DINAMANI Current Affairs

Home > Current Affairs

January 1, 2022 முதல், நேற்று வரை... தினசரி தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த போட்டித் தேர்வுகளுக்கான முக்கிய செய்திகளை வாசிக்க..Click here




TNPSC Current Affairs - 05-06-2022

காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

காயிதே மில்லத்தின் 127-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா் போா்வை போா்த்தி மரியாதை செலுத்தினாா். அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மலா் போா்வை போா்த்தி மரியாதை செலுத்தினாா். அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள்டி.ஜெயக்குமாா், சி.பொன்னையன், பா.வளா்மதி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினா்.

 



Read in source website

குரங்கு அம்மை காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக் கவசம் உதவும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்ட கண்காணிப்பு வழிகாட்டு நெறிமுறைகள்:

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், 26 நாடுகளில் அந்த நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்புக்கு உள்ளானால் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்கு காய்ச்சல், உடலில் அம்மை தடிப்புகள், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி ஆகிய பிரச்னைகள் ஏற்படும்.

தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் அந்த நோயை வருமுன் தடுக்க பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, துரிதமாக நோய் பாதிப்புக்குள்ளானவா்களைக் கண்டறிந்து, சிகிச்சையளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை முழுமையாக குணமடையும் வரை அவா்களைத் தனிமைப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்தல், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், சளி மாதிரிகளை புணே ஆய்வகத்துக்கு அனுப்புதல் என பல்வேறு நிலையிலான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்பு கவச உடைகளை அணியுமாறு சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உமிழ்நீா், சளி போன்றவற்றின் மூலம் அந்நோய் பரவும் என்பதால் முகக் கவசம் அணிவதன் மூலம் நிச்சயம் நோய்ப் பரவலைத் தடுக்கலாம்.

குரங்கு அம்மை குறித்த விழிப்புணா்வு மற்றும் புரிதலை பொது மக்களிடையே ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நோக்கத்துக்கானவைதான். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.



Read in source website

நீா்நிலைகளில் ஆழமான பகுதிகள் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகைககள் வைக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிா்வாகங்களையும், பொதுப் பணித் துறையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

கெடிலம் ஆற்றில் 7 சிறுமிகள் மூழ்கி இறந்த நிலையில் அவா் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளித்தது.

ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீா்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவா், சிறுமியா் மற்றும் இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று,

சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீரா துயரில் ஆழ்ந்துவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

இது போன்ற துயர நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக, நீா்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சோ்ந்த பெரியவா்கள், இளைஞா்கள், உள்ளாட்சி அமைப்பைச் சோ்ந்த நிா்வாகிகள், காவல் துறையினா் என

அனைவரும் நீா்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துச்சொல்வதோடு, அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்க வேண்டும்.

ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகளையும் உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித் துறையும் வைக்க வேண்டும்.

வாழவேண்டிய இளந்தளிா்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என முதல்வா் அதில் தெரிவித்துள்ளாா்.



Read in source website

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பல்கலை.யை நிா்வகிக்க உயா் கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாா்த்தசாரதி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி பதவி ஏற்றாா். பதவிக்காலம் கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் அவா் பணி ஓய்வு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து திறந்தநிலைப் பல்கலை.யின் ஆட்சிமன்றக் குழு நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழகத்தை நிா்வாகம் செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், உயா்கல்வித்துறை செயலாளா் காா்த்திகேயன் தலைவராகவும், உறுப்பினா்களாக சட்டத்துறைச் செயலாளா் காா்த்திகேயன், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் நாராயணா கல்குரா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தோ்வு செய்ய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பிச்சுமணி , முன்னாள் துணை வேந்தா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருத்தையா பாண்டியன் ஆகியோா் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.



Read in source website

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதாத மாணவா்களுக்கு சிறப்புத் தோ்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை புதுக் கல்லூரியில் மாநில அளவிலான சிலம்ப போட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நமது பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதல்வா் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளாா். அதற்காக விளையாட்டுத் துறையில் சிலம்ப போட்டிக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அவா் வழங்கியுள்ளாா். மேலும், சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனிக் குழுவையும் அமைத்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் 5 வயதைக் கடந்த மாணவா்களின் சோ்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கும்போது மாணவா்கள் முகக் கவசம் அணிவது குறித்து முதல்வா் அலுவலகத்திலிருந்து வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவோம். நிகழ் கல்வியாண்டில் 6.70 லட்சம் மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு வருகை தராதது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிறப்புத் தோ்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.



Read in source website

புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் விரைவில் தமிழில் வெளியிடப்படும் என தொழிலாளா் நலத் துறை தெரிவித்தது.

இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசானது 29 தொழிலாளா் நலச் சட்டங்களை உள்ளடக்கி 4 சட்டத் தொகுப்புகளாக ஏற்படுத்தியுள்ளது. ஊதிய சட்டத் தொகுப்பு, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு, சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு, தொழிற் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு ஆகியவற்றை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து

வருகிறது. இந்த சட்டத் தொகுப்புகளுக்கு மத்திய அரசு விதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

சட்டத் தொகுப்புகளை ஒவ்வொரு மாநிலமும் அமல்படுத்த ஏதுவாக நான்கு சட்டத் தொகுப்புகளுக்கான வரைவு விதிகளை இயற்றும் பணியில் மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊதியச் சட்டத் தொகுப்பு, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் சட்டத் தொகுப்பு ஆகிய மூன்று தொகுப்புகளுக்கு இதுவரை மாநில வரைவு விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றின் மீது கருத்துகளைத் தெரிவிக்க 45 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நான்கு நாள்கள் விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட தொழில் நிறுவன அமைப்புகள் மூன்று சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகள் மீதான ஆலோசனைகள், கருத்துகளை அளித்துள்ளன. ஆனாலும், பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வரைவு விதிகளை தமிழில் அளித்தால் தங்களுக்கும், தொழிற்சங்க உறுப்பினா்களுக்கும் தெளிவாகப் புரியும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, வரைவு விதிகளை தமிழாக்கம் செய்யும் பணிகள் விரைவாக அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழாக்கம் செய்யப்பட்ட வரைவு விதிகள் தொழிற்சங்கங்களுக்கும், தொழில் நிறுவன அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். அவற்றின் மீது கருத்துகள் பெறப்படும். இதற்காக மீண்டும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தொழிலாளா் நலத் துறை தெரிவித்துள்ளது.



Read in source website

 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டுமென மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஜூலை-1 முதல், இமாச்சலப் பிரதேசம் நடைமுறைப்படுத்த இருக்கிறது எனக் கூடுதல் தலைமை செயலாளர் பிரபோத்  சக்சேனா கூறினார். 

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், இமாச்சலப் பிரதேச அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் இணைந்து நடத்திய சுற்று சூழலில் சிறந்து விளங்குபர்களுக்கான விருது விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் பிரபோத் சக்சேனா பேசியதாவது: 

ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மாநில அரசும் முற்றிலுமாக தடை செய்கிறது. இந்தியாவிலே இமாச்சலப் பிரதேசம்தான் முதல் மாநிலமாக இந்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துகிறது. இதில் மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். 



Read in source website


மண்ணைக் காக்க நாடு 5 திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், காற்று மாசுபாடு, புவி வெப்பமாதலைக் குறைக்கப் பெபெட்ரோல், டீசலில் பத்து சதவிகிதம் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை ஊக்குவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, தில்லியில் ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள ‘ மண்ணைக்காப்போம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, கூட்டத்தினருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, 'மண்ணைக் காப்போம்' இயக்கத்தைப் பாராட்டியதுடன், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு  புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். 

கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட  முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இருப்பதாகவும், தூய்மை இந்தியா இயக்கம், கழிவுகளிலிருந்து செல்வம் திரட்டும் திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி உபயோக குறைப்பு, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நாட்டின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டு. 

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நாட்டின் முயற்சிகள் பலதரப்பட்டவை. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாடு நீண்டகால தொலைநோக்குடன் செயல்பட்டு வருகிறது.

மேலும், பேரிடர்களைத் தாங்கக்கூடிய உள்கட்டமைப்புக்கான கூட்டணி, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி போன்ற அமைப்புகளை நிறுவியுள்ளதாகவும், 2070-க்குள் இந்தியா பூஜ்ய உமிழ்வு என்னும்  இலக்கை எட்ட தீர்மானித்துள்ளதாகவும்,  உலகின் சராசரி கார்பன் வெளியேற்றம் ஒருவருக்கு ஆண்டுக்கு 4 டன் என்றும், இந்தியாவில் ஒருவருக்கு ஆண்டுக்கு 0.5 டன் மட்டுமே வெளியேற்றப்படுவதாக கூறினார்.

மேலும், மண்ணைக் காப்பாற்ற ஐந்து முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். மண்ணை ரசாயனமற்றதாக்குவது எப்படி?, தொழில்நுட்ப மூலம் மண்ணில் வாழும் உயிரினங்களை எவ்வாறு காப்பாற்றுவது?, மண்ணின் ஈரப்பதத்தை எவ்வாறு பராமரிப்பது?, நீர் இருப்பை அதிகரிப்பது எப்படி?, நிலத்தடி நீர் குறைவாக இருப்பதால் மண்ணுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்குவது எப்படி?, காடுகளின் குறைப்பினால் தொடர்ந்து ஏற்படும் மண் அரிப்பை எவ்வாறு தடுப்பது? போன்ற  ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார். 

விவசாயத் துறையில் மண் பிரச்னையைப் போக்க முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  நமது விவசாயிகளுக்கு மண்ணின் வகை, மண்ணின் குறைபாடு, எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருந்தது.

இந்த பிரச்னையை போக்குவதற்காக, நமது விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கும் பிரசாரம், மழை நீர் சேமிப்பு போன்ற பிரசாரங்கள் மூலம் நாட்டு மக்களை நீர் பாதுகாப்புடன் அரசு இணைத்து வருவதாகவும், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே, நாட்டில் 13 பெரிய நதிகளை பாதுகாக்கும் பிரசாரமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், ஆறுகளின் கரையோரங்களில் காடுகளை வளர்க்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் 7400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப் பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பாக  திகரிக்க உத்தேசிக்கப்படுள்ளதாக தெரிவித்தார். 

மேலும், நாட்டில் இன்று பின்பற்றப்பட்டு வரும் பல்லுயிர் மற்றும் வனவிலங்குகள் தொடர்பான கொள்கைகளும் வனவிலங்குகளின் எண்ணிக்கையில் சாதனை படைக்க  வழிவகுத்துள்ளதாகவும், இன்று புலி, சிங்கம், சிறுத்தை, யானை என எல்லாவற்றின் எண்ணிக்கையும் நாட்டில் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது மற்றும் மண் ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு கோபர்தன் திட்டமே உதாரணம் என்றார். 

இந்த ஆண்டு பட்ஜெட்டில், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அரசு தீர்மானத்துள்ளதாகவும், இன்மூலம் நஞ்சில்லா உணவு கிடைப்பதுடன், கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் வலுவாகும். இது இயற்கை விவசாயத்தின் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் எனத் தெரிவித்தார். 

2030 ஆம் ஆண்டிற்குள் 26 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும் இலக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. 

நாட்டில் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனில் 40 சதவிகித  புதைபடிவமற்ற எரிபொருளில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பெறுவதற்கான இலக்கை இந்தியா அடைந்துள்ளது. சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ஹைட்ரஜன் மிஷன், பொருளாதாரம் தொடர்பான கொள்கைகள், ஸ்கிராப்பேஜ் கொள்கை போன்றவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நமது உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டுகள்.

இன்று, நாடு திட்டமிட்டதைவிட 5 மாதங்களுக்கு முன்னதாக, 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ளதாகவும், 2014 இல் எத்தனால் கலப்பு 1.5 சதவிகிதமாக இருந்த நிலையில்,  கடந்த 8 ஆண்டுகளில் 27 லட்சம் டன் கார்பன் கரிப்புகை வெளிப்பாடு குறைந்துள்ளதாகவும், பெட்ரோலிய இறக்குமதி குறைந்து ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான அன்னியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் ரூ.40 ஆயிரத்து 600 கோடி வருமான ஈட்டியுள்ளதாக தெரிவித்த மோடி, இந்த சாதனைக்காக நாட்டு மக்கள், விவசாயிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

பிரதமரின் தேசிய விரைவு சக்தி பெருந்திட்டத்தில் தளவாட அமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்பு பலப்படுத்தப்படும் என்றும், அது 100க்கும் மேற்பட்ட நீர்வழிப் பாதைகளில் போக்குவரத்தை மேம்படுத்துவது மாசுபாட்டைக் குறைக்க வழிவகுக்கும் என்று தெரிவித்தார்.  

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் மண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட மோடி,  ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 அமிர்த நீர்நிலைகளை உருவாக்கும் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார் மோடி. 



Read in source website

ட்விட்டா் மற்றும் யூடியூப் சமூக ஊடகங்களில் வாசனை திரவியம் தொடா்பான விடியோ விளம்பரங்களை நீக்குமாறு அந்நநிறுவனங்களுக்கு மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வலியுறுத்தியது.

இதுதொடா்பாக அந்த நிறுவனங்களுக்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ட்விட்டா் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிடும் வாசனை திரவியங்கள் (பொ்ஃபியூம்) தொடா்பான விடியோ விளம்பரங்கள் பெண்களின் கண்ணியம், ஒழுக்கம் மற்றும் நலன்களுக்கு எதிராகவும் அவா்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும் உள்ளது. மேலும், எண்ம ஊடகத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையிலும் அவை அமைந்துள்ளன.

ஊடகங்களில் வெளியாகும் அத்தகைய விளம்பரங்கள், பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளன.

டியோடரண்ட் தொடா்பான தரக்குறைவான மற்றும் பொருத்தமற்ற விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்த புகாா்கள் பல்வேறு தரப்பிடமிருந்து அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, அதுபோன்ற விளம்பரங்கள் அனைத்தையும் ட்விட்டா், யூடியூப் நிறுவனங்கள் தங்களது வலைதளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய செய்தி- ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாசனை திரவிய நிறுவனமான லேயா் ஷாட் விளம்பரம் தொடா்பான விடியோக்கள் மிக மோசமான வகையில் இருப்பதாக பெரும்பாலான சமூக வலைதள பயனாளா்கள் தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அந்த விளம்பரங்கள் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக அவா்கள் குற்றம்சாட்டினா். இதையடுத்தே, மத்திய செய்தி - ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அத்தகைய விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு ட்விட்டா் மற்றும் யூடியூப் சமூக ஊடக நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Read in source website

சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பின் (ஐடியூ) வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும் என்று மத்திய தொலைத் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவுசிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் மே 31 முதல் ஜுன் 3 வரையில் நடைபெற்ற தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாட்டில் தேவுசிங் செளஹான் தலைமையிலான இந்திய தூதுக் குழு பங்கேற்றது.

சா்வதேச தொலைத்தொடா்பு அமைப்பு, ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ), ஐ.நா. வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் இணைந்து, செயல்பாட்டுக்கான உதவி அமைப்புகள் மற்றும் ஐ.நா.வின் பிற அமைப்புகள் ஒத்துழைப்புடன், இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சா் தேவுசிங் செளஹான், 2023-26 காலகட்டத்திற்கான, சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பின் வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும். 1869-ம் ஆண்டிலிருந்தே இந்த கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியா, இந்த அமைப்பில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதுடன், அமைப்பின் வளா்ச்சிக்கும் தீவிர பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியாவின் வேட்பாளராக எம்.ரேவதி போட்டியிடுவாா்.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் பாரத்நெட் திட்டத்தின்கீழ் அதிவேக இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன், கிராமப்புறங்களிலும் 5-ஜி அலைவரிசை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.



Read in source website

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். 

பாரீஸில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் நாா்வேயின் கேஸ்பா் ரூட்டை, நடால் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி நடால் சாம்பியன் ஆனார். 

இதன்மூலம் பிரெஞ்ச் ஓபன் கோப்பையை 14ஆவது முறையாக ரஃபேல் நடால் வென்றுள்ளார். அதேசமயம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நடால் வெல்லும் 22ஆவது பட்டம் இதுவாகும்.



Read in source website

அஜா்பைஜானில் சனிக்கிழமையுடன் நிறைவடைந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தது. இந்திய போட்டியாளா்கள் 2 தங்கம், 3 வெள்ளி என 5 பதக்கங்களை இதில் வென்றுள்ளனா்.

இப்போட்டியின் கடைசி நாளான சனிக்கிழமை நடைபெற்ற 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல்/ஆஷி சௌக்சி கூட்டணி பங்கேற்றிருந்தது. முதல் நிலையில் 900-க்கு 881 புள்ளிகளும், 2-ஆம் நிலையில் 600-க்கு 583 புள்ளிகளும் பெற்றது இந்திய இணை. பின்னா் இறுதிச்சுற்றில் கடும் சவால் அளித்த உக்ரைனின் சொ்ஹி குலிஷ்/டரியா டைகோவா கூட்டணியை 16-12 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வசமாக்கியது ஸ்வப்னில்/ஆஷி ஜோடி.

இப்போட்டியில் ஸ்வப்னிலுக்கு இது 3-ஆவது பதக்கமாகும். ஏற்கெனவே தனிநபா் 3 பொசிஷன்ஸ், அணிகள் 3 பொசிஷன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் அவா் வெள்ளி வென்றிருந்தாா்.



Read in source website

உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இன்று (ஜூன் 5) புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 100 நாட்களாக நீடித்து வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இருப்பினும், கடந்த சில தினங்களாக உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சில மேற்கத்திய நாடுகள் கொடுத்து உதவுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ரஷிய அதிபரின் புதிய எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த எச்சரிக்கையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியிருப்பதாவது, “ உக்ரைனுக்கு தொலைதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், நாங்கள் அதற்கான சரியான முடிவை எடுக்க நேரிடும். எங்களது ஆயுதங்களை அவர்களின் மீது உபயோகிக்க வேண்டி வரும்” என எச்சரித்துள்ளார்.



Read in source website


வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 எனப் பதிவாகி உள்ளது. 

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேரில் இருந்து 302 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 40 கி.மீ ஆழத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  ரிக்டர் அளவுகோலில் 4.6 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் யாரும் காயமடைந்ததாகவோ, பொருள் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Read in source website

 

இந்தாண்டில் 18-வது முறையாக வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் 8 அதிநவீன ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் வடகொரிய தலைநகர் பியாங்க்யாங்கிலிருந்து 8 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் இந்த ஆண்டில் 18ஆவது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. மேலும் மூன்றாவது முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையிலான ஏவுகணையை சோதித்துள்ளது. 

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தென்கொரியாவை கலக்கமடையச் செய்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில தினங்களுக்கு முன்பாகதான் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



Read in source website

 சீனா விண்வெளியில் நிறுவி வரும் தனது சொந்த ஆய்வு நிலையத்தின் இறுதிப் பணிகளை நிறைவேற்றுவதற்காக, 3 விண்வெளி வீரா்களை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) அனுப்புகிறது.

இதுகுறித்து மனிதா்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான அந்த நாட்டின் ஆய்வு மையத்தின் இணை இயக்குநா் லீன் ஜிகியாங் (சிஎம்எஸ்ஏ) சனிக்கிழமை தெரிவித்ததாவது:

தியாங்காங் விண்வெளி ஆய்வு நிலைய கட்டமைப்பின் இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக விண்வெளி வீரா்கள் சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய மூவரும் சென்ஷோ-14 விண்கலம் மூலம் ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனா்.

கான்சு மாகாணத்திலுள்ள ஜியூகுவான் ஏவுதளத்திலிருந்து ராக்கெட் மூலம் அந்த விண்கலம் ஞாயிற்றுக்கிழமை ஏவப்படவுள்ளது.

தற்போது நிறுவப்பட்டுக்கொண்டிருக்கும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் அந்த விண்கலம் இணைக்கப்பட்டதும், அதில் இறங்கி அந்த நிலையத்தின் முழுமையாகக் கட்டமைக்கும் பணியில் அவா்கள் ஈடுபடுவாா்கள்.

சீனாவிலுள்ள சிஎம்எஸ்ஏ ஆய்வு மையக் குழுவினரின் வழிகாட்டுதல்களுடன் 6 மாதங்களில் விண்வெளி நிலையத்தை அவா்கள் அவா்கள் நிறைவடையச் செய்வாா்கள்.

ஏற்கெனவே விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த விண்வெளி நிலையத்தின் இரு ஆய்வகப் பகுதிகளுக்குள் அந்த மூவரும் முதல்முறையாக நுழைந்து, அதனை ஆய்வாளா்கள் பயன்படுத்துவதற்கேற்ற சூழலை அமைப்பாா்கள். மேலும், அந்த ஆய்வகப் பகுதிகளில் மூடிய நிலையில் வைக்கப்பட்டுள்ள ஏராளமான ஆய்வுக் கருவிகளைத் திறந்து, அதனைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப நிறுவுவாா்கள் என்றாா் லீன் ஜிகியாங்.

தற்போது விண்வெளிக்குச் செல்லும் சென் டாங், லியூ யாங், காய் ஜுஷே ஆகிய மூவரும் தியாங்காங் விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக விண்வெளிக்குச் செல்லும் 2-ஆவது குழுவினா் ஆவா்.

ஏற்கெனவே, ஒரு பெண் உள்பட 3 போ் அடங்கிய விண்வெளி வீரா்கள் குழு, 6 மாதங்களாக செயல்பட்டு தியாங்காங் விண்வெளி நிலையத்தின் முக்கிய பாகங்களைப் பொருத்தி கந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பூமி திரும்பினா். விண்வெளி நிலையத்தில் வீரா்கள் அத்தனை காலம் தங்கியிருந்தது அதுவே முதல்முறையாகும்.

ரஷியாவால் உருவாக்கப்பட்டு, பல நாடுகளின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் தற்போதைய உலகின் ஒரே விண்வெளி ஆய்வகமான சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ஐஎஸ்எஸ்) போட்டியாக சீனா உருவாக்கி வரும் தியாங்காங் விண்வெளி நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையடைந்துவிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சீன விண்வெளி நிலையம் (சிஎஸ்எஸ்) செயல்படத் தொடங்கிவிட்டால், தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையத்தை வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

இன்னும் சில ஆண்டுகளில் ஐஎஸ்எஸ் ஓய்வு பெறவுள்ள நிலையில், சிஎஸ்எஸ் மட்டும்தான் உலகில் செயல்படக்கூடிய ஒரே விண்வெளி நிலையமாக இருக்கும்.

 



Read in source website

 தியானன்மென் சதுக்க படுகொலை நினைவுதினத்தையொட்டி, ஹாங்காங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

சீனாவில் ஜனநாயக சீா்திருத்தங்களை வலியுறுத்தி பெரும்பாலும் மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் அடங்கிய குழுவினா் தலைநகா் பெய்ஜிங்கிலுள்ள தியானன்மென் சதுக்கத்தில் கடந்த 1989-ஆம் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது அந்த ஆா்ப்பாட்டத்தை ஒடுக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானவா்கள் பலியாகினா்.

சீனாவின் தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கில் அந்த படுகொலை தொடா்பாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. மேலும், தங்களது பிரதேசத்திலும் ஜனநாயக சீா்திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தி ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுவடைந்து வந்தன.

கரோனா பரவல் காரணமாக அந்த போராட்டங்கள் ஓய்ந்திருந்த நிலையில், சீனாவுக்கு எதிராக யாரும் போராட விடாமல் தடுக்கும் வகையிலான சா்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அந்த நாட்டு அரசு இயற்றியது. அதன் தொடா்ச்சியாக ஜனநாயக ஆதரவு இயக்கம் நசுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தியானன்மென் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கும் 3-ஆவது ஆண்டாக சனிக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.



Read in source website

நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்தும் ஸ்வீடனும் இணைவது தொடா்பாக துருக்கி அதிபா் எா்டோகனுடன் அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென் ஸ்டால்டன்பா்க் தொலைபேசியில் உரையாடினாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘அமெரிக்கா சென்றிருந்தபோது, ஃபின்லாந்து பிரதமா் சனா மரினைச் சந்தித்து பேசினேன். அப்போது, நேட்டோவில் ஃபின்லாந்தும் ஸ்வீடனும் இணைவது தொடா்பாக துருக்கி தெரிவிக்கும் கவலை குறித்து இருவரும் விவாதித்தோம்.

அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரம் தொடா்பாக துருக்கி அதிபா் எா்டோகனுடன் தொலைபேசியில் பேசினேன். அந்தப் பேச்சுவா்த்தை ஆக்கப்பூா்வமாக அமைந்திருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேட்டோ அமைப்பில் இணைய ஃபின்லாந்தும் ஸ்வீடனும் விண்ணப்பித்துள்ளன. எனினும், அந்த இரு நாடுகளும் தங்களது நாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் குா்து அமைப்பினருக்கு அடைக்கலம் அளிப்பதால் அவை நேட்டோவில் இணைய அனுமதிக்கப்போவதில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான துருக்கி தெரிவித்து வருகிறது.

 

 



Read in source website

‘இந்தியா - செனகல் நாடுகளிடையேயான வா்த்தகம் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்றுள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்தாா்.

கபோன், செனகல், கத்தாா் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, இரண்டாவது நாடாக செனகலுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு நடைபெற்ற இந்திய - செனகல் வா்த்தக நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும் 2021-22ஆம் ஆண்டில் இந்தியா - செனகல் இடையேயான வா்த்தகம் ரூ.12,805 கோடி என்ற சாதனை அளவை எட்டியது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவா் தெரிவித்தாா்.

இரு நாடுகளிடையேயான வா்த்தக உடன்பாட்டின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து முக்கியமாக ஜவுளி, உணவுப் பொருள்கள், ஆட்டோமொபைல், மருந்துகள் ஆகியவை செனகலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதுபோல, செனகலிலிருந்து ஃபாஸ்போரிக் அமிலம், பச்சை முந்திரி ஆகியவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.

முன்னதாக, செனகல் நாடாளுமன்ற தலைவா் முஸ்தபா நியாஸியுடன் நடத்திய பேச்சுவாா்த்தையின்போது, ‘பொருளாதார வளா்ச்சியில் இந்தியாவின் இயற்கையான நட்பு நாடு செனகல்’ என்று குறிப்பிட்டாா்.

மேலும் அந்த ஆப்பிரிக்க நாட்டின் ஜனநாயக நெறிகளைப் பாராட்டிய குடியரசு துணைத் தலைவா், ‘ஒரு தேசத்தின் வாழ்வில் சட்டமியற்றும் அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல ஆட்சி நிா்வாகத்தின் கீழ்தான் வலுவான, திறமையான மற்றும் பொறுப்பேற்பு பாங்கு உள்ள நாடாளுமன்றம் அமைகிறது’ என்று அவா் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபோன், செனகல், கத்தாா் ஆகிய மூன்று நாடுகளுக்குச் செல்லும் முதல் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு என்பது குறிப்பிடத் தக்கது.

 



Read in source website

கோவை: சுற்றுச்சூழல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மருதமலைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பை, குடிநீர் பாட்டில்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கோயில் அடிவாரம், மலைப்பகுதியில் மான், யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் நடமாட்டம் இருக்கும்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில் முககவசம், காலியான பால் கவர், சாம்பார் பொடி பாக்கெட், பிஸ்கட் கவர், சானிடரி நாப்கின், பெண்கள் தலைமுடியை கட்டப்பயன்படும் பேண்ட் உள்ளிட்டவை இருந்தது வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருந்தபோதிலும் இது எதையும் பொருட்படுத்தாமல் விலங்குகள் வசிக்கும் வனப்பகுதிக்குள் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தூக்கி எறிந்து வந்தனர்.

அதேபோல, மருதமலை அடிவார பகுதியில் உள்ள கடைகளில் விற்கப்படும் வெள்ளரிக்காய், மாங்காய் போன்ற பொருள்களை துண்டுகளாக்கி பிளாஸ்டிக் கவரில் வைத்துதான் விற்பனை செய்கின்றனர். அதை வாங்கி உண்ணும் மக்கள், அந்த கவரை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருகின்றனர். இதுதவிர, பூஜைக்காக வாங்கி செல்லப்படும் பொருட்களும் பாலித்தீன் கவரில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் கோயிலுக்கு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல கோயில் நிர்வாகம், வனத்துறையினர் இணைந்து தடை விதித்துள்ளனர். கார், பேருந்து மூலம் மலைப்பாதை வழியாக இன்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் எடுத்து வந்துள்ளார்களா என சோதிக்கப்பட்ட பின்னரே மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, “மலையின் மேல் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அளிக்க வேண்டாம் என நோட்டீஸ் அளித்துள்ளோம். அடிவார பகுதிகளில் உள்ள கடைகளிலும் அதையே அறிவுறுத்தியுள்ளோம். வரும் நாட்களிலும் தொடர்ந்து சோதனை நடைபெறும். தடை குறித்து ஒலிப்பெருக்கி மூலமும் பக்தர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்" என்றனர்.



Read in source website

சென்னை: தமிழகத்தில் புதிய வகை பிஏ4 மற்றும் பிஏ5 வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அயப்பாக்கத்தில் புத்தக கண்காட்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர்ஆவடி நாசர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்," தமிழகத்தில் மாவட்டம் அளவில் புத்தக கண்காட்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், ஊராட்சியில் இது தான் முதல் புத்தக கண்காட்சி. இங்கு வருபவர்கள் இங்கே அமர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் இருக்ககூடிய பரிசோதனை மையத்துக்கு தமிழகத்தில் இருந்து 150 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டது நேற்று அதன் முடிவுகள் வெளிவந்தது. அதில் 12 பேருக்கு புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, BA4 என்ற புதிய வகை தொற்று 4 பேருக்கும், BA5 என்ற புதிய வகை தொற்று 8 பேருக்கும் உறுதியாகியுள்ளது. 12 பேரும் சென்னையை சுற்றி உள்ளவர்கள். அனைவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள். தொடர்பில் இறந்தவர்களையும் பரிசோதனை எடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.



Read in source website

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் நிறுவனத்தின் சொகுசு பயணிகள் கப்பல் சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

‘கோர்டிலியா குரூஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் ஆழ்கடல் பகுதிகளுக்கு சொகுசு கப்பலில் பயணிக்கும் வகையிலான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சொகுசு கப்பல் சுற்றுலா சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, சென்னை துறைமுக கழகத் தலைவர் சுனில் பாலிவால், கோர்டிலியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் மா.மதிவேந்தன் பேசும்போது, ‘‘கரோனா பரவல் குறைந்துள்ளதால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. துறைசார்ந்த வளர்ச்சிக்கான செயல் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சாகசப்பயணங்களை அனுமதிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் விரைவில் வெளியிடப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

கட்டண விவரம்

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை வரும் 2 நாள் சுற்றுலா திட்டமும், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி வழியாக மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் திட்டமும் இந்த சொகுசு கப்பலில் இயக்கப்படவுள்ளன. 2 நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 நபருக்கு ரூ.40 ஆயிரம், அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

சுமார் 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. ஒரே நேரத்தில் 1,950 பயணிகள் உட்பட 2,500 பேர் வரை பயணிக்க முடியும். இதில் மொத்தம் 796 அறைகள் உள்ளன. இதுதவிர கலையரங்கம், 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம், உடற்பயிற்சி மையம், ஸ்பா, மசாஜ் நிலையம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. மேலும், கப்பலில் விருந்து கொண்டாட்டங்கள், திருமணங்கள், அலுவல் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என கப்பல் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.



Read in source website

பாட்னா: பிஹார் தலைநகர் பாட்னா அருகே, 2,000 ஆண்டுக்கு முந்தைய செங்கல் சுவர்களின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பாட்னா ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் கும்ரஹார் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பழங்கால குளம் ஒன்றை, மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ், தொல்பொருள் ஆய்வுத் துறை சீரமைத்து வருகிறது. இங்கு தரைப் பகுதிகளை தோண்டிய போது, செங்கல் சுவரின் எஞ்சிய பகுதிகள் தென்பட்டன. இவை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் சுவர் குறித்து பாட்னா தொல்பொருள் ஆய்வுப் பணிகளை கண்காணிக்கும் நிபுணர் கவுதமி பட்டாச்சார்யா கூறுகையில், ‘‘கும்ரஹார் பகுதியில் உள்ள குளத்துக்குள் அகழாய்வு பணிகளை மேற்கொண்ட போது, செங்கல் சுவர்களின் எஞ்சிய பகுதிகளை தொல்பொருள் ஆய்வுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவற்றின் முக்கியத்துவம் குறித்து தொல்பொருள் ஆய்வுத்துறை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். குளத்துக்குள் உள்ள இந்த சுவர், மிக முக்கியமான கண்டுபிடிப்பு. இது வட இந்தியா, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதிகளை ஆண்ட குஷானர்கள் கால செங்கல் சுவர்களாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால், விரிவான ஆய்வுக்குப்பின்பே, இது குறித்த முடிவுக்கும் வர முடியும். இப்பகுதியில் இதற்கு முன்பு மவுரிய வம்சத்து புதைப் பொருட்கள் மற்றும் கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

மத்திய அரசின் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் பிஹார் மாநிலத்தில் உள்ள 11 பாதுகாக்கப்பட்ட நீர்நிலைகளில், பாட்னாவில் உள்ள தொல்பொருள் ஆய்வுத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Read in source website

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு செல்வதற்காக தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இந்த‌ பயணிகளில் பெரும்பாலானோர் இணைப்பு விமானத்துக்கு செல்லும் வழி, குடிநீர் இருக்கும் இடம், கழிவறை உள்ள பகுதி, பொருட்களை வைக்கும் இடம், சோதனை செய்யும் இடம் ஆகியவை பற்றி தெரியாமல் தவிக்கின்றனர். ஆங்காங்கே தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் புதிய பயணிகளுக்கு கடும் குழப்பம் ஏற்படுகிறது. இதனால் பயணிகளுக்கு வழிகாட்டும் நோக்கில் விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் வழிகாட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து விமான நிலையத்தின் மூத்த‌ அதிகாரி சம்ப்ரீத் சதானன் கூறுகையில், 'பயணிகளுக்கு வழிகாட்டுவதற்காக பரிசோதனை அடிப்படையில் 10 ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இவைகளுக்கு ‘ஸ்கை' மற்றும் ‘டெமி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த ரோபாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பயணிகள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய‌ பதில் அளிக்கும். மேலும் பயணிகளை அந்த இடத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்.

இதற்கு கிராமப்புற பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது சோதனையில் ரோபோக்கள் வெற்றி பெற்றால், நாடு முழுவதும் விமான நிலையங்களில் ரோபோக்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது'' என்றார்.



Read in source website

தூத்துக்குடி: தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி சஹானா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பெடரேஷன் கோப்பைக்கான 20 வயதுக்கு உட்பட்ட 20-வது தேசிய அளவிலான போட்டிகள் குஜராத்தில் உள்ள சோட்டா பாய் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வஉசி கல்லூரி ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு மாணவி சஹானா 1.64 மீட்டர் உயரம் தாண்டி இந்திய அளவில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

சஹானாவை தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி பேட்ரிக், மாவட்ட தடகளச் செயலாளர் பழனிச்சாமி, வஉசி கல்லூரி செயலாளர் ஏபிசி சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு, உடற்கல்வி இயக்குநர் சிவஞானம் ஆகியோர் பாராட்டினர்.



Read in source website

பாகு: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ஆஷி சவுக்சி ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் கலப்பு அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே, ஆஷி சவுக்சி ஜோடி 16-12 என்ற கணக்கில் உக்ரைனின் செர்ஹி குலிஷ், தரியா டைகோவா ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா கைப்பற்றிய 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.

மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்றிருந்தது. நேற்றுடன் நிறைவடைந்த இந்தத் தொடரில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளியுடன் 2-வது இடம் பிடித்தது. கொரியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் முதலிடம் பிடித்தது.



Read in source website

புதுடெல்லி: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாகியாவின் தலைநகர் பிராடிஸ்வாலாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் ஆதரவைப் பெற இரு நாடுகளுமே முயற்சித்து வருகின்றன. ஆனால், இந்தியா எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு அளிக்காமல், வன்முறை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியா - சீனா இடையேயான பிரச்சினை அதிகரித்தால், இதுபோன்ற சவாலை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று பிராடிஸ்வாலா நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது மத்திய அமைச்சர் பதில் அளித்துப் பேசியதாவது:

இந்தியா, சீனா எல்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நீடிக்கின்றன. இந்தியா-சீனா இடையேயான உறவு சிக்கலானதாகவே உள்ளது. ஆனால், அதை இந்தியா சமாளித்துவிடும் என்று தெரிவிக்கிறேன்.

சீனாவுடனான பிரச்சினை அதிகரித்தால், சர்வதேச நாடுகளின் ஆதரவை இந்தியா இழக்கக் கூடும் என்று ஐரோப்பிய நாடுகள் கருதுவது தவறானது. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினையை உலகப் பிரச்சினையாகப் பார்க்கின்றன. அதேசமயம் உலகப் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை, மனோபாவத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஐரோப்பிய நாடுகள் அமைதியாகக் கடந்துவிடுகின்றன.

உக்ரைன்-ரஷ்யா பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஐரோப்பிய நாடுகள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன. உக்ரைனின் புக்கா நகரில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டபோது, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், படுகொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் நாங்கள் மதில் மேல் பூனையாக இருக்கவில்லை. நாங்கள் எங்கள் இடத்தில் தெளிவான நிலைப்பாடுடன் செயலாற்றி வருகிறோம். உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள இந்தியா, அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. சொல்லப்போனால் உலகில் உள்ள பல்வேறு சவாலான விஷயங்களுக்கு பதில் இந்தியாவில் இருந்துதான் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.



Read in source website

நடை பகுப்பாய்வை குற்றவியல் வழக்குகளில் ஆதாரமாக எடுத்துக் கொண்ட மும்பை நீதிமன்றம்; நடை பகுப்பாய்வு என்பது என்ன? இது குற்றங்களை கண்டறிய எவ்வாறு உதவுகிறது?

Sadaf Modak

Gait analysis explained: How the way you walk can point to your role in crime: மும்பை நகரின் சாகி நாகா பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக 44 வயது ஆணுக்கு மரண தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நீதிமன்றம் நம்பியிருந்த ஆதாரங்களில், “நடை பகுப்பாய்வு” அறிக்கையும் உள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, குற்றஞ்சாட்டப்பட்டவர் நடந்து செல்லும் விதத்தின் மாதிரி வீடியோவுடன் சிசிடிவி கேமரா காட்சிகளின் படங்களை ஒப்பிட்ட தடயவியல் அறிக்கையை அரசுத் தரப்பு நம்பியதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் குற்றவியல் விசாரணையில் நீதிமன்றத்தால் நடை பகுப்பாய்வு அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

நடை பகுப்பாய்வு என்றால் என்ன?

நடை என்பது காலால் நடப்பது அல்லது நகரும் முறை என வரையறுக்கப்படுகிறது. நடை பகுப்பாய்வானது பாத மருத்துவ பராமரிப்பு மற்றும் கால் சிகிச்சையில் ஒரு நுட்பமாகும், இது நடைபயிற்சி மற்றும் தோரணையை பாதிக்கும் நிலைமைகளை மதிப்பிடவும் கண்டறியவும் பயன்படுகிறது.

ஒரு நபர் நிற்கும் அல்லது நடக்கும் வழியைத் தீர்மானிக்கும் காயம் அல்லது வலியின் மூலத்தை பூஜ்ஜியமாகக் கண்டறிய இந்த பகுப்பாய்வு நிபுணர்களுக்கு உதவுகிறது. பிசியோதெரபிஸ்டுகள் சிகிச்சைக்காகவும், தடகளப் பயிற்சியிலும் இதைப் பயன்படுத்துகின்றனர், இதனால் விளையாட்டு வீரர்கள் சிறப்பாகவும் வசதியாகவும் செயல்பட முடியும்.

கிரிமினல் வழக்குகளில் சந்தேகப்படும் நபர்களை அடையாளம் காண நடை பகுப்பாய்வு நுட்பங்கள் இப்போது தடய அறிவியல் நிபுணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நகரங்களில் நடக்கும் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தடுப்பதற்கும் சிசிடிவி கேமராக்களின் காட்சிகள் முக்கிய அங்கமாக இருப்பதால், சந்தேக நபர்களின் பட்டியலிலிருந்து தனிநபர்களை கவனம் செலுத்த அல்லது நீக்குவதற்கான ஒரு கருவியாக நடை பகுப்பாய்வு பயன்படத் தொடங்கியுள்ளது.

நடை பகுப்பாய்வாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்?

பகுப்பாய்விற்காக, குற்றம் நடந்த இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளில் காணப்பட்ட ஒரு நபரின் நடையை, சந்தேக நபரின் நடையின் மாதிரியுடன் நிபுணர்கள் ஒப்பிடுகின்றனர். கணினி மென்பொருளைப் பயன்படுத்தி, இரண்டு படங்கள் ஒப்பிடப்படுகின்றன.

தடயவியல் நிபுணர்கள், கால்கள் மற்றும் கைகளின் இயக்கம், நடையின் நீளம் மற்றும் முழு நடை சுழற்சி உட்பட பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு அடி தரையில் தொடுவது முதல் ஒரு அடி எடுத்துவைக்கப்பட்ட பிறகு அது மீண்டும் தரையைத் தொடும் வரை கணக்கிடப்படுகிறது.

இதற்கு மென்பொருள்கள் உதவுகின்றன. அவை நிபுணரை ஸ்லோ மோஷனில் பார்க்க அனுமதிக்கிறது, மேலும் அவற்றை ஒன்றோடொன்று, ஃப்ரேம் பை ஃப்ரேம், ஒப்பீடு செய்ய வைக்கிறது.

பகுப்பாய்விற்கு மாதிரி வீடியோவை சிசிடிவி காட்சிகளின் அதே நிபந்தனைகளுடன் படம்பிடிக்க வேண்டும், அதே ஒளி நிலைகள் உட்பட, சம்பந்தப்பட்ட நபர் அதே தூரம் நடந்து, அதே கேமரா கோணத்தில் படமாக்கப்பட வேண்டும்.

ஒரு சந்தேக நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் விசாரணையின் போது நிபுணரின் அறிக்கை பயன்படுத்தப்படலாம்.

சாகி நாகா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கில் நடந்தது என்ன?

சாகி நாகா வழக்கு விசாரணையின் 31வது சாட்சி, கலினாவில் உள்ள மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிவியல் அதிகாரி ஆவார், அவர் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மோகன் சவுகான் கைது செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட மாதிரி வீடியோவின் அடிப்படையில் நடை பகுப்பாய்வு செய்தார்.

நடைப் பகுப்பாய்வு என்பது ஒரு நபரின் நடை, அதாவது “நடக்கும் முறை”, ஒரு சந்தேகத்திற்குரிய நபர் நடப்பதைக் காணும் சிசிடிவி கேமராவின் காட்சிகளுடன் ஒப்பிடும் ஒரு செயல்முறையாகும் என்று அதிகாரி சமர்ப்பித்தார். மேற்கோள் புகைப்படங்களில் (குற்றம் சாட்டப்பட்டவரைக் காட்டிய) ஆண் நபரின் மயிரிழை, நெற்றி மற்றும் தோள்கள் “ஒரே மாதிரியாக” காணப்பட்டதாக அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“உடல் அமைப்பும், நடை முறையும், கோப்புகளில் உள்ள நபரின் உடல் அமைப்பு மற்றும் நடைப் பாணியுடன் ஒத்ததாகத் தோன்றுகிறது” என்று அதிகாரி கூறினார்.

ஒப்பிட முடியாத சில விஷயங்களையும் அதிகாரி சுட்டிக் காட்டினார்: “வீடியோ கோப்பில் காணப்படும் ஆண் நபரின் ஒப்பீட்டு அம்சங்களை இரவு பார்வை, தூரம் மற்றும் கேமராவின் உயரம் காரணமாக பிரித்தெடுக்க முடியவில்லை. இருப்பினும், மற்ற வீடியோ கோப்புகளில் சம்பந்தப்பட்ட நபரைப் போலவே தலை, தோள்பட்டையின் அவுட்லைன் காணப்பட்டது, ”என்று அதிகாரி கூறினார்.

மே 30 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சிறப்பு நீதிமன்றம் நடைப் பரிசோதனையை நம்பியது, சிசிடிவி காட்சிகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரின் அடையாளம், நடை பகுப்பாய்வை நடத்திய நிபுணரின் வாக்குமூலத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

“PW 31 சாட்சியான நிபுணர், நடை சோதனை என்றால் என்ன, சந்தேக நபரின் இயக்கம் மற்றும் மாதிரி வீடியோவை எவ்வாறு ஒப்பிடுகிறார்கள் என்பதை விரிவாக விளக்கினார். சிசிடிவியில் உள்ள படங்களின் உதவியுடன் புகைப்படங்களையும் ஆடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்று அவர் தனது சாட்சியத்தில் தெளிவுபடுத்தினார். அவர்கள் ஆடைகளை அதன் நிறம், வடிவம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்பிட்டார்” என்று சிறப்பு நீதிபதி ஹெச் சி ஷெண்டே கூறினார்.

மேலும், எதிர்தரப்பு வழக்கறிஞரின் நடை பகுப்பாய்வு தொடர்பான சாட்சிகளின் குறுக்கு விசாரணையில் இருந்து எதுவும் வெளிவரவில்லை என்றும் அவர்களின் வாக்குமூலத்தை நிராகரிக்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது.

சவுகானுக்கு ஜூன் 2ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நடை பகுப்பாய்வு என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் சட்ட நுட்பமா?

2000 ஆம் ஆண்டு லண்டனில் ஒரு தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபருக்கு எதிரான குற்றவியல் விசாரணையில், நடை பகுப்பாய்வு ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் பரவலாக அறியப்பட்ட வழக்கு. தடயவியல் நிபுணர், ஆலோசகர் பாத மருத்துவர் ஹெய்டன் கெல்லி, சந்தேக நபரின் “நடைபயிற்சி இயக்கவியல்” இங்கிலாந்து மக்கள்தொகையில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானவர்களை ஒத்திருப்பதாக கூறினார்.

இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள குற்றவியல் வல்லுநர்கள் மற்றும் குற்றத்திற்கு எதிரான போராளிகள் நடை அங்கீகாரத்திற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் நன்றாக மாற்றவும் பணியாற்றி வருகின்றனர். சீனா மற்றும் ஜப்பானில், கடந்த சில ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பம் ஒரு கண்காணிப்பு கருவியாக பயன்பாட்டில் உள்ளது, இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பெரிய கூட்டங்களில் முகத்தை அடையாளம் காண முடியாத சூழ்நிலைகளில் தனிநபர்களின் நடைபாவனைகளில் இருந்து அடையாளம் காண உதவுகிறது.

இது இந்தியாவில் இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டதா?

இந்தியாவில் இதற்கு முன்பு வேறு சில வழக்குகளில் நடை சோதனையை போலீசார் நம்பியுள்ளனர். இந்தியாவில் தடயவியல் அறிவியலில் இது சமீபத்திய சேர்க்கை என்றும், அந்தத் துறை இன்னும் வளர்ச்சியடைந்து வருவதாகவும் ஒரு நிபுணர் கூறினார்.

* தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கடந்த ஆண்டு ஆண்டிலியா பயங்கரவாத அச்சுறுத்தல் வழக்கில் தனது விசாரணையில் பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸிடம் சோதனை நடத்தியது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லமான ஆண்டிலியா அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில், ஜெலட்டின் குச்சிகள் பொருத்தப்பட்ட வாகனத்தின் அருகே ஒரு நபர் தளர்வான குர்தா அணிந்திருப்பதைக் காட்டியது. அந்த நபரின் முகம் தெரியவில்லை. NIA சச்சின் வாஸின் மாதிரி வீடியோவை உருவாக்கி, அதை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக நடைப் பரிசோதனை மூலம் தடயவியல் ஆய்வுக்குக் கொடுத்தது.

* கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்த ஒரு கொலை வழக்கிலும் நடை சோதனை பயன்படுத்தப்பட்டது.

* 2017ல் பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை தாக்கியவர்களின் அடையாளத்தை நிறுவ இது பயன்படுத்தப்பட்டது.

* 2018 இல் சூரத்தில் நடந்த ஒரு கற்பழிப்பு வழக்கிலும் இது பயன்படுத்தப்பட்டது, அங்கு நடத்தப்பட்ட நடை, உடல் அசைவுகள் மற்றும் பிற காரணிகளை ஒப்பிட்டுப் பார்க்க இந்த பகுப்பாய்வு உதவியது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதில் நடைப் பரிசோதனை எவ்வளவு நம்பகமானது?

கைரேகைகள் அல்லது டிஎன்ஏ சோதனை போன்ற அடையாளத்தை நிறுவப் பயன்படுத்தப்படும் மற்ற, மிகவும் துல்லியமான அளவுருக்களுடன் ஒப்பிடும்போது ஒரு நபரின் நடையின் தனித்தன்மையின் அளவு இன்னும் நிறுவப்படவில்லை.

இருப்பினும், வல்லுநர்கள் அதை உறுதிப்படுத்தும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர், மேலும் சந்தேக நபர்களின் பட்டியலைக் குறைக்க முயற்சிக்கின்றனர். நடையின் நீளம், நபரின் உயரம், கைகளின் அசைவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு நடை பகுப்பாய்வில் பிழைகளைக் குறைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.



Read in source website

தஞ்சாவூருக்கு அருகில் இருக்கிறது மெலட்டூர். ஊரின் பெயரைச் சொன்னாலே பாகவத மேளா மட்டும்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அதுவே அந்த ஊரின் அடையாளமாக ஆகியிருக்கிறது. பாகவத மேளா என்பது பழமையான நாட்டிய நாடக வகையைச் சேர்ந்தது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் சரிவுக்குப் பிறகு ஆந்திரத்திலிருந்து 16-ம் நூற்றாண்டில் தஞ்சாவூருக்கு வந்த 500-க்கும் மேற்பட்டோர் இங்கேயே உருவாக்கி வளர்த்தெடுத்த கலை. இதில் தமிழ் மண்ணின் தொல்கலையின் தடங்களைக் காணலாம். தஞ்சாவூருக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், கவிஞர்கள். அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, மாடுகள், நிலங்கள் கொடுக்கப்பட்டன. மெலட்டூரில் பல கலைஞர்கள், அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். பரதம் காசிநாதையா, பரதம் வீரபத்ரய்யா என்று பலரையும் சொல்லலாம்.



Read in source website

தன் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வ.உ.சி. மேல் பெரிய ஈர்ப்பு. வ.உ.சி.யின் கடிதங்களைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அவருக்கு வயது 17. வ.உ.சி. மீதான அவரது ஆய்வு தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுக்கு இட்டுச்சென்றது. 19-ம் நூற்றாண்டு தொடங்கி 20-ம் நூற்றாண்டின் பாதி வரையிலான தமிழ்ச் சூழல்தான் சலபதியின் ஆய்வுக் களம். வ.உ.சி, பாரதி, புதுமைப்பித்தன், உ.வே.சா, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார் என, சென்ற நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்தியுள்ளார். ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்,’ ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’, ‘Who Owns That Song?: the Battle for Subramania Bharati's Copyright’ உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் சலபதி வழங்கியிருக்கும் பங்களிப்புக்காக அவருக்கு, 2021-ம்ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல்’ விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்திருக்கிறது. இத்தருணத்தில் அவருடன் உரையாடியதிலிருந்து...



Read in source website