Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







18-04-2024
Thursday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





ராணிப்பேட்டை

வரலாறு

கி.பி 1714ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தனக்கு கப்பம் கட்ட மறுத்த செஞ்சியின் மன்னர் ராஜா ஜெய்சிங் என்ற தேசிங்கு மீது ஆற்காடு நவாப் சாதத்துல்லாக்கான் போர் தொடுத்தார்.இப்போரில் ராஜா தேசிங்கு வீர மரணமடைந்தார். இத்துயர செய்தியை கேட்ட ராஜா தேசிங்கின் மனைவியான ராணிபாய் உடன் கட்டை ஏறி தன் உயிரையும் நீத்தார்.இதனால் இவர்கள் இருவரின் தியாகத்தை மெச்சிய ஆற்காடு நவாப் சாதத்துல்லாகான், ராஜா தேசிங்கு மற்றும் அவரது மனைவியான ராணிபாய் ஆகிய இருவருக்கும் ராணிப்பேட்டை பாலாற்றங்கரை ஓரத்தில் பளிங்கு கற்களால் ஆன இரு நினைவுச் சின்னங்களை எழுப்பினார். அத்துடன் தேசிங்கு ராஜனின் மனைவியின் கற்புத்திறனை பறைசாற்றும் விதமாக ராணிப்பேட்டை என்ற நகரை 1771 ஆம் ஆண்டு நிர்மாணித்தார். ராஜா தேசிங்கின் மனைவி ராணிபாய் நினைவாகத்தான் கடந்த 308ஆண்டுகளாக ராணிப்பேட்டை என பெயர் வந்ததற்கான காரணமாக இருந்ததாக தெரியவருகிறது.
ஐரோப்பிய பாசறை நிறுவப்பட்டதிலிருந்து இந்த நகரம் முக்கியத்துவம் பெற்றது. இராணிப்பேட்டைக்கு மேற்கில் ஒரு மைல் தொலைவில் பாலாற்றங்கரையை ஒட்டினாற்போல் 4.8 கி.மீ பரப்பில் ”நவ்லாக் பண்ணை” என்ற தோப்பு உள்ளது. இத்தோப்பில் 9 லட்சம் மரங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.
இப்படி புகழ்வாய்ந்த இராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் 2019 வருடம், ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இதன் தொடக்க விழாவை 2019 வருடம், நவம்பர் 28ம் தேதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார். 29.11.2019 முதற்கொண்டு 36வது மாவட்டமாக இப்புதிய மாவட்டம் இயங்க ஆரம்பித்தது.

மகேந்திரவாடி

அரக்கோணம் வட்டம், மகேந்திரவாடியில் அமைந்துள்ள மகேந்திர விஷ்ணுகிருகம் என்னும் குடைவரை குறிப்பிடத்தக்க ஓர் வரலாற்றுச் சின்னமாகும். இச்சின்னத்தினை இந்திய தொல்லியல் துறை பாதுகாத்து வருகின்றது.

இக்குடைவரை கோயில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் பழமையான குடைவரைகளில் ஒன்றாகும். இது கி.பி.600 முதல் 630-ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடைவரையாகும். இக்குடைவரைக்கு மகேந்திர விஷ்ணுகிருகம் என்று மகேந்திர பல்லவன் பெயரிலேயே பெயரிடப்பட்டுள்ளதை இங்குள்ள மகேந்திர வர்மன் காலத்து கிரந்த கல்வெட்டு நமக்கு தெளிவாக்குகின்றது.
வெட்டவெளியான ஓர் இடத்தில் தனியாக ஒரு சிறுபாறையை குடைந்து உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும். காண்போரை கவரும் வண்ணம் இரு முழுதூண்களுடன் இரு அரைத்தூண்களுடனும் மிகவும் எளிய முறையில் இக்குடவரை குடையப்பட்டுள்ளது. தூண்களில் போதிகை மட்டுமே குடையப்பட்டுள்ளது மிகவும் எளிமையாக உள்ளது.

காஞ்சனகிரி மலை

ராணிப்பேட்டை மக்களின் மனம் கவர் இடமான காஞ்சனகிரி மலை கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் கொண்ட சிறிய மலையாகும். பசுமையான இந்த மலை ஒரு சிறிய சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை கொண்டுள்ளது. மணி சத்தம் எழுப்பும் பாறை இம்மலையின் முக்கிய கவரும் அம்சமாகும்.

இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

இரத்தினகிரி மலையின் மீது பாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முருகன் இரு கோலங்களில் காட்சி தருகிறார். ஒன்று வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்குாலம் மற்றொன்று குருகோலம் ஆகும். கிரானைட் கற்கலால் அமைக்கப்பட்ட தேரின் மீது சிலை நிறுவப்பட்டுள்ளது. சோழர்கால சிற்பக்கலை வடிவில் கற்பக்கிரகம் கிரானைட் கற்கலால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலின் சுற்றுச் சுவர்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை மற்றும் சண்டிகேஸ்வரர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயில் 14-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் கட்டப்பட்டு, 1980-ஆம் ஆண்டில் ”பாலமுருகனடிமை சுவாமி” என்பவரால் புனரமைக்கப்பட்டது. இத்திருக்கோயில் அர்ச்சனைகள் அனைத்தும் தமிழில் செய்யப்படுகின்றன. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ராஜா, ராணி நினைவுச் சின்னங்கள்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம், மன்னர் ராஜா தேசிங்கு மற்றும் அவரின் மனைவி ராணிபாயின் நினைவாக இரு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் முக்கிய படைப்பிரிவுகள் தங்கிய பகுதியாக ராணிப்பேட்டை இருந்திருக்கிறது. ராஜா தேசிங்கு `கப்பம்’ கட்ட மறுத்ததால், செஞ்சிக்கோட்டை மீது ஆற்காடு நவாப்புகள் படையெடுத்து ராஜாவைக் கொன்றனர். ராஜா தேசிங்கின் உடல் எரிக்கப்பட்டபோது, அவரின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறினார்.
இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆற்காடு நவாப் சதாத்துல்லாகான், ஆற்காடு பாலாற்றின் மறு கரையில் ராஜாவுக்கும், ராணிபாயிக்கும் பளிங்குக் கற்களால் மணிமண்டபங்களை எழுப்பினார். ராணியின் உயிர்த்தியாகத்தைப் போற்றும் வகையில்தான் `ராணிப்பேட்டை’ நகரையும் உருவாக்கியதாக வரலாறு சொல்கிறது.

லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் – சோளிங்கர்

வேலூரிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும் ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில் சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன.

டெல்லி வாயில், ஆற்காடு

கி.பி.18-ஆம் நூற்றாண்டில் ஆற்காட்டின் நவாப் உரிமைக்காக சந்தாசாஹிப்பிற்கும் முகமதுஅலிக்கும் நடந்த போரில் ஆங்கிலேயர் முகமது அலி சார்பாக போரில் நுழைந்தனர். 26.8.1751-ஆம் நாளன்று முகமது அலியின் சார்பாக ஆங்கிலப்படைகள் ஆற்காட்டில் நுழைந்து போட்டியாளரான சந்தாசாகிப்பை கோட்டையை விட்டு விரட்டி இராபட் கிளைவ் தலைமையில் வெற்றிகண்டனர். இராபட் கிளைவின் இவ்வெற்றியே பின்னாளில் ஆங்கிலேயர் ஆதிக்கம் இந்தியா முழுவதும் பரவி இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றக் காரணமாக அமைந்தது. எனவே தனது வெற்றியின் நினைவாக இராபட் கிளைவ் கட்டிய இக்கட்டடமே டெல்லி வாயில் என அழைக்கப்படுகின்றது. இந்த டெல்லி வாயில் நுழைவாயில் தரைத்தளம், முதல்தளம் என இரு பகுதிகளை கொண்டது. தரைத்தளத்தின் நுழைவுவாயிலின் இரு புறமும் ஆயுதகிடங்காக பயன்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் காற்றோட்டமாக வீரர்கள் தங்கவும், அங்கிருந்தே அவர்களின் எதிரிகளின் வருகையையும் நடமாட்டத்தையும் கண்காணிக்க வசதியாகவும், பீரங்கிகள் பொருத்தி பீரங்கி தாக்குதல் நடத்த ஏதுவாகவும் உள்ளவாறு இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உறுதியான செங்கல் மற்றும் சுதைகளை கொண்டு சுமாா் 4 அடி அகலத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது போற்றத்தக்கதாகும்.

ஆற்காடுக் கோட்டை

ஆற்காட்டில் நவாப்சாதத்துல்லாகான் கட்டிய அரண்மனையின் இடிபாட்டு பகுதிகளும், தூர்ந்துவிட்ட அகழியும், மசூதிகளும் பிற கட்டிட பகுதிகளும் மிகவும் பழமையானவைகளாகும். இவைகள் கி.பி.18-ஆம் நூற்றாண்டில் செங்கற்களாலும், சுதையாலும் கட்டப்பட்டவையாகும். அவைகள் தற்பொழுது பெரும்பகுதி அழிந்துவிட்டன. கோட்டைப்பகுதியில் உள்ள குளம், தொழுகை செய்த மசூதி, அதன் அருகில் உள்ள கிணறு போன்றவையே எஞ்சியுள்ளன. இக்கோட்டைப்பகுதி சுமாா் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ளது. பாலாற்றிலிருந்து மசூதிக்கு அருகில் உள்ள குளத்திற்கு தண்ணீர் வந்து மீண்டும் பாலாற்றிற்கே செல்லும் வண்ணம் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது போன்றத்தக்க ஓர் அமைப்பாகும். இக்கோட்டைக்கு ஆலம்பனா கோட்டை என்று பெயர்.

விளாப்பாக்கம்

திருப்பாண்மலை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் சின்னமாகும். இது ஆற்காட்டிலிருந்து தென்மேற்கே 6-கி.மீ தூரத்தில் விளாப்பாக்கம் என்ற கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஆற்காடு – கண்ணமங்கலம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

இங்கு பல்லவர் கால குடைவரை ஒன்று குன்றின் தென்பகுதியில் அமைந்துள்ளது. ஆறு முழு தூண்களையும், இரு அரை தூண்களையும் கொண்டு குடைவரை குடையப்பட்டுள்ளது. இக்குடைவரையின் மேல்பகுதியில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று குடையப்பட்டுள்ளது. இக்குன்றின் மேல் சமண படுக்கைகள் சிலவும் அக்கால செங்கல் கட்டிட பகுதிகள் சிலவும் சிதைந்த நிலையில் உள்ளது. அழகிய அம்பிகை யக்ஷியின் உருவம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பம் பல்லவ மன்னன் தந்திவர்மன் காலத்தில் வெட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது. இங்கிருந்த சமண முனிவர்களுக்கு இதன் அருகிலேயே கூராம்பாடி என்ற ஊரை இறையிலியாக கொடையாக அளித்ததை இங்குள்ள மற்றொரு கல்வெட்டு தெரிவிக்கின்றது. மேல்குன்றிலும் இக்கல்வெட்டின் அருகிலும் தீர்த்தங்கரர் சிற்பங்கள் அழகுற புடைப்புச்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

கஞ்சா சாகிப் கல்லறை – சோளிங்கர்

வாலாசா வட்டம், சோளிங்கர் பேருந்து நிலையத்திற்கு எதிரே முக்கிய சாலையின் ஓரத்தில் இச்சின்னம் அமைந்துள்ளது. 15 அடி அகலமும், 35 அடி நீளமும் கொண்ட இக்கல்லறை கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகின்றது. இச்சின்னம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் சின்னங்களில் ஒன்றாகும். இக்கட்டிடம் சுதையாலும், செங்கற்கலாலும் கட்டப்பட்டதாகும். கி.பி.1781-ஆம் ஆண்டு ஆங்கில படைகளுக்கும் திப்புசுல்தான் படைகளுக்கும் இடையில் சோளிங்கரில் நடந்த போரின் பொழுது திப்புசுல்தான் படையின் சார்பில் போரிட்டு மரணமடைந்த படைவீரர்களின் உடல்கள் மொத்தமாக இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெரிய குழிவெட்டி அதில் மொத்தமாக வீர மரணமடைந்த வீரர்களின் உடல்கள் மண்ணில் மூடப்பட்டது என நம்பப்படுகின்றது. இதனை அறிய இதன் நுழைவாயின் மேல் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு ஒன்று தெளிவாக்குகின்றது.

வாலீஸ்வரர் கோயில்

ராட்டிரக்கூட மன்னன் ரூன்றாம் கிருஷ்ணன் கன்னர தேவன் தக்கோலப் போரில் இராசாதித்தனைக் கொன்ற வரலாறு பலருமறிந்ததாகும்/ முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் கிபி 1018 – 1054 இவ்கீர் இரட்டபாடி கொண்ட சோழபுரம் என்றும் முதல் குலோத்துங்கன் காலத்தில் பல்லவபுரம் எனவும் குலோத்துங்க சோழபுரம் எனவும் விஜயநகர அரசர் காலத்தில் படிமுடி கொண்ட சோழபுரம்

எனவும் வழங்கப்பட்டது. தக்கோலம் ஊருக்குக் கிழக்கில் திருவாலீஸ்வரம் என்ற சிதைந்த கோயில் உள்ளது. அளூதிஷ்டானத்திலிருந்து கொடுங்கை வரை கருங்கல்லாலும் செங்கல்லாலும் கட்டப்பட்டது. விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.. இதன் கோஷ்டங்களில் சிற்பங்கள் இல்லை.

அர்த்த மண்டபத்திற்கு வெளியில் 4 கருங்கல் தூண்கள் கொண்ட திறந்தவெளி மண்டபம் உள்ளது. முதலாம் இராஜேந்திரனுடைய 8ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே வாலீஸ்வரர் கோயிலின் தொன்மையான கல்வெட்டு என்பதால் கிபி 1020க்கு முன் இக்கோயில் கட்டப்பட்டது உறுதியாகிறது/ முதல் இராசேந்திரனின் தாய் திரிபுவன மாதேவியின் நலம் பொருட்டு நாற்பத்தெண்ணாயிர பிடாரர் கோயிலில் இறைவனுக்கு விஷாகா பாலபிஷேகத்திற்காக 32 பசுக்களை வழங்கியுள்ளார். இறைவன் மகாதேவனாய மும்மலை ஈஸ்வரன் எனவும் ஊர் திருப்பாமுதல் எனவும் வழங்கப்பட்டுள்ளது.

கருவறை மேற்குச் சுவரில் விக்கிரசோழனின் கல்வெட்டு (கிபி 1123) உள்ளது. கருவறை வடக்கில் உள்ள கல்வெட்டு முன்றாம் இராசேளூநதிரன் காலத்தது ஆகும்/ உமேசுர தேவன் விநாயகர் போன்றோருக்கு செப்புப் படிமங்கள் எடுத்து வழிபாட்டுக்கு மன்னன் கொடை வழங்கிய விவரம் கல்வெட்டில் உள்ளது. ஊர் குலோத்துங்க சோழபுரம் என்றும் இக்கல்வெட்டில் கூறப்படுகிறது.

ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி

ஏழு கன்னியர் சிலைகள் – பெருங்காஞ்சி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் தொல்லியல் சின்னங்களில் பெருஞ்காஞ்சி ஏழு கன்னியர் சிலைகளும் ஒன்றாகும். இந்நினைவுச் சின்னம் வாலாசாவில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் உள்ள பெருங்காஞ்சி என்ற கிராமத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட இச்சிலைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டை சார்ந்தவைகளாகும். பல்லவர்களின் கலைப்பாணிக்கு இச்சிலைகள் ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

ஏழு கன்னியர் என்று அழைக்கப்படும்

    1. பிராமி
    2. மகேஸ்வரி
    3. கௌமாரி
    4. வைஷ்ணவி
    5. வாராகி
    6. இந்திராணி
    7. சாமுண்டி

இவர்களுடன் விநாயகர் சிற்பமும், வீரபத்திரர் சிற்பமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 




Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us