ஜனவரி 28, 2022: ரஷ்யாவின் மிக முக்கியமான பாதுகாப்பு கோரிக்கைகளுக்கு அமெரிக்கா பதிலளிக்கவே இல்லை. ரஷ்யா இன்னும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது எனக் கூறியது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ’மேற்கத்திய நாடுகள் பதற்றத்தை உருவாக்க வேண்டாம், இதனால் எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும்’ என்று எச்சரித்தார்.

ஜனவரி 31, 2022: உக்ரைன் விவகாரம் தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய சிறப்பு அமர்வில், அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவொருக்கொருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தன.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்டு, ’உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலக பாதுகாப்பே அச்சுறுத்தல்’ என்றார்.

ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் வேஸிலி நெபஞ்சியா, ’ரஷ்யாவுக்கு படையெடுப்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்று மீண்டும் மீண்டும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தாம் போர் பதற்றம் என்று தம்பட்டம் அடிக்கின்றன’ என்றார்.

பிப்ரவரி 1, 2022: ரஷ்யாவுக்கு உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என்று அந்நாட்டு அதிபர் புதின் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவின் பாதுகாப்பு கோரிக்கைகளை புறந்தள்ளி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

பிப்ரவரி 6, 2022: அமெரிக்க ஊடகங்களில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக 70% ராணுவ பலத்தை எல்லையில் ரஷ்யா கட்டமைத்துவிட்டதாக செய்திகள் வெளியிட்டன.

பிப்ரவரி 8, 2022: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ வருகிறார். புதினுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ’ரஷ்யா நிச்சயமான உக்ரைன் பிரச்சினையைப் பெரிதாக்காது’ என்று கூறிச் செல்கிறார். ஆனால் இதனை எதிர்க்கும் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ’இப்போதைய சூழலில் ரஷ்யாவும், பிரான்ஸும் எந்த ஒரு ஒப்பந்தத்துக்கும் வரவில்லை’ என்றார்.

பிப்ரவரி 10 2022: பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரூஸ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால், அது பலனற்றதாக முடிகிறது. இந்த பேச்சுவார்த்தை குறித்து லாவ்ரோவ் செய்தியாளர்களிடம், ’இது ஒரு காதுகேளாதவருக்கும், பேச இயலாதவருக்கும் இடையே நடந்த உரையாடல் போன்றது’ என்று விமர்சித்தார். பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரூஸ், ’உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மேற்கத்திய நாடுகள் விதிக்கும் தடையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தார். ’உக்ரைன் எல்லையில் ரஷ்யாவின் படைகள் குவிப்பு யாரையும் அச்சுறுத்தாது’ என்று கூறினார்.

பிப்ரவரி 11, 2022: அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ’உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஏன், ஓரிரு நாட்களில் கூட நடக்கும். அதனால், அமெரிக்கர்கள் உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.


போலந்துக்கு கூடுதலாக 3000 அமெரிக்கப் படைகள் அனுப்பிவைக்கப்பட்டன. பல்வேறு நாடுகளும் உக்ரைனிலிருந்து தங்கள் மக்களை வெளியேறுமாறு கூறின.

பிப்ரவரி 12, 2022: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொலி வாயிலாக சந்தித்துப் பேசினார். அப்போது, ’உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவே மேற்கத்திய நாடுகள் விரும்புகிறது’ என்றார்.
அதற்கு பதிலளித்த புதின், ’ரஷ்யாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் சரியாக விளக்கமளிக்கவில்லை’ என்று கூறினார். ’உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படக் கூடாது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்து நேட்டோ படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும்’ என்று கூறினார்.

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் பொழுதும் போர்ப் பதற்றம் மிகுந்த உக்ரைன் - ரஷ்யா பிரச்சினை வலுவடைந்து வருகிறது.



Read in source website

புது டெல்லி: இந்தியாவின் சின்ன வெங்காய ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டு 2013-க்குப் பிறகு 487 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதுகுறித்து மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) விளங்குகின்றன.

இந்தியாவின் அன்னாசி ஏற்றுமதியும் சுமார் நூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.63 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இதன் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3.26 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக ஐக்கிய அரபு அமீரகம் (32.2%), நேபாளம் (22.7%), கத்தார் (16.6%), மாலத்தீவுகள் (13.2%) மற்றும் அமெரிக்கா (7.1%).விளங்குகின்றன.

அனைத்து விதமான ஏற்றுமதியிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.



Read in source website

புதுடெல்லி: 2022 ஜனவரி மாதத்தில் மொத்த விலை குறியீட்டு எண் பணவீக்க விகிதம் 12.96 சதவீதமாக உள்ளது.

இதுகுறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2022 ஜனவரிக்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் (தற்காலிகம்) மற்றும் 2021 நவம்பர் மாதத்திற்கான மொத்த விலை குறியீட்டு எண்கள் (இறுதி) ஆகியவற்றை தொழில் ஊக்குவிப்பு துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் இன்று வெளியிட்டது.

மொத்த விலை குறியீட்டு தற்காலிக எண்கள் ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி அன்று அல்லது அதற்கு அடுத்த பணி நாளன்று வெளியிடப்படுகின்றன.

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அமைப்பு ரீதியான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு இக்குறியீடு தற்காலிகமாக தயாரிக்கப்படுகிறது. பத்து வாரங்களுக்கு பிறகு குறியீடு இறுதி செய்யப்படுகிறது.

மொத்த விலைக் குறியீடு சார்ந்த பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
2022 ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் (தற்காலிகம்) 12.96 சதவீதமாக இருந்தது. 2021 நவம்பரில் 14 87% ஆக இருந்த பணவீக்க விகிதம் 2021 டிசம்பரில் 13.56% ஆக குறைந்த நிலையில் 2022 ஜனவரியில் 12.96% இருந்தது.

2022 ஜனவரியில் அதிக பணவீக்கத்தின் காரணியாக கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் ரசாயனங்கள் மற்றும் ரசாயன பொருட்கள் உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு இருந்தது. இதில் மின்சாரம், கச்சா பெட்ரோலிய பொருட்கள் சார்ந்த பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகமாக முதலிடத்தில் உள்ளது. ஜனவரியில் 32.27 ஆக உள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.



Read in source website

புதுடெல்லி: கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி இப்போது 8.25% ஆக உள்ளது. இதை 5.5% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. நேற்று முன்தினம் முதல் இது அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரி குறைப்பு செப்.30 வரை அமலில் இருக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்சமையல் எண்ணெய் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை அதிகமாக இருந்தது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்தியஅரசு பாமாயில் மீதான இறக்குமதி வரியை அவ்வப்போது குறைத்தது. அந்த வகையில் இப்போது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரி செப். 30-ம் தேதி வரை 5.5% ஆகஇருக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த அறிவிப்பை சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.



Read in source website

புதுடெல்லி: எல்ஐசி விரைவில் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்ள உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்ஹெச்பி) எல்ஐசி தாக்கல் செய்துள்ளது.

பொதுப் பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஐபிஓ மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது.

இதில் 50% நிறுவன முதலீட் டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5%தள்ளுபடி வழங்கப்பட இருப் பதாகவும் கூறப்படுகிறது.



Read in source website