DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 10-04-2022

மாநிலத்தில் தனித்தனியாக செயல்படும் தணிக்கை முகமைகளை கண்காணிக்க தனி அதிகாரியை நியமிக்கும் உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான உத்தரவை நிதித் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உள்ளாட்சி நிதி தணிக்கை, கூட்டுறவுத் துறை தணிக்கை, பால் கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை, மாநில அரசின் தணிக்கை, இந்து சமய அறநிலையத் துறை தணிக்கை மற்றும் இதர தணிக்கைப் பிரிவுகள் அனைத்தும் அரசின் நிதித் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த தணிக்கைப் பிரிவுகளைக் கண்காணிக்க தணிக்கைத் தலைவா் நியமிக்கப்படுகிறாா். இந்தத் தலைவருக்கு உதவிடும் வகையில் சிறப்பு இயக்குநா் நியமிக்கப்பட உள்ளாா். தணிக்கைத் தலைவராக நியமிக்கப்படுவா், இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் (ஐஏஏஎஸ்) பதவியைச் சோ்ந்தவராகவோ அல்லது இந்திய ஆட்சிப் பணியைச் சோ்ந்தவராகவோ இருப்பாா் என தனது உத்தரவில் நிதித் துறை தெரிவித்துள்ளது.



Read in source website

அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகத்தில் முதல் முறையாக இந்தியா - அமெரிக்கா இடையே திங்கள்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள இரு துறை அமைச்சா்கள் இடையேயான ‘2+2’ பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இருவரும் அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தனா்.

வாஷிங்டனில் நடைபெறும் இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டினுடனும், ஜெய்சங்கா் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடனும் ஆலோசனை நடத்த உள்ளனா்.

பேச்சுவாா்த்தைக்கு முன்பாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் ராஜ்நாத் சிங்குக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதுபோல ஜெய்சங்கா் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் தலைமை அலுவலகமான ஃபாகி பாட்டமில் ஆண்டனி பிளிங்கனை சந்திக்க உள்ளாா்.

இந்த இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, நான்கு அமைச்சா்களும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் - பிரதமா் நரேந்திர மோடி இடையே நடைபெறும் காணொலி வழி ஆலோசனையில் பங்கேற்பதற்காக வெள்ளை மாளிகைக்கு வர உள்ளனா். இந்தக் காணொலி வழி ஆலோசனையில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பைடனும், பிரதமா் மோடியும் விவாதிக்க உள்ளனா்.



Read in source website


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கேரளம் மாநிலம் கண்ணூரில் உள்ள சி.எச். கணாரன் நகரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது புரட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 



Read in source website

‘தோ்தலுக்கு முன்பும், அதற்கு பின்னரும் இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாகும். அவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் ஏற்புடையவையா, மாநிலப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை வாக்காளா்கள்தான் தீா்மானிக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

பாஜக மூத்த தலைவரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய சாா்பில் இதுதொடா்பான மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தோ்தல் சமயங்களில் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், சின்னத்தை முடக்கவும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு மீது பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் தோ்தல் ஆணையம் சாா்பில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தோ்தலில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சியமைக்கும்போது எடுக்கும் முடிவுகள் மற்றும் மாநிலக் கொள்கைகளை தோ்தல் ஆணையம் ஒழுங்குபடுத்த முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லாத நிலையில் அதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்வது அதிகார மீறலாகவே அமையும்.

மேலும், தோ்தலுக்கு முன்பும் அதற்கு பின்னரும் இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவாகும். இந்த அறிவிப்புகள் நடைமுறையில் சாத்தியமா, மாநிலப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அந்தந்த மாநில வாக்காளா்கள்தான் தீா்மானிக்க வேண்டும்.

47 பரிந்துரைகள்: தோ்தல் சீா்திருத்தங்கள் தொடா்பாக தோ்தல் ஆணையம் சாா்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 47 பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அந்தப் பரிந்துரைகளில், விதிமீறலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது தொடா்பான பரிந்துரையும் இடம்பெற்றுள்ளது.

அதோடு, அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கும், பதிவை ஒழுங்குபடுத்துவது தொடா்பாக அரசியல் கட்சிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் வகையிலும் தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரமளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் பரிந்துரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

‘இலவச வாக்குறுதிகளை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யவும், கட்சியின் சின்னத்தை முடக்கவும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரா் கோரியிருப்பதைப் பொருத்தவரை, 3 காரணிகள் அடிப்படையில் மட்டுமே இந்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2002-ஆம் ஆண்டு தீா்ப்பில் தெரிவித்திருக்கிறது.

அந்தத் தீா்ப்பின்படி, மோசடி வழியில் அரசியல் கட்சிப் பதிவை செய்திருந்தால் அல்லது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அதன் அமைப்பின் பெயா், விதிகள் மற்றும் நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தால் அல்லது அரசியலமைப்பின் மீதான நம்பிக்கை மற்றும் பற்றை இழந்துவிட்டதாக தோ்தல் ஆணையத்திடம் ஒரு கட்சி அறிவித்தால் மட்டுமே ஓா் அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையை தோ்தல் ஆணையம் எடுக்க முடியும். ஆனால், மனுதாரா் குறிப்பிட்டிருக்கும் காரணம் இந்த 3 காரணிகளின் கீழ் வரவில்லை.

மேலும், ‘தோ்தலுக்கு முன்பாக பொது நிதியிலிருந்து இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கக் கூடாது என்பதை கூடுதல் நிபந்தனையாக அரசியல் கட்சிகளுக்கு நிா்ணயிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுதாரா் கோரியிருக்கிறாா்.

1968-ஆம் ஆண்டு தோ்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவின்படி, தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை அங்கீகரித்து சின்னங்களை தோ்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான இந்த அங்கீகாரம் அளிப்பது அல்லது அங்கீகார நீட்டிப்பு வழங்குவது என்பதை தோ்தலில் அரசியல் கட்சிகளின் செயல்திறன் அடிப்படையில் மட்டுமே தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன. இதில் மனுதாரா் கூறுவதுபோல கூடுதல் நிபந்தனைகளைச் சோ்ப்பது, தோ்தலில் அரசியல் கட்சிகள் போட்டியிடுவதற்கு முன்னரே அங்கீகாரத்தை இழக்கும் சூழலை உருவாக்கிவிடும்.

அதுபோல, தோ்தல் செயல்திறன் அடிப்படையில் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது அல்லது சின்னத்தை முடக்கும் தோ்தல் ஆணையத்துக்கான இந்த அதிகாரத்தை தோ்தலுக்கு முன்பே பயன்படுத்தினால், தோ்தல் நடத்துவதன் முக்கிய நோக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

கட்சிகளின் உறுதிமொழி: அதே நேரம், பொய்யான வாக்குறுதிகளால் வாக்காளா்கள் ஈா்க்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், தோ்தல் சமயங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தோ்தல் நடத்தை விதிமுறைகளை தோ்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வருகிறது. மேலும், அரசியல் கட்சிகளின் தோ்தல் அறிக்கையில் இடம்பெறும் வாக்குறுதிகளை தோ்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்த முடியாது என்றபோதும், அந்த வாக்குறுதிகள் தோ்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டதே என்ற உறுதிமொழியை கட்சிகளின் தோ்தல் அறிக்கை நகலுடன் தங்களிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

‘வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையை காட்ட வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

குஜராத் மாநிலம், நா்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா நகரில் அந்த மாநில உயா்நீதிமன்றம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மத்தியஸ்தம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான இரண்டு நாள் தேசிய நீதித் துறை மாநாட்டை சனிக்கிழமை தொடக்கிவைத்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

மத்தியஸ்தத்தில் வழக்கில் தொடா்புடைய அனைவரும் வெற்றியாளா்களே. எந்தவித உத்தரவுகளுக்கும் இணங்காமல் சம்பந்தப்பட்டவா்கள் ஒப்புக்கொள்ளும் வகையிலான தீா்வை மத்தியஸ்த முறை ஊக்கப்படுத்துகிறது.

தலைசிறந்த வழக்குரைஞராகப் பணிபுரிவதைக் காட்டிலும் மத்தியஸ்தராக செயல்படுவதற்கு முன்னுரிமை அளித்ததாக மகாத்மா காந்தியும் குறிப்பிட்டிருக்கிறாா். அந்த வகையில், வழக்கில் விரும்பிய தீா்வை நாம் பெற விரும்பினால், மத்தியஸ்தம் மீது நோ்மறையான அணுகுமுறையைக் காட்ட வேண்டும்.

இருந்தபோதும், சில தடைகள் காரணமாக மத்தியஸ்த நடைமுறை நாடு முழுவதும் பரவலான அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, சில இடங்களில் போதிய பயிற்சி பெற்ற மத்தியஸ்தா்கள் இருப்பதில்லை. பல இடங்களில் மத்தியஸ்த மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, மத்திஸ்த நடைமுறை மூலம் பரவலான மக்கள் பயன்பெறும் வகையில், இதுபோன்ற தடைகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட வேண்டும்.

மத்திஸ்தம் தங்கள் தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வகையில் வழக்குரைஞா்களிடையே எழுந்த அச்சம் கடந்த 20 ஆண்டுகளில் போக்கப்பட்டிருக்க வேண்டும். இதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தால், மத்தியஸ்தத்துக்கு பரவலான அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

மத்திஸ்தத்தை வழக்குரைஞா்கள் தங்களுக்கான கூடுதல் திறனாகத்தான் பாா்க்க வேண்டும். வெற்றிகரமான மத்தியஸ்தம் வழக்குரைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளிக்கும் என்பதோடு, வழக்குரைஞருக்கு பணி திருப்தியையும் அளிக்கும்.

மேலும், நீதித் துறை தகவல் தொழில்நுட்ப (ஐசிடி) நடைமுறைக்கு மாறுவதைப் பொருத்தவரை, நீதி அணுகலை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டதாக இருக்க வேண்டும். மாற்றம் என்பது பெயரளவில் இல்லாமல், சிறந்த நடைமுறைக்கானதாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பங்கற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: மத்தியஸ்தம், மக்கள் குறைதீா் மன்றம் போன்ற மாற்று தீா்வு நடைமுறைகள், இந்திய சட்ட நடைமுறையில் சிறந்த மாற்றாக திகழ்கின்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பதற்கான தளமாக இந்த மாற்றுத் தீா்வு நடைமுறைகள் விளங்குகின்றன. இது வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதோடு, நீதித் துறையின் வளங்கள் மற்றும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. அந்த வகையில், வழக்கு விசாரணை நடைமுறையில் மத்தியஸ்தத்தை ஓா் அங்கமாக இடம்பெறச் செய்வதற்கான தீவிர முயற்சிகளை நீதிமன்றங்கள் மேற்கொள்ள வேண்டும்.

அதோடு, மனுதாரா் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பே அவா்களின் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காணபதற்கான முயற்சிகளை வழக்குரைஞா்கள் மேற்கொள்ள வேண்டும். மனுதாரா் மக்கள் குறைதீா் மன்றங்களை அணுகுவதற்கான ஆலோசனைகளையும் வழக்குரைஞா்கள் வழங்க வேண்டும்.

மேலும், தரவுகள் பாதுகாப்பு, எண்ம நாணயங்கள், செயற்கை நுண்ணறிவு என வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நீதித் துறையிலும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், சட்டத்தை நடைமுறைப்படுத்துபவா்கள் என நீதித் துறையில் இடம்பெற்றிருப்பவா்கள் அனைவரும் நீதி நடைமுறையை எளிமையாக்கும் புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் புரிந்துகொள்வது அவசியம் என்று தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டாா்.

மாநாடு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு மத்தியஸ்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தேவையான திருத்தங்களுடன் மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்’ என்றாா்.

 



Read in source website

மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக சனிக்கிழமை பரிசோதிக்கப்பட்டது.

இந்திய ராணுவமும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (டிஆா்டிஓ) அமைப்பும் இணைந்து, ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் தளத்தில் இந்த ராக்கெட் அமைப்பை பரிசோதித்தன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மேம்படுத்தப்பட்ட பினாகா எம்கே-1 ராக்கெட் அமைப்பு(இபிஆா்எஸ்), பினாகா தடுப்பு ஆயுதம் (ஏடிஎம்) ஆகியவை வெற்றிகரமான விண்ணில் ஏவி சோதித்துப் பாா்க்கப்பட்டன.

கடந்த 14 நாட்களில் பல்வேறு தூர இலக்குகளுடன் மொத்தம் 24 இபிஆா்எஸ் ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அனைத்து ஏவுதலிலும் தேவையான துல்லிய தொலைவு இலக்கு எட்டப்பட்டது. இந்த சோதனையுடன் இபிஆா்எஸ் ராக்கெட்டுகளை தொழில் முறையில் தயாரிக்கத் தேவையான நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தயாரிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக உள்ளன.

புணேயில் உள்ள ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, புனேயைச் சோ்ந்த டிஆா்டிஓவின் உயா்நிலை ஆராய்ச்சி சோதனைக்கூடத்தின் ஒத்துழைப்புடன் பினாகா ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளாக இந்திய ராணுவ சேவையில் சோ்க்கப்பட்டுள்ளது. தற்போது நவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கும் தூர இலக்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலரும், டிஆா்டிஓ தலைவருமான டாக்டா் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்தாா்.



Read in source website

ரயில்வேயை தனியாா்மயமாக்கும் கொள்கை எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். மேலும், சமீபத்திய தொழில்நுட்பத்தை ஏற்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

பாரதிய ரயில்வே மஸ்தூா் சங்கம் (பிஆா்எம்ஸ்) சாா்பில், 20-ஆவது அகில இந்திய மாநாடு சென்னை பெரம்பூா் ரயில் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியிலிருந்து காணொலி மூலமாக தொடக்கிவைத்து பேசியதாவது:

ரயில்வேயை தனியாா்மயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ரயில்வேயே தனியாா் மயமாக்கும் கொள்கை எதுவும் இல்லை. அப்படிப்பட்டதிட்டங்கள் எதுவும் இல்லை. ரயில்வேக்கு சிறந்ததை செய்து அதை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே முதன்மையானது.

ரயில்வேயை தனியாா் மயமாக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியுள்ளாா்.

ரயில்வேயில் தொழில்நுட்பம் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அந்த தொழில்நுட்பம் உள்நாட்டில் இருக்க வேண்டும். அதாவது, ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து வழங்கிய ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் போன்ற பங்களிப்புகள் இருக்க வேண்டும். ‘மேக் இன்’ இந்தியா திட்டத்தின் கீழ், பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப்-இல் வந்தே பாரத் விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது.

தற்போது, ரயில்வேயில் 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1.40 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியிடங்களை நிரப்புவது தொடா்பான செயல்முறையை 15 நாள்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்கிறேன். இந்த செயல்முறை எங்கும் தேங்காமல் இருப்பதை உறுதி செய்கிறேன் என்றாா் அவா்.

மாநாட்டில், பி.எம்.எஸ். அகில இந்திய தலைவா் ஹிரன்மய் பாண்டியா, பாரதிய ரயில்வே மஸ்தூா்சங்க தலைவா் அரவிந்த் குமாா் சிங், பொதுச்செயலாளா் மங்கேஷ் தேஷ் பாண்டே உள்பட பலா் பங்கேற்றனா்.



Read in source website

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்தித்துள்ளார். உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ஜி7 நாடுகளின் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறை.

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உக்ரைன் பயணம் தொடர்பான தகவல்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பாகப் பிரிட்டன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "உக்ரைன் மக்களுடன் நாங்கள் என்றும் இருப்போம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கப் பிரதமர் உக்ரைனுக்குச் சென்றுள்ளார்" என்றார்.

உக்ரைன் நாட்டில் இப்போது இருக்கும் நிலைமை குறித்து இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர், கீவ் வீதிகள் வழியாக இருவரும் நடந்து சென்றனர். அங்கு இருந்து மக்களுடன் போரிஸ் ஜான்சன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில், "உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியின் உறுதியான தலைமை மற்றும் உக்ரேனிய மக்களின் வீரம் மற்றும் தைரியத்திற்குத் தலை வணங்குகிறேன். ரஷியப் படைகள் உக்ரைன் வீரத்துடன் எதிர்கொள்கிறது. 

பிரிட்டன் அரசு உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்பதை இன்று தெளிவுபடுத்தினேன். பல காலமாகவே எங்கள் நிலைப்பாடு இதுவாகவே இருந்து வந்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் தொடரும்.

இந்த சோகத்தை முடிவுக்குக் கொண்டு வர உலகளாவிய கூட்டணியைக் கூட்ட முயல்கிறோம். மேலும் உக்ரைன் ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இருக்க உறுதி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

உக்ரைன் நாட்டிற்கு 770 யூரோ மில்லியன் பவுண்டுகள் உதவி செய்யப்படும் என அறிவித்தார். உக்ரைன் மக்கள் சிங்கத்தின் தைரியத்தை வெளிப்படுத்தினர். அதிபர் ஸெலென்ஸ்கி சிங்கத்தின் கர்ஜனை எப்படி இருக்கும் என்பதைக் காட்டினார்" என்றார்.



Read in source website

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது சனிக்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீது நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. இந்தத் தீா்மானம் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்ற கீழவை கூடியபோது அவையை வழிநடத்திய அவையின் துணைத் தலைவா் காசிம் சுரி, நம்பிக்கையில்லா தீா்மானம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி அதை நிராகரிப்பதாக அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, பிரதமரின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபா் ஆரிஃப் ஆல்வி அறிவித்தாா்.

இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் தலைமையிலான 5 போ் கொண்ட அமா்வு, நம்பிக்கையில்லா தீா்மானத்தை அவையின் துணைத் தலைவா் நிராகரித்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது எனவும், பிரதமரின் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தை அதிபா் கலைத்தது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனவும் தீா்ப்பளித்தது.

மேலும், நாடாளுமன்ற கீழவையை சனிக்கிழமை கூட்டி நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை காலை கூடியது. அப்போது, அவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவையை அவைத் தலைவா் நடத்துவாா் என்று நம்புகிறேன்’ என்றாா். அவா் பேசும்போது ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, நாடாளுமன்ற அவைத் தலைவா் ஆசாத் கைஸா் அவை நடவடிக்கைகளை பிற்பகல் பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தாா். அவை ஒத்திவைப்புக்குப் பிறகு எதிா்க்கட்சி உறுப்பினா்களும், ஆளும் கட்சி உறுப்பினா்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால், அவை மீண்டும் கூடுவது தொடா்ந்து தாமதமானது.

இந்த நிலையில், இஃப்தாா் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை நாடாளுமன்ற தலைவா் இரவு 7.30 மணி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

நோன்பு திறப்புக்குப் பிறகு அவை மீண்டும் கூடிய நிலையில், உடனடியாக இரவு 9.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இரவுத் தொழுகைக்கு பிறகு அவை மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம்: இதற்கிடையே, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. அதில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டாா் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

தீா்மானம் வெற்றி: இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிா்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினாா்.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தாா். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, புதிய பிரதமராக எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப் நியமிக்கப்படுவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



Read in source website

சென்னை : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இன்று தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.மேலும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.225 விலையாக நிர்ணயம் செய்து இருந்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் பூஸ்டர் டோஸ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. இது குறித்து தனியார் மருத்துவமனையைகள் தரப்பில், "தமிழகத்தில் உள்ள 76 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு 2 டோஸ் செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகுதான் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலர் இன்னும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தத் தகுதி பெறாமல் உள்ளனர். தகுதி பெற்றுள்ள ஒரு சிலரும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதில்லை. எனவே இன்று குறைவான தனியார் மருத்துவமனைகளில்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

விலை குறைப்பு: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 ஆக இருந்தது. மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இதை ரூ.225-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.

இதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி விலையையும் ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ராவும் தெரிவித்துள்ளார்.



Read in source website

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த சிறிய ரக கப்பலை, இந்தியகடலோர காவல் படையினர் பிடித்து, கப்பலில் இருந்த 11 பேரை சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய கடல் எல்லை பகுதியில் அந்தமானை ஒட்டியுள்ள இந்திரா பாயின்ட் என்ற கடல் பகுதியில் வெளிநாட்டு கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து இருப்பதை இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனே, அந்த சிறிய ரக கப்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இக் கப்பல் ஈரான் நாட்டைநாட்டைச் சேர்ந்தது என தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர், விசாரணை நடத்தினர். மொத்தம் கப்பலுக்குள் 11 பேர் இருந்தனர். அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. உடனே அவர்களை கப்பலுடன் சேர்த்து சென்னை துறைமுகத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

இதையொட்டி துறைமுகத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநில உளவுத் துறை, மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் துறைமுகத்துக்கு நேரில்வந்து 11 ஈரானியர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் வந்த கப்பலையும் தீவிரமாக சோதனை செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்காக வந்தார்களா என்றசந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

இவர்கள் மீனவர்களா, தீவிரவாதிகளா, போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.



Read in source website

இந்தியாவின் முதல் கடல் காற்றாலை நிலையம் தனுஷ்கோடியில் ரூ.350 கோடி செலவில் அமைய உள்ளதாக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் கே.பலராமன் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கதிர்வீச்சு அபாயம் காரணமாக அணு மின் நிலையங்களின் உற்பத்தியை குறைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

நிலப்பரப்பை விட கடல் மட்டத்துக்கு மேலே காற்று வேகமாக வீசும். எனவே, கடலில் காற்றாலை நிறுவினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். டென்மார்க் கடல் பகுதியில் 1991-ல் முதன் முதலில் காற்றாலை பண்ணை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே உள்ளிட்ட நாடுகளும் கடலில் காற்றாலைகளை அமைத்துள்ளன.

இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு 2015-ல் அறிவிப்பு வெளியிட்டது.

மத்திய எரிசக்தித் துறை சார்பில் நாட்டின் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காற்று வீச்சு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.

இதையடுத்து ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் அதி நவீன கருவி பொருத்தப்பட்ட உயர் கோபுரம் அமைக்கப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.

இது குறித்து தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் கே.பலராமன் கண்ணன் கூறியதாவது: தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (என்ஐடபிள்யூஇ) சார்பில் தனுஷ்கோடி கடலில் ரூ.350 கோடி செலவில் காற்றாலை நிலையத்தை அமைக்க உள்ளோம். இதன் மூலம் 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். விரைவில் காற்றாலைக்கான இயந்திரங்களை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது என்று கூறினார்.



Read in source website

“ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்தி, விண்ணுக்கு மனிதனைஅனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது” என, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய சிறப்புபேராசிரியருமான சிவன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ராக்கெட்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பத் தேவையான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இச்சோதனைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து விடும்.

விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கு ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தரைத்தள சோதனை முதல்கட்டமாக நடத்தப்பட்டு, பின்னர் விண்ணில் ஏவும் சோதனை நடக்க உள்ளது. முதல் 2 கட்டமாக ராக்கெட்டில் ரோபோக்கள் அனுப்பப்படும். அது வெற்றிபெற்ற பின்னர் 3-வதாக மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2,300 ஏக்கர் நிலம் தேவை. இதில், 50 சதவீத நிலங்களை தமிழக அரசு ஒப்படைத்துஉள்ளது. மீதமுள்ள நிலங்களை இன்னும் 3 மாதங்களுக்குள் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.

நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டவுடன் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப் பணி தொடங்கும். இவ்வாறு சிவன் கூறினார்.



Read in source website

சென்னை: ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அந்த மீட்டரை ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என்றும், தங்களது இஷ்டம்போல கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் பொருத்தி, அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டுமென கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘கடந்த 2013-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மீட்டருடன் சேர்த்து பிரின்ட்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அது பொருத்தப்படவில்லை. ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரரான வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, ‘‘ஆட்டோக்களில் உள்ள மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. ஆட்டோ டிரைவர்கள் மீட்டர்களை இயக்குவதில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. எனவே தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

சோதனை செய்ய வேண்டும்

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டரை கண்டிப்பாகப் பொருத்தி அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டும். மீட்டர்களை முறையாக இயக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போலீஸாரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் பரஸ்பரம் பலன் அடையும் வகையில் ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்காக நீண்ட நெடிய நடவடிக்கையை எடுக்காமல் பெட்ரோல், டீசல் விலைமாற்றத்துக்கேற்ப ஆட்டோ கட்டணமும் தானாக மாறும் வகையி்ல் மீட்டர்களில் புதிய மென்பொருளை பயன்படுத்தலாம்’’ என அரசுக்கு யோசனை தெரிவித்து வழக்கை முடித்துவைத்துள்ளனர்.



Read in source website

தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் கல்லூரி மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.

ராஜஸ்தான் மாநிலம், குஷால்பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ம்தேதி முதல் 6 ம் தேதி வரைதேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்கள் உட்பட 51 பல்கலைக்கழகங்கள் பங்கு பெற்றன.

திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் பயிலும் ஹேமச்சந்திரன் மல்லர் கம்பம் தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

நேற்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கிய மாணவர் ஹேமச்சந்திரனுக்கு தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம், விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் சார்பாக மேள தாளங்களுடன் மாலை மாற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

தங்கப் பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.



Read in source website

‘மக்களுடன் மேயர் திட்டம்’ மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனக்குடன் தீர்வு காணப்படும் என திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் நேற்று தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, ‘மக்களுடன் மேயர்’ திட்டம் வரும் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிகழ்வின்போது, மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் இருக்கும் என மேயர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக மேயர் ந.தினேஷ்குமார், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: மாநகராட்சியில் தெருவிளக்குகள் பிரச்சினை தொடங்கி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டங்களையும் விரைவில் நடத்த உள்ளோம்.

குப்பையை எடையிட்டு, அதன் மூலம் அவற்றின் வருவாயை கணக்கிட தொடங்கி உள்ளோம். வரும் வாரத்தில் மேயர், துணை மேயர் பங்கேற்கும் பயிற்சிக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதன்பிறகு, திருப்பூரில் ‘மக்களுடன் மேயர்’ திட்டத்தை தொடங்க உள்ளோம். வாரந்தோறும் ஒரு வார்டில் 3 மணி நேரம் செலவிட்டு, தொடர்புடைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

அப்போது, மாநகராட்சி அதிகாரிகளும் உடனிருப்பார்கள். இதன் மூலம் மக்களுடன் தொடர்ந்து நேரடியாக பேசவும், அவர்களின் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, களத்தில் பணியாற்றவும் பெரும் வாய்ப்பாக இந்த திட்டம் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Read in source website

புதுடெல்லி: முதல் 2 தவணைகளில் போடப்பட்ட கரோனா தடுப்பூசி மருந்தையே பூஸ்டர் தடுப்பூசிக்கும் பயன்படுத்த வேண்டும் என அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதற்கான நடைமுறைகள் குறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுடன், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலிமூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னெச்சரிக்கையாக போடப்படும் கரோனா பூஸ்டர் தடுப்பூசிக்கு, ஒருவருக்கு முதல் 2 தவணைகளில் போடப்பட்ட அதே தடுப்பூசி மருந்தையே பயன்படுத்த வேண்டும். இதற்காக தனியார் மருத்துவமனை மையங்கள் கரோனா தடுப்பூசி மருந்தின் விலையோடு கூடுதலாக ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கலாம்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகியிருந்தால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடைவர்கள். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள், கோவின் இணையளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ளதால், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யத் தேவையில்லை.

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம்.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ே்டார், பூஸ்டர் தடுப்பூசியை, அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவோ அல்லது தனியார் மையங்களில் பணம் செலுத்தி்யோ போட்டுக் கொள்ளலாம்.

12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசி திட்டத்தையும் மாநிலங்கள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விலை குறைப்பு

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 ஆக இருந்தது. மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இதை ரூ.225-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.

இதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி விலையையும் ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ராவும் தெரிவித்துள்ளார்.



Read in source website

ரயில்வே, பெட்ரோலியம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, எரிசக்தி அமைச்சகங்கள் ஆகியவை அமல்படுத்தி வரும் திட்டங்களும் எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஆகி வருகிறது.

அசல் விலையை குறைத்து மதிப்பிடுதல், நிலம் கையகப்படுத்துதல் செலவுகள், ஆள் பற்றாக்குறை, பணவீக்கம் போன்ற காரணங்களால் தமிழகத்தில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரயில்வே, பெட்ரோலியம், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, எரிசக்தி அமைச்சகங்கள் ஆகியவை அமல்படுத்தி வரும் திட்டங்களும் எதிர்பார்த்ததை விட அதிக செலவு ஆகி வருகிறது.

உதாரணத்துக்கு, 16 உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அசல் செலவு ₹40,067 கோடி ஒதுக்கப்பட்டது.

தற்போது அவற்றை முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் செலவு ₹61,578 கோடி. இதன் மொத்தச் செலவு ₹21,511 கோடியைக் காட்டுகிறது. இது அசல் செலவில் 54% ஆகும். ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி, இந்தத் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக ₹42,165 கோடி செலவாகியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. எம் கே விஷ்ணு பிரசாத்துக்கு அளித்த பதிலில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கூறிய முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

திட்டங்கள் சரியான நேரத்தில் முடிவதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நிலம் கையகப்படுத்துவதில் தாமதம், சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதி, நிதி தடைகள், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற சிக்கல்கள், உள்ளாட்சி அமைப்பு அனுமதி, பயன்பாட்டு மாற்றம், ஒப்பந்த சிக்கல்கள் மற்றும் கோவிட் காரணமாக தாமதங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

உதாரணமாக, திண்டிவனம் மற்றும் நகரி இடையே புதிய ரயில் பாதை செப்டம்பர் 2006 இல் ரூ.582.8 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டது.

2010ல் நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கினாலும், ரயில்வே நிர்வாகம் இன்னும் முடிக்கவில்லை.
2025 ஆம் ஆண்டு தொடங்கும்போது திட்டச் செலவு ரூ.3,444 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



Read in source website

இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைப் போல முடிவுக்கு வரவில்லை. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 343 பேர் கொண்ட அவையில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். இது டெல்லியின் கண்ணோட்டத்தில் எப்படி பார்க்கப்படும்? பேச்சுவார்த்தைக்கான புதிய பாதைகள் திறக்கப்படுமா?

49 ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 10, 1973 அன்று, பாகிஸ்தான் நாடாளுமன்றம் அதன் அரசியலமைப்பை அங்கீகரித்தது. அதே நாளில் 2022இல் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்து ஒரு பிரதமர் வெளியேறுவதை நாடு முதன்முதலாக சந்தித்துள்ளது. இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை அவரது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையைப் போல முடிவுக்கு வரவில்லை. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில், 343 பேர் கொண்ட அவையில் 174 பேர் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர். இந்த அதிகார மாற்றம் இந்தியாவுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். டெல்லியின் கண்ணோட்டத்தில், ஏழு முக்கியக் கருத்துக்கள் இங்கே காணலாம்

பாகிஸ்தான் ஜனநாயகம்

பாகிஸ்தானின் ஜனநாயகம் குறைபாடுள்ள ஒன்றாகும். இன்னும் வழிகாட்டப்பட்ட ஜனநாயகமாக திகழ்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் என குழப்பமான ஒரு வாரத்தை எதிர்கொண்ட பிறகு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் தற்போதைய அரசை வெளியேற செய்ய முடிந்தது.

இம்ரான் கானின் வீழ்ச்சி

இம்ரான் கானின் வெளியேற்றம் வியப்பூட்டியது. ஏனெனில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அல்லது பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய பிரதான கட்சிகளை சேர்ந்தவராக இல்லாததால், அரசியல் கண்ணோட்டத்தில் அறியப்படாத நபராக வளம் வந்தார். புதிய வரவாக கருதப்பட்ட இம்ரான் கான் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார். முன்னதாக, எந்த அரசு பதவியிலும் பொறுப்பு வகிக்காத காரணத்தால் அவரை விமரிசிப்பதற்கு எதிர்க்கட்சியினுருக்கு வாய்ப்பு கிட்டாமல் இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஒவ்வொரு நாளும் அவரது பிரபலம் குறையதொடங்கி, விரைவில் ஒரு மாயமாக மாறியது.

முக்கிய பங்கு வகிக்கும் ராணுவம்

பாகிஸ்தானில் பலர் சொல்வது போல், இம்ரான் கானை பிரதமராக ராணுவம் தான் தேர்ந்தெடுத்தது. ஆனால், காலப்போக்கில் உறவுகளிடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. ராணுவத்தின் ஆதரவின்றி எந்த அரசியல் தலைவராலும் நீடிக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தும் வகையில், ராணுவம் அவரை வெளியேற்ற முடிவு செய்தது.

ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான நெருக்கடி பாகிஸ்தானில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனிர்ல் படையெடுப்பின் போது இம்ரான் கான் ரஷ்யாவுக்குச் சென்றதன் மூலம், அவரது இராஜதந்திர நாகரிகம் குறித்து உலக நாடுகளின் கோபத்தை சம்பாதித்தார். இது அமெரிக்காவுடனும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், அவரிடம் புதினை சந்திக்க ரஷ்யா செல்ல வேண்டாம் என அமெரிக்கா தரப்பில் அறிவுறித்தியிருந்ததாக கூறப்படுகிறது. கானின் ரஷ்ய பயணம், இஸ்லாமாபாத்திற்கு மிகப்பெரிய விலையை அளித்தது.

பாகிஸ்தான் அரசில் இந்தியாவின் தாக்கம்

பாகிஸ்தானின் அரசியலில் இந்தியா எப்போதும் முக்கிய காரணியாக திகழ்கிறது. இஸ்லாமாபாத்தின் அரசியல் உரையாடலுக்கு உள்ளேயும் வெளியேயும் டெல்லியின் இருப்பு இருந்துவருகையில், இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டினார். ஏனெனில் அவர் பாகிஸ்தானின் சர்வதேச மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை திறமையற்ற முறையில் கையாண்டதற்காக பாகிஸ்தானின் ராணுவ ஸ்தாபனத்தை டார்கெட் செய்திருந்தார். இது ராவல்பிண்டியை முன்னெப்போதையும் விட கோபமடைய செய்ததாக கூறப்படுகிறது.

ஷெரீஃப்களின் வருகை

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஷெரீஃப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தற்போது இம்ரான் கானின் வெளியேற்றம், நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் இன்னும் களத்தில் இருப்பதை நினைவூட்டியுள்ளது. ஏனென்னறால், அவர் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு விதை விதித்து, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவைப் பெற்றுள்ளார். லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு ஆற்றிய உரையின் போது அவரது சகோதரரையும் நினைவு கூர்ந்தார். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஷெரீப் எப்போதும் மிகவும் சாதகமாக இருக்கிறார். ஆனால் இம்ரான் கானின் அறிக்கைகள் அத்தகைய முறையில் இருக்காது.

இந்தியாவுடன் பாதை திறக்க வாய்ப்பு

கடந்த இரண்டரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணியையும் தனிப்பட்ட முறையில் தாக்கியதால், இம்ரான் கான் மற்றும் இந்தியா இடையே உறவு ஏற்படுவதில் சிக்கல் இருந்து வந்தது. தற்போது அவருடைய வெளியேற்றம், இந்தியா மற்றும் இஸ்லாமாபாத் இடையே இராஜதந்திர உரையாடல்களை தொடங்குவதற்கான பாதையை திறக்க வாய்ப்பிருக்கிறது.



Read in source website

இஸ்லாமிய புத்தாண்டு

உலகிலுள்ள சமயங்கள் பலவும் தத்தமது சமயத்துக்குரிய புத்தாண்டு தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடத் தவறுவதில்லை. அதேபோன்று இஸ்லாமியப் புத்தாண்டு மாதமாக முஹர்ரம் மாதம் உலக முஸ்லிம்களுக்கு அமைந்துள்ளது. திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு மாதங்களுள் முஹர்ரமும் ஒன்று.

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் இறுதி மாதமாக துல்ஹாஜ் மாதம் அமைந்துள்ளது. ஆண்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் உள்ளது.

ஹிஜ்ரி ஆண்டு பிறந்த வரலாறு

இஸ்லாமிய ஆண்டு ‘ஹிஜ்ரி’ என அழைக்கப்படுகிறது. ‘ஹிஜ்ரத்’ எனும் சொல்வழிப் பிறந்தது ‘ஹிஜ்ரி’.

‘ஹிஜ்ரத்’ என்ற சொல்லுக்கு இடம் பெயர்ந்து செல்லுதல் என்பது பொருளாகும். முஹம்மது நபி (சல்) மக்காக் குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கத் தன் தோழரோடு மதினா நகர் நோக்கிப் பெயர்ந்து சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ என்பதாகும்.

நபிகள் நாயகம் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதற்கு முன்பு மூன்று வகையான ஆண்டுகளை அரபிகள் கடைப்பிடித்து வந்தனர் என்பதை முன்பே பார்த்தோம். அவை ‘அனுமதி ஆண்டு’. ‘நில அசைவு ஆண்டு ‘, ‘யானை ஆண்டு’ என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தன. இவை ஒவ்வொன்றும் அரபிகளின் சமுதாய வாழ்வில்-வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாகக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தன. சான்றாக, அப்ரஹா, என்பவன் மக்காவிலுள்ள புனிதத் தலமான கஃபா வை இடித்துத் தள்ள பெரும் யானைப் படையுடன் வந்தான். படை கஃபாவை நோக்கி விரைந்து வரும்போது இறையருளால் அபாபீல் எனும் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் சிறு சிறு கற்களைப் பொழிந்து அவனையும் அவன் படைகளையும் தாக்க அனைவரும் மடிந்தனர். கஃபா காப்பாற்றப்பட்டது. இச்சம்பவத்தைக் குறிக்கும் வகையிலேயே ‘யானை ஆண்டு’ அமைந்தது. இம் மூன்று வகை ஆண்டுகள் புழக்கத்தில் நிலவி வந்த போதிலும் எதுவும் அரபிகளின் வாழ்வில் நிலைபெறாமலே இருந்து வந்தன. இதனால் ஆண்டுக் குழப்பமும் இருந்தே வந்தது.

இஸ்லாம் நிலை பெற்ற பிறகு தங்களுக்கென புத்தாண்டு ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டது.

எனவே, ஒரு ஆண்டு முறையை உருவாக்கி உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து தன் சகாக் களுடன் ஆலோசனை செய்தார் இரண்டாவது கலீஃபா உமர் (ரலி) அவர்கள். சிலர் பாரசீக ஆண்டு முறையைப் பின்பற்றலாம் என்றனர். இன்னும் சிலர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு முறை வகுக்கலாம் என்றனர். அண்ணல் நபியின் மருகர் அலீ (ரலி) அவர்கள் பெருமானார் மக்காவிலிருந்து மதீனா புறப்பட்டுச் சென்ற நாளை அடித்தளமாகக் கொண்டு ஆண்டு முறை உருவாக்கலாம் என்றார். இந்தக் கருத்து எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்தது. அண்ணலார் மக்காவிலிருந்து மதீனா நோக்கி ஹிஜ்ரத் செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரி ஆண்டு உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

முஹர்ரம் முதன்மை பெற்றது

அக்காலத்தில் வழக்கிலிருந்த மாதங்களில் முஹர்ரம் ஒன்று.

ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை துல்ஹஜ் மாதத்தில் இனிது நிறைவேற்றிய அரபிகள், அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தில் வணிகத் தொழிலில் முழு மூச்சுடன் ஈடுபடுவர். புதுக்கணக்கும் தொடங்கும். எனவே, ரபியுல் அவ்வல் மாதத்திற்குப் பதிலாக துல்ஹஜ் மாதத்தை அடுத்துவரும் முஹர்ரம் மாதத்தை ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாக, முதல் நாளாக அமைத்து உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் உழைப்பின் உன்னதமும் உணர்த்தப்பட்டது.

சிறப்புமிகு முஹர்ரம் பத்தாம் நாள்

அமைதி வாழ்வுக்கு வழிகாட்டும் முஹர்ரம் இறைவன் விதித்துள்ள இறுதித் தீர்ப்பு நாளை நினைவுருத்தி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இறையச்ச மாதமாகவும் அமைந்துள்ளது. மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு நாள் முஹர்ரம் பத்தாம் நாளிலேயே நிகழ்வுறும் என்பது மறைதரும் இறைவாக்காகும். இவ்வகையில் மறுமை வாழ்வை நினைவூட்டி நேர் வழிப்படுத்தும் வழிகாட்டி நாளாகவும் முஹர்ரம் அமைந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிகு மாதம்

முஹர்ரம் பத்தாம் நாள் இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மட்டுமல்லாது வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையிலும் சிறப்புமிகு நாளாகக் கருதப்படுகிறது.

முன்பொரு சமயம் எகிப்து நாட்டை ஆண்டுவந்த ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னன் தன்னை கடவுள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டான். எல்லோரும் தன்னையே வணங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தினான். மறுத்தவர்களை கொடுமைப்படுத்தினான். ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தான்.

‘இறைவனால் படைக்கப்பட்ட எதுவுமே வணங்குவதற்குரியதல்ல; மூலப் படைப்பாளனாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்’ என மக்களிடையே போதனை செய்து வந்த ‘மோசஸ்’ எனும் மூசா நபி கொடுங்கோலனின் கொடுமைகளிலிருந்து விடுபட எகிப்தைவிட்டு வெளியேறியபோது செங்கடல் பிளந்து வழிவிட்டது. அப்பிளவினூடே ஃபிர்அவ்ன் விரட்டிச் சென்றான். மூசா நபியும் அவரைப் பின்பற்றியோரும் கரை சேரவே பிளந்து நின்ற செங்கடல் இணைந்தது. கடலிடையே அகப்பட்ட ஃபிர் அவ்னும் அவன் படையினரும் கடலுள் மூழ்கி அழிந்தனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றது முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

இந்நாளை மூசா நபி வழிவந்த யூதர்களும் முஸ்லிம்களும் ஆஷூரா தினமாகக் கடைப்பிடித்து நோன்பு நோற்று வருகிறார்கள். ரமளான் நோன்புக்கு அடுத்தபடி யாகச் சிறப்புமிகு நோன்பாக ‘ஆஷூரா’ நோன்பு கருதப்படுகிறது. பத்தாம் நாள் எனப் பொருள்படும் வகையில் ‘யவ்முல் ஆஷூரா’ என அழைக்கப்படினும் பத்தாம் நாளன்றே இறைவனின் திருவுளப்படி பத்து நிகழ்வுகள் நடைபெற்றதால் ‘ஆஷூரா’ நாள் என்றே அழைக்கப்படலாயிற்று என்பர்.

‘நோவா’ என அழைக்கப்படும் நூஹ் நபி அவர்கள் ஊழிக்கால மழையிலிருந்து உயிரினங்களைக் காக்க அவற்றைக் கப்பலில் ஏற்றி, பன்னெடுங்காலம் கடலில் சுற்றிச் சுழன்று இறுதியில் கரையிறங்கிய நாள் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

டேவிட் எனப்படும் தாவூது நபிக்கு இறை மன்னிப்புக் கிடைத்ததும், ‘ஒரே இறைவன்’ என்ற ஒப்பற்ற இறைத் தத்துவத்தை உலகுக்குப் போதித்த ‘ஏப்ரஹாம்’ எனும் இபுராஹீம் நபிக்கு ‘கலீல்’ (இறைத்தோழர்) எனும் உன்னதப் பட்டத்தை இறைவன் வழங்கியதும் ‘ஜீசஸ்’ எனும் ஈசா நபி அவர்களை இறைவன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். 

இவையனைத்தும் நபிகள் நாயகத்திற்கு முன்னதாக நடைபெற்ற இறையருள் நிகழ்வுகளாகும். 

பெருமானாரின் பெருவாழ்வுக்குப் பின்னர், அவர்தம் பேரர் இமாம் ஹூஸைன் (ரலி) அவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் தோழர்களும் கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான் கொல்லப்பட்டார்கள். இஸ்லாமிய சமுதாய நலனைக் காக்கவும் இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநிறுத்தவும் இத்தியாகத்தை இமாம் ஹூஸைன் (ரலி) செய்தார்கள். ஆனால், இத்தியாக நிகழ்ச்சியின் காரணமாக முஹர்ரம் பத்தாம் நாளின் சிறப்பு கூடவோ குறையவோ இல்லை. காரணம், இறுதி இறைத்தூதர் அண்ணல் நபிகள் நாயகத்திற்குப் பின்னர் நிகழ்ந்த எந்த நிகழ்ச்சியும் புனிதமானவை எனப் போற்றப்படவோ முக்கியத்துவமுடையவையாகக் கருதப்படவோ இஸ்லாத்தில் இடமில்லை. ஆயினும் உண்மையையும் நீதியையும் நிலைநாட்ட இறைவழியில் ஒழுகும்போது எத்தகைய பேரிடர் வரினும் உயிரையே இழக்க நேரினும் சிறிதும் பின் வாங்காது தியாகம் புரிய வேண்டும் என்பதை நினைவூட்டும் நிகழ்வாக கர்பலா பெருவெளி நிகழ்ச்சி அமைந்து ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உத்வேகமூட்டி வருகிறது. 

முஹர்ரம் நாளன்று நோன்பு நோற்று இரவு முழுவதும் கண்விழித்து இறை வணக்கம் புரிவோரின் பாவம் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்படுகிறது என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

‘ஆஷூரா அன்று நோன்பு நோற்பதோடு அதற்கு முன்பும் பின்பும் உள்ள இரு நாட்களையும் சேர்த்து நோன்பிருப்பது ஓராண்டு நோன்புக்கு இணையாகும்’ எனவும் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.

முஹர்ரம் மாத முதல் நாள் நோன்பு பத்தாம் நாளின்போது கடைப்பிடிக்கப்படும் ஆஷூரா நோன்புகளை நோற்பதோடு ஏழை எளியவர்க்கு இயன்ற உதவிகள் அனைத்தும் செய்ய வேண்டும். தரும சிந்தனையாளர்களாக மாற வேண்டும். அநாதைகளை அரவணைத்து வாழ்வு தர வழி செய்ய வேண்டும். அவர்களின் துன்பம் நீக்கி இன்புறு வாழ்வுக்குத் துணைபோதல் வேண்டும். அமைதி மாதமாக அமைந்திருப்பதால் வேற்றுமை உணர்வுகளை முற்றாகக் களைந்திடல் வேண்டும். ஒருங்கிணைவான உணர்வுகளை ஊட்டும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். மார்க்க ஞானம் மிக்க பெரியார்களைத் தேடிச் சென்று காண வேண்டும். தன் குடும்பத்துக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களின் குடும்பத்துக்காகவும் தாராளமாகச் செலவு செய்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இந்நாட்களில் ‘நஃபில்’ எனும் அதிகப்படியான தொழுகைகளை பெருமளவில் மேற்கொள்வது இறையருளை மழையெனப் பொழியச் செய்ய வழி வகுப்பதாயமையும் என்பது ஆன்றோர் வாக்கு. 

இவ்வாறு அக வாழ்விலும் புற வாழ்விலும் இறையுணர்வும் சமுதாய நுண்ணோக்கும் பொங்கிப் பொழிய வழிகாட்டும் மாதமாக முஹர்ரம் அமைந்துள்ளது. 

நாளை: மனித நேயத்திற்கோர் மாநபி



Read in source website