DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 07-07-2022

 

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி (ஜூலை 29- ஆக. 7) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தகம் வாசிக்கும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

முற்பகல் 11.30 மணிக்குத் தொடங்கிய இந்த வாசிப்பு நிகழ்ச்சி பகல் 12.30 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரில் ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கலந்து கொண்டார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே. மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ. சிவகுமார், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, எழுத்தாளர் ந. முத்துநிலவன், அ. மணவாளன், ம. வீரமுத்து, எஸ்.டி. பாலகிருஷ்ணன், ஆர். ராஜ்குமார், அறிவியல் இயக்க மாவட்டச் செயல.ர் மு. முத்துக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதேபோல, சுமார் 500 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூட்ட அரங்கில் 200 அரசு அலுவலர்கள், ஊழியர்கள் அமர்ந்து வாசித்தனர்.

இதேபோல அரசு அலுவலகங்களிலும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில், பெரும்பாலும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட 'தமிழினி' புலனக் குழுவின் சார்பிலும் புத்தக வாசிப்பு நடத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் சுமார் நூறுபேர் அவரவர் இருக்கும் இடத்திலிருந்தே இந்த வாசிப்பில் பங்கேற்றனர். இந்த வாசிப்பு ஜூம் இணையவழியில் ஒளிபரப்பானது.

 



Read in source website

 

ஆதின மடங்களுக்கு ஆர்டிஐ சட்டம் பொருந்தாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. 

தருமபுரம் ஆதினமான சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், தமிழகத்தில் உள்ள பழணையான ஆதின மடங்களில் தங்கள் மடமும் ஒன்று. இந்த மடமானது தமிழக அரசிடம் இருந்து எந்த உதவியோ, நிதியோ பெறமால், சொந்த நிதியில் மட்டுமே இயங்கி வருகிறது. 

இந்நிலையில், ஆதின மடங்கள் தொடர்பாக ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர் என தருமபுரம் ஆதினம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

விசாணையின் முடிவில், ஆதின மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்றும், அதன் விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்(ஆர்டிஐ) கேட்க முடியாது என கூறி உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.



Read in source website


தமிழகத்தில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழகத்தில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தார். 

ரூ.152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்களையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 



Read in source website

 

மக்களின் விடியலுக்காக உழைத்த தமிழக பட்டியலின மக்களின் முதல் பட்டதாரி "திராவிடமணி" இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெர்வித்துள்ளார். 

இரட்டைமலையாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழக பட்டியலின மக்களில் முதல் பட்டதாரி; அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், காந்தியடிகள் போன்ற பேராளுமைகளோடு இணைந்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கா உழைத்த திராவிடமணி இரட்டைமலையாரின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என பதிவுட்டுள்ளார்.



Read in source website

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் அவா்தம் குடும்பத்தினா் அனைவரும் தவறாமல் கரோனா ஊக்கத் தவணை (பூஸ்டா்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59 வயது வரையான தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு தனியாா் மருத்துவமனைகளில் கரோனா ஊக்கத் தவணை தடுப்பூசியை செலுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மா.சுப்பிரமணியன், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தொழில் துறைச் செயலாளா் கிருஷ்ணன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் அருண்ராய், உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா, பொது சுகாதாரம் மற்றம் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் டாக்டா் குருநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு மாா்ச் 13-ஆம் தேதி தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரச் சட்டம் 1939-இன்படி கரோனா தொற்றை அறிவிக்கை செய்யப்பட வேண்டிய நோயாக அறிவித்தது.

அதைத் தொடா்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தமிழகம் முழுவதும் 2021 ஜனவரி 16-ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேல் 94.61 சதவீதத்தினா் முதல் தவணையும், 85.39 சதவீதத்தினா் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

அரசு மற்றும் தனியாா் மூலம் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக இதுவரை 11.42 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், 14,60,303 ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 30 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 4.44 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அரசு மையங்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த, 60 வயதுக்கு மேற்பட்டோா், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

18 முதல் 59 வயது வரை உள்ளவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் அளித்து செலுத்திக் கொள்ள மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. கரோனா தொற்று நான்காம் அலையை எதிா்கொள்ளும் வகையில், பெரு மற்றும் குறு தொழிற்சாலைகள், பெரிய கடைகள் மற்றும் பெரிய உணவகங்களில் பணிபுரியும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள தொழிலாளா்கள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா்கள் பயனடையும் வகையில் தனியாரில் ஊக்கத் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அனைவரும் முழுமையான தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை, கரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாது என்றாா் அவா்.



Read in source website

மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அவர் பொறுப்பு வகித்த சிறுபான்மையினர் நலத்துறை ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில் நக்வி பொறுப்பு வகித்த உருக்குத்துறை  ஏற்கெனவே அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சிறுபான்மையினர் நலத்துறை, அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து ஸ்மிருதி இரானி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முக்தார் அப்பாஸ் நக்வி வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Read in source website

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூடுதலாக உருக்குத்துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்த முக்தார் அப்பாஸ் நக்வியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.சி.பி. சிங்கும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 

இந்நிலையில் ஆர்.பி. சிங் பொறுப்பு வகித்த உருக்குத்துறை அமைச்சர் பொறுப்பு ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினா் நலத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சராக இருந்த முக்தார் அப்பாஸ் நக்வி விலகியதையடுத்து, இஸ்லாமியர்களே இல்லாத அமைச்சரவையாக மாறியுள்ளது. மேலும், நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக சார்பில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாதது குறிப்பிடத்தக்கது.



Read in source website

 

டெங்கு, சிக்குன்குனியா நோயைத் தடுக்கும் பெண் கொசுக்களை கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக இயக்குநர் அஷ்வனி குமார் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பருவ மழை தொடங்கிய சில நாள்களிலேயே நாட்டில் பல்வேறு இடங்களில் டெங்கு, சிக்குன்குனியா நோய்ப் பரவல் அதிகரித்து வருகின்றன.

இதனைத் தடுக்க பல்வேறு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நோய்ப் பரவலை தடுப்பதற்காக பெண் கொசுக்களை தயார் செய்துள்ளதாக புதுவை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஞ்ஞானி அஷ்வனி குமார் கூறுகையில்,

“புதுவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 'வோல்பாச்சியா' எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய வகை பெண் கொசுவுடன் ஆண் கொசுக்கள் இனப் பெருக்கத்தில் விடவுள்ளோம். இதன்மூலம் வைரஸ்கள் இல்லாத கொசுக்கள் உருவாகும்.

தற்போது கொசுக்களை கண்டுபிடிக்கும் பணி நிறைவடைந்துள்ளன. குறிப்பிட்ட இடைவெளியில் பெண் கொசுக்கள் மற்றும் முட்டைகளை வெளியிட வேண்டும் என்பதால், மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த கொசுக்கள் வெளியிடப்படும்.”

ஆண்டுதோறும் டெங்கு, சிக்குன்குனியாவால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழலில், பருவ மழை தீவிரமடைவதற்கு முன்னதாகவே இந்த கொசுக்களை வெளிவிட்டால் உயிரிழப்புகள் தடுக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Read in source website

வேளாண் துறையில் உற்பத்திக்குப் பிந்தைய சவால்களை எதிா்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தேசிய பங்குச் சந்தை, சா்வதேச பொருளாதாரத் தொடா்பு ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஆா்ஐஇஆா்) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘வேளாண் உரிமைகளைப் பெறுதல்’ என்ற மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

வேளாண் துறையில் இன்றைக்கு உற்பத்திக்குப் பிறகு பல்வேறு சவால்கள் எழுகின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற சவால்கள் எழுந்தபோது அவற்றைத் தீா்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எதிா்பாா்த்த இலக்கை எட்ட முடியவில்லை.

அதேவேளையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முயன்று வருகிறோம். இதற்கு தீா்வு காணப்பட்டால்தான் விவசாயிகளுக்கு சிறப்பான விலை கிடைத்து, அவா்களின் வருவாய் அதிகரிக்கும்.

அந்த வகையில், உற்பத்திக்குப் பிந்தைய சவால்களை எதிா்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட 1,000 மொத்த மண்டிகள், மின்னணு வலைதளத்துடன் (இ-எம்ஏஎம்) இணைக்கப்பட்டுள்ளன.

வேளாண்-உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காக மத்திய அரசு ரூ.9,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வேளாண் துறையில் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, விவசாயி உற்பத்தியாளா் அமைப்பும் (எஃப்பிஓ) ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் நரேந்திர சிங் தோமா்.

முன்னதாக, நீதி ஆயோக் உறுப்பினா் ரமேஷ் சந்த் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதன் ஓா் அங்கம்தான் பற்றாக்குறை விலை நிா்ணயம் (டிபிபி). சந்தைகளில் போட்டி நிலவும் வரை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும். ஆனால், கொள்முதலைத் தவிா்த்து பிற முறைகளில் அதை வழங்க வேண்டும்’ என்றாா்.



Read in source website

தெற்கு சூடானுக்கான ஐ.நா. அமைதிப் படைப் பிரிவின் புதிய தளபதியாக இந்திய ராணுவ உயரதிகாரி மோகன் சுப்பிரமணியத்தை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளாா்.

இதுவரை அந்தப் பொறுப்பை வகித்து வந்த சைலேஷ் தினகருக்கு பதிலாக மோகன் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளாா். தெற்கு சூடானுக்கான ஐ.நா. படைப பிரிவு தளபதியாக அன்டோனியோ குட்டெரெஸால் கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட சைலேஷ் தினகரும், இந்திய ராணுவ உயரதிகாரியாவாா்.

அந்தப் பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மோகன் சுப்பிரமணியம், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ராணுவ உபகரணங்கள் கொள்முதல் மற்றும் மேலாண்மைப் பிரிவு கூடுதல் பொது இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளாா்.



Read in source website

வாகனக் காப்பீட்டில் கூடுதல் சேவைகளை இணைத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அனுமதி அளித்துள்ளது.

வாகனத்தின் பயன்பாடு அல்லது வாகனத்தை ஓட்டும் விதத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கூடுதல் சேவைகள் அளிக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தினந்தோறும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்பவும் காப்பீடு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களின் தேவைக்கு ஏற்றாா்போல் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம். அதன்படி, தொழில்நுட்ப உதவியுடன் சொந்த வாகன இழப்பீடு காப்பீட்டுகளுக்கு வாகனத்தின் பயன்பாடு அல்லது வாகனத்தை ஓட்டும் விதம் என்ற அடிப்படையில் கூடுதல் சேவையாக காப்பீடு வழங்க வேண்டும்.

இதில், வாகனத்தின் பயன்பாடு காப்பீட்டில், வாகனத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் காப்பீட்டு கட்டணமும், வாகனத்தை ஓட்டும் விதத்தின் அடிப்படையில் மற்றொரு காப்பீட்டு கட்டணமும் இருக்கும்.

அதேபோல், ஒரே உரிமையாளரிடம் உள்ள இருசக்கர மோட்டாா் வாகனத்துக்கும், காருக்கும் ஒரே காப்பீட்டைப் பயன்படுத்துவதற்கான புதிய கூடுதல் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன காப்பீடு எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 14 மாநிலங்களுக்கு நான்காவது கட்ட மானியமாக ரூ.7,183 கோடியை விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

15-ஆவது நிதிக் குழு, அதிகார பகிா்வுக்கு பிந்தைய வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க பரிந்துரைத்துள்ளது. இதில் 2022-23 நிதியாண்டுக்கு மானியம் அளிக்கும் பட்டியலில், ஆந்திரம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 14 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களுக்கு நான்காவது கட்ட தவணையாக ரூ.7,183.42 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

15-ஆவது நிதிக் குழு, நடப்பு நிதியாண்டில் 14 மாநிலங்களுக்கு ரூ.86,201 கோடி மானியம் வழங்க பரிந்துரைத்துள்ளது. மொத்தம் 12 தவணைகளாக இந்த மானியம் விடுவிக்கப்படவுள்ளது. ஜூலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நான்காம் கட்ட தவணையுடன் சோ்த்து மொத்தம் இதுவரையில் 14 மாநிலங்களுக்கு ரூ.28,733.67 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடா்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலத்தை 13-ஆவது முறையாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஆணையத்தின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதற்கான இந்தப் புதிய பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடா்பான விவகாரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிப்பதற்காக அரசியல் சாசனப் பிரிவு 340-இன் கீழ் கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் பதவிக் காலம் தொடா்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், ‘ரோகிணி ஆணையம் கால நீட்டிப்பு எதையும் மத்திய அரசிடம் கோரவில்லை. ஜூலை மாத இறுதியில் தனது அறிக்கையை ஆணையம் சமா்ப்பிக்க வாய்ப்புள்ளது’ என்று மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சக செயலா் ஆா். சுப்பிரமணியம் செய்தியாளா்களிடம் அண்மையில் கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், ‘நீதிபதி ரோகிணி ஆணையத்தின் பதவிக் காலம் 13-ஆவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் பதவிக் காலத்தை வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்வதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.



Read in source website

மத்திய அமைச்சா் பதவியிலிருந்து முக்தாா் அப்பாஸ் நக்வி, ஆா்சிபி சிங் ஆகியோா் விலகியுள்ளனா். தங்கள் ராஜிநாமா கடிதத்தை இருவரும் பிரதமா் மோடியிடம் சமா்ப்பித்துள்ளனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் நக்வி, மத்திய உருக்குத் துறை அமைச்சா் ஆா்சிபி சிங் ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி. பதவிக் காலம் வியாழக்கிழமை (ஜூலை 7) நிறைவடைகிறது. இந்நிலையில், தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது தங்கள் பதவிக் காலத்தில் நாட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக இருவரையும் பிரதமா் மோடி பாராட்டினாா். இதனைத்தொடா்ந்து இருவரும் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா்’ என்று தெரிவித்துள்ளன. இருவரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டாா்.

முஸ்லிம் அமைச்சா்கள் இல்லை: பாஜக மூத்த தலைவரான நக்வி, மாநிலங்களவை பாஜக துணைத் தலைவராகவும் உள்ளாா். நக்விக்குப் பிறகு மத்தியில் முஸ்லிம் மதத்தைச் சோ்ந்த யாரும் அமைச்சா்களாக இல்லை. நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 400 பாஜக எம்.பி.க்கள் உள்ள நிலையில், நக்விக்குப் பிறகு அக்கட்சியில் முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லை.

அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில், பாஜக வேட்பாளராக மீண்டும் நக்வி அறிவிக்கப்படவில்லை. இதனால் குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு அவரின் பெயா் பரிசீலிக்கப்படலாம் அல்லது வேறு ஏதேனும் ஒரு முக்கிய பதவியில் அவா் அமா்த்தப்படலாம் என ஊகங்கள் எழுந்தன.

ஆா்சிபி சிங் ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்தவா். அவா் கட்சித் தலைவா் நிதீஷ் குமாரின் ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலங்களவைத் தோ்தலில் மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்று தெரிகிறது. அவா் ராஜிநாமா செய்ததன் மூலம், பாஜக கூட்டணியைச் சோ்ந்த இருவா் மட்டுமே மத்திய அமைச்சா்களாக உள்ளனா். அவா்கள் இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே) , அப்னா தளம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள்.

அமைச்சா்களுக்கு கூடுதல் பொறுப்பு: மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினா் நலத் துறையும், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உருக்குத் துறையும் கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றம்?: நக்வி, ஆா்சிபி சிங் ஆகியோரின் ராஜிநாமாவைத் தொடா்ந்து மத்திய அமைச்சரவையில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் பாஜகவின் மிகப்பெரிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை. இதனால் விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

 



Read in source website

காலரா பாதிப்புகளுக்கு ஆயுஷ் சிகிச்சை மூலம் சிகிச்சையளிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ மருத்துவா்களின் கூட்டுறவு மருந்தக அமைப்பு (இம்ப்காப்ஸ்) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் தலைவா் கண்ணன், செயலா் காதா் மொஹிதீன் ஆகியோா் புதுச்சேரி அரசுக்கு எழுதியுள்ள கடிதம்:

இம்ப்காப்ஸ் நிறுவனம், 17,000-க்கு மேற்பட்ட அரசு பதிவுபெற்ற இந்தியமுறை மருத்துவா்களை உறுப்பினா்களாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ முறை மருந்துகள் தயாரிக்கப்பட்டு, மத்திய, மாநில அரசு மருத்துமனைகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மருந்துகள், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது, காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலரா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு உதவ இம்ப்காப்ஸ் நிறுவனம் தயராக உள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக, கபசுரக் குடிநீா், பிரம்மானந்த பைரவம், ஆடாதொடை குடிநீா் உள்ளிட்டவை நல்ல பலனை அளித்தது.

காலரா நோயானது இந்திய மருத்துவத்தில் ஊழி நோய், விஷு சீக்கா என அழைக்கப்படுகிறது. ஜீரண மண்டலத்தை பாதிக்கும், இந்நோய்க்கு எதிராக இஞ்சி, மிளகு ஆகியவை மருந்தாக பயன்படும் என ஆராய்ச்சி மூலம் உறுதியாகியிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனமானது காலராவின் மிதமான பாதிப்புக்கு உப்பு- சா்க்கரை கரைசலையும், தீவிர பாதிப்புக்கு ஏன்ட்டிபயோடிக் மருந்தையும் பரிந்துரைத்துள்ளது.

மிதமான பாதிப்பின்போதும், ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு, குடல் பகுதியில் கடுமையான விளைவுகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை தவிா்க்க கூடிய வகையில், சித்தா, ஆயுா்வேதம், யுனானியில் மருந்துகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி காலராவை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Read in source website

மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக (எம்.பி.) பிரபல இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

எம்.பி.க்களாக இவா்கள் தோ்வு செய்யப்பட்டதற்கு அவா்களுடைய புகைப்படத்துடன் தனது ட்விட்டா் பக்கத்தில் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

‘தனது இசையால் தலைமுறை தலைமுறைகளாக மக்களைக் கவா்ந்தவா் தலைசிறந்த படைப்பாளரான இளையராஜா. அவருடைய படைப்புகள் பல உணா்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயா்ந்த பல சாதனைகளைப் படைத்தவா். மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தனது பதிவில் பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு பதிவில், ‘ஒவ்வோா் இந்தியருக்கும் உத்வேகமளிப்பவா் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. விளையாட்டில் அவருடைய சாதனைகள் பரவலாக அறியப்பட்டது. அதுபோல, வளா்ந்துவரும் இளம் தடகள வீரா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அவா் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 2018-ஆம் ஆண்டில் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல பாடல்களையும் அவா் எழுதியுள்ளாா்.

தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை.



Read in source website

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் சமையல் எண்ணெய்த் தேவையில் 60 சதவீதம் வெளிநாட்டு இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெயின் விலை உயா்ந்ததால், இந்தியாவில் சில்லறை விற்பனை விலையிலும் தாக்கம் ஏற்பட்டது. பின்னா், சா்வதேச சந்தையில் விலை குறைந்ததால், இந்தியாவிலும் விலை குறைக்கப்பட்டது. எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த மாதம் குறைத்தன.

தற்போது சா்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் அனைத்து எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம், உணவுத் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு சுதான்ஷு பாண்டே கூறியதாவது:

சா்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை கடந்த வாரம் மட்டும் 10 சதவீதம் வரை குறைந்தது. இந்த விலைக் குறைப்பின் பயனை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தியாளா்களிடம் கூறினேன். அதற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து சமையல் எண்ணெய்களின் விலையை அடுத்த வாரத்துக்குள் லிட்டருக்கு ரூ.10 வரை குறைப்பதாக அவா்கள் உறுதியளித்தனா்.

ஒரே பிராண்ட் சமையல் எண்ணெய், வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை விலை வித்தியாசம் உள்ளது. போக்குவரத்து செலவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் சோ்க்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு ஒரே விலையில் விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளா்கள் ஒப்புக்கொண்டனா்.

எண்ணெயை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பேக்கிங் செய்ய வேண்டும். ஆனால், 15 டிகிரி செல்சியஸில் சில நிறுவனங்கள் பேக்கிங் செய்கின்றன. இந்த நியாயமயற்ற வா்த்தக நடைமுறைகளையும் சுட்டிக்காட்டினேன் என்றாா் அவா்.



Read in source website

அரசியலமைப்புச் சட்டம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், கேரள மீன்வளத் துறை அமைச்சா் சஜி செரியானுக்கு (57) எதிராக போராட்டம் வலுத்ததால், அவா் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

கேரள கலாசார விவகாரங்கள், மீன்வளம், இளைஞா் நலத் துறை அமைச்சரான அவா், அண்மையில் பத்தனம்திட்டா மாவட்டம் முல்லப்பள்ளியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஆட்சேபத்துக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்தாா்.

இதனால் அவா் பதவி விலகக் கோரி, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சியினா் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, சஜி செரியான் திருவனந்தபுரத்தில் முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தாா். பின்னா், முதல்வா் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆட்சியைக் கவிழ்க்க சதி: அண்மையில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்துவிட்டதாக தவறான செய்தி ஊடகத்தால் பரப்பப்பட்டுவிட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதை அவமதிக்க வேண்டுமென ஒருபோதும் நினைத்தது கிடையாது. அமைச்சா் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதென தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்தேன். கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசைக் கவிழ்க்க சதி நடக்கிறது என்றாா் சஜி செரியான்.

அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ திருவாங்கூா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘சஜி செரியானின் பேச்சால்தான் அவா் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ய நோ்ந்தது. இருப்பினும், அந்தப் பேட்டியின்போது அரசியலமைப்புச் சட்டம் குறித்து தெரிவித்த கருத்துக்காக அவா் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே, அவா் தெரிவித்த கருத்தில் சஜி செரியான் உறுதியாக இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’ என்றாா். இதே கருத்தை கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரனும் தெரிவித்தாா்.

சீதாராம் யெச்சூரி கருத்து: முன்னதாக, இந்த விவகாரம் குறித்து தில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அப்போது, இந்த பிரச்னை குறித்து மாநிலத் தலைவா்கள் விவாதித்து வருவதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

சட்டப்பேரவை ஒத்திவைப்பு: இந்த விவகாரம் கேரள சட்டப் பேரவையிலும் புதன்கிழமை எதிரொலித்தது. சஜி செரியான் பதவி விலகக் கோரி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரண்டு தா்னாவிலும் ஈடுபட்டனா்.



Read in source website

காற்று மாசுவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கன திறன் மிகுந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் எரிபொருள் சிக்கன தரநிலையை வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகளை ஏற்றிச் செல்லும் 8 இருக்கைகள் கொண்ட (மொத்த எடை 3.5 டன்) மோட்டாா் வாகனங்களுக்கு மட்டுமே இதுவரை எரிபொருள் சிக்கன தரநிலை நடைமுறை கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் இலகு ரக, நடுத்தர மற்றும் கனரக என அனைத்து மோட்டாா் வாகனங்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், மத்திய மோட்டாா் வாகன சட்டம் (சிஎம்விஆா்) 1989-இன் பிரிவு 115ஜி-இல் திருத்தம் மேற்கொண்டு அதற்கான அறிவிக்கையை கடந்த ஜூலை 1-ஆம் தேதி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த சட்டத் திருத்தம் மூலமாக மோட்டாா் வாகன சட்டப் பிரிவு 115ஜி-இல், எரிபொருள் சிக்கன தரநிலை (எஃப்சிஎஸ்) சோ்க்கப்பட்டது.

‘காற்று மாசுவைக் குறைக்கவும், எரிபொருள் சிக்கன திறன் மிகுந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் நோக்கிலும் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கை வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் செயல்பாட்டுக்கு வரும். எனவே, இந்த அறிவிக்கை வெளியான 30 நாள்களுக்குள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன’ என்றும் மத்திய அமைச்சகம் சாா்பில் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மோட்டாா் வாகன உற்பத்தி நிறுவன தர நிா்ணய சட்டப் பிரிவு 149- இல் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், வாகன உற்பத்தி இணக்க நடைமுறையின்படி வாகனத்தின் எரிபொருள் சிக்கன தரநிலை சரிபாா்க்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read in source website

உத்தர பிரதேச சட்ட மேலவையில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் புதன்கிழமை ஓய்வு பெற்றாா். இதையடுத்து, உத்தர பிரதேச மேலவையில் காங்கிரஸுக்கு உறுப்பினா்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்ட மேலவை கடந்த 1887-இல் தொடங்கப்பட்டது. 1909-இல் காங்கிரஸ் சாா்பில் மோதிலால் நேரு முதல் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) ஆனாா். அதன்பிறகு அந்த அவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் தொடா்ந்து இடம்பெற்று வந்தனா்.

இந்நிலையில், காங்கிரஸ் சாா்பில் ஒரே ஒரு எம்எல்சி-யான தீபக் சிங் உள்பட 12 உறுப்பினா்களின் பதவிக் காலம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதன்மூலம் 110 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேச சட்ட மேலவையில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்ட பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனவே, சட்ட மேலவைக்கு உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் பலம் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது காங்கிரஸ். சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள், பாஜக ஆகியவற்றின் வளா்ச்சியால் காங்கிரஸ் கட்சி, படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் பாஜகவின் கை ஓங்கத் தொடங்கிய பிறகு, காங்கிரஸின் வீழ்ச்சி மிகவும் வேகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியும் அங்குள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.



Read in source website


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது இந்திய மகளிர் அணி. 

இந்திய மகளிர் அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது. டி20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. மேலும் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. 

3-வது ஒருநாள் ஆட்டம் பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 49 ரன்களும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 75 ரன்களும் பூஜா வஸ்த்ரகர் ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்களும் எடுத்ததால் இந்திய மகளிர் அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுக்க முடிந்தது. 27-வது ஓவரில் 124/6 என நெருக்கடியில் இருந்தபோது கெளரும் பூஜாவும் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இருவர் கூட்டணி 97 ரன்கள் எடுத்து இந்திய அணி கெளரவமான ஸ்கோரை அடைய உதவி செய்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 8-ம் நிலை மற்றும் அதற்குக் கீழே உள்ள பேட்டர்களில் அதிக அரை சதம் எடுத்தவர் (3) என்கிற பெருமையை பூஜா பெற்றுள்ளார். 

முதல் இரு ஒருநாள் ஆட்டங்களை விடவும் இலங்கையின் இன்றைய பேட்டிங் முன்னேறியிருந்தது. கேப்டன் சமரி 44 ரன்களும் நிலாக்‌ஷி டி சில்வா ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் எடுத்தார்கள். எனினும் இலங்கை அணி 47.3 ஓவர்களில்  216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை 3-0 என வென்றுள்ளது. 3-வது ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கெளர் தேர்வானார்.
 



Read in source website

 


மாநிலங்களவை நியமன உறுப்பினராக (எம்.பி.) முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளார். கலை, இலக்கியம், விளையாட்டுத் துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்படுவது நடைமுறை.

பிரதமர் மோடி, பி.டி. உஷாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ஒவ்வோா் இந்தியருக்கும் உத்வேகமளிப்பவா் பிரபல தடகள வீராங்கனை பி.டி.உஷா. விளையாட்டில் அவருடைய சாதனைகள் பரவலாக அறியப்பட்டது. அதுபோல, வளா்ந்துவரும் இளம் தடகள வீரா்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அவா் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. மாநிலங்களவை உறுப்பினராக அவா் தோ்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

1980களில் இந்தியத் தடகள விளையாட்டில் மகத்தான வீராங்கனையாக, நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தவர் பி.டி. உஷா. இன்றும் அவரைப் பற்றிப் பேசுகிறோம், சாதனைகளைக் கண்டு வியக்கிறோம் என்றால் காரணம் இல்லாமலில்லை. 1980களில் இந்தியாவில் தடகள விளையாட்டு மீது பள்ளி மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதற்கு பி.டி. உஷாவும் முக்கியக் காரணம். 

*

ஒரு இந்தியத் தடகள வீரர் ஒரே போட்டியில் 5 தங்கங்களும் ஒரு வெண்கலமும் வென்றார் என்றால் அது எத்தகைய சாதனை!

1985 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தனை தங்கங்களையும் அள்ளிக் கொண்டு வந்தார் பி.டி. உஷா.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்ட உஷா, அடுத்த வருடமே தங்க வேட்டையை நடத்தினார்.

ஜகார்த்தாவில் உஷா நிகழ்த்திய இந்தச் சாதனையை இன்று வரை வேறொரு இந்தியத் தடகள வீரராலும் முறியடிக்க முடியவில்லை. 

1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் இளம் தடகள வீரராக 16 வயதில் அறிமுகமானார் உஷா. இந்தச் சாதனை இன்னமும் நீடிக்கிறது. 

16 வயது வீராங்கனையால் ஒலிம்பிக்ஸ் வரை வர முடிந்தது எப்படி?

ஒரு விளையாட்டு விழாவில் 13 வயது பி.டி. உஷாவைக் கண்ட பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார், அவருடைய திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க ஆரம்பித்தார். கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த நம்பியாரிடம் பயிற்சி எடுக்க ஆரம்பித்த ஒரே வருடத்தில் மாநிலங்களுக்கிடையிலான ஜூனியர் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்றார் பி.டி. உஷா. அவர் சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று பல சாதனைகளை நிகழ்த்த முக்கியக் காரணமாக இருந்ததால் 1985-ல் துரோணாச்சார்யா விருது அறிமுகம் செய்யப்பட்டபோது விருது வாங்கிய மூவரில் ஒருவராக நம்பியார் இருந்தார். 

இந்திய விமானப் படையில் 15 வருடங்கள் பணியாற்றினார் நம்பியார். 1970-ல் அங்கிருந்து ஓய்வு பெற்று கேரள ஸ்போர்ட்ஸ் கவுன்சிலில் இணைந்தார். தடகள வீரராக இருந்தும் சர்வதேச அளவில் சாதிக்க முடியாததால் பயிற்சியாளராக மாறி இந்தியாவுக்கு பி.டி. உஷா என்கிற அற்புதமான திறமைசாலியை உருவாக்கினார். நம்பியாரின் அறிவுரைப்படியே லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் 400 மீ. தடை ஓட்டத்தில் பங்கேற்றார் பி.டி. உஷா.

கடந்த வருடம் நம்பியார் மறைந்தார். என்னுடைய குருவை இழந்துவிட்டேன். இதனால் என் வாழ்க்கையில் உண்டாகும் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என் வாழ்க்கையில் அவருடைய பங்களிப்பை வார்த்தைகளால் விளக்க முடியாது என்று தனது வேதனையை வெளிப்படுத்தினார் உஷா.

இளம் புயல்

1980களில் உஷாவுக்குக் கடும் சவாலாக இருந்தவர் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த லிடியா டி வேகா. ஆசியாவின் அதிவேக வீராங்கனை எனப் புகழ் பெற்றவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் இரு தங்கங்களை வென்றவர். 
  
தில்லியில் நடைபெற்ற 1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ. ஓட்டத்தில் உஷாவை முந்திச் சென்றுதான் தங்கம் வென்றார் லிடியா. இந்தப் போட்டியிலிருந்து தான் உஷா - லிடியா இடையிலான மோதல் சூடுபிடித்தது. 

1982 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீ., 200 மீ. ஓட்டப் பந்தயங்களில் வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தினார் 18 வயது உஷா.

தில்லி ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. தூர்தர்ஷனில் நேரலையாகப் போட்டி ஒளிபரப்பாகி ரசிகர்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்தது. 

சர்வதேசப் போட்டியில் பதக்கம் வென்ற உஷாவை அதன்பிறகு சில வருடங்களுக்கு யாராலும் பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு பந்தயத்திலும் புயலென பறந்தார். இந்தியப் பெண்கள் பலருக்கு ஊக்கம் அளிக்கக் கூடியவராக மாறினார். 

1983 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 200 மீ. ஓட்டத்தில் உஷாவை வீழ்த்தினார் லிடியா. 400 மீ. ஓட்டத்தில் தங்கம் வென்றார் உஷா.

1984 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸ் நடைபெற்றபோது உஷாவுக்கு வயது 20. ஆசிய விளையாட்டுப் போட்டியினால் இந்திய ரசிகர்கள் அவரிடமிருந்து ஒலிம்பிக் பதக்கத்தை எதிர்பார்த்தார்கள்.

400 மீ. தடை ஓட்டத்தில் அரையிறுதியில்  55.54 விநாடியில் ஓடி புதிய காமன்வெல்த் சாதனை படைத்தார். இதனால் இறுதிச்சுற்றில் பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதைவிடவும் வேகமாக  55.42 விநாடியில் ஓடினாலும் வெண்கலத்தை நூலிழையில் தவறவிட்டார் உஷா. 

அந்த ஓட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் டெபி ஃபிளிண்டாஃப் தவறுதலாக ஆரம்பித்ததால் போட்டியை மீண்டும் தொடங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது உஷா அபாரமாக ஓட்டத்தைத் தொடங்கி முன்னிலையில் இருந்தார். முதல் தடையை 6.33 விநாடியில் ஓடியிருந்தார். மீண்டும் ஓட்டம் தொடங்கப்பட்டபோது அதே வேகத்தில் உஷாவால் ஓட முடியவில்லை என்றாலும் கடைசியில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை உஷா தவறவிட்டார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த ரசிகர்களால் நம்பவே முடியவில்லை. கிட்டத்தட்ட ஒலிம்பிக்ஸ் பதக்கத்தைத் தொட்டுவிட்ட தருணம் அது. இந்தத் தருணத்தை அவரால் மட்டுமல்ல, ரசிகர்களாலும் மறக்க முடியாது. 

20 வயது இந்திய வீராங்கனை ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருந்தால் அது மகத்தான சாதனையாக இருந்திருக்கும். உஷாவின் முயற்சிக்கு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.  ஒலிம்பிக்ஸ் களத்தில் உஷா மேற்கொண்ட முயற்சி அவரை இன்னும் உயரத்துக்கு அழைத்துச் சென்றது. 

1985 ஆசியன் சாம்பியன்ஷிப்: தங்க வேட்டை

1985 ஜகார்த்தா ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் உஷாவும் லிடியாவும் கலந்துகொண்டார்கள். யார் யாரை முந்தப் போகிறார்கள் என ரசிகர்கள் போட்டியின் முடிவுகளைக் காண ஆவலாக இருந்தார்கள். ஆசியாவின் அதிவேக வீராங்கனை யார் என்கிற படத்துக்கான போட்டி அது.

100 மீ. ஓட்டத்தில் அரையிறுதிலேயே 11.39 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்தார் உஷா. இறுதிச்சுற்றில் அட்டகாசமாக ஓடி லிடியாவைத் தோற்கடித்து தங்கம் வென்று ஆசியாவின் அதிவேக வீராங்கனையாக முடி சூடிக் கொண்டார் உஷா. லிடியாவுக்கு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. அந்தப் போட்டியில் அவர் அந்த ஒரு பதக்கத்தையே வென்றார். உஷா கை நிறைய தங்கங்களை அள்ளினார்.

மேலும் 200 மீ., 400 மீ., 400 மீ. தடை ஓட்டங்களில் தங்கம் வென்றார் உஷா. 

நான்கு தங்கங்கள் பத்தாது என 4x400 மீ. தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்று அசத்தினார். 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் வெண்கலம். அந்த ஓட்டத்தில் லிடியாவை மீண்டும் தோற்கடித்தார் உஷா. அந்த ஓட்டத்தின் சிடியை இன்னும் நான் வைத்திருக்கிறேன். அடிக்கடிப் போட்டுப் பார்ப்பேன் என்கிறார். 

ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 5 தங்கங்களும் ஒரு வெண்கலம் வென்ற சாதனையை பி.டி. உஷாவால் இன்னொரு முறை நிகழ்த்த முடியவில்லை. அந்தப் போட்டியில் தகுதிச்சுற்று ஓட்டங்கள் எல்லாம் சேர்த்து 5 நாள்களில் டஜனுக்கும் மேற்பட்ட ஓட்டங்களில் அவர் பங்கேற்றார். 

ஒரே நாளில் மூன்று ஓட்டங்களில் பங்கேற்றேன்.ஒரு ஓட்டம் முடிந்த பிறகு குளியலறைக்கு ஓடுவேன். குளித்து முடித்து அடுத்த ஓட்டத்துக்குத் தயாராவேன். ஓடுவது, ஓய்வெடுப்பது, குளிப்பது மீண்டும் ஓடுவது எனத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தேன் என்று பேட்டியளித்தார் உஷா. 

1985 ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கங்களை அள்ளிக் கொண்டு வந்த உஷா, அடுத்ததாக 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4 தங்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் என மீண்டும் தங்க வேட்டை நடத்தினார். 

100 மீ. ஓட்டத்தில் லிடியாவிடம் தங்கத்தைப் பறிகொடுத்தாலும் 200 மீ., 400 மீ., 400 மீ. தடை, 4x400 மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றார். இந்தப் போட்டியிலும் ஒரே நாளில் மூன்று ஓட்டங்களில் பங்கேற்றார். 

1988 சியோல் ஒலிம்பிக்ஸில் காயம் காரணமாக எந்த ஓட்டத்திலும் இறுதிச்சுற்றுக்கு உஷாவால் தகுதி பெற முடியவில்லை. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகமாகின. 

தில்லியில் நடைபெற்ற 1989 ஆசியன் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார் உஷா. தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமான பதக்கங்களை வெல்வேன் என்றார். 

சொன்னது போலவே நடந்தது. 200 மீ., 400 மீ., 400 மீ. தடை ஓட்டங்களில் தங்கங்களும் 100 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 4x400 மீ.,  தொடர் ஓட்டத்தில் தங்கமும் 4x100 மீ. ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். 

ஓய்வு அறிவிப்பைப் பிறகு திரும்பப் பெற்றுக் கொண்ட உஷா 34 வயதில் கலந்துகொண்ட 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். 2000-ம் ஆண்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். அதன்பிறகு கேரளாவில் ஸ்கூல் ஆஃப் அத்லெடிக்ஸ் என்கிற அகாதெமியைத் தொடங்கி இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார். உஷாவின் பள்ளியிலிருந்து வந்த டின்டு லுகா 800 மீ. ஓட்டத்தில் தேசிய சாதனை நிகழ்த்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றார். 

இப்போது புதிய பொறுப்பு உஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் வழியாகவும் தடகள விளையாட்டுக்கு நிறைய நன்மைகள் செய்வார் என நாம் எதிர்பார்க்கலாம்.



Read in source website

இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் டுனீசியாவின் ஆன்ஸ் ஜாபியுா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் முதல் அரபு நாட்டு வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

டென்னிஸ் விளையாட்டில் அரபு நாடுகளின் புதிய அடையாளமாக பல்வேறு சாதனைகளை ஜாபியுா் எட்டி வருவது குறிப்பிடத்தக்கது. கிராண்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் அரபு வீராங்கனை (ஆஸி. ஓபன் 2020), இரு பாலா் டென்னிஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வந்த முதல் அரபு போட்டியாளா் (2021), டபிள்யூடிஏ பட்டம் வென்ற முதல் அரபு வீராங்கனை என தொடா்ந்து வரும் அவரது சாதனைப் பட்டியலில் தற்போது இந்த புதிய சாதனையும் இணைந்திருக்கிறது.

மகளிா் ஒற்றையா் பிரிவில் போட்டித்தரவரிசையின் 3-ஆம் இடத்திலிருக்கும் ஜாபியுா், சென்டா் கோா்ட்டில் நடைபெற்ற காலிறுதியில் 3-6, 6-1, 6-1 என்ற செட்களில் செக் குடியரசின் மேரி பௌஸ்கோவாவை வீழ்த்தினாா். கடந்த சீசனில் காலிறுதியுடன் வெளியேறிய ஜாபியுா் இந்த சீசனில் ஒரு படி முன்னேறியிருக்கிறாா்.

ஜாபியுா் அரையிறுதியில், தனது நெருங்கிய தோழியும், ஜொ்மனிய வீராங்கனையுமான டாட்ஜானா மரியாவை எதிா்கொள்கிறாா். அவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

சிமோனா முன்னேற்றம்: மற்றொரு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 16-ஆவது இடத்திலிருக்கும் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-4 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை வீழ்த்தினாா்.

3-ஆவது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் சிமோனா, அதில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை எதிா்கொள்கிறாா். முன்னதாக ரைபாகினா தனது காலிறுதியில் 4-6, 6-2, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை சந்திக்கிறாா்.

நோரி வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்தின் கேமரூன் நோரி, 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் காஃபினை போராடி வீழ்த்தினாா்.

தனது முதல் கிராண்ட்ஸ்லாம் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் நோரி, 2016-க்குப் பிறகு விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இங்கிலாந்து வீரா் என்ற பெருமையை பெற்றுள்ளாா். அந்தச் சுற்றில் அவா் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சவாலை எதிா்கொள்கிறாா்.



Read in source website

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

எதிா்வரும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது சிறந்த பிளேயிங் லெவனை இந்திய அணி இத்தொடரில் களமிறக்கி பரீட்சித்துப் பாா்க்கும் வாய்ப்புள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த டெஸ்டில் விளையாடாத ரோஹித் சா்மா, இந்தத் தொடரில் களம் காணுவாா் என எதிா்பாா்க்கலாம். அவ்வாறு விளையாடினால், ருதுராஜ் ஓய்வுக்கு தள்ளப்படுவாா். கோலி, பும்ரா, ஜடேஜா, ஷ்ரேயஸ், பந்த் போன்ற முக்கிய வீரா்கள் 2-ஆவது ஆட்டத்திலிருந்துதான் தொடரில் இணைகின்றனா்.

எனவே இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் வீரா்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தொடக்க வீரா்களில் ஒருவராக இஷான் தோ்வாகும் பட்சத்தில், அயா்லாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா 3-ஆவது இடத்துக்கு பரிசீலிக்கப்படலாம்.

சூா்யகுமாரும் தனக்கான இடத்தைப் பெறுவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், ராகுல் திரிபாதி மற்றும் அா்ஷ்தீப் சிங் ஆகியோா் அறிமுக ஆட்டத்துக்கு மேலும் காத்திருக்க வேண்டியிருக்கும். பௌலிங்கில் புவனேஷ்வா் குமாா், ஹா்ஷல் படேல் தலைமையில் யுஜவேந்திர சஹல், அக்ஸா் படேல், அவேஷ் கான், உம்ரான் மாலிக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆட்டநேரம்: இரவு 10.30

இடம்: தி ரோஸ் பௌல், சௌதாம்டன்

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்



Read in source website

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், பிரதமர் போரிஸ் ஜான்சனின் அறிவிப்புகளும் மக்களை மிகுந்த இன்னல்களுக்குள்ளாக்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளில் போரிஸ் ஜான்சன் காட்டிய அலட்சியப் போக்குக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் கூட விதிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான போரிஸ் ஜான்சனின் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பின்சருக்கு துணை தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார். இந்த சம்பவங்களால் தொடர் குற்றச்சாட்டுக்கு போரிஸ் ஜான்சன் அரசு உள்ளான நிலையில் அவருக்கு நெருக்கடி முற்றியது.

இதன்காரணமாக அவரது அமைச்சரவையில் இருந்த நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சஜித் ஜாவத் உள்ளிட்டோர் போரிஸ் ஜான்சனைக் கண்டித்து தனது பதவியை ராஜிநாமா செய்தனர். மேலும் அவரைத் தொடர்ந்து பல்வேறு அமைச்சர்களும் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகத் திரும்பினர். 

இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்டன் பிரதமர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து பிரிட்டனில் நிலவி வந்த அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக போரிஸ் ஜான்சன் வியாழக்கிழமை அறிவித்தார்.

ஏற்கெனவே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.



Read in source website

ஜெனீவா: ஓமிக்ரான் மாறுபாட்டின் புதிய வகை கரோனா  BA.2.75 இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

கரோனாவால், கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான வழக்குகள் 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது கெப்ரேயஸ் கூறினார்.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், BA.4 மற்றும் BA.5 புதிய அலைகள் எழுந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் BA.2.75 இன் புதிய துணை வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். நோய்க்கிருமிக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே BA.4 அல்லது BA.5 அல்லது BA.2.75 ஆக இருந்தாலும் நோய்க்கிருமி தொற்று தொடரும் என்று  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று கெப்ரேயஸ் கூறினார். 



Read in source website

நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச் சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அபுஜாவில் உயா் பாதுகாப்பு கொண்ட குஜே சிறைச்சாலை மீது பிரிவினைவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா். துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவா்கள் நடத்திய தாக்குதலில் காவலா் உயிரிழந்தாா்.

இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். அவா்களில் சுமாா் 300 கைதிகள் மறுபடியும் பிடிபட்டனா்; எஞ்சியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.



Read in source website

இந்தியாவில் மனித உரிமை ஆா்வலா் பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினா் ஜுவான் வா்காஸ் கூறியதாவது: பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் சேவைகளை கௌரவிக்கும் வகையிலான தீா்மானத்தை பிரதிநிதிகள் சபையில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

அந்தத் தீா்மானத்தில், அவரது மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதிரியாா் ஸ்டேன் சுவாமி இறந்த முதலாவது நினைவு தினத்தையொட்டி இந்தத் தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீா்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆண்ட்ரே காா்சன் மற்றும் ஜேம்ஸ் மெக்கவா்ன் வழிமொழிந்தனா் என்றாா் அவா்.

‘இந்தியாவில் சிறுபான்மையினா் மற்றும் அவா்களைப் பாதுகாப்போருக்கு எதிரான அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் ஜுவான் வா்காஸ் இதனைத் தெரிவித்தாா்.

84 வயதான பாதிரியாா் ஸ்டேன் சுவாமி, எல்கா் பரிஷத் - மாவோயிஸ்ட் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் கடந்த 2020-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். சிறையில் கரோனா தொற்று மற்றும் பாா்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்த அவா், மருத்துவ உதவி கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அதனைத் தொடா்ந்து, அவருக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், அந்த மருத்துவமனையில் பாதிரியாா் ஸ்டேன் சுவாமி மரணமடைந்தாா்.



Read in source website

கச்சா பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு சலுகையை அக்டோபா் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டு சந்தையில் விலையை குறைக்கும் வகையில் பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (ஏஐடிசி) ஆகியவற்றுக்கு நிகழாண்டு செப்டம்பா் 30 வரை விலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிறுவனங்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்ததற்கு பிறகு, சுங்க வரி விலக்கை மேலும் ஒரு மாதம் நீட்டித்து அக்டோபா் 31 வரை தள்ளிவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பருத்தி மற்றும் நூலின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பருக்குப் பிறகும் வரி விலக்கு சலுகையை நீடிக்க வேண்டும் என்று ஜவுளி துறை அமைச்சகம் வலியுறுத்தியதையடுத்து மத்திய நிதி அமைச்சகம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால், நூல், துணி, ஆடைகள் தயாரிப்புக்கு பயனளிக்கும் என்பதுடன், நுகா்வோருக்கும் நிவாரணம் கிடைக்கும்.

2021 பிப்ரவரியில் ஒரு கேண்டி பருத்தியின் விலை ரூ.44,500-ஆக இருந்த நிலையில், 2022 மாா்ச்சில் ரூ.90,000 ஆக கடுமையாக உயா்ந்தது. ஒரு கேண்டி என்பது 356 கிலோவாகும்.

பருத்தி விலை கடுமையாக அதிகரித்தால் அது நூலிழை மற்றும் துணிகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி அந்த துறையின் வளா்ச்சியை பாதித்தது.



Read in source website

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ., தூர மெரினா லுாப் சாலையை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இந்த சாலையில் பட்டினப்பாக்கம் லுாப் சாலை வியாபாரிகளுக்காக, நொச்சிக்குப்பம் பகுதியில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அண்ணா பல்கலை.யின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்திலான மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது.

இதில், 9.97 கோடி ரூபாய் செலவில், 366 கடைகள் அமைக்கப்படும். ஒவ்வொரு கடையும், 6.5 அடி நீளமும் 4.9 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். மேலும், 60 இருசக்கர வாகனங்கள்; 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படள்ளது.

மீன்கள் விற்பனை மற்றும் மீன்களை வெட்டி சுத்தம் செய்தவற்கு என தனித் தனியாக இடங்கள் உள்ளன. மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி, கழிவுகளை சுத்திகரிப்பதற்கான வசதிகள் உள்ளன.

எனவே, திட்ட அறிக்கைக்கு, அண்ணா பல்கலை.யின் அனுமதி பெற்றப்பின், ஒன்றரை ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு, வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதைதொடர்ந்து, மற்ற பகுதிகளில் உள்ள சாலையோர மீன் வியாபாரிகள் கணக்கெடுத்து, அங்கேயும் சர்வதேச அளவிலான அங்காடி அமைக்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.



Read in source website

சென்னை: சென்னையில் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இதன்படி தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இணைப்புச் சாலைகளில் செடிகள், நறுமணச் செடிகள், மூலிகைகள் மற்றும் மருந்து செடிகள், அலங்கார செடிகள், பூச்செடிகள் நட்டு பராமரிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள், அரசு அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் சுயஉதவிகள் இந்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

தாம்பரம், செங்கல்பட்டு, நுங்கம்பாக்கம், கிண்டி, சென்னை எழும்பூர், சேத்துபட்டு, ஜோலார்பேட்டை, வாலாஜா சாலை, காட்பாடி, திருத்தணி, அரக்கோணம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் சூலூர்பேட்டை ஆகிய 21 ரயில் நிலையங்களில் இந்த திட்டம் முதல் கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது.



Read in source website

கிராமப்புறங்களில் பெரும்பாலும் செல்போன் டவர்கள் திறந்தவெளி நிலங்களில்தான் இருக்கும். குறிப்பாக, குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தொலைவில்தான் இருக்கும். ஆனால், நகர்புறங்களில் நிலைமை அப்படி இல்லை. பெரும்பாலும் வீடுகளின் மாடியில்தான் செல்போன் டவர் இருக்கும்.

இந்த டவர்களை நிறுத்த சம்பந்தபட்ட நிறுவனங்கள் அந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்த வேண்டும். இப்படி செல்போன் டவர்களுக்கு தங்களின் இடங்களை வாடகைக்கு விடுபவர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த வரி விதிப்பு முறையை அமல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.



Read in source website

சென்னை: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்காக 2018, 2021 மற்றும் 2022-ல் திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள், 2021 இன் விதி 4 (2) பின்வருமாறு கூறுகிறது: பாலிஸ்டைரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டைரீன் உட்பட பின்வரும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியன ஜூலை 1 ஆம் தேதி 2022-ம் ஆண்டு முதல் தடைசெய்யப்படும்.

(i) பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டைரீன் (தெர்மாகோல்)

(ii) தட்டுகள், கோப்பைகள், குவளைகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சுகுழல்கள், தட்டுகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள், கிளரிகள்

மேலும், ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவுப்பொருட்களை கட்ட உபயோபடுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் செய்ய 01.01.2019 முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எனவே, அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களும் இந்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட திருத்தத்தைக் கவனத்தில் கொண்டும் தமிழக அரசின் அரசானையினை கருத்தில் கொண்டும் அறிவிப்புக்கு இணங்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதிகள், 2021ன், விதி 12-ன் படி, இவ்விதிகளை நடைமுறைபடுத்துவதற்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரையறுக்கப்பட்டுள்ளது.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இக்கட்டுப்பாட்டு அறை அனைத்து நாட்களிலும் வரும் 2022 ஜூலை 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும்.



Read in source website

சென்னை: பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களை, எந்தச் சூழலிலும் பணி வரன்முறை செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த 2007-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த அரசாணையின்படி, நீண்டகாலமாக தற்காலிக ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் தங்களை, பணி நிரந்தரம் செய்யக் கோரி பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட கோவிந்தராசு, திவ்யா உள்ளிட்ட 4 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

தேர்வு நடைமுறைகள்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘‘மனுதாரர்கள் தகுதிபெற்ற கல்வித் துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக, உரிய தேர்வு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக ஆசிரியர்களாக நீண்டகாலம் பணியாற்றியுள்ளோம் என்பதற்காக, பணி நிரந்தரம்செய்யக் கோர முடியாது. முறையாக நியமிக்கப்படாதவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால், உரிய தகுதியுடன் அரசுவேலைக்காகக் காத்திருப்பவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்.

அரசுப் பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் உரிய தேர்வு விதிகளைப் பின்பற்றியே நடத்தப்பட வேண்டும். பின்வாசல் வழியாக அரசுப் பணியில் சேருபவர்களின் பணி நியமனங்களை, எந்தச் சூழலிலும் பணிவரன்முறைப்படுத்தக் கூடாது. அவர்களை வந்த வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டும்.

அதேநேரம், மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை" என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.



Read in source website

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் சியாமபிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: சியாம பிரசாத் முகர்ஜி ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், கல்வியாளர். வலுவான ஜனநாயக தேசத்தை உருவாக்கியதில் அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு எப்போதும் அனைவருக்கும் உத்வேகமாக இருக்கும்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: சுதந்திர இந்தியாவின் முதல் தொழில்துறை அமைச்சர், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனருமான சியாம பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளன்று, அவருக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்துகிறேன்.



Read in source website

புதுடெல்லி: இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

அதன்பின் அதே பெயரில் உள்நாட்டிலேயே இந்த கப்பல் 40,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையில் அடுத்த மாதம் சேர்க்கப்படவுள்ளது.

இந்த விமானத்தில் பயன்படுத்த 24 முதல் 26 போர் விமானங்களை வாங்கும் பணியில் கடற்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் தயாரிப்பான ரபேல்-எம் ரக போர் விமானம் மற்றும் அமெரிக்க தயாரிப்பான எப்/ஏ-18ரக போர் விமானம் ஆகிய இரண்டில், ஐஎன்ஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்ற பரிசோதனை கோவாவில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்து வருகிறது.

அதன்பின் போர் விமானங்கள் கொள்முதல் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என இந்திய கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் என்எஸ் கார்மேட் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே உள்ளது. இந்த கப்பல் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு கடற்படையில் கடந்த 2013-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

இதில் பயன்படுத்துவதற்கு 45, மிக்-29கே ரக போர் விமானங்கள் வாங்கப்பட்டன. ஆனால் இந்த போர் விமானங்களை, விக்ரமாதித்யா கப்பலில் இருந்து இயக்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. சில விமானங்கள், கப்பலில் தரையிறக்கும் போது சேதம் அடைந்தன. ஒரு விமானம் கடலில் விழுந்தது. அதனால் புதிய விக்ராந்த் போர்க்கப்பலுக்கு பொருத்தமான போர் விமானத்தை பரிசோதிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.



Read in source website

லண்டன்: "ஐ வில் மிஸ் யூ" என கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடருக்கு தனது உருக்கமான பதிவு மூலம் பிரியாவிடை கொடுத்துள்ளார் சானியா மிர்சா. அரையிறுதி கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு இதனை அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜனவரி வாக்கில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு பிறகு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் எனவும் அப்போது சொல்லி இருந்தார். இதையே இப்போது விம்பிள்டன் தொடரிலும் சானியா தெரிவிக்கும் வகையில் உள்ளது அவரது பதிவு.

விம்பிள்டனில் குரோஷியா (Croatia) வீரர் மேட் பேவிக் (Mate Pavić) உடன் இணைந்து விளையாடி இருந்தார். அரையிறுதியில் சானியா ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தது. கடந்த 2015 விம்பிள்டனில் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தான் விம்பிள்டனில் அவர் வென்றுள்ள ஒரே சாம்பியன் பட்டமாகும். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று வரை 2005, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சானியா விளையாடி உள்ளார்.

"நம்மிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது இந்த விளையாட்டு. உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக என அதை சொல்லலாம். வெற்றி, தோல்வி, கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லா இரவுகள் என நிறைய சொல்லலாம்.

ஆனால், பல பணிகளில் கிடைக்காத பலனை இந்த விளையாட்டு கைமாறாக தருகிறது. அதனால் நான் என்றென்றும் இதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நமது உழைப்பு இறுதியில் மதிப்புக்குரியதாக மாறுகிறது. இது நடப்பு விம்பிள்டன் குறித்தது மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு விளையாடியதையும், வெற்றி பெற்றதையும் எண்ணி பெருமை கொள்கிறேன். ஐ வில் மிஸ் யூ. அடுத்த முறை சந்திக்கும் வரை" என தெரிவித்துள்ளார் சானியா.



Read in source website

லண்டன்: சொந்தக் கட்சியிலே எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய பிரதமரை கட்சித் தேர்ந்தெடுக்கும் என்றும், அதுவரை காபந்து பிரதமராக நீடிப்பதாகவும் அறிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டை வழிநடத்துவார் என்று தங்களுக்கு நம்பிக்கையில்லை எனக் கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதார அமைச்சர் ஷாஜித் ஜாவேத் ஆகியோர் நேற்று பதவி விலகினர். இதனையடுத்து நாட்டின் புதிய நிதியமைச்சராக நதீம் ஜஹாவி நியமிக்கப்பட்டார். ஆனால், ஜவாஹியும் பிரதமர் பக்கம் நிற்கவில்லை. போரிஸ் ஜான்சன் பதவி விலக வேண்டும் என்று அவரும் வலியுறுத்தினார்.

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் இன்று (வியாழன்) ராஜினாமா செய்திருக்கிறார்.

ராஜினாமா அறிவிப்பு குறித்து நாட்டு மக்களிடம் போரிஸ் ஜான்சன் உரையாற்றும்போது, “நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். புதிய தலைவர் வர வேண்டும் என்பது கன்சர்வேட்டிவ் கட்சியின் விருப்பம். அரசியலில் யாரும் தவிர்க்க முடியாதவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்

போரிஸ் ஜான்சனின் ராஜினாமா முடிவை எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி ‘நல்ல செய்தி’ என்று கூறி வரவேற்றுள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுக்கும் என்ற நிலையில், அந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, போரிஸ் ஜான்சனுக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகையில், "கடந்த 48 மணி நேரத்தில் பிரிட்டன் ஆளுங்கட்சியில் நடந்துவரும் நிகழ்வுகளைக் கண்டு ‘எதிர்த்துப் போராடுவேன்’ என்று போரிஸ் கூறினார். ஆனால், இப்போது அவரே தான் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். அவர் அக்டோபர் மாதம் வரை கேர்டேக்கர் பிரதமராக நீடிப்பார். கன்சர்வேட்டிவ் கட்சியின் வருடாந்திர கூட்டத்திற்காக புதிய தலைவர் தேர்வாகும் வரை அவர் பிரதமராக பொறுப்பு வகிப்பார்" என்று தெரிவித்திருந்தது.

போரிஸ் ஜான்சன் ராஜினாமாவுக்கு காரணம்: போரிஸ் ஜான்சனுக்கு எதிரான போர்க்கொடி ஏதோ 2 நாட்களுக்கு முன்னரே எழுந்தது என்று அணுகக் கூடாது. போரிஸ் ஜான்சன் 2019ல் பிரிட்டன் பிரதமராக பதவியேறார். அந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தொடங்கிய கரோனா தொற்று ஓரிரு மாதங்களிலேயே உலகை ஆட்டிப்படைக்கத் தொடங்கிவிட்டது. பிரிட்டன் மோசமான கரோனா அலைகளை சந்தித்தது. இரு தவணை தடுப்பூசிக்குப் பின்னரும் அங்கு கரோனா அலை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில்தான் கரோனா ஊரடங்குக்கு இடையே பிறந்த நாள் விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கினார் போரிஸ் ஜான்சன. ஜூன் 2020-இல் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதன்மூலம், பிரிட்டனின் பிரதமராக ஆட்சியில் உள்ள ஒருவர் மீது சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்படும் முதல் பிரதமராக அவர் ஆனார்.

இதுவே அவர் மீது சொந்த கட்சியில் எதிர்ப்பு கிளம்ப காரணமாகியது. இது ஒருபுறம் இருக்க, போரிஸ் ஜான்சன் வரி உயர்வை அமல்படுத்தினார். இதன் மீதும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கடந்த மாதம் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர். அப்போதே அவரது தலைமை ஆட்டம் கண்டதும் உறுதியாகிவிட்டது.

இந்த எதிர்ப்புகள் எல்லாம் வலுப்பெற்று நிதியமைச்சர், சுகாதார அமைச்சர் இன்னும் சில ஜூனியர் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகி இருக்கிறார்.



Read in source website

அங்காரா: சோமாலியாவில் கடுமையான வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் ஹசன் ஷேக் முகமது, துருக்கியிடம் உதவ வேண்டி ஆதரவு கேட்டிருக்கிறார்.

சோமாலிய அதிபர் ஹசன் ஷேஷ் முகமது முதல் முறையாக துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியது: ”சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. துருக்கிய சகோதரர்கள் எங்களுக்கு உறுதுணைபுரிய வேண்டும். அவர்கள் முன்பு செய்த உதவிகளை போல, அவர்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். உங்களது ஆதரவு சோமாலிய மக்களின் உயிர்களைக் காப்பாற்றும். நான் இந்த உதவியை என்றும் மறக்க மாட்டேன்” என்றார்

இந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன், சோமாலியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு துருக்கி என்றும் உதவும் என்று தெரிவித்திருக்கிறார்.

கடும் வறட்சி: கடந்த சில மாதங்களாகவே சோமாலியாவின் பல பகுதிகள் வறட்சி நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைக்கவில்லை. இதனால் சோமாலியாவில் நிலைமை மிக மோசமாகியுள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியால் சோமாலியாவில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொண்டுள்ளனர். சுமார் 43 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், இருப்பிடமின்றி தவித்து வருகின்றனர்.

ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, தொடர்ந்து நடந்து வரும் உள்நாட்டுச் சண்டைகள், மழையின்மை ஆகியவை கடும் வறட்சிக்கு காரணமாகியுள்ளன. இதில் தெற்கு சோமாலியாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம்தான் கடும் வறட்சிக்கு எதிராக சோமாலியா அரசு அவசர நிலையை அறிவித்தது. எனினும் 5 மாதங்கள் கடந்தும் சோமாலியாவில் நிலைமை சீராகவில்லை.

கடந்த சில வருடங்களில் மட்டும் சோமாலியாவில் இரண்டரை லட்சம் பேர் பட்டினியால் மடிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கவும் வாய்ப்புண்டு.

உதவும் துருக்கி: கடந்த 2011 ஆம் ஆண்டு துருக்கி அதிபர் எர்டோகன், சோமாலியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தை தொடர்ந்து சோமாலியாவின் பொருளாதாரத்திற்கு துருக்கி பெருமளவு உதவி செய்து வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சோமாலியாவுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் துருக்கி 1 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது.



Read in source website

புது டெல்லி: ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்துள்ள ஆகாசா ஏர் விமான நிறுவனம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) உரிமத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் விரைவில் விமான சேவையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஆகாசா ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2021 டிசம்பர் வாக்கில் குறைந்த கட்டணத்தில் இந்தியாவில் விமான சேவை வழங்கும் நோக்கில் 'ஆகாசா ஏர்' நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பெருமளவு பங்குகளில் முதலீடு செய்துள்ளார். வினய் துபே மற்றும் ஆதித்யா கோஷ் ஆகியோரும் இதில் இணைந்துள்ளனர். இந்தியாவில் விமான போக்குவரத்து அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற கண்ணோட்டத்தில் ஆகாசா தொடங்கப்பட்டது.

மிகவும் குறைந்த கட்டணத்தில் வரும் 2023, மார்ச் மாதத்திற்குள் சுமார் 18 விமானங்களை இந்தியாவில் இயக்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தங்களது முதல் விமானத்தை அடுத்து வரும் நாட்களில் (ஜூலை மாதத்திற்குள்) இயக்கம் என தெரிகிறது. கடந்த மே மாத வாக்கில் முதல் விமானத்தில் படத்தை பகிர்ந்திருந்தது ஆகாசா.

2022-23 ஆண்டில் மொத்தம் 18 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. படிப்படியாக வருடத்திற்கு 12 முதல் 14 வரை என ஐந்து ஆண்டுகளில் 72 விமானங்களை இயக்க உள்ளதாகவும் தெரிகிறது. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் பகுதியில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் வடிவமைக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. QP என்ற ஏர்லைன் கோட் இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.



Read in source website

 ஹைதராபாதில் இரண்டு நாள்கள் கூடிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் சில முக்கியமான முடிவுகளையும் செயல் திட்டங்களையும் அறிவித்திருக்கிறது. மத்திய ஆளுங்கட்சி என்பதுடன், இந்தியாவில் 19 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் இருப்பதால், பாஜகவின் முடிவுகள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருந்த கட்சி என்பது போய், வட மாநிலங்களின் கட்சி என்று வளர்ந்து இப்போது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வரை ஆளுங்கட்சியாக உயர்ந்திருக்கிறது பாஜக. 1977-லும், 1989-லும் ஆட்சிகள் அமைந்ததன் பின்னணியில் ஜனசங்கமும், அதன் மறுபிறவியான பாஜகவும் இருந்தன.
அதுவரை பாஜகவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையை 1998-இல் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஏற்படுத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி முறியடித்தது. கொள்கை ரீதியாக பாஜகவுடன் சேரவே முடியாத திமுக, ஐக்கிய ஜனதா தளம், காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்டவைகூட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது, தேசியக் கட்சியாக பாஜக தன்னை வளர்த்துக் கொள்ள உதவியது.
2014-இல் நரேந்திர மோடி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, முந்தைய வாஜ்பாய் அரசிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. ஆனாலும்கூட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலக்கட்சிகள் அனைத்துமே ஏதாவது ஒரு கட்டத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டவை என்பதால், பாஜக தவிர்க்கவும், அசைக்கவும் முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.
நரேந்திர மோடி - அமித் ஷா தலைமையில் பாஜக இணைத்துக்கொண்ட புதிய நட்புகளைவிட, இழந்த பழைய கூட்டாளிகள்தான் அதிகம். அதே நேரத்தில், கூட்டாளிகளின் இழப்பால் பாஜக அதிக மாநிலங்களில் வளர்ந்தது என்பதும், பாஜகவுடன் உறவைத் துண்டித்துக் கொண்ட கட்சிகள் செல்வாக்கை இழந்தன என்பதும் கடந்த எட்டாண்டு கால வரலாறு தெரிவிக்கும் உண்மை.
இந்தப் பின்னணியில்தான், ஹைதராபாதில் கூடிய பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களையும், செயல் திட்டங்களையும் நாம் பார்க்க வேண்டும். உள்துறை அமைச்சரும், முன்னாள் கட்சித் தலைவருமான அமித் ஷாவால் கட்சியின் வருங்கால இலக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கர்நாடகம் தவிர ஏனைய தென்னிந்திய மாநிலங்களில், பாஜகவை வலுப்படுத்தி ஆட்சி அமைக்கும் நிலைக்கு வளர்ப்பது என்பதுதான் உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்திருக்கும் சூளுரை. குடும்ப அரசியல், ஜாதி அரசியல் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாஜகவின் வளர்ச்சி அமைய வேண்டும் என்பது அவரது கருத்து. அடுத்த 40 ஆண்டுகள் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும், மத்தியில் ஆளுங்கட்சியாகவும் பாஜகதான் இருக்கும் என்றும் அமித் ஷா அந்த செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கர்நாடகம் தவிர, தெலங்கானா, ஆந்திரம், தமிழகம், கேரளத்தில் கட்சிக்கு வலுவான அடிப்படைக் கட்டமைப்பே இல்லாத நிலையில், ஆட்சியைப் பிடிப்பது எப்படி சாத்தியம் என்கிற விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மேற்கு வங்க பாஜகவின் நிலைமையை சற்று எண்ணிப் பார்த்தால், அமித் ஷாவின் எதிர்பார்ப்பை நிராகரித்துவிட முடியாது. இடதுசாரிகளும், காங்கிரஸும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இப்போது மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரதான அரசியல் எதிரியாக பாஜக உயர்ந்திருக்கிறது.
மாநிலக் கட்சிகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டு காங்கிரஸ் வலுவிழந்திருக்கும் நிலையில், வலுவான தேசியக் கட்சியின் தேவையை தென்னிந்திய மாநிலங்கள் உணர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீதான நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமித் ஷா போடும் கணக்கு வெற்றி பெற்றால் வியப்பே இல்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் "நட்புறவுப் பயணம்' (ஸ்நேக யாத்ரா) அறிவுறுத்தல் இன்னொரு முக்கியமான செய்தி. முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மையினர் மத்தியில் பாஜக குறித்த தவறான கருத்துகளை அகற்றும் வகையில் தொண்டர்கள் தங்கள் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்பது அவரது வேண்டுகோள். பாஜக ஆட்சியில் எந்தவொரு மக்கள் நலத் திட்டத்திலும் சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படவோ, புறக்கணிக்கப்படவோ இல்லை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் விதத்தில், அவர்களைத் தேடிச் சென்று விளக்க வேண்டும் என்பதுதான் அவரது "நட்புறவுப் பயண' அறிவுரை.
உத்தர பிரதேசத்திலும், பல வடமாநிலங்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளில்கூட பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பது எந்த அளவுக்கு மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. அதே அணுகுமுறையை, அடித்தளம் இல்லாத தென்னிந்திய மாநிலங்களிலும் கடைப்பிடிப்பது பாஜக தலைமையின் நோக்கமாக இருக்கலாம்.
எந்தவொரு அரசியல் கட்சியும் தன்னை வளர்த்துக் கொள்ளவும், அதன் மூலம் கொள்கைகளைப் பரப்பவும் முனைப்புக் காட்டுவது இயல்பு. தென்னிந்தியாவில் வலுவிழந்த காங்கிரஸ் ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை பாஜக நிரப்ப நினைத்தால் அதில் தவறு காண முடியாது. தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்பது தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சிக்கும், வருங்காலத்துக்கும் நல்லதல்ல!



Read in source website

 மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில் பிரதமர் நாஃப்டாலி பென்னட் தலைமையிலான அரசு கடந்த வாரம் கவிழ்ந்ததால், 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்கு ஆண்டுகளில் ஐந்தாவது முறையாக அந்நாடு பொதுத்தேர்தலை சந்திக்கவுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதாவின் மீது கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 92 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிர்த்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.
 நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த யாயிர் லபீட், அந்நாட்டின் காபந்து பிரதமராக பதவியேற்றார். வரும் நவம்பரில் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 எட்டு கட்சிகளைக் கொண்ட இந்த கூட்டணி அரசு, உள்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட அசாதாரண மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக, இடதுசாரி, வலதுசாரி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசில் அங்கம் வகித்தனர். இஸ்ரேல் வரலாற்றில் முதன்முறையாக அரபு கட்சிக்கும் அரசில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.
 ஓராண்டுக்கு முன்னர் பிரதமர் பதவியை ஏற்றபோது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாஃப்டாலி பென்னட், "என்னைப்போல் அல்லாமல் வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்ட உறுப்பினர்களுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்தப் போவதை எண்ணி பூரிப்படைகிறேன்' என மகிழ்ச்சியாகக் கூறினார். மேலும் "மாற்று சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பேன்' என அவர் உறுதியளித்தார்.
 அதே வேளையில், தேசிய ஒற்றுமை குறித்து வருத்தமுற்ற அவர், உள்நாட்டிலேயே இடதுசாரி, வலதுசாரிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல், கிழக்கத்திய யூதர்களான மிராஹிம் யூதர்களாலும், ஐரோப்பிய யூதர்களான அஷ்கனாசிம் யூதர்களாலும் இஸ்ரேலில் கடந்த பல ஆண்டுகளாக நிலவும் அரசியல் நிலையற்றத் தன்மை ஆகியவற்றை அவர் தெளிவாக கணித்தார்.
 இதன் காரணமாகவே அடுத்த பொதுத்தேர்தலிலும் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சி உள்பட எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
 இஸ்ரேல் தனி நாடாக விளங்கினாலும், கடந்த 1992-ஆம் ஆண்டில்தான் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர ராஜீய ரீதியிலான உறவு மலர்ந்தது. இதன் காரணமாக நிகழாண்டு ஏப்ரலில் அதன் 30-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா வர இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் நாஃப்டாலி பென்னட் முடிவு செய்திருந்தார். ஆனால், இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்ததாலும், ஆட்சி அதிகாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டதாலும் அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
 குறிப்பாக அரபு கட்சியுடன் இணைந்து தேசிய ஒற்றுமை அரசை நிறுவியதற்காகவும், காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்கியமைக்காகவும் நாஃப்டாலி பென்னட்டும், அவரது வலதுசாரி கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கேள்விக் கணைகளுக்கு ஆட்பட்டனர்.
 மேலும் அரசிலிருந்து வெளியேறிய அதன் கொறடா இடிட் சலீம், இந்த அரசு யூத அரசு அல்ல என்றும், வலதுசாரி தொகுதிகளுக்கு விசுவாசமாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் சித்தாந்த ரீதியாக இஸ்ரேல் அரசு சமரசம் செய்து கொள்வதாகக் கூறிய அவர், இதுவே இஸ்ரேல் அரசு பலவீனமடைய அடிப்படை காரணம் என்றும் தெரிவித்தார்.
 அதன்பின்னர்தான் தேசிய ஒற்றுமை அரசை தக்கவைக்க இயலாத நாஃப்டாலி பென்னட், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான மசோதாவும் நிறைவேறியது.
 தொடர்ந்து "தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "உள்நாட்டுக் கிளர்ச்சியை எதிர்கொள்ளும் ஒரு நாட்டில், வேறெந்த வாய்ப்புக்கும் இடமில்லாததால் கடைசியில் அந்த கிளர்ச்சிதான் வெற்றி பெறுகிறது' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
 அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர், ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பே "இஸ்ரேலிடம் தெளிவான வெளியுறவுக் கொள்கை கிடையாது' என கணித்தார். உள்நாட்டு அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுவரும் அந்நாடு, தெளிவான பார்வை கொண்ட நீண்டநெடிய வெளியுறவுக் கொள்கையை வகுக்க இயலாமல் போனதில் வியப்பில்லை. இதை ஒப்புக்கொண்ட நாஃப்டாலி பென்னட், சர்வதேச தலைவர்களான உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ùஸலென்ஸ்கி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் ஆகியோருடன் நட்பு பாராட்டிய தன்னால், உள்நாட்டில் தனது சொந்தக் கட்சியையும், அரசியல் சூழலையும் நிர்வகிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்திருந்தார்.
 ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடங்கியதும் இருநாடுகளுக்கும் இடையே அவர் மத்தியஸ்தம் செய்ய முயற்சித்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். இதுதவிர ஐக்கிய அரபு அமீரகத்துடனும் இஸ்ரேல் வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதேபோல இஸ்ரேல்-துருக்கி இடையிலான உறவிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியா, பாகிஸ்தான் உடனும் இஸ்ரேல் நட்பு பாராட்டி வருகிறது. அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதன்முறையாக இஸ்ரேலுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
 இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. ஆகையால், இந்தியா - இஸ்ரேல் இடையிலான 30-ஆவது ஆண்டு ராஜீய ரீதியிலான உறவைக் கொண்டாடும் வேளையில், சர்வதேச அளவிலும் இஸ்ரேலின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்பதால், அந்நாட்டில் நிலையான அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.



Read in source website

 கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகள் முக்கிய அங்கமாக அரசியல் களத்தில் இருந்தனர். நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து கிட்டத்தட்ட 1975 வரை சோஷலிஸ்டுகளின் அரசியல் களம் இருந்தது. ஆச்சார்ய நரேந்திர தேவ், ஜெயபிரகாஷ் நாராயணன், ஜே.பி. கிருபளானி, அசோக் மேத்தா, சின்ஹா, சியாம் சுந்தர் தாஸ் ஆகியோரால் தொடங்கப்பட்டது பிரஜா சோஷலிஸ்ட் கட்சி (பிஎஸ்பி). இன்றைய அரசியல்வாதிகளான முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், நிதீஷ் குமார் போன்றோர் பிஎஸ்பியில் இருந்தவர்கள்தான். 1952-இல் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கு, வடபுலத்தில் செல்வாக்கு இருந்ததோடு மட்டுமல்ல, தமிழகத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இந்தக் கட்சியின் சின்னம் குடிசை.
 இந்தக் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த ராம் மனோகர் லோகியா பிரிந்து சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (எஸ்எஸ்பி) என்ற கட்சியை உருவாக்கினார். தேர்தலில் இந்திரா காந்தியை வென்ற ராஜ்நாராயண், அனந்தராம் ஜெய்ஸ்வால் போன்ற பலர் இதில் இருந்தனர். இக்கட்சியின் சார்பிலும் தமிழகத்தில் சிலர் சட்டப்பேரவை உறுப்பினரானார்கள். இக்கட்சியின் சின்னம் ஆலமரம்.
 கடந்த 1960-இல் கிருபளானி பிஎஸ்பிலிருந்து விலகி, கட்சி அரசியலை விட்டு ஒதுங்கி இருந்தார். 1964 -இல் அசோக் மேத்தா காங்கிரஸில் இணைந்தார். பின், ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1969 -இல் எஸ்எஸ்பியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
 பிகார் முதல்வராக இருந்த கர்பூரி தாக்குரும் சோஷலிஸ்ட்தான். அவரை போலவே பலர் பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த இயக்கத்தில் இருந்தனர்.
 சோஷலிஸ்டுகள், முதல் நாடாளுமன்றத் தேர்தலில் 10.41% வாக்குகள் பெற்று 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர். பின்னர் நடந்த தேர்தலில் 6.81% வாக்குகளைப் பெற்று 12 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றனர். 1967- இல் 3.06% வாக்குகள் பெற்று 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றனர். 1971- இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1.04 % வாக்குகளே பெற்று இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
 1947-இல் ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் கடுமையான அரசியல் விமர்சனத்திற்கு பண்டித நேருவும் காங்கிரஸ் கட்சியும் ஆளானார்கள்.
 இந்த தாக்கத்தால்தான் ஆவடி காங்கிரஸ் கட்சி மாநாட்டில், சோஷலிஸ கொள்கை என்ற ஒன்றை பண்டித நேருவின் தலைமையில் முன்னெடுத்தனர். மேலும், கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் மீது விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருப்பதால் ரஷியாவோடு நட்புறவு கொண்டார். அது மட்டுமல்ல, ரஷியாவில் நடைமுறையில் இருந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நேரு இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தினார். இப்படி காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்டுகளும் சோஷலிஸ்டுகளும் வைத்த வாதங்கள் பெரும் விவாதத்தை அன்றைக்கு ஏற்படுத்தின.
 வடபுலத்தில் மட்டுமல்ல, கேரளத்திலும் பட்டம் தாணு பிள்ளை தலைமையில் 1954-இல் சோஷலிஸ்ட் அமைச்சரவையே அமைந்தது என்பது வரலாறு. புதிய கேரளம் அமைந்த பின்னும் 1962 - செப்டம்பர் வரை தாணு பிள்ளை ஆட்சியே தொடர்ந்தது.
 தமிழக சட்டப்பேரவையிலும் சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தார்கள்.1967-இல் நடந்த பொதுத்தேர்தலில் இரண்டு சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சோஷலிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தவர்கள், ஏ. சுப்பிரமணியம், எம். சுரேந்திரன், பட்டுக்கோட்டை ஏ.ஆர். மாரிமுத்து (பிற்காலத்தில் இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் இருந்தார்), இவர்களெல்லாம் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையிலான பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள். அது மட்டுமல்ல பூதலூர் ஆறுமுகசாமி, சட்ட மேலவை உறுப்பினராக இருந்தவர். அவர் இஸ்கஸ் அமைப்பில் என்.டி. சுந்தரவடிவேலு, என்.டி.வானமாமலை ஆகியோரோடு பணியாற்றியவர்.
 அன்பு வேதாசலம், பார்வர்ட் பிளாக் கட்சியில் இருந்த முன்னாள் தமிழக சட்ட மேலவை உறுப்பினர் மதுரை அய்யண்ணன் அம்பலம், சோலை இருசன், மதுரை ராமர், ஹெச்எம்எஸ் தொழிற்சங்கத்தை சேர்ந்த ராமையா போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருந்தார்கள்.
 மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து சுரேந்திரனும் பட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து ஏ.ஆர். மாரிமுத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோவை சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து பி. வேலுச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்லடத்தில் இருந்து கே. குமாரசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 அன்றைக்கு கச்சத்தீவை இலங்கைக்கு இந்திரா காந்தி வழங்கியபோது சோஷலிஸ்டுகள் சட்டப்பேரவையில் கடுமையாக வாதிட்டனர். காவிரி நீர் பிரச்னைக்காக சட்டப்பேரவையில் கடுமையாக வாதிட்டவர் ஈரோடு ஆர். நல்லசிவன். அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரையும் இருந்தார். இவர்கள் லோகியாவுடைய ஆதரவாளர்கள். பெருந்துறை பாலசுப்ரமணியம் லோகியா தலைமையிலான சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார். சோஷலிஸ்ட் கட்சியில் இருந்த பலர் பிற்காலத்தில் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
 கடந்த 1967 தேர்தலின்போது அண்ணா மாபெரும் கூட்டணி அமைத்தார். மூதறிஞர் ராஜாஜியும் அந்தக் கூட்டணியில் இருந்தார். ஒரு முறை கழுதை மேல் ஏழு கட்சி கூட்டணி இருப்பதுபோல் ஒரு கார்ட்டூன் வந்தபோது ராஜாஜி, "அந்தக் கழுதை மெதுவாக நகர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அடைந்துவிடும், கவலைப்பட ஒன்றுமில்லை' என்று வேடிக்கையாகக் கூறினார்.
 அன்றைக்கு அண்ணா, பிஎஸ்பி என்றோ, எஸ்எஸ்பி என்றோ அழைக்காமல் சோஷலிஸ்டுகள் என்றே அழைத்தார். 1969-இல் சோஷலிஸ்ட் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில பல பிரச்னைகளை கையில் எடுத்து அறிவுபூர்வமாக விவாதித்தனர். இன்றைய இளைஞர்களுக்கு சோஷலிஸ்ட் கட்சி என்ற ஒன்று இருந்ததே தெரியாது.
 சோஷலிஸ்டுகள்1960, 1970-களில் தமிழக அரசியலில் முக்கிய பங்காற்றினார்கள். தன்னலமற்று மிகவும் எளிமையாக அவர்கள் வாழ்ந்தார்கள். ஏ. சுப்பிரமணியம், ஹெச்எம்எஸ். ராமையா போன்ற சோஷலிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தமிழகத்தில் தொழிற்சங்கங்களை வளர்த்தார்கள் என்பதை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.
 இன்றைக்கு தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கோ எஸ்எஸ்பி, பிஎஸ்பி கட்சிகள் இருந்தன என்பது தெரியாது. இதுதான் இன்றைக்கு நிலைமை. கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக்கூடாது, தமிழகத்துக்கு உரிமைகள் வேண்டும், மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் அரசிடம் அதிகாரம் குவிந்திருக்கின்றன என்று சோஷலிஸ்டுகள் தமிழக சட்டப்பேரவையில் பேசியது உண்டு.
 லோகியாவின் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் பேரவையில் கடுமையாக வாதாடுவார்கள். அது போலவே ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் இருந்த எஸ்எஸ்பி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் பேச வேண்டியதை அறிவுபூர்வமாக பேசுவார்கள். அவையெல்லாம் இன்றைக்கும் சட்டப்பேரவைக் குறிப்புகளில் உள்ளன.
 இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோகக்கூடாது என்று சோஷலிஸ்டுகள் வாதாடினார்கள். 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, மத்திய அரசு விரும்பும்போதெல்லாம் மாநில அரசுகளை கலைக்கக் கூடாது என்று பேசினார்கள். காட்சிக்கு எளிமையான சட்டப்பேரவை உறுப்பினர்களாக அவர்கள் அன்றைக்கு இருந்தார்கள்.
 பிஎஸ்பி கட்சித் தலைவர்கள் பொதுவாக ஹிந்தி ஆதரவாளர்களாக இல்லை. ஆனால் லோகியா நல்ல மனிதரான போதிலும், தீவிர ஹிந்தி பற்றாளராக இருந்தார் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். தலைவர்களாக ஜெயபிரகாஷ் நாராயணன் இருந்தார், ஆச்சாரிய நரேந்திர தேவ் இருந்தார். ராம் மனோகர் லோகியா அகில இந்திய தலைவராக இருந்தார். ஆச்சார்ய நரேந்திர தேவ் தமிழ்நாட்டின் ஈரோடு அரசினர் விடுதியில்தான் மறைந்தார்.
 காமராஜருக்கு எதிராக தமிழகத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்து சீர்திருத்த காங்கிரஸ் என தேர்தலில் போட்டியிட்டு 10, 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் 1950-களில் வெற்றி பெற்றனர் என்பது தெரியுமா? இதுதான் இன்று நமது அறிவு சார்ந்த புரிதல் நினைவு.
 இந்த வரலாற்றை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுவரை கொண்டு செல்லாதது யாருடைய பிழை? இன்றைக்கு உள்ள அரசியலை அறிந்தால் மட்டும் போதாது, கடந்த கால அரசியலையும் அறிந்து கொண்டால்தான் இன்றைய அரசியல் குறித்த சரியான புரிதல் வரும். அரசியலில் ஈடுபடுவோருக்கு வரலாறு தெரியவேண்டும், பொருளாதாரம் தெரியவேண்டும், உலக அரசியல் தெரிய வேண்டும், உலக நாடுகளுக்கிடையேயான உறவுகள் தெரிய வேண்டும், அகில இந்திய அரசியலில் என்ன நடந்தது என்று தெரிய வேண்டும்.
 பிஎஸ்பி, எஸ்எஸ்பி கட்சிகளின் கொள்கைகள் அருமையானவை. திராவிட இயக்கத்திற்கு எப்படி அண்ணா கொள்கைகளை வகுத்தாரோ, அதேபோல மக்களுக்கு ஏற்றவாறு, மக்கள் நல கொள்கைகளை வகுத்தவர்கள் சோஷலிஸ்டுகள்.
 
 கட்டுரையாளர்:
 அரசியலாளர்.



Read in source website

தொழில் வளர்ச்சிக்கு இணக்கமான சூழலை உருவாக்கும் மத்திய அரசின் அணுகுமுறையானது, தொழில் தொடங்குவதற்கான உரிமங்களைப் பெறுவதில் ஒற்றைச் சாளர முறை அறிமுகம், தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு மாறாகப் புதிய சட்டத் தொகுப்புகள் எனத் தொடங்கி, தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களின் தண்டனைப் பிரிவுகளைத் திருத்தம் செய்யும் அளவுக்கு வந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, காற்று மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1986, தண்ணீர் மாசுபாடு தடை மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1974 ஆகிய மூன்று சட்டங்களில் விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நீர்த்துப்போகச் செய்யும்வகையில் திருத்தங்களைச் செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.



Read in source website

இந்திய ஒடுக்கப்பட்டோர் அரசியல் வரலாற்றில் பாபா சாகேப் அம்பேத்கருக்கு (1891- 1956) முன்னோடியாகவும், சக பயணியாகவும் இருந்தவர் இரட்டைமலை சீனிவாசன் (1860 - 1945). அம்பேத்கர் பிறந்த ஆண்டில் ‘பறையர் மகாஜன சபை’யை உருவாக்கி, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக சீனிவாசன் போராடினார். 1900-ல் தென்னாப்பிரிக்கா சென்ற அவர், அம்பேத்கர் அரசியலில் நுழைந்த 1920-ல் தாயகம் திரும்பி தீவிர அரசியலை முன்னெடுத்தார்.

சில ஒற்றுமைகள்



Read in source website

‘இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரையிலான வானிலை கடந்த ஆண்டைவிடக் குளிராகவும் மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே ‘அபீலியன் நிகழ்வு’ என்று அழைக்கப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு 9 கோடி கி.மீ.

ஆனால், இந்த அபீலியன் நிகழ்வுக் காலத்தில் இரண்டுக்கும் இடையிலான தூரம் 15 கோடி கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது, 66% தூரம் அதிகரிக்கும்’ - இப்படி அறிவியலுக்குப் புறம்பான ஒரு போலிச் செய்தி வலைதளங்களில் அதிவேகமாகப் பரவிவருகிறது.



Read in source website

ஒரு சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை உயர் கல்வியில் எட்டப்படும் வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. வளரும் நாடான இந்தியா, உயர் கல்வி சார்ந்த வளர்ச்சியில் எங்கே இருக்கிறது? அதற்கு முன்னர் உயர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் சில நாடுகளின் நிலையைப் பார்ப்போம்.

டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற இந்தியாவைவிடச் சிறிய நாடுகள். இந்த நாடுகளில் உயர் கல்வி கற்பதற்கான கல்லூரி-பல்கலைக்கழகம் இரண்டிலுமே கல்விக் கட்டணம் கிடையாது. மக்கள்தொகையிலும் பொருளாதார நிலையிலும் நம்மை ஒத்த ஜெர்மனியில் உயர் கல்வி வரை எந்தக் கட்டணமும் இல்லை.

அமெரிக்காவின் நியூயார்க் கிராஸ்மன் மருத்துவக் கல்வியகத்தில் கடந்த ஆண்டு வித்தியாசமான ஒரு முயற்சி நடந்தது. தங்களது கல்வியகத்தின் முதுநிலை மருத்துவ (எம்.டி.) படிப்பிற்கான அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும், பொது நிகழ்ச்சிகள் நடத்திப் பணம் வசூலித்து, அந்தக் கல்வியகமே செலுத்திவிட்டது.

டென்மார்க்கில் கடந்த ஆண்டு முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பிற்கு வெளியில் இருந்து வந்து உயர்கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டணம் நிர்ணயித்துச் சட்டம் இயற்றப்பட்டது.

இதேபோல அயல்நாடுகளிலிருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு மட்டும் பல்கலைக்கழகக் கட்டணத்தை நிர்ணயிக்க பின்லாந்து அரசு முயன்றபோது ‘கல்வி கற்கக் கட்டணமா, கூடவே கூடாது’ என்று பொது விவாதம் மூலம் மக்கள் அந்த முயற்சியைத் தோற்கடித்தனர். உடனடியாக பின்லாந்து அரசும் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

கட்டணமற்ற கல்வியும் மகிழ்ச்சித் தரவரிசையும்

மக்களுக்குக் கட்டணமின்றித் தரமான கல்வியை வழங்கும் பின்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மூன்று விஷயங்களில் நம்மைவிடப் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன. உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அவைதான் முதல் ஆறு, ஏழு இடங்களை ஆண்டுதோறும் பிடிக்கின்றன (கடந்த ஆண்டு இந்தியா 129-வது இடத்தைப் பெற்றது).

உலக கல்வித் தரவரிசைப் பட்டியலிலும் கட்டணமற்ற கல்வி தரும் நாடுகளே முதல் 10 இடங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளன (இந்தியா 132-வது இடத்தில் உள்ளது). அவர்களுடைய சமூகங்களில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அதிகபட்ச மாதச் சம்பளம் பெறுகிற அளவுக்கு பட்ஜெட்டில் போதிய தொகையைக் கல்வித் துறைக்கு அந்நாடுகள் ஒதுக்குகின்றன.

கட்டணக் கல்வியின் பின்விளைவுகள்

இந்தப் பின்னணியில் உயர் கல்வித் துறை சார்ந்து இந்திய அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்போது ஏமாற்றமே ஏற்படுகிறது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

பொறியியல் படிப்புக்கான குறைந்தபட்சக் கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்திய, அகில இந்திய பொறியியல் கல்வி கவுன்சிலின் (AICTE) சமீபத்திய அறிவிப்பு அதிர்ச்சியைத் தருகிறது. ஒருவர் தொழிற்கல்விப் படிப்பை முடிக்கும் முன்பே வங்கிக் கடனாளி ஆகும் நிலை நிதர்சனமாக உள்ளது.

இந்தியக் கல்வித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு 2014-ல் 17 சதவீதமாக இருந்தது, தற்போது 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. பள்ளிக்குள் நுழையும் 100 மாணவர்களில் இந்திய அளவில் 19 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கிறார்கள். தமிழகம் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் கல்லூரிக்கு அனுப்புகிறது.

ஆனால், உயர்ந்துவிட்ட கல்விக் கட்டணத்துக்காகக் கடன் பெற்றும் நிலபுலனை விற்றும் பெறப்படும் கல்வியால், ‘போட்ட பணத்தை எப்படியாவது திரும்ப எடுத்துவிட வேண்டும்’ எனும் மனநிலையில் எதிர்கால வருமானத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பட்டதாரிகள் உருவாகிறார்கள்.

சேவை மனப்பான்மை, அர்ப்பணிப்பு, சமூக நலன் சார்ந்த உழைப்பு போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றன. இந்நிலையில், உயர் கல்விக்கும் சேர்த்து ஒரு மாற்று வழியைத் தமிழக அரசு நியமித்துள்ள மாநிலக் கல்விக் கொள்கைக் குழு வழங்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

- ஆயிஷா இரா. நடராசன், கல்வியாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com



Read in source website