Compilation of Indian Newspaper Editorial & Current Affairs

News Aggregator for Job Aspirants







18-04-2024
Thursday

முதற்பக்கம்
Home
தலையங்கம்
Editorials & Opinions
நடப்பு நிகழ்வுகள்
Current Affairs
அறிவியல் & தொழில்நுட்பம்
Science & Technology

தினசரி செய்திகள்
Daily News





தர்மபுரி

மக்கள்

       தர்மபுரியை சேர்ந்த மக்கள் பலதரப்பட்ட மொழிகளையும் பேசுகின்றனர். இங்கு முக்கியமாக லிங்காயத்தார், ஒக்கிலியர், பாலிய செட்டியார், ஒற்றர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். பரம்பி பகுதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தாரும், முக்கியமாக வன்னியர்கள் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்டோரில் ஆதிதிராவிடர்களும், அருந்ததியர்களும் அதிகம் வாழ்கின்றனர்.

 சுற்றுலா

       தர்மபுரி ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத்தலங்களை கொண்ட பகுதியாக விளங்குகிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கின்றது. மேலும் அதியமான்கோட்டம், சுப்ரமணியசிவா நினைவகம் பாப்பாரபட்டி, ராஜாஜி நினைவகம் துறைபள்ளி, கிருஷ்ணகிரி அணை மற்றும் தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிநீஷ்வரர் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

வரலாறு

சங்க காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட தருமபுரியை ஆட்சி புரிந்தவர்களில் அதியமான் நெடுமானஞ்சி மிகவும் முக்கியமானராவார். தமிழ் பெண் புலவரான ஔவையாரை ஆதரித்தார். 8-ம் நூற்றாண்டில் சேலம் மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் பல்லவர்களுடைய ஆட்சியின் கீழ் இருந்தது என அறியப்படுகிறது.அதே நேரத்தில் சேலம் மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் கங்கா பல்லவர்களின் கீழ் இருந்தது.8-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கங்கா பல்லவர்கள் பாரமஹால் பகுதியை ஆட்சி செய்தனர்.

9-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 2ம்-நூற்றாண்டுகள் இராஷ்டிரகூடர்களின் செல்வாக்கு இம்மாவட்டத்தில் இருந்தது. இந்த சமயத்தில் தெற்கில் சோழர்கள் அதிகாரத்திற்கு வந்தனர். கி.பி.894-ல் முதலாம் ஆதித்திய சோழன் கொங்கு நாட்டை கைப்பற்றினார்.கி.பி.949-950-ல் சோழர்கள் இராஷ்டகூடர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இராஷ்டகூடர்களின் அரசர் மூன்றாம் கிருஷ்ணரின் இறப்புக்கு பிறகு அவர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது. அதன் பின்னர் சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும் சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. கங்கவாடி சோழப்பேரரசுடன் இணைக்கப்பட்டு, தகடூர் அதியமானின் ஆட்சி பகுதியாக ஆக்கப்பட்டது. 12-ம் நூற்றாண்டில் ஹொய்சாளர்கள் அதிகாரம் பெற்று சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்து, கங்கவாடி ஹொய்சாளர்கள் வசம் வந்தது. மேலும் கோலார், கோட்டையூர் மற்றும் கொங்கு நாட்டின் மேற்குப்பகுதிகளை கைப்பற்றினார். பாரமஹால் மற்றும் தால்காட் பகுதிகள் சோழர்கள் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. ஆனால் அதியமான் பகுதிகள் சுதந்திரமாகவும், பெயரளவுக்கு மட்டும் சோழர்களுடன் இணைந்திருந்தது. ஹொய்சாள அரசர் வீர சோமேஸ்வரனை சோழர்கள் பகுதியிலிருந்து விரட்ட யாதவர்களுக்கு முதலாம் சுந்தர பாண்டியன் உதவினார்.

13-ம் நூற்றாண்டின் வரலாறு ஹொய்சாளர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு இடையேயானது. வடக்கில் யாதவர்களின் தாக்குதலுக்கு பிறகு ஹொய்சாளர்கள் கொங்கு நாட்டின் தெற்கு பகுதிக்கு பின்வாங்கினர். ஜடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் யாதவர்களுடன் இணைந்து ஹொய்சாள அரசன் வீரசோமேஸ்வரனை சோழ பகுதியிலிருந்து விரட்டி அடிக்க உதவியதாக அறியப்படுகிறது. ஆனால் அவர் தால்காட் பகுதியில் ஆட்சி செய்தாரா என்பதில் சந்தேகம் உள்ளது. ஆனால் வீர சோமேஸ்வரன் மகன் வீர ராமநாதன் சேலம் மாவட்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்ததாக பதிவுகள் உள்ளன. பின்னர் பாண்டியர்கள், தில்லி சுல்தானின் முகமதிய ஆட்சியர்களால் சூழப்பட்டனர்.

விஜய நகர இராஜ்ஜியத்தின் எழுச்சி 14-ம் நூற்றாண்டில் காணப்பட்டது. மதுரையில் உள்ள முகமதிய சுல்தானின் அரசை வீழ்த்துவதற்காக கி.பி.1365-66 ஆண்டு முதலாம் புக்கா தனது கவனத்தை தெற்கு திசையில் திருப்பினார். இந்த படையெடுப்புகளில் ஒன்றில் தான் சேலம் மாவட்டம் விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி.1565-ம் ஆண்டு வரை பெருமையுடன் ஆண்ட விஜயநகர அரசர்களை தக்காண சுல்தான்களின் ஒருங்கிணைந்த படைகள் தலைக்கோட்டை, ஒசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் வீழ்த்தினர். இதே சமயம் சென்னை பட்டணத்தின் ஜெகதீரராயர் மைசூருடன் சேர்த்து பாரமஹாலையும் ஆட்சி செய்தார். இதற்கிடையில் கி.பி.1623-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திருமலை நாயக்கரின் மூலம் மதுரை நாயக்கர்களின் புகழ் உச்சியை அடைந்தது. பாளையக்காரர்கள் நாயக்கர்களிடம் கொண்ட விசுவாசத்தின் அடிப்படையில் இப்பகுதியை பாளையக்காரர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். பாளையக்காரர்களில் ஒருவரான இராமசந்திரநாயக்கர் காவேரியின் தெற்கு பகுதியிலுள்ள நாமக்கல் வட்டத்துடன் தலைமலை பகுதியையும், கூடுதலாக கவனித்து வந்தார். நாமக்கல் கோட்டை இவர்களாலேயே கட்டப்பட்டது என கூறப்படுகிறது. காவேரியின் வலது கரையில் அமைந்துள்ள காவேரிபுரத்தையும் சேர்த்து நாயக்கர்களின் பேரரசின் முக்கிய பகுதிகள் கெட்டி முதலியார்களின் பொறுப்பில் இருந்தது. மேலும் காவேரிபுரம் மைசூர் பீடபூமிக்கு செல்லும் ஒரு முக்கிய வழிப்பாதையின் தொடக்கத்தில் அமைந்திருந்தது. இவர்களுடைய அதிகாரத்தின் மையப்பகுதி தாரமங்கலமாக இருந்ததால் அங்கே ஒரு பெரிய கோயிலை நிறுவினர். இவர்களுடைய ஆட்சி கிழக்கே தலைவாசல் வரையும், தெற்கே கோவையிலுள்ள தாராபுரம் வரை நீண்டியிருந்தது. ஓமலூர் மற்றும் ஆத்தூரில் உள்ள கோட்டைகள் கெட்டி முதலியார்களின் முக்கிய கோட்டைகளாகும்.

கி.பி.1611-ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தை சேர்ந்த காந்திராவேநரசராஜா என்பவர் கெட்டி முதலியார்களிடமிருந்து கோயம்புத்தூரிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றினார். மேலும் இவர் 11 ஆண்டுகளுக்கு பிறகு கி.பி.1654-ம் ஆண்டு பாரமஹாலுடன் சேர்த்து விராலகத்திரதுர்க், பென்னாகரம், தருமபுரி மற்றும் தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். ஓசூரை மைசூர் மன்னரான சந்திரசங்கர் தொட்டா தேவராஜ் என்பவரிடமிருந்தும், ஓமலூரை கெட்டி முதலியார்களிடமிருந்து கைப்பற்றி அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றினார். மராட்டியர்களின் ஆக்கிரமிப்பால் மைசூர் அரசு ஒடுக்கப்பட்டது. பாரமஹால் மற்றும் தால்காட் பகுதி மராட்டியர்களின் கைகளுக்கு மாறியது. கி.பி.1688-89 -ஆம் ஆண்டில் மைசூர் அரசர் சிக்க தேவராயர் பாரமஹால் பகுதியின் மீது படையெடுத்து தருமபுரி மனுக்கோண்டா, ஓமலூர் பரமத்தி, காவேரிபட்டணம் மற்றும் ஆத்தூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். கி.பி.1704-ம் ஆண்டில் சிக்க தேவராயரின் மரணத்திற்கு முன்பு சேலத்தின் முழுபகுதியும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதற்கிடையில் கடப்பாவின் நவாப் அப்துல் நபிக்கான் தன்னுடைய அதிகாரத்தை தெற்கு நோக்கி செலுத்தி கி.பி.1714-ம் ஆண்டில் பாரமஹால் பகுதியின் தலைவரானார்.

கி.பி.1760-ம் ஆண்டு மைசூர் பாரமஹால் ஹைதர்அலியின் அதிகாரத்தில் இருந்தது. கி.பி.1767-ல் மெட்ராஸில் இருந்த ஆங்கிலேயே அரசு ஹைதர்அலியின் மீது தாக்குதல் நடத்தி காவேரிப்பட்டணத்தை கைப்பற்றினர். பின்னர் கிருஷ்ணகிரியை முற்றுகையிட்டனர். ஹைதர்அலி மீண்டும் வலிமையுடன் போரிட்டு, ஆங்கிலேயர்களை துரத்திவிட்டு,காவேரிப்பட்டணத்தை மீண்டும் கைப்பற்றினார். சில மாதங்களுக்கு பிறகு ஆங்கிலேயர்கள் பாரமஹால் மீது மீண்டும் ஒரு படையெடுப்பை மேற்கொண்டனர்.மேலும் தெற்கு தருமபுரி, சேலம் மாவட்டம் மற்றும் நாமக்கல் ஆகியவை பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி சரணடைந்தது. இருந்த போதிலும் இந்த வெற்றி குறுகிய காலமே நீடித்தது. ஹைதர்அலி மீண்டும் தருமபுரி, தேன்கனிக்கோட்டை, ஓமலூர், சேலம் மற்றும் நாமக்கலை கைப்பற்றினார். இரண்டாம் மைசூர் போரின் போது சேலம் மாவட்டம் ஹைதர்அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஹைதர்அலிக்கு பின் ஆட்சிக்கு வந்த திப்புசுல்தான் அதிக அதிகாரம் பெற்றவராக இருந்தார்.திப்புசுல்தானின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ஆங்கிலேயர்கள் மராட்டியர் மற்றும் ஹைதாராபாத் நிஜாமுடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டு கி.பி.1790-ல் மூன்றாம் மைசூர் போரை தொடுத்தனர்.ஆங்கிலேய படையின் ஒரு பிரிவு காவேரிப்பட்டிணத்தில் வலிமையுடன் போரிட்டது. திப்புசுல்தான் முழுபலத்துடன் போரிட்ட போதும் அவரால் ஆங்கிலேயரை தடுத்து நிறுத்த முடியவில்லை. கி.பி.1791-ம் ஆண்டில் ஓசூர், அஞ்செட்டி, நீலகிரி மற்றும் இரத்தினகிரி ஆகிய பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. மேலும் சில கோட்டைகள் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி ஆங்கிலேயர் வசம் வந்தது. கி.பி.1791-ம் ஆண்டில் திப்புசுல்தான் தெற்கிலிருந்து ஒரு படைப்பிரிவை அனுப்பினார். அது பென்னாகரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரிடத்தில் சரணடைந்தது. கி.பி.1792-ம் ஆண்டில் திப்புசுல்தானுக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே சமாதானம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, திப்புசுல்தான் ஆட்சியின் பாதி பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தது. பாலக்காட்டு பகுதியை தவிர்த்து சேலம் மாவட்டத்தின் முழுபகுதியும், ஒசூரின் ஒரு பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தது. ஆங்கிலேயரின் முதல் மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையிடமாக கிருஷ்ணகிரி அமைக்கப்பட்டது.

கி.பி.1799-ம் ஆண்டு நடைபெற்ற கடைசி மைசூர் போரில் ஒசூர் தாலூக்கா, நீலகிரி, அஞ்செட்டி, துர்க்கம், இரத்தினகிரி மற்றும் கெலமங்கலம் போன்ற பல இடங்கள் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஸ்ரீரங்கப்பட்டணத்தில் நடைபெற்ற போரில் திப்புசுல்தான் இறந்த பிறகு சேலம் மாவட்டத்தின் பாலக்காடு பகுதியும் ஆங்கிலேய ஆட்சியுடன் சேர்க்கப்பட்டது.

தற்போதைய தருமபுரி மாவட்டம் ஆங்கிலேய ஆட்சியின்போது சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுக்காவாக இருந்தது. 2.10.1965-ஆண்டு தருமபுரி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு.ஜி.திருமால் இ.ஆ.ப ஆவார்

09.02.2004-ஆண்டு தருமபுரி மாவட்டத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது.

சுற்றுலாத் தலங்கள்

தீர்த்தமலை கோவில்

அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில் : இத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி

தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM தொலைவிலும் , பென்னாகரத்தில் இருந்து 16 KM தொலைவிலும் அமைந்து உள்ளது . ஓகேனக்கல் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது .ஓகேனக்கல் புகையும் நீர் திவலைகளும் அதன் வெளியை கவர்ந்து இருப்பதால் உருவான பெயர்.

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு.  இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது.  தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்

ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன் எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது.

உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் :

தர்மபுரி நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் அமைந்து உள்ளது .இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

இரண்டரை டன் எடையுள்ள வியன் மிகு தொங்கும் தூண்கள் இரண்டை பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்தி சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி ஸ்வாமியின் சன்னதியை விட உயரமாக இருக்குகிறது.

சென்றாய பெருமாள் திருக்கோவில் :

தர்மபுரியில் இருந்து 8 KM தொலைவில் உள்ளது .அதியமான் கோட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் விதவிதமான வண்ண ஓவியங்கள் எழுத்து பொறிப்புகளுடன் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை ஆகியவை இடம் பெற்று உள்ளது.

கால பைரவர் கோவில் :

பெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பிரபலமான கோவில். இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.

 

தியாகி சுப்ரமணிய சிவா மண்டபம் :

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் மதுரை மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் ராஜம் ஐயர், நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்களுக்கு 04.10.1884 அன்று பிறந்தார். அவர் தனது 12-ஆம் வயதில் நாட்டுப்பற்றும், விடுதலைக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற தீராத வேட்கையும் கொண்டிருந்தார்.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் “ஆரிய சமாஜத்தைச்” சேர்ந்த ஸ்ரீதாகூர்கான் விடுதலைச் சொற்பொழிவைக் கேட்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1907-இல் திருவனந்தபுரத்தில் “தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, இளைஞர் சமுதாயம் வீறு கொள்ள சுதந்திர வேட்கையைத் தனது சொற்பொழிவு மூலம் ஏற்படுத்தினார். இதனால் திருவனந்தபுரம் சமஸ்தானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 07.07.1908-ஆம் ஆண்டு ஆங்கில அரசு சதிவழக்கினை இவர் மீது சுமத்தி 6 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது.

1913-இல் சென்னை வந்த சுப்பிரமணிய சிவா “ஞானபானு” மற்றும் “பிரபஞ்சமித்திரன்” ஆகிய மாத, வாரப் பத்திரிகையைத் தொடங்கி இந்தியா விடுதலை பொறுவதின் அவசியம் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் பல கட்டுரைகளையும், தேசத் தலைவர்களின் அரிய தொண்டினையும் அறிவிப்புகளாக வெளியிட்டார். சென்னை, கல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்குச் சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். இதனால் ஆங்கிலேய அரசு, சுப்பிரமணிய சிவாவிற்கு கொடுமையான சிறைத் தண்டனை விதித்து, தாங்கொண்ணா சித்ரவதைக்கு உள்ளாக்கியது. இதனால் தொழுநோய் என்ற கொடிய நோயால் தாக்கப்பட்டு உடல் நைந்தார். தனது இறுதிக்காலத்தில் பாரதமாதா கோயில் கட்டிடவும், இந்திய மக்கள் அனைவரும் மொழி, சாதி, சமய வேறுபாட்டைக் களைந்து ஒன்றுபட்டு வாழவும் உழைத்தார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டபோது 23.07.1925-இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் 18.07.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று அன்னாரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


சர் தாமஸ் மன்ரோ தூண் :

ஏப்ரல் 1792 முதல் மார்ச் 1799 வரை, தர்மபுரி சங்கம், பாரமஹாலில் வருவாய் கண்காணிப்பாளர் உதவியாளராக இருந்ததால், தர்மபுரி சங்கத்தை குறிக்க இந்த தூண் உருவாக்கப்பட்டது.

 




 

Dinamani India.. In Web from January 1, 2021. .

About Us         Contact Us