Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







28-03-2024
Thursday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





வேலூர்

பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், ஆற்காடு நவாப்கள் மற்றும் பைஜாபூர் சுல்தான் ஆகிய மன்னர்களால் பல்வேறு காலகட்டங்களில் வேலூர் ஆளப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரின் போது வேலூர் சிறந்த வலிமை மிகுந்த கோட்டையாக இருந்துள்ளது. 1806ல் அதிகாரிகளை எதிர்த்த யூரோப்பியன் வீரர்களை படுகொலை செய்த இடமாகவும் இருந்துள்ளது வேலூர் மாவட்டம். (12” 15”லிருந்து 13” 15”வரை) வடக்கு அட்சரேகை மற்றும் (78” 20”லிருந்து 79” 50”வரை) கிழக்கு நிலநிரைக்கும் இடையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.

 சுற்றுலா

       13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோட்டை வேலூரின் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது. இந்த கோட்டையில் தேவாயலயங்களும், ஜெகதீஸ்வரர் கோயிலும் மற்றும் பல கட்டிடங்களும் உள்ளது. பல அரசு அலுவலகங்களும் இந்த கோட்டையில் உள்ளது. ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட லக்ஷ்மி நாராயிணி கோயில் இங்கு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு செய்யப்பட்ட வண்ண விளக்கு வேலைப்பாடுகளால் இந்த கோயில் இருளிலும் ஜொலிக்கும் வண்ணம் உள்ளது. வேலூர் கோட்டையிலுள்ள அரசு அருங்காட்சியகம், காவலூர் தொலை நோக்கி மையம், ஏலகிரி மலைத்தொடர், பாலாறு கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம், அமிர்தி வனப்பகுதி பாலாறு அணை, ரத்னகிரி கோயில் மற்றும் பல இடங்கள் வேலூரின் சிறந்த சுற்றுலாத்தலங்களாக உள்ளன.

வேலூர் மாவட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம்

வேலூா் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது 12′ 35′ வடக்காகவும் மற்றும் 79′ 9′ கிழக்காகவும் அமைந்து, தனக்கென தனி வரலாற்று சிறப்பினைக் கொண்டது. வேலூர் மாவட்டத்தின் தலைமையிடமான வேலூரானது அருகிலுள்ள ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பெருநகரங்களை இரயில் மற்றும் பேருந்து வழித்தடங்கள் மூலமாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நாம் பெருமை மிக்க கடந்த காலத்தை ஆராயும் போது வேலூா் மாவட்டத்தின் சிறப்பான முக்கியத்துவமும், தொடர்பும் நன்கு விளங்கும். மேலும் வேலூா் மாவட்டமானது பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகரப் பேரரசர், சம்புவராயர், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆற்காடு நவாப்கள், கர்நாடக மற்றும் ஆங்கிலேய நவாப்கள் பிஜப்பூர் சுல்தான் போன்ற பல்வேறு அரசப் பரம்பரைகளால் ஆட்சி செய்யப் பெற்ற பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது. 17 ஆம் நூற்றாண்டில் நடந்த கர்நாடக போரில் இதன் சிறப்பம்சம் மற்றும் கோட்டையின் வலிமையும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது. கி.பி.1806ல் வேலூரில் நடந்த சிப்பாய் கலகம் ஒரு ஐரோப்பிய சிப்பாய்  படுகொலையை சாட்சியாக கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் கிடைக்கப் பெற்ற நினைவுச்சின்னங்கள் கடந்த காலத்தின் வரலாற்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. 18ஆம் நூற்றாண்டில் குறிப்பாக கி.பி.1749ல் நடைபெற்ற ஆம்பூர் போர், கி.பி.1751ல் நடைபெற்ற ஆற்காடு போர், கி.பி.1768-ல் நடைபெற்ற வந்தவாசிப்போர் போன்றவை ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சு போன்ற மேலாதிக்கத்திற்காக நடந்த நீண்ட வெற்றிகரமான போர்களில் வேலூா் மாவட்டம் ஒரு மிகச்சிறந்த சாட்சியாக விளங்குகிறது.

வேலூர் கோட்டையானது வேலூரின் நினைவுச்சின்னங்களில் ஒன்று. இக்கோட்டையானது எந்நாளில் கட்டப்பட்டது என்ற சரியான விவரம் கிடைக்கப் பெறவில்லை. இக்கோட்டையிலுள்ள கல்வெட்டுக்களை நுணுக்கமான முறையில் ஆராயும் போது, இக்கோட்டையானது கி.பி.1526 முதல் கி.பி.1595 வரையிலான காலத்தில் சின்ன பொம்மி நாயக்கர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என அறியவருகிறது. வேலூர் கோட்டையானது தென்னிந்தியாவின் இராணுவ கட்டடக் கலையின் ஒரு மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது.

கோட்டையின் உள்ளே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலின் உள்ளே இடது பக்கத்தில் உள்ள நுணுக்கமான கலைச்சிற்பங்களுடன் கூடிய கல்யாண மண்டபமானது காலத்தை கடந்து நிற்கும் பொறியியல் மற்றும் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றது. மேலும், வேலூா் நகரின் மற்றொரு அடையாளமாகவும், மருத்துவ உலகின் மையமாகவும் கிருத்துவ மருத்துவக் கலலூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. டாக்டர்.ஐடா ஸ்கடர் என்ற மிஷினரியான அமெரிக்கப் பெண்மனி தன்னுடைய மருத்துவ சேவை புரிவதற்காக கி.பி.1900-ல் ஒரு சிறிய மருத்தவமனையை அமைத்து, அது பின்னாளில் நூறு ஆண்டுகளை கடந்து, முதன்மையான மருத்துவ நிறுவனமாக சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளது. மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கி.பி.1830ல் வேலூா் மத்திய சிறையானது நிறுவப்பட்டது. இச்சிறையில் சிறந்த முக்கியத்தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களான திரு.இராஜாஜி, திரு.சி.என்.அண்ணாதுரை, திரு.கே.காமராஜ் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர்களாக திரு.வி.வி.கிரி, திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் தங்களது சிறைக்காலத்தை கழித்தனர். வேலூர் – ஆற்காடு சாலையில் அருகந்தம்பூண்டியில் திப்புசுல்தானின் குடும்ப உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட கல்லறை மற்றும் கி.பி.1798 முதல் கி.பி.1815 வரை இலங்கையின் கண்டி நகரை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்ரமக ராஜசிங்கா அரசரை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் எழுப்பப்பட்ட பாலாறு ஆற்றங்கரையில் அமைந்தள்ள முத்துமண்டம் ஆகிய குறிப்பிடத்தகுந்த நினைவுச்சின்னங்கள் ஆகும். இவர் வேலூர் கோட்டையில் 17 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில் வேலூா் மாவட்டத்தின் பங்கு

சுதந்திர போரட்டத்தில் வேலூர் மாவட்டம் எப்போதும் முன்னனியில் இருந்துள்ளது. கி.பி.1806ல் வேலூர் கோட்டையிலிருந்து வெடித்து கிளம்பிய சிப்பாய் கலகமானது, ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக கி.பி.1857ல் நடைபெற்ற முதல் சுதந்திர போராட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது.

இராணுவப் பணிக்கு தங்களை அதிக அளவில் ஈடுபடுத்திக் கொண்டு, வீரதீரத்துடன் ஆத்மார்ந்த சேவை செய்வர்களை அதிகமாகக் கொண்டு, தேசத்தில் மற்ற மாவட்டங்களை மிஞ்சும் வகையில் உள்ளது, வேலூரின் மற்றொரு பாராட்டத் தகுந்த மற்றுமொரு மிகச்சிறந்த அம்சமாகும். வேலூரிலுள்ள லாங்கு பஜாரில் வீற்றிருக்கும் மணிக்கூண்டானது கி.பி.1928ல் நிறுவப்பட்டது. இந்த மணிக்கூண்டு உள்ள கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் ” இந்த ஊரிலிருந்து 1914-18ஆம் ஆண்ட நடந்த முதலாம் உலகப் போரில் 277 ஆண்கள் பங்கேற்று, அவர்களில் 14 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர்” என்ற வரிகள் ஆங்கிலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டானது வேலூர் மக்களின் வீரத்திற்கு பதியப்பட்ட சான்றாக உள்ளது.

வேலூரில் 20ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பொருளாதார, சமூகப் பண்பாட்டு மாற்றங்கள்

வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லாததால், பொருளாதார நிலைமை தாழ்வாக இருந்தது. அரசின் கடும் முயற்சிக்குப் பின்னர், இராணிப்பேட்டை பெல் (BHEL) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவை வேலூரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருந்தன. இம்மாவட்டத்தில் வளர்ச்சிக்கு சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் ஆதாரமாக இருந்தன. இத்தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு மட்டுமின்றி தொழில் வளர்ச்சிக்கும் பங்காற்றின. உழவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. புதுமையான சுயஉதவிக் குழுக்கள் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுவதுடன், கிராமப்புற பெண்களின் சுயசார்புக்கும் உறுதுணையாக இருக்கின்றது.

காலமாற்றத்திற்கு ஏற்ப, சமூக காட்சிகளும் மாறுகின்றன. சமூக விழிப்புணர்வு மற்றும் ஏறுமுக சமூக வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றம் வேலூா் மாவட்டம் அடைந்த வெற்றிக்குச் சான்றாகும். புதிய சமூக அமைப்பில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் ஆகியவை வேகமாக மறைந்து வருகின்றது. சமூக மாற்றத்திற்காக அறிவொளி இயக்கத்தின் மூலமாக நுறு சதவீத கல்வியறிவு பெற உரிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வகுப்பினைச் சார்ந்தவர்களை சமூக ஒற்றுமை மற்றும் அமைதிக்காகவும் சமுத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்துள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவும், இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்படுவது தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

வேலூர் மாவட்டத்தில் கல்லூரிக் கல்வியின் வளர்ச்சி

தழிழ்நாட்டில் முதன்மை மாவட்டங்களில் ஒன்றாக வேலூா் மாவட்டம் உள்ளது பாராட்டத் தகுந்த ஒன்றாகும். தி அமெரிக்கன் மிஷன் என்ற கல்வி நிறுவனமானது வேலூரில் உயர் கல்விக்காக கி.பி.1853-ல் நிறுவப்பட்டு, கி.பி.1898ல் சென்னை பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனமானது ஊரிசு கல்லூரி என்று மாற்றப்பட்டது. மேலும் திருப்பத்தூரிலுள்ள தூய நெஞ்சக் கல்லூரி, காட்பாடியிலுள்ள ஆக்ஸீலியம் மகளிர் கல்லூரி மற்றும் இதர கிருத்துவ நிறுவனங்கள் கல்விக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டன. தமிழக அரசு உயர்கல்வி வளர்ச்சிக்காக கலைக் கல்லுரிகளை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியது. வேலூா் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கல்லூரி,வேலூர், திருமகள் ஆலை அரசுக் கல்லூரி குடியாத்தம், அறிஞர் அண்ணா பெண்கள் கலைக்கல்லூரி வாலாஜா, ஆகியவை கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளுக்காக ஏற்படுத்தப்பட்டன. உயர்கல்வி வளர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பிற்கு வேலூரிலுள்ள டி.கே.எம் மகளிர் கல்லூரி ஒரு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.

சில இஸ்லாமிய கொடையாளர்களும், கல்வியாளர்களும் உயர்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, இஸ்லாமிய இளம் மாணவர்களின் உயர்கல்விக்காக கல்வி நிறுவனங்களை நிர்மானித்தனா். இஸ்லாமியக் கல்லூரி வாணியம்பாடி, C.அப்துல் ஹகீம் கல்லூரி மேல்விஷாரம், மஸ்ருல் உலூம் கல்லூரி ஆம்பூர் மற்றும் இஸ்லாம் சிறுபாண்மையினர் கல்வி நிறுவனங்கள் ஆகியவை உயர்கல்விக்காக வேலூா் மாவட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேலூர் நகரில் உள்ள அரேபியக் கல்லூரியானது மற்றொரு முக்கியமான உயர்கல்வி நிறுவனமாகும்.

மேலும் வேலூர் மாவட்டமானது தொழில் கல்வியிலும் பின்தங்கியிருக்கவில்லை. சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிருத்துவ மருத்துவக் கல்லூரியானது பல சிறப்பு பிரிகளிலும் முதுநிலை கல்வியை வழங்குகிறது. பொறியியல் கல்லூரியை துவக்கியதன் மூலம், மாணவ சமுதாயத்தின் பொறியியல் கனவையும் பூர்த்தி செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சுயநிதிக் கல்லூரிகளையும் ஊக்குவிக்கிறது. மேலம் வேலூர் அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இளநிலை/முதுநிலை வகுப்புகளை நடத்துகின்றது. இந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியானது மாணவ சமுதாயத்தின் வளர்ச்சித் தேவையினை ஆராய்தல் மட்டுமின்றி, உயர் மற்றும் தொழில் கல்வியிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் உள்ளன.

காணத்தக்க இடங்கள்

 

மார்க்கபந்தீஸ்வரர் கோயில் – விரிஞ்சிபுரம்

வேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் மீது பங்குனி மாதத்தில் சூரியகதிர்கள் விழுகின்றன. இங்கு தலமரமாக பனை மரம் உள்ளது. இது கோயிலின் உட்பிரகாரத்தில் உள்ளது. இங்கு சிங்கமுக வடிவத்தில் ஒரு குளம் உள்ளது. இதனைச் சிம்ம தீர்த்தம் என்று அழைக்கின்றனர். கார்த்திகை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் இக்குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்வது சிறப்பாகும்.

 


முருகன் கோயில் – வள்ளிமலை

வேலூரிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. பல்லவ கால குடவரைக் கோயிலாகும். சுமார் 400 படிக்கட்டுகள் உள்ளன. வள்ளி பிறந்த தலமாகும் மற்றும் முருகனை திருமணம் செய்த தலமாகும்

வள்ளிமலை நினைவுச்சின்னங்கள்

வேலூர் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களில் வள்ளிமலை சமணச் சிற்பங்களும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் தற்போது காட்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கி.பி 9 மற்றும் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணச் சிற்பங்கள் உள்ளன. இராட்டிரகூட மன்னரான மூன்றாம் கிருஷ்ணாவின் கல்வெட்டும் இங்கு உள்ளது. இவ்வூரின் அருகில் அமைந்துள்ள மேல்பாடியும், கோட்டைமேடு என்ற பகுதியும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாகும். கோட்டைமேட்டுப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராசராசன் காலத்து வெள்ளிக்காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சமணச் சிற்பங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும், கி.பி.9-ம் நூற்றாண்டின் கலைப்பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.

 

அமிர்தி விலங்கியல் பூங்கா

இப்பூங்கா வேலூர் நகரில் இருந்து சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. 25 ஹெக்டேர் அளவுக்குப் பரந்து விரிந்துள்ள அமிர்தி உயிரியல் பூங்காவில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்றும் காணப்படுகிறது. அமிர்தி வனத்தின் பாதி பரப்பளவு வனவிலங்கு சரணாலயத்திற்கும் மாறு பாதி சுற்றுலாத் தலமாகவும் பிரித்துப் பராமரிக்கப்படுகிறது. சுமார் ஒரு கீலோமீட்டர் தூரத்தில் உள்ள மலையேற்றம் ஒரு அழகான நீர்வீழ்ச்சியை முழுமையாகப் பார்வையிட வழிவகுக்கிறது. நீர்வீழ்ச்சியில் பருவமழை காலங்களில் நீரின் வீழ்ச்சி அதிகமாக இருக்கும். இவ்வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள் குரங்குகள், சிவப்புதலைகிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள்,வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன வாழ்கின்றன.

ஸ்ரீபுரம் பொற்கோயில்

வேலூர் அருகே 10 கி.மீ தொலைவில் திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது.

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை 16-ஆம் நூற்றாண்டில் பொம்மி நாயக்கரால் (விஜயநகர பேரரசு) கட்டப்பட்ட கோட்டையாகும்.

அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையச் சுற்றிலும் அமைந்துள்ளது. இக்கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயில், தேவாலயம், பள்ளிவாசல், அரசு அருங்காட்சியகம் உள்ளது. நாயக்கர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து கர்நாடக நவாப்புகளுக்கும் இறுதியாகப் பிரிட்டிஷாருக்கும் இக்கோட்டை கைமாறியது. 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக்கோட்டை பிரிட்டிஷார்களிடமே இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இக்கோட்டையிலேயே திப்பு சுல்தான் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கண்டியரசின் கடைசி தமிழ் மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் சிறை வைக்கப்பட்டனர். பிரிட்டிஷாருக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி சிப்பாய்கலகம் இக்கோட்டையிலேயே 1806 ஆம் ஆண்டில் நடந்தது. கோட்டையில் திப்புமஹால், ஹைதர்மஹால், கண்டிமஹால், ஜலகண்டேஸ்வரர் கோவில், தேவாலயம், மசூதி கோட்டையின் உட்புறத்தில் அமைந்துள்ளது.

கண்டி மன்னர் கல்லறை

இலங்கையில் கடைசியாக ஆட்சி செய்த தமிழ் மன்னனான விக்கிரம சிங்க ராஜ மன்னனின் கல்லறை கண்டி மன்னன் கல்லறை என அழைக்கப்படுகிறது. இந்நினைவுச் சின்னம் வேலூாில் உள்ள பாலாற்றங்கரையில் புதிய பேருந்து நிலையத்திற்கு மேற்கே சுமாா் 150 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அது தற்பொழுது மக்களால் முத்து மண்டபம் என அழைக்கப்படுகிறது.

இலங்கையின் கண்டியை ஆட்சி செய்த ராஜாதிராஜனுக்கு வாரிசில்லாமல் போகவே அவருக்குப்பின் அவரது மனைவியின் தம்பியான கண்ணுசாமி தமது 18வது வயதில் விக்கிரம ராஜசிங்கன் என்ற பட்டப் பெயருடன் கண்டி மன்னராக்கப்பட்டார்.

விக்கிரமராஜசிங்கன் 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டான். ஆயினும் இறுதியில் பரங்கியர் படை வென்றதால் மன்னனும் அவனது குடும்பத்தினரும் அரண்மனையைவிட்டு வெளியேறியும், அவா்களை ஆங்கிலேயர் சிறைபிடித்து கண்டியில் இருந்தால் மன்னருக்கு மக்களின் ஆதரவு பெருகும் என பயந்து மன்னரையும் அவரது குடும்பத்தினரையும் வேலூருக்கு நாடு கடத்தி 8-3-1816 முதல் வேலூா் கோட்டையில் அவர்களைச் சிறைவைத்தனா். 16 ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகு விக்கிரம சிங்க ராஜா 31-1-1832-ல் மரணம் எய்தினார். அவரது உடல் பாலாற்றங்கரையில் புதைக்கப்பட்டது. அவருக்கு அருகிலேயே அவரது உறவினர்களின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது. இதுவே கண்டி மன்னர் கல்லறையாகும்.

 

மேல்பாடி கோயில்

வேலூா் மாவட்டத்தில் வாலாசா வட்டத்தில் மேல்பாடி என்னும் ஊர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் ஊராகும். பேரரசன் ராசராசன் இங்கு சோமநாதருக்கு கோயில் எடுப்பித்ததும் அதன் அருகிலேயே தமது பாட்டனார் அரிஞ்சய சோழனுக்கு அவரை அடக்கம் செய்த இடத்தில் அரிஞ்சய சோழீஸ்வரம் என்ற பெயரில் பள்ளிப்படை கோயில் ஒன்று எடுப்பித்ததுமே காரணம் ஆகும். இவ்விரு சிறப்பு மிக்க கோயில்களும் நுகா என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. போற்றுதலுக்குரியதாகும். இவ்வூரில் உள்ள கோயில்களில் முதலாம் ராசராசன், முதலாம் ராசேந்திரன், கோப்பெருஞ்சிங்கன், சம்புவராயர்கள், விசய நகர மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுவதும், அவற்றின் மூலம் அக்கால வரலாற்றை அறியமுடிவதும் சிறப்பான ஒன்றாகும்.
மேல்பாடியில் உள்ள சோமநாதர் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் சிற்பங்களும் பிற சிற்பங்களும் ராசராசன் காலத்து சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன.

 

 




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us